search icon
என் மலர்tooltip icon

    தஞ்சாவூர்

    • சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார்.
    • வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார்

    தஞ்சாவூா்:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்தவர் சடகோபன் (வயது 48). இவர் அதே பகுதியில் அரிசி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி விஜயா (42).

    இந்த நிலையில் கணவன்-மனைவி இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஏலச்சீட்டு நடத்தினர். அதில் கும்பகோணம் பாரதி நகரை சேர்ந்த தொழிலதிபர் வித்யாபதி சேர்ந்து பணம் கட்டி வந்தார். இதேப்போல் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த மேலும் பலரும் சேர்ந்து பணம் கட்டினர். இந்நிலையில் ஏலச்சீட்டு முடிவடைந்த பின்னரும் பலருக்கு பணத்தை திருப்பி கொடுக்காமல் சடகோபன், விஜயா காலதாமதம் செய்து வந்தனர்.

    இதனால் சந்தேகம் அடைந்த வித்யாபதி தான் கட்டிய பணத்தை திருப்பி கொடுக்குமாறு அவர்களிடம் கேட்டார். பலமுறை முறையிட்டும் பணம் கிடைக்கவில்லை. இதையடுத்து வித்யாபதி தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சடகோபன், விஜயா தம்பதியினர் ஏலச்சீட்டு நடத்தி தன்னிடம் ரூ.29 லட்சத்து 29 ஆயிரம் மோசடி செய்தனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.

    அதன் பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர் சுலோச்சனா வழக்குபதிவு செய்து சடகோபன், விஜயா ஆகிய 2 பேரையும் கைது செய்தார். பின்னர், அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சடகோபனை புதுக்கோட்டை கிளை சிறையிலும், விஜயாவை திருச்சி மகளிர் சிறையிலும் அடைத்தார்.

    • வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
    • பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து கொள்ளலாம்.

    தஞ்சாவூா்:

    பயணிகள் மற்றும் பக்தர்களின் நீண்ட நாள் கோரிக்கைக்கு ஏற்ப தமிழக அரசு சார்பில் கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு ஒரே நாளில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவக்கிரக தலங்களுக்கு ஒரே பஸ்சில் பயணம் செய்து எந்த ஒரு சிரமமும் இன்றி மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையத்தை வந்தடையும் வகையில் நவக்கிரக சிறப்பு சுற்றுலா பஸ் இயக்கம் கடந்த மாதம் 24-ந் தேதி முதல் தொடங்கப்பட்டு தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்றதையடுத்து வயதானவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் வேண்டுகோளுக்கு இணங்க குளிர்சாதன வசதியுடன் (ஏ.சி.வசதி) கூடிய மேலும் கூடுதலாக ஒரு சிறப்பு சுற்றுலா பஸ் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் வருகிற 25-ந் தேதி முதல் வாரத்தில் 7 நாட்களும் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.

    இந்த பஸ்சில் நபர் ஒருவருக்கு ரூ.1350 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வாரத்தில் 7 நாட்களும் அதிகாலை 5.15 மணிக்கு கும்பகோணம் மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டு நவகிரக தலங்களுக்கு சென்று இரவு 8 மணியளவில் மீண்டும் கும்பகோணம் பஸ் நிலையம் வந்தடையும்.

    எனவே, இந்த பஸ்சில் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் www.tnstc.in என்ற இணையதளம் அல்லது மொபைல் ஆப் மூலம் மட்டுமே முன்பதிவு செய்து பயணச்சீட்டை பெற்றுக்கொள்ள முடியும். நேரடியாக பஸ்சில் பயணச் சீட்டு பெற்றுக்கொள்ள முடியாது. மேற்கண்ட தகவல் கும்பகோணம் போக்குவரத்து கழகம் சார்பில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.

    • கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது.
    • வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம்.

    தஞ்சாவூா்:

    பிரதமர் மோடி புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ், ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், புதிய குட்ஷெட் யார்டுகள் போன்ற ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான பல ரெயில்வே உள்கட்டமைப்பு திட்டங்களை நாளை (செவ்வாய்க்கிழமை) காணொலி காட்சி வழியாக தொடங்கி வைக்கிறார்.

    இதில் திருச்சி ரெயில்வே கோட்டத்தில் உள்ள 44 ரெயில் நிலையங்களில் 60 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள், பட்டுக்கோட்டை மற்றும் திருத்துறைப்பூண்டியில் தலா ரூ.7 கோடி மதிப்பில் 2 குட்ஷெட் யார்டுகள் மற்றும் திருச்சி ரெயில்வே ஜங்ஷன் பகுதியில் உள்ள மருந்தகமும் அடங்கும்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பட்டுக்கோட்டையில் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கப்பட்டது. இதுவரை 28.5 ரேக்குகள் ஏற்றப்பட்டுள்ளன.

    திருத்துறைப்பூண்டி குட்ஷெட் யார்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உணவு தானியங்கள் ஏற்றுதல் தொடங்கி இதுவரை 18 ரேக்குகள் ஏற்றப்பட்டு உள்ளன.

    வந்தே பாரத் ரெயிலை திருச்சியிலிருந்து பெங்களூரு மற்றும் சென்னைக்கும் இயக்க கேட்டுள்ளோம். மேலும் கூடுதலாக 33 ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு கடைகள் அமைக்க இடம் தேர்வு நடைபெற்று வருகிறது.

    இத்தகவலை திருச்சி ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.

    • அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
    • விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    தஞ்சாவூர்:

    நாகை பாராளுமன்ற தொகுதி எம்.பி.யாக உள்ளவர் செல்வராஜ்.

    இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த நிர்வாகியான இவரது சொந்த ஊர் திருவாரூர் மாவட்டம் கோவில் சித்தமல்லி ஆகும்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்வராஜ் எம்.பி.க்கு உணவு ஒவ்வாமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது திடீரென அவருக்கு நுரையீரல் தொற்று காரணமாக மூச்சு திணறல் ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து செல்வராஜ் எம்.பி. தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    தற்போது செல்வராஜ் எம்.பி. நல்ல நிலையில் உள்ளதாகவும், விரைவில் வீடு திரும்புவார் என்றும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தெரிவித்தன.

    • மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர்.
    • டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

    திருவோணம்:

    தஞ்சாவூர் அருகே திருவோணத்தில், காவிரி விவசாய சங்க தலைவர் பி.ஆர். பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    டெல்லியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக வருகிற 10-ம் தேதி தமிழ்நாடு காவிரி விவசாய சங்கம் சார்பாக, தமிழ்நாடு முழுவதும் மத்திய அரசை கண்டித்து 150க்கும் மேற்பட்ட இடங்களில் ரெயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.


    தொடர்ந்து அமைதியான முறையில் நடைபெற்று வரும் போராட்டத்திற்கு மத்திய அரசு துணை ராணுவத்தை கொண்டு போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதை வன்மையாக கண்டிக்கிறோம். தொடர்ந்து போராடிவரும் விவசாயிகளை மத்திய அரசு அழைத்து சுமூகமாக பேசி தீர்ப்போம் என்று கூறிவிட்டு இதுவரை முறையாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

    தொடர்ந்து மத்திய அரசு விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கும் மின்சாரத்தை ரத்து செய்து விட்டனர். 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மீண்டும் டெல்லிக்குள் நுழைந்து விவசாயிகள் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர். இந்தப் போராட்டத்திற்கு தமிழ்நாடு காவிரி விவசாய சங்கத்திலிருந்து 20-க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.
    • 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தமிழ்நாடு முழுவதும் தரைவாழ் பறவைகளின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தஞ்சை அருகே உள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக வளாகத்தில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    முன்னாள் மாவட்ட வன அலுவலர் செல்வம் முன்னிலையில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பு பணியில் பேராசிரியர்கள் அசோக், கீர்த்திவாசன், ஆசிரியர்கள் சுமதி, வசந்தி, வனத்துறை அலுவலர்கள் ரஞ்சித், இளஞ்செழியன் ஆகியோருடன் தன்னார்வலர்கள், மாணவர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று குழுவாக பிரிந்து சென்று கணக்கெடுத்தனர்.

    இந்த கணக்கெடுப்பில் குமரிப்புறா, மாங்குயில், கதிர்குருவி, அரசவால் ஈப்பிடிப்பான் ஆகிய இப்பகுதிக்கான சிறப்பு அரிய வகை பறவைகள், மயில், மாடப்புறா, மணிப்புறா, செண்பகம், சுடலைகுயில், பொன்முதுகு மரங்கொத்தி உள்பட 50 வகை பறவை இனங்களை சேர்ந்த 483 பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டது. 

    • தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார்.
    • தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மத்திய மாவட்ட, மாநகர தி.மு.க. சார்பில் இல்லந்தோறும் ஸ்டாலின் குரல் என்ற தலைப்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா, தமிழக அரசின் 3 ஆண்டுகால சாதனை, பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் தஞ்சாவூர் ஆப்ரஹாம் பண்டிதர் சாலையில் நடைபெற்றது.

    கூட்டத்தில் மாநில துணை பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. பேசியதாவது :-

    முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி செய்த சாதனைகள் ஏராளம். அவைகள் அனைத்தும் காலம் கடந்தும் பேசும். அதுபோல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏராளமான சாதனைகளை செய்து வருகிறார். மகளிருக்கு இலவச பஸ் பயணம், உரிமை தொகை , விவசாயத்திற்கு தனி பட்ஜெட் என மக்கள், விவசாயிகளுக்கு பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி சாதனை புரிந்து வருகிறார்.

    தமிழ்நாட்டைப் பற்றி மக்கள் புண்படும் விதமாக தமிழக கவர்னர் தொடர்ந்து பேசி வருகிறார். பிரதமர் பெயருக்கு அவ்வப்போது ஓரிரு திருக்குறளைப் பேசுகிறார். இதை வைத்து தமிழ் தொன்மையான மொழி என பிரதமரே பேசிவிட்டார் என விளம்பரம் செய்கின்றனர்.

    தமிழ் தொன்மையான மொழி என்பது இவர்கள் பேசித்தான் தெரிய வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டு மக்களுக்கு இல்லை. நம் மக்களுக்கு முன்பே தெரிந்த விஷயம் அது. ஆனால், தமிழுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் தொகையை விட யாருக்கும் தெரியாத சம்ஸ்கிருத மொழிக்கு 22 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கப்படுகிறது.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடமிருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை. நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும், புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென் மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை.

    தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. அரசு எதுவும் செய்யவில்லை. ஆனால், செய்ததாகக் கணக்கு காட்டுவதற்காக ரூ. 7 ஆயிரம் கோடிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டிச் சென்றார்.

    இந்த மண்ணின் பண்பாடு, கலாசாரம், மொழி உள்பட அனைத்தையும் காத்து நிற்கும் அரணாக தி.மு.க உள்ளது. திராவிட மண்ணில் மத அரசியலுக்கும், தமிழ் துரோகிகளுக்கும் இடமில்லை. நாடாளுமன்ற தேர்தல் வெறும் அரசியல் வெற்றிக்கானது மட்டுமல்ல; நம்முடைய எதிர்காலம், இந்த நாட்டின் அமைதியைப் பொருத்து இருப்பதால், அதைக் காக்கும் கடமை நமக்கு இருக்கிறது என மனதில் கொண்டு வாக்களிக்க வேண்டும் .

    இவ்வாறு அவர் பேசினார்.

    • நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
    • நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது என கனிமொழி எம்.பி. பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் தி.மு.க. சார்பில் 'எல்லோருக்கும் எல்லாம்' மற்றும் தமிழக அரசின் 2024-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தி.மு.க. எம்.பி. கனிமொழி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

    கருணாநிதி முதலமைச்சராக இல்லாமல் இருந்திருந்தால் தமிழ்நாட்டில் விவசாயமே இருந்திருக்காது. ஏனெனில், அவர் இலவச மின்சாரத்தை கொண்டு வரவில்லை என்றால் எங்களால் தொடர்ந்து விவசாயம் செய்திருக்க முடியாது என விவசாயிகள் சொல்லும் அளவிற்கு விவசாயத்தையும், விவசாயிகளையும் காப்பாற்றியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.

    அதுமட்டுமின்றி 7 ஆயிரம் கோடி விவசாயக் கடனை அவர் ரத்து செய்தார். இங்கே ஒடுக்கப்பட்டு நின்ற மக்கள் தலைநிமிர்ந்து நடப்பதற்காக தனது வாழ்நாள் முழுவதும் கலைஞர் கருணாநிதி பாடுபட்டார். கலைஞரின் ஆட்சியின் நீட்சியாக தற்போது ஆட்சி செய்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தியாவிலேயே முதல் முறையாக விவசாயத்திற்காக தனி பட்ஜெட்டை கொண்டுவந்தார்.

    இந்த நாட்டில் விவசாயம்தான் மிகப்பெரிய தொழில். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு வந்தபோது கடைகள், தொழிற்சாலைகள் உள்பட அனைத்தும் மூடப்பட்ட நிலையில், விவசாயத்தை மட்டும்தான் யாராலும் நிறுத்தச் சொல்ல முடியவில்லை.

    தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் நிதி கொடுக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டில் மத்திய அரசு உள்ளது. தமிழ்நாட்டிடம் இருந்து ஜிஎஸ்டி உள்பட அனைத்து வரிகளையும் வாங்கிக் கொள்ளும் மத்திய அரசு, திரும்பக் கொடுப்பதற்கு மனசு இல்லை.

    நல்லாட்சி செய்து வரும் தமிழ்நாடு தண்டிக்கப்படுகிறது. ஆனால், நல்ல ஆட்சி செய்யாத உத்தர பிரதேசத்துக்கு 5 மடங்கு கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

    பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இத்தனை முறை வந்தாலும் புயல் மழையால் பாதிக்கப்பட்ட சென்னை, தென்மாவட்ட மக்களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் தமிழக முதல்வர்தான் உதவிக்கரம் நீட்டினார். தமிழ்நாட்டு மக்களைப் பற்றி பிரதமர் கவலைப்படுவதில்லை என கடுமையாக சாடினார்.

    • பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.
    • கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    தஞ்சாவூர்:

    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வதோடு கட்டிடக் கலையின் நுட்பங்களையும் பார்த்து பிரமிப்புடன் செல்கின்றனர்.

    இந்நிலையில் விழுப்புரத்தை சேர்ந்த சிறுமி ருக்மணி (வயது 12), அவரது 6 வயது சகோதரர் தேவசேனாபதி ஆகிய இருவரும் தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்து பின்னர் பெரிய கோவிலுக்கு சென்றனர். அங்கு பெருவுடையாரை தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அந்த நேரத்தில் கருவறையை நோக்கி ருக்மணி, தேவசேனாபதி ஆகியோர் சிவபுராணம் பாடியப்படி வந்தனர்.

    பின்னர் பக்தர்களை கடந்து கருவறை முன்பு நின்று கொண்டு மனம் உருகி நமச்சிவாய வாழ்க.. நாதந்தாழ் வாழ்க... என மாணிக்கவாசகர் அருளிய சிவபுராணத்தை வெண்கல குரலில் சரியான ஏற்ற இறக்கத்துடன் ஒரு சேர தூய தமிழில் பாடினர். இதனை பெருவுடையார் தரிசனத்துக்காக கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் இந்த சிறு வயதில் பக்தியுடன் இப்படி ஒரு பாடலா என மெய்மறந்து ரசித்ததோடு குழந்தைகள் இருவரையும் மனதார பாராட்டினர்.

    குழந்தைகளின் இந்த பக்தி செயல் ஆன்மீக அன்பர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்திருந்தது என்றால் அது மிகையல்ல. 

    • காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

    தஞ்சாவூர்:

    காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், தமிழகத்துக்குக் காவிரி நீர் பெற்றுத்தராத தி.மு.க. அரசை கண்டித்தும் தஞ்சாவூர் திலகர் திடலில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    இதில் திருவாரூர் மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான காமராஜ் வரவேற்று பேசினார்.

    ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    காவிரி டெல்டா மாவட்டங்களை பொன்விளையும் பூமியாக காத்தது அ.தி.மு.க. அரசு. ஆனால் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மீத்தேன், ஈத்தேன் திட்டங்களுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டு விவசாயிகளுக்கு துரோகம் செய்தார்.

    இதனால் மத்திய அரசு டெல்டாவில் ஹைட்ரோகார்பன் எடுக்க தனியாருக்கு அனுமதி கொடுத்தனர். இதன் காரணமாக விவசாய நிலங்கள் பறிபோய் விடுமோ என விவசாயிகள் அச்சத்தில் உறைந்தனர். அவர்களின் அச்சத்தை போக்கும் வகையில் நானும் ஒரு விவசாயி என்பதால் காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக எனது தலைமையிலான அ.தி.மு.க. அரசு அறிவித்து சட்டம் கொண்டு வந்தது. இதனால் இன்றைக்கு மட்டுமல்ல எப்போதுமே மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க முடியாது. இதனை சாதித்தது அ.தி.மு.க. அரசாங்கம்.

    விவசாயிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசு என்றால் அது அ.தி.மு.க அரசுதான். விவசாயி நலமோடு வாழ அதிமுக அரசு எப்போதும் உதவும். காவிரி பிரச்சனையில் சட்டப் போராட்டம் நடத்தி அதற்கு தீர்வு கண்டதும் அ.தி.மு.க அரசுதான்.


    ஜெயலலிதா எண்ணங்கள் படி 50 ஆண்டுகால காவிரி பிரச்சனைக்கு தீர்வு கண்டோம். உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற நம்முடைய கோரிக்கையை அ.தி.மு.க.வின் 37 எம்பிக்கள் நடைமுறைப்படுத்த பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பாராளுமன்றத்தை ஒத்திவைக்க செய்ததும் அதிமுக தான். ஆனால் தற்போது தி.மு.க ஆட்சியில் விவசாயிகளுக்கு வேதனை தான் மிஞ்சியது.

    மேலும் நமக்கு கிடைக்க கூடிய காவிரி நீர் கிடைக்கவில்லை. மேகதாதுவிலும் அணை கட்டுவோம் என கர்நாடகா அரசு தொடர்ந்து கூறி வருகிறது. அதை திராணியில்லாத தி.மு.க அரசு கண்டு கொள்வதில்லை. போராடிப் பெற்றுத் தந்த வெற்றியை காக்க தவறியதும் தி.மு.க. அரசு தான்.

    காவிரி ஆணையத்தில் கர்நாடகாவிற்கு மேகதாது அணை கட்ட வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக தமிழக அரசு அதிகாரிகள் ஓட்டு அளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளி நடப்பு செய்யாமல் திமுக அரசின் அதிகாரிகள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தது சரியான செயல் அல்ல.

    மேகதாது அணைகட்ட கருத்துரு வரக்கூடாது என்று அதிமுக போராடியது. ஆனால் தற்போது காவிரி ஆணையத்தில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது அது எந்த வகை தீர்மானம் என்று தெரியாத நிலை உள்ளது.

    காவிரியில் இருந்து உரிய நீர் திறந்து விடாததால் டெல்டா மாவட்டங்களில் 3.5 லட்சம் ஏக்கரில் பயிர்கள் காய்ந்து வீணாகி விட்டது.

    பயிர் காப்பீடு திட்டத்தில் சேர்க்கப்பட்டு இருந்தால் ஒரு எக்டேருக்கு ரூ.84 ஆயிரம் நிவாரணம் கிடைத்து இருக்கும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதேப்போல் சம்பா, தாளடியும் உரிய தண்ணீரின்றி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.

    அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக காவிரி-கோதாவரி இணைப்பு திட்டம், காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை முடிக்காமல் தி.மு.க. அரசு கிடப்பில் போட்டுள்ளது. தூர் வாரப்படாதால் ஏரி, குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை. பொதுப்பணித்துறை வசம் உள்ள 14,000 ஏரிகள், ஊராட்சி நிர்வாகங்கள் வசம் உள்ள 26,000 குளங்கள் ஆகியவற்றை குடிமராமத்து திட்டம் மூலம் புனரமைத்து தூர் வார உத்தரவிட்டது அதிமுக அரசுதான்.

    அப்பொழுது ஏரி குளங்களில் இருந்து வண்டல் மண்ணை விவசாயிகள் எடுத்துச் சென்று தங்கள் வயல்களில் இயற்கை உரமாக பயன்படுத்தினர். ஆனால் தற்போது அவ்வாறு செய்ய இயலுமா? குடிமராமத்து திட்டம் மூலம் மழை நீர் சேகரிக்கப்பட்டது. நிலத்தடி நீர் உயர்ந்தது. குடிநீர் தடை இன்றி கிடைத்தது. அந்தத் திட்டத்திற்கும் மூடு விழா நடத்தியது திமுக அரசு தான்.

    தற்போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் போதை பொருள் விற்பனை அதிகமாக உள்ளது. திமுக அயலக அணியை சேர்ந்த ஜாபர்சாதிக் என்பவர் 2000 கோடி போதை பொருட்கள் கடத்தியதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

    போதை பொருள் நிறைந்த மாநிலமாக தமிழகம் மாறியுள்ளது. இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் திறமையில்லாத ஆட்சி தான் காரணம்.

    போதைப்பொருள் வழக்கில் மத்திய அரசு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வரும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள். அவர்கள் எம்.பியாகி தமிழக விவசாயிகளுக்காக பாராளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுப்பார்கள்.

    ஒருவேளை தி.மு.க. வெற்றி பெற்றால் தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம்.
    • பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    காவிரி மேலாண்மை ஆணையம் தனது வரையறுக்கப்பட்ட பணி வரம்புக்கு அப்பாற்பட்டு 28-வது காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டுவது குறித்து விவாதித்து மேல் நடவடிக்கைக்காக மத்திய நீர்வள ஆணையத்துக்கு அனுப்பியதை கண்டித்தும்,

    காவிரி நீர் விஷயத்தில் துரோகம் இழைத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், தொடர்ந்து விவசாயிகளுக்கு துரோகம் இழைத்து வரும் தி.மு.க. அரசை கண்டித்து தஞ்சை திலகர் திடலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

    இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், திருச்சி, பெரம்பலூர், அரியலூர் புதுக்கோட்டை ஆகிய 8 மாவட்டங்களை சேர்ந்த தலைமை செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், மாநில நிர்வாகிகள், மாநகர, நகர செயலாளர்கள், இந்நாள், முன்னாள் எம்.பி, எம்எல்ஏக்கள், பல்வேறு அணி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

    இந்த மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மதியம் சேலத்தில் இருந்து காரில் புறப்பட்டு சாலை மார்க்கமாக வந்து நேரடியாக தஞ்சை திலகர் திடலுக்கு வந்தார். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும்.
    • பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள நவகிரக தலங்களுக்கு ஒரே நாளில் ஒரே பஸ்சில் பயணம் செய்யும் வகையில் சிறப்பு பஸ் இயக்க வேண்டும் என்று பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    அதனை ஏற்று, நவக்கிரக சிறப்பு பஸ் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார்.

    அதன்படி, இன்று (சனிக்கிழமை) நவக்கிரக சிறப்பு பஸ் தொடக்க விழா கும்பகோணத்தில் நடந்தது. விழாவில் எம்.பி.க்கள் கல்யாணசுந்தரம், ராமலிங்கம், அன்பழகன் எம்.எல்.ஏ., அரசு போக்குவரத்து கழக மேலான் இயக்குனர் மோகன், துணை மேயர் சு.ப. தமிழழகன் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முன்பதிவு செய்த 52 பக்தர்கள் இந்த சிறப்பு பஸ்சில் பயபக்தியுடன் பயணித்தனர். இன்று ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் பொதுமக்கள் வரவேற்பு மற்றும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தால் கூடுதலாக பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.

    இந்த சிறப்பு பஸ்சானது வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்படும். இதற்கு பயண கட்டணமாக நபர் ஒருவருக்கு ரூ.750 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, இந்த சிறப்பு பஸ்சானது முன்பதிவு செய்த பயணிகளை அழைத்துக் கொண்டு காலை 6 மணிக்கு கும்பகோணம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு திங்களூர் சந்திரன் கோவிலுக்கு சென்றது. பின்னர் அங்கு பக்தர்கள் தரிசனம் செய்து முடித்தனர். அதனை தொடர்ந்து 2-வதாக திருவாரூர் மாவட்டம் ஆலங்குடிக்கு காலை 7.15 மணிக்கு சென்று அங்கு குரு பகவான் தரிசனம் செய்ய பக்தர்கள் இறக்கி விடப்பட்டனர். தரிசனம் முடிந்த பின்னர் காலை உணவு இடைவேளை விடப்பட்டது.

    தொடர்ந்து, ஆலங்குடியில் இருந்து புறப்பட்டு 9 மணிக்கு தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோவில், 10 மணிக்கு சூரியனார் கோவில் சூரிய பகவான் கோவிலில் தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு கஞ்சனூர் சுக்கிரன் கோவில் தரிசனம், மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் தரிசனம், பிற்பகலில் மதிய உணவுக்கான இடைவேளை விடப்படும்.

    பின்னர், 2.30 மணிக்கு திருவெண்காடு புதன் கோவில் தரிசனம், மாலை 4 மணிக்கு கீழப்பெரும்பள்ளம் கேது பகவான் தரிசனம், இறுதியாக 4.45 மணிக்கு திருநள்ளாறு சனிபகவான் கோவில் தரிசனத்திற்காக பக்தர்கள் இறக்கி விடப்படுவார்கள். அத்துடன் தரிசனம் நிறைவடையும்.

    இதையடுத்து திருநள்ளாறில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்படும் பஸ் இரவு 8 மணிக்கு கும்பகோணத்தை வந்தடையும்.

    மொத்தம் 9 நவக்கிரக கோவில்களை ஒரே நாளில் பக்தர்கள் தரிசனம் செய்வர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த பஸ்சில் பயணிக்க tnstc செயலி அல்லது www.tnstc.in என்ற இணையதளத்தில் பக்தர்கள் முன்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×