என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சிவகிரி அருகே தம்பதி அடித்து கொலை: குற்றவாளிகளை கண்டுபிடிக்க 100 CCTV கேமராக்களை ஆய்வு செய்யும் போலீசார்
- கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
- எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்.பி. சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராமசாமி, பாக்கியம் தம்பதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மதியம், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில், எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் தனியாக வசித்து வருபவர்களை கண்காணித்து, உள்ளே புகுந்து அவர்களை கொலை செய்துவிட்டு பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவதுடன், அச்சமின்றி சுற்றி திரிவதால் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்று உயிரிழந்த தம்பதியின் உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தநிலையில் கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






