என் மலர்
நீங்கள் தேடியது "RS Bharathi"
- அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
- எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.
எடப்பாடி பழனிசாமி, பயத்தை போக்க டோப்பட்ட மேக் அப் தான் அதிமுக பொதுக்குழு கூட்டம் என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.
10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அண்ணா திமுக அமித்ஷா திமுகவாக மாறி விட்டதை மறைக்க முயற்சித்தாலும் அதிமுக பொதுக்குழு தீர்மானங்கள், பாஜகவின் அடிமை பழனிசாமி என்பதை தமிழ்நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையிலேயே உள்ளன.
"கூட்டணிக்கு அதிமுகதான் தலைமை; கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்க எடப்பாடி பழனிசாமிக்கு முழு அதிகாரம்" என்ற தீர்மானம் பார்ப்பதற்கு எடப்பாடி பழனிசாமியை அதிமுகவினர் மத்தியில் "டான்?" போல காட்டுமே தவிர, அவர் டம்மி என்பது மக்களுக்கும் பாஜகவுக்கும் நன்றாகவே தெரியும்.
அதிமுக பொதுக்குழு நடப்பதற்கு இரண்டு நாள் முன்புகூட குஜராத்தில் பேசிய அமித்ஷா, ''பீகாரை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும்'' என்றார். "மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை என்னுடையது" என்ற வசனம் போல மாப்பிள்ளை பழனிசாமிதான்.
ஆனால், அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதுதான் அமித்ஷா சொன்ன வார்த்தையின் அர்த்தம். ஆனால், அதிமுக பொதுக்குழுவில், "அதிகாரம்'' என்ற போலி சட்டையை பழனிசாமிக்கு மாட்டியிருக்கிறார்கள்.
அமித்ஷா அழைப்பின் பேரிலே டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி கார்கள் மாறி அமித்ஷாவை சந்தித்தும், முகமூடி அணிந்து வெளி வந்ததையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்தார்கள். அந்த அமித்ஷா சொல்வதை மீறி எதையுமே எடப்பாடி பழனிசாமியால் செய்ய முடியாது என்பது அதிமுகவினருக்கே நன்கு தெரியும். எடப்பாடி பழனிசாமியின் பயத்தை போக்க போடப்பட்ட மேக்அப்தான் பொதுக்குழு.
மெகா கூட்டணி அமைப்பதாக கூறிய எடப்பாடி பழனிசாமியை நம்பி எந்த கட்சியும் வர தயாராக இல்லை; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு எந்த ஆளுமையும் இல்லை; மக்கள் செல்வாக்கும் கிடையாது என்பது தெள்ளத்தெளிவாக உணர்ந்த அமித்ஷா, எடப்பாடி பழனிசாமியை மிரட்டி அடிபணிய வைத்து கூட்டணியை அவரே அறிவித்தார் என்பதுதானே நிஜம்.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்துவிட்டு வருகிறார்கள். அதற்காக அமித்ஷாவை கண்டித்து ஒருவார்த்தை கூட பேசாத தொடைநடுங்கி எடுபுடி பழனிசாமிக்குதான் கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் குறித்து முடிவெடுக்கும் முழு அதிகாரம் என்பது மிக சிறந்த நகைச்சுவை.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை 17 விழுக்காட்டில் இருந்து 22 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கையை ஒன்றிய பாஜக நிராகரித்துவிட்ட விவகாரத்தில், ஒன்றிய அரசைக் கண்டிக்க தைரியம் இல்லாத பழனிசாமி, திமுக அரசைக் கண்டித்திருப்பது பச்சைத்துண்டு அணிந்துகொண்டு பச்சைதுரோகம் செய்யும் போலி விவசாயி பழனிசாமி என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார்.
நெல் கொள்முதல் ஈரப்பத அளவை உயர்த்துங்கள் என்று அதிமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசுக்கு நேரடியாக ஒரு கோரிக்கை வைப்பதற்குகூட "போலி விவசாயி" எடப்பாடி பழனிசாமிக்கு துணிவில்லை.
உண்மையான விவசாயியாக இருந்தால் பிரதமரை டெல்லி சென்று சந்தித்து 22 சதவீதம் வரை உள்ள நெல்லையும் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கினால்தான் கூட்டணியில் தொடருவோம் என நிபந்தனை விதிக்க ஆளுமை வேடம்போடும் எடப்பாடி பழனிசாமிக்கு தைரியும் இருக்கிறதா?
கோவை, மதுரை நகரங்களின் மெட்ரோ திட்டங்களை ரத்து செய்த மோடி அரசை கண்டிப்பதற்கு பதில், ஒன்றிய பாஜக அரசு கூறிய மொக்கையான காரணத்தையே அதிமுக பொதுக்குழு தீர்மானத்திலும் நியாயப்படுத்தி கோவை, மதுரை மக்களுக்கு பெரும் துரோகத்தை செய்திருக்கிறார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு அடைந்துவரும் வளர்ச்சியை தினந்தோறும் பார்த்து வயிற்றெரிச்சலில் தவிக்கும் எடப்பாடி பழனிசாமி, போகின்ற இடங்களிலெல்லாம் புலம்புவதை வாடிக்கையாக வைத்திருந்தார். அதையே அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களாகவும் வடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கடன் சுமை கட்டுக்குள் இருப்பதாக சிஏஜி வெளியிட்ட அறிக்கையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனாலும் கடன் சுமை அதிகரித்துவிட்டதாக அதிமுக பொதுக்குழுவில் அவதூறு பரப்பப்பட்டுள்ளது.
2011ம் ஆண்டு திமுக ஆட்சி நிறைவு பெறும்போது தமிழ்நாட்டின் மொத்தக் கடன் 1,01,349 கோடி ரூபாய்தான். 10 ஆண்டுகால அதிமுக ஆட்சி நிறைவடையும்போது 2021ம் ஆண்டில் தமிழ் நாட்டின் கடன் 4,80,300 கோடி ரூபாய். அதாவது 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் கடன் சுமார் 5 மடங்கு அதாவது கிட்டதட்ட 500 சதவீதம் அதிகரித்துள்ளது. அதே நேரம் திமுக ஆட்சியில் தற்போது 9 லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு கடன் இருந்தாலும் 2021ல் திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து 93 சதவீதம் அளவிற்கே கடன் உயர்ந்துள்ளது.
ஒரு மாநிலத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தியான ஜிஎஸ்டிபியை ஒப்பிடும்போது கடன் அளவு எவ்வளவு என்பதுதான் கடன் சுமையை தீர்மானிக்கும் காரணி. அந்த வகையில் தமிழ்நாட்டின் DEPT TO GSDP RATIO 26.4 சதவீதம்தான். தமிழ்நாடு நிதி பொறுப்புச் சட்டம் 2003 நிர்ணயித்த கடன் வரம்பைவிட குறைவான அளவில்தான் தமிழ்நாட்டின் கடன் அளவு உள்ளது.
"முதலீடுகள் இல்லை, நிறுவனங்கள் இடம் பெயர்கின்றன, வேலை வாய்ப்பு இல்லை, ஏமாற்றும் புள்ளி விவரங்கள்" என பொத்தாம் பொதுவாக ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய அதிமுக, தனது ஆட்சிக்காலத்தில் இவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; அதிலிருந்து திமுக ஆட்சியில் இவ்வளவு கோடி குறைவாக உள்ளது.
அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட 'இந்த' நிறுவனம் தற்போது வேறு மாநிலத்திற்கு சென்று விட்டது, அதிமுக ஆட்சியில் இத்தனை இலட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கினோம்; தற்போது அதைவிட குறைந்த வேலை வாய்ப்புகளே உருவாக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டு கூறியிருந்தால் முதலீடு ஈர்ப்பு, தொழில் வளர்ச்சி விஷயத்தில் அதிமுக ஆட்சியின் யோக்கியதை தெரிந்துவிடும் என்பதால் பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை கூறியிருக்கிறது அதிமுக.
2016 முதல் 2021 வரையிலான அதிமுக ஆட்சியில் 15,543 கோடி ரூபாய் முதலீட்டில் 10,316 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பளித்திடும் 21 தொழிற்சாலைகளுக்குப் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு; அவற்றுள் 12 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டன. ஆனால், திராவிட மாடல் ஆட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 9.74 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 31 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல் கட்டமாக 46 தொழிற்சாலைகள் தங்களது உற்பத்தியை தொடங்கிவிட்டன. அதனால்தான் தமிழ்நாடு கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 11.19% இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்து இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்கிறது. இந்த வளர்ச்சியை பழனிச்சாமியால் பொறுத்துக் கொள்ள முடியாமல், ஒன்றிய பாஜக அரசு வழங்கிய புள்ளி விவரத்தையே "பொய்யான புள்ளி விவரம்" என்று கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் விவகாரத்தில் நீதித்துறையின் மதச்சார்பின்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அடம்பிடிக்கும் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திமுக கொண்டு வந்த கண்டனத் தீர்மானத்தை வட மாநிலங்களைச் சேர்ந்த எம்.பிக்கள் உள்பட 120 மக்களவை எம்.பிக்கள் ஆதரித்துள்ளனர்.
ஆனால் மற்ற மாநிலங்களில் மதக் கலவரம் செய்தே ஆட்சியை மாற்ற பாஜக முயற்சி செய்து பலனடைந்ததால் தமிழ்நாட்டிலும் அந்த பலனை அறுவடை செய்யலாம் என்ற நப்பாசையில் எடப்பாடி பழனிசாமி பாஜகவின் கலவர அரசியலுக்கு துணை போகும் வகையில் அதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறார்.
வழக்கம்போல் உச்சிப் பிள்ளையார் கோயில் அருகே தீபத்தூணில் தீபம் ஏற்றப்பட்டது; தீபம் ஏற்றிவிட்டதை மறைத்து, தீபமே ஏற்ற அனுமதி மறுக்கிறது திமுக அரசு என்று அவதூறு பரப்பும் மதவெறி கும்பலுக்கும் அவர்களுக்கு துணையாக இருக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் மதசார்பின்மைக்கு முன்மாதிரியாக திகழும் தமிழ்நாட்டு மக்கள் 2026 தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.
திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 364 வாக்குறுதிகளுக்கு அரசாணை வெளியிடப்பட்டுவிட்டது. 40 திட்டங்கள் பரிசீலனையில் உள்ளன. மொத்தமாக 404 திட்டங்கள் அரசின் செயல்பாட்டில் உள்ளன. 37 திட்டங்கள் ஒன்றிய அரசின் நிதி பங்களிப்பு இல்லாமல் நிலுவையில் உள்ளன. 64 திட்டங்கள் மட்டுமே இன்னும் அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத திட்டங்களாக உள்ளன.
தேர்தல் வாக்குறுதியாக சொல்லப்படாத இல்லம் தேடி கல்வி, காலை உணவு திட்டம், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், இன்னுயிர் காக்கும் 48 திட்டம் போன்ற திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி சொல்லியது மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என தமிழ்நாட்டு மக்கள் பாராட்டுவதாலேயே எடப்பாடி பழனிசாமி பொய்யையும் அவதூறையும் பரப்பி ஆதாய அடைய முயற்சிக்கிறார்.
பாஜகவின் மதவெறி கொள்கைக்கு எதிரியாக இருப்பது திமுக மட்டுமல்ல தமிழ்நாடே என்பதால் தமிழ்நாட்டுக்கு துரோகத்தையும் வஞ்சகத்தையுமே மட்டுமே ஒன்றிய பாஜக அரசு துணிந்து செய்கிறது. அப்படியிருந்தும் பாஜகவுடன் கூட்டணிவைத்து எட்டப்பன் வேலைபார்க்கும் எடப்பாடி பழனிசாயின் புலம்பலை தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பார்கள்; 10 தோல்வி கண்ட பழனிசாமிக்கு 2026 தேர்தலிலும் படுதோல்வியை பரிசாக தருவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை
- 'திராவிடம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்ன 'மங்குனி'தானே நீங்கள்
"எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்றாலும் 'நானும் ரவுடிதான்' என்பது போல 'என்னை ஏன் விமர்சிக்கவில்லை?' என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ""நானும் ரவுடிய்யா.. இந்த ஏரியாவுல ரவுடினு ஃபார்ம் ஆயிட்டேன்ய்யா" என வடிவேலுவின் காமெடியை நினைவுபடுத்துவது போல எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நடந்து கொள்கிறார். எடப்பாடி பழனிசாமி களத்திலும் இல்லை; மக்கள் மனதிலும் இல்லை என்ற போதும் 'நானும் ரவுடிதான்' என்பது போல 'நானும் எதிர்க் கட்சித் தலைவர்தான்' என்று wanted ஆக வண்டியில் ஏறுகிறார் பச்சைப் பொய் பழனிசாமி.
சசிகலா, பன்னீர்செல்வம், தினகரன், செங்கோட்டையன் எனத் தொடர்ந்து பழனிசாமிக்கு எதிராகப் பேசுவது தினமும் ஊடகத்தில் வந்து கொண்டிருக்கிறது. அதனால், பதற்றமாகி தன் இருப்பையும் காட்டிக் கொள்ள ஊடகத்தில் எதையாவது உளறிக் கொட்டிக் கொண்டிருக்கிறார்.
அரசியல் முதிர்ச்சியைப் பற்றி எல்லாம் யார் பேசுவது? அதிமுக கட்சியின் பெயரில் உள்ள 'திராவிடம்' என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது என்று சொன்ன 'மங்குனி'தானே நீங்கள். ''படுத்தே விட்டான் ஐயா...'' என்ற ரீதியில் பாஜகவுக்காக பழனிசாமி நடத்திய அடிமை ஆட்சியால் நீட் முதல் மின்சாரம் வரை தமிழ்நாட்டின் உரிமைகளை இழந்து தவித்தோம். இப்போது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமைக்கும் அச்சுறுத்தல் தரும் பாஜகவின் SIR-யை கண்டிக்க திராணியில்லாமல் வக்காலத்து வாங்கி கொண்டிருக்கிறார்.
SIR வழியாகத் தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைப் பறிக்கப் பாசிச பாஜகவும் அடிமை அதிமுகவும் போட்ட சதிக்கு எதிராக திமுக எடுத்துவரும் உறுதிமிக்க நடவடிக்கைகள் பழனிசாமியை ஆட்டங்காண வைத்திருக்கிறது. மக்களைச் சந்தித்துத் தேர்தலில் வெற்றி பெற முடியாத கோழைகள், சிறுபான்மையினர், பெண்கள், பட்டியலினத்தவர்களின் வாக்குரிமையை பீகாரில் பறித்தது போல், தமிழ்நாட்டிலும் பறித்துவிடலாம் எனப் போட்ட சதியை எதிர்த்து களப்போரட்டமும், சட்டப் போராட்டமும் நடத்திக் கொண்டிருக்கிறது திமுக.
ஆட்சியில் இருக்கும் போது டெல்லி பிக்பாஸ்களுக்குப் பயந்து தமிழ்நாட்டின் உரிமைகளை அடகுவைத்தது போல இப்போது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையை அடகு வைக்கத் துணிந்துவிட்ட பழனிசாமி SIRக்கு வக்காலத்து வாங்குவது ஆச்சரியமில்லை. முஸ்லிம்களைப் பாதிக்கும் வகையில் மோடி அரசு கொண்டு வந்த CAA சட்டத்தை ஆதரித்து விட்டு முஸ்லிம்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை எனப் பச்சைப் பொய் சொன்னவர்தான் பழனிசாமி. அந்த CAA சட்டத்தை SIR வழியாக அமல்படுத்தத் துடிக்கும் பாஜகவுக்குத் துணை போகும் எடப்பாடி பழனிசாமிக்கு தேர்தலில் பாடம் புகுத்துவார்கள். எத்தனை தில்லு முல்லுகளைச் செய்தாலும் சரி எத்தனைக் குறுக்கு வழிகளில் வந்தாலும் சரி தமிழ்நாட்டில் பாஜகவின் எந்தச் சித்து விளையாட்டும் வெற்றி பெறாது. பழனிசாமியின் பகல் கனவும் பலிக்காது.
நேற்று கட்சி தொடங்கியவர்கள் கூட 'திமுகவுக்கும் எங்களுக்கும்தான் போட்டி' என்று பேசுவதால் பழனிசாமிக்கு பதற்றம் ஏற்பட்டுவிட்டது போல. முதலமைச்சரைப் பார்த்து, பாஜகவை விமர்சிக்காமல் எங்களையும் கொஞ்சம் விமர்சியுங்கள் என்று கெஞ்சுகிறார்.
தேர்தல் ஆணையம் வழக்கமாக மேற்கொள்ளும் வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கும் தற்போது மேற்கொண்டு இருக்கும் SIR-க்கும் வேறுபாடு தெரியாத அப்பாவி போல நடித்து மக்களை ஏய்க்க நினைக்கிறார் பழனிசாமி. SIR படிவத்தில் எதை நிரப்புவது எதை விடுவது, முந்தைய SIR க்கு பிந்தைய வாக்காளர் பட்டியல் விவரங்களைக் கண்டடைவதில் குழப்பம் எனப் பல்வேறு குளறுபடிகளோடு அவசர அவசரமாக இப்பணியை மேற்கொள்ளத் தேர்தல் ஆணையத்தை நிர்ப்பந்திக்கும் ஒன்றிய பாஜக அரசின் நோக்கம் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது. அது தமிழ்நாட்டு மக்களின் வாக்குரிமையைத் திருடுவது மட்டுமே.
பணமதிப்பிழப்பு தொடங்கி தற்போது SIR வரை அனைத்திலும் அப்பாவி மக்களை அல்லல்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாக்கி அதைக் கண்டு ஆனந்தப்படும் பாஜகவையும் அதன் அடிமைகளையும் என்றும் தமிழ்நாடு ஏற்காது. திமுக எப்போதும் சாமானிய மக்களுக்குத் தோழனாகத் துணை நிற்கும் இயக்கம். SIR-க்கு எதிராக ஒரு பக்கம் சட்டப்போராட்டத்தையும் மறுபக்கம் மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது திமுக. ஆனால், அதிமுக அந்த SIR-க்கு ஒரு துரும்பைக் கூட கிள்ளி போடாத பழனிசாமி பாஜகவிற்காக முட்டுக்கொடுக்க மட்டும் ஓடோடி வருகிறார்" என்று தெரிவித்தார்.
- தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும்.
- பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்கிற செய்தி எப்படியாவது செவியில் எட்டிவிடாதா? என்கிற காத்திருப்பில் விஷமப் பிரசாரத்தை நாள்தோறும் நடத்திக் கொண்டிருக்கின்றனர் எடப்பாடியும் இன்னும் சில எதிர்க் கட்சிகளும்!
ஒரு குற்றம் நடந்தவுடனே அதை வைத்து எப்படி அரசியல் ஆதாயம் தேடலாம் என்று அற்பப் புத்தியோடு செயல்பட்டுவரும் எதிர்க்கட்சிகளின் அரைவேக்காட்டுத்தனத்தைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது கோவை நிகழ்வு.
கோவை சாலையில் நடந்து சென்ற பெண் காரில் கடத்தப்படுவதாகவும், சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் மாயமாகி உள்ளதாகவும் அதனால் தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பே இல்லை என்று உண்மை நிலை தெரிவதற்கு முன்பே முந்திரிக் கொட்டையாக வந்து அயோக்கியத்தனமான அறிக்கையை வெளியிட்டார் 'பச்சைப் பொய்' பழனிசாமி. கோவை நிகழ்வில் காவல்துறை தீவிரமான விசாரணையை மேற்கொண்டது. அந்தச் சம்பவம் குடும்பத் தகராறில் ஏற்பட்டது என தெரிய வந்தது. "என்னை யாரும் கடத்தவில்லை" என அந்தப் பெண் வீடியோ மூலம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.
இதே போல நேற்றைய முன்தினம் இரவு காணாமல் போன கண்ணகி நகர் மாணவியைத் தனிப்படை அமைத்து காலை 6.30 மணிக்கே காவல்துறை மீட்டு வீட்டில் ஒப்படைத்துவிட்டது. உண்மைகள் இப்படியிருக்கத் தமிழ்நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என பழனிசாமி விஷமப் பிரச்சாரம் செய்ததற்கு வெட்கித் தலைகுனிய வேண்டும். எடப்பாடி பழனிசாமி வழியில் அன்புமணி ராமதாஸ், நயினார் நாகேந்திரன் போன்றவர்களும் உண்மை அறியாமல் தங்களது அரசியல் சுயலாபத்திற்காகப் பெண்களின் பாதுகாப்பை அரசியல் பகடைக்காயாக உருட்டிக் கொண்டிருப்பதைத்தான் அற்பத்தனமான அறிக்கைகள் அம்பலப்படுத்தியிருக்கின்றன.
திமுக அரசுக்கு எந்த வகையிலாவது களங்கம் கற்பிக்கலாம் என நினைத்து இதுபோன்ற அவதூறு பிரசாரத்தை மேற்கொள்ளும் எதிர்க்கட்சிகளின் முகமூடி ஒவ்வொரு நாளும் மக்களிடம் கிழிபட்டுக் கொண்டிருக்கிறது. பெண்களின் நலனையே முதன்மை நோக்கமாகக் கொண்டு செயலாற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு அவர்களது பாதுகாப்பில் எந்தச் சமரசத்துக்கும் இடம்கொடுக்காது. அது திரும்பத் திரும்ப நிரூபணம் ஆகிக் கொண்டேதான் இருக்கும் என்று கூறியுள்ளார்.
- பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.
- பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசி வருகிறார்.
அப்போது அவர் கூறியதாவது:-
பீகாரில் பிரதமர் ந்நேரத்திர மோடி பொய் பிரசாரம் செய்கிறார்.
பாஜகவினர் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் கருப்பர்கள் எனக்கூறி தொடர்ந்து அவமதித்து வருகின்றனர்.
பிஹாரில் ஒழுங்காக வேலை கொடுத்திருந்தால் அவர்கள் ஏன் இங்கே வரப்போகிறார்கள்?; வேலை கேட்டு வரும் பிஹார் மக்களுக்கு இங்கு வேலை கொடுத்து காப்பாற்றிக் கொண்டிருக்கிறோம்.
தமிழகத்திற்கான நிதி, கல்விக்கான நிதி என மாநிலத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு வழங்கவில்லை.
திமுக கூட்டணி பெற்ற வெற்றி, திமுக ஆட்சியில் தமிழகம் அடைந்து வரும் வளர்ச்சியை பொறுக்க முடியாமல் பிரதமர் பேசியுள்ளார்.
ஆங்கிலேயர்கள் ஆட்சியை விட பிரித்தாளும் சூழ்ச்சியை பிரதமர் செய்கிறார். பாஜகவினர் பொய்களுக்கு தமிழக மக்கள் என்றும் ஏமாற மாட்டார்கள், பீகார் மக்களும் பாஜகவின் பொய்களை அறிவர்.
பிஹார், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்கள் தமிழில் படித்து அதிக மதிப்பெண் பெறுகின்றனர்.
நாங்கள் இந்தி திணிப்பைதான் எதிர்க்கிறோம். இந்திக்காரர்களுக்கு எதிரி அல்ல; முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியதற்கு திமுக கண்டனம் தெரிவிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல்.
- நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பதாவது:-
கரூர் த.வெ.க கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது, இது நாட்டின் உச்ச நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாகும்.
ஒரு மனு இறந்தவரின் உண்மையான பிரதிநிதி அல்லாத ஒருவரின் பெயரில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிகிறது, மற்றொன்று அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளாத ஆவணங்களில் கையொப்பமிட தவறாக வழிநடத்தப்பட்டதாகத் தோன்றும் ஒருவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது நீதித்துறை செயல்முறையை கையாளும் நோக்கில் திட்டமிடப்பட்ட அரசியல் செயல். இது மலிவான அரசியல் ஆதாயத்திற்காக துக்கத்தையும் சோகத்தையும் பயன்படுத்துவதற்கான ஆபத்தான முயற்சி.
நீதிமன்றத்தின் மீது திமிர்பிடித்த மோசடியாகத் தோன்றுவதை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் விசாரித்து, அதன் பின்னணியில் உள்ளவர்களை அவர்கள் தகுதியான கடுமையுடன் கையாளும் என்று நம்புகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும்.
- புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.
புதுச்சேரி:
புதுச்சேரி கதிர்காமம் தொகுதி தி.மு.க. சார்பில் கருணாநிதி சிலை, நூலகம், தொகுதி அலுவலகம் திறப்பு விழா என முப்பெரும் விழா இன்று நடந்தது.
கதிர்காமம் தொகுதி செயலாளர் வடிவேல் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் தங்கவேலு, தொகுதி துணை செயலாளர் தங்க தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க. தலைமை கழக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, புதுவை மாநில தி.மு.க. அமைப்பாளரும், சட்டமன்ற எதிர்கட்சித்தலைவருமான சிவா ஆகியோர் கருணாநிதி சிலை, நூலகம் மற்றும் அலுவலகத்தை திறந்து வைத்தனர்.
இதைத்தொடர்ந்து தி.மு.க. மாநில அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் அமைக்கப்பட்ட கூட்டணி புதுச்சேரிக்கும் பொருந்தும். ஓரணியில் தமிழ்நாடு என தி.மு.க. உறுப்பினர் சேர்க்கையை மு.க. ஸ்டாலின் தொடங்கினார். ஒரு கோடி வீடுகளுக்கு திமுக தொண்டர்கள் சென்று, 2.70 கோடி உறுப்பினர்களை தி.மு.க.வில் சேர்த்துள்ளனர்.
அடுத்தகட்டமாக புதுவை மாநிலத்திலும் வருகிற 2026 தேர்தலையொட்டி ஒரு வாரத்துக்குள் தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை தலைமை கழகத்தால் அறிவிக்கப்படும். புதுச்சேரி, காரைக்கால் மாவட்ட அமைப்பு சார்பில் உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும்.
இதற்கான ஆயத்த பணியை தொடங்க கதிர்காமம் பகுதியில் தி.மு.க. அலுவலகம் திறப்பு, கருணாநிதி சிலை திறப்பு, இளைஞரணி செயலாளர் உதயநிதி அறிவித்ததுபோல நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் 30 தொகுதியிலும் திமுக உறுப்பினர் சேர்க்கை நடைபெறும். 30 தொகுதியிலும் திமுக வெற்றி பெற ஆயத்த பணிகளை மேற்கொள்வோம்.
புதுச்சேரியில் 4 முறை தி.மு.க. ஆட்சியில் இருந்துள்ளது. 5-வது முறையாக புதுச்சேரி மாநிலத்தில் தி.மு.க. ஆட்சி அமையும் வகையில் உறுப்பினர் சேர்க்கை அமைய வேண்டும் என தொண்டர்களுக்கு அறிவுறுத்தியுள்ளோம். தேர்தல் நேரத்தில் தலைமை எடுக்கும் கூட்டணி முடிவுகள், தொகுதி பங்கீடு அமையும்.
புதுச்சேரிக்கும் சேர்த்து தமிழக தி.மு.க.தான் தலைமை. ஸ்டாலினும், ராகுல்காந்தியும் இணைந்து தமிழகம், புதுச்சேரி மாநில முடிவுகளை எடுப்பார்கள். யாருக்கு எத்தனை சீட் என்பதை அவர்கள் முடிவு செய்வார்கள். அதை தி.மு.க ஏற்கும், காங்கிரசும் ஏற்கும் என நம்புகிறேன். 30 தொகுதியிலும் வெற்றி பெறும் வாய்ப்புகளை தி.மு.க. உருவாக்கும்.
அண்ணாமலை பியூஸ் போன பல்பு. அவர் பேச்சுக்கு நான் பதில் கூற விரும்பவில்லை. தி.மு.க.வை பொறுத்தவரை நாங்கள் சரியாக உள்ளோம். நாங்கள் வெற்றி பெறப்போவது நிச்சயம். தி.மு.க. கூட்டணியிலிருந்து சில கட்சிகள் வெளியேறும் என 2019 முதல் எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார்.
அவர் கூட்டணியிலிருந்து அல்ல, கட்சியிலிருந்து பாதி பேர் வெளியே சென்று விட்டனர். ஒவ்வொருவராக தி.மு.க.வில் சேர்ந்து வருகின்றனர். எடப்பாடி அவர் நிலையை முதலில் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். விஜய் பற்றி கேட்காதீர்கள். 1980 தேர்தலுக்கு நாராயணசாமி நாயுடுக்கு மிகப்பெரும் கூட்டம் கூடியது.
அவரை இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர், கருணாநிதி சென்று பார்த்தனர். அந்த கட்சி இப்போது எங்கே உள்ளது? இதுபோல பல உதாரணம் உள்ளது. கூட்டம் சேர்வதை வைத்து கணக்கிட கூடாது. திடீர் பிள்ளை யாருக்கு கூட கூட்டம் கூடும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது.
- தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர்.
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள்.
2006-2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத்துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது. இந்த வழக்கில் இருந்து 2012-ஆம் ஆண்டு திண்டுக்கல் மாவட்ட நீதிமன்றம் அவரை விடுவித்து உத்தரவிட்டது. இதனை சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்த நிலையில்தான், இந்த வழக்கில் சட்டவிரோத பண பரிமாற்றம் நிகழ்ந்துள்ளதா? என அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.
உளவுத் துறை ஐ.ஜியாக இருந்த ஜாபர்சேட்டுக்கு வீட்டுவசதி வாரியம் சார்பில் நிலம் ஒதுக்கப்பட்ட விவகாரத்தில் அமலாக்கத்துறை கையில் எடுத்து விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த வழக்கில் 2022-ல் அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை ஏற்று ஐ.பெரியசாமி விசாரணைக்கு ஒத்துழைப்பு அளித்தார். சுமார் 9 மணி நேரம் விசாரணை நடத்தினார்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள்.
பல ஆண்டுகளுக்கு முன்பு பதியப்பட்ட இந்த வழக்குகளில் அதுகாலம் வரையில் தலையிடாத அமலாக்கத் துறை, திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தீவிரம் காட்டுவது அப்பட்டமான அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்பது அரசியல் அறியாத எட்டாம் வகுப்பு மாணவனுக்கும் கூட தெரியும். அமலாக்கத் துறை விசாரணைக்கு ஐ.பெரியசாமி ஒத்துழைத்த பிறகும் கூட இன்றைக்கு திடீரென சோதனை நடத்தியிருப்பது சந்தேகங்களை எழுப்புகிறது.
விடுதலை பெற்ற வரலாற்றையும் விடுதலை வீரர்களின் தியாகத்தையும் நினைவு கூற வேண்டிய சுதந்திர தின வாழ்த்து செய்தியில், அரசியல் அவதூறுகளை அள்ளி வீசினார் ஆளுநர் ஆர்.என்.ரவி. மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அரசை அரசியல்வாதி போல குற்றச்சாட்டுகளால் வசை மாறி பொழிந்தார். இதையெல்லாம் சுட்டிக் காட்டி மறுப்பு தெரிவித்தோம். இந்த நிலையில்தான் இன்றைக்கு மாண்புமிகு ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது.
பாஜக வாசிங் மிஷினில் விழுவதற்கு நாங்கள் தவறு செய்தவர்கள் அல்ல. பொய் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டவர்கள்; பொய் வழக்கு போடப்பட்டவர்கள். அதனை நீதிமன்றத்தின் நிரூபித்து காட்டி, வெளியே வருவோமே தவிர, பாஜக வாசிங் மிஷினில் கழுவி, வழக்குகளை வாபஸ் பெற திமுகவினர் கோழைகள் அல்ல. சுயமரியாதை பாதையில் வந்தவர்கள். அடக்குமுறைக்கு அஞ்சாதவர்கள். அவசரகால நெருக்கடிகளை போல எத்தனையோ தழும்புகளுக்கு சொந்தக்காரர்கள்.
'சட்டவிரோத பண பரிமாற்றம்' என சொல்லி அமலாகத்துறை செய்யும் அடாவடிகள் ஒவ்வொன்றும் நீதிமன்றத்தில் அவமானப்பட்டு கொண்டிருக்கின்றன.
* ''கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் அமலாக்கத்துறை 5,300 வழக்குகள் பதிவு செய்துள்ளது. ஆனால் வெறும் 40 வழக்குகளில் மட்டுமே தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அமலாக்கத்துறை மீது மக்களுக்கு சந்தேகம் எழுந்துள்ளது'' என்று உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜால் பூயான் சொன்னார்.
* மூடா ஊழல் வழக்கில், "அரசியல் மோதல்களுக்கு ஏன் ED பயன்படுத்தப்படுகிறது?" என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் கேள்வி எழுப்பினார்.
* சத்தீஸ்கர் மதுபானக் கொள்கை ஊழல் வழக்கில், "ஆதாரமே இல்லாமல் குற்றம் சாட்டுவதை அமலாக்கத் துறை, தற்போது வாடிக்கையாகக் கொண்டுள்ளது. அமலாக்கத் துறையால் பதிவு செய்யப்படும் ஏராளமான வழக்குகளில் இதை நாங்கள் பார்க்கிறோம்" என உச்ச நீதிமன்றம் காட்டமாக விமர்சனம் வைத்தது.
அதிகாரம் மற்றும் தன்னாட்சி கொண்ட அமைப்புகளை எல்லாம் தன்னுடைய தேர்தல் அரசியல் கருவிகளாகப் பயன்படுத்தி வருகிறது மோடி அரசு. 'சட்டவிரோத பண பரிமாற்றம்' என பேசும் ஒன்றிய அரசுதான் 'வாக்கு திருட்டு' அரசியலை நடத்தி கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி, பாஜக வாக்கு மோசடி செய்திருப்பது இன்றைக்கு அம்பலப்பட்டு நிற்கிறது. இதனைக் கண்டு நாடே அதிர்ச்சி அடைந்துள்ளது. வாக்கு திருட்டு' என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத்துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது.
சில முன்னாள் அதிமுக அமைச்சர்கள் மீது மேல் நடவடிக்கை எடுக்க ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பப்பட்ட கோப்பு இன்னமும் அவரிடம் நிலுவையில் இருக்கிறது. தனது ஏஜெண்டான ஆளுநருக்கு அறிவுரை சொல்லி அதற்கு அனுமதி அளிக்கும்படி செய்ய வேண்டிய ஒன்றிய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அமலாக்கத்துறையை ஏவி விடுவது வாடிக்கையாக இருக்கிறது. அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலர் மீது FIR போடப்பட்டு, குற்றப்பத்திரிகையும் சிலர் மீது தாக்கலாகிவிட்டது. இவ்வளவுக்குப் பிறகும் அவர்கள் பக்கம் ED தலை வைத்தும் படுக்கவில்லை.
இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஏதாவது திமுக அமைச்சர் வீட்டில் ED சோதனை நடத்தி குற்றத் தோற்றத்தை உருவாகுவது மட்டுமே ஒன்றிய அரசின் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. அதனை வைத்து பாஜக தலைவர்களும் பாஜகவின் அடிமைகளும் தங்களது மனம்போன போக்கில் அவதூறுகளை அள்ளித் தெளிப்பதும் வாடிக்கையாக நடைபெற்று வருகின்றது. இந்த துருப்பிடித்த ஆயுதங்களை எல்லாம் மழுங்கடிக்கப்பட்டே வருகிறது. இந்த அவதூறுகளை எல்லாம் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் நம்பப் போவதில்லை. அது தெரிந்தும் தொடர்ந்து தோற்றுக் கொண்டே இருக்கிறார்கள்.
திமுகவினர் எவரொருவரும் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள்; EDக்கும் அஞ்சமாட்டார்கள். திமுகவின் தலைவரும் தொண்டர்களும் தமிழ்நாட்டின் பாதுகாவல் அரண். அதனால் தமிழ்நாட்டு மக்கள் திமுகவுடன் ஓரணியில் திரண்டு நிற்கின்றனர். இதனைக் கண்டு மென்மேலும் எரிச்சலுற்று இதுபோன்ற ED சோதனைகளை நடத்தி அச்சுறுத்த கனவு காண்கின்றனர். அது தமிழ்நாட்டில் எடுபடாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
- உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது நீதிமன்றம்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காத்திடும் பொருட்டு ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி தொடங்கி வைத்தார்.
அவர் தொடங்கி வைத்த நாள் முதல் மத்திய பாஜக அரசின் வஞ்சக சூழ்ச்சியையும், அடிமை அதிமுக-வின் துரோகங்களையும் கண்டு வெறுத்துப் போய் இருக்கும் தமிழ்நாட்டு மக்கள் முதல்வர் பின்னால் ஓரணியில் தமிழ்நாடு என அணி அணியாய் அணிவகுத்து நிற்கத் தொடங்கினர்.
அதோடு எல்லார்க்கும் எல்லாம் என்ற உயரிய நோக்கோடு திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் சென்று சேராத குடும்பங்களே கிடையாது என்ற அளவிற்கு முதலமைச்சர் ஒவ்வொரு குடும்பத்தையும் பார்த்து பார்த்து கவனித்து வருவதால் தமிழ்நாட்டு மக்கள் குடும்பம் குடும்பமாக கழகத்தில் இணைந்து வருகின்றனர்.
தமிழ்நாட்டின் அனைத்து தரப்பு மக்களும், அதிமுக-வினருமே கூட முதலமைச்சர் பின்னால் அணி திரள்வதைக் கண்டு தாங்க முடியாமல் அரண்டுபோய் அவதூறுகளைப் பரப்பி மக்களைக் குழப்ப பார்த்து அதில் தோற்றுப்போனதால் , நீதிமன்றத்திற்கு சென்று ஓரணியில் தமிழ்நாடு பரப்புரையை எப்படியாவது தடுக்க முடியாதா என தவம் கிடந்தார் பழனிசாமி.
நீதிமன்றத்தை நாடி தடைவாங்க முயன்ற அதிமுக-விற்கு நீதிமன்றம் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி பழனிசாமி முகத்தில் கரியைப் பூசிவிட்டது. மேலும் OTP மட்டும் கேட்காமல் வழக்கம்போல உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ள அனுமதித்துள்ளது நீதிமன்றம். இப்படி திமுக உறுப்பினர் சேர்க்கையை எப்படியாவது தடுக்க வேண்டும் என்ற பழனிசாமியின் பதட்டமே ஓரணியில் தமிழ்நாடு பரப்புரை எந்த அளவிற்கு மக்களிடம் சென்றுள்ளது என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
திமுக உறுப்பினர் சேர்க்கையைத் தடுக்க நினைத்த அதிமுக, பாஜக-வின் சதி செயலை நீதிமன்றமே முறியடித்த பின்னும், "சீப்பை ஒளித்து வைத்துவிட்டு கல்யாணத்தை நிறுத்தி விட்டோம்" என்ற வகையில் OTP பெறுவதை தடுத்து விட்டோம் என கூப்பாடு போடுகிறது அடிமைகள் கூட்டம். வேடிக்கை.!
திராவிட மாடல் அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சிறப்பான ஆட்சியை முன்வைத்து தன்னெழுச்சியாக பொது மக்கள் தங்களை கழக உறுப்பினராக இணைத்து வருகின்றனர். அதில் OTP பெறுவது என்பது உறுதிப்படுத்தலுக்கான ஒரு சிறு நடைமுறை மட்டுமே. எனினும் நீதிமன்ற வழிகாட்டலை மதித்து அந்த நடமுறைக்கு மாற்றாக கீழ்காணும் நடமுறையை கடைபிடித்து உறுப்பினர் சேர்க்கையை மேற்கொள்ளுமாறு கழக உடன் பிறப்புகளுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
புதிய வழிமுறைகள்:
மக்களுடன் ஸ்டாலின் App யை அனைவரும் Update செய்து கொள்ளுங்கள்.
1) OTP கேட்கும் முறை தற்போது இல்லை.
2) அலைபேசி எண் கட்டாயம்.
3) தற்போதைக்கு, ஒரு குடும்பத்திற்கு ஒரு போன் நம்பரில் 1:4 என்ற அடிப்படையில் உறுப்பினர்களை சேர்க்கலாம்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு அலைபேசி எண் என்ற முறை வந்துள்ளது. ஆனால் வாய்ப்பு இருக்கும் இடங்களில் கிடைக்கின்ற அனைத்து அலைபேசி எண்களையும் பெற்றுக் கொள்ளவும்.
அலைப்பேசி எண் தவறாகவோ அல்லது அந்த குடும்பத்தில் இல்லாத நபரின் எண்ணாகவோ இருந்தால், உறுப்பினர் சேர்க்கை மேற்கொண்ட அனைத்து தரவுகளும் நீக்கப்பட்டு இப்பணியை மீண்டும் தொடக்கத்தில் இருந்து தொடங்கிட வேண்டும் என்பதால் பெறப்படும் அலைபேசி எண்ணின் உண்மைத் தன்மையை உறுதி செய்து கொள்வது அவசியம்.
அலைப்பேசி எண்ணைப் பதிவிட்டு சமர்பித்தால் உறுப்பினர் சேர்க்கை முடிவடையும். அனைத்து வாக்காளர்களையும் சந்தித்து முழுமையாக கணக்கெடுப்புகளை முடிக்க வேண்டும்.
எதிரிகளின் பயமே நமது வெற்றி. 2026-லும் மு.க. ஸ்டாலின் தலைமையில் திராவிட மாடல் 2.o ஆட்சி அமைவது உறுதி.
இவ்வாறு ஆர்.எஸ். பாரதி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
- உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்.
- நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.
சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத:-
திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் அவர்கள், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற, சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா?
உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட முதலமைச்சர் இருக்கிறார்!
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணாவை விமர்சிப்பதை அதிமுக ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா?
- உங்கள் தாயை, மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா?
திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரையில் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணா குறித்த விமர்சனங்கள் அடங்கிய வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறார்கள் 'அண்ணா' பெயர் தாங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர்.
அண்ணாவைக் கேவலப்படுத்துவதை 'அண்ணா' என்ற பெயர் தாங்கிய கட்சி ரசிக்கிறது என்றால், உங்களின் உடம்பில் ஓடுவது அதிமுக ரத்தமா? பாஜக பாசமா? அண்ணாவின் பெயரைக் காப்பாற்றுவதை விடத் தங்களின் சொத்துக்களைக் காப்பாற்றுவதே முக்கியம் என நினைத்துவிட்டார்கள்.
உங்கள் தாயை, உங்கள் மனைவியை விமர்சனம் செய்தாலும் இப்படிதான் சோற்றால் அடித்த பிண்டங்களாக அமர்ந்திருப்பீர்களா?
இன்றைக்கு எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிமுகவில் சரியான ஆளுமை இல்லாததால், அண்ணாவுக்கும் பெரியாருக்கும் இந்த அவமானத்தைத் தேடித் தந்திருக்கிறார்கள். ஒன்றிய அரசின் வருமானவரித் துறை அமலாக்கத் துறை உள்ளிட்ட அதிகாரமிக்க முட்டை, அம்மிக் கல்லையே சுக்கு நூறாக்கும். ஆளுமையில்லாத அதிமுகவை மட்டும் அது விட்டு வைக்குமா?
'நாட்டாமை' திரைப்படத்தில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் காட்சியில் ஒருவர் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அந்தக் கதாபாத்திரத்தை போல முருகன் மாநாட்டில் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் அமர்ந்திருக்கிறார்கள். அங்கே நீங்கள் மிக்சர் சாப்பிட வா போனீர்கள்? 2026 சட்டமன்றத் தேர்தலில் அண்ணாவின் பெயரைச் சொல்லி ஓட்டு கேட்டு மட்டும் நீங்கள் வந்து விடாதீர்கள்.
அதிமுகவின் கொடியின் நடுவே வெள்ளையாக ஒருவர் விரல் காட்டிக் கொண்டிருப்பாரே தெரியுமா? அந்த அண்ணாவை மாற்றிவிட்டு, அங்கே அமித்ஷாவை வைத்துவிட்டீர்களா? 'மானமும் வீரமும் மனிதனுக்கு அழகு' எனச் சொன்னார் பெரியார். அந்த மானத்தை இழந்து, வீரத்தைத் துறந்து, அடிமையாக வளைந்து, குனிந்து, ஒடிந்தே விட்டது அதிமுக!
1956-ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் நடைபெறாத ஒரு சம்பவத்தைச் சொல்லி அண்ணாவை விமர்சித்தார் தமிழக பாஜக தலைவராக இருந்த அண்ணாமலை. அதற்கு எதிர்வினை ஆற்றிய அதிமுக இன்றைக்கு எங்கே ஓடி ஒளிந்து கொண்டது?
நேற்று முருகன் மாநாட்டில் முன்னாள் அமைச்சர்கள் கலந்து கொண்டால், இன்றைக்குக் கோவையில் RSS நூற்றாண்டு விழாவில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்கிறார். அடுத்து நாக்பூரில் எடப்பாடி பழனிசாமி தஞ்சம் அடைவாரா?
விஜயதசமி விழாவிற்காக கன்னியாகுமரியில் 2024 அக்டோபர் 6-ம் தேதி ஆர்.எஸ்.எஸ் பேரணியை அதிமுகவின் தளவாய் சுந்தரம் கொடியசைத்துத் தொடங்கி வைத்ததற்காக, தளவாய் சுந்தரத்தைக் கட்சிப் பதவியிலிருந்து பழனிசாமி நீக்கினார். அடுத்த மாதமே அவரை சேர்த்துக் கொண்டார். அப்படியான நாடகம் கூட RSS நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற எஸ்.பி.வேலுமணிக்கு நடக்கவில்லை. மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பா.ஜ.க கையெழுத்து இயக்கம் நடத்திய போது அதில் கையெழுத்திட்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ விஜயகுமார் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு, பிறகு சேர்க்கப்பட்டார். இப்படியான பாஜக பாசக் காட்சிகள் முருகன் மாநாட்டிலும் அரங்கேறியிருக்கின்றன.
மதவாத - பிரிவினைவாத அரசியல் மூலம் அதிகாரத்தைப் பிடிக்க வட மாநிலங்களில் ராமரை வைத்து கலவரம் செய்த பாஜக, தமிழ்நாட்டில் முருகனை வைத்து கலவர விதையை முருகன் மாநாடு மூலம் தொடங்கியுள்ளது. இந்துத்துவக் கும்பல் மூட்டும் கலவரத் தீயிக்கு எண்ணெய் ஊற்றும் எடுபிடி வேலையை எடப்பாடி பழனிசாமி வெட்கமே இல்லாமல் செய்திருக்கிறார்.
"திராவிடம் பற்றி அறிஞர்களிடத்தில்தான் கேட்க வேண்டும்" என்று முன்பு சொன்னவர்தானே பழனிச்சாமி. அவர் இன்றைக்கு இந்துத்துவத்தில் முழுமையாக கரைந்துவிட்டார். திமுகவை எதிர்க்கும் மாநாடு என்கிற ஒரே காரணத்திற்காகத் திராவிடத்தை இந்துத்துவாவின் காலடியில் கொண்டு போய் வைத்துவிட்டார் பழனிசாமி. திராவிடத்தை மட்டுமா, பெரியாருக்கும் அண்ணாவுக்கு இழுக்கையும் அல்லவா தேடித் தந்துவிட்டார்.
எம்ஜிஆர் எதிர்த்த இந்து முன்னணியை இன்றைய அதிமுக சிவப்புக் கம்பளம் போட்டு வரவேற்கிறது. 1982- ஆம் ஆண்டு எம்ஜிஆர் ஆட்சியில் நடைபெற்ற மண்டைக்காடு கலவரம் பற்றியும், இந்து முன்னணி குறித்தும் எம்ஜிஆர் 29.3.1982 அன்று சட்டப்பேரவையிலேயே தனது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறார். "இந்து முன்னணி என்ற பெயரால் பேரணி நடத்துகிறார்கள். இந்தப் பேரணியால் நாட்டுக்கு நன்மையா? சிந்திக்க வேண்டும்'' என்று அன்றைக்குச் சொன்னவர் எம்.ஜி.ஆர்.
முருக பக்தர்கள் மாநாட்டிற்கு, 'சூரனை வதம் செய்த முருகா! திராவிடத்தை அழிக்க வேலெடுத்து வா!' என்றும் 'திராவிடத்தை அழிக்க வேலெடுத்து ஓடி வா முருக பக்தர்களே' என்றும் இந்து முன்னணியினர் சுவரொட்டி ஒட்டியிருக்கிறார்கள். திராவிடத்தை அழிக்கும் முருகன் மாநாட்டிற்கு 'திராவிட' என்ற பெயர் தாங்கிய அதிமுகவின் பொதுச் செயலாளர் பழனிச்சாமி வாழ்த்து தெரிவிக்கிறார். திராவிடத்தை அழிக்கும் மாநாட்டிற்குத் திராவிடத்தால் அமைச்சரானவர்கள் கலந்து கொள்கிறார்கள். திராவிடம் அழிந்தால், அதிமுகவும் சேர்ந்தே அழியும் என்று கூட தெரியாத அளவுக்கா பாழும் கிணற்றில் அதிமுக விழுந்து கிடக்கிறது.
திராவிட இயக்கத்தின் பெயரையும் அண்ணாவின் பெயரையும் தனது கட்சியின் பெயரிலேயே வைத்துக் கொண்டு, தந்தை பெரியாரை எங்களது தலைவர் என்று கூறிக் கொண்டு, பாஜகவின் பாசிச அரசியலுக்குத் துணை போய்த் துரோகம் செய்திருக்கிறது அதிமுக. மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்க நடக்கும் மாநாட்டிற்குத் தனது கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை அனுப்பி அழகு பார்த்திருக்கிறார் துரோகி பழனிசாமி. கட்சியின் பெயரிலேயே அண்ணாவை வைத்துக்கொண்டு அண்ணாவை மோசமாக விமர்சிக்கும் மாநாட்டில் பங்கு கொள்ள வெட்கமாக இல்லையா?
முருகன் மாநாடு முழுவதும் வெறுப்புப் பேச்சுக்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டிருந்தது. ஆந்திரத் துணை முதலமைச்சர் பவன் கல்யாண், பாஜகவின் அண்ணாமலை உள்ளிட்டோர் பேசிய சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகளை எல்லாம் முன் வரிசையில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள் அதிமுக முன்னாள் அமைச்சர்கள். வெறுப்பு பேச்சுகளை எல்லாம் அதிமுக ஏற்றுக் கொள்கிறது போல! "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்கிற அண்ணாவின் கூற்றைப் பற்றிக் கவலைப்படாமல் இந்துத்துவத்தில் முற்றிலுமாக அதிமுக கரைந்துவிட்டது.
தமிழ்நாட்டு மக்களிடம் பன்னெடுங்காலமாக நிலவி வரும் சமய நல்லிணக்கத்தையும் ஒற்றுமையையும் குலைக்க வேண்டும் எனும் சதி நோக்கத்தோடு பாஜகவும் இந்து முன்னணியும் நடத்திய முருகன் மாநாடு, பாஜக என்ற பாசிச எதிரிகளை மட்டுமல்ல, அடிமை அதிமுக துரோகிகளையும் அடையாளம் காட்டியிருக்கிறது.
இந்தியாவிலேயே பாஜகவின் மதவெறி அரசியலுக்கு இடம் தராத ஒரே மண் தமிழ்நாடு. இங்கே எப்படியாவது நுழைந்துவிட வேண்டும் எனும் கலவர நோக்கத்தோடு, பல வித்தைகளை பாஜக காட்டினாலும் அவை படுதோல்வியையே சந்திக்கின்றன. அதற்குக் காரணம் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரால் தலைமையேற்று நடத்தப்பட்ட திராவிட இயக்கம்தான். அந்த இலட்சியப் பணியைத் தலைமையேற்று நடத்தி பாஜகவின் பாசிச அரசியலுக்கு எதிரான சிம்ம சொப்பனமாகத் திகழ்கிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்.
திராவிடத்தை அழிக்க முருகன் மாநாடு நடத்தும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்திருக்கிறது. பாஜகவின் பண்ணையடிமையாக மாறியிருக்கும் பழனிசாமியின் இந்தத் துரோகத்திற்கு 2026 தேர்தலோடு தமிழ்நாட்டு மக்கள் முற்றுப் புள்ளி வைப்பார்கள் என கூறினார்.
- பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
- பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரத்தில் நடந்த தி.மு.க. பொதுக்கூட்டத்தில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு பேசினார். அவர் கூறியதாவது:-
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பொய் மட்டுமே பேசி வருகிறார். இந்தியாவிலேயே மோடியை எதிர்த்து மோடியே அலறும் விதத்தில் சிறப்பான ஆட்சி நடைபெறுவது தமிழ்நாட்டில் தான்.
அனைவருக்கும் வழிகாட்டியாக தமிழக முதலமைச்சர் விளங்கி கொண்டிருக்கிறார். பெண்களுக்கான ஆட்சியாக தி.மு.க. ஆட்சி நடைபெற்று வருகிறது.
அமித்ஷா தமிழகம் வருவதால் பயப்படுவதாக சொல்கின்றனர். பாராளுமன்ற தேர்தலின்போது, மோடி தமிழகத்திற்கு 8 முறை வந்தார். ஒன்றும் செய்யமுடியவில்லை.
அமித்ஷா வந்து என்ன செய்யப்போகிறார்? கடந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடைந்ததை போன்று வருகிற சட்டசபை தேர்தலிலும் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி அடையும். அதற்கான மக்கள் பணிகளில் தீவிரம் காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
- பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார்.
சென்னை:
தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
* தமிழகத்தில் சிறப்பாக நடக்கும் தி.மு.க. ஆட்சியை பொறுத்துக்கொள்ள முடியாமல் கேவலமாக எடப்பாடி பழனிசாமி அறிக்கை விடுகிறார்.
* தொகுதி மறுவரையறை விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமியின் அறிக்கை கேலிக்கூத்தானது.
* பா.ஜ.க.வின் ஊதுகுழலாக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க. சொல்ல வேண்டிய பதிலை எல்லாம் எடப்பாடி பழனிசாமி கூறி கொண்டிருக்கிறார்.
* பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரும் முன்னர் ஒரு மாதிரி பேசினார். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்த பின்னர் வேறு மாதிரி பேசுகிறார் என்றார்.
இதனிடையே, அமித்ஷாவின் தமிழக வருகை குறித்த கேள்விக்கு, மோடி 8 முறை வந்தும் ஒன்றும் செய்யமுடியவில்லை, ஷா என்ன செய்ய முடியும்? என்று கூறினார்.






