என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இளைஞர் கொலை"

    • த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு.
    • ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் பகுதியில் போலீசாரால் அஜித்குமார் அடித்தக் கொல்லப்பட்ட சம்பவத்தை கண்டித்து தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளது.

    அதன்படி, போலீசார் தாக்குதலில் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து வரும் 12ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த தவெக திட்டமிட்டுள்ளது.

    முன்னதாக, காவலாளி அஜித்குமார் கொலை தொடர்பாக ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி அளிக்க உத்தரவிடக்கோரி த.வெ.க. சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. இம்மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    ஆனால், த.வெ.க. தாக்கல் செய்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

    மேலும், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவை அவசர வழக்காக விசாரிக்க என்ன அவசரம் எனவும் நீதிபதி வேல்முருகன் கேள்வி எழுப்பினார்.

    ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கோரிய மனு எண்ணிடப்பட்டு வந்தால் திங்கட்கிழமை விசாரிக்கப்படும். மேலும் ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்குமாறு நீதிபதி அறிவுறுத்தி இருந்தார்.

    6ம் தேதி (நாளை) ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து வரும் 12ம் தேதி சென்னை சிவானந்தா சாலையில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்.
    • நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார்.

    சாத்தான் வேதம் ஓதுவது போல, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம், 'உங்களுக்கு நீதி கிடைக்கும் வரை, அதிமுக துணை நிற்கும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசி இருக்கிறார் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவத:-

    திருப்புவனம் கொடூரம் பற்றிய தகவல் வந்ததுமே, குற்றம்சாட்டப்பட்ட 6 காவலர்கள் உடனடியாகச் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்; விரைந்து கைதும் செய்யப்பட்டனர்.

    பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் அவர்கள், தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியதோடு, இந்தச் சம்பவத்திற்குக் காரணமானவர்கள் மீது, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, நியாயம் கிடைத்திட வழிவகை செய்யப்படும் என உறுதியளித்துள்ளார். வழக்கும் உடனடியாக சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டுள்ளது.

    அதுமட்டுமின்றி, திருப்புவனம் இளைஞர் அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமாருக்கு அரசுப் பணி வழங்கியதோடு மட்டுமின்றி அவர்களின் கோரிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    சம்பவம் நடைபெற்ற இரண்டே நாட்களில் சட்ட ரீதியான இத்தனை நடவடிக்கைகள் எடுப்பதும் தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் நிகழாதவை; இன்று அதை நிறைவேற்றிக் காட்டியிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

    உங்கள் இருண்டகால ஆட்சியில் நடைபெற்ற, சாத்தான்குளம் சம்பவத்தில் ஜெயராஜ் - பென்னீக்ஸ் இருவருமே உடல்நலக் குறைவால் இறந்தார்கள் என்றும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் எனவும் ஆணவத்தோடும், அலட்சிய மனப்பான்மையோடும் பேசியவர் தானே நீங்கள்? அப்போது நீதி எங்கே போனது? கூவத்தூருக்கா? கொஞ்சமேனும் உங்களுக்கு மனசாட்சி இல்லையா?

    உங்களின் கண்துடைப்பு நாடகங்களை யாரும் நம்பமாட்டார்கள்; இனியாவது நிறுத்திக் கொள்ளலாம்; நீதியை நிலைநாட்ட முதலமைச்சர் இருக்கிறார்!

    இவ்வாறு அவர் கூறினார்.

    • சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.
    • அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    சிவகங்கை மாவட்டம், திருபுவனம் அருகேயுள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக தற்காலிகமாகப் பணியாற்றி வந்த தம்பி அஜித், பக்தர் ஒருவரின் தங்கநகையைத் திருடிவிட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், திருபுவனம் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் மரணமடைந்துள்ளது பெரும் அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அளிக்கிறது.

    திருபுவனம் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதால் நிகழ்ந்துள்ள இப்படுகொலை வன்மையான கண்டனத்துக்குரியது.

    விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாலேயே தம்பி அஜித் உயிரிழந்ததாகக் கூறி, படுகொலைக்கு நீதி வேண்டி அவருடைய உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், திருபுவனம் காவல்நிலையத்தில் பணியாற்றிய ஆறு தனிப்படை காவலர்களை சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காளிப்பாளர் பணியிடை நீக்கம் செய்துள்ளார்.

    காவல்துறை விசாரணையில் நடைபெற்ற படுகொலைக்கு பணியிடை நீக்கம் செய்வது மட்டும்தான் தண்டனையா? பணிநீக்கம் மட்டுமே படுகொலை செய்யப்பட்ட அஜித் மரணத்திற்கான நீதியா? பாதிக்கப்பட்ட அவர் குடும்பத்திற்கான துயர்துடைப்பா?

    திருட்டு புகாருக்காக தம்பி அஜித் அவர்களைக் கடுமையாகத் தாக்கி விசாரித்த தமிழ்நாடு காவல்துறை, தம்பி அஜித் அவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்கு பதியாதது ஏன்? அவர்களைக் கைது செய்து உரிய விசாரணை நடத்தாதது ஏன்? திமுக ஆட்சியில் பாமர மக்களுக்கு ஒரு நீதி? அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறு நீதியா? இதுதான் திராவிட மாடல் கட்டிக்காக்கும் சமூக நீதியா?

    திமுக ஆட்சியில் காவல்துறை விசாரணையின்போது குரலற்ற எளிய மக்கள் கொல்லப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவது கொடுங்கோன்மையின் உச்சமாகும். கடந்த 4 ஆண்டுகளில் 30க்கும் மேற்பட்ட காவல்துறை விசாரணை மரணங்கள் நடைபெற்றுள்ள நிலையில் அம்மரணங்களுக்கு உரிய நீதி இதுவரை கிடைத்தப்பாடில்லை.

    சமத்துவம், சமூகநீதி, திராவிட மாடல் என்றெல்லாம் கூறிவிட்டு, அடிப்படை மனித உரிமையைக் கூடக் காத்திட முடியாத அரசாக திமுக அரசு விளங்குவது வெட்கக்கேடானது.

    தமிழ்நாடு முதலமைச்சர் ஐயா ஸ்டாலின் அவர்கள் காவல் நிலைய மரணங்களைத் தடுக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுபோல் வெளியிட்ட அறிவிப்புகள் யாவும், வழக்கம்போல் வெற்று விளம்பர அரசியல் நாடகம் மட்டும்தான் என்பதை, தம்பி அஜித் அவர்களின் படுகொலை மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது.

    ஆகவே, தமிழ்நாடு அரசு சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தைச் சேர்ந்த தம்பி அஜித்தை கடுமையாகத் தாக்கி அவரது மரணத்திற்கு காரணமான திருபுவனம் காவலர்கள் மீது உடனடியாகக் கொலை வழக்கு பதிவதோடு, குற்றப்புலனாய்வுத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, எவ்வித அதிகாரக் குறுக்கீடுமற்ற நியாயமான நீதி விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்து, அவரது உயிரிழப்புக்குக் காரணமான காவலர்கள் அனைவருக்கும் சட்டப்படி கடும் தண்டனைப் பெற்றுத்தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

    அதோடு, தம்பி அஜித் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், உரிய துயர்துடைப்பு நிதியும் வழங்க வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளார்.
    • ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக சிறுவர்கள் தெரிவித்தனர்.

    அதிக லைக்குகள் பெற தரமான ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்ட 2 சிறுவர்கள் ஒரு இளைஞரை கொலை செய்து அவரின் ஐபோனை திருடிய சம்பவம் உத்தரபிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    பெங்களூருவில் வசித்து வரும் ஷதாப் (19) என்ற இளைஞர் தனது தாய் மாமாவின் திருமணத்திற்காக உத்தரபிரதேசத்தில் உள்ள தனது சொந்த கிராமத்திற்கு சென்றுள்ளார். ஆனால் ஜூன் 21 ஆம் தேதி ஷதாப் காணாமலே போயுள்ளார்.

    அவரது உடல் கிராமத்திற்கு வெளியே உள்ள ஒரு கொய்யா பழத்தோட்டத்தில் உள்ள ஒரு பாழடைந்த கிணற்றுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. ஷாதாப்பின் கழுத்து கத்தியால் வெட்டப்பட்டு, அவரது தலையில் செங்கல்லால் தாக்கப்பட்டிருந்தது.

    இந்த கொலை வழக்கை விசாரித்த போலீசார் 4 மற்றும் 16 வயதுடைய இரண்டு சிறார்களைக் கைது செய்தனர். விசாரணையில் 2 சிறார்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

    சிறந்த ரீல்ஸ் வீடியோக்களை உருவாக்க உயர்தர மொபைல் போன் தேவை என்பதால் ஷாதாப்பை கொன்று அவரது ஐபோனை திருடியதாக அவர்கள் தெரிவித்தனர்.

    ஷாதாப்பின் ஐபோன், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் செங்கல் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    • திருச்சி மாவட்டம் தா.பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.
    • கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.

    திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள தா.பேட்டை சேந்தமங்கலம் அம்பாய் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவரது மனைவி செல்வி. இந்த தம்பதியரின் மகன் கோபிநாத் (வயது 26). டிப்ளமோ பட்டதாரி.

    தாயும் மகனும் வேலம்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் வசித்து வந்தனர். நேற்று இரவு வழக்கம்போல் கோபிநாத் சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றார்.

    வீட்டில் புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டின் முன்பு திறந்த வெளியில் கட்டில் போட்டு தூங்கி உள்ளார். தாய் வீட்டுக்குள் படுத்து உறங்கினார்.

    நள்ளிரவு அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கோபிநாத் உடலின் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்து கொளுத்தினர். இதில் தீ உடல் முழுவதும் பரவி, உடல் கருகி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக அவர் உயிரிழந்தார்.

    இது எதுவும் தெரியாமல் அவரது தாயார் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்ததாக கூறப்பட்டது. இன்று காலை எழுந்து பார்த்தபோது, மகன் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடப்பது கண்டு அலறி துடித்துள்ளார்.

    பின்னர் இது குறித்து தாப்பேட்டை போலீசுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்த துணை போலீஸ் அதிகாரி சுரேஷ்குமார், தா.பேட்டை இன்ஸ்பெக்டர் அனந்த பத்மநாபன், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் முத்துச்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடம் விரைந்து சென்றனர்.

    பின்னர், மோப்ப நாய் உதவியுடன் விசாரணை தொடங்கப்பட்டது. அது சம்பவ இடத்தை மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் சென்று நின்றுவிட்டது. கொலையாளிகள் யார்? கொலைக்கான காரணம் என்ன? எதுவும் உடனடியாக தெரியவில்லை.

    இது குறித்து தாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில், இந்த கொலை சம்பவத்தில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் கோபிநாத்தின் தாய் செல்வி கைது செய்துள்ளனர்.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியபோது, தாயின் எதிர்ப்பையும் மீறி சொத்தை விற்பதற்காக கோபிநாத் ரூ.9 லட்சம் முன்பணம் வாங்கியுள்ளார்.

    பிறகு, தாயிடம் பணத்தை தராமல் தானே வைத்துக் கொண்டு குடிபோதையில் கோபிநாத் திளைத்து வந்துள்ளார்.

    இதனால், ஆத்திரமடைந்த தாய் செல்வி கோடாலியால் கழுத்தை வெட்டி பின்னர் டீசல் ஊற்றி எரித்துக் கொலை செய்துள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

    • நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம் சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சாலியர் தெருவில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையில் குருநாதன் கோவில் விலக்கு பகுதி உள்ளது. நேற்று இரவு இந்த பகுதியில் கண்டியப்பேரி விலக்கு அருகே சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி கமிஷனர் அஜிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள டாஸ்மாக் கடையில் சென்று விசாரணை நடத்தியபோது, 3 வாலிபர்கள் போதையில் சண்டையிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதனிடையே நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் குருநாதன் கோவில் அருகே சுடுகாட்டு பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, தலைமையிடத்து துணை கமிஷனர் வினோத் சாந்தாரம் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவர் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவித்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுடலை என்ற சிவா(21) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் வாலிபரை கொன்று புதைத்த இடத்தை காட்டினார்.

    உடனே போலீசார் அந்த இடத்தை தோண்டி பார்த்த போது டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகனான ஆறுமுகம்(வயது 20) என்ற அல்லு ஆறுமுகம் என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து சிவாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம், 13 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியதாகவும், இவர்களது காதல் சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட 17 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தனது தங்கையுடன் பழகுவதை விட்டுவிடுமாறு தனது நண்பரான ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சிறுமி வேறு ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் தனது தங்கையுடன் பழகிய ஆறுமுகத்தை தீர்த்துக்கட்டுவதற்கு சிறுவன் திட்டம் தீட்டியுள்ளான். அதன் அடிப்படையில் தனது நண்பர்களான சிவா மற்றும் 2 சிறுவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான். அவர்களும் சிறுவனுடன் சேர்ந்து ஆறுமுகத்தை தீர்த்துக்கட்ட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஆறுமுகத்தை நேற்று டவுன் குருநாதன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்துள்ளனர். அங்கு மதுவாங்கி கொண்டு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து 5 பேரும் மது குடித்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் ஆறுமுகம் மதுபோதையின் உச்சத்தை அடைந்துள்ளார். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 பேர் கும்பல் அவரை கத்தியால் கழுத்து அறுத்துக்கொலை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு குழியை தோண்டி அங்கேயே புதைத்து வைத்துவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவா மற்றும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். அதேநேரம் கொலையாளிகளை இரவோடு இரவாக கைது செய்த போலீசாரை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி பாராட்டினார்.

    • போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.
    • போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே போதை ஊசி போட்டுக்கொள்ள மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.

    ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன.

    போதைப்பொருட்கள் இளைஞர்களை எவ்வளவு கொடூரமான வகையில் சீரழிக்கின்றன என்பதற்கு இந்த செய்தியே சாட்சி.

    விளம்பர ஷூட்டிங்கில் வந்து "போதையின் பாதையில் யாரும் செல்ல வேண்டாம்" என்று வசனம் பேசினால் மட்டும் போதாது முதல்வரே, போதைப்பொருள் புழங்குவதை ஒழிக்க வேண்டும்.

    போதைப்பொருள் புழக்கத்தை ஒழிப்பதே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கான முதல் படி என்பதை இந்த ஸ்டாலின் மாடல் அரசு உணர வேண்டும்.

    இளைஞர் கொலையில் தொடர்புள்ளோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தனர். 19 வயதான மகன் அழகர்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கட்டிட வேலை உட்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது கதவை திறந்து தம்மை அழைத்தது யார் என்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அழகர்சாமியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.

    இதில் நிலைகுலைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.அர்விந்த் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் அழகர்சாமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    வேலைக்கு அழைப்பது போல் அழைத்து வீட்டின் வாசலிலேயே வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • பட்டதாரி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
    • உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையத்தில் கடந்த மார்ச் மாதம் 11-ந் தேதி பட்டதாரி இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீசார் 17 வயது சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்ய கோரியும், வழக்கை சி.பி.சி.ஐ.டி.- க்கு மாற்றக்கோரியும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். இதனிடையே வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்டகைக்கு பயன்படக்கூடிய டிராக்டர்களுக்கும், பள்ளி வாகனத்திற்கு தீ வைப்பு, வீடுகளுக்கு பெட்ரோல் மற்றும் மண்ணெண்னை குண்டு வீசியது, உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன.

    கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருடைய வெல்லம் தயாரிக்கும் ஆலைக் கொட்டகையில் பணிபுரியும் வட மாநில இளைஞர்கள் 4 பேர் மீது மர்ம கும்பல் பெட்ரோலை ஊற்றி தீ வைத்ததில் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த ராகேஸ் (19) என்ற இளைஞர் உயிரிழந்தார். 3 பேர் காயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து ஆலைக் கொட்டகை அருகே முத்துசாமியின் மருமகன் தோட்டத்தில் இருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழைகள் வெட்டி சாய்க்கப்பட்டது.

    இப்பகுதியில் நடந்துவரும் தொடர் அசம்பாவித சம்பவங்கள் காரணமாக பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பும், தீவிர இரவு நேர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இளம்பெண் கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டு, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    4 பேரிடம் தீவிர விசாரணை

    இந்த நிலையில் போலீசார் சந்தேகத்தின் பேரில், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களை பிடித்து இரவோடு இரவாக நாமக்கல்லில் உள்ள விசாரணை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என தெரிகிறது.

    • காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
    • இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்தில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர்.
    • பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    வேளச்சேரி:

    சென்னையை அடுத்த பள்ளிக்கரணை அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் பிரவீன். 26 வயது வாலிபரான இவர் ஜல்லடியான்பேட்டை பகுதியை சேர்ந்த ஷர்மி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்தார். ஷர்மியும், பிரவீனை விரும்பினார்.

    இருவரும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள். இதனால் இளம்பெண்ணின் காதலுக்கு அவரது பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். ஷர்மியின் அண்ணன் தினேஷ், பிரவீனின் சாதியை சுட்டிக்காட்டி, நீ அவனை திருமணம் செய்யக்கூடாது என்று தங்கையை எச்சரித்து உள்ளார்.

    வாலிபர் பிரவீனை மறந்து விடு, உனக்கு நமது சாதியிலேயே நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று வீட்டில் கூறி வந்துள்ளனர். ஆனால் ஷர்மி இதனை ஏற்க மறுத்துள்ளார்.

    இருப்பினும் மனதை மாற்றி எப்படியாவது பிரவீனிடம் இருந்து ஷர்மியை பிரித்துவிட வேண்டும் என்பதில் அண்ணன் தினேசும் அவரது குடும்பத்தினரும் தீவிரமாக செயல்பட்டு வந்துள்ளனர்.

    ஆனால் ஷர்மியோ தனது பெற்றோரின் பேச்சை கேட்காமல் பிரவீனை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்து உள்ளனர். இதையடுத்து கடந்த 4 மாதங்களுக்கு முன்பு பிரவீன், ஷர்மியை அழைத்துச் சென்று காதல் திருமணம் செய்து கொண்டார்.

    ஷர்மியின் குடும்பத்தினருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்து முடிந்து உள்ளது. இதனால் பிரவீன், ஷர்மியின் அண்ணன் தினேஷ் கடும் கோபத்தில் இருந்து வந்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது நண்பர்களிடம் சொல்லி, தினேஷ் வருத்தப்பட்டு உள்ளார். எனது தங்கையை கூட்டிச் சென்று திருமணம் செய்து கொண்டதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என்று கூறி அவர் ஆதங்கப்பட்டு வந்துள்ளார்.

    இதை தொடர்ந்து பிரவீனை கொலை செய்ய தினேஷ் திட்டம் போட்டார். கடந்த 4 மாதங்களாக பிரவீன் எங்கு செல்கிறார்? என்பதை தினேசும் அவரது நண்பர்களும நோட்டமிட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு பிரவீன் பள்ளிக்கரணையில் உள்ள டாஸ்மாக் கடைக்கு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த தினேசும் அவரது நண்பர்கள் 3 பேரும் கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பிரவீனை சுற்றி வளைத்தனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பிரவீன் அவர்களின் பிடியில் இருந்து தப்ப முயன்றார். ஆனால் அதற்குள் 4 பேரும் நவீனை சரமாரியாக வெட்டினர். இதில் தலை, முகம் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக்காயம் விழுந்தது. அலறி துடித்தபடியே பிரவீன் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்.

    அக்கம்பக்கத்தில் இருந்த வர்கள் ஓடிச்சென்று பிரவீனை மீட்டு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரி யில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பிரவீன் உயிரிழந்தார்.

    நேற்று இரவு 9 மணி அளவில் பொதுமக்கள் நடமாட்டம் இருந்த நேரத்திலேயே நடைபெற்ற இந்த கொலை சம்பவத்தை நேரில் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். பள்ளிக்கரணை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பிரவீனை கொலை செய்து விட்டு தப்பிச்சென்ற தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

    பள்ளிக்கரணையில் நடந்துள்ள இந்த ஆணவக்கொலை அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொலை செய்யப்பட்ட வாலிபரும், கொலை செய்த வாலிபர்களும் வேறு வேறு சாதியை சேர்ந்தவர்கள் என்பதால் அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு போலீஸ் பாது காப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது.

    குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரியிலும் போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.

    • மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார்.
    • கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது.

    கிருஷ்ணகிரி அருகே மகராஜகடை பகுதியில் வேன் டிரைவர் கார்த்திக் எரித்துக்கொலை செய்யப்பட்டார். எரிந்த நிலையில் அவரது உடலை போலீசார் மீட்டனர்.

    கடந்த ஞாயிறன்று கார்த்திக் என்ற இளைஞர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட விவகாரத்தில் தினேஷ், அவரது காதலி புவனேஸ்வரி கைது செய்யப்பட்டுள்ளனர்.

    இதுதொடர்பாக தினேஷ்குமார் அளித்த வாக்குமூலத்தில், தனது காதலிக்கு தொந்தரவு கொடுத்ததால் கார்த்திக்கை கொன்றேன் என்று தெரிவித்துள்ளார்.

    காத்திக்குடனான காதலை முறித்து கொண்டு தினேஷ்குமாரை புவனா காதலித்து வந்த நிலையில் மீண்டும் தொந்தரவு செய்ததால் கொலை செய்துள்ளார்.

    கார்த்திக்கை தனியாக வருமாறு அழைத்து இரும்பு ராடால் அடித்து கொன்றது விசாரணையில் தெரிந்தது. கொலை செய்த பின்னர் கார்த்திக் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து மகராஜகடை பகுதியில் வீசி சென்றதாக அவர் தெரிவித்தார்.

    ×