என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode murder"

    • தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
    • அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.

    கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 



    • விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.
    • கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எதுவும் எடுக்கவில்லை. 82 கிராம் தங்க நகை மட்டுமே மீட்டு உள்ளோம்.

    ஈரோடு:

    ஈரோடு எஸ்.பி அலுவலகத்தில் இன்று ஐ.ஜி செந்தில்குமார் சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதானவர்கள் பற்றி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் ராமசாமி-பாக்கியம்மாள் கொலை செய்து நகைகள் கொள்ளை போன சம்பவம் குறித்து விசாரிக்க 12 தனிப்படை அமைத்து விசாரணை நடந்தது.

    பழங்குற்றவாளிகள், சி.சி.டி.வி போன்றவை கொண்டு விசாரணை நடத்தி வந்தோம். கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகியோர் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. கொலையுண்ட தம்பதியின் செல்போன், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள், மரக்கட்டை, கையுறை போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    ராமசாமி செல்போன் இவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொலை சம்பவம் நடந்த இடம், வருகை பதிவான கால் தடங்கலும், இவர்களின் கால் தடங்கலும் ஒத்துப் போய் உள்ளது. இவர்கள் கொள்ளையடித்த நகையை அரச்சலூர் பகுதியை சேர்ந்த நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரிடம் கொடுத்துள்ளார்.

    அவர் அதனை உருக்கி 82 கிராம் வைத்திருந்தார். அந்த நகையும் பறிமுதல் செய்துள்ளோம். இதையடுத்து ஞானசேகரையும் 4-வது நபராக கைது செய்துள்ளோம். மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் திருப்பூர் மாவட்டம் அவிநாசி பாளையம், சேமலை கவுண்டன் பாளையத்தில் வசித்து வந்த தெய்வ சிகாமணி (78), அவரது மனைவி அலமாத்தாள் (74) மற்றும் அவரது மகன் செந்தில்குமார் (44) ஆகியோரை இதே பாணியில் கொலை செய்து அவர்களிடமிருந்து 5 பவுன் நகையை கொள்ளையடித்ததையும் ஒத்துக்கொண்டனர்.

    மேலும் கொலையுண்டவர்களின் செல்போன் வைத்திருந்தனர். அதையும் பறிமுதல் செய்துள்ளோம். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் உள்ளது. மேலும் இவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு வழக்குகளில் தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அது குறித்த ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

    விசாரணை முடிவில் முழுமையான தகவல் வெளிவரும். இவர்கள் 2015ம் ஆண்டு திருட்டு வழக்கில் கைதாகி 9 மாதங்கள் சிறையிலிருந்தது தெரியவந்துள்ளது. ஆச்சியப்பன் தேங்காய் உரிப்பது போன்று தோட்ட வீடுகளை நோட்டமிட்டு அதில் தனியாக வசிக்கும் தம்பதிகளை தேர்ந்தெடுத்து கூட்டாளிகளுடன் சதி திட்டங்களில் ஈடுபட்டுள்ளார்.

    கைது செய்யப்பட்டவர்களிடம் பணம் எதுவும் எடுக்கவில்லை. 82 கிராம் தங்க நகை மட்டுமே மீட்டு உள்ளோம். கடந்த 28ம் தேதி இரவு 12 மணி அளவில் இவர்கள் மூவரும் ராமசாமி, பாக்கியம் ஆகியோரை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்துள்ளனர். கைதானவர்கள் மீது ஈரோடு, திருப்பூர், கோவை உள்பட பல்வேறு காவல் நிலையத்தில் 10-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

    தற்போது 4 பேரும் கைது செய்யப்பட்டு எழுமாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடை க்கப்பட்டுள்ளனர். வரும் 2-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் இருக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர்களிடம் மேலும் பல வழக்கு தொடர்பாக விசாரிக்க உள்ளதால் நீதிமன்ற அனுமதியுடன் இவர்களை காவலில் எடுத்து விசாரிக்க உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்த மேகரையான் தோட்டம் பகுதியில் தனியாக வசித்து வந்த ராமசாமி, பாக்கியம்மாள் தம்பதி கடந்த 1-ந்தேதி மர்ம கும்பலால் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி.செந்தில்குமார், டி.ஐ.ஜி சசிமோகன் ஆகியோர் மேற்பார்வையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் 12-க்கும் மேற்பட்ட தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    சிவகிரி, பெருந்துறை, சென்னிமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சிறப்பு குழுக்கள் சி.சி.டி.வி கேமரா பதிவுகள், செல்போன் தொடர்பு பதிவுகள், தோட்டங்களில் வேலை செய்யும் உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த கூலி ஆட்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    சந்தேக நபர்களின் நடமாட்டங்கள், கொலை, கொள்ளை மற்றும் திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு சிறை சென்று சமீபத்தில் வெளியில் வந்த நபர்கள், மாநிலம் முழுவதும் இது போன்று ஆதாய கொலைகளில் சம்மந்தப்பட்ட நபர்களின் விபரங்களை சேகரித்தனர்.

    கூகுள் மேப் முலம் தனியாக உள்ள பண்ணை வீடுகள் கண்டறியப்பட்டு நவீன முறையில் இரவு பகலாக கண்காணிக்கப்பட்டு வந்தது. சிவகிரியில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பதிவுகள் ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் ஒரு திருட்டு வழக்கில் தொடர்புடைய அரச்சலூரை சேர்ந்த பழங்குற்றவாளி ஆச்சியப்பன் (வயது 48) என்பவர் கொலை நடந்த அன்று அந்தப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றது பதிவாகி இருந்தது. இதனை அடுத்து ஆச்சியப்பனை சுற்றி வளைத்த தனிப்படை போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது முன்னுக்குப் பின் முரணாக பேசியதால் அவரை தனியாக விசாரணை நடத்தினர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன. சிவகிரி தம்பதி கொலையில் ஆச்சியப்பன் உள்பட 3 பேர் சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்தது. ஆச்சியப்பன் கொடுத்த தகவலின் பெயரில் அரச்சலூரை சேர்ந்த மாதேஸ்வரன் (53), ரமேஷ் (52) ஆகியோரை போலீசார் பிடித்தனர்.

    பின்னர் போலீசார் 3 பேரையும் கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். ஐ.ஜி. செந்தில்குமார், டி.ஐ.ஜி. சசிமோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா, தனிப்படை போலீசார் நேற்று ஒரு நாள் முழுவதும் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    தென்னை மரம் ஏறும் தொழிலாளிகளான இவர்கள் மூவர் மீதும் சென்னிமலை, வெள்ளோடு, அரச்சலூர், கொடுமுடி உட்பட போலீஸ் நிலையங்களில் 19-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. இவர்கள் தோட்டத்து வீட்டில் தனியாக இருக்கும் வயதான தம்பதிகளை குறி வைத்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர்.

    சம்பந்தப்பட்ட வீடுகளுக்கு சென்று முதலில் தேங்காய் பறிப்பது போல் நோட்டமிட்டு அவர்களிடம் பேசி வீட்டில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு தங்களது திட்டத்தை நிறைவேற்றியுள்ளனர். இதேபோன்று தான் சம்பவத்தன்று தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த ராமசாமி-பாக்கியம்மாள் ஆகியோரை மண்வெட்டியால் தாக்கி கொலை செய்துள்ளனர்.

    மேலும் சிறு கத்திகளை கொண்டு காது, கைகளை வெட்டி நகைகளை திருடி சென்றுள்ளனர். மேகரையான் தோட்டத்தில் மண்வெட்டி கத்திகளை வீசி சென்றதாக அவர்கள் தெரிவித்த தகவலின் பெயரில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அதனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கிடையே இந்த கொலை வழக்கில் 4-வது நபராக நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆச்சியப்பன், மாதேஸ்வரன், ரமேஷ் ஆகியோர் கொள்ளையடிக்கும் நகைகளை ஞானசேகரன் கடையில் விற்றது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை அடுத்து நகைக்கடை உரிமையாளரான ஞானசேகரனையும் போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 4 பேர் இன்று காலை ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து வரப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
    • தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பூர்:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர்.

    இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

    ஈரோடு கொலை சம்பவம் போன்று பல்லடம் சேமலைகவுண்டம்பாளையத்திலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தில் தந்தை,தாய், மகன் ஆகியோரை தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

    தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களை குறி வைத்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 44 போலீசார் அடங்கிய 22 குழுக்கள் தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் பி.ஏ.பி. கால்வாய் வழியாக கொள்ளையர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். தனியாக பாதுகாப்பற்ற முறையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    • கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
    • எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்.பி. சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராமசாமி, பாக்கியம் தம்பதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    நேற்று மதியம், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களுடன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில், எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

    கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் தனியாக வசித்து வருபவர்களை கண்காணித்து, உள்ளே புகுந்து அவர்களை கொலை செய்துவிட்டு பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவதுடன், அச்சமின்றி சுற்றி திரிவதால் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்று உயிரிழந்த தம்பதியின் உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர்.

    இந்த நிலையில் கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்தநிலையில் கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.

    • ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?
    • திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை.

    சென்னை:

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

    தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.

    அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?

    பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?

    திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டுமொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார். 

    • 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
    • சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?

    திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:

    1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.

    9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.

    29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.

    13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.

    14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.

    இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?

    தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.



    • கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
    • கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.

    மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.

    கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.

    இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசி மோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலி கொடி, 5 பவுன் வளையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.

    ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.

    இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி விவேகானந்தம் தலைமையில் 8 தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதேபோன்று திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குள் அதே பாணியில் தற்போது வயதான தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார்.
    • செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை‌ கொலை செய்துள்ளார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையத்தை சேர்ந்தவர் ஜான் (வயது 30). இவர் இவரது மனைவி சரண்யாவுடன் திருப்பூரில் வசித்து வந்தார். ஜான் மீது கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில் அண்மையில் சிறையில் இருந்து நிபந்தனை ஜாமினில் வெளியே வந்த ஜான், தினமும் காலை சேலம் அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வந்துள்ளார்.

    அதேபோல நேற்று தனது மனைவி சரண்யாவுடன் காரில் சேலத்திற்கு வந்து கையெழுத்து போட்டுவிட்டு மீண்டும் திருப்பூர் சென்று கொண்டிருந்தார். அவரை பின்தொடர்ந்து 2 கார்களில் 10 பேர் கொண்ட கும்பல் சென்றுள்ளது. ஈரோடு மாவட்டம் நசியனூர் அருகே நெடுஞ்சாலையில் மனைவியுடன் சென்று கொண்டிருந்த ரவுடி ஜான் கார் மீது பின்னால் வந்த கார் மோதியுள்ளது.

    அப்போது விபத்து ஏற்படுத்திய காரில் இருந்து வெளியேறிய 4 பேர் கும்பல் ஜானை காரில் வைத்தே சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தது. இதனை தடுக்க சென்ற மனைவி சரண்யாவிற்கும் அரிவாள் வெட்டு விழுந்துள்ளது. பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சித்தோடு போலீசார் அங்கு ரத்த காயத்துடன் ஊர்மக்கள் பிடித்து வைத்திருந்த கார்த்திகேயனை கைது செய்தனர்.

    இதையடுத்து கார்த்திகேயன் அளித்த தகவலின் பேரில் காரை பின்தொடர்ந்து சென்றபோது, கொலையாளிகள் சென்ற கார் நின்றது. பின்னர் காரில் இருந்த சதீஷ், சரவணன் மற்றும் பூபாலன் ஆகியோர் காட்டு பகுதியில் தப்பியோடியுள்ளனர். அப்போது சித்தோடு இன்ஸ்பெக்டர் ரவி தனது கைத்துப்பாக்கி மூலம் வாகனத்தில் மூன்று முறை சுட்டு எச்சரித்துள்ளார்.

    பின்னர் மூவரும் இன்ஸ்பெக்டர் ரவி மற்றும் காவலர் யோகராஜை அரிவாளால் வெட்டியுள்ளனர். இதனையடுத்து இன்ஸ்பெக்டர் ரவி தற்காப்பிற்காக மூவரின் காலில் சுட்டு பிடித்து பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

    கொலை குறித்து திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. சேலத்தில் பிரபல ரவுடியாக செல்லதுரை என்பவர் இருந்துள்ளார். கொலையான ஜானுவும், செல்ல துரையும் இணைந்து கொலை, வழிப்பறி, அடிதடி உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு பிரிந்துள்ளனர். இந்நிலையில் செல்ல துரையை கொலை செய்ய திட்டமிட்ட ஜான் வெளியூரில் இருந்து ரவுடிகளை அழைத்து வந்து கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்லதுரையை கொலை செய்துள்ளார்.

    இதற்கு பழி தீர்க்க ரவுடி செல்லதுரையின் தம்பி ஜீவகன் முடிவெடுத்துள்ளார். இதற்காக கடந்த 2020ம் ஆண்டு முதல் காத்திருந்த ஜீவகன் நேற்று தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 2 கார்களில் ரவுடி ஜானின் காரை பின்தொடர்ந்து அவரை வெட்டி கொலை செய்துள்ளார்.

    இதில் கொலை கும்பலை சேர்ந்த கார்த்திகேயன், சதீஷ், பூபாலன், சரவணன் ஆகியோரை போலீசார் சுட்டு பிடித்தனர். இந்நிலையில் இந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் சேலத்தில் பதுங்கி இருப்பதாக சித்தோடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கு பதுங்கி இருந்த பார்த்திபன், அழகரசன், பெரியசாமி, சிவகுமார், சேதுவாசன் ஆகிய 5 பேரை பிடித்து சித்தோடு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கொலையின் முக்கிய குற்றவாளியான ஜீவகன் இன்று தனது கூட்டாளி சலீம் என்பவருடன் ஈரோடு நீதிமன்றத்தில் சரணடைந்தார். அதை தொடர்ந்து அவர்கள் இருவரும் நீதிமன்ற உத்தரவுபடி சிறையில் அடைக்கப்பட்டனர். சித்தோடு போலீசார் அவர்களை காவலில் எடுத்த விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    • கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது.

    ஈரோடு:

    சேலம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜான் என்கிற சாணக்கியன். இவரது மனைவி ஆதிரா. ஜான் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. இவர் பிரபல ரவுடியாக வலம் வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை சேலத்தில் இருந்து ஜான் மற்றும் அவரது மனைவி ஆதிரா திருப்பூர் செல்வதற்காக காரில் புறப்பட்டு சென்றனர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர் கோவை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாமி கவுண்டம்பாளையம் பிரிவு அருகில் இன்று மதியம் 12.15 மணிக்கு அவர்களது கார் சென்று கொண்டிருந்தது. அவர்களது காரை பின் தொடர்ந்து வந்த மர்மகும்பல் ஜான் சென்ற காரை வழிமறித்து நிறுத்தியது.

    கண்ணிமைக்கும் நேரத்தில் மர்மகும்பல் ஜானை சரமாரியாக வெட்டினர். இதை தடுக்க சென்ற அவரது மனைவி ஆதிராவுக்கும் அரிவாள் விட்டு விழுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே ஜான் ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். அவரது மனைவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த மர்ம கும்பல் மற்றொரு காரில் ஏறி தப்பி சென்றது.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சித்தோடு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஆதிராவை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். கொலை செய்யப்பட்ட ஜானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு சென்ற ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் நேரில் சென்று பார்வையிட்டார். பழிக்கு பழியாக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த ஜான் மீது 2 கொலை வழக்கு உட்பட 15-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது என தெரியவந்தது. ஈரோட்டில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஈரோட்டில் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த தம்பி ஓட்டல் தொழிலாளியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (32). திருமணமான இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அருண்பாண்டியனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இவரது தம்பி அஜித்குமார். திருமணமான இவர் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் தங்கி லேப் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அருண்பாண்டியன் அவ்வப்போது குடிபோதையில் தனது தம்பி அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அருண்பாண்டியன் ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக ஈரோடு மொசவண்ணா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி அஜித்குமார் தனது அண்ணனை சமாதானப்படுத்த முயன்றார்.

    அப்போது குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் தம்பியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் கறி வெட்டும் கத்தியால் அண்ணனை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் தம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். இருந்தாலும் ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் பின் தொடர்ந்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அருண்பாண்டியன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அருண்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஜீத்குமாரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பணம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22).

    கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கணவன்-மனைவி இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு போய் வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து பிறகு கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்கள் ரெயிலில் பீகார் செல்லும் போது அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் ஆசை வார்த்தை கூறினார். “அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறினார்.

    அவரின் பேச்சைகேட்டு ஆசையுடன் நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.

    ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து “ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம்” என தனது சுய உருவத்தை காட்டத் தொடங்கினார்கள். அதற்கு நித்திஷ்குமார், “என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி பணம் பறிக்க முயற்சி செய்கிறீர்களே.. இது நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று கேட்டார்.

    நித்திஷ்குமாருடன் ராகுல் தத்தா என்பவரும் வந்திருந்தார். அவரும் நவின்குமாரின் ஆள் என நித்திஷ்குமாருக்கு தெரியாமல் போனது. அவர்தான் நைசாக பேசி நித்திஷ்குமாரை கடத்தி வந்தார்.

    பணம் தொடர்பாக அறையில் அடைத்து வைத்து நித்திஷ்குமாரை நவீன்குமாரும் அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் சேர்ந்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு போன மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பயந்த நித்திஷ்குமாரின் தாயார் தன் மகனை காணவில்லை என்று திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து “உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர்.

    வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை வடிந்திருப்பதை கண்ட போலீசார் உள்ளே அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும் அவரது மனைவி சசிகலாவும் வசமாக சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.

    போலீசார் அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் கடத்தப்பட்ட நித்திஷ்குமாரின் தலை, கை, கால் என துண்டு துண்டாக உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த உடலை கைப்பற்றிய போலீசார் நவீன்குமாரையும் சசிகலாவையும் பிடித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போட துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தனபாண்டியன் டவுன் டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×