என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் சென்ற காட்சி.
திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம்- சாமி தரிசனம் செய்ய 4 மணி நேரமானது
- கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
- அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
ஆனி மாதத்திற்கான குரு பவுர்ணமி இன்று அதிகாலை சுமார் 2.33 மணியளவில் தொடங்கியது. நாளை அதிகாலை 3.08 மணியளவில் நிறைவு பெறுகிறது.
இன்று காலையில் பக்தர்கள் கிரிவலம் வர தொடங்கினர். நேரம் செல்ல செல்ல கிரிவல பாதையில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்தது. கிரிவலம் செல்வதற்காக தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கார், வேன், பஸ் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர்.
கிரிவலம் தொடங்கும் முன்பு பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரில் உள்ள 16 கால் மண்டபத்தின் எதிரில் ஏராளமானோர் கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
மேலும் கோவிலில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இதனால் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய ராஜ கோபுரம் வழியாக அனுமதிக்கப்பட்டனர்.
கோவிலில் சாமி தரிசனம் செய்ய சுமார் 4 மணி நேரத்திற்கு மேலானதாக பக்தர்கள் தெரிவித்தனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் போன்றவை மாவட்ட நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அசம்பாவித சம்பவம் நடைபெறாமல் தடுக்க அங்கு தீயணைப்புத் துறையினர் தீ தடுப்பு தண்ணீர் வாகனத்துடன் தயார் நிலையில் இருந்தனர். அருணாசலேஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதுமட்டுமின்றி போலீசாரும் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.






