என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு- 4 பேர் கைது
    X

    நெல்லையில் இளைஞர் கொன்று புதைப்பு- 4 பேர் கைது

    • நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம் சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சாலியர் தெருவில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையில் குருநாதன் கோவில் விலக்கு பகுதி உள்ளது. நேற்று இரவு இந்த பகுதியில் கண்டியப்பேரி விலக்கு அருகே சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி கமிஷனர் அஜிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள டாஸ்மாக் கடையில் சென்று விசாரணை நடத்தியபோது, 3 வாலிபர்கள் போதையில் சண்டையிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதனிடையே நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் குருநாதன் கோவில் அருகே சுடுகாட்டு பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, தலைமையிடத்து துணை கமிஷனர் வினோத் சாந்தாரம் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவர் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவித்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுடலை என்ற சிவா(21) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் வாலிபரை கொன்று புதைத்த இடத்தை காட்டினார்.

    உடனே போலீசார் அந்த இடத்தை தோண்டி பார்த்த போது டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகனான ஆறுமுகம்(வயது 20) என்ற அல்லு ஆறுமுகம் என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து சிவாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம், 13 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியதாகவும், இவர்களது காதல் சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட 17 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தனது தங்கையுடன் பழகுவதை விட்டுவிடுமாறு தனது நண்பரான ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சிறுமி வேறு ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் தனது தங்கையுடன் பழகிய ஆறுமுகத்தை தீர்த்துக்கட்டுவதற்கு சிறுவன் திட்டம் தீட்டியுள்ளான். அதன் அடிப்படையில் தனது நண்பர்களான சிவா மற்றும் 2 சிறுவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான். அவர்களும் சிறுவனுடன் சேர்ந்து ஆறுமுகத்தை தீர்த்துக்கட்ட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஆறுமுகத்தை நேற்று டவுன் குருநாதன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்துள்ளனர். அங்கு மதுவாங்கி கொண்டு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து 5 பேரும் மது குடித்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் ஆறுமுகம் மதுபோதையின் உச்சத்தை அடைந்துள்ளார். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 பேர் கும்பல் அவரை கத்தியால் கழுத்து அறுத்துக்கொலை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு குழியை தோண்டி அங்கேயே புதைத்து வைத்துவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவா மற்றும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். அதேநேரம் கொலையாளிகளை இரவோடு இரவாக கைது செய்த போலீசாரை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி பாராட்டினார்.

    Next Story
    ×