search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "annabishekam"

    • ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது.
    • அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது.

    சேலம்:

    ஐப்பசி மாத பவுர்ணமியன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது முக்கிய நிகழ்வாக உள்ளது. அதன்படி நடப்பாண் டிற்கான அன்னாபிஷேக விழா இன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் நடக்கிறது. பிரசித்தி பெற்ற சேலம் டவுன் சுகவனேஸ்வரர் கோவிலில் இன்று மாலை அன்னா பிஷேகம் நடக்கிறது. முன்னதாக சுகவ னேஸ்வரர், சொர்ணாம்பிக்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது. பின்னர் அரிசி சாப்பாடு, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றால் சுகவனேஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. பின்னர் பக்தர்களின் சிறப்பு வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு பிரசாதம் வழங்கப்படு கிறது. இதனிடையே இன்று நள்ளிரவு 1.05 மணி முதல் 2.23 மணி வரை சந்திரகிரணம் நிகழ்கிறது. இதனால் சுகவனேஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் முடிந்தவுடன் இரவு 8.30 மணிக்கு கோவில் நடை சாற்றப்படுகிறது. தொடர்ந்து நாளை காலை 7 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனும திக்கப்படுவார்கள் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    • கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.
    • 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவில்களில் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில் உலக நன்மை வேண்டி அன்னாபிஷேகம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பழனி முருகன் கோவிலில் கடந்த 2-ந்தேதியும், திருஆவினன்குடி குழந்தை வேலாயுதசுவாமி கோவிலில் நேற்று முன்தினமும் அன்னாபிஷேகம் நடந்தது. இந்தநிலையில் நேற்று பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அப்போது கோவில் மண்டபத்தில் 3 வெள்ளி கலசங்கள் வைத்து விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், ஸ்கந்தயாகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சாயரட்சை பூஜையில் சிவபெருமான், பெரியநாயகி அம்மன், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு கலச அபிஷேகம், 16 வகை அபிஷேகம் நடந்தது.

    பின்னர் மஞ்சள் நிற அன்னத்தால் கிரீடம் வைத்து சிறப்பு அலங்காரம், அன்னாபிஷேகம் நடைபெற்றது. மேலும் 16 வகை தீபாராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் உபயதாரர்களான கண்பத் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர்கள் ஹரிகரமுத்து, செந்தில் மற்றும் அவரது குடும்பத்தினர், பக்தர்கள் பலர் கலந்துகொண்டனர். பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணி ஆகியோர் செய்தனர். முடிவில் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    • சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.
    • காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள் நடக்கிறது.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) சண்முகருக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீதனையும் நடக்கிறது. பின்னர் 8.30 மணிக்கு சுவாமி அஸ்திர தேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகமும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீதனையும், விளக்கு பூஜையும் நடக்கிறது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

    தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காலை முதல் மாலை வரை பக்தி சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், ராமதாஸ், கணேசன், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • மதுரையில் சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    • சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    மதுரை

    ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள சிவன் கோவிலில் நேற்று மற்றும் இன்று அன்னாபிஷேக வழிபாடு நடைபெற்றது. மதுரை நகரில் உள்ள பெரு ம்பாலான கோவில்களில் இன்று காலை அன்னாபிஷேக நிகழ்ச்சி நடந்தது.

    மதுரை மேலமாசி வீதியில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டு நன்மை தருவாருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 110 படி சாதம் தயாரிக்கப்பட்டு சிவலிங்கத்திற்கு அலங்கரிக்கப்பட்டு தீபா ராதனை காட்டப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து அலங்காரம் களைக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தெப்பக்குளத்தில் உள்ள முக்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால்சுனை கண்ட சிவபெருமான் கோவிலில் அன்னாபிஷேகம் நடந்தது. சாதத்தால் சிவலிங்கம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    இதே போல் நகரில் உள்ள பெரிய மற்றும் சிறிய அளவிலான சிவன் கோவில்களில் இன்று காலையிலேயே அன்னாபிஷேகம் நடத்தப்பட்டு சந்திர கிரகணத்தை முன்னிட்டு கோவில் நடைகள் சாத்தப்பட்டன.

    • ராஜபாளையம் கருப்பஞானியார் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது.
    • 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையத்தில் சாலியர்களுக்கு பாத்தியப்பட்ட கருப்பஞானியார் சுவாமி கோவிலில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது.

    கருப்பஞானியார் மற்றும் பொன்னப்பஞானியார் சுவாமிகளுக்கு மாலை 6 மணிக்கு மேல் 20 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கருப்பஞானியார் சுவாமிக்கு 15 கிலோ எடையிலான காய்கறிகள் மற்றும் பழங்களில் அலங்காரமும், பொன்னப்பஞானியார் சுவாமிக்கு 25 கிலோ எடையிலான காய்கறிகள், பழங்கள் மற்றும் புஷ்ப அலங்காரமும் செய்யப்பட்டது.

    அலங்காரம் செய்த பின்னர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. 8 மணிக்கு மேல் சுவாமிகள் மீது சாத்தப்பட்ட சாதத்தை பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால், பல்வேறு நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பூஜைக்கு பின்னர் 500க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் தலைவர் வைத்தீஸ்வரன், தர்மகர்த்தா ஞானகுரு செய்திருந்தனர்.

    • சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது.

    பெரியபாளையம் அருகே உள்ள சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. அனைத்து உயிரினங்களுக்கும் சிவ பெருமான் உணவு அளித்து காப்பதற்கு அடையாளமாக அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் அகத்தீஸ்வரர் கோவிலில் கடந்த 20 ஆண்டுகளாக அன்னாபிஷேகம் நடை பெறாமல் இருந்தது. எனவே அன்னாபிஷேக விழா நடத்த வேண்டும் என்று பக்தர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஐப்பசி மாத பவுர்ணமியை யொட்டி நேற்று சிறுவாபுரி அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

    இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. மூலவர் காய்கறிகள் மற்றும் அன்னத்தால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இரவு கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு இந்த அன்னம் பிரசாதமாக வழங்கப்பட்டது. இதில், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. டி.ஜே.கோவிந்தராஜன் உள் ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    20 ஆண்டுக்கு பிறகு அகத்தீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடைபெற்றதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டது.
    • 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர்.

    அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிரகதீஸ்வரர் கோவில் உள்ளது. தஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழனால் இந்த கோவில் கலைநயத்துடன் பிரமாண்டமாக கட்டப்பட்டது. போர் கைதிகள் மற்றும் வீரர்களை கொண்டு 4½ ஏக்கர் பரப்பளவில் தற்கால பொறியியல் வல்லுனர்களுக்கு சவால்விடும் வகையில் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது இந்த கோவில் இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி துறையால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த கோவிலில் இந்து சமய அறநிலைய துறையினர் பூஜைகள் செய்து நிர்வகித்து வருகின்றனர். உலக புராதான சின்னங்கள் அடங்கிய பட்டியலை வெளியிடும் யுனெஸ்கோ அமைப்பினர் இந்த கோவிலை புராதான சின்னமாக அறிவித்து உலக சுற்றுலா வரைபடத்தில் இடம்பெற செய்து பெருமைபடுத்தியுள்ளனர்.

    மேலும் இக்கோவிலில் நிறுவப்பட்டுள்ள சிவலிங்கம் 60 அடி சுற்றளவும், 13½ அடி உயரமும் கொண்டு பிரமாண்டமாக காணப்படுகிறது. ஒரே கல்லால் செதுக்கப்பட்டுள்ளது என்ற சிறப்பும் உண்டு. இந்த நிலையில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாத பவுர்ணமி அன்று வரலாற்று சிறப்புமிக்க இக்கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதனை காஞ்சி சங்கரமட நிர்வாகிகள் கடந்த 37 ஆண்டுகளாக செய்து வந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக அன்னக்காப்பு அலங்காரம் அபிஷேகம் மட்டுமே செய்யப்பட்டது.

    இந்நிலையில் 38-வது ஆண்டாக நேற்று ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு இந்த கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை 100 மூட்டைகளில் இருந்த 2,500 கிலோ பச்சரிசியை 6 நீராவி அடுப்புகளில் சமைத்தனர். பின்னர் மாலை 5 மணி வரை அன்னாபிஷேக பணிகள் நடந்தன. இதில் சமைக்கப்பட்ட சாதத்தை நூற்றுக்கணக்கான சிவாச்சாரியார்கள் மூங்கில் கூடைகளில் சுமந்து சென்று சிவலிங்கத்தின் மீது சாத்தி அன்னாபிஷேகம் செய்தனர். பின்னர் சிவலிங்கத்தின் மீது காய்கறிகள், பழங்கள், பலகாரங்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு, பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியளவில் ஐந்து முக மகாதீபாராதனை நடந்தது. லிங்கத்தின் மீது சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் லிங்கத்தின் தன்மையை பெறுவது என்றும், ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை தரிசிக்கும் புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

    இந்த அன்னாபிஷேக நிகழ்ச்சியில் திருச்சி சரக டி.ஐ.ஜி. சரவணசுந்தர், ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ. க.சொ.க.கண்ணன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், தாசில்தார் துரை, உதவி ஆணையர் நாகராஜ், செயல் அலுவலர் செந்தமிழ்செல்வி மற்றும் தொல்லியல் துறை அலுவலர்கள் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பின்னர் இரவில் சிவலிங்கத்தின் மீது சாத்தப்பட்ட சாதம் இரவு 8 மணியளவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. இந்த சாதத்தை சாப்பிடுவதால் நோய்கள் குணமாகும், குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. பக்தர்களுக்கு வழங்கப்பட்ட சாதம் போக மீதமுள்ள சாதம் அருகில் உள்ள ஜீவராசிகளுக்கும் மற்றும் குளங்களில் உள்ள மீன்களுக்கும் உணவாக அளிக்கப்பட்டது. விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு கலைக்கதிரவன், இன்ஸ்பெக்டர் பெரியசாமி ஆகியோர் செய்திருந்தனர்.

    • திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.

    உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேக விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

    துாத்துக்குடியில் பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேஸ்வர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா விமரிசையாக நடக்கும்.

    அதுபோல் இந்த ஆண்டும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், 11மணிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.

    பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்திலலும், அம்பாள் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இரவு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பவுர்ணமி பூஜை கமிட்டி நெல்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

    பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை :

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னையில் உள்ள சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில், எழும்பூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அர்த்தநாரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
    • கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.

    தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
    • இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது.

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி 7-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.53 மணிக்கு தொடங்கி வருகிற 8-ந் தேதி மாலை 4.59 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. பவுர்ணமியில் தான் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது நியதி.

    ஆனால் இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிவாலயங்களிலும், குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நாளை அன்னாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் நாளை மாலையில் அன்னாபிஷேக தரிசனம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம், பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×