என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதித்துறை"

    • அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக வாங்கிய புகாரில் சிக்கினார்.
    • பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.

    மகாராஷ்டிராவில் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜகவின் தேவேந்திர பட்நாவிஸ் முதல்வராகவும், சிவசேனாவை இரண்டாக உடைத்த ஏக்நாத் ஷிண்டே மற்றும் தேசியவாத காங்கிரசை இரண்டாக உடைத்த அஜித் பவார் ஆகிய இருவரும் துணை முதல்வராக உள்ளனர்.

    அஜித் பவார் மகன் பார்த்து பவார், புனேவில் ரூ.1800 கோடி மதிப்புள்ள அரசு நிலத்தை ரூ.300 கோடிக்கு முறைகேடாக தனது நிறுவனத்துக்காக வாங்கிய ஊழல் குற்றச்சாட்டில் அண்மையில் சிக்கினார்.

    இதற்கிடையே மகாராஷ்டிராவில் உள்ள பஞ்சாயத்துகளுக்கான தேர்தல் டிசம்பர் 2 அன்று நடைபெற உள்ளன. இந்நிலையில் நிலையில் அஜித் பவார் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்.

    நேற்று மாலேகான் நகரில் உள்ள பாராமதி தாலுகாவில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், தேர்தலில் தனது கட்சி வெப்பாளர்களுக்கு வாக்களித்தால் மட்டுமே அந்த பகுதிக்கான வளர்ச்சி நிதியை வழங்குவேன் என மிரட்டியுள்ளார்.

    அமைச்சரவையில் நிதித் துறையை அஜித் பவார் தன் வசம் வைத்துள்ளார். இதன் பின்னணியில் பிரசார கூட்டத்தில் பேசிய அவர், "நண்பர்களே, மத்திய அரசும் மாநில அரசும் பல திட்டங்களைக் உருவாகியுள்ளன. நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தத் திட்டங்களை முறையாகச் செயல்படுத்தினால், மாலேகானுக்கு நல்ல வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

    நீங்கள் எங்களின் 18 வேட்பாளர்களையும் வெற்றி பெறச் செய்தால், நான் வாக்குறுதியளித்த அனைத்தையும் நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன். ஆனால் நீங்கள் எனது வேட்பாளர்களை கிராஸ் மார்க் செய்தால், நானும் உங்களை கிராஸ் மார்க் செய்வேன். வாக்கு உங்கள் கையில் உள்ளது, நிதி என் கையில் உள்ளது." என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார்.

    இதை விமர்சித்த உத்தவ் சிவசேனா தலைவர் அம்பாதாஸ் தான்வே, "நிதி என்பது பொதுமக்கள் செலுத்தும் வரிகளிலிருந்து வழங்கப்படுகிறது, அது அஜித் பவாரின் வீட்டில் இருந்து அல்ல. பவாரைப் போன்ற ஒரு தலைவர் வாக்காளர்களை அச்சுறுத்தும்போது, தேர்தல் ஆணையம் என்ன செய்து கொண்டிருக்கிறது?" என்று கேள்வி எழுப்பினார். 

    முன்னதாக கடந்த ஜனவரியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், வாக்களித்து விட்டதால் நீங்கள் ஒன்றும் எனக்கு முதலாளிகள் இல்லை, நான் என்ன கூலியா? என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • நிதித்துறை மந்திரியின் தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.
    • 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    டெஹ்ரான்:

    ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகிய பிறகு உலக நாடுகள் பலவும் அதன் மீது பொருளாதார தடை விதித்தன. இதனால் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது.

    இந்தநிலையில் டாலருக்கு நிகரான அந்த நாட்டின் பணமதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. இதற்கு நிதித்துறை மந்திரி அப்தோல்நாசர் ஹெம்மாட்டியின் (வயது 68) தவறான நிதிக்கொள்கையே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்தன.

    இதனை தொடர்ந்து ஆளுங்கட்சியிலும் அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பின. எனவே அவர் மீது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது மொத்தமுள்ள 273 எம்.பி.க்களில் 182 பேர் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனையடுத்து நிதித்துறை மந்திரி ஹெம்மாட்டி பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால், சாமானிய பொதுமக்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்? என்பதை பார்க்கலாம். #RupeeInICU #IndianRupee
    புதுடெல்லி:

    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருகிறது. இது தவிர இந்தியா, சீனா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடனான அமெரிக்காவின் வர்த்தகப் போரும் சர்வதேச அன்னிய செலாவணி சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. 

    இதன் காரணமாக டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சரிவைச் சந்தித்துள்ளது.

    ஜூன் 19-ஆம் தேதி அன்று டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 68.61 என்ற அளவிற்கு சரிந்திருந்தது. இது அண்மைக் காலத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவாக கருதப்பட்டது. அதன்பின்னர் சிறிது ஏற்றத்தாழ்வுகளுடன் காணப்பட்ட ரூபாயின் மதிப்பு நேற்றைய வர்த்தக நேர முடிவில் 68.61 ஆக நிலைபெற்றது. 

    ஈரானின் கச்சா எண்ணெய் உற்பத்தியை முடக்கி, அந்த நாட்டை தனிமைப்படுத்த அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதன் தொடக்கமாக, கூட்டணி நாடுகள் அனைத்தும் ஈரானிடம் இருந்து நவம்பர் மாதத்திற்குப் பிறகு கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது என்று கூறியிருந்தது. 

    இந்தியா, சீனா போன்ற நாடுகளுக்கும் இதில் விதிவிலக்கு கிடையாது என்றும், இதை மீறினால் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் மிரட்டியது. இதனால் கச்சா எண்ணெய் விலை உயரும் என்ற அச்சம் ஏற்பட்டது.

    இதுபோன்ற காரணங்களால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்று கடுமையாக சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின்போது டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் சரிந்து 68.89 ஆக இருந்தது. அதன்பின்னர் சிறிது நேரத்திலேயே மேலும் சரிந்து 69.10 என்ற நிலையை எட்டியது. இது வரலாறு காணாத சரிவு ஆகும். 

    இந்த நிலை மேலும் மோசமடையலாம் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், விரைவில் 70 ரூபாயை தொடலாம் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரூபாய் மதிப்பு சரிவால் சாமானியர்களுக்கு என்ன மாதிரியான பிரச்சனை ஏற்படலாம் என நிதித்துறை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

    ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்து வருவதால் இறக்குமதி குறைந்து வர்த்தகப் பற்றாக்குறை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இது, இறக்குமதி பொருட்களின் மீதான வரியை உயர்த்தும் நடவடிக்கையை நோக்கி அரசை தள்ளும். மத்திய அரசு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மே மாதத்தில் வர்த்தகப் பற்றாக்குறை 1,460 கோடி டாலராக உள்ளது. இது கடந்த ஆண்டில், இதே மாதத்தில் இருந்ததை விட 5.6 சதவீதம் அதிகம். 



    சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் இறக்குமதி செலவு அதிகரிக்கும். அதனால் பெட்ரோல்,  டீசலின் விலை அதிகரிக்கும். இது சாமானியர்களை வெகுவாக பாதிக்கும். 

    ஏற்கனவே, பெட்ரோல் விலை உயர்வால் கடும் சுமையை தாங்கிக்கொண்டிருக்கும் மக்களின் தலையில் மேலும் இடியாக இது இருக்கும். விலையை குறைத்தால் கடும் நிதிசுமையை ஏற்க வேண்டியிருக்கும் என்பதால், பெட்ரோல், டீசல் விலையை அரசு குறைக்க வாய்ப்புகள் குறைவு. 

    எரிபொருள் விலை உயர்வு என்பது அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றத்திற்கு காரணியாக அமையும். இதனால், ஒட்டுமொத்த பொருளாதார நடவடிக்கைகளில் தேக்கம் ஏற்படும். இது பணவீக்கம் அதிகரிக்க காரணமாகவும் இருக்கும். பணவீக்கம் அதிகரித்ததால் ரிசர்வ் வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.

    மத்திய அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு ரூபாய் மதிப்பை உயர்த்தும் வழிகளை செய்தால்தான், பொதுமக்கள் தீவிர சுமைக்கு உள்ளாவதை தடுக்க முடியும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
    ×