என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "குலதெய்வம்"
- எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது.
- கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.
குலம் தெரியாமல் போனாலும், குல தெய்வம் தெரியாமல் போகக் கூடாது என பெரியவர்கள் சொல்வார்கள்.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்மோடு எப்போதும் நீங்காமல் இருந்து நமது வாழ்க்கை முன்னேற்றத்திற்கு வழி காட்டும் அருட்சக்தி ஆகும்.
கோடி தெய்வங்களின் சன்னதியை தேடிப் போய் வணங்கி பெறும் ஆசிகளை ஒற்றைக் குலதெய்வத்தின் சன்னதி முன் வணங்கி பெறலாம்.
அன்னிய படையெடுப்பு காரணமாகவோ, பிழைப்பிற்காகவோ, அல்லது வறட்சி காரணமாகவோ, கொள்ளை நோய் காரணமாகவோ முந்தைய தலைமுறையினர் தங்களது பூர்வீக ஊரை விட்டு வேறு பகுதிகளில் குடியேறி இருப்பார்கள்.
ஊரை காலி செய்யும் முன் தங்களது முன்னோர்கள் வழி வழியாக வணங்கிய குல தெய்வத்தின் முன் கண்ணீரோடு நிற்பார்கள்.
அந்தக் குல தெய்வத்தின் சன்னதியில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து "இங்கே இருந்து எங்கள காப்பாத்துன மாதிரி நாங்க குடி போகுற இடத்துக்கும் எங்களோடு வந்து எங்கள காப்பாத்துமய்யா" என புலம் பெயருவார்கள்.
அந்த கைப்பிடி மண்ணைக் கொண்டு தாங்கள் புதிதாக குடியேறும் ஊரில் தங்களது குல தெய்வத்திற்கு கோவில் கட்டி வழிபடுவார்கள்.
எத்தனை வளமான மண்ணாக இருந்தாலும் தளிர்த்து வளரும் செடியை அதன் பிறந்த இடத்து பிடி மண்ணோடு இன்னொரு இடத்தில் வைத்தால் மட்டுமே வேர் விட்டு தழைத்து வளரும்.
புலம் பெயரும் இடத்தில் எத்தனை தெய்வ ஆலயங்கள் இருந்தாலும் குல தெய்வத்தின் அருளையும் ஆசியையும் பிரதானமாக நினைத்து பிடிமண் ஆலயம் என குல தெய்வத்தின் ஆலயத்தை வைத்து வழிபட்டு வந்தனர் முன்னோர்கள்.
குல தெய்வம் கோவிலுக்கு சென்று வணங்கும்போது நமது குலதெய்வத்தின் அருளோடு நமது முன்னோர்களின் ஆசியும் கிடைக்கின்றது.
"நாள் செய்யாததை கோள் செய்யும்...
கோள் செய்யாததை குலதெய்வம் செய்யும்" என்பார்கள்.
ஒரு செயல்களையோ, காரியத்தையோ ஆரம்பிக்கும் முன் நல்ல நேரம், நல்ல நாள் பார்த்து செய்வோம்.
கிரகம் எனும் கோள்களில் சுக்கிர திசை உச்சத்தில் இருக்கிறதா என கிரகாச்சார அமைப்பை பார்த்து தொழில் ஆரம்பிப்போரும் உண்டு.
நாளும், கோளும் பார்க்காமல் கற்குவேல் அய்யனாரே! நான் ஆரம்பிக்குற மளிகை கடை யாவற்றுக்கும் நீர் தான் மொதலாளி! எந்த நட்டமும், போட்ட முதலுக்கு சேதாரமும் வராம லாபத்தை தாருமய்யா! என குல தெய்வத்தை வணங்கி ஆரம்பிக்கும் எந்த தொழிலும் தோற்றுப்போனதாக சரித்திரம் இல்லை.
ஆம்... குலதெய்வத்தின் அருளாசி நாளும் கோளும் செய்யாததை விட அதிகமாக அருள் புரிந்து நம்மை காக்கும்.
பசியால் பிள்ளை அழுதால் தாய் பொறுக்க மாட்டாள். குல தெய்வமும் தாயை போலத்தான். தன் முன் குறைகளை கண்ணீரோடு சொல்லி முறையிடும் தனது பிள்ளைகளின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றி தரும் கருணை கொண்டவர் குலதெய்வம் ஆவார்.
எய்யா!! இளம்பாளை சாஸ்தாவே!! எம்புள்ளைக்கு வயசு முப்பது ஆவ போவுது. காலா காலத்துல எம்புள்ளைக்கு கல்யாணம் காட்சிய நடத்தி தாரும் என...
குல தெய்வ சன்னதியில் தனது கஷ்டங்களை, குறைகளை சொல்லி அழுது, கண்ணீர் சிந்தியபடி கேட்டவர்களின் வேண்டுதல்களை உடனே நிறைவேற்றித் தரும் வல்லமை படைத்தது குலதெய்வத்தின் அருளாசி ஆகும்.
இந்த சனிப்பெயர்ச்சி என்னை போட்டு பாடாய் படுத்துதே! என கிரகப்பெயர்ச்சி பலனை நினைத்து வருந்துபவர்கள் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கினாலே போதும்.
எந்த ஒரு கிரகப் பெயர்ச்சியும் குலதெய்வத்தை முறையாக சென்று வணங்கி வருபவர்களை ஒன்றும் செய்து விட முடியாது. குல தெய்வத்திற்கு அப்படி ஒரு சக்தி இருக்கின்றது.
"குல தெய்வத்தை கும்புடாம போனா குலம் தழைக்காது" என சொல்வார்கள்.
எம்புள்ளைக்கு கலியாணம் முடிஞ்சு வரும் பங்குனி மாசத்தோட பத்து வருசம் ஆவப் போவுது..
எம் மருமொவ வயத்துல ஒரு புள்ள பூச்சி தங்க காணோம்..
சொரிமுத்து அய்யா!! நாங்க அறிஞ்சு அறியாம எந்த தப்பு செஞ்சிருந்தாலும் மன்னிச்சுடும்.
என்னோட கொலம் தழைக்க எம்புள்ளைக்கு ஒரு வாரிசு கொடு.
புள்ள பெத்து கரையேறி வந்ததும் தாயையும், புள்ளையையும் ஒன்னோட தலத்துக்கு கூட்டி வந்து ஒன்னோட சன்னதியில என்னோட பேரபுள்ளைக்கு பொறந்த முடி எடுக்குறோமுய்யா! என மகனுக்காக குல தெய்வத்திடம் பிள்ளை வரம் கேட்டு பிரார்த்தனை செய்யும் தாய்மார்களின் வேண்டுதலை நம்மில் அனேகர் கேட்டு இருப்போம்.
குலம் தழைக்கும் வல்லமையை தருவது கூட குலதெய்வத்தின் அருளாசிகள் தான்.
தென் தமிழக மக்களுக்கு குலதெய்வம் பெரும்பாலும் சாஸ்தா ஆகவே இருப்பார்.
யார் இந்த சாஸ்தா?
சாஸ்தா என தற்போது தென்மாவட்ட மக்களால் அழைக்கப்படும் சொல் முந்தைய தலைமுறை மக்களால் சாத்தா என்று அழைக்கப்பட்டது.
சாத்து என்றால் கூட்டம் என பொருள்.
குல தெய்வ கோவிலுக்கு வழிபாட்டிற்கு வருபவர்கள் ஒரு போதும் தனித்து வர மாட்டார்கள்.
குடும்ப சகிதமாக கூட்டமாக வந்து தான் தங்களது குல தெய்வத்தை வணங்குவார்கள்.
கூட்டுக்குடும்பமாக வந்து கூட்டமாக மக்கள் வணங்குவதால் குல தெய்வமானவர் சாஸ்தா என அழைக்கப்பட்டார்.
குடும்பத்தில் தந்தையை ஐயா!! என்று அழைப்பது முந்தைய தலைமுறை நெல்லை மாவட்டத்து மக்களின் பேச்சு வழக்கம்.
ஐயா, ஐயன் என்ற தமிழ்ச்சொல்லுக்கு மூத்தவர், தலைவர் என்ற பொருள் படும்.அதனால் தங்களது குல தெய்வத்தை ஐயனார் என அழைத்தனர்.
தேவர்களுக்கு அமிர்தம் வழங்க பகவான் நாராயணர் எடுத்த மோகினி அவதாரத்தில் சிவ - வைணவ ஐக்கியமாக உதித்தவர் சாஸ்தா.
ஐயன் (திருமால்), அப்பன்(சிவன்) என்ற இரு மூர்த்திகளின் ஒருமித்த சக்தியாக சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் தான். தென் மாவட்டங்களில் சாஸ்தாவின் ஆலயங்கள் பெரும்பாலும் குளம், ஆறு, சுனை போன்ற நீர்நிலைகளின் அருகிலேயே அமைந்து இருக்கும்.
எதற்காக சாஸ்தாவை தென் மாவட்ட மக்கள் நீர்நிலைகளின் அருகில் வைத்து வணங்க வேண்டும்..?
விவசாயம் தான் தென்மாவட்ட மக்களின் பிரதான தொழில்.
நீரின்றி அமையாது உலகு என்பது போல் நீரின்றி விவசாயம் நடைபெறாது.
தங்களது நீர்நிலைகளை பாதுகாத்து விவசாயத்தை செழிக்க வைக்க தங்களது குலதெய்வமான சாஸ்தாவை நீர் நிலைகளின் கரையோரங்களில் வைத்து வணங்கி வந்தனர்.
"ஏரிக்கு ஒரு ஐயனாரும், ஊருக்கு ஒரு பிடாரியும் எங்க ஊருல உண்டு வேய்" என தங்கள் ஊரின் பெருமையாக கிராமத்தில் சொல்வார்கள்
காரையாறு சொரிமுத்து ஐயனார் அருஞ்சுனை காத்த ஐயனார், கடம்பாக்குளம் பூலுடையார் சாஸ்தா, ஸ்ரீவல்லப பேரி என்ற சீவலப்பேரி ஏரியின் மறுகால் மடையில் வீற்றிருக்கும் மறுகால் தலை சாஸ்தா.. என தென் மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற சாஸ்தா ஆலயங்கள் அனைத்தும் நீர் நிலையின் அருகாமையில் தான் இருக்கும்.
இவ்வாறு நீர்நிலைகளின் தெய்வமும், சம்சாரி எனும் விவசாய மக்களின் குல தெய்வமான சாஸ்தா பங்குனி உத்திர திருநாளில் அவதரித்தார்.
குல தெய்வத்தை வழிபடும் பங்குனி உத்திர நாள் தமிழகத்தில் எல்லா இடங்களிலும் கொண்டாடப்பட்டாலும் தென் தமிழகமான நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசியில் பங்குனி உத்திரத்தை கொண்டாடும் விதமே தனி..
சாஸ்தா அவதரித்த பங்குனி உத்திர திருநாள் ஆனது தென் மாவட்ட மக்கள் அனைவரும் குடும்பத்தோடு ஒன்று சேரும் நாள் என்று கூட சொல்லலாம்.
சொக்காரன் என அழைக்கும் பங்காளிகள் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்ளாதவர்கள் கூட உத்திர நாளில் சாஸ்தாவை வணங்க குலதெய்வ கோவிலுக்கு குடும்பமாக வந்து விடுவார்கள்.
போன வருச பங்குனி உத்திரத்தோட ஊருக்குப் போயிட்டா.., வியாபாரம் பாதிக்குமேன்னு சாஸ்தா கோவிலுக்கு போகாம இருந்துட்டேன்.
பாம்பு துரத்துற மாதிரி கனவு வருது.. வியாபாரமும் சரியில்லை.
வீட்டுக்காரி வேற மேலுக்கு சரியில்லாம படுத்துக்குடுதா..
எய்யா!! கடம்பா குளத்துக்கரை பூலுடையார் சாஸ்தாவே.. இந்த வருசம் உத்திரத்திற்கு ஒம்ம சன்னதிக்கு வர நீதாய்யா அருள் புரியணும்..
என சத்தம் போட்டு குலசாமியிடம் வேண்டி கொண்ட மளிகைக்கடை சொக்காரனின் வேண்டுதல் குரலை கேட்ட அனுபவம் நிறைய பேருக்கு இருக்கும்.
பங்குனி உத்திரத்திற்கு சென்று குலதெய்வத்தை வழிபடுவதை தென் மாவட்ட மக்கள் தங்களது கடமையாகவே கருதுவார்கள்.
பெரும்பான்மையான இந்த சாஸ்தா கோவில்களில் தினசரி பூஜைகள், தீபம் ஏற்றுவது கூட நடைபெறாது.
நிதம் தனது சன்னதியில் வந்து தன்னை வணங்கி வழிபட்டால் மட்டுமே அருள் புரிவேன், லாபத்தில் பத்து சதவீதம் பங்கு தந்தால் மட்டுமே காப்பாற்றுவேன் என ஒரு போதும் குல தெய்வமான சாஸ்தா தனது பிள்ளைகளிடம் நிபந்தனை விதிக்க மாட்டார்.
பிழைப்புக்காக ஏதோ ஒரு இடத்திற்கு சென்று தான் செய்யும் தொழிலை தெய்வமாக நினைத்து காலையில் வியாபாரம் ஆரம்பிக்கும் முன் எய்யா!! எங்க சாமி!! இன்றைய பொழுது நல்லாயிருக்கணும், நல்லா லாபம் கெடைக்கணும்" என தனது புகைப்படத்தின் முன் நின்று ஒற்றை ரூபாய் ஊதுபத்தியை ஏற்றியோ, ஏற்றாமலோ தன்னை வணங்கும் பிள்ளைகளின் பிரார்த்தனையை தான் இருந்த இடத்திலிருந்த படியே நிறைவேற்றி கொடுப்பது தான் குலதெய்வத்தின் தனிப்பெரும் கருணை எனலாம்.
வருடம் முழுவதும் தனியாக இருக்கும் சாஸ்தா ஆனவர் பங்குனி உத்திர நாளில் பிறந்தநாளை கொண்டாடும் சிறுவனை போல் உற்சாகம் ஆகிவிடுவார்.
ஆம். பங்குனி உத்திரம் தான் சாஸ்தாவின் பிறந்தநாள் ஆகும்.
பங்குனி உத்திர திருநாள் ஆனது சாஸ்தாவின் பிறந்த நாளோடு மட்டுமல்லாமல் நிறைய புண்ணிய நிகழ்வுகளையும் கொண்ட தினம் ஆகும்.
அனைத்து தமிழ் மாதங்களிலும் உத்திரம் நட்சத்திரம் வருவதுண்டு. பங்குனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திரத்திற்கு என்று தனி சிறப்பு உண்டு.
தெய்வங்களின் திருமணம் நடந்த தினமாதலால் "தெய்வங்களின் திருமண நாள்" என்ற பெயருக்கான பெருமைக்கு உரியது இந்த பங்குனி உத்திர திருநாள்.
சிவ பெருமான் - பார்வதி திருமணம், ஸ்ரீராமன் - சீதை திருமணம், ஸ்ரீரங்கமன்னார் - ஆண்டாள் திருமணம், முருகன் - தெய்வானை திருமணம், சந்திரன் அஸ்வினி முதல் ரோகிணி வரையிலான இருபத்தியேழு நட்சத்திரங்களை மணந்தது, கும்ப முனி அகத்தியர் லோபா முத்திரையை மணந்தது என பல்வேறு தெய்வங்களின் திருமணங்கள் பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக பல்வேறு புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பங்குனி உத்திர திருநாள் வழிபாடு மிகவும் புண்ணியமானதும், சகல நலன்களை தருவதும், துவக்கும் காரியங்களில் வெற்றியை தரவல்லதும் ஆகும்.
பங்குனி உத்திர திருநாள் வழிபாடு பணக் கஷ்டம், திருமணத் தடைகள், வாராக் கடன், ஆரோக்கியக் குறைவு போன்ற அனைத்து தடைகளையும் நீக்கி தரும் புண்ணிய நாளாகும்.
உத்திர திருநாளில் அன்னை, தந்தை, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை, உற்றார், உறவினர்களோடு உங்கள் குலதெய்வ கோவிலுக்கு சென்று வாருங்கள்.
தனியாக ஒருபோதும் குலதெய்வ கோவிலுக்கு செல்லாதீர்கள்.
தனியாக சென்று வேண்டும் வேண்டுதல்களை ஒருபோதும் குலதெய்வம் கேட்பதில்லை.
ஒற்றுமையாக குடும்பத்தோடு கூட்டமாக சென்று வேண்டும் வேண்டுதல்களைத் தான் குலதெய்வம் எப்பொழுதும் நிறைவேற்றி தரும்.
குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது தவறாது பொங்கலிட்டு குல தெய்வத்தை வணங்கி அவருக்கு படையலிட்ட பொங்கலை அவர் ஆலயத்தில் வைத்து சாப்பிடுங்கள்.
நீங்கள் படைக்கும் பொங்கல் நிச்சயம் உங்கள் குல தெய்வத்திற்கானது அல்ல..
யோவ்!!! என்ன!!! நாங்க வைக்குற பொங்கலு எங்க சாமிக்கு இல்லையா. நாங்க வைக்குற பொங்கலை எங்க சாமி ஏத்துக்கிடாதா என பட்டுன்னு எகிறாதீங்க..
பிள்ளைகள் வயிறார சாப்பிடுவதை தானே தாய் விரும்புவாள்.
தாயைப் போல தாய்மை குணம் நிறைந்தது தானே குலதெய்வம்.
தன்னை வணங்கி விட்டு பசியோடு தனது பிள்ளைகள் வீட்டிற்கு செல்லக்கூடாதே!! என்று எண்ணி தனக்கு பொங்கல் படைக்க வேண்டும் என்று கூறி தனக்கு படைக்கப்பட்ட பொங்கலை தனது ஆலயத்தின் முன் இருந்து வயிறார சாப்பிடும் பிள்ளைகளை கருவறையில் இருந்த படியே மனம் நிறைய பாசத்தோடு ஆசிகள் வழங்கி கொண்டிருப்பார் குல தெய்வமான சாஸ்தா.
குல தெய்வ வழிபாடு என்பது விட்டு போன உறவுகளை இணைப்பதற்காக, உறவுகள் விட்டு போகாமல் இருப்பதற்காக, பட்டுப்போன உறவுகளை துளிர வைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு புண்ணிய சடங்கு ஆகும்.
குலதெய்வத்தை வழிபட்டு அனைவரும் குடும்பத்தோடு ஒற்றுமையாக இருப்போம்.
தொடர்புக்கு:
isuresh669@gmail.com
- புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
- தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பது திருப்பதி ஏழு மலையானுக்கு மிகவும் உகந்தது.
தசாவதாரத்தில் எந்த அவதாரத்திலும் சேராதது ஸ்ரீ வேங்கடேசன் அவதாரம்.
பக்தர்களின் நலனுக்காக அவர் திருமலையில் எழுந்தருளி இருக்கிறார்.
புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் முதலில் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து கோலமிட வேண்டும்.
பின்னர் அலமேலு மங்கையுடன் கூடிய வேங்கடேசப் பெருமாள் படத்தை அலங்கரிக்க வேண்டும்.
இரு பக்கங்களிலும் ஐந்து முக குத்து விளக்கை ஏற்றி வைக்க வேண்டும்.
பூஜைக்குரியவற்றை சேகரித்து வைத்து ராகு காலம், எமகண்டம் நேரம் இல்லாமல் நல்ல நேரத்தில் மாவிளக்கேற்றி பூஜிக்க வேண்டும்.
சர்க்கரைப்பொங்கல், வடை எள் சாதத்தை நிவேதனமாக படைக்கலாம்.
புரட்டாசி மாதம் ஒவ்வொரு சனிக் கிழமையன்றும் மாவிளக்கு ஏற்றி, பூஜைகள் செய்ய வேண்டும்.
அரிசிமாவு, வெல்லம் ஆகியவற்றை கலந்து மாவில் ஒரு பகுதியை இளநீர் விட்டு பிசைந்து தீபம்போல் செய்து மீதி மாவை குவித்து அதன்மேல் பஞ்சினால் பூவத்தி போல் செய்து அதை தீபத்தில் வைத்து சுத்தமான நெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும்.
அதன் பிறகு பூஜைகள் செய்து ஆரத்தி காட்ட வேண்டும்.
பூஜை முடிந்ததும் தேங்காயை துருவி, மாவுடன் அதனை கலந்து அனைவருக்கும் பிரசாதமாக கொடுக்கலாம்.
துளசி தண்ணீர், புளி சாதம் மற்றும் எலுமிச்சை சாதம் வைத்து வேங்கடவனை வழிபடுவதும், துளசி, தாமரை மற்றும் குங்குமத்தால் அர்ச்சிப்பதும் விசேஷம்.
புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமை விரதத்தை மேற்கொண்டால் குலதெய்வத்தின் அருள் கிடைக்கும்.
செல்வம் செழிக்கும். துன்பங்கள் விலகும்.
- கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
- விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த காங்கேயநத்தம் கிராமத்தில் ரெங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் 4 தலைமுறைகளாக பலருக்கு குல தெய்வ கோவிலாக இருந்து வருவது வீரம்மாள் கோவில். அந்த வகையில் விஜயகாந்த் தனது தந்தை வழியில் வீரம்மாள் கோவிலுக்கு வரத்தவறியதில்லை.
இந்த கோவில் திருப்பணிகளுக்காக ஏராளமான நன்கொடைகளை வாரி வழங்கிய வள்ளலாக திகழ்ந்த விஜயகாந்த், தன்னால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலையிலும் தனது மனைவி, மகன்களை அனுப்பி வைத்து உதவிகள் செய்து வந்துள்ளார். கடைசியாக கடந்த ஆவணி மாதம் நடை பெற்ற குலதெய்வமான வீரம்மாள் கோவில் கும்பாபிஷேகத்திற்கு நன்கொடை அளித்துள்ளார்.
சுப நிகழ்ச்சிகள் எதுவாக இருந்தாலும் அதனை தொடங்கும் முன்பு வீரம்மாள் கோவிலுக்கு விஜயகாந்த் தனது குடும்பத்தினருடன் வந்திருந்து பூஜைகளில் கலந்துகொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார். குறிப்பாக மகா சிவராத்திரி தினத்தன்று மனைவி, மகன்களுடன் வந்து இரவில் கோவிலில் தங்கி படையலிட்டு, 6 கால பூஜையிலும் பங்கேற்று வழிபாடு நடத்தியுள்ளார்.
பின்னர் கோவிலில் இருந்து புறப்படும் முன்பாக அங்கு வரும் பங்காளி முறை கொண்ட அனைவரையும் அழைத்து நலம் விசாரிப்பதோடு, அவர்களின் குடும்பத்தினர், குழந்தைகளின் கல்வி குறித்தும் கேட்டறிந்து மன நிறைவு பெறுவார்.
அதிலும் வறுமைக்கோட்டிற்கு கீழ் கஷ்டப்படுவர்களிடம் அவர்களின் தேவை குறித்து கேட்டறிந்து உதவிகள் பல செய்துள்ளார். இருந்தபோதிலும் அதனை வெட்ட வெளிச்சமாக காண்பித்ததில்லை. நீங்கள் நன்றாக இருந்தால்தான் உங்களின் குழந்தைகளின், அவர்களின் எதிர்காலமும் நன்றாக இருக்கும் என்பதில் எப்போதும் நம்பிக்கை கொண்டவன் என்பதில் உறுதியாக இருந்த கேப்டன் விஜயகாந்த், பலருக்கு பல்வேறு உதவிகளை செய்து கொடுத்துள்ளார்.
தலைமுறைகள் பல கடந்தாலும், குலதெய்வ கோவிலுக்கும், அங்கு வரும் பலரது குடும்பத்தாருக்கும் யாரும் அறியா வண்ணம் உதவிகள் செய்துவந்துள்ள விஜயகாந்த் இனிமேல் வரமாட்டாரா? என்பதை ஏற்கும் மனப்பக்குவத்தை கொண்டு வருவது காங்கேயநத்தம் கிராமத்தினருக்கு சவால்தான்.
காங்கேயநத்தம் கிராமத்தில் வீரம்மாள் கோவில் பலருக்கு குலதெய்வமாக இருந்தபோதிலும், கண்கண்ட தெய்வமாக விஜயகாந்த் இருந்துள்ளார் என்பது வெளியில் தெரியாத உண்மை.
- ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.
- மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாக சலிக்கப்படுவதில்லை
ஆடி மாதம் எந்த அளவுக்கு அம்மனை வழிபடுகிறோமோ, அந்த அளவுக்கு குலதெய்வ வழிபாட்டையும் செய்தல் வேண்டும்.
பெண்கள் ஆடி மாதம் குலதெய்வத்துக்கு மாவிளக்கு போட்டு வழிபாடு செய்தால் குடும்ப நலன்களை ஒருங்கே பெற முடியும்.
இந்த மாவிளக்கு வழிபாட்டை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?
பச்சரிசி கால் கிலோ, பாகு வெல்லம் கால் கிலோ, ஏலக்காய் நாலு, ஐந்து, 50 கிராம், நல்ல பருத்திப் பஞ்சினால் ஆகிய திரி ஆகியவற்றை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
பச்சரியை நன்கு களைந்து குறைந்தது இரண்டு மணி நேரமாவது ஊற வைக்கவும்,
ஊறிய அரிசியை மிக்சி ஜாரில் போட்டு நன்கு மாவாக்கவும்.
மாரியம்மனுக்குப் போடும் மாவிளக்குப் பொதுவாக சலிக்கப்படுவதில்லை என்றாலும் அவர்கள் அவர்கள் வீட்டு வழக்கத்திற்கு ஏற்ப மாறும்.
நன்கு அரைத்து மாவாகிவிடும் வெல்லத்தைப் போட்டுக் கலந்தால் நன்கு கெட்டியாக உருட்டும் பதத்தில் வரவேண்டும்.
பந்து போல் உருட்ட வேண்டும்.
அவரவர் வீட்டு வழக்கப் படி ஒரு உருண்டை அல்லது இரண்டு உருண்டை பிடிக்க வேண்டும்.
உருண்டையில் நடுவில் குழி செய்து கொள்ள வேண்டும்
அம்மன் சந்நிதியில் அம்மனுக்கு நேரே அம்மன் சாப்பிட்டால் இலையை எப்படிப் போடுவோமோ
அப்படி நுனி அம்மனின் இடப்பக்கம் வருமாறு போட்டு மாவு உருண்டைகளை வைக்க வேண்டும்.
குழி செய்த இடத்தில் ததும்ப நெய்யை ஊற்ற வேண்டும்.
திரியை அந்தக் குழியில் விட்ட நெய்யில் வைத்துத் திரியை ஏற்றவும்.
இப்போது பூவை மாலை போல் இரண்டு மாவிளக்குகளையும் சேர்த்துப்போடவும்.
நாலுபக்கமும் மஞ்சள், சந்தனம், குங்குமத்தால் அலங்கரிக்கவும்.
பூவைத்திருக்கும் இடத்திலேயே வெற்றிலை, பாக்கு,வாழைப்பழம் வைத்துத் தேங்காயையும் உடைத்து வைக்கவேண்டும்.
திரி நன்கு எரியும்.
நீளமான திரி எரிந்து முடியும் நேரத்தில், அந்தத் திரியை ஒரு கரண்டியில் அல்லது ஸ்பூனால் எடுத்து
கோவிலில் இருக்கும் விளக்குகள் ஏதாவதொன்றில் அணையாமல் வைக்கவேண்டும்.
பின்னர் தண்ணீர் சுற்றி நிவேதனம் செய்துவிட்டுக் கற்பூர ஆராத்தி எடுக்க வேண்டும்.
இவ்வாறு, ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவது விஷேச பலன்களை தரும்.
- புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.
- ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.
ஒரு குடும்பத்தில் இளம் பெண் இறந்தாலோ, வயதாகியும் திருமணம் செய்துகொள்ளாத பெண்கள் இறந்தாலோ அந்தப் பெண்களைக் குல தெய்வமாக வழிபடுவது தமிழ்நாடு முழுவதும் அனைத்து தரப்பினரிடமும் வழக்கத்தில் உள்ளது.
இதற்கு கன்னி தெய்வ வழிபாடு என்று பெயர்.
சில மாவட்டங்களில் குறிப்பாக கரூர், திண்டுக்கல், நாமக்கல் மாவட்டங்களில் இதற்கு புடவைக்காரி வழிபாடு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த வழிபாட்டுக்காக கோவில் கூட கட்டுவார்கள்.
மூலவர் சந்நிதியில் பொதுவாக சாமி சிலையை வைத்துப் பிரதிஷ்டை செய்வதற்குப் பதிலாகப்
புடவையை வைத்து வழிபாடு செய்வதுதான் புடவைக்காரி வழிபாடு.
குல தெய்வத்தை நினைத்துப் புடவை வைத்து சாமி கும்பிடும் குடும்பத்தினர் அந்தப் புடவையை
ஒரு குடத்திலோ பேழைப் பெட்டியிலோ வைத்துக் கோவிலில் பாதுகாப்பாக வைத்திருப்பார்கள்.
ஒவ்வொரு செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் கோவில்களில் சாமி கும்பிடும் படலம் நடந்தாலும்,
ஆடி மாதம்தான் மிகப் பெரிய திருவிழாவாகப் புடவைக்காரி வழிபாடு களை கட்டும்.
பெண்கள், கன்னி தெய்வமாக மாறி, அந்த குடும்பத்தையே பாதுகாப்பதாக ஐதீகம்.
எனவே ஆடி மாதம் பெண்கள் மறக்காமல், தவறாமல் இந்த கன்னி தெய்வ வழிபாட்டில் மிகுந்த ஆர்வமும் அக்கறையும் காட்டுவார்கள்.
- கோவை நகரத்தில் உள்ள சிவாலயம் கோனியம்மன் ஆலயத்திற்கு தெற்கிலே உள்ளது.
- கோவை மாநகரின் தனிப்பெரும் அரசியாக விளங்குகின்றாள்.
ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.
அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.
குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.
- குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.
- ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு.
ஒவ்வொருவருக்கும் நிச்சயம் ஒரு குல தெய்வம் உண்டு. அந்த குலதெய்வம் வழிகாட்டுதலில் தான் ஒருவரது வெற்றி- தோல்வி அமையும். எனவே குலதெய்வம் என்பது மிக, மிக முக்கியமானது.
அந்த வகையில் கோவை நகரின் காவல் தெய்வமான கோனியம்மன் 60-க்கும் மேற்பட்ட இனத்தவர்களுக்கு குலதெய்வமாக திகழ்கிறார். குறிப்பாக கவுடர்கள், இருளர்கள், போயர்கள், சோழிய வேளாளர்கள் கோனியம்மனை கண்கண்ட தெய்வமாக வழிபட்டு வருகிறார்கள்.
எந்தவொரு விஷயமாக இருந்தா லும் இவர்கள் கோனியம்மனிடம் வந்து பூ கட்டிப்போட்டு பார்த்து உத்தரவை பெற்ற பிறகே செயல்படுவார்கள். கொங்கு மண்டலத்தில் உள்ள நெசவுத்தொழில் செய்யும் மக்களுக்கும் கோனியம்மன் தான் குலதெய்வமாக உள்ளாள். மைசூர், பெங்களூரில் இருந்து வருபவர்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனை மனதார குல தெய்வமாக ஏற்றுக் கொண்டுள்ளனர்.
சேலம், திருப்பூர், ஈரோடு பகுதியில் உள்ளவர்கள் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் தவறாமல் வந்து வழிபடுவதை வழக்கத்தில் வைத்துள்ளனர். இப்படி கோனியம்மனை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபட வருபவர்களில் வால்பாறையில் இருந்து வருபவர்கள் அனைவரையும் கவரும் வகையில் தனித்துவம் கொண்டவர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் வசதி வாய்ப்பு பெற்றவர்கள் அல்ல. தினக்கூலி ரகத்தைச் சேர்ந்தவர்கள். ஒவ்வொரு ஆண்டும் மாசிமாதம் நடக்கும் பெருவிழாவின்போது இவர்கள் வால்பாறையில் இருந்து புறப்பட்டு வந்து விடுவார்கள்.
குறைந்தபட்சம் 100 பக்தர்கள் மொத்தமாக குழுவாக வருவார்கள். எவ்வளவு நேரமானாலும் அவர்கள் காத்திருந்து வழிபடுவார்கள். அதுமட்டுமின்றி அவ ர்கள் ஒவ்வொருவரும் தங்கள் குலதெய்வமான கோனியம்மனுக்கு தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து வழிபட தவறுவதில்லை. இந்த வழிபாட்டை அவர்கள் மிகவும் பயபக்தியுடன் செய்து வருகிறார்கள்.
இதுபற்றி வால்பாறையில் இருந்து வரும் மூத்த பக்தர் ஒருவர் கூறுகையில் ஒரு ஆண்டு நாங்கள் கோனியம்மனை வழிபட வராவிட்டால் எங்கள் உறவுகளிடையே ஏதாவது சண்டை வந்து பிரச்சினை ஆகி விடுகிறது. இல்லையெனில் யாருக்காவது ஏதாவது அசம்பாவிதம் நடந்து விடுகிறது. எனவே நாங்கள் ஆண்டுதோறும் மொத்தமாக வந்து வழிபட்டு விடுவோம். எங்களில் பெரும்பாலானவர்கள் கோனியம்மனிடம் வேண்டிக் கொண்டு மொட்டை போடுவது வழக்கம் என்றார்.
- குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும்.
- குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை.
குலதெய்வம் குலதெய்வ கோவிலில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த 1 பொருள் உங்கள் வீட்டில் இருந்தால் போதும். உங்கள் குடும்பத்திற்கு தீராத துன்பங்களோ துயரங்களோ ஒருபோதும் வராது.
இது தவிர ஒரு சின்ன பரிகாரம். குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு சென்று, குலதெய்வ வழிபாடு செய்து முடித்துவிட்டு, குலதெய்வ கோவிலில் இருந்து ஒரு கைப்பிடி மண்ணை எடுத்துக் கொள்ள வேண்டும். குடும்ப தலைவனின் கையால் ஒரு கைப்பிடி மண், குடும்பத் தலைவியின் கையால் ஒரு கைப்பிடி மண், இரண்டையும் எடுத்து ஒரு மஞ்சள் நிற துணியில் வைத்து முடிந்து கொள்ளுங்கள்.
இதை வீட்டிற்கு கொண்டு வாருங்கள். சுத்தபத்தமாக பூஜை அறையில் வைத்து விடுங்கள். இதில் சிறிதளவு மஞ்சள் தூளை மட்டும் கலந்து கொள்ளுங்கள் போதும். ஒரு செம்புத்தகட்டில் உங்களுடைய குலதெய்வத்தின் பெயரை எழுதி அந்த சின்ன செம்பு தகடை இந்த மண்ணோடு வைத்து மஞ்சள் துணையிலேயே முடிச்சு போட்டு, கட்டி வீட்டில் பத்திரமான ஒரு இடத்தில் வைத்து விடுங்கள்.
யார் கைக்கும் படாமல் இந்த மண் உங்கள் வீட்டிலேயே இருக்கட்டும். கொஞ்சம் உயரமாக வீட்டிற்கு உள் பக்கத்தில் ஆணி அடித்து அதில் இதை மாட்டி வைத்தால் கூட போதும். தினம் விளக்கு ஏற்றும் போது ஊதுவத்தியை இந்த முடிச்சுக்கும் காண்பித்து விடுங்கள். அவ்வளவுதான். வருடத்திற்கு ஒருமுறை குலதெய்வ கோவிலுக்கு செல்லும் போது புதிய மண்ணை எடுத்து வரலாம். பழைய மண்ணை உங்களுடைய வீட்டிற்கு உள்ளேயே ஏதாவது ஒரு மண் பாங்கான இடத்தில் கொட்டி விடுங்கள்.
இப்படி குலதெய்வ கோவிலில் இருந்து எடுக்கப்பட்ட மண்ணில் குலதெய்வமே குடியிருக்கும். உங்களுடைய முன்னோர்கள் காலடித்தடம் பட்ட மண் அது. இனி உங்களுடைய அடுத்த அடுத்த சந்ததியர்கள் செல்லக்கூடிய இடம்தான் அது. அப்படிப்பட்ட பொக்கிஷமான அந்த ஒரு கைப்பிடி மண் உங்கள் வீட்டில் இருப்பது அந்த குலதெய்வமே உங்கள் வீட்டில் வாசம் செய்வதாக அர்த்தம்.
விதியின் கட்டாயத்தில் நம் குடும்பத்திற்கு வரக்கூடிய துன்பத்திலிருந்து துயரத்திலிருந்து காப்பாற்றுவது நம்முடைய குலதெய்வம் தான். அப்படிப்பட்ட குலதெய்வ வழிபாட்டை தினம் தினம் நாம் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடு செய்வது பெரியதாக கஷ்டம் ஒன்றுமில்லை. வீட்டில் இருக்கும் பெண்கள் விளக்கு ஏற்றும் போது குலதெய்வத்தின் பெயரை மூன்று முறை சொல்லி 'நீ தான் என்னுடைய குடும்பத்தை பத்திரமாக பாதுகாக்க வேண்டும்'. என்று குலதெய்வத்தை தினம் தினம் நினைவுகூர்ந்தாலே போதும். குலதெய்வம் உங்கள் வீட்டில் தங்கி குடும்பத்தை காக்கும். குலதெய்வத்தின் பெயரை ஒரு நாளும் உச்சரிக்காமல் இருக்காதீங்க.
பெண்கள் மட்டும் தான் இப்படி குலதெய்வத்தை நினைவு கூற வேண்டும் என்று அவசியம் கிடையாது. அந்த வீட்டில் இருக்கும் ஆண்கள், குழந்தைகள் பெரியவர்கள் என்று எல்லோரும் தினமும் குலதெய்வ வழிபாடு செய்துவிட்டு, அவரவர் வேலையை தொடங்கினால், அந்த நாள் நல்லபடியாக செல்லும்.
- குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம்.
- நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம்.
நம்முடைய குலத்தை காக்கக்கூடிய தெய்வம் குலதெய்வம் என்கிறோம். நம்முடைய முன்னோர்களாகிய இவர்கள் தெய்வமாக மாறி பின் ஒவ்வொரு சந்ததியினரையும் தொடர்ந்து பாதுகாக்கிறார்கள். அவர்களை வழிநடத்தி சென்று நன்மை செய்கிறார்கள். எல்லா தெய்வங்களை காட்டிலும் குலதெய்வம் ஒரு குடும்பத்திற்கு மிகவும் முக்கியம். அந்த குலதெய்வம் அறியாதவர்கள் என்ன வழிபாட்டு முறையை செய்தால் பலன் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஏதாவது ஒரு பெளர்ணமி அன்று காலையில் வீட்டை சுத்தம் செய்யவேண்டும்.
மாலை 6 மணிக்கு மேல் வீட்டில் உள்ள பூஜை அறையில் ஒரு தலைவாழை இலை போட்டு வெற்றிலை, பாக்கு, தேங்காய், வாழைப்பழம், இனிப்பு, பலகாரம், காதோல கருகமணி, காரவகை, பொரிகடலை மற்றும் சர்க்கரை அல்லது வெண் பொங்கல் வைத்து படையல் போடவேண்டும்.
செம்பு நிறைய தண்ணீர்வைத்து மாவிலை வைத்து மேலே தேங்காய் வைக்கவேண்டும். தேங்காய் வைத்த செம்பை சுற்றி பிள்ளையார் துண்டினை சுற்றிவிடவும்.
மஞ்சள் தூள் மூலம் பிள்ளையார் பிடித்துவைத்து அதற்கு குங்குமம் பொட்டிடவேண்டும். இதன் மீது ஜவ்வாது, புனுகு சந்தனம், பச்சைக்கற்பூரம் தெளிக்க வேண்டும். இவைகளை செய்து முடித்தபிறகு எலுமிச்சம் பழத்தை நான்கு துண்டாக வெட்டி குங்குமம் தடவி நான்கு பக்கம் வைக்கவேண்டும். ஊதுபத்தி ஏற்றி வைத்து தேங்காய் உடைத்து பின் வரும் மந்திரம் சொல்லவேண்டும்.
ஓம்ஸ்ரீம் அம்உம் வம்லம்சிங்
ஐயும் கிலியும் சவ்வும்ஜம்ஜம்
பம் யம் ரம் மஹா குலதெய்வமே
எங்கு நீ இருந்தாலும் உன் ரூபத்தை என் கண்முன் காட்டு. எதிரிகள் உன்னை கட்டிஇருந்தாலும் கட்டை உடைத்து குலம் காக்க ஓடிவா முப்பாட்டன், பாட்டன், தந்தைவழி குலதெய்வமே குலம் காக்க ஓடிவா
சர்வதனமே சர்வஜனமே வா வா
குலதெய்வமே வசிவசி ஹீம்பட் சுவாகா
இதை 48 முறை சொல்லி பிறகு தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கி பூஜையை நிறைவு செய்யவேண்டும்.
இதை மூன்று பெளர்ணமி நாட்களில் செய்துவர குலதெய்வம் ஏதோ வழியில் கனவில் கூட தெரியவரும் நம்பிக்கையுடன் செய்யவேண்டும்.
- சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும்.
- குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள்.
ஜோதிடத்தில் லக்கினத்திற்கு ஐந்தாம் இடம் பூர்வ,புண்ணிய ஸ்தானம். இதை வைத்துதான் ஓருவரின் தந்தை வழி பாட்டனார், தாய்மாமன், புத்திர பாக்கியம், கர்ம வினை, புகழ், இப்பிறவியில் அனுபவிக்கப்போகும் நன்மைகள் என அனைத்தையும் தெரிந்துக்கொள்ள முடியும். இந்த இடத்தை வைத்து ஓரளவு நம்முடைய குல தெய்வத்தை அறியலாம்.இந்த இடங்கள் ஆண் ராசியா, பெண் ராசியா எனக் கண்டுபிடித்து, அந்த தெய்வங்கள் ஆண் தெய்வங்களா, பெண் தெய்வங்களா எனத் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் அது நில ராசியில் (ரிஷபம், கன்னி, மகரம்) உள்ளதா, நீர் ராசியில் (கடகம், விருச்சிகம், மீனம்) உள்ளதா, என்பதைத் தெரிந்துகொண்டு, அந்த தெய்வம் இருக்குமிடத்தைக் கண்டுபிடிக்கலாம். நீர் ராசி என்றால், ஊரின் எல்லையில் உள்ள நீர் சார்ந்த இடங்களுக்கு அருகில் குலதெய்வம் இருக்கும். நில ராசியில் வந்தால், வயல்வெளி சார்ந்த இடங்களில் இருக்கும். நெருப்பு ராசியில் (மேஷம், சிம்மம், தனுசு) நின்றால், அவர்களின் குலதெய்வம் மலை மேல் இருக்கும்.
இவ்வாறு குலதெய்வம் பற்றி வீட்டின் மூத்த பிள்ளையின் ஜாதகத்தைக் கொண்டு கண்டுபிடிக்கலாம். சிலருக்கு பிறப்பிலே குலதெய்வ தோஷம் இருக்கும். இதை பூர்வ புண்ணிய தோஷம் என்பார்கள். அதாவது ஐந்தாமிடத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும் லக்கினத்திற்கு தீய கிரகங்கள் இருந்தாலும் அது குலதெய்வ தோசத்தை கொடுக்கும்.மேலும் இது புத்திர தோசத்தையும் கொடுக்கும்.
ஐந்தாமிடம் என்பது நம்முடைய முற்பிறவியை குறிக்கக்கூடிய இடம்! யார் ஒருவர் இப்பிறவியில் தாய்,தந்தையற்கு உரிய மரியாதை அளிக்காமல் அவர்களை மனம் நோக செய்தாலும், அதே போல் குல தெய்வத்தை வணங்காமல் இருந்தாலும் மறு பிறவியில் அவர்கள் குல தெய்வ தோசத்துடன் பிறப்பார்கள். இதுதான் புத்திர தோசத்தையும் கொடுக்கும். அதாவது போன பிறவியில் செய்யும் கர்ம வினைகளே நமக்கு வரக்கூடிய தோசங்கள்.
இந்த மாதிரி குலதெய்வ தோசம் இருப்பவர்கள் கண்டிப்பாக தனக்குரிய குலதெய்வத்தை கெட்டியாக பிடித்து கொண்டால் அனைத்து தோசங்களும் நிவர்த்தியாகும். குலதெய்வத்தை அந்தெந்த பங்காளி வகையறாக்களுக்கு ஏற்றபடி வணங்குவார்கள். அதை அறிந்து கொண்டு அதற்குரிய வழிமுறைகளில் வணங்குவது சிறப்பாகும்.
"சார் எனக்கு ஜாதகமே இல்லை!எங்க வீட்டுல எழுதி வைக்கல அல்லது தொலைந்துவிட்டது"என சிலர் சொல்வார்கள்.
அவர்கள் எப்படி குலதெய்வ வழிபாடு செய்வது?
இவர்கள் திருச்செந்துர் முருகனை குலதெய்வமாக வணங்கலாம்! அதாவது புத்திரக்காரகன் குரு பகவான். இந்த குரு பகவானின் ஸ்தலம்தான் திருச்செந்தூர்! எனவே குல தெய்வம் தெரியாதவர் திருச்செந்தூர் முருகனை அன்றைய நாளில் குலதெய்வமாக வணங்க ஆரம்பிக்கலாம். அதேபோல் குலதெய்வ வழிபாடு,பெண் திருமணம் செய்து சென்றால் கணவனின் குலதெய்வத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும்.
- குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
மற்ற நாட்களில் குல தெய்வத்தை வழிபடுவதை விட பங்குனி பவுர்ணமி தினத்தன்று வழிபடுவதுதான் நூறு சதவீத பலனை பெற்றுத் தரும். பங்குனி உத்திர திருநாளில் குலதெய்வ கோவிலுக்கு சென்று வழிபாடு செய்தால் நம் குலம் சிறப்பதோடு, குடும்பமும் மேன்மை பெறும். குல தெய்வங்கள் மனம் மகிழ்ந்து நம்மை ஆசீர்வதிப்பதால், குடும்பங்கள் பல்வேறு துன்பங்கள், துயரங்கள், இடையூறுகளில் இருந்து காக்கப்படும்.
குடும்பத்தினர் எல்லாரும் ஒற்றுமையாக நின்று படையல் போட்டு வழிபாடு செய்யும்போது குல தெய்வங்கள் மட்டுமின்றி மறைந்த மூதாதையர்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். இதனால் பித்ருக்களின் பரிபூரண ஆசிகள் எளிதாக வந்து சேரும். கிராமங்களில் இருப்பவர்களுக்கு அவர்கள் அருகிலேயே குலதெய்வ கோவில் இருக்கும்.
எனவே எளிதாக வழிபாடுகளை செய்து கொள்வார்கள். கிராமங்களில் இருந்து வெளியேறி நகர்ப்பகுதிகளில் குடியேறியவர்களுக்கு குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத சூழ்நிலை இருக்கலாம். அத்தகையவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது.
உங்கள் வீட்டிலேயே குல தெய்வபடத்தை அலங்கரித்து, பாரம்பரிய, வழக்கமான படையலை வைத்து மனம் உருக வழிபாடு செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் குல தெய்வத்தின் அருளாசி உங்கள் குடும்பத்துக்கு கிடைக்கும். எனவே பங்குனி பவுர்ணமி அன்று மறக்காமல் குல தெய்வ வழிபாடு செய்யுங்கள்.
- பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு.
- பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர்.
பங்குனி உத்திரப் பெருவிழா தமிழ்நாடு முழுவதும் ஆலயங்களில் சீரும் சிறப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இன்று (5-ந் தேதி) பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நன்னாளாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து விழாக்கள் நடத்துவார்கள். விரதம் மேற்கொள்வார்கள். ஆனால், பங்குனி உத்திர நட்சத்திரத்துக்கு மற்ற நட்சத்திரங்களைவிட அதிக மகத்துவமும் முக்கியத்துவமும் உண்டு. அதற்கு முக்கிய காரணம் தெய்வத் திருமணங்கள் அதிகம் நடைபெற்ற மாதம் பங்குனி என்பதுதான்.
இன்னொரு சிறப்பு... தமிழில், 12வது மாதம் பங்குனி. அதேபோல், நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். அதாவது 12-வது மாதமான பங்குனியும் 12-வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் அற்புதமான நாள் பங்குனி உத்திரம். இந்த தினத்தின் சிறப்புகள் அதிகம்.
ஸ்ரீராமபிரான்- சீதாதேவி, பரதன்- மாண்டவி, லட்சுமணன்- ஊர்மிளை, சத்ருக்னன்- சிருத கீர்த்தி ஆகியோருக்கு திருமணம் நடந்த நன்னாள் பங்குனி உத்திரம்!
முருகப் பெருமான்- தெய்வானை திருமணம் நடந்த நாள். ஸ்ரீவள்ளி அவதரித்த தினமும் இதுதான் என்கிறது புராணம்.
தேவேந்திரன்- இந்திராணி திருமணம் நடைபெற்ற நாள்.இந்த நாளில் விரதம் மேற்கொண்ட சந்திரன், அழகுமிக்க 27 பெண்களை மனைவியாக ஏற்றுக் கொண்டதாகச் சொல்கிறது புராணம்!
இந்த நாளில் விரதம் மேற்கொண்ட ஸ்ரீமகா லட்சுமி, விஷ்ணுவின் திருமார்பில் வீற்றிருக்கும் பாக்கியத்தைப் பெற்றாள். ஸ்ரீபிரம்மா, தன் நாவில் சரஸ்வதியை வரித்துக் கொண்ட தினம், பங்குனி உத்திரம் என்பர்.
ஐயன் ஐயப்ப சுவாமியின் முந்தைய அவதாரமான சாஸ்தா அவதரித்தது பங்குனி உத்திர திருநாளில் என்கிறது சாஸ்தா புராணம். .
அர்ஜுனன் அவதரித்தது இந்த நாளில்தான்!
ஸ்ரீவில்லிபுத்தூரில் ஆண்டாள்- ரங்க மன்னார் திருக்கல்யாண வைபவம் நிகழ்ந்த திருநாள் பங்குனி உத்திரம் என்கிறது ஆண்டாள் புராணம்.
தனது தவத்தைக் கலைத்த மன்மதனை, சிவபெருமான் நெற்றிக் கண்ணால் எரித்து சாம்பலாக்கினார். பின்னர், தன்னை வணங்கி மன்றாடிய ரதிதேவியின் வேண்டுகோளுக்கு மனமிரங்கிய சிவபெருமான், மன்மதனை மீண்டும் உயிர்ப்பித்து அருளினார். அது பங்குனி உத்திர திருநாளில்தான் என்கிறது சிவபுராணம்.
சுந்தரமூர்த்தி நாயனாருக்கு மணக் கோலத்தில் பரமேஸ்வரன் பார்வதிதேவியுடன் காட்சி தந்தது இந்த நாளில்தான். காரைக்கால் அம்மையார் பங்குனி மாதத்தில்தான் முக்தி பெற்றார்.
காஞ்சியில், பவுர்ணமி திதி கூடிய பங்குனி உத்திரத் தன்று, ஏகாம்பரேஸ்வரர் திருக்கல்யாண விழா இனிதே நடைபெறும். இந்த நாளில் காஞ்சி வரதராஜர் கோவில்- பெருந்தேவி தாயார் சந்நிதியில், தேவி-பூதேவி, மலை யாள நாச்சியார், ஆண்டாள் மற்றும் பெருந்தேவி தாயார் சகிதம் காட்சி தருகிறார் வரதராஜ பெருமாள்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே உள்ள நவக்கிரக தலங்களில் ஒன்றான சந்திர பரிகாரத் தலம் திங்களூர் திருத்தலம். இங்குள்ள சிவாலயத்தில், ஆண்டுதோறும் பங்குனி உத்திர நன்னாளில், காலையில் 6 மணிக்கு சூரியக் கதிர்களும் மறு நாள் மாலை 6 மணிக்கு சந்திரனின் ஒளியும் சிவலிங்கத்தின் மீது விழுகின்றன என்பது இயற்கையின் அற்புதம். அப்போது, இங்கு சூரிய- சந்திர பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. இந்த பூஜையை தரிசித்தால் எல்லா வளமும் பெறலாம் என்கின்றனர் சிவாச்சார்யர்கள். மேலும் சந்திர தோஷம் யாவும் நீங்கிவிடும். சந்திர பலம் பெற்று, மனோபலம் கிடைக்கப் பெற்று மனத்தெளிவுடன் வாழலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை!
பழனியில் காவடி உற்சவம், மயிலாப்பூரில் அறுபத்துமூவர் உற்சவம், சுவாமி மலையிலும், திருச்செந்தூரிலும் வள்ளி கல்யாணம், திருப்பரங் குன்றத்தில் தெய்வானை கல்யாணம், காஞ்சிபுரத்தில் கல்யாண உற்சவம் , மதுரையில் மீனாட்சி திருமணம் என பங்குனி உத்திர நாளில் விழாக்களின் சங்கமம் மிக மிக அதிகம்.
சைவ வழிபாடுகளிலும், வைணவ வழிபாடுகளிலும் பங்குனிஉத்திரம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது . இந்த இரு சமய வழிபாடுகளிலும் பங்குனி உத்திரம் போல வேறு எந்த மாதத்திலும் இவ்வளவு சிறப்பான விழா வருவது இல்லை .
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் ஆலயத்தில் நடக்கும் விழாக்களில் மிக முக்கியமான பெருவிழா பங்குனி உத்திர திருவிழாதான். பெரு மாளுக்கும், தாயாருக்கும் ஊடல் நிகழ்ந்து, பிறகு இருவரும் இணைந்தது பங்குனி உத்திர நன்னாளில்தான். எனவே பெருமாளும், தாயாரும் அருகருகே கல்யாண கோலமாக எழுந்தருளி சேர்த்தி சேவை சாதிப்பர் . இது ஆலய 5-வது திருச்சுற்றில், பங்குனி உத்திர மண்டபத்தில் நடக்கும்.
பங்குனி உத்திரப்பெருவிழா தினத்தன்று காலையில் நடைபெறும் இந்த வைபவத்தை கண் குளிர தரிசித்தால், திருமணப்பேறு உண்டாகும் , பிரிந்த தம்பதி ஒன்று சேர்வர் என்பது ஐதீகம் . இணைந்து வாழ்ந்து வருகிற தம்பதிகள் மேலும் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்டு கருத்து ஒற்றுமையுடன் வாழ்வார்கள் என்பது நம்பிக்கை .
பங்குனி உத்திரத்தன்று கன்னிப்பெண்கள் கல்யாண விரதமிருந்து அருகில் உள்ள ஆலயங்களில் திருமணக்கோல தெய்வங்களை தரிசித்தால் அவர்களுக்கு கல்யாண வைபோகம் தான் .அது போல திருமழபாடியில் நந்திக்கல்யாணம் கண்டால் முந்திக்கல்யாணம்தான்.
பங்குனி மாதத்தில் ஏற்றிய தீபத்தில் சிவனும் பார்வதியும் ஐக்கிய சொரூபமாகக் காட்சி தருகின்றனர். அதனால் அன்று திருவிளக்கு பூஜை செய்து பாவங்களை விலக்கி, பகை அகற்றி புண்ணியம் பெறலாம்.
பங்குனி உத்திரம் அன்று நீங்கள் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் சரி , எந்த ஆலய விழாவில் கலந்து கொண்டாலும் சரி மறக்காமல் குலதெய்வ வழிபாட்டையும் செய்ய வேண்டும். குலதெய்வ வழிபாடும் மிக முக்கியமான வழிபாடாகும்.*
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்