என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாஜக கூட்டணி"

    • அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக வாங்கிய புகாரில் சிக்கினார்.
    • பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், சிவசேனாவை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்த அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதல்வராக உள்ளனர்.

    அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக தனது நிறுவனத்துக்காக வாங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் சிக்கினார்.

    இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் 2 அன்று நடைபெற உள்ளன. இந்நிலையில் நிலையில் அஜித் பவார் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலேகான் நகரில் உள்ள பாராமதி தாலுகாவில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் தனது கட்சி வெப்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த பகுதிக்கான வளர்ச்சி நிதியை வழங்குவேன் என மிரட்டியுள்ளார்.

    அமைச்சரவையில் நிதித் துறையை அஜித் பவார் தன் வசம் வைத்துள்ளார். இதன் பின்னணியில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "நண்பர்களே, மத்திய அரசும் மாநில அரசும் பல திட்டங்களைக் உருவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால், மாலேகானுக்கு நல்ல வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

    நீங்கள் எங்களின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எனது வேட்பாளர்களை கிராஸ் மார்க் செய்தால், நானும் உங்களை கிராஸ் மார்க் செய்வேன். வாக்கு உங்கள் கையில் உள்ளது, நிதி என் கையில் உள்ளது." என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

    இதை விமர்சித்த உத்தவ் சிவசேனா தலைவர் அம்பாதாஸ் தான்வே, "நிதி என்பது பொதுமக்கள் செலுத்தும் வரிகளிலிருந்து வழங்கப்படுகிறது, அது அஜித் பவாரின் வீட்டில் இருந்து அல்ல. பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். 

    முன்னதாக கடந்த ஜனவரியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், வாக்களித்து விட்டதால் நீங்கள் ஒன்றும் எனக்கு முதலாளிகள் இல்லை, நான் என்ன கூலியா? என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
    • வரும் தேர்தலில் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள்.

    முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் சென்னையில் விநாயகர் சதுர்த்தி விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    விநாயகர் சதுர்த்தி விழா இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. எல்லா மாநில முதல்வர்களும் தங்கள் மாநில மக்களுக்கு விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்கள்.

    ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் முதலமைச்சர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர் எந்த அளவுக்கு வாக்கு வங்கி அரசியல் எண்ணத்தோடு செயல்படுகிறார் என்பது தெரியும்.

    தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வருகிற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் தான் போட்டி. தமிழகத்தில் அ.தி.மு.க.வு டன் ஒரு வலிமையான கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.

    பா.ஜனதா பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் மாநாடுகளை நடத்தி அடிமட்டத்தில் பா.ஜ.க.வின் வலிமையினை வெளிப்படுத்தி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நடைபெற்று வரும் அவலநிலையை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதோ கருத்து திணிப்புகளை புகுத்தி தி.மு.க. தான் முன்னிலையில் இருப்பது போல் கூறி வருகிறார்கள்.

    ஆனால் கள நிலவரம் தி.மு.க.வுக்கு எதிராகவே உள்ளது. அதை மறைக்கவே நாடகம் போடுகிறார்கள். தி.மு.க.வின் செல்வாக்கு மிகப்பெரிய அளவு சரிந்து இருக்கிறது. இன்னும் 8 மாதத்தில் மேலும் குறையும். இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி உறுதியானது.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் சித்தாந்தமும் சூழ்நிலைக்கு ஏற்ப மாறி வருகிறது. தூய்மை பணியாளர்கள் விஷயத்தில் அதை மக்கள் நேரிலேயே பார்த்தார்கள்.

    இந்த அவல ஆட்சி மாற வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அந்த மாற்றத்தை தேர்தல் மூலம் மக்கள் கொண்டு வருவார்கள். மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்து வரும் திமுக கூட்டணிக்கு ஏமாற்றமே மிஞ்சும்.

    நடிகர் விஜய் அடுத்த முதலமைச்சர் நான் தான் என்பது போல் பேசி வருகிறார். ஆனால் மூன்றாவது இடத்துக்குத்தான் சீமானும் விஜய்யும் போட்டியிடுகிறார்கள். விஜய் அரசியலுக்கு வந்தபோது மாற்றத்தை தருவார் என்று மக்கள் நம்பினார்கள். ஆரம்பத்தில் காமராஜர், அஞ்சலை அம்மாள் போன்றோரின் படத்தை போட்டு மக்கள் மத்தியில் வலம் வந்தார்.

    ஆனால் இப்போது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் படத்தை போட்டு மக்களிடம் ஆதரவு கேட்டு வருகிறார். ஆக இவருக்கு நிலையான கொள்கை எதுவும் இல்லை. எம்.ஜி.ஆர். அரசியல் பின்புலம் மட்டுமின்றி பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் மக்களை கவர்ந்து ஆட்சிக்கு வந்தவர். விஜயகாந்தும் அரசியல் அனுபவத்தோடு தான் அரசியலுக்கு வந்தார். ஆனால் விஜய் ஒவ்வொரு மாநாட்டை நடத்தும் போதும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்.

    அவர் அரசியலில் வெற்றிக்கு பக்கம் கூட நெருங்கவில்லை. தொண்டர்கள் கூட நெருங்க முடியாத தலைவராக தான் விஜய் இருக்கிறார். எந்த கட்சியிலும் கேள்விப்படாத பவுன்சர் கலாச்சாரம் அந்த கட்சியில் தான் இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.
    • மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி என்று வைகோ கூறினார்.

    பாராளுமன்ற மேல்சபையில் எம்.பி.க்களாக இருக்கும் எம்.பி.க்களில் தி.மு.க.வை சேர்ந்த வில்சன், சண்முகம், அப்துல்லா, ம.தி.மு.க.வின் வைகோ, அ.தி.மு. க.வை சேர்ந்த சந்திரசேகரன், பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ஆகிய 6 பேரின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

    மாநிலங்களவை உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோவுக்கு மீண்டும் போட்டியிட திமுக வாய்ப்பு வழங்கவில்லை.

    இதனால் 30 ஆண்டுகளாக நாடாளுமன்ற மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றிய வைகோ இன்றுடன் ஓய்வு பெறுகிறார்.

    பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் வைகோ உரையாற்றினார்.

    அப்போது நாடாளுமன்றத்தில் தன்னுடன் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி வைகோ தெரிவித்தார். குறிப்பாக என்னை மாநிலங்களவைக்கு அனுப்பிய கலைஞருக்கும், வார்த்தெடுத்த முரசொலி மாறனுக்கும் நன்றி என்று வைகோ கூறினார்.

    இந்நிலையில், வைகோ எங்களோடு (பாஜக கூட்டணி) வந்தால் மீண்டும் எம்.பி ஆகலாம் என்று இன்றுடன் வைகோவின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே பேசியுள்ளார்.

    • ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.
    • அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியிருப்பதாவது:-

    அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியபோது என்னை வாழ்த்தியவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.

    ஜெயலலிதாவின் தம்பியாக நான் அரசியல் செய்தவன் என்பது அதிமுகவினருக்கு தெரியும். எடப்பாடி பழனிசாமிக்கு எப்படி தெரியாமல் போனது என்று தெரியவில்லை.

    ஜெயலலிதா தம்பி என்று அழைக்கும் அளவிற்கு அரசியல் செய்தவன் நான்.

    திராவிட இயக்கமாக நாம் இன்னும் நம்பிக் கொண்டிருக்கிற அதிமுக பா.ஜ.க.வால் பாதிக்கப்பட்டு விட கூடாது. பாஜக காலூன்றிய இடங்களில் எல்லாம் என்ன நடந்தது என்பதை பார்த்திருக்கிறோம்.

    அதிமுக தனது செல்வாக்கை இழந்து விட கூடாது என்பதை தோழமையுடன் சுட்டி காட்டுகிறேன்.

    பாஜகவால் அதிமுகவிற்கு ஏற்படும் பாதிப்பை அறியாமல் இருக்கிறார் இபிஎஸ்.

    அதிமுக தோழமை கட்சி என கருதுவதால்தான் கூட்டணி குறித்து விமர்சிக்கிறோம்.

    அதிமுக எடுத்த கூட்டணி முடிவில் அவர்களுக்கே சந்தேகம் உள்ளது.

    திமுகவுக்கு எதிராக அணி திரள்பவர்கள் கூட்டணி ஆட்சி முழுக்கத்தை வைத்துள்ளனர்.

    சாதி ஒழிய வேண்டும் என்பது நோக்கம், தற்போதைக்கு அது முழுமையாக சாத்தியமில்லை.

    இந்து சமய அறவிலையத்துறை கல்லூரிகள் கட்டுவது நல்ல பணிதான்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் எஸ்.பி. வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.
    • மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.

    மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த வீடியோ ஒளிபரப்பான விவகாரம் குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசினார்.

    கோவையில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிகழ்ச்சியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி பங்கேற்றதாக சர்ச்சை எழுந்தது.

    இந்நிலையில், எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா வீடியோ குறித்து முன்கூட்டியே எதுவும் சொல்லப்படவில்லை.

    மாநாட்டிற்கு சென்ற முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் இதுபற்றி தெரியாது.

    அண்ணா பற்றி பேசியதால் 2024ல் இபிஎஸ் என்ன முடிவெடுத்தார் என அனைவருக்கும் தெரியும். எங்களைப் பொறுத்தவரை கொள்கை வேறு, கூட்டணி வேறு.

    கொள்கையை ஒருபோதும் இபிஎஸ் விட்டுக் கொடுக்க மாட்டார்" என்றார்.

    • இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணி விரிவடையும்.
    • வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி.

    2026 சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகளை இப்போதே அனைத்து கட்சிகளும் ஆரம்பித்துவிட்டன. 2019 ஆம் ஆண்டு உருவான திமுக கூட்டணி 2026 தேர்தலிலும் தொடரவுள்ளது. அதிமுக பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கவுள்ளது.

    இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சண்முகம், "2026 சட்டமன்ற தேர்தலில் கூடுதல் தொகுதிகளை திமுக ஒதுக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். இது திமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், திமுக கூட்டணி விரைவில் உடையும் என்று மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய எல்.முருகன், "திமுக கூட்டணியில் இருந்து ஒரு கட்சி பாஜக கூட்டணிக்கு வர தயாராக உள்ளது. இதற்காக அந்த கட்சியுடன் பாஜக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இன்னும் 3 மாதங்களுக்குள் பாஜக கூட்டணி விரிவடையும். இந்தக் கட்சி முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்த கட்சி தான்.

    விரைவில் திமுக கூட்டணி உடையும். இதனால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி தோல்வி அடைவது உறுதி. புதிதாக வரவிருக்கும் கட்சிகள் யார் என்று பொறுத்திருந்து பாருங்கள். எல்லாவற்றையும் இப்போதே சொல்லிவிட்டால் அரசியலில் எதிர்பார்ப்பு இருக்காது" என்று தெரிவித்தார்.

    • எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது, எல்லாவற்றுக்கும் தீர்வு ஏற்படும்.
    • கடந்த 2 நாட்களாக ஊடகவியலாளர்கள் கொடுத்த அன்புத் தொல்லைக்கு நன்றி.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மகள் வீட்டில் இருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    எல்லாம் நன்றாக போய் கொண்டிருக்கிறது, எல்லாவற்றுக்கும் தீர்வு ஏற்படும்.

    தீர்வு ஏற்படும்போது உங்களுக்கு நன்றி. ஏற்படும் தீர்வு நாட்டிற்கும், கட்சிக்கும் நல்லதாகவே இருக்கும்.

    கடந்த 2 நாட்களாக ஊடகவியலாளர்கள் கொடுத்த அன்புத் தொல்லைக்கு நன்றி.

    பாஜகவுடன் கூட்டணி என்பது தொடர்பாக இப்போது சொல்ல முடியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.
    • வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று.

    மதுரையில் நடைபெறும் பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உரையாற்றி வருகிறார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மண்ணில் மீனாட்சி அம்மனை வணங்கி எனது உரையை தொடங்குகிறேன்.

    ஜூன் 22ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டை சிறப்பாக நடத்தி தர வேண்டும்.

    தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழ் மொழியில் பேச முடியவில்லையே என்பதில் வருத்தம்.

    அமித் ஷாவால் எங்களை தோற்கடிக்க முடியாது என முதலமைச்சர் சொல்கிறார். ஆனால், தமிழக மக்கள் அவர்களை தோற்கடிப்பர்.

    2026ம் ஆண்டு தமிழகத்தில் அதிமுக- பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். வரும் தேர்தலில் திமுக தலைமையிலான ஆட்சியை மக்கள் தூக்கி எறிவார்கள்.

    ஆபரேஷன் சிந்தூருக்கு தமிழகத்திலிருந்து வந்த ஆதரவு குரல் என்றும் மறக்க முடியாதது.

    பஹல்காமில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளை அவர்கள் நாட்டிற்குள்ளேயே புகுந்து அழித்தோம். பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ சென்று பயங்கரவாதிகளை தாக்கி அழித்தது நமது ராணுவம். பிரதமர் மோடியின் ஆட்சியில் ராணுவத்தில் தன்னிறைவான நிலை ஏற்பட்டு உள்ளது.

    வரும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிக முக்கியமான ஒன்று. மகாராஷ்டிரா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக அமோக வெற்றி பெற்றது.

    டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழத்தியது போல் திமுக ஆட்சியையும் வீழ்த்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.
    • மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்றது.

    கடந்த ஆண்டு நடந்த மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில், ஆளும் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகளில் பெரும் மோசடி நடந்திருப்பதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.

    முன்னதாக நடந்த மக்களவை தேர்தலில் பாஜக கூட்டணியை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் கூட்டணி அதிக வெற்றியை பெற்றது. ஆனால் சில மாதங்களுக்கு பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் நிலைமை தலைகீழாக மாறியது. இதன் பின்னணியில் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டு முக்கியத்துவம் பெற்றது. 

    இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில் நீண்ட கட்டுரை எழுதியுள்ள ராகுல் காந்தி, "மேட்ச் பிக்சிங் மகாராஷ்டிரா" என்ற தலைப்பில் அடுக்கடுக்கான ஆதாரங்களை முன்வைத்துள்ளார்.

     ராகுல் காந்தி கட்டுரையின் சுருக்கம்:

    தேர்தல் ஆணையர்கள் நியமனத்தில் குளறுபடி: தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் குழுவில் எதிர்க்கட்சித் தலைவரின் பரிந்துரையை நிராகரித்து, பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தங்கள் விருப்பப்படி ஆட்களை நியமித்தனர். இது நீதித்துறைத் தலைவரை நீக்கி முறைகேடு செய்ய வழிவகுத்தது.

    போலி வாக்காளர்கள் அதிகரிப்பு: 2019-ல் 8.98 கோடியாக இருந்த வாக்காளர்கள், 2024 மக்களவைத் தேர்தலில் 9.29 கோடியாக உயர்ந்தனர். ஆனால்,  வெறும் 5 மாதங்களுக்குப் பின் நடந்த சட்டமன்றத் தேர்தலில் இது 9.70 கோடியாக அதிரடியாக அதிகரித்தது.

    மகாராஷ்டிராவின் மொத்த வயதுவந்தோர் மக்கள் தொகையே 9.54 கோடிதான் இருக்கும் நிலையில், இந்த 41 லட்சம் வாக்காளர் அதிகரிப்பு பெரும் சந்தேகத்தை எழுப்புகிறது.

    வாக்குப் பதிவில் வினோத மாற்றம்: மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு முடிந்த பின்னரும், 7.83% (சுமார் 76 லட்சம்) வாக்காளர்கள் வாக்களித்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.

    இது முந்தைய தேர்தல்களை விட மிக மிக அதிகம். குறிப்பாக, 85 தொகுதிகளில் உள்ள 12,000 வாக்குச்சாவடிகளில் மட்டும், மாலை 5 மணிக்குப் பிறகு சராசரியாக 600க்கும் மேற்பட்டோர் வாக்களித்துள்ளனர். ஒரு வாக்குக்கு ஒரு நிமிடம் என்றாலும், 10 மணி நேரம் வாக்குப்பதிவு நடந்திருக்க வேண்டும்!

    பாஜக வெற்றிஅதிகரிப்பு: மக்களவைத் தேர்தலில் 32% வெற்றி பெற்ற பாஜக, இந்த 85 தொகுதிகளின் அசாதாரண வாக்குப்பதிவால் சட்டமன்றத் தேர்தலில் 89% வெற்றி பெற்று 149 இடங்களில் 132 இடங்களை வென்றது.

    ஆதாரங்களை அழிக்கும் முயற்சி: முறைகேடுகள் குறித்து எதிர்க்கட்சிகள் புகார் அளித்த போதும், தேர்தல் ஆணையம் அமைதி காக்கிறது.

    மேலும், வாக்காளர் பட்டியல்கள் மற்றும் சிசிடிவி காட்சிகளை பொதுவெளியில் வெளியிடும் கோரிக்கையை நிராகரித்து, விதிகளைத் திருத்தி அணுகலைக் கட்டுப்படுத்தி, ஆதாரங்களை அழிப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம் சாட்டுகிறார்.

    ராகுல் காந்தி தனது கட்டுரையில், "இது கிரிக்கெட்டில் நடக்கும் மேட்ச் பிக்சிங் போன்றது. இப்படிப்பட்ட முறைகேடுகள் ஜனநாயக நிறுவனங்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தும்" என்று கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகள் மகாராஷ்டிர அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளன.  

    • அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.
    • பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 தேர்தலோடு முடியப் போவது உறுதி.

    பாஜக கூட்டணியில் இருந்து பழனிசாமி என்ன சாதித்தார் என பட்டியல் போடுவாரா? என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    "திமுகதான் காங்கிரஸ் மிரட்டலுக்குப் பணிந்தது. அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது'' எனப் பேசியிருக்கிறார் எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி.

    2004 முதல் 2014 வரை காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த போது தமிழ்நாட்டிற்கு திமுக கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம். பாஜக-வுக்கு சேவை செய்யவே நேரம் இல்லாத பழனிசாமிக்கு, திமுக கொண்டு வந்த திட்டங்கள் எல்லாம் எப்படி நினைவுக்கு வரும்?

    தமிழ் செம்மொழி பிரகடனம், மிகப் பெரிய போக்குவரத்து மேம்பாலங்கள், சேலத்தில் புதிய இரயில்வே மண்டலம், தாம்பரத்தில் தேசியச் சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலம் அரசினர் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கல்லூரியாக மேம்பாடு, திருவாரூரில் மத்தியப் பல்கலைக் கழகம், கடல்சார் தேசியப் பல்கலைக் கழகம், இந்தியாவிலேயே முதல் முறையாக வளர்ந்த நாடுகளுக்கு இணையான 3 ஜி தகவல் தொழில் நுட்பத் திட்டம், 50 காசு செலவில் இந்தியா முழுவதும் தொலைப்பேசியில் பேசும் வசதி, நெசவாளர் சமுதாயத்தினர் நலனுக்காக சென்வாட் வரி நீக்கம், பொடா சட்டம் ரத்து, எனப் பத்தாண்டுக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல, இந்தியா முழுமைக்கும் பல திட்டங்களை திமுக கொண்டு வந்தது.

    2,427 கோடி ரூபாய்ச் செலவில் சேது சமுத்திரத் திட்டம் கொண்டு வரப்பட்டுப் பாதிப் பணிகள் முடிந்த நிலையில் மோடி அரசு கிடப்பில் போட்டது. 1,650 கோடி ரூபாய்ச் செலவில் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையே பறக்கும் சாலைத் திட்டம் தொடங்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் முடக்கப்பட்ட அந்தத் திட்டத்தை மு.க.ஸ்டாலின் அரசு அமைந்த பிறகு புதுவடிவத்தை உருவாக்கி நிறைவேற்ற முயற்சிகள் எடுத்து பணிகள் நடந்து வருகின்றன.

    மன்மோகன் சிங் ஆட்சிக்கு முன்பு வி.பி.சிங் ஆட்சியில் திமுக அங்கம் வகித்த போது கலைஞர் வலியுறுத்தியதால் மண்டல் பரிந்துரை ஏற்கப்பட்டு, மத்திய அரசின் வேலை வாய்ப்புகளில் 27 சதவீத இட ஒதுக்கீடு கிடைத்தது. காவிரி நதி நீர்ப் பிரச்சினைக்கு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் பன்னாட்டு முனையத்திற்கு அண்ணா பெயரும் உள்நாட்டு முனையத்திற்குக் காமராஜர் பெயரும் சூட்டப்பட்டது.

    பழனிசாமி பாஜகவுடன் கூட்டணியில் இருந்து என்ன செய்தார்? எத்தனை திட்டங்களைக் கொண்டு வந்தார்? எனப் பட்டியல் போட முடியுமா? மாறாகத் தமிழ்நாட்டுக்கு துரோகங்களைத்தான் பழனிசாமி செய்தார்.

    ராஜ்பவனில் அடிமைப்பட்டுக் கிடந்தது பழனிசாமி அரசு. ஆளுநர்கள் வித்யாசாகர் ராவ், பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்குச் சேவகம் செய்து, மாநில உரிமையைப் பறிகொடுத்தார். தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், உதய் மின் திட்டம், நீட் ஆகியவற்றை ஜெயலலிதா தீரத்தோடு எதிர்த்தார். அதனையெல்லாம் பழனிசாமியோ பயத்தோடு ஆதரித்தார். பிரதமர் மோடி ஜெயலலிதாவின் போயஸ் கார்டனுகே வந்தார். பழனிசாமி அமித்ஷா வீட்டிலேயே தவம் கிடந்தார்.

    ஒன்றிய அரசின் சென்னை-சேலம் இடையே எட்டு வழிச் சாலைக்காக, வனங்களையும், வயல்களையும் பலி கொடுக்கத் தயாரானார். காஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்த போதெல்லாம் ஜெயலலிதாவிடம் இருந்து கடுமையாக அறிக்கை வரும். போராட்டம் நடத்துவார். ஆனால், பாஜகவின் பாதம் தாங்கியான பழனிசாமியிடம் இருந்து ஓர் அறிக்கையாவது வந்ததா? அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்த சூரப்பாவை ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நியமித்தார்.

    தமிழர்களுக்குத் துணைவேந்தர் ஆகும் தகுதி கிடையாது என்று அவமானப்படுத்தப்படுத்தி, தமிழர்களின் தன்மானம் சீண்டப்பட்ட போது பழனிசாமி எதிர்த்து குரல் கொடுத்தாரா? துணை வேந்தர் நியமனம் தொடர்பாகச் சட்டப் போராட்டம் நடத்தி, இந்தியா முழுமைக்கும் அதிகாரம் பெற்றுத் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போல சூரப்பா விவகாரத்தில் சூரத்தனம் காட்டினாரா பழனிசாமி?

    ஆய்வு என்ற பெயரில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனி ராஜ்ஜியம் நடத்திய போது அன்றை எதிர்க் கட்சியான திமுக போராட்டங்களை நடத்தியது. ஆனால், முதலமைச்சர் பழனிசாமி எதிர்ப்பு காட்டாமல் பல்லிளித்துக் கொண்டிருந்தார். இப்படி எத்தனை எத்தனை துரோகங்கள். தலைவிக்குத் துரோகம் செய்துவிட்டு டெல்லி தலைமைக்குக் கட்டுப்படும் கோழை பழனிசாமி, மிரட்டல் பற்றியெல்லாம் பேச அருகதை இல்லை!

    நீட் தேர்வை அனுமதித்து அப்பாவி ஏழை நடுத்தரக் குடும்பத்துப் பிள்ளைகளின் மருத்துவக் கனவை நாசமாக்கியது, தமிழ்நாட்டிற்குப் பாரபட்சமான நிதிப் பகிர்வு அளிக்கும் GST யை எந்தக் கேள்வியும் கேட்காமல் அப்படியே ஏற்றுக் கொண்டது, குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்து முஸ்லிம்களின் முதுகில் குத்தியது, உழவர்களைப் பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்து விவசாயிகளுக்குத் துரோகம் செய்தது, மாநில உரிமைகளைப் பறித்து ஒற்றை ஆட்சியைக் கொண்டு வரத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு, கனிம வளச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்து மதுரை அரிட்டாபட்டியில் சுரங்க ஏலம் விடக் காரணமாக இருந்தது என மோடி அரசுக்குத் துணையாக நின்ற விஷயங்கள் எல்லாம் அதிமுக வரலாற்றின் கருப்பு பக்கங்கள்.

    2019 – 2024 மோடி ஆட்சியில் திமுக கூட்டணி எம்.பி-கள் 9,695 கேள்விகளை ஐந்தாண்டில் மக்களவையில் எழுப்பினார்கள். 1,949 விவாதங்களில் பங்கெடுத்தார்கள். 59 தனிநபர் மசோதாக்களைக் கொண்டு வந்தார்கள். மாநில வாரியாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் செயல்பாட்டில் தமிழ்நாட்டு எம்.பி-கள் 5-ஆவது இடத்தில் இருந்தனர். கட்சிகள் வாரியாக கேள்விகள் எழுப்பியதில் திமுக 5வது இடத்தில் இடம் பெற்றது. நாடாளுமன்றத்தில் அதிமுக சாதித்தது என்ன? என பழனிசாமி புள்ளிவிவரம் சொல்லுவாரா?

    நீட் தேர்வைத் திரும்பப் பெறத் தொடர் போராட்டம், மதுரை எய்ம்ஸ் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல், காவிரி, மேக தாட்டு பிரச்சினைகளில் தமிழ்நாட்டு உரிமையை விட்டுக் கொடுக்காமல் போராடியது, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகக் குரல், ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்துக்கு எதிர்ப்பு, மூன்று வேளாண்மை சட்டங்களை எதிர்த்தது, புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு எனத் தமிழ்நாட்டு உரிமைக்காக திமுக தொடர்ந்து போராடி வருகிறது.

    இப்படி எதற்கும் குரல் கொடுக்காத பழனிசாமி, தமிழகத்தின் உரிமைகளுக்கும், தமிழக மக்களின் நலனுக்கும் அயராது போராடி வரும் திமுகவை பற்றிப் பேச என்ன திராணி இருக்கிறது? தனது குடும்பத்தைக் காப்பாற்ற மோடி அரசின் அதிகார அமைப்புகளுக்குப் பயந்து, பாஜகவுடன் சேர்ந்த அமலாக்க துறை கூட்டணிதான் அதிமுக கூட்டணி.

    ''அதிமுக – பாஜக கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது' என்கிறார் பழனிசாமி. கூட்டணி அறிவிப்பை அமித்ஷா வெளியிட்ட போது பக்கத்தில் பொம்மையாக அமர்ந்திருந்த பழனிசாமி மகிழ்ச்சி பற்றியெல்லாம் பேசுவது வேடிக்கை.

    கூட்டணி மகிழ்ச்சி என்றால் பட்டாசு வெடித்துக் கொண்டாட வேண்டியதுதானே! ஏன் செய்யவில்லை? 'பாஜகவுடன் இனி கூட்டணி இல்லை' எனப் பேசிய பச்சைப்பொய் பழனிசாமி எந்த வெட்கமும் இல்லாமல் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டு பேசும் வீர வசனங்களைக் கோமாளியின் உளரல்களாகத்தான் தமிழ்நாட்டு மக்கள் பார்க்கிறார்கள்.

    ஒன்றிய பாஜகவின் காலடியில் தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்து தமிழ்நாட்டைச் சீர்கெடுத்த ஆட்சிதான் அதிமுக பாஜக ஆட்சிகள். இந்தத் துரோகக் கூட்டணிக்குக் கடந்த தேர்தல்களிலேயே தமிழ்நாட்டு மக்கள் தோற்கடித்துத் தக்கப் பதிலடி கொடுத்தனர்.

    வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்த அடிமை அமலாக்க துறை கூட்டணியை மக்கள் ஓட ஓட விரட்டி அடிப்பார்கள். சுயநலப் பச்சோந்திகளுக்குத் தமிழ்நாட்டில் என்றுமே இடமில்லை. பாஜகவின் காலடியில் வீழ்ந்து அடிமை சேவகம் செய்யும் பழனிசாமியின் அரசியல் அத்தியாயம் 2026 சட்டப்பேரவைத் தேர்தலோடு முடியப் போவது உறுதி!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • 'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று இருக்கிறார் இ.பி.எஸ்.
    • நீட் விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று முதுகெலும்போடு அறிவிப்பாரா?

    நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து கேள்வி எழுப்பியுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    நீலகிரி மாவட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்,

    'தனக்குக் கொள்கையெல்லாம் தெரியாது - கூட்டணிக்கும் கொள்கைகள் கிடையாது' என்று கூட்டணிக்காக ஏங்கி நிற்கும் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள், "#NEET விலக்கிற்குப் பிறகுதான் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்போம்" என முதுகெலும்போடு அறிவிப்பாரா? என்று கேட்டிருக்கிறேன்.

    விரைவில் விடை கிடைக்கும்!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார்.
    • பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார்.

    தமிழ்நாட்டின் நலன்களே முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு பாஜகவுடன் கூட்டணி வைக்க தயாரா? என்று எடப்பாடி பழனிசாமிக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து தங்கம் தென்னரசு மேலும் கூறியிருப்பதாவது:-

    மத்தியில் இந்தியா கூட்டணியின் ஆட்சியமைந்தால் 'நீட் தேர்வு ரத்து செய்யப்படும்' என்று கழகத் தலைவர் உறுதியளித்திருந்தார். அதே உறுதிமொழியை ராகுல் காந்தி அவர்களையும் அளிக்கச் செய்திருந்தார்.

    டெல்லியில் மூன்று கார்களை மாற்றி மாற்றிச் சென்று 'பிரத்தியேகமாக யாரையும் சந்திக்க வரவில்லை' என்று சொல்லிவிட்டு இரவோடு இரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி அவர்களே!

    பாஜக - அதிமுக கூட்டணி அமையும் என்று அமித்ஷா இன்றுகூடச் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களே உங்களுக்கு முக்கியம் என்றால் நீட் தேர்வை ரத்து செய்தால்தான் கூட்டணி என்று உறுதியைப் பெற்றுக் கொண்டு கூட்டணி வைக்க நீங்கள் தயாரா?

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ×