என் மலர்
நீங்கள் தேடியது "பீகார் வாலிபர் கொலை"
- கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள்.
- ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது.
சென்னை:
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து பீகார் மாநிலத்தைச் சேர்ந்த வாலிபர் கவுரவ்குமார், அவரது மனைவி முனிதா குமாரி மற்றும் 2 வயது ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவம் கடந்த 26-ந்தேதி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியாக பணிபுரிந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேர் சேர்ந்து இந்த கொடூர கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது.
காவலாளி சிக்கந்தரிடம் வேலை கேட்டு அடைக்கலமான நிலையில் கவுரவ் குமாரின் மனைவி முனிதா குமாரி மீது சிக்கந்தருக்கு ஆசை ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து மது போதையில் சிக்கந்தர் தனது நண்பர்களோடு சேர்ந்து முனிதா குமாரியை கற்பழிக்க முயற்சி செய்துள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்து சண்டை போட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட மோதலில் தான் சிக்கந்தரும், அவரது கூட்டாளிகளும் சேர்ந்து கவுரவ் குமார், முனிதா குமாரி, 2 வயது ஆண் குழந்தை ஆகிய 3 பேரையும் கொடூரமாக கொன்று தனித்தனியாக மூட்டை கட்டி வீசியது தெரிய வந்தது.
முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் வீசிய கொலையாளிகள் கவுரவ் குமாரின் உடலை நடுரோட்டில் போட்டுச் சென்றதால் இந்த கொலை சம்பவம் உடனடியாக வெளியில் தெரியவந்தது.
இதை தொடர்ந்து குழந்தையின் உடலை அதே பகுதியில் கூவத்தில் மீட்ட போலீசார் கடந்த 4 நாட்களாக பீகார் வாலிபரின் மனைவி முனிதா குமாரியின் உடலை பெருங்குடி குப்பை கிடங்கில் தேடி வந்தனர்.
கடந்த 25-ந்தேதி அன்று கொலை நடைபெற்ற நிலையில் 26-ந்தேதி கொலையாளிகள் சிக்கினார்கள். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தான் முனிதா குமாரியும், குழந்தையும் கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
அவர்கள் அளித்த தகவலின் பேரிலேயே கடந்த 4 நாட்களாக பெருங்குடி குப்பை கிடங்கில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
பெருங்குடி குப்பை கிடங்கில் தெரு நாய்கள் புகுந்து உடலை தூக்கி சென்று விடக்கூடாது என்பதற்காக இரவு, பகலாகவும் அந்த பகுதியில் போலீசார் கண்காணித்தனர்.
ஜே.சி.பி. எந்திரங்கள் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு பெண்ணின் உடலை தேடும் பணி நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பீகார் வாலிபரின் மனைவியான முனிதா குமாரியின் உடல் இன்று மீட்கப்பட்டுள்ளது.
பீகார் வாலிபர் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தையின் உடல் ஏற்கனவே ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ள நிலையில் முனிதா குமாரின் உடலும் அங்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. 3 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதற்காக பீகார் வாலிபர் மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினருக்கு காவல்துறையினர் முறைப்படி தகவல் தெரிவித்துள்ளனர். 3 பேரின் உடல்களும் ஒரே நேரத்தில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் நாளை ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
கொலையுண்ட முனிதா குமாரி காவலாளி சிக்கந்தர் மற்றும் அவரது கூட்டாளிகளால் கற்பழிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதே நேரத்தில் கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. முனிதா குமாரியின் பிரேத பரிசோதனை முடிவில் தான் அவர் கற்பழிக்கப்பட்டாரா? இல்லையா? என்பது தெரிய வரும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 5 பேருக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர்களில் 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 2 பேரையும் தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது.
பீகார் வாலிபரின் மனைவி உடல் கிடைத்ததை தொடர்ந்து இந்த வழக்கில் உரிய முறையில் துப்பு துலக்கி கொலையாளிகளுக்கு உச்சபட்ச தண்டனையை வாங்கி கொடுப்பதற்கு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
பெரும் பரபரப்பு ஏற்படுத்திய இந்த கொலை வழக்கில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டு உள்ளார். இதன்படி வழக்கு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.
3 பேர் கொலை வழக்கில் வீடியோ பதிவு காட்சிகள் முக்கிய ஆதாரங்களாக உள்ளன. இதுபோன்று மேலும் பல தகவல்களை சேகரித்து கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்று விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரே குடும்பத்தில் 3 பேரை கொன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு மாநகர போலீசார் இந்த வழக்கு விசாரணையை எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் முடிப்பதற்கு முடிவு செய்து இருக்கிறார்கள்.
இது தொடர்பாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, இன்னும் 3 மாதத்தில் விசாரணையை முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி தருவோம் என்றார்.
- இந்தக் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக புலம்பெயர் தொழிலாளர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
- தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர்.
சென்னை தரமணியில் கௌரவ் குமார் என்ற பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி, குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த கொலை விவகாரம் தொடர்பாக சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட பீகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பரவி வரும் பொய் செய்திகளை நம்பவேண்டாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழக தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்றும், அவர்கள் மீதான வெறுப்புணர்வே இந்தக் கொலைக்குக் காரணம் என்றும் ஒரு சில சமூக வலைதளப் பதிவுகள் தவறான பிம்பத்தை உருவாக்கி வருகின்றன. இது மாநிலத்தின் அமைதியைக் குலைக்கும் நோக்கில் பரப்பப்படுகிறது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், கௌரவ் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரைக் கொலை செய்தது தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கொலை வழக்கில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சக புலம்பெயர் தொழிலாளர்களான சிக்கந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாக்கூர் மற்றும் விகாஸ் ஆகியோரே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குள் இருந்த தனிப்பட்ட விரோதம் இந்தக் கொலைக்குக் காரணமாக இருந்துள்ளது.
தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதுகாப்பாகவே உள்ளனர். தனிப்பட்ட நபர்களுக்கு இடையே நடந்த மோதலை, மாநிலத்தின் பாதுகாப்போடு தொடர்புபடுத்திப் பேசுவது முற்றிலும் தவறானது.
சமூக நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் வெறுப்புணர்வைத் தூண்டுவது சட்டப்படி குற்றமாகும்.
எந்தவொரு செய்தியையும் பகிரும் முன் அதன் உண்மைத் தன்மையை ஆராயுங்கள். பொய் செய்திகளைத் தவிப்போம்! வெறுப்புணர்வை வேரறுப்போம்! என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார்.
- 2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்.
சென்னை தரமணியில் பீகார் மாநில இளைஞர், அவரது மனைவி, குழந்தை கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை தரமணி பாலிடெக்னிக் கல்லூரி பகுதியில் பீகார் மாநில இளைஞர் கவுரவ் குமார் , அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை ஆகிய மூவரும் கொடூரமாக கொல்லப்பட்டுள்ள சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
மதுபோதையில் வெறிபிடித்த கும்பல் ஒன்று கவுரின் மனைவியை வன்கொடுமை செய்து கொன்றிருப்பதும், அதை தடுக்க வந்த கணவரை கொலை செய்திருப்பதும், அதனைத் தொடர்ந்து அவர்களது
2 வயது குழந்தையை தரையில் அடித்து கொன்றிருப்பதும் கொடூரத்தின் உச்சம்,
சில நாட்களுக்கு முன்பு தான் திருத்தணியில் மகாராஷ்டிரா மாநில இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் இந்திய அளவில் பேரலையை ஏற்படுத்திய நிலையில் தற்போது தமிழ்நாட்டில் ஒரு வடமாநில குடும்பம் மொத்தமாக கொல்லப்பட்டிருப்பது,"வந்தாரை வாழ வைக்கும்" தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நாடு முழுவதும் சந்தி சிரிக்கிறது என்பதை பட்டவர்த்தனமாக காட்டுகிறது.
மனித குலத்திற்கே இழுக்கு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றுள்ள இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டவர்களை வன்மையாக கண்டிப்பதுடன், யாருக்கும் பாதுகாப்பற்ற, மோசமான ஆட்சியை நடத்தி வரும் விடியா திமுக அரசிற்கும் எனது கடும் கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன், தமிழ்நாட்டில் பெண்களுக்கும் வெளி மாநிலத்தவருக்கும் பாதுகாப்பு கேடயமாக திமுக அரசு திகழ்வதை போல் வாய்ச்சவடால் பேசும் பொம்மை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
இந்த கொலைகளுக்கு என்ன பதில் சொல்ல போகிறார் பொம்மை முதல்வர்?.
இனியும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது.
- மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
சென்னை அடையார், இந்திரா நகர் 1-வது அவென்யூ சாலையில் கடந்த 26-ந்தேதி காலை ஒரு மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்து வந்து கொண்டிருந்தது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே அடையார் போலீசுக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சாக்கு பையை பிரித்து பார்த்தபோது வடமாநில வாலிபர் ஒருவர் தலை மற்றும் முகத்தில் வெட்டு காயங்களுடன் இறந்து கிடப்பது தெரியவந்தது. அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தனிப்படை போலீசார் கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில் 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையை எடுத்து வந்து வீசி விட்டு செல்வது பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த வாகனத்தின் பதிவு எண்ணை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.
கொலை செய்யப்பட்ட வாலிபர் பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் எண்களை தொடர்பு கொண்டபோது அதில் ஒரு எண் அடையாரில் உள்ள தனியார் செக்யூரிட்டி அலுவலகத்தின் எண் என்பது தெரிய வந்தது. போலீசார் அங்கு நேரில் சென்று விசாரணை நடத்தியதில் கொலையுண்ட வாலிபர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் (24) என்பதும் இவர் மனைவி முனிதா குமாரியுடன் வந்து காவலாளி வேலை கேட்டதும் அதற்கு செக்கியூரிட்டி நிறுவனம் தற்போது வேலை காலியில்லை.
தேவைப்பட்டால் அழைப்பதாக கூறி அனுப்பி வைத்ததும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் கவுரவ்குமார் தரமணியில் உள்ள பாலிடெக்னிக்கில் காவலாளியாக வேலைக்கு சேர்ந்து தன் மனைவியுடன் அங்கேயே தங்கியிருந்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பாக கவுரவ் குமாரின் நெருங்கிய நண்பர் உள்பட 5 பேரை பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டதில் மனைவி மற்றும் குழந்தையையும் கொன்றுவிட்டதாக அதிர்ச்சி தகவலை தெரிவித்து உள்ளார்.
அடையாறு கெனால் ரோடு கூவம் ஆற்று ஓரம் உள்பட கூவம் முகத்துவாரம் பகுதிகளில் தேடுதல் வேட்டையை போலீசார் தீவிரப்படுத்தினர்.
இந்நிலையில், இந்த கொலை விவகாரம் தொடர்பாக பீகாரை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி, சம்பந்தப்பட்ட சிகந்தர், நரேந்திரகுமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22).
கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கணவன்-மனைவி இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு போய் வந்தனர்.
கணவன்-மனைவி இருவரும் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து பிறகு கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இவர்கள் ரெயிலில் பீகார் செல்லும் போது அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.
இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் ஆசை வார்த்தை கூறினார். “அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறினார்.
அவரின் பேச்சைகேட்டு ஆசையுடன் நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.
ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.
நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து “ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம்” என தனது சுய உருவத்தை காட்டத் தொடங்கினார்கள். அதற்கு நித்திஷ்குமார், “என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி பணம் பறிக்க முயற்சி செய்கிறீர்களே.. இது நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று கேட்டார்.
நித்திஷ்குமாருடன் ராகுல் தத்தா என்பவரும் வந்திருந்தார். அவரும் நவின்குமாரின் ஆள் என நித்திஷ்குமாருக்கு தெரியாமல் போனது. அவர்தான் நைசாக பேசி நித்திஷ்குமாரை கடத்தி வந்தார்.
பணம் தொடர்பாக அறையில் அடைத்து வைத்து நித்திஷ்குமாரை நவீன்குமாரும் அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் சேர்ந்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்.
இந்த நிலையில் ஈரோடு போன மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பயந்த நித்திஷ்குமாரின் தாயார் தன் மகனை காணவில்லை என்று திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து “உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.
அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர்.
வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை வடிந்திருப்பதை கண்ட போலீசார் உள்ளே அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும் அவரது மனைவி சசிகலாவும் வசமாக சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.
போலீசார் அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் கடத்தப்பட்ட நித்திஷ்குமாரின் தலை, கை, கால் என துண்டு துண்டாக உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த உடலை கைப்பற்றிய போலீசார் நவீன்குமாரையும் சசிகலாவையும் பிடித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.
கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போட துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.
ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தனபாண்டியன் டவுன் டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.






