என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 சட்டமன்ற தேர்தல்"

    • தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர்.
    • அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகிறார்.

    தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இன்னும் சில நாட்களில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில், தமிழக சட்டமன்றத் தேர்தல் முன்னேற்பாடு குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் சென்னையில் இன்றும், நாளையும் ஆலோசனை நடத்த உள்ளனர்.

    இதில், அனைத்து மாவட்ட ஆட்சியர்கள், அரசு உயரதிகாரிகள், அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர் கலந்துரையாடுகின்றனர்.

    தலைமைத் தேர்தல் ஆணையரிடம் தேர்தலை வெளிப்படையாகவும், அமைதியாகவும் நடத்த அரசியல் கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.
    • கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையை தொடர்ந்து தற்போது தொகுதிப் பங்கீட்டில் இறங்கியுள்ளன அரசியல் கட்சிகள். அந்த வகையில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜக இந்த தேர்தலில் போட்டியிட 35 தொகுதிகளை கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக இன்று (பிப். 24) வழங்கியுள்ளது. இதில், நேரடியாகப் போட்டியிடுவதற்காக 30 முதல் 35 தொகுதிகளை பாஜக கேட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    சென்னையின் ஆயிரம் விளக்கு, தியாகராய நகர், வேளச்சேரி, திருத்தணி, காஞ்சிபுரம், ஆவடி, திருத்தணி, காஞ்சிபுரம், தென்காசி, திருவண்ணாமலை, பழனி ஆகிய தொகுதிகள் பட்டியலில் அடங்கும். பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன், அக்கட்சியின் தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் ஆகியோர் இந்தப் பட்டியலை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கியுள்ளனர்.  

    கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 20 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக 4 தொகுதிகளில் வெற்றிப் பெற்றது. மேலும் நாடாளுமன்ற தேர்தலில் தனது வாக்கு வங்கி அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டி கூடுதல் தொகுதிகளைக் கோருகிறது.  ஆனால் அதிமுக தலைமை சுமார் 25 தொகுதிகளை மட்டுமே ஒதுக்க முன்வந்துள்ளதாகவும், தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க எடப்பாடி பழனிசாமி இதுவரை சம்மதிக்கவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மறுபுறம், திமுக கூட்டணியில் காங்கிரஸ் 45 தொகுதிகளை கோரிவருவது குறிப்பிடத்தக்கது.

    • தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார்.

    நீண்ட நாட்களாக காத்திருந்த காங்கிரஸுக்கு ஆசுவாசம் அளிக்கும் விதமாக தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையைத் நேற்று முன்தினம் (பிப்.22) தொடங்கியது தி.மு.க.

    தொகுதி பங்கீட்டை முன்னெடுக்க டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழுவை திமுக அமைத்துள்ளது. இந்தக் குழு முஸ்லீம் லீக் கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. முஸ்லீக் லீக் சார்பில் 5 தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளன. ஆனால் தி.மு.க. 2 தொகுதிகளை மட்டுமே கொடுக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.

    இதனைத்தொடர்ந்து மதிமுக பேச்சுவார்த்தை நடத்தியது. கடந்த முறை 6 இடங்களில் போட்டியிட்ட நிலையில், இந்த முறை இரட்டை இலக்க எண்ணிக்கையில் தொகுதிகளைக் கோருகிறது. மேலும் ஒரு ராஜ்யசபா இடத்தையும் கோரியுள்ளது. தொடர்ந்து கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்த குழுக்களை அமைத்து ஆயத்தமாகி வருகின்றன.

    இந்நிலையில் காங்கிரஸ் 45 இடங்களை கோரியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க. தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கிய அன்றே முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது அவர் 45 இடங்களை கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஆனால் தி.மு.க. இத்தனை இடங்களை கொடுக்க முன்வர தயங்குகிறது. காரணம் கூட்டணிக் கட்சிகளைத் திருப்திப்படுத்தும் அதே வேளையில், தி.மு.க. தனித்துப் பெரும்பான்மை பெறும் வகையில் சுமார் 165-170 தொகுதிகளில் போட்டியிடத் திட்டமிட்டுள்ளது. 

    அதேவேளை காங்கிரஸின் உள் மதிப்பீட்டின்படி, தி.மு.க. 2021 இல் 173 தொகுதிகளில் போட்டியிட்டு, 133 தொகுதிகளில் வெற்றி பெற்று 40 தொகுதிகளில் தோல்வியடைந்தது. பெரும்பாலும் இந்த 40 தொகுதிகளில் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க.விடம் தோல்வியடைந்தது. இந்த தோல்வியடைந்த தொகுதிகளில் குறைந்தது 20 இடங்களை தங்களுக்கு ஒதுக்கினால் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    இருப்பினும், கடந்த 2021 தேர்தலைப் போலவே 25 இடங்கள் அல்லது அதற்குச் சற்று கூடுதலாக (27-28) வழங்கவே திமுக விரும்புவதால் முதற்கட்டப் பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிக்கிறது. 2021-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில், போட்டியிட்ட 25 தொகுதிகளில் 18 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 2016 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 41 தொகுதிகளில் போட்டியிட்டு 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம்.
    • இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கொளத்தூர் பூம்புகார் நகரில் இந்து சமய அறநிலையத்துறையின் கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை திறந்து வைத்து பேசியதாவது:-

    "இந்தியா முழுக்க பின்பற்றக்கூடிய மாடலாக நம்முடைய திராவிட மாடல் இருக்கிறது என்றால், அந்த திராவிட மாடல் அரசின் மாடல் தொகுதியாக இருப்பது கொளத்தூர் தொகுதி. எல்லா வகையிலும் தன்னிறைவு பெற்ற தொகுதியாக கொளத்தூரை வளர்த்து எடுத்துள்ளோம்.

    ஏதோ தேர்தல் வரும் போது மட்டும் ஒன்று, இரண்டு திட்டங்களை தொடங்கி வைக்கவில்லை. கடந்த 5 வருடமாக பார்க்கிறீர்கள். ஒவ்வொரு மாதமும் வந்து உங்களுக்கு தேவையான எல்லாவற்றையும் செய்து கொடுத்து கொண்டு வருகிறோம். இங்கு பல்கலைக்கழகம் போன்று கபாலீசுவரர் கல்லூரியை உருவாக்கி உள்ளார் அமைச்சர் பி.கே.சேகர்பாபு.

    கபாலீசுவரர் கலை அறிவியல் கல்லூரியை உலகத் தரத்தில் உருவாக்கி உள்ளோம். கல்வி எனும் கடவுள்தான் உங்களுக்கு அனைத்தையும் கொடுக்கும். பெரிய பெரிய திட்டப் பணிகளை தமிழ்நாடு முழுவதும் திறந்து வருகிறேன். தமிழ்நாடு முழுவதும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒவ்வொரு தொகுதியிலும் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி உள்ளோம். மக்களை மையப்படுத்தி மக்களை தேடி வந்து சேவைகளை வழங்குகிற மக்களாட்சியாக திராவிட மாடல் பெயர் எடுத்துள்ளது.

    இந்த நல்லாட்சி தொடர, நம்ம கொளத்தூர் மேலும், மேலும் உயர, உங்களுடைய ஆதரவு என்றும் எங்களுக்கு இருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்." இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பி.கே.சேகர்பாபு, கோவி.செழியன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முன்னாள் எம்.எல்.ஏ. ப.ரங்கநாதன், மேயர் ப்ரியா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

    • சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.
    • இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    திமுகவின் வாக்குச்சாவடி முகவர்கள் மண்டல பயிற்சி மாநாடு இன்று காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் நடைபெற்றது. இதில் திமுகவின் 15 மாவட்டங்களை உள்ளடக்கிய சென்னை மற்றும் விழுப்புரம் மண்டலங்களைச் சேர்ந்த BLA2, BLC, BDA, BYA நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

    இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள வாக்குச்சாவடி முகவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் நிகழ்வில் பேசிய அவர், 

    "சென்னை, விழுப்புரம் மண்டலங்களில் 49 தொகுதிகள் அடங்கியுள்ளது. இங்கு வெற்றியை உறுதி செய்ய நாம் இங்கு கூடியுள்ளோம். சென்னையும், வடக்கு தமிழ்நாடும் எப்போதும் திமுகவின் கோட்டை என்பதை நாம் நிரூபித்துக் காட்ட வேண்டும்.

    தேர்தல் பணி என வந்தால், திமுகவினரை அடித்துக்கொள்ள ஆள் கிடையாது. நான் மட்டுமல்ல, திமுகவின் எதிரிகளே இதை பல நேரங்களில் சொல்லியிருக்கிறார்கள். அதே ஆற்றல், அதே கவனத்தோடு இந்தமுறையும் உழைக்கவேண்டும். தேர்தல் களத்தில் திமுகதான் ஹீரோ. இந்தியாவில் எந்தக் கட்சியிலும் இல்லாத கட்டமைப்பு திமுகவில் உள்ளது.

    தமிழ்நாட்டில் உள்ள மொத்த பூத்துகளின் எண்ணிக்கை 75 ஆயிரம். ஒவ்வொரு பூத்திற்கும் நாம் 350 வாக்குகளை டார்கெட் செய்திருக்கிறோம். இதை அடைந்தாலே 2 கோடியே 65 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை நாம் பெறலாம். 2021-ஐவிட தற்போது நமக்கான ஆதரவு அதிகரித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலிலேயே அது தெரிந்தது.

    நிச்சயமாக 2026 தேர்தலில் திமுக வெல்லும். தற்போதைய சூழலில் திமுக கூட்டணி தவிர்த்து யாருக்கு வாக்களித்தாலும், வளர்ச்சி அரசியல் மாறி கலவர அரசியல்தான் நடக்கும். வெல்லப்போவது தமிழ்நாடு அணியா? டெல்லி அணியா? என்பதை முடிவு செய்யப்போவதுதான் இந்தத் தேர்தல் . 

    அரசியல் விருப்பு, வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டை காக்க எல்லோரையும் திமுகவை ஆதரிக்கவேண்டிய தேவையை விளக்கவேண்டும். மத்திய அரசு தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு செய்யக்கூடிய நிதி வஞ்சகத்தையும், அதை எதிர்த்து கேள்விக்கேட்காத அதிமுகவையும் மக்கள்முன் தோல் உரிக்கவேண்டும்.

    பாஜகவின் டப்பா என்ஜின் முன்னால், தமிழ்நாடு திராவிட மாடல் சூப்பர் ஃபாஸ்ட் என்ஜின் என்றும் தலைகுனியாது. இதனை தமிழ்நாட்டின் ஒவ்வொரு வாக்காளருக்கும் கொண்டு செல்லவேண்டும். களப்பணி மட்டும்தான் முழுப்பணி. வெறுப்பை விதைத்து, வன்முறையைத் தூண்டி, மக்களை பிளவுப்படுத்தி அதன்மூலம் வெற்றிப் பெறலாம் என துடிக்கும் விஷவிதைகளை தமிழ்நாட்டிற்குள் விடவேக்கூடாது. நாம் போராடுவது திமுகவின் வெற்றிக்காக அல்ல, தமிழ்நாட்டின் வெற்றிக்காக.

    எங்கு யார் நின்றாலும், 234 தொகுதிகளிலும் ஸ்டாலின்தான் நிற்கிறேன் என்று நினைத்து பணியாற்றவேண்டும். ஒற்றுமை இல்லாமல் இலக்கை அடையமுடியாது. இந்தியாவில் எந்தக் கட்சியும் இப்படி உழைக்காது. அதனால்தான் திமுக, தமிழ்நாடு நம்பர் ஒன்னாக இருக்கிறது." என தெரிவித்தார். 

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் உள்ளது.
    • தேசிய செயற்குழு தலைவர் மூர்த்தி தலைமையில் குழு அமைப்பு

    தமிழ்நாட்டில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தேசிய செயற்குழு உறுப்பினர் மூர்த்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. 

    இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தோழர்கள் டி.எம்.மூர்த்தி - ஒருங்கிணைப்பாளர், க.சந்தானம், வஹிதா நிஜாம், மருத்துவர் ஜி.ஆர்.ரவீந்திர நாத், எம்.செல்வராஜ், த.லெனின், சு.மோகன் குமார், பி.எஸ்.மாசிலாமணி, அ.பாஸ்கர் ஆகியோர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஏதுவாக அனைத்து துறை அமைப்புகளும், சமூக ஆர்வலர்கள், அறிவு ஜீவிகள் உள்ளிட்ட பொது மக்களும் தங்களது கருத்துக்களையும், ஆலோசனைகளையும் கீழ் கண்ட முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம்.

    மேலும் விவரங்களுக்கு: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநிலக்குழு "பாலன் இல்லம்" எண் 43/19, செவாலியர் சிவாஜி கணேசன் சாலை, தியாகராயா நகர், சென்னை - 600 017, அலைபேசி எண்: 98408 54707, மின்னஞ்சல்: cpi.tamilnadu@gmail..com. " எனக் குறிப்பிட்டுள்ளார்.

     

    • திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அமைக்கப்பட்டுள்ளது.
    • இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தை, தேர்தல் வியூகங்கள், தேர்தல் அறிக்கை பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. திமுகவில் கனிமொழி தலைமையிலும், தவெகவில் அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் கே.ஜி. அருண்ராஜ் தலைமையிலும் அறிக்கை தயாரிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் முதற்கட்ட தேர்தல் அறிக்கையே வெளியாகிவிட்டது. 

    இந்நிலையில் தமிழ்நாடு பாஜக அக்கட்சியின் மூத்த நிர்வாகி தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை நியமித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாஜகவின் எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், 

    'தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவானது, முன்னாள் மாநிலத் தலைவரும், தேசிய பொதுக்குழு உறுப்பினருமான தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் அமைக்கப்படுகிறது.' எனக் குறிப்பிட்டுள்ளது. இக்குழுவில் மாநிலத் துணைத்தலைவர் துரைசாமி உட்பட 12 பேர் இடம்பெற்றுள்ளனர். 


    • இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக.
    • திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்

    தூத்துக்குடியில் செய்தியாளர்களுடன் பேசிய நடிகர் சரத்குமார், 

    "நூறுநாள் வேலை திட்டத்தை சிதைப்பதற்கான எந்த திட்டமும் இல்லை. வேலையில்லாத இடத்தில் வேலைசெய்துவிட்டு இலவசமாக பணம் கொடுக்கக்கூடாது என்றுதான் சொல்கிறார்கள். திமுக எந்த நலத்திட்டங்களையும் வரவேற்பது இல்லை. சாதகமாக இருக்கும் திட்டங்களில் அவர்களின் பெயர்களை போட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கு பாதகமாக இருப்பதை குற்றச்சாட்டாக கூறுகிறார்கள். இன்னும் தேர்தலை சந்திக்காத ஒரு அரசியல் கட்சி தவெக. இப்போதுதான் களத்திற்கு வந்துள்ளார்கள். தங்களின் கொள்கை, கோட்பாடை சொல்லாமல் தனிநபர் தாக்குதலை தொடர்ந்து கொண்டிருக்கிறார்.

    தேர்தலுக்கு பின்தான் அவர் கட்சியை நடத்துவாரா? இல்லையா என்பது தெரியவரும். ஒரு பெண் நிர்வாகி கேட்கும்போது வண்டியை நிறுத்தி என்னவென்று கேட்பவர்தான் கதாநாயகனாக இருக்கமுடியும். தலைவனாக இருக்கமுடியும். இறங்கி பேசியிருந்தால் இன்று அவர் தூக்கமாத்திரை சாப்பிடிருக்கமாட்டார். திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றாதது தேர்தலில் பிரதிபலிக்கும்." என தெரிவித்தார். 

    தொடர்ந்து பாஜக தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசிய அவர், சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டு, மாநிலத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, எத்தனை தொகுதிகளில் பாஜக போட்டியிடும் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்தார். 

    • 2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம்.
    • அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்

    தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் இன்று சென்னை கிண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். இதன்பின் கோயல், இபிஎஸ் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். 

    அப்போது பேசிய பியூஷ் கோயல், "சென்னைக்கு வந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்த சந்திப்பு சிறப்பாக நடந்தது. 2026 தேர்தலை எதிர்கொள்வது குறித்து எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினோம். மக்கள் பணிகள் குறித்தும் ஆலோசித்தோம். மக்களுக்கு வளர்ச்சி ஏற்படுத்தும் வகையில் செயல்படுவோம். வளர்ச்சி, வேலைவாய்ப்பே பாஜகவின் இலக்கு.

    2026 தேர்தலை பிரதமர் மோடியின் வழிகாட்டுதலுடன் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள உள்ளோம். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம். வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றிபெறும். ஊழல் திமுக கூட்டணியை தோற்கடிப்போம்" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து பேசிய எடப்பாடி பழனிசாமி, "வரும் தேர்தலில் அதிமுக கூட்டணி எப்படி செயல்பட வேண்டும் என்று ஆலோசனை செய்தோம். வரும் 2026 தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதிமுக தலைமையில் ஆட்சி அமையும்" என்று தெரிவித்தார்.

    • மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை
    • எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் விஜய் பயணிக்கிறார்

    பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லைக்கு சென்ற பா.ஜனதாவின் தேசிய பொதுக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமாருக்கு அக்கட்சி நிர்வாகிகள் மற்றும் அவரது ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து அங்கு செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், 

    "100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் காந்தி பெயரை மாற்றினார்கள் என்றால் பொதுவான பெயரை வைத்துள்ளார்கள். காந்தி பெயரை தூக்க வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசுக்கு கிடையாது. ஏதாவது ஒரு காரணத்தை சொல்ல வேண்டும் என்பதற்காகவே இதனை எதிர் கட்சியினர் சொல்கிறார்கள். வேலை வாய்ப்பு திட்டத்தில் உள்ள பலன்கள் என்ன என்பதை அறிந்து பேச வேண்டும். 100 நாட்களை 125 நாட்களாக உயர்த்தி உள்ளனர். மாநில அரசு இந்த திட்டத்தில் பங்கேற்க வேண்டும் என சொல்வதால் தான் இந்த திட்டம் அவர்களுக்கு இடிக்கிறது.

    மத்திய அரசு தமிழ்நாட்டிற்கு எந்த நெருக்கடியும் கொடுக்கவில்லை. தமிழ்நாட்டில் 90 சதவீதம் திட்டங்கள் மத்திய அரசின் திட்டமே செயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தி விட்டு தி.மு.க தனது பெயரை வைத்துக் கொள்கி றது. மதச்சார்பின்மை குறித்து தி.மு.க. பேசுவது வேடிக்கையாக உள்ளது.

    தீபாவளி கொண்டாட மாட்டார்கள். வேறு எந்த விழாவும் கொண்டாட மாட்டார்கள். ஆனால் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடி கொள்கிறார்கள். இந்துக்களை புறக்கணிப்பது தி.மு.க. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும். தீப தூணில் தீபம் ஏற்றப்பட வேண்டும் என்பது அனைவரின் எண்ணமாக உள்ளது. தீபத்தூண் விவகாரத்தில் அரசு மாற்றி மாற்றி பேசி வருகிறது.

    தேவையற்ற விஷயங்களை புகுத்துவது தவறான ஒன்று. பிறர் நம்பிக்கையை கெடுக்கும் விதமாக பேசக்கூடாது. உங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால் உங்களோடு இருக்க வேண்டும். பிறரது நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் செய்யக் கூடாது. தேர்தல் வரும்போது மக்கள் எப்படி இருப்பார்கள் என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும். மத்திய அரசின் திட்டங்களை தெளிவாக மக்களிடம் எடுத்துச் சொல்ல இருக்கிறோம். அதன் பின்னர் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்பது தெரியும்.

    தமிழக வெற்றிக் கழகம் என்று முழுசாக சொன்னால் எனக்கு தெரியவில்லை. த.வெ.க., இ.வெ.க., மு.வெ.க. என சொன்னால்தான் தெரிகிறது. அரசியல் கட்சி ஆரம்பித்தால் தேர்தல் பணி தொடங்குவது அவர்களது வேலை. அதனை அவர்கள் தொடங்கியுள்ளார்கள். விஜய்க்கு யார் நல்லவர்கள்? யார் கெட்டவர்கள்? என்று தெரியவில்லை. அவர் அரசியல் பேசுகிறார். எதிர்த்து பேசினால் தான் அரசியல் என்ற எண்ணத்தில் அவர் பயணித்து வருகிறார்.

    விஜயை பிரம்மாண்டமாக காட்டி அவரது கட்சி பெரிய கட்சியாக மக்கள் மத்தியில் காட்டப்பட்டு வருகிறது. உலகத்தில் மிகப்பெரிய கட்சியாக பா.ஜ.க. உள்ளது. தமிழ்நாட்டில் அ.தி.மு.க., தி.மு.க. தான் பெரிய கட்சி. 2026-ம் ஆண்டு தேர்தலில் நான் போட்டியிடவில்லை. என்னுடன் இருப்பவர்களை போட்டியிட்டு வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்ப வேண்டும். ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பயணிக்கிறேன்.

    ஜனவரி மாதம் கூட்டணி நிர்ணயிக்கப்பட்ட பின்னர் முழுவதுமாக இறங்கி தேர்தல் பணியாற்ற தயாராகி வருகிறேன். நான் சட்டமன்றத் தேர்தலில் எங்கும் போட்டியிடவில்லை. எனக்கு வாய்ப்பு கொடுத்தாலும் பிறருக்காக பிரசாரம் செய்து ஆட்சி மாற்றத்திற்காக பிரசாரம் செய்வேன். இவ்வாறு அவர் கூறினார். 

    • அரசியல் கட்சிகள் விருப்பமனு தாக்கலை தொடங்கி உள்ளன
    • இந்தக்குழுவில் பி.டி.ஆர். தியாகராஜன் இடம்பெற்றுள்ளார்.

    திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி தலைமையில் 12 பேர் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவை அமைத்துள்ளது திமுக. இதுதொடர்பான அறிவிப்பை பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ளார். 

    தமிழ்நாட்டில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் விருப்பமனு தாக்கலை தொடங்கி உள்ளன. கூட்டணி தொடர்பாகவும் ஆலோசனை நடத்தி வருகின்றன. இந்நிலையில் திமுக, தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு ஒன்றை அமைத்துள்ளது. 

    கனிமொழி தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக்குழுவில், டி.கே.எஸ். இளங்கோவன், கோவி.செழியன், பி.டி.ஆர். தியாகராஜன், டி.ஆர்.பி.ராஜா, எம்.எம். அப்துல்லா, கான்ஸ்டன்டைன் ரவீந்திரன், எழிலன் நாகநாதன், கார்த்திகேய சிவசேனாபதி, தமிழரசி ரவிக்குமார், ஜி.சந்தானம், சுரேஷ் சம்மந்தம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். 

    இக்குழு தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொது நலச் சங்கங்கள், வணிக அமைப்புகள், இளைஞர்கள், விவசாய அமைப்புகள், தொழிலாளர் அமைப்புகள் மற்றும் பொது மக்கள் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்து ஆலோசித்து அறிக்கை தயாரிக்கும் எனவும் பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். 

    • காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது
    • மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன்

    நாம் தமிழர் கட்சியில் இருந்து கடந்த 2024-ல் விலகிய காளியம்மாள், புதிய கட்சியை ஆரம்பிப்பதா? அல்லது வேறு கட்சியில் இணைவதா என்பது குறித்த முடிவை விரைவில் அறிவிப்பேன் என தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறை தமிழ்ச் சங்கம் சார்பில் பெருங்கவி பாரதியின் 144-வது பிறந்தநாள் விழா மயிலாடுதுறையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சமூக செயற்பாட்டாளர் காளியம்மாள் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர்,  

    "எனது அரசியல் பயணம் மக்களை சேர்ந்து இருக்கும். சட்டமன்ற தேர்தலில் நிச்சயமாக போட்டியிடுவேன். மக்களுக்கான உரிமைகளை பெற்று தருவதற்கான அனைத்து வேலைகளையும் செய்துமுடிப்பேன். அவர்களுடைய பிரதிநிதியாக நிற்பேன். அதற்கான சூழல் விரைவில் வரும். வேறு கட்சிகளில் இணைவேணா என்பதற்கான முடிவை விரைவில் கூறுவேன்." என தெரிவித்தார். 

    காளியம்மாள் தவெகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    ×