என் மலர்tooltip icon

    மதுரை

    • கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் மதுரையில் பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகிறது.
    • ஒரு சிலிண்டருக்குச் செலவு செய்யும் தொகையில் விறகுகளை வாங்கினால் அதை வைத்து 5 மடங்கு அளவுக்கு இதில் கூடுதலாக சமைக்க முடியும்.

    மதுரை:

    இஸ்ரேல், அமெரிக்கா, ஈரான் இடையிலான போர் காரணமாக எரிவாயு விநியோகம் மற்றும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் சப்ளை ஏற்றுமதி மற்றும் இறக்குமதி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணை இறக்குமதி பெருமளவு குறைந்துள்ளது. இதனால் கியாஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிப்பொருள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    நேற்று முதல் வணிக நிறுவனங்களுக்கு சப்ளை செய்யப்படும் கியாஸ் சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ஓட்டல்கள், டீக்கடைகள் மற்றும் முக்கிய உணவு விடுதிகளில் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே கியாஸ் சிலிண்டர்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் இதே நிலை நீடித்தால் ஓட்டல்கள் மூடப்படும் அபாயம் ஏற்படும். இதனால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    கியாஸ் சிலிண்டர் சப்ளை நிறுத்தப்பட்டதால் மதுரையில் பல ஓட்டல்கள் விறகு அடுப்புக்கு மாறி வருகிறது.

    குறிப்பாக குறைந்த செலவில் விறகுகளை பயன்படுத்தி நீண்ட நேரம் எரியும் ராக்கெட் அடுப்புக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் பயன்பாட்டு முறை சற்று வித்தியாசமானது.

    ராக்கெட் அடுப்புகளில் விறகுகளை வைத்துச் சமைக்கக் கூடியது. இதில் மின்சாரத்தில் இயங்கக்கூடிய காற்றாடியும் இணைக்கப்படுகிறது. விறகுகளை அடுப்புக்குள் செலுத்திய பிறகு இந்த அடுப்பில் பொருத்தப்பட்டுள்ள காற்றாடி வேகமாகச் சுழலும். இதன் மூலம் காற்று வேகமாக உந்தப்பட்டு வழக்கமான விறகு அடுப்புகளை விட வேகமாகவும் அடர்த்தியாகவும் தீ எரிகிறது.

    ஒரு சிலிண்டருக்குச் செலவு செய்யும் தொகையில் விறகுகளை வாங்கினால் அதை வைத்து 5 மடங்கு அளவுக்கு இதில் கூடுதலாக சமைக்க முடியும் எனவும் கூறப்படுகிறது. ரூ. 4 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் வரை இந்த ராக்கெட் அடுப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

    சிலிண்டர் பற்றாக்குறையால் மதுரை வைகை தென்கரை ரோட்டில் உள்ள இயற்கை அடுப்பு கடையில் ராக்கெட் அடுப்புகள் விற்பனை சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. டீக்கடை, ஓட்டல்காரர்கள் இந்த அடுப்புகளை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கடந்த சில நாட்களாக விற்பனை மந்தமாக இருந்த நிலையில் நேற்று ஒரே நாளில் 20-க்கும் மேற்பட்ட ராக்கெட் அடுப்புகள் விற்பனையாகி உள்ளது. மேலும் ஆர்டர்களும் குவிந்து வருகின்றன.

    • கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யவில்லை.
    • அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தரவில்லை.

    அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நிறைவேற்ற முடியாத பல்வேறு வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்து, ஆட்சியில் அமர்ந்த விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு, கடந்த 58 மாத காலமாக நிர்வாக சீர்கேடுகளை சரிசெய்யாமலும், அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவேற்றித் தராமலும், மக்கள் நிம்மதியுடன் வாழ்வதற்கான சூழ்நிலையை ஏற்படுத்தித் தராமலும், வெற்று விளம்பரங்களையும், பொய்யான வாக்குறுதிகளையும் அளித்து, தனது குடும்ப நலன் ஒன்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்கது.

    அந்த வகையில், மதுரை மாநகராட்சி நிர்வாகப் பதவிகளில் இருந்த ஆளும் திமுக-வினரால் நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஊழல் முறைகேடுகளைத் தொடர்ந்து, திமுக-வைச் சேர்ந்த மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், விடியா திமுக அரசு சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், குற்றம் புரிந்தவர்களுக்கு ஆதரவாக இருந்து வருவது மிகுந்த வேதனைக்குரிய விஷயமாகும்.

    மாநகராட்சி மேயர், மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் நிலைக்குழுத் தலைவர்கள் ராஜினாமா செய்து 5 மாதங்கள் ஆகியும், அப்பதவிகளுக்கு இதுவரை யாரும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக, மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்படுவதில் காலதாமதம் ஏற்பட்டு, அப்பகுதிவாழ் மக்கள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாமல், குற்றம் இழைத்துள்ளவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் நிர்வாகத் திறனற்ற விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

    இந்நிலையில், மதுரை மாநகராட்சியில் நடைபெற்றுள்ள மாபெரும் ஊழல் முறைகேடுகளுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், அவர்களுக்கு ஆதரவாக இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசு மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்தும், மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தியும், அதிமுக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் வருகின்ற வியாழக்கிழமை (12.3.2026) காலை 10 மணியளவில் `முனிச் சாலை, தினமணி தியேட்டர் அருகில்', அமைப்புச் செயலாளரும், மதுரை மாநகர் மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் ராஜூ தலைமையிலும், கழக அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளருமான ஏ.ஏ. ராஜன் செல்லப்பா முன்னிலையிலும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

    இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டங்களைச் சேர்ந்த தலைமைக் கழகச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர், சார்பு அணிகளின் நிர்வாகிகள், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மாமன்ற இன்னாள், முன்னாள் வார்டு உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    மக்கள் நலனில் சிறிதும் அக்கறை இல்லாத, நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசையும், மதுரை மாநகராட்சி நிர்வாகத்தையும் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், கழகத்தின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளின் நிர்வாகிகளும், உறுப்பினர்களும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்வதோடு; வியாபாரிகள்,

    பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

    • காலை இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர்.
    • ஆதிநாரயணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 55). இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் அரசு பேருந்து ஓட்டுநராக பணி செய்து வந்தார். இவரது தம்பி மகன் ஸ்ரீ என்ற ஸ்ரீ கிருஷ்ணன் (20). இவர் மதுரை தனியார் கல்லூரியில் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 7.45 மணிக்கு இருவரும் தங்களுக்கு சொந்தமான தோட்டத்தில் மாட்டு தீவனம் அறுத்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென காற்று அடித்து அங்கிருந்த மின்வயர் அறுந்து ஸ்ரீ கிருஷ்ணன் மீது விழுந்தது. இதில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த ஆதி நாராயணன் மற்றும் அவரது தந்தை சின்னத்தம்பி (79) இருவரும் ஸ்ரீ கிருஷ்ணனை காப்பாற்ற முயற்சி செய்தனர்.

    அப்போது இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் ஆதிநாரயணன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். சின்னதம்பி பலத்த காயமடைந்தார். சம்பவம் குறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பலத்த காயம் அடைந்த ஸ்ரீ கிருஷ்ணன், சின்ன தம்பி இருவரையும் வாடிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்தனர். அப்போது செல்லும் வழியிலேயே ஸ்ரீ கிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். சின்னத்தம்பி மதுரை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

    மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்பட்டுள்ளது. 

    • ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை.
    • அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும்.

    மதுரை:

    திருத்தொண்டர் சபை அறங்காவலர் ராதா கிருஷ்ணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த அவமதிப்பு மனுவில் கூறியிருந்ததாவது:-

    கரூர் வெண்ணெய்மலை பாலசுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சொந்தமான 507 ஏக்கர் நிலத்தை மீட்கும் உத்தரவை 6 ஆண்டுகளாக செயல்படுத்தாத அதிகாரிகள் மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தார்.

    இந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வேல்முருகன், புகழேந்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

    கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோர்ட்டு உத்தரவிட்டது. அந்த உத்தரவு அடிப்படையில் ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை மேற்கொண்ட போது அதை இனாம் நில விவசாயிகள் குத்தகைதாரர்கள், வீட்டு மனை உரிமையாளர்கள் பாதுகாப்பு இயக்கம் போன்ற சில அமைப்புகள் போராட்டம் நடத்தி தடுத்துள்ளது. சட்டத்துக்கு புறம்பான செயல்களால் கோர்ட்டு உத்தரவை தடுக்க முடியாது. இந்த போராட்டத்தில் வக்கீல்களும் மக்கள் பிரதிநிதிகளும் பங்கேற்றது வருத்தத்தை தருகிறது.

    ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை. இருப்பினும் அறநிலையத்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, கோவில் நிலங்கள் தொடர்பான வழக்குகளைக் கையாளும் சிவில் கோர்ட்டுகள், முடிந்த வரை, முன்னுரிமை அடிப்படையில் 6 மாதங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும். மீட்கப்பட்ட நிலங்கள், மீட்பு நடவடிக்கைகள், வழக்குகள், வழக்கின் நிலை மற்றும் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விரிவான அறிக்கையை 3 மாதங்களுக்கு ஒரு முறை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.

    வெண்ணெய்மலை கோவில் ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கு போதுமான பாதுகாப்பு வழங்குவதை கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உறுதி செய்ய வேண்டும். கோவில் ஆக்கிரமிப்பு மீட்புக்கு எதிராக போராட்டம் நடத்திய அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து சங்கங்களின் பதிவாளர் விசாரித்து, சட்டவிரோத நடவடிக்கைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

    • தமிழகத்தில் 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
    • அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சிக்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது. விழாவின் போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-

    தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையேற்று பல்வேறு இயக்கங்களில் இருந்து தி.மு.க.வில் இணைகின்ற நிகழ்ச்சி வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதன் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு தொடங்கி உள்ளோம்.

    தமிழகத்தில் 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். நாட்டு மக்களுக்கும், அடித்தள மக்களுக்கும் எது தேவையோ அதை அறிந்து புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.

    அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர்.

    இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை பொதுமக்கள் தெரிவித்து உள்ளார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது நிருபர்கள் அ.தி.மு.க.வில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறினார்.

    • சி.பி.ஐ. மதுரை மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது.
    • மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    மதுரை:

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பிரசித்தி பெற்ற மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் காவலாளி அஜித் குமார் மீது நிகிதா என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் நகை திருடியதாக புகார் அளித்தார். இதன் அடிப்படையில் திருப்புவனம் தனிப்படை போலீசார் அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் படுகாயம் அடைந்து இறந்தார்.

    தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக மானாமதுரை தனிப்படை போலீஸ்காரர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் இந்த வழக்கை மதுரை ஐகோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது.

    அண்மையில் சி.பி.ஐ. மதுரை மாவட்ட கோர்ட்டில் இந்த வழக்கு தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது. அதில் நிகிதா பொய் புகார் அளித்ததாகவும், போலீஸ் விசாரணையில் அஜித் குமார் தாக்கப்பட்டு இறந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போது நகை திருட்டு என பொய் புகார் அளித்த நிகிதா மீது நடவடிக்கை எடுக்க நீதிபதி அறிவுறுத்தினார்.

    அதன்படி அஜித்குமார் கொலை வழக்கில் நிகிதாவை நேரில் அழைத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகிதாவை நேரில் ஆஜராக நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

    அதன்படி இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நிகிதா ஆஜரானார். மாவட்ட கோர்ட்டு உத்தரவுப்படி நிகிதாவிடம் சி.பி.ஐ. புகார் தொடர்பாக விசாணை நடத்துவார்கள் என தெரிகிறது. 

    • டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
    • முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

    தமிழகத்தில் சட்டசபை தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் கட்சி ஆகிய 4 முனை போட்டிகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

    பா.ஜ.க.வுடன் தொகுதி உடன்பாட்டை இறுதி செய்வதற்காக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். டெல்லியில் மத்திய மந்திரி அமித்ஷாவை எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

    இதையடுத்து கூட்டணியில் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் திருப்பரங்குன்றத்தில் பாஜக போட்டியிடுமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஏற்கனவே திருப்பரங்குன்றத்தில் அதிமுக எம்.எல்.ஏ. தான் உள்ளார். ஆகவே இந்த மாதிரியான கோரிக்கைகளை நாங்கள் எழுப்பவில்லை என்றார்.

    இதையடுத்து முருகனின் அறுபடை வீடுகள் இருக்கும் தொகுதிகளை அதிமுகவிடம் பாஜக கேட்டுள்ளதாக கூறப்படும் தகவல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அத்தகைய எந்த தொகுதிகளையும் நாங்கள் அதிமுகவிடம் கேட்கவில்லை" என்று தெரிவித்தார்.

    • மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
    • காவல் ஆய்வாளர் தர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம் வரும் மார்ச் 23ம் தேதி தீர்ப்பு வழங்குகிறது.

    சாத்தான்குளம் கொலை வழக்கில் மதுரை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பை வழங்குகிறார்.

    2020ம் ஆண்டில் போலீஸ் விசாரணையின்போது ஜெயராஜ், பென்னிக்ஸ் தாக்கப்பட்டபோது உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

    • திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?
    • மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.

    மதுரையில் இன்று மாலை நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை சொந்தங்களே நீங்கள் என் மீது பொழியும் பேரன்பு மலேசியாவில் இந்தியர்கள் என் மீது பொழிந்த பேரன்மை நினைவுபடுத்துகிறது.

    நாவில் இனிக்கும் தமிழுக்கும், நாசியில் இனிக்கும் மல்லிகைக்கும் பெயர்போனது மதுரை மண்.

    தமிழ்நாட்டில் மீண்டும் ஆட்சியை பிடிக்கலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். ஆனால், அவர்களின் கனவு பலிக்காது.

    திமுகவின் கனவுக்கோட்டை கானல் நீராக மாறிவிடும், இந்த தேர்தல் மாற்றத்தை கொண்டுவரும் தேர்தல்.

    வரும் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    திமுக ஆட்சியை வழியனுப்பி வைப்பதற்கு தமிழ்நாடு மக்கள் தயாராகிவிட்டனர்.

    வரும் தேர்தல் திருப்புமுனையாக அமையும். திமுக ஆட்சிக்கு முடிவுகட்ட மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். தமிழ்நாட்டை திராவிட முன்னேற்றக் கழகம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது.

    மாஃபியா போல் தமிழ்நாட்டை திமுக கொள்ளை அடிக்கிறது.

    மோசமான சாலை, அசுத்தமான குடிநீர் இதைத்தான் திமுக அரசு கொடுத்தது.

    ஊழல் காரணமாக மதுரை மாநகர் மேயரின் பதவியே பறிபோய் உள்ளது. இதுதான் திமுகவின் ஆட்சி.

    25 ஆண்டுகளுக்கு பின் முழு மெஜாரிட்டியுடன் திமுக ஆட்சிக்கு வந்தும் கூட தமிழ்நாட்டிற்கு எதுவும் செய்யவில்லை.

    மதுரை மக்கள் எம்ஜிஆருடன் நின்றார்கள் அதனால் மதுரையை திமுகவிற்கு பிடிக்கவில்லை. ஊழல் ஆட்சியா? என்டிஏ கூட்டணி ஆட்சியா? என்ன வேண்டும் என மக்கள் தான் முடிவெடுக்க வேண்டும்.

    திமுக அரசின் ஊழல் ஆட்சியால் லட்சக்கணக்கான ஏழைக்குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

    திமுக அரசால் ஏழைகளுக்கான 3 லட்சம் வீடுகள் கட்டும் பணி முடங்கி உள்ளது. திமுகவின் சில்லறை அரிசயலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்?

    மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது, நல்லது செய்யவும் விடாது.

    பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என்பது தான் திமுகவின் மாடல்.

    தமிழ்நாட்டின் உரிமைக்காக வாய் கிழிய பேசும் திமுக மாநில மக்களுக்காக ஒன்றும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.
    • திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

    என்டிஏ பொதுக்கூட்டத்தில் அனைவருக்கும் வணக்கம் எனத் தமிழில் பிரதமர் மோடி பேசினார்.

    பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர், கட்டபொம்மன், அழகுமுத்துகோன், மருது சகோதரர்கள் பெயர்களை குறிப்பிட்டு பிரதமர் மோடி பேசினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    நீதிக்கும் கண்ணியத்திற்கும் போராடிய இமானுவேல் சேகரனாரை நினைவு கூர்கிறேன்.

    இது பாண்டிய நாடு, வீரம் விளைந்த பூமி, புண்ணிய பூமி.

    திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞருக்கு அஞ்சலி.

    திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவதற்காக உயிர் தியாகம் செய்த பூரணச்சந்திரனை நினைவு கூர்கிறேன். இளைஞர் பூரண சந்திரன் செய்த உயிர் தியாகத்தை எண்ணி மனம் கனக்கிறது. அவரது குடும்பத்தினருகு்கு இரங்கல்.

    பூரணச்சந்திரன் மனைவி, குழந்தைகளை சந்தித்து ஆறுதல் கூறினேன். திருப்பரங்குன்றம் முருகனிடம் அவர்களுக்காக பிரார்த்தித்தேன்.

    திமுக என்ன சதி செய்தாலும் இறுதியில் திருப்பரங்குன்றம் முருகனை வணங்கும் எம் மக்களே வெல்வார்கள்.

    திமுக என்ன செய்தாலும் இறுதியில் வாய்மையே வெல்லும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.
    • தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.

    மதுரை மண்டேலா நகரில் நடைபெற்று வரும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உரையாற்றினார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    சித்திரை திருவிழா போல மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார்.

    அனைத்து நிலை மக்களும் தெருவுக்கு வந்து போராடும் நிலை தமிழகத்தில் உள்ளது.

    பிரதமர் மோடிக்கு எடப்பாடி பழனிசாமி உறுதுணையாக இருக்கிறார்.

    தமிழ்நாட்டில் இருந்து திமுக என்ற இருண்ட ஆட்சியை அகற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலக நாடுகள் நேசிக்கும் தலைவர் பிரதமர் மோடி.
    • மாணவர்கள் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சி தான் காரணம்.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மதுரை மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்தில் நயினார் நாகேந்திரன் வரவேற்புரை அளித்தார்.

    அப்போது அவர்,"உலக நாடுகள் நேசிக்கும் தலைவர், வாராது வந்த மாமணி பிரதமர் நரேந்திர மோடியை வர்வேற்பதாக" குறிப்பிட்டார்.

    மேலும் அவர் பேசியதாவது:-

    புத்தகங்களை தூக்க வேண்டிய மாணவர்கள் கையில் கஞ்சா இருப்பதற்கு திமுகவின் மோசமான ஆட்சி தான் காரணம்.

    உதயநிதி ஸ்டாலினை முதல்வராக்க வேண்ஐம் என்பதற்காகவே ஆட்சி நடத்துகிறது திமுக.

    சிறுமிகள் முதல் வயது முதிர்ந்த பெண்கள் வரை யாருக்கும் தமிழ்நாட்டில் பாதுகாப்பில்லை.

    2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் தர்மத்திற்கும் அதர்மத்திற்குமான தேர்தல்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×