என் மலர்
வழிபாடு

தஞ்சை பெருவுடையாருக்கு 1000 கிலோ அரிசி சாதத்தால் அன்னாபிஷேகம்
- 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.
பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.
பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.