என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னாபிஷேகம்"

    • ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது.
    • அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும்.

    நமக்கு உணவு தரும் சிவனுக்கே அரிசி உணவை அபிஷேகம் செய்து படைக்கும் விழா தான் அன்னாபிஷேகம். நாளை (புதன்கிழமை) தமிழகம் முழுவதும் சிவாலயங்களில் அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    ஐப்பசி மாதப் பவுர்ணமி தினத்தன்று சகல சிவாலயங்களிலும் சாயரட்சையின் போது பரம கருணைக் கடலாம் சிவபெருமானின் அருவுருவமான லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்யப்படுகின்றது.

    பவுர்ணமி அன்று சந்திரன் தனது பதினாறு கலைகளுடன் முழுமையான அழகுடன் விளங்குகின்றான் அன்று அவனது கலை அமிர்த கலையாகும். அத்தகைய ஐப்பசி பவுர்ணமியன்று அறுவடையான புது நெல்லைக் கொண்டு அன்னம் படைத்து சிவனுக்கு அபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானமாக அளிப்பது பெரும் புண்ணியத்தை தர வல்லதாகும்.

    சிதம்பரத்தில் தினமும் காலை 11 மணியளவில் ரத்ன சபாபதிக்கு அன்னாபிஷேகம் நடைபெற்று அந்த அன்னம் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படுகின்றது. எனவேதான் இத்தலத்தை அப்பர் பெருமான் அன்னம் பாலிக்கும் தில்லை சிற்றம்பலம் என்று சிறப்பித்துப் பாடினார். இந்த அன்னாபிஷேகத்தை தரிசித்து பிரசாதத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கு என்றுமே அன்ன ஆகாரத்திற்கு கவலையே இல்லை.

    அன்னாபிஷேகத்தன்று சிவபெருமானின் மேனியிலே சாற்றப்படுகின்ற ஒவ்வொரு பருக்கை சோறும் ஒரு சிவலிங்கம் என்று கருதப்படுகிறது. எனவே அன்று அன்னாபிஷேக கோலத்தில் சிவதரிசனம் செய்தால் கோடி சிவதரிசனம் செய்வதற்கு சமம் ஆகும்.

    இதையே சோறு கண்ட இடம் சொர்க்கம் என்றும் கூறுவார்கள். அன்னாபிஷேக கோலத்தில் சிவபெருமானை தரிசிக்க மோட்சம் கிட்டும். சிவன் அபிஷேகப்பிரியர். மொத்தம் 70 பொருட்களால் அவரை அபிஷேகம் செய்யலாம். ஒவ்வொரு அபிஷேக பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. பஞ்சாமிர்த அபிஷேகம் செய்தால் சகல காரியங்களிலும் சிவன் நமக்கு வெற்றித்தருவார். இத்தகைய அபிஷேகங்களில் ஒன்றுதான் சுத்த அன்னம். சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது அதிக சிறப்புடையதாகும்.

    ஐப்பசி மாதம் அஸ்வினி நட்சத்திரத்திற்குரிய அன்னத்தால் வழிபடுவது சிறப்பானது. முறையாக சிவபெருமானுக்கு ஐப்பசி பவுர்ணமியன்று அன்னாபிஷேகம் செய்து வழிபடுவதால் உலகம் முழுவதும் சுபிட்சமாக விளங்கும் என்று சிவாகமம் கூறுகின்றது. அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் உண்டால் பலன் நிச்சயம் உண்டு என்பது ஐதீகம். அன்னாபிஷேகம் எவ்வாறு நடைபெறுகின்றது என்று தெரியுமா? ஐப்பசி பவுர்ணமியன்று காலையிலே எம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பின் சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னம் வடித்து லிங்கம் முழுவதும் மறையும் அளவிற்கு சாற்றுவார்கள். இது அன்னாபிஷேகம் எனப்படுகின்றது.

    சாயரட்சை பூஜை அன்னாபிஷேகம் கொண்ட பெருமானுக்கு நடைபெறுகின்றது. பின் இரண்டாம் காலம் வரை ( மாலை 6.00 மணியில் இருந்து 8:30 மணி வரை) அன்னாபிஷேகராக அருட்காட்சி தருவார். இரண்டாம் காலம் பூஜை முடிந்த பின் அன்னம் கலைக்கப்பட்டு பிரசாதமாக பக்தர்களுக்கு வழங்கப்படுகின்றது.

    பொதுவாக அபிஷேகம் செய்யப்பட்ட அன்னத்தை ஓடும் நீரில் கரைத்து விடுவது வழக்கம். குறிப்பாக லிங்கத்தின் மீது இருக்கும் அன்னத்தை விடுத்து மற்ற இடங்களில் உள்ள அன்னத்தை எடுத்து தயிர் கலந்து பிரசாதமாக கொடுப்பார்கள். மீதமான அன்னம் திருக்குளத்திலோ அல்லது கடலிலோ கரைக்கப்படும். சிவபெருமானின் அருட்பிரசாதம் நீர்வாழ் உயிரினங்களுக்கும் கிடைக்க வேண்டும் என்பதால் இவ்விதம் செய்யப்படுகின்றது.

    தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கை கொண்டசோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிவபெருமானின் லிங்கத் திருமேனி பெயருக்கேற்றார்ப் போல பெரியதாகியதால் (கங்கை கொண்ட சோழபுரத்தின் லிங்கத்தின் ஆவுடை 43 முழம் நீளம்.) காலையிலேயே அன்னாபிஷேகம் தொடங்கிவிடும்.

    புது அறுவடையான அரிசி மூட்டை மூட்டையாக வந்து குவிந்து விடும். 100 மூட்டை வரை அபிஷேகத்திற்காக தேவைப்படுகின்றது, உழவர் பெருமக்கள் நெல்லை கோவிலுக்கு இலவசமாக வழங்குவார்கள். அத்தனை அன்னமும் பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும். அவ்வரிசியைக் கண்டு சமைக்கப்பட்ட அன்னம் கொப்பரை கொப்பரையாக கொண்டு வந்து சிவபெருமானின் திருமேனி மேல் சிறிது சிறிதாக சாற்றப்படும். சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னாபிஷேகம் ஆக மாலை ஆகும். பின்னர் மாலை பூஜைகள் முடிந்து அர்த்த சாமத்திற்கு பின் அன்னம் அனைவருக்கும் பிரசாதமாக வழங்கப்படும்.

    அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறும் மற்றோர் தலம், குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் திருக்காட்டுப்பள்ளிக்கு அருகில் உள்ள செந்தலை என்னும் தலம் ஆகும். அன்னாபிஷேகத்தன்று பகல் 11 மணிக்கு முதலில் திருநீற்றால் அபிஷேகம் நடைபெறும். பிறகு மற்ற திரவியங்களால் எப்போதும் போல அபிஷேகங்கள் நடைபெறும். மாலை ஐந்து மணிக்கு சிவபெருமானின் திருமேனி முழுவதும் அன்னத்தாலும் மற்றும் காய்கறிகளாலும் அலங்காரம் செய்யப்படும். பூர்ண அலங்கரத்தில் விளங்கும் எம்பெருமானுக்கு சோடச உபசாரங்களும் சிறப்பு தீப ஆராதனையும் நடைபெறும். இரவு 9 மணி அளவில் மீனாட்சி சுந்தரேஸ்வரரின் அன்னாபிஷேக திருமேனியின் மீது பூரண சந்திரன், தனக்கு சாப விமோசனம் அளித்து தன்னை ஜடா முடியிலே சூடிக் கொண்ட அந்த சந்திரசேகரனை தனது அமிர்த கலைகளால் தழுவுவான். இத்தலத்தின் சிறப்பு இது தான் அன்னாபிஷேகம் செய்யப்பட்ட இறைவனை சந்திரன் தனது அமுத தரைகளால் தழுவி பூஜை செய்கிறான். இவ்வாறு சந்திரன் வழிபடும் மீனாட்சி சுந்தரேஸ்வரரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் செந்தலையில் கூடி அர்த்த சாம பூஜையில் எம்பெருமானை வழிபட்டு நன்மை அடைகின்றனர்.

    நாளைய பவுர்ணமி அதிக பிரகாசம்

    அன்னாபிஷேகம் செய்யப்படுவதன் பின்னணியில் மற்றொரு புராண கதை:-

    தட்சனுக்கு ஐம்பது பெண்குழந்தைகள். அவர்களில் அசுபதி தொடங்கி ரேவதி வரையிலான இருபத்தேழு பெண்களை சந்திரனுக்குத் திருமணம் செய்து தந்தான். சந்திரன் கார்த்திகை, ரோகிணி ஆகிய இருவரிடத்தும் மட்டும் மிகவும் பிரியமாக நடந்துகொண்டான். அதிலும் ரோகிணியிடம் மட்டும் அதிக நேசம் காட்டினான்.

    மற்ற பெண்கள் எல்லோரும் சேர்ந்து தந்தையான தட்சனிடம் முறையிட்டனர். தட்சன் வெகுண்டு சந்திரனை அழைத்துக் காரணம் கேட்டான். சந்திரன் செய்வதறியாது திகைக்கவே இன்றிலிருந்து உனது கலைகள் ஒவ்வொன்றாகத் தேயக்கடவது என்று சாபமிட்டான். சந்திரனின் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயத் தொடங்கின.

    இதனால் சந்திரன் கைலாசம் சென்று பரமேஸ்வரனை வணங்கித் தஞ்சம் கேட்டான். பரமேஸ்வரனும் சந்திரனுக்கு அடைக்கலம் தந்து மூன்றாம் பிறைச்சந்திரனை தூக்கித்தன் தலைமேலே சூட்டிக் கொண்டான். சந்திரனை நோக்கி உன் தவறை உணர்வதற்காக இன்று முதல் உன் கலைகள் ஒவ்வொன்றாகத் தேயவும், பின் வளரவும் அருளினோம். ஆயினும் ஐப்பசி மாதப் பவுர்ணமி அன்று மட்டும் உன் பூரண பதினாறு கலைகளுடன் நீ மிளிர்வாய் என ஆசிகள் வழங்கினார்.

    அத்தகைய ஐப்பசி மாதப் பவுர்ணமி புனித நாளினில் தான் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகின்றது. நவக்கிரகங்களில் சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி. எனவே அதனைக் கொண்டே ஈசனுக்கு அன்னம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றோம்.

    அன்னாபிஷேகம் செய்வதால் நல்ல மழை பெய்து நல்ல முறையில் விவசாயம் நடைபெறும் எனவும், உணவுப் பஞ்சம் ஏற்படாது என வேதங்கள் தெரிவிக்கின்றன.

    • கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.
    • மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும்.

    இந்த கோவிலில் உள்ள மூலஸ்தான கருவறையில் அமைந்துஉள்ள சிவலிங்கம் குமரி மாவட்டத்தில் மிக உயரமான 5½ அடி சிலை ஆகும்.

    அப்படிப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பவுர்ணமி அன்று மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல இந்த ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி யான வருகிற 8-ந்தேதி இந்த கோவிலில் உள்ள மூலவரான குகநாதீஸ்வரருக்கு அன்னா பிஷேக நடக்கிறது. இதை யொட்டி அன்று காலை 7 மணிக்கு அபிஷேகமும் 7.30 மணிக்கு தீபாராதனையும் 9.30 மணிக்கு சிறப்பு அபி ஷேகமும் நடக்கிறது.

    பின்னர் காலை 10.15 மணிக்கு மூலவரான குகநா தீஸ்வர ருக்கு 100 கிலோ அரிசியால் சமைக்கப் பட்ட அன்னத்தால் அன்னா பிஷேகம் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார ஷோடஷ தீபாராதனையும் 12.30 மணிக்கு சிறப்பு அன்னதானமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநா தீஸ்வரர் கோவில் பக்தர்கள் பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    • உலகப்பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
    • வருகிற 7-ந் தேதி நடக்க உள்ளது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள கங்கைகொண்ட சோழபுரத்தில் கங்கை வரை படையெடுத்து வெற்றி பெற்றதின் அடையாளமாக மாமன்னன் ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திரசோழன் பிரகதீஸ்வரர் கோவிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டினார். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த கோவிலில் ஒரே கல்லிலான நவக்கிரகம் மற்றும் சிவலிங்கம் உள்ளன.

    இந்த கோவில் உலகப்பிரசித்தி பெற்று புராதன சின்னமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்டு மத்திய அரசால் தொல்லியல்துறை பாதுகாப்புத்துறை மூலம் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

    இந்த கோவிலில் சுமார் 60 அடி சுற்றளவும் 13.5 அடி உயரமும் கொண்ட ஒரே கல்லிலான சிவலிங்கத்திற்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இவ்வாறு அன்னாபிஷேகம் செய்யப்படும் போது 100 மூட்டை பச்சரிசியால் சாதம் சமைக்கப்பட்டு சிவலிங்கத்தின் மேல் சாத்தப்படும். இவ்வாறு சாத்தப்படும் ஒவ்வொரு சாதமும் ஒவ்வொரு சிவலிங்கத்தின் தன்மையைக் கொண்டதாக கூறப்படுவது ஐதீகம். இதனால் கோடிக்கணக்கான சிவலிங்கத்தை ஒரே நேரத்தில் தரிசிப்பது கோடி புண்ணியம் கிடைக்கும் என்பதும் ஐதீகமாகும். எனவே இந்த ஆண்டு ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று வருகிற 7-ந் தேதி அன்னாபிஷேகம் நடைபெற உள்ளது.

    • அன்னாபிஷேக விழா 7-ந்தேதி நடைபெற உள்ளது.
    • 7-ந்தேதி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது.

    திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் அன்னாபிஷேகமும் ஒன்றாகும்.

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆகம விதிகளின்படி ஐப்பசி மாத ஆவணி நட்சத்திர தினத்தன்று உலக உயிர்களுக்கு உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேக விழா நடக்கிறது. இந்த ஆண்டிற்கான அன்னாபிஷேக விழா வருகிற 7-ந் தேதி (திங்கட்கிழமை) நடைபெற உள்ளது.

    அதனால் அன்னாபிஷேகம் நடைபெறும் பிற்பகல் 3 மணி முதல் மாலை 6 மணி வரை கோவிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி கிடையாது. மாலை 6 மணிக்கு மேல் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    மேலும் வருகிற 7-ந் தேதி மற்றும் 8-ந் தேதி ஆகிய நாட்களில் பவுர்ணமி வருகிறது.. அன்றைய தினங்களில் அதிகளவில் பக்தர்கள் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பக்தர்கள் நெடுநேரம் காத்திருப்பதை தவிர்க்கவும், விரைந்து தரிசனம் செய்வதற்கு ஏதுவாகவும் 7 மற்றும் 8-ந் தேதிகளில் அமர்வு தரிசனம் ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் பவுர்ணமி தினத்தன்று எவ்வித தரிசனத்திற்கும் முன்னுரிமை வழங்கப்படமாட்டாது என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

    • நாளை நடக்கிறது
    • அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த கொளத்தூர் ஏகாம்ப ரேஸ்வரர் கோவிலில் நாளை (திங்கட்கிழமை) சாமிக்கு அன்னாபிஷேகம் நடக்கிறது.

    இதைமுன்னிட்டு காலையில் சாமிக்கு பாலாபிஷேகம், மாலையில் சாமிக்கு அன்னாபிஷேகம், அம்மனுக்கு காய்கறி அலங்காரம் தீபாராதனை நடக்கிறது. பின்னர் இரவு 8 மணி அளவில் அருகே உள்ள ஏரியில் அன்னம் கரைக்கப்படுகிறது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    இதேபோல் கண்ணமங்கலம் அருள்மிகு ராமநாதீஸ்வரர் கோயிலிலும் நாளை அன்னாபிஷேகம், அம்மனுக்கு காதம்பரி அலங்காரம் செய்து தீபாராதனை நடக்கிறது.

    தொடர்ந்து இரவு 8 மணி அளவில் நாகநதி ஆற்றில் அன்னம் கரைக்கப்படுகிறது. பக்தர்கள் அன்னப்பிரசாதம் வழங்கப்படுகிறது.

    • 8-ந்தேதி அன்னாபிஷேகம் நடக்கிறது.
    • 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது.

    திருப்பதியில் உள்ள கபிலேஸ்வரர் கோவிலில் 8-ந்தேதி தெலுங்கு கார்த்திகை பவுர்ணமி உற்சவம் நடக்கிறது. அன்றே கோவிலில் அன்னாபிஷேகமும் நடக்கிறது. 8-ந்தேதி அன்று சந்திர கிரகணமும் நிகழ்கிறது. இதனால் 8-ந்தேதி காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை 11 மணிநேரம் கபிலேஸ்வரர் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன.

    முன்னதாக 8-ந்தேதி அதிகாலை 3 மணியில் இருந்து அதிகாலை 3.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அபிஷேகம், அதிகாலை 3.30 மணியில் இருந்து அதிகாலை 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னாபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

    அதைத்தொடர்ந்து அதிகாலை 5.30 மணியில் இருந்து காலை 7.30 மணி வரை பக்தர்களுக்கு அன்னலிங்க தரிசனம், காலை 7.30 மணியில் இருந்து காலை 8 மணி வரை பக்தர்களுக்கு அனுமதியின்றி ஏகாந்தமாக அன்னலிங்க உத்வாசனம் நடக்கிறது. அதன்பிறகு கோவில் சுத்தம் செய்யப்பட்டு காலை 8 மணியில் இருந்து காலை 8.30 மணி வரை ஏகாந்தமாக சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து காலை 8.30 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை சந்திர கிரகணத்தால் 11 மணிநேரம் கோவில் கதவுகள் மூடப்படுகின்றன. இரவு 7.30 மணிக்கு கோவில் கதவுகள் திறக்கப்பட்டு இரவு 8 மணி வரை கோவில் சுத்தம் செய்யப்படுகிறது.

    அதன்பிறகு பக்தர்கள் இலவச தரிசனத்தில் சென்று சாமியை வழிபட அனுமதிக்கப்படுகின்றனர். இரவு 8 மணியில் இருந்து இரவு 8.30 மணி வரை அபிஷேகம், இரவு 8.30 மணியில் இருந்து இரவு 10 மணி வரை அலங்காரம், சஹஸ்ரநார்ச்சனை, நிவேதனம், தீபாராதனை, இரவு 10 மணியில் இருந்து இரவு 10.15 மணி வரை ஏகாந்த சேவை நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

    • லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுகிறது.
    • இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது.

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உரிய தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது. இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    இந்த ஆண்டு சந்திர கிரகணம் பவுர்ணமியில் வருவதால் கோவில்களில் நாளை (திங்கட்கிழமை) அன்னாபிஷேகம் கொண்டாடப்படுகிறது. பவுர்ணமி 7-ந் தேதி (திங்கட்கிழமை) மாலை 4.53 மணிக்கு தொடங்கி வருகிற 8-ந் தேதி மாலை 4.59 மணி வரை பவுர்ணமி திதி உள்ளது. பவுர்ணமியில் தான் அன்னாபிஷேகம் செய்ய வேண்டும் என்பது நியதி.

    ஆனால் இந்த ஆண்டு பவுர்ணமி அன்று சந்திரகிரகணம் வருகிறது. எனவே தமிழகத்தில் உள்ள சிவாலயங்களிலும், குறிப்பாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நாளை அன்னாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் நாளை மாலையில் அன்னாபிஷேக தரிசனம் செய்யலாம். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சுவாமிக்கு அபிஷேகம் செய்த அன்னம், பிரசாதமாக வழங்கப்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • தஞ்சை பெரிய கோவில் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது.
    • கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும்.

    தஞ்சை பெரிய கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது உலக பாரம்பரிய சின்னமாக விளங்குவதோடு, தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். 6 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட பீடமும், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது.

    இத்தகைய சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இன்று (திங்கட்கிழமை) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது.

    பின்னர் மாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சை அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

    • ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும்.
    • ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது.

    ஐப்பசி மாதத்தில் வரும் பவுர்ணமியில் சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இந்த நாளில் சிவபெருமானுக்கு நடைபெறும் அன்னாபிஷேகத்தில் கலந்து கொள்வது மிகவும் விசேஷமானது. அன்னாபிஷேக நாளில் சிவபெருமானை அன்னாபிஷேக கோலத்தில் தரிசிப்பது மற்றும் அன்னாபிஷேகத்திற்கு தேவையான சந்திரனின் காரகம் பெற்ற அரிசி வாங்கி கோவிலில் கொடுப்பது மற்றும் குறைந்தது 5 பேருக்காவது அன்னதானம் செய்வது புண்ணியமாகும். ஸ்ரீஅன்னபூரணியை வணங்கி வர உணவு வீணாவது குறையும். மேலும் உணவு தட்டுபாடின்றி கிடைக்கும்.

    அன்னம் என்பது பிரம்மா, விஷ்ணு, சிவ சொரூபமாக கருதப்படுகிறது. ஜேவன் கொடுக்கும் அன்னமும் சிவலிங்கம் ஆக மதிக்கப்படுகிறது. அன்னம் வேறு, ஆண்டவன் வேறு அல்ல. இரண்டும் ஒன்றுதான். இதையே சோத்துக்குள்ளே சொக்க நாதர் என்பார்கள்.

    ஐப்பசி மாதம் பவுர்ணமியன்று சிவாலயங்களில் சிவலிங்கத்துக்கு அன்னாபிஷேகம் நடைபெறும். ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த அரிய வழிபாடு இன்று நடக்கிறது. அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்வது சிறப்பானதாகும். சிவனின் மீது விழும் ஒவ்வொரு பருக்கையும் ஒரு லிங்கம் என்பது ஐதீகம். எனவே அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபாடு செய்தால் கோடி சிவதரிசனம் செய்த பலன் கிடைக்கும்.

    அன்னாபிஷேகம் செய்த சாதத்தை குழந்தைபாக்கியம் இல்லாதவர்கள் சாப்பிட்டால் பலன் நிச்சயம் உண்டு. லிங்கத்தின் மீது சாத்தப்பட்ட அன்னம் மிகவும் வீரியம் மிக்க கதிர்வீச்சு நிறைந்ததாக இருக்கும் என்பது ஐதீகம். அன்னாபிஷேக தினமான இன்று சிவனை வணங்கினால் பஞ்சபூ தங்களையும் வழிபட்ட புண்ணியம் கிடைப்பதோடு முக்தியும் பெறலாம். சந்திரன், பூமிக்கு மிக அருகில் வந்து தன் முழு ஒளியையும் பூமியில் வீசச் செய்யும் தினம் ஐப்பசி பவுர்ணமி ஆகும். இது விஞ்ஞான ரீதியாக நிரூபணம் செய்யப்பட்டது.

    அந்த ஒளியாற்றலை நாம் பரிபூரணமாகப் பெறுவதற்காகவே ஐப்பசி பவுர்ணமியில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது. அனைத்து சிவாலயங்களிலும் இன்று மாலை அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

    • உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை :

    ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று நவக்கிரகங்களில் 'சந்திரன்' தனது சாபம் முழுமையாக தீர்ந்து, 16 கலைகளுடன், பூமிக்கு அருகில் வந்து முழு பொலிவுடன் காட்சி அளிக்கும். முழுமையான ஒளியுடன் இருக்கும் அன்றைய நாளில் சிவபெருமானுக்கு சிறப்பு வழிபாடு செய்வது சிறப்பாக கருதப்படுகிறது. சந்திரனுக்கு உகந்த தானியம் அரிசி என்பதால், அன்று சிறப்பு வழிபாடாக அரிசியை வடித்து சோறாக மாற்றி ஈசனுக்கு லிங்க திருமேனியில் அன்னத்தால் அபிஷேகம் (அன்னாபிஷேகம்) செய்யப்படுகிறது.

    அதன்படி சென்னையில் உள்ள சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில், திருவொற்றியூர் தியாகராஜர் சுவாமி கோவில், திருவேற்காடு வேதபுரீசுவரர் கோவில், எழும்பூரில் 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அர்த்தநாரீசுவரர் கோவில் உள்ளிட்ட சிவாலயங்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. உணவை வீணடிப்பது என்பது மிகப்பெரிய பாவம். உணவு, இறைவனுக்கு சமமானது என்பதை உணர்த்துவதற்காகவே அன்னத்தால் இறைவனுக்கு அபிஷேகம் செய்து, அதை புனிதமான பிரசாதமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 500 கிலோ காய்கறி, இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

    தஞ்சை பெரியகோவிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப்பெரிய லிங்கத்திருமேனியாகும். லிங்கம் 12 அடி உயரமும், 23 அடி சுற்றளவும் கொண்டது. ஆவுடையார் எனப்படும் பீடம் 13 அடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஒரே கல்லால் உருவாக்கப்பட்ட பிரமாண்டத்திருமேனியாக மூலவரான பெருவுடையார் திகழ்கிறார்.

    பெருவுடையாருக்கு ஆண்டுதோறும் ஐப்பசி மாத பவுர்ணமி தினத்தன்று அன்னாபிஷேகம் நடைபெறும். இந்தாண்டு ஐப்பசி பவுர்ணமியையொட்டி நேற்று பக்தர்களால் 1,000 கிலோ பச்சரிசி, 500 கிலோ காய்கறிகள், இனிப்பு வகைகள், மலர்கள் வழங்கப்பட்டன.

    பக்தர்கள் வழங்கிய அரிசியை சாதமாக தயார் செய்து பெருவுடையார் திருமேனி முழுவதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடந்தது.

    தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். இரவு லிங்கத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட சாதம், பக்தர்களுக்கும், கால்நடைகளுக்கும் பிரசாதமாக வழங்கப்பட்டது. மீதமுள்ள சாதம், அருகில் உள்ள கல்லணைக் கால்வாயில் நீர் வாழ் உயிரினங்களுக்கு உணவாக போடப்பட்டது.

    இதற்கான ஏற்பாடுகளை அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜிராஜா போன்ஸ்லே, உதவி ஆணையர் கவிதா, கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர், கோவில் பணியாளர்கள் செய்து இருந்தனர்.

    • திரளாக பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது.

    உலகத்தில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவு அளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இந்த அன்னாபிஷேக விழா நடத்தபடுகிறது. இந்த நாளில் சிவபெருமானை தரிசித்தால் ஈசனின் அருள் முழுமையாக கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இதனால் நேற்று தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அனைத்து சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.

    துாத்துக்குடியில் பாகம்பிரியாள் அம்பாள் உடனுறை சங்கரராமேஸ்வர் கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழா விமரிசையாக நடக்கும்.

    அதுபோல் இந்த ஆண்டும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை 10 மணிக்கு கும்ப பூஜையும், 11மணிக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டு சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடந்தது.

    பின்னர் மதியம் 12 மணிக்கு சுவாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை சுவாமி அன்னாபிஷேக அலங்காரத்திலலும், அம்பாள் புஷ்ப அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.

    இரவு பக்தர்களுக்கு அன்னாபிஷேக பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து பவுர்ணமி பூஜை கமிட்டி சார்பில் திருவிளக்கு பூஜை நடந்தது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி தமிழ்செல்வி, தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர், பவுர்ணமி பூஜை கமிட்டி நெல்லையப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    ×