என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவுர்ணமி"

    • கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது.
    • பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த கடலானது புனித தீர்த்தமாக கருதப்படுகிறது.

    இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் புனித நீராடிய பின்னரே சுவாமி தரிசனம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் கடலானது அமாவாசை, பவுர்ணமி போன்ற நாட்களில் உள்வாங்கி காணப்படுவதும், சில மணி நேரங்களில் வெளியே வருவதும் வழக்கமாக இருந்து வருகிறது. இன்று பவுர்ணமி என்பதால் கடல் சுமார் 100 அடி உள்வாங்கி காணப்பட்டது. இதனால் பாசிபடிந்த பாறைகள் வெளியே தெரிந்தது.

    மேலும் கடல் அலைகள் இன்றி குளம் போல் காட்சி அளித்தது. பக்தர்கள் கடல் உள்வாங்கி காணப்பட்டதை கண்டு செல்பி எடுத்து சென்றனர். ஆனாலும் பக்தர்கள் வழக்கம் போல் புனித நீராடி வருகின்றனர். 

    • ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.
    • அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும்.

    நமக்கு உணவு தரும் சிவனுக்கே அரிசி உணவை அபிஷேகம் செய்து படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்தன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

    பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையான அழகுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பவுர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

    சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை சோறும் ஒரு சிவலிங்கம் என்று கருதப்படுகிறது. எனவே அன்று அன்னாபிஷேக கோலத்தில் சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம் ஆகும்.

    இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள். அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் சகல காரியங்களிலும் சிவன் நமக்கு வெற்றித்தருவார். இத்தகைய அபிஷேகங்களில் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது அதிக சிறப்புடையதாகும்.

    ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று தெரியுமா? ஐப்பசி பவுர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுவார்கள். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.

    சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியில் இருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருவார். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

    பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுப்பார்கள். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும். சிவபெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

    தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிவிடும்.

    புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிந்து விடும். 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குவார்கள். அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக கொண்டு வந்து சிவபெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக சாற்றப்படும். சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

    அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறும். பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படும். பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீப ஆராதனையும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுவான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

    நாளைய பவுர்ணமி அதிக பிரகாசம்

    அன்னாபிஷேகம் செய்யப்படுவதன் பின்னணியில் மற்றொரு புராண கதை:-

    தட்சனுக்கு ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகிணியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான்.

    மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்வதறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின.

    இதனால் சந்திரன் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.

    அத்தகைய ஐப்பசி மாதப் பவுர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றோம்.

    அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது என வேதங்கள் தெரிவிக்கின்றன.

    • மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    ஐப்பசி மாத பவுர்ணமி வருகிற 4-ந் தேதி இரவு 9.43 மணிக்கு தொடங்கி 5-ந் தேதி இரவு 7.27 மணிக்கு நிறைவு பெறுகிறது. இந்த நேரத்தில் மலையே சிவனாக வணங்கப்படும் 14 கிலோ மீட்டர் தூரம் உள்ள அண்ணாமலையை பக்தர்கள் வலம் வரலாம் என அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கிரிவலம் செல்லும் பக்தர்கள் கிரிவலப்பாதையில் நின்று கொண்டு விபூதி பூசி, பொட்டு வைத்து ஆசீர்வாதம் செய்வது போன்று பணம் பறிக்கும் ஏமாற்று கும்பலிடம் பணத்தை இழக்காமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது.
    • திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.

    ஓசூர் மோரனப்பள்ளி பகுதியில் ஸ்ரீ பிரத்யங்கிரா தேவி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு பவுர்ணமி நாளிலும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மிளகாய் வத்தல் யாகம் நடைபெறுவது வழக்கமாக உள்ளது.

    அதேபோல் நேற்று பவுர்ணமி நாளை முன்னிட்டு பிரத்யங்கிரா தேவி அம்மனுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து திருஷ்டிகள் நீங்கி மக்கள் நலமுடன் வாழ மிளகாய் வத்தல் யாகம் நடந்தது.

    இந்த மகா யாகத்தில் பிரபல இளம் நடிகை ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டார். இவர் தமிழில் விஜய் ஆண்டனி நடித்த 'காளி' படத்தில் கதாநாயகியாகவும், வலை, சிங்க பெண்ணே, இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐ.எஸ்.ஓ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

    இந்த வழிபாட்டில் நடிகை ஷில்பா மஞ்சுநாத் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரத்யங்கிரா தேவி முன்பு வளர்க்கப்பட்ட மகா யாகத்தில் மிளகாய் வத்தல் போட்டு திருஷ்டிகள் நீங்க அனைவரும் நலமுடன் வாழ அம்மனை வழிபட்டனர்.

    • மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. கோவில் பின்புறம் உள்ள 'அண்ணாமலை' என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 11.49 மணிக்கு தொடங்கி மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 9.53 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் ஆவணி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. பவுர்ணமி வருகிற 7-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1.46 மணிக்கு (6-ந்தேதி நள்ளிரவுக்கு பின்) தொடங்கி அன்று நள்ளிரவு 12.30 மணிக்கு நிறைவடைகிறது.

    இந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வர உள்ளதால் பவுணர்மியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.
    • மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையையே சிவனாக வழிபடுவதால் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஆடி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல வருகிற 8-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மதியம் 2.43 மணி முதல் மறுநாள் 9-ந் தேதி (சனிக்கிழமை) மதியம் 2.18 மணிவரை உகந்த நேரமாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    பவுர்ணமியன்று திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல பல லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை.
    • தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும்.

    குல தெய்வ வழிபாடு எப்போதும் சிறந்தது. அதிலும் பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ வழிபாடு என்பது மிகவும் இன்றியமையாதது. பவுர்ணமி வழிபாடு குடும்பத்தில் உள்ள தீய சக்திகளை நீக்கி, நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் என்றும் பவுர்ணமியில் வழிபட்டால் வம்சம் தழைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

    பவுர்ணமி நாளில் குல தெய்வத்தை வழிபடுவதால் உங்கள் தோஷங்கள் அனைத்தும் விலகும். தம்பதியினர் ஒற்றுமையாக வாழ்வர். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் நீங்கி வாழ்வும் சிறப்பாக இருக்கும். ஒருவருடைய வீட்டில் குலதெய்வத்தின் அருள் பரிபூரணமாக கிடைத்துவிட்டால் அந்த வீட்டில் எதிர்மறை ஆற்றல்கள் இருக்காது. அந்த வீட்டில் இருக்கக்கூடிய ஒவ்வொரு நபர்களுக்கும் குலதெய்வம் காவலாக இருந்து அவர்களுடைய வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அருளும் என்றும் கூறப்படுகிறது.

    ஒவ்வொறு பவுர்ணமிக்கும் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்றில்லை. நீங்கள் உங்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். பூஜை அறையை சுத்தம் செய்து மாக்கோலமிட்டு, குல தெய்வத்தின் படத்திற்கு மலர் அலங்காரம் செய்து, நெய் தீப விளக்கேற்றி குடும்ப சகிதமாக குல தெய்வத்தை மனதார வழிபடலாம். தீபமேற்றியவுடன் குல தெய்வத்தின் பெயரை 108 முறை பயபக்தியுடன் உச்சரிக்க வேண்டும். பின்னர் நைவேத்தியமாக வெண்பொங்கல் (அ) சர்க்கரைப் பொங்கல் படைக்கலாம். படைத்த நைவேத்தியத்தை அக்கம் பக்கத்தினருக்கு கொடுத்து மகிழலாம். எளிய முறையில் இப்படி குல தெய்வ வழிபாடு செய்தாலே போதும் குல தெய்வத்தின் அருள் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்கும்.

    ஒவ்வொறு பவுர்ணமியிலும் மாலை நேரத்தில் சந்திர பகவான் தோன்றும் நேரத்தில் விளக்கேற்றி, லலிதா சகஸ்ரநாமம் சொல்லி வழிபட வேண்டும். இவ்வாறு வழிபட்டால் வீடு மனை முதலான செல்வங்களை வாங்கும் பாக்கியம் கிடைக்கும்.



    உங்கள் முன்னோர்கள் குல தெய்வத்திற்கு செய்ய வேண்டிய நேர்த்திக்கடனை செலுத்தாமல் இருந்தால், அதனால் பல இன்னல்களை பிள்ளைகள் அனுபவிக்க நேரிடும். அத்தகைய குலதெய்வ குற்றம் நீங்க பெரிய பெரிய கோவிலுக்கு செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. தொடர்ந்து 3 பவுர்ணமி தினத்தில் உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபட்டாலே போதும். ஏதேனும் சூழ்நிலை காரணமாக தொடர்ந்து செல்ல முடியவில்லை என்றால், விடுபட்ட பவுர்ணமி தினத்தை கணக்கில் கொள்ளாமல் மீண்டும் தொடர்ச்சியாக குல தெய்வ கோவிலுக்கு சென்று வர வேண்டும்.

    சிலருக்கு குல தெய்வமே தெரியாமல் இருக்கும் அதனால் நேர்த்திகடன் செலுத்த முடியாமல் பல இன்னைல்களை சந்தித்துக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் பவுர்ணமி தினத்தில் தீபமேற்றி, அந்த தீபத்தை குல தெய்வமாக வழிபட, குல தெய்வ அருள் கிடைக்கும். நேர்த்திக்கடன் செலுத்தாத குற்றம் நீங்கி அவர்களின் வாழ்வும் வளம் பெரும் என்பது நம்பிக்கை.

    • கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    • அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    ஆனி மாதத்திற்கான குரு பவுர்ணமி இன்று அதிகாலை சுமார் 2.33 மணியளவில் தொடங்கியது. நாளை அதிகாலை 3.08 மணியளவில் நிறைவு பெறுகிறது.

    இன்று காலையில் பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கிரிவல பாதையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.

    கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.

    கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர்.
    • வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பவுர்ணமி நாட்களில் கிரிவலம் செல்கின்றனர். அதன்படி வைகாசி மாதத்தில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

    வருகிற 10-ந்தேதி பகல் 12.32 மணிக்கு பவுர்ணமி தொடங்கி 11-ந்தேதி பகல் 1.52 மணி வரை நீடிக்கிறது. அந்த நேரத்தில் பக்தர்கள் கிரிவலம் செல்லலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள்.
    • சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும்.

    சித்திரை மாதத்தில் சித்திரை நட்சத்திரம் இணைந்த நாளில் வரும் பவுர்ணமி தினம், புராண நிகழ்வுகளின் நினைவாக சிறப்பைப் பெறுகிறது. மற்ற பவுர்ணமிகளில் சிறு களங்கத்துடன் தோன்றும் சந்திரன், சித்ரா பவுர்ணமியன்று, பூரணக்கலைகளுடன் பூமிக்கு மிக அருகில் தோன்றும். சந்திரனும் சூரியனும் முழு நீசம் பெறும் இந்த நாளில், நாம் தெய்வங்களிடம் சரணடைந்து வழிபடுவது நன்மைகளைத் தரும் என்பது ஐதீகம்.

    மனிதர்களின் பாவ புண்ணியங்களை எழுதி வைத்து அதற்கேற்றார்ப் போல், அவர்களின் இறப்பையும் அதன்பின் அவர்கள் வசிக்கப் போகும் சொர்க்கம்- நரகம் ஆகியவற்றை நிர்ணயிக்கும் பெரிய பொறுப்பில் உள்ள எம தர்மனின் உதவியாளரான சித்திரகுப்தனை வழிபடும் நாள்தான் இந்நாள். சித்ரகுப்தனின் பிறப்புக் குறித்து பல்வேறு புராண சம்பவங்கள் விவரிக்கப்பட்டாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நிகழ்வாக இக்கதையே பெரும்பாலும் உள்ளது.

    கயிலாயத்தில் ஒருநாள் அன்னை பார்வதி தேவி, பொழுதுபோக்காக ஒரு அழகிய ஆண் குழந்தையின் வடிவத்தை சித்திரமாக வரைந்து மகிழ்ந்தாள். அதே நேரத்தில் எல்லாம் வல்ல ஈசனிடம், விதி முடிந்த மனிதரின் உயிரைப் பறித்து பூமி மாதாவின் பாரத்தைக் குறைக்கும் பணியில் உள்ள எமதர்மன், அதிக வேலைப்பளு காரணமாகத் தான் அவதிப்படுவதாகவும், தனக்கு ஏற்ற சிறந்த உதவியாளரைத் தரும்படியும் வேண்டினான்.

    அப்போதுதான் ஈசனிடம் தான் வரைந்த ஓவியத்தைக் காட்டினாள் அன்னை உமாதேவி. அழகில் சிறந்த அந்த ஆண் குழந்தையின் ஓவியம், ஈசனின் மனதை மயக்கியது. அந்நேரம் எமனின் வேண்டுகோள் நினைவில் தோன்ற, அவ்வோவியத்தைக் கையில் எடுத்த இறைவன் தன் மூச்சுக் காற்றை அவ்வோவியத்தில் செலுத்த, ஓவியத்தில் இருந்த குழந்தை உயிர்பெற்று வந்தது. சிவசக்தியின் அம்சமாக உருவான அக்குழந்தை, சித்திரத்தில் இருந்து உயிர் பெற்றதால் 'சித்ர குப்தன்' எனப்பெயர் பெற்றது. ஈசனை வேண்டித் தவமிருந்து பல ஞானங்களைப் பெற்று வளர்ந்தது.

    கல்வி கேள்விகளில் சிறந்தவனான சித்ரகுப்தனை தகுந்த வயதில் எமதர்மனிடம் அனுப்பி, மனிதர்களின் பாவப்புண்ணிய கணக்குகளை நெறி தவறாமல் எழுதி, எமனுக்கு உதவி செய்யும்படி பணித்தார் சிவபெருமான் என்கிறது புராணம். 'சித்' என்றால் 'மனம்' என்றும், 'குப்த' என்றால் 'மறைவு' என்றும் பொருள். மனிதர்களின் மனதில் மறைந்திருக்கும் பாவ எண்ணங்களையும், மனதார செய்யும் நல்ல செயல்களின் புண்ணியத்தையும் கவனித்து எழுதி வைக்கிறார் சித்ரகுப்தர் என்பது நம்பிக்கை.

    மனிதரின் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் பணிக்காக இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட சித்திரகுப்தன், பிறக்கும்போதே கையில் எழுத்தாணி ஏடுடன் பிறந்ததாக ஐதீகம். நாம் செய்யும் புண்ணிய செயல்களையும் பாவ செயல்களையும் தவறாமல் நடுநிலையாக, அவரவரின் பூர்வ புண்ணியங்களின் படி ஆராய்ந்து மறையாத எழுத்துகளால் கணக்குப் புத்தகத்தில் எழுதுவதாக நம்பிக்கை. ஆகவேதான் அன்று சித்திரகுப்த பூஜையில் எழுத்தாணி மற்றும் கணக்கு நோட்டுப் புத்தகங்கள் வைத்து வாழ்வு வளம் பெற வேண்டுகின்றனர்.

    சித்ரா பவுர்ணமியன்று பூஜையறையை சுத்தம் செய்து, சித்ரகுப்தன் படத்தை தெற்கு திசையில் வைத்து பூக்களால் அலங்கரிக்க வேண்டும். பின்னர் சந்தனப்பொட்டு வைத்து, பழங்கள், காய்கறிகள், வேப்பம்பூ பச்சடி, பச்சரிசி வெல்லத்துடன் இனிப்புகள் மற்றும் கலவை சாதங்களை நைவேத்தியமாகப் படைக்க வேண்டும். ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி மனதில் உள்ள தீய எண்ணங்களை விலக்கி நல்ல எண்ணங்களை புகுத்தி தீப தூபம் காட்டி சித்ரகுப்தனை மனதார வழிபட வேண்டும்.

    சித்ரா பவுர்ணமியன்று களங்கமில்லாத முழுநிலவின் அழகைக் கண்டு ரசிக்க, கடற்கரை பூங்கா போன்ற இடங்களில் மக்கள் ஒன்று கூடுவார்கள். அவரவர் வீடுகளில் செய்த 'சித்ரா அன்னம்' எனப்படும் கலவை சாதங்களை எடுத்து வந்து, நிலாச்சோறு உண்ணும் வழக்கம் குடும்ப உறுப்பினர்களிடையே ஒற்றுமையையும், அன்பையும் பெருக வைக்கும் என்பதால் நம் பெரியோர்கள் கடைப்பிடித்த நல்வழி இது. சித்ரா பவுர்ணமியின் சிறப்புகளாக பல ஆன்மிக வழிபாடுகளும், பூஜைகளும் ஆலயங்கள்தோறும் நடைபெற்று வருகின்றன.

    குறிப்பாக மதுரையில் அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு தரிசனம் தருவது ஆண்டுதோறும் நிகழும் சிறப்புமிக்க வைபவமாகிறது. கன்னியாகுமரியில் அன்றுமட்டும் ஒரே நேரத்தில் சூரியன் மறைவதையும் சந்திரன் தோன்றுவதையும் கண்டுமகிழலாம். திருவண்ணாமலையில் கிரிவலம் வரும் நிகழ்வு பிரசித்தி பெற்றதாக இருக்கிறது. இந்த தினத்தில் சித்ரகுப்தனை வேண்டி, வருட பலாபலன்களை அறிந்து கொள்ளும் பஞ்சாங்கம் படிப்பதும், கடல் நீரில் நீராடுவதும் வாழ்வில் சுபீட்சத்தை அருளும். அன்றைய தினம் சித்ராதேவிக்கு (அம்பிகை) தேங்காய் சாதம், புளியோதரை, எலுமிச்சை சாதம், தயிர்சாதம், பருப்புபொடி சாதம், கறிவேப்பிலைப்பொடி சாதம், மாங்காய் சாதம், வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல், அரிசி உப்புமா, அவல் உப்புமா, கோதுமை உப்புமா ஆகியவைகளைப் படைத்து அவற்றை பசித்தோருக்கு தானமாகத் தந்து புண்ணியம் பெறலாம்.

    • இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    திருவண்ணாமலையில் மலையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையார் மலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி உள்ள 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த ஆண்டிற்கான சித்ரா பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. சித்ரா பவுர்ணமி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.53 மணிக்கு தொடங்கி மறுநாள் 12-ம் தேதி (திங்கட்கிழமை) இரவு 10.48 மணிக்கு நிறைவடைகிறது. இந்த ஆண்டு சித்ரா பவுர்ணமிக்கு 40 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்று மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

    அதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மாலை அருணாசலேஸ்வரர் கோவில் மாட வீதியில் அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக கலெக்டர் தர்ப்பகராஜ் துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டார்.

    ×