search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2026 Assembly Election"

    • உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்.
    • கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

    சென்னை:

    2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 200 தொகுதிகளில் வெற்றி பெற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்து உள்ளார்.

    7-வது முறையாக மீண்டும் தி.மு.க. ஆட்சியை பிடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு செயலாற்றி வருகிறார். இதற்காக 234 சட்டசபை தொகுதிகளிலும் தொகுதி வாரியாக தி.மு.க. தொகுதி பார்வையாளர்களை நியமித்துள்ளார்.

    இவர்கள் ஒவ்வொரு தொகுதியிலும் நடைபெறும் கட்சிப் பணிகள் குறித்தும் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் குறித்தும் விசாரித்து தலைமைக்கு தகவல் அனுப்பி விடுகின்றனர்.

    சட்டசபை பொதுத்தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடமே உள்ளதால் (15 மாதம்) கட்சிப் பணிகளை வேகப்படுத்துவதற்காகவும் ஆலோசனைகள் வழங்குவதற்காகவும் தி.மு.க. உயர்நிலை செயல் திட்ட குழுக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 20-ந்தேதி கூட்டி உள்ளார்.

    இதுகுறித்து பொதுச்செயலாளர் அமைச்சர் துரைமுருகன் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 20-ந்தேதி (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.

    அப்போது உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். கழக ஆக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    இந்த குழுவில் முதலமைச்சருடன், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, கனிமொழி எம்.பி. உள்ளிட்ட 5 துணைப் பொதுச்செயலாளர்கள், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், பழனி மாணிக்கம், பொன்முடி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் உள்பட 27 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    • அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறது.
    • அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர்.

    கோவை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்னை பற்றி பல விமர்சனங்களை அண்மை காலங்களாக தெரிவித்து வருகிறார். எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியாகிய நான் அவரை பற்றி விமர்சனம் செய்வதாக, அவரது கட்சி நிர்வாகிகளுக்கு எழுதிய மடலில் தெரிவித்துள்ளார்.

    ஏதோ நான் முதலமைச்சரை கொச்சைப்படுத்தி பேசியதாகவும், எதிர்கட்சி தலைவர் என்ற நிலையில் இருந்து நான் தவறுதலாக பேசுவதாக விமர்சனம் செய்திருக்கிறார்.

    மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, நான் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், எப்படியெல்லாம் பேசினார் என்பது உங்களுக்கு தெரியும். குறிப்பாக என்னை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்தார். எடப்பாடி பழனிசாமி தமிழக முதலமைச்சராக வர ஊர்ந்து பறந்து சென்றார் என விமர்சனம் செய்தார்.

    இப்படி முதலமைச்சர் தன்னுடைய பதவியை, நிலையை மறந்து தன்னை விமர்சிக்கிறார்.

    ஆனால் என்னை பொறுத்தவரைக்கும், அ.தி.மு.க கட்சி நிர்வாகிகளை பொறுத்தவரை எந்த ஒரு எதிர்கட்சியினரையும் தவறுதலாக விமர்சனம் செய்வது கிடையாது. ஆனால் எங்களை பற்றி ஆளுங்கட்சியினரின் தவறுதலான விமர்சனங்களுக்கு தக்க பதிலடி அவ்வப்போது கொடுப்போம். அ.தி.மு.க ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை என்ற தவறான கருத்தை முதலமைச்சர் தெரிவிக்கிறார். கோவை மாவட்டத்தில் அ.தி.மு.க ஆட்சியில் எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.

    அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்ட திட்டங்களை தி.மு.க. அரசு ஸ்டிக்கர் ஒட்டி திறந்து வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டம் என்பதற்காகவே தி.மு.க. பல திட்டங்களை ஆமை வேகத்தில் மேற்கொண்டு வருகிறது. அ.தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை எல்லாம் கிடப்பில் போட்டு விட்டனர்.

    ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அ.தி.மு.க. ஆட்சியில் எந்த திட்டமும் நிறைவேற்றவில்லை என்று தெரிவிக்கிறார். எப்படியாவது இந்த ஆட்சியாளர்கள் மக்களை குழப்பி அரசியல் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள். அது ஒருபோதும் நடக்காது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு மு.க.ஸ்டாலின் எந்த திட்டங்களை கோவைக்கு கொண்டு வந்தார். திட்டங்களை அறிவிக்கிறார். எந்த திட்டமும் நடைமுறைப்படுத்தவில்லை. பணி தொடங்கவில்லை. பல மாவட்டங்களுக்கு ஆய்வுக்கு போகிறேன் என்கிறார். தி.மு.க ஆட்சியில் எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. எந்த பணியும் நடக்கவில்லை. அப்படி இருக்கையில் எப்படி போய் ஆய்வு பணி மேற்கொள்ள முடியும்.

    அ.தி.மு.க. ஆட்சியில் திட்டங்களை அறிவித்து, பணி முடிந்ததும் நாங்கள் அதனை திறந்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு நாங்கள் கொண்டு வந்த திட்டங்களை தான் முதலமைச்சர் திறந்து வைக்கிறார். இதுதான் நிலைமை.

    2021 தேர்தலின் போது அவர் அளித்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகு என்னென்ன திட்டங்கள் நிறைவேற்றியுள்ளீர்கள் என நான் முதலமைச்சரிடம் கேள்வி கேட்டேன். அதற்கு முதலமைச்சர் பதில் சொல்லாமல், உதயநிதி பதில் சொல்கிறார். முதலமைச்சர் எங்கே போனார்.

    ஏற்கனவே நான் சொன்னபடி எல்லா மாநிலத்திலும் ஒரு முதலமைச்சர் தான் இருக்கிறார்கள். தமிழகத்தில் 4 முதலமைச்சர்கள் இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் தான் உதயநிதி பதில் சொல்லி கொண்டிருக்கிறார். முதலமைச்சர் சொல்ல வேண்டிய பதில் முதலமைச்சர் தான் சொல்ல வேண்டும். அதிகார மையங்கள் 4 இருக்கிறது. அது யார் என்பது உங்களுக்கு தெரியும்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்து விட்டது. அப்படி ஒரு முதலமைச்சர் தான் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார். பொதுமக்கள் பிரச்சனை என்று சொன்னால் அதை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறைக்கு முழு சுதந்திரம் கிடையாது.

    அ.தி.மு.க. கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் தொடர் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    2026 சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக்கழகத்துடன் அ.தி.மு.க. கூட்டணி அமைக்குமா? என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து அவர் கூறியதாவது:-

    சட்டமன்ற தேர்தல் வர ஒன்றரை ஆண்டு காலம் இருக்கிறது. அப்போது தான் கூட்டணி குறித்து தெரிவிக்க முடியும். ஏற்கனவே ஒருமித்த கருத்துள்ள கட்சிகள் எங்களுடன் கூட்டணிக்கு வரும் என தெரிவித்துள்ளேன். வருகிற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி இல்லை என்பதை நாங்கள் பலமுறை தெரிவித்து விட்டோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இப்போது சாலையில்‌ செல்லும்‌ 10 கார்களில்‌ 8 கார்கள்‌ தமிழக வெற்றி கழகத்தின்‌ கொடிகளைக்‌ கட்டி செல்கின்றன.
    • இன்னும்‌ 16- 17 மாதங்கள்‌ கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும்‌.

    பெரம்பலூர்:

    பெரம்பலூரில் தமிழக வெற்றிக்கழக மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கலந்துகொண்டு பேசினார்.

    தமிழக வெற்றி கழகத்தினர் முதல் மாநாட்டை எப்படி நடத்த போகிறார்கள் என்று உலகமே உற்று நோக்கி வந்த நிலையில் ஒவ்வொரு தொண்டரும், நிர்வாகிகளும் ஒற்றுமையோடு ஒவ்வொருவரின் குடும்பத்தில் நடக்கும் விழாவாக நினைத்து கடுமையாக உழைத்து மாநாட்டை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளோம்.

    யார் என்ன சொன்னாலும் சரி, தமிழக வெற்றிக் கழத்தினருக்கு ஒரு பிரச்சினை என்றால் முதலில் குரல் கொடுப்பதும் விஜய் தான். உங்களுக்காக முதலில் வந்து நிற்பதும் அவர்தான். சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18. மாதங்கள் மட்டுமே உள்ளன. 2026-ல் முதலமைச்சர் இடத்தில் விஜய்யை உட்கார வைப்பதற்கு நாம் உழைக்க வேண்டும்.

    நிர்வாகிகள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து அதனை செயல்படுத்த வேண்டும். நல்ல விஷயங்களுக்காக நல்ல முறையில் நமது கட்சியை பயன்படுத்தி தமிழக வெற்றி கழகத்தை வளர்ப்பதற்கு தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

    இப்போது சாலையில் செல்லும் 10 கார்களில் 8 கார்கள் தமிழக வெற்றி கழகத்தின் கொடிகளைக் கட்டி செல்கின்றன. இன்று உச்சத்தில் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்யக்கூடிய ஒரு தலைவர் உண்டு என்றால் அது விஜய்தான். இனி வரும் காலங்களில் இது போன்ற மாநாடுகள் நிறைய நடத்தப்பட உள்ளது.

    அதற்கும். தொண்டர்கள் ஓத்துழைப்பு தர வேண்டும். வருகிற 16, 17,23,24-ந் தேதிகளில் நடக்கவுள்ள வாக்காளர் பெயர் சேர்க்கை, திருத்தம் முகாம்களில் தமிழக வெற்றி கழகத்தினர் கலந்து கொண்டு வாக்குச்சாவடி வாரியாக சென்று பொதுமக்களில் விடுபட்ட பெயர்களை சேர்க்கவும் திருத்தம் செய்வதற்கும் உதவ வேண்டும்.

    இது போன்ற விஷயங்களுக்கு மக்களுக்கு உதவுவதோடு மக்களோடு மக்களாக தமிழக வெற்றி கழக தொண்டர்கள் இருக்க வேண்டும். சட்டமன்ற தொகுதி வாரியாக ஒவ்வொறு தொகுதிக்கும் விஜய் வர உள்ளார். அப்போது நம் கட்சியினர் மக்களுக்கு செய்த உதவிகளை அவரிடம் தெரிவிக்கும் வகையில் உதவ வேண்டும்.

    இன்னும் 16- 17 மாதங்கள் கடுமையாக பொறுமையாக இருந்து பாடுபட வேண்டும். தமிழக வெற்றி கழகம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே விஜய் படத்தை வைத்து உள்ளாட்சிகளில் 127 இடங்களில் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள், துணைத் தலைவர் பதவிக்கு வெற்றி பெற்றுள்ளோம். தற்போது கட்சியாக ஆரம்பிக்கப்பட்டதால் இனி எல்லாமே வெற்றி தான்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • விஜயின் அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.
    • இரு கட்சிகளுக்கு இடையே 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி முதல் மாநாட்டை விக்கிரவாண்டியில் நடத்தி முடித்துள்ளார்.

    த.வெ.க. மாநாட்டில் கூடிய இளைஞர்கள் கூட்டம் தமிழகத்தின் அரசியல் கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது. மாநாட்டில் பேசிய விஜய் கூட்டணியை வரவேற்று அதிகாரத்தில் பங்கு தரப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தமிழக அரசியல் கட்சிகள் இடையே பெரும் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

    இதனிடையே சென்னையில் நடைபெறும் புத்தக வெளியீட்டு விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுன், தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜயும் ஒரே மேடையில் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் இரு கட்சிகளுக்கு இடையே 2026 சட்டமன்ற தேர்தலையொட்டி கூட்டணி உறுதி என்று பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

    இந்த நிலையில், 2026 சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் தான் நீடிப்போம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். மேலும் இந்த கூட்டணியை விட்டுவிட்டு வேறு கூட்டணிக்கு போக வேண்டிய எந்த தேவையும் வி.சி.க.வுக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். 

    • தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது.
    • தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட எடப்பாடி வீரப்பம்பாளையம் பகுதியில் எடப்பாடி நகர அ.தி.மு.க சார்பில் செயல் வீரர்கள், செயல் வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கி பேசியதாவது:-

    சேலம் மாவட்டத்தில் மொத்தம் 11 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மாவட்டத்தில் 8 தொகுதிகளில் அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 2 தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றார்கள். 11 சட்டமன்ற தொகுதியில் 10 இடங்களில் வென்றது அ.தி.மு.க கூட்டணி. சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் அ.தி.மு.க. அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    தி.மு.க.வில் உழைத்தவர்கள் யாருக்கும் மரியாதை கிடையாது. தி.மு.க.வில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது.

    தி.மு.க. கட்சியை வளர்த்தவர்கள், மிசா சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள், மூத்த அமைச்சர்கள் எல்லோரையும் ஒதுக்கிவிட்டு கருணாநிதி குடும்பத்தில் பிறந்த மு.க.ஸ்டாலின் மகனான உதயநிதியை இன்றைக்கு துணை முதலமைச்சராக்கி இருக்கின்றீர்கள் என்றால் அங்கு சர்வாதிகாரம் தலைதூக்கி இருக்கின்றது.

    மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக இருக்கின்றார். அடுத்தது உதயநிதி இளவரசராக இருக்கின்றார். அவர் முதலமைச்சர் என்கிற ஸ்டாலினுடைய கனவு ஒருபோதும் தமிழகத்தில் பலிக்காது.

    தி.மு.க.வில் கருணாநிதி தலைவராக இருக்கும்போது ஸ்டாலினை வளர்த்துவதற்கு கட்சியில் பல்வேறு முயற்சிகள் எடுத்தார். 20 ஆண்டு காலம் ஸ்டாலின் அந்த கட்சிக்காக உழைத்தார். இதை இல்லை என்று நாங்கள் மறுக்கவில்லை. அவர் எம்.எல்.ஏ.வாக இருந்தார். மேயராக இருந்தார். எதிர்கட்சி தலைவராக இருந்தார். அப்புறம்தான் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். இதற்கு 20 ஆண்டு காலம் தேவைப்பட்டது. ஆனால் கட்சிக்காக பாடுபடாமல் தி.மு.க. என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு, கருணாநிதி குடும்பம் என்கிற அடையாளம் வைத்துக் கொண்டு உதயநிதிக்கு துணை முதலமைச்சர் என பட்டாபிஷேகம் செய்திருக்கிறார்கள்.

    ஏற்கனவே இந்தியாவிலேயே மன்னராட்சி ஒழிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் மன்னராட்சி என்பது ஒருபோதும் எடுபடாது. அதற்கு மக்களும் அனுமதிக்க மாட்டாங்க.



    குடும்ப கட்சியாக மாறிவிட்டது தி.மு.க., வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தல் வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கின்ற தேர்தலாக அமையும் ஸ்டாலின் அவர்களே. நீங்கள் எவ்வளவோ முயற்சி பண்ணுகிறீங்க. தன்னுடைய மகனை பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள வைத்து மக்களிடத்திலே ஈர்ப்பு சக்தி உண்டாக்க வேண்டும் என்பதற்கு முயற்சி செய்கிறீங்க. எந்த ஒரு முயற்சியும் எடுபடாது.

    மக்களை ஒருபோதும் ஏமாற்ற முடியாது. தமிழ்நாட்டை பொறுத்தவரையும் விழிப்புணர்வு கொண்ட மக்கள். 2011-க்கு பிறகு 2021 வரை அதி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு எப்படி இருந்தது என சற்று நினைத்து பாருங்கள்.

    எடப்பாடி தொகுதி என்று சொன்னால் தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எடப்பாடியிலேயே இருக்கின்றார் என்கிற ஒரு அடையாளத்தை இன்றைக்கு தமிழக மக்கள் கொடுத்து இருக்கிறார்கள்.

    10 ஆண்டுகாலம் சிறப்பான ஆட்சியை கொடுத்த அரசாங்கம் அ.தி.மு.க. அரசாங்கம் என்பதை நாங்கள் நிரூபித்து காட்டினோம்.

    தி.மு.க. ஆட்சியில் எதிர்கட்சி சொல்வதை காது கொடுத்து கேட்பது கிடையாது. தி.முக. ஸ்டாலின் ஆட்சியில் தாலிக்கு தங்கம், திருமண உதவி தொகை நிறுத்தப்பட்டு விட்டது. அ.தி.மு.க.வை உடைக்க வேண்டும் என எவ்வளவோ சூழ்ச்சி செய்தாங்க. ஆனால் நடக்கவில்லை.

    இவ்வாறு அவர் பேசினார். 

    • 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.
    • எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    தமிழ்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றது. தனிப்பெரும்பான்மையுடன் தி.மு.க. ஆட்சி அமைத்தது. தி.மு.க. கூட்டணிக்கு 45.38 சதவீத வாக்குகள் கிடைத்தன.

    அதே நேரம் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., கூட்டணியுடன் 75 இடங்களை பெற்றது. வாக்கு சதவீதமும் 39.72 சதவீதமாக குறைந்து போனது.

    இதனால், வருகிற 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் வலுவான கூட்டணியுடன் களம் இறங்க அ.தி.மு.க. முடிவு செய்துள்ளது. ஆனால், ஓரளவு வாக்கு வங்கியை வைத்திருக்கும் கட்சிகள் எல்லாம் தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ளன.

    அ.தி.மு.க. எதிர்பார்க்கும் கூட்டணி அமைய வேண்டுமெனில், தி.மு.க. கூட்டணியில் மாற்றம் ஏற்பட வேண்டும். அது சாத்தியமாகுமா? என்ற நிலை உள்ளது.

    இந்த நிலையில், அரசியல் களத்துக்கு புதிதாய் வந்துள்ள நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் என்ற கட்சியை தொடங்கியுள்ளார். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை நோக்கி காய்களை நடத்திவரும் நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் முதல் மாநாட்டை விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வெற்றிகரமாக நடத்தினார். அந்த மாநாட்டில் திரண்ட தொண்டர்களின் கூட்டம் மற்ற கட்சிகளை சற்று ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    அதுவும் மாநாட்டில் பேசிய விஜய், ''2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெறுவது உறுதி. என்றாலும், கூட்டணிக்கு வரும் கட்சிகளுக்கு ஆட்சி, அதிகாரத்தில் பங்களிப்பு வழங்கப்படும்'' என்று வெளிப்படையாக அறிவித்தது, தி.மு.க. - அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளை திரும்பி பார்க்க வைத்துள்ளது.

    அதே நேரத்தில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வே விஜய் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் என்ன? என்று யோசித்து வருகிறது. வலுவான கூட்டணியுடன் களம் இறங்கும் தி.மு.க.வை வீழ்த்த இதுபோன்ற கட்சியுடன் கூட்டணி அமைப்பது அவசியம் என்று அ.தி.மு.க. கருதுகிறது.

    இந்த நிலையில், வரும் 6-ந்தேதி (புதன்கிழமை) சென்னையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில், சட்டசபை தேர்தலை வலுவாக எதிர்கொள்ளும் வகையில் கூட்டணி அமைப்பது குறித்து விவாதிக்கப்பட இருக்கிறது. அதற்காக சில திட்டங்களை வியூகங்களாக வகுத்து வருகிறது.

    இதற்கு மத்தியில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கட்சியின் மாநில நிர்வாகிகளுக்கும், செய்தி தொடர்பாளர்களுக்கும் வாய்மொழி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, பா.ஜ.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் கட்சி ஆகிய 4 கட்சிகளை விமர்சித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று கூறியுள்ளார்.

    'அரசியலில் யாரும் நிரந்தர நண்பனும் இல்லை. எதிரியும் இல்லை' என்ற வகையில், தேர்தல் நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்பதால், முன்கூட்டியே அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கு எடப்பாடி பழனிசாமி வாய்ப்பூட்டு போட்டுள்ளார்.

    எடப்பாடி பழனிசாமியின் இந்த உத்தரவு அ.தி.மு.க. வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்கும் எண்ணத்தில் எடப்பாடி பழனிசாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகவும் பரபரப்பாக கூறப்படுகிறது.

    • 4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று.
    • எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள்.

    நெல்லை:

    நெல்லையில் மத்திய இணை மந்திரி எல்.முருகன் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10 கோடி உறுப்பினர்களுடன் உலகத்திலேயே அதிகமான தொண்டர்களுடன் இருக்கும் ஒரே கட்சியாக பாரதிய ஜனதா கட்சி உள்ளது. கடந்த 2-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி உறுப்பினர் சேர்க்கை முகாமை தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் பா.ஜ.க உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்து வருகிறது.

    இந்தியா முழுவதும் இதுவரை 4.50 கோடி பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். நாடு முழுவதும் புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மூலம் 11 கோடி பேரை இணைக்க இலக்கு வைத்து உறுப்பினர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் மட்டும் 1 கோடி பேரை இணைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ல் மோடி ஆட்சிக்கு முன்னர் மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் சுட்டுக்கொலை செய்யும் நிகழ்வு நடந்து வந்தது. மோடி ஆட்சிக்கு பின்னர் அது போன்ற எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. எல்லை தாண்டி மீனவர்கள் செல்லாமல் இருக்கவும், ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்கவும் மீனவர்களுக்கு அதிநவீன படகுகள் வழங்கப்பட்டுள்ளது.

    மீனவர்களிடம் 10 சதவீதம் பணம் இருந்தாலே 60 சதவீதம் மானியமாகவும், 30 சதவீதம் வங்கி கடனும் ஏற்பாடு செய்யப்பட்டு ரூ.1.30 லட்சம் மதிப்பிலான படகுகள் வழங்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு மாற்று தொழிலாக கடல்பாசி உற்பத்தியை ஊக்குவிக்கவும் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

    மீனவர்கள் எல்லை தாண்டி சென்றால் அவர்களை எச்சரிக்கும் வகையில் அதிநவீன தொழில்நுட்பம் கொண்ட கருவிகள் 1 லட்சம் படகுகளுக்கு இதுவரை பொருத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த கருவிகள் மீனவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. எல்லை தாண்டி சென்றால் கைது செய்யப்படும் மீனவர்கள் மத்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு வருகிறார்கள். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மத்திய வெளியுறவு துறை அமைச்சகம் மூலம் மீட்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    சாதி, மதம் பற்றி தி.மு.க.வினர் பேசக்கூடாது. தமிழகத்தில் தலித்துகளுக்கு ஒரு சுடுகாடு, மற்றவர்களுக்கு ஒரு சுடுகாடு என இரட்டை சுடுகாடு நடைமுறை இன்றும் இருந்து வருகிறது. பட்டியலின மாணவர்கள் படிக்கும் கல்லூரி மற்றும் பள்ளி விடுதிகளில் தமிழக முதலமைச்சரும், கனிமொழி எம்.பி.யும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட பின்னர் சாதி, மதம் குறித்து பேச வேண்டும். சாதி, மதம் குறித்து தி.மு.க. பேசுவது நியாயமற்றது.

    கோவில்களில் அரசுக்கு என்ன வேலை. இந்து கோவில்களை விட்டு அரசு வெளியேற வேண்டும் என்பது தான் பா.ஜ.க.வின் நிலைப்பாடு.

    கோவில்களில் உள்ள பிரச்சனை குறித்து ஆய்வு மேற்கொள்ள தேசிய சனாதன தர்ம ரக்ஷண வாரியம் அமைக்கும் தருணம் இது தான் என நாங்களும் எண்ணுகிறோம்.

    4 மாநில தேர்தலை பொறுத்தவரை கருத்து கணிப்பு என்பது பொய்யான ஒன்று. மகாராஷ்டிரா உள்ளிட்ட 4 மாநில தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெறும். 4 மாநில சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது 2026 தமிழக சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி அமைக்கும். பா.ஜ.க.வின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை தமிழகத்தில் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. நடந்து முடிந்த தேர்தலில் 18 சதவீதம் வாக்குகள் பெற்றோம். வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த பேட்டியின் போது நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் தயா சங்கர் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • முதலமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர்.
    • சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் தே.மு.தி.க. முப்பெரும் விழா பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டார். முன்னதாக பழைய பேருந்து நிலையத்தில் கட்சியில் உறுப்பினர் சேர்க்கை முகாமை அவர் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

    தே.மு.தி.க. 20-வது ஆண்டு எட்டிபுள்ளதை முன்னிட்டு கட்சியில் முப்பெரும் விழா கொண்டாடப்படுகிறது. தேமுதிக கட்சி 20வது ஆண்டு விழா மற்றும் கேப்டன் விஜயகாந்திற்கு பத்மபூஷன் வழங்கியதற்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா நடைபெறுகிறது. தேமுதிக நான்கு சட்டமன்றத் தேர்தல், நான்கு பாராளுமன்றத் தேர்தல், மூன்று உள்ளாட்சித் தேர்தல் சந்தித்து வலுவான கட்சியாக உள்ளது. 2026 தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி தொடரும்.

    தொல். திருமாவளவன் நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டிற்கு அழைப்பு விடுத்தால் அது குறித்து ஆலோசனை செய்யப்படும். சிறுவர்களுக்கான வன்கொடுமை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அனைத்து சிறு கிராமங்களில் கூட கஞ்சா விற்பனை உள்ளது. இதை போல் பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும். மேற்கு வங்காளத்தில் இயற்றியது போல் கடுமையான சட்டம் இயற்ற வேண்டும். முதலமைச்சர் அமெரிக்கா சென்று 17 நாட்கள் தங்கி 7500 கோடி முதலீடு திரட்டியதாக சொல்கின்றனர். ஆனால் சந்திரபாபு நாயுடு ஏழு நாட்கள் மட்டும் அமெரிக்கா சென்று 33,000 கோடி தொழில் முதலீட்டை திரட்டினார். ஏற்கனவே போர்டு நிறுவனம் தமிழகத்தில் இருந்தது தான். அதை மீண்டும் கொண்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், நகரச் செயலாளர் பரமஜோதி உட்பட பலர் இருந்தனர்.

    • எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும்.
    • தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சென்னை:

    நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 40 தொகுதிகளிலும் தோல்வி அடைந்தது. இதையடுத்து தொகுதி வாரியாக நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து கருத்துக்களை கேட்டறிந்து வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி தொடங்கிய ஆலோசனை கூட்டம் 2 கட்டமாக நடந்து வருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் பாராளுமன்ற தொகுதி வாரியாக அழைக்கப்பட்டு பேசி வருகிறார். அப்போது நிர்வாகிகள் பல்வேறு கருத்துக்களை அங்கு பதிவு செய்து வருகின்றனர். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சியை வழி நடத்தி செல்ல வேண்டும். தொண்டர்களை ஒருங்கிணைக்க வேண்டும். தேர்தல் கூட்டணி பலமாக அமைக்க வேண்டும் என வலியுறுத்தினர். நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு வரும் எடப்பாடி பழனிசாமி 2026 சட்டசபை தேர்தலை சந்திப்பதற்கான கூட்டணி அடித்தளத்தை இப்போதே உருவாக்குவதாக தெரிவித்தார்.

    இந்த நிலையில் இன்று காலையில் கள்ளக்குறிச்சி தொகுதி நிர்வாகிகளுடனும், மாலையில் சேலம் தொகுதி நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்துகிறார். கலந்தாலோசனை கூட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் 2 நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது.


    நாளை (1-ந்தேதி) சென்னையில் உள்ள 3 பாராளுமன்ற தொகுதி நிர்வாகிகளை எடப்பாடி பழனிசாமி சந்திக்கிறார். காலையில் 9 மணிக்கு வடசென்னை தொகுதி, 11 மணிக்கு மத்திய சென்னை, மதியம் 3.30 மணிக்கு தென் சென்னை தொகுதி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். 3 தொகுதிகளுக்கும் உட்பட்ட மாவட்ட செயலாளர்கள், தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இன்றுடன் 35 தொகுதி நிர்வாகிகளை அவர் சந்தித்து பேசியுள்ளார். நாளைய தினத்தை தொடர்ந்து 3 நாட்கள் இடைவெளி விட்டு 5-ந்தேதி நடக்கும் கூட்டத்துடன் நிறைவு பெறுகிறது. கரூர் மற்றும் புதுச்சேரி தொகுதி நிர்வாகிகளை சந்தித்து பேச உள்ளார்.

    • பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள்.
    • கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தோல்வியடைந்தது ஏன்? என்பது பற்றி அந்த கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக ஆலோசனை நடத்தி வருகிறார்.

    கடந்த 10-ந்தேதி அன்று தொடங்கிய இந்த ஆலோசனைக் கூட்டம் இன்று 3-வது நாளாக நடைபெற்றது. காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை புறநகர் மாவட்ட நிர்வாகிகளுடன் முதல் நாள் அன்று ஆலோசனை நடத்தப்பட்டது.

    2-வது நாளான நேற்று சிவகங்கை, வேலூர், திருவண்ணாமலை நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

    3-வது நாளான இன்று காலையில் முதலில் அரக்கோணம் தொகுதியை சேர்ந்த நிர்வாகிகளுடனும், பின்னர் தஞ்சை தொகுதி நிர்வாகிகளுடனும் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

    அரக்கோணம் தொகுதி நிர்வாகிகளின் கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கியது. 2 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற இந்த கூட்டம் 11.45 மணியளவில் முடிவடைந்தது. இந்த கூட்டத்தில் அரக்கோணம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

    இந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கட்சியின் வளர்ச்சி பணி பற்றியும் பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தது குறித்தும் எடப்பாடி பழனிசாமி முன்னணியில் காரசாரமான கருத்துக்களை தெரிவித்தார்கள்.

    பாராளுமன்ற தேர்தலில் சரியாக கூட்டணி அமைக்காததே நாம் தோல்வி அடைவதற்கு காரணமாக அமைந்து விட்டது என்று பெரும்பாலான நிர்வாகிகள் குற்றம் சாட்டினார்கள். பிரதமர் வேட்பாளர் யார் என்று அறிவிக்காமல் பிரசாரம் செய்ததும் கட்சியினர் ஒருங்கிணைப்பு இல்லாததும் தேர்தல் தோல்விக்கு முக்கிய காரணம் என்று நிர்வாகிகள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

    இதற்கு பதிலளித்து எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்தற்கான காரணங்கள் என்ன என்பதை ஆராய்ந்து பார்த்து அதற்கேற்ற வகையில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் பணியாற்ற வேண்டும். கீழ் மட்டத்தில் உள்ள நிர்வாகிகளை அரவணைத்து செல்ல வேண்டும். அப்போது தான் அவர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவார்கள். 2026 -ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கும் இப்போதே அனைவரும் பணியாற்ற தொடங்கி விடுங்கள்.

    அ.தி.மு.க.வின் வாக்கு வங்கி குறையாமல் அப்படியே தான் உள்ளது. எனவே தோல்வியை கண்டு துவண்டு விடாமல் வெற்றி பெற வேண்டும் என்று பணியாற்றுங்கள். தி.மு.க. அரசு மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். பெண் வாக்காளர்களும் தி.மு.க.வுக்கு எதிரான மனநிலையில் உள்ளனர். அதனை பயன்படுத்தி வருகிற சட்டசபை தேர்தலில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டு வெற்றி பெற வேண்டும். கூட்டணி பற்றி இங்கு பலரும் குறிப்பிட்டு பேசினீர்கள். 2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வெற்றி வியூகத்தை நான் அமைத்து வைத்திருக்கிறேன்.

    எனவே நிச்சயம் அ.தி.மு.க. தலைமையில் வலுவான கூட்டணி அமையும். அதனால் கூட்டணி பற்றிய கவலையை விட்டு விட்டு ஒற்றுமையோடு பணியாற்றுங்கள். மாவட்ட நிர்வாகிகள் சிலர் கீழ் மட்டத்தில் உள்ள கட்சியினரை மதிப்பது இல்லை என்கிற குற்றச்சாட்டுகள் சில இடங்களில் உள்ளன. அவற்றையெல்லாம் சரி செய்து மாவட்ட செயலாளர் கூறும் தொகுதியில் உள்ள முன்னணி நிர்வாகிகளும் கட்சியினரை அரவணைத்து செல்ல வேண்டும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசியதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    ஆலோசனை கூட்டம் முடிந்த பிறகு அரக்கோணம் மாவட்ட செயலாளரான ரவி நிருபர்களிடம் கூறியதாவது:-

    23 ஆண்டுகளுக்கு பிறகு அ.தி.மு.க.வில் நடைபெறும் இந்த நேர்காணல் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆட்சி கட்டிலில் அமர வைக்கும் நேர்காணலாக அமைந்துள்ளது.

    1999-ம் ஆண்டு அப்போது கட்சியை வழி நடத்திய ஜெயலலிதா இதைபோன்று நேர்காணல் நடத்தினார். அதன் பின்னர் 2001-ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆனார்.

    அதேபோல வருகிற தேர்தலிலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆவது உறுதி. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 18 அமாவாசைகள் உள்ளன. இன்று நடந்த நேர்காணலின் போது எடப்பாடி பழனிசாமி சட்டமன்ற தேர்தலில் நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம் எனக்கூறி எங்கள் அனைவருக்கும் பூஸ்ட் கொடுத்துள்ளார். எனவே அ.தி.மு.க. வினர் உற்சாகமாக பணியாற்றி எடப்பாடி பழனிசாமியை ஆட்சியில் அமர வைப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.
    • தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.

    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூரில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * தமிழகத்தில் 8 முறை வந்து பிரதமர் மோடி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

    * பா.ஜ.க. மற்றும் தி.மு.க. கட்சிகள் கூட்டணி பலத்தோடு தேர்தலை எதிர்கொண்டன.

    * பா.ஜ.க. கூட்டணிக்காக மோடி, ராமதாஸ், அன்புமணி உள்ளிட்டோர் பிரசாரம் செய்தனர்.

    * 2014 பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி 18.80 சதவீத வாக்குகள் பெற்றது.

    * 2014-ல் பெற்ற வாக்குகளை விட 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி குறைவாக வாக்குகள் பெற்றது.

    * தேர்தலில் வெற்றி, தோல்விகள் மாறி மாறி தான் வரும், அரசியல் பின்னடைவு இல்லை.

    * பாராளுமன்ற தேர்தல் வேறு, சட்டமன்ற தேர்தல் வேறு.

    * 2026 சட்டமன்ற தேர்தலிலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை.

    * 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும்.

    * 2026-ல் தனிப்பெரும்பான்மையுடன் அதி.மு.க. ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறினார்.

    • ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
    • தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தமிழ்நாடு-புதுச்சேரியில் முடிந்துள்ள நிலையில் 40 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும் என்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நம்பிக்கையில் உள்ளார்.

    ஒரு சில தொகுதிகளில் பின்னடைவு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட பொறுப்பு அமைச்சர் அல்லது மாவட்டச் செயலாளர் ஆகியோரின் பதவியை பறிக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தயங்க மாட்டார் என்று கட்சி நிர்வாகிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இது ஒருபுறம் இருக்க, பாராளுமன்ற தேர்தல் முடிவுக்கு பிறகு 1½ ஆண்டுகளில் 2026-ம் ஆண்டு சட்டசபை பொதுத்தேர்தல் வர இருப்பதால் அதற்கும் இப்போதே தி.மு.க. தன்னை தயார்படுத்த தொடங்கி விட்டது.

    அ.தி.மு.க.வில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்டச் செயலாளர் இருப்பது போன்று தி.மு.க.விலும் கொண்டு வரவேண்டும் என்று தலைமைக்கு ஏற்கனவே கோரிக்கைகள் வைக்கப்பட்டிருந்தது.

    காரணம் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் 5 சட்டசபை தொகுதிகளை ஒரு மாவட்டச் செயலாளர் கவனித்து வருகிறார்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் நேரடி பார்வையில் இருப்பதால் அவர் முடிவு செய்வதை பொறுத்துதான் மாவட்டம் பிரிப்பது அமையும் என்று கூறி வருகின்றனர்.

    ஆனாலும் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சனைக்குரிய மாவட்டங்களில் உள்ள நிலவரங்களை ஏற்கனவே தெரிந்து வைத்துள்ள காரணத்தால் லண்டனில் இருந்து திரும்பியதும் தி.மு.க.வில் பல்வேறு மாற்றங்களை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பரிந்துரை செய்வார் என கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.


    2026 சட்டசபை தேர்தலில் முழுமையாக வெற்றி பெறுவதற்கு மாவட்டச் செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள், மற்றும் ஒன்றிய நகர, பேரூர் செயலாளர்களின் ஒருங்கிணைப்பு மிக அவசியம் என்பதை உதயநிதி ஸ்டாலின் அவ்வப்போது இளைஞரணி நிர்வாகிகள் மத்தியில் ஏற்கனவே வலியுறுத்தி வந்துள்ளார்.

    அப்படி இருந்தும் சில மாவட்டங்களில் கோஷ்டி பிரச்சனை காரணமாக ஒருங்கிணைந்து செயல்படாமல் சில நிர்வாகிகள் மனக்கசப்புடன் இருப்பதாக தலைமைக்கு புகார்கள் சென்றுள்ளன.

    தென்காசி மாவட்டம், நெல்லை மாவட்டம், காஞ்சிபுரம் மாவட்டம், திருச்சி மாவட்டம் உள்பட சில மாவட்டங்களில் இந்த பிரச்சனை தலைதூக்கி உள்ளது. இதனால் எந்தெந்த மாவட்டங்களில் பிரச்சனை அதிகம் உள்ளதோ அங்கு கட்சி நிர்வாகிகளிடையே சமரசம் ஏற்படுத்தும் முயற்சியும் செய்து வைக்கப்பட்டது.

    இந்த நிலையில்தான் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இந்த தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு ஓட்டுகள் கிடைத்து விட்டால் இப்போது உள்ள நிலையே தொடரும்.

    ஓட்டுகள் குறைந்தால் அதிரடி மாற்றங்கள் செய்ய தி.மு.க. மேலிடம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

    அதில் ஒரு மாற்றம் தான் புதிய மாவட்டச் செயலாளர்கள் நியமனம். 234 தொகுதிகளுக்கும் பாகுபாடின்றி 2 தொகுதிக்கு ஒரு மாவட்டச் செயலாளர் என்ற நடைமுறையை தலைமை கொண்டு வந்து விடும் என்று பேசிக்கொள்கின்றனர்.

    தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்டங்கள் உள்ளன. தி.மு.க.வில் மாவட்டச் செயலாளர்கள் மட்டுமின்றி மாநகர செயலாளர்களும் உள்ளனர். இதில் ஒருங்கிணைப்பு இல்லாத மாவட்டங்களில் 2 சட்டசபை தொகுதிக்கு ஏற்ப மாவட்டங்களை பிரிக்க தி.மு.க. மேலிடம் முடிவு எடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதற்காகவே அறிவாலயம் பக்கம் கட்சி நிர்வாகிகள் பலர் வந்து சென்ற வண்ணம் உள்ளனர்.

    இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இந்த விசயத்தில் தலையிடும் போது இளைஞரணியில் உள்ள பலருக்கு முக்கிய பதவிகள் கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகின்றனர்.

    ×