என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

அ.தி.மு.க.வினருக்கு பதில் சொல்ல தேவையில்லை: தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும்- ஓ.பன்னீர் செல்வம்
- தமிழகத்தில் 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார்.
- அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது.
திருமங்கலம்:
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ராயபாளையத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அ.தி.மு.க.வினர் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் தி.மு.க.வில் இணையும் விழா வருகிற 7-ந்தேதி நடைபெறுகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.
இந்த நிகழ்ச்சிக்கான பந்தல்கால் நடும் விழா இன்று நடைபெற்றது. அமைச்சர் மூர்த்தி, ஓ. பன்னீர் செல்வம் தலைமையில் பந்தக்கால் நடப்பட்டது. விழாவின் போது ஓ.பன்னீர் செல்வம் கூறியதாவது:-
தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் தலைமையேற்று பல்வேறு இயக்கங்களில் இருந்து தி.மு.க.வில் இணைகின்ற நிகழ்ச்சி வருகிற 7-ந்தேதி நடைபெற உள்ளது. இதன் முன்னேற்பாடாக பூமி பூஜை போட்டு தொடங்கி உள்ளோம்.
தமிழகத்தில் 5 ஆண்டு கால சிறப்பான ஆட்சியை மு.க.ஸ்டாலின் வழங்கி உள்ளார். நாட்டு மக்களுக்கும், அடித்தள மக்களுக்கும் எது தேவையோ அதை அறிந்து புரிந்து செயல்படுத்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அந்த நிலை மீண்டும் தொடர வேண்டும் என்பதற்காக தான் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும் எந்தவித பாகுபாடும் இல்லாமல் அவருக்கு தார்மீக ஆதரவை தந்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நல்ல நேரத்தில் மீண்டும் தேர்தல் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலிலும் முதலமைச்சர் தலைமையிலான தி.மு.க. கூட்டணி மகத்தான வெற்றி பெறும். சாதனை புரிந்த ஆட்சி மீண்டும் வர வேண்டும் என தங்களுடைய விருப்பத்தை பொதுமக்கள் தெரிவித்து உள்ளார்கள். அ.தி.மு.க. தொண்டர்கள் 80 சதவீதம் மேல் தி.மு.க.வில் இணைகிற நல்ல சூழல் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது நிருபர்கள் அ.தி.மு.க.வில் பதவி சுகத்தை அனுபவித்து விட்டு தி.மு.க.வில் இணைந்து உள்ளதாக அ.தி.மு.க. நிர்வாகிகள் எழுப்பியுள்ள குற்றச்சாட்டு குறித்து கேட்டனர். அதற்கு ஓ.பன்னீர் செல்வம் அவர்களுக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்று கூறினார்.






