search icon
என் மலர்tooltip icon

    கதம்பம்

    • பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின.
    • பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.

    'பெற்றதாய்தனை மகமறந்தாலும்

    பிள்ளையைப் பெற்றதாய் மறந்தாலும்;

    உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்

    உயிரைமேவிய உடல் மறந்தாலும்;

    கற்ற நெஞ்சம் கலைமறந்தாலும்

    கண்கள் நின்றிமைப்பது மறந்தாலும்;

    நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்

    நமச்சிவாயத்தை நான் மறவேனே!''''

    - என்கிற பாடலை மகள் நீலாம்பிகை பாட... தந்தை சாமி வேதாச்சலம் கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது, அந்தப் பாடல் அவரை நெருடியதால், ''நீலா... இனிமையான இந்தத் தமிழ்ப் பாட்டில் ஒரே ஒரு சமஸ்கிருதச் சொல் இருக்கிறது. 'உற்ற தேகத்தை உயிர் மறந்தாலும்' என்ற இடத்தில் 'தேகம்' என்பதை நீக்கிவிட்டு, 'உடம்பாகிய யாக்கை' என்று போட்டால் ஓசை இன்பம் அழகாக இருக்கும். பிறமொழிச் சொற்கள் கலப்பதால் தமிழின் இனிமை குன்றுகிறது'' என்றார் சாமி வேதாச்சலம்.

    ''அப்படியானால் நாம் பிறமொழிச் சொற்களை நீக்கித் தனித்தமிழிலேயே பேசுதல் வேண்டும்'' என்று 13 வயதே ஆன மகள் நீலாம்பிகை சொல்ல... அன்றுமுதல் தனித்தமிழ் இயக்கத்துக்கான விதையை மண்ணில் விதைத்தார் சாமி வேதாச்சலம்.

    ''எல்லா உறுப்புகளும் அமைந்த அழகான ஓர் உடம்பில் அந்த உறுப்புகளை வெட்டி எறிந்துவிட்டு, மண்ணாலும், மரத்தாலும் செயற்கையாக அந்த உறுப்புகளைப்போல் செய்து அவற்றை அதற்கண் ஒட்டவைத்துப் பார்ப்பதற்கு ஒப்பாய் இருக்கிறது... தமிழ்மொழியில் பிறமொழிச் சொற்களைச் சேர்ப்பது'' என்று விளக்கம் கொடுத்தார் மறைமலை அடிகள்.

    1933-ல் சென்னைப் புத்தகாலயப் பிரசார சங்கத்தார் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர். அதில், கலந்துகொள்ளுமாறு மறைமலை அடிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு மறுப்புத் தெரிவித்துக் கடிதம் எழுதினார் அடிகள். அதில், ''தூய தமிழை வளர்க்க விரும்பாத எந்தத் தமிழ்க் கூட்டத்திலும் கலந்துகொள்வதற்கு எமது மனம் இடம் தரவில்லை.

    'ஆங்கிலமும், சமஸ்கிருதமும் கட்டாயம் படிக்க வேண்டும். தாய்மொழிப் பாடத்தை விருப்பப்பாடமாக கற்றால் போதும்' என்று சென்னைப் பல்கலைக்கழகம் தீர்மானம் போட்டபோது, 11 ஆண்டு காலம் பணியில் இருந்த மறைமலை அடிகளார், அதை எதிர்த்துத் தன்னுடைய பணியில் இருந்து விலகினார். ஆங்கிலம், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் தமிழில் பரவிக் கிடந்ததை உணர்ந்து வருந்திய மறைமலை அடிகள், அதிலிருந்து தமிழை மீட்க முடிவெடுத்தார். வெறும் பேச்சால் மட்டுமே கொள்கைகளைப் பரப்பிவிட முடியாது என்ற தெளிவும் அவரிடம் இருந்ததால்தான் அதற்கு ஒரு முன்னுதாரணமாகச் செயல்படவும் தொடங்கினார். 1916-ல் தனித்தமிழ் இயக்கத்தைத் தொடங்கினார். தனித்தமிழ் இயக்கத்தின் காரணமாக அந்தக் காலகட்டத்தில் வழக்கத்திலிருந்த பல வடமொழிச் சொற்கள் வழக்கொழிந்துபோயின. இந்தச் சமயத்தில்தான் தன் பெயரை, 'மறைமலை அடிகள்' (வேதம் - மறை, அசலம் - மலை, சுவாமி - அடிகள்) என்று மாற்றிக்கொண்டார். அவரைப் பின்பற்றிப் பல தமிழர்கள் தங்களுக்குத் தூய தமிழில் பெயர் சூட்டிக்கொண்டனர்.

    • சோழநாட்டில் தான் சிவத் தலங்கள், முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன.
    • ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது.

    "வேழம் உடைத்து மலைநாடு; மேதக்க

    சோழவளநாடு சோறு உடைத்து, பூழியர்கோன்

    தென்னாடு முத்து உடைத்து; தெண்ணீர் வயல்தொண்டை

    நன்னாடு சன்றோர் உடைத்து".

    சேர, சோழ, பாண்டிய மற்றும் தொண்டை நாடுகளின் சிறப்புக் குறித்து, ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஒன்று இது.

    சேரநாடு யானைகள் மிகுந்து இருப்பது..

    மேன்மை உடைய சோழவளநாடு நெல்வளத்தை உடையது..

    பாண்டியனது தென்னாடு முத்து விளையும் சிறப்பை உடையது..

    நீர்வளம் மிக்க வயல்களால் சூழப்பட்டு உள்ள தொண்டை நாடு சான்றோரை உடையது என்பது இப்பாடலின் வெளிப்படையான பொருள்.

    ஔவைப் பிராட்டி, நம்மை உய்த்து உணரச் செய்த பொருள் ஒன்று இப்பாட்டில் உள்ளது. அதனைக் காண்போம்:

    தொண்டை நாட்டில் வாழும் சான்றோர்களைக் குறித்துப் பாடிய ஔவையார், மற்ற நாடுகளில் உள்ள விளைபொருள்கைக் குறித்துப் பாடினார் என்பது ஏற்புடைதாக இல்லை என்பார் சான்றோர்!

    "தொண்டை நாடு சான்றோர்களை உடையது" என்று வெளிப்படையாகச் சொன்னதை வைத்து, மற்றதை உய்த்து உணரச் செய்தார்.

    "மலைநாடு" என்பது சேரநாடு எனப்படும். இப்போதைய கேரளம். இது வேழம் உடைத்து.

    வேழம் என்றால் யானை மட்டும் அல்ல, கரும்பு என்றும், இசை என்றும் பொருள் உண்டு.

    எனவே இனிமையான மக்களை உடையது சேரநாடு என்று பொருள் கொள்ளலாம்.

    "மேன்மை பொருந்திய சோழநாடு சோறு உடைத்து."

    சோழநாட்டில் நெல் நிறைய விளைவதால், சோறு உடையது என்பது அல்லாமல், அதற்கு ஒரு உள்ளுறை பொருளும் உள்ளது என்று அறிதல் வேண்டும்.

    "சோறு" என்ற சொல்லுக்கு, "வீட்டின்பம்", "மோட்சம்" "முத்தி" என்றும் பொருள் உண்டு.

    சோழநாட்டில் தான் சிவத் தலங்கள், முருகன் திருத்தலங்கள், திவ்விய தேசங்கள் நிறைந்துள்ளன.

    பாடல் பெற்ற சிவத்தலங்கள் 274-ல், 190 திருத்தலங்கள் சோழநாட்டில் தான் உள்ளன.

    பெருஞ்சிறப்பாக, சைவர்களுக்குக் கோவில் எனப்படும் "சிதம்பரம்" உள்ளது.

    வைணவர்களுக்குக் கோவில் எனப்படும் "திருவரங்கம்" உள்ளது.

    தில்லையை வணங்க முத்தி..

    திருவாரூரில் பிறக்க முத்தி..

    என்பார்கள் சான்றோர்.

    சோழ நாட்டின் பெருமைக்கு இன்னும் என்ன வேண்டும்?.

    இத்தகைய சோழநாட்டில் வாழ்பவருக்கு வீட்டின்பம் அல்லது மோட்சம் உறுதி என்பதால், "சோழநாடு சோறு உடைத்து" எனப்பட்டது என்பர் சான்றோர் .

    "பாண்டி நாடு முத்து உடைத்து".

    முத்து என்னும் சொல்லுக்கு, "வெளிப்படுவது" "விடுபடுவது" என்றும் பொருள் உண்டு.

    சிப்பியில் இருந்து வெளிப்படுவது முத்து எனப்பட்டது.

    "முத்தி" என்றால் விடுபடுதல், வெளிப்படுதல் என்று பொருள்.

    பாசங்களில் இருந்து விடுபடுவது "முத்தி". எனவே, "முத்தி" என்பதன் பொருள் "பாசநீக்கம்" ஆகும்.

    அந்த சீர்மிகு பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்த மணிவாசகர் இறையருளால் முத்தி நிலையைப் பெற்றார்.

    எனவே, பாண்டி நாடு முத்து உடைத்து எனப்பட்டது.

    போற்றுவோம் தமிழையும் - தமிழ் நாட்டையும்!

    -பி.டி அரசு

    • சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.
    • கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்.

    கண்ணதாசனுடைய தனிச் சிறப்புகளில் ஒன்று மரபான தமிழ் இலக்கியங்களின் சிந்தனைகளை எளிமைப்படுத்தி திரைப்பாடலில் தருவது..

    கம்பராமாயணத்தில் தாடகையை வென்று ராமன் விஸ்வாமித்ர முனிவரோடு திரும்பி வருகிற போது அவன் கால் பட்டு அகலிகை பெண்ணாகிற தருணத்தில் ,

    " இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

    இனியிந்த வுலகுக்கெல்லாம்

    உய்வண்ணம் அன்றி மற்றோர்

    துயர் வண்ணம் உறுவதுண்டோ

    மைவண்ணத்து அரக்கி போரில்

    மழைவண்ணத்து அண்ணலே

    உன் கை வண்ணம் அங்கு கண்டேன்

    கால் வண்ணம் இங்கு கண்டேன் "

    என்கிற பாடல் வரும்..

    'வண்ணம்' என்கிற ஒரே சொல் விதவிதமாகப் பயன்படுத்தப்பட்டிருக்கும்.. கண்ணதாசன் இதே உத்தியை திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..

    " பால்வண்ணம் பருவம் கண்டு

    வேல்வண்ணம் விழிகள் கண்டு

    மான்வண்ணம் நான்கண்டுபாடுகிறேன்

    கண்வண்ணம் அங்கே கண்டேன்

    கைவண்ணம் இங்கே கண்டேன்

    பெண்வண்ணம் நோய்

    கொண்டு வாடுகிறேன்"

    " யானோக்குங் காலை நிலனோக்கும் நோக்காக்கால்

    தானோக்கி மெல்ல நகும்" என்கிற குறளை

    " உன்னை நான் பார்த்த போது

    மண்ணை நீ பார்க்கிறாயே

    மண்ணை நான் பார்த்த போது

    என்னை நீ பார்க்கிறாயே"

    என்று எளிமைப்படுத்திப் பாடியிருப்பார்..

    சில பாடல்களில் அவருடைய வழக்கமான குறும்புகளும் வெளிப்பட்டிருக்கின்றன.

    "ஆட்டுவித்தால் ஆரொருவருவர் ஆடாதாரே

    ஓட்டுவித்தால் ஆராரொருவரா ஓடாதாரே"

    என்பது தேவாரத்தில் வருகிற அப்பர் பாடல்.

    இவர் 'கண்ண' தாசனல்லவா ? தேவாரப் பாடலின் வரிகளைத் தூக்கிப் போய்,

    "ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

    கண்ணா..

    ஆசையெனும் தொட்டிலிலே ஆடாதாரே

    கண்ணா"

    என்று வைணவத்திற்கு மதம் மாற்றியிருப்பார்..

    பெரிய புராணத்தின் 'திருநீலகண்டர் புராணத்தில்' கணவன் புறமாதரோடு உறவு கொண்டதால் வெகுண்ட நீலகண்டரின் மனைவி 'எம்மைத் தீண்டுவீராயின் திருநீலகண்டம்' என்று சிவன் மீது ஆணையிட்டு அவர் தொடக் கூடாதென்று கட்டளையிடுவார்..

    இந்தக் கருத்தை கண்ணதாசன் மிக அழகாகத் திரைப்பாடலில் பயன்படுத்தியிருப்பார்..சிவாஜியை மனைவி ஜெயலலிதா 'தொடக்கூடாது' என்று சொல்லி விடுவார்..அப்போது பாடுகிற பாடலில்தான் பெரிய புராணம் இணைந்து கொள்ளும்..

    " நிலவைப் பார்த்து வானம் சொன்னது

    என்னைத் தொடாதே..

    நிழலைப் பார்த்து பூமி சொன்னது

    என்னைத் தொடாதே.. "

    என்று தொடங்கி,

    " புதியதல்லவே தீண்டாமை என்பது

    புதுமையல்லவே அதை நீயும்சொன்னது

    சொன்ன வார்த்தையும் இரவல் தானது

    திருநீலகண்டரின் மனைவி சொன்னது" என்கிற வரிகள் வருகிற போது புராணம் எட்டிப் பார்ப்பதோடு மட்டுமில்லாமல் அதை வேறொரு பரிமாணத்தில் மாற்றியிருப்பார்..

    சந்தேகமே இல்லாமல் கண்ணதாசன் தமிழ் சினிமாவிற்குள் இயங்கிய பெரும் மேதை..!

    -மானசீகன்

    • உங்கள் குடும்ப பிரச்சனைகளையும், வேலையில் உள்ள பிரச்சனைகளையும், ஒன்றாக்கி திணித்துக் கொள்ளாதீர்கள்.
    • உடற்பயிற்சி போன்ற பழக்கங்களை மேற்கொண்டு மன நிறைவுடன் வாழ உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

    நம் அன்றாட வாழ்க்கையில் மனதை ஒரு சீராக வைத்துக் கொள்ள முடியாமல் நம் மனதில் ஏற்படும் சஞ்சலங்கள், தவிப்புகள், கஷ்டங்கள் மற்றும் அதற்கு காரணமாக அமையக்கூடிய இன்னல்கள் இவையெல்லாம் சேர்த்து மனதில், அதாவது நம் சிந்தனையில் ஏற்படக்கூடிய ஒரு விதமான அழுத்த உணர்வே மன அழுத்தமாக உணர்கிறோம்.

    மன அழுத்தத்தை குறைப்பதற்கான தீர்வுகள்:-

    1. ஆரோக்கியமான மனநிலைக்கு முதலில் உங்களுக்கு பிடித்த வேலையில் உங்களை சுறுசுறுப்பாக ஈடுபடுத்திக் கொண்டு மன நிறைவோடு அந்த வேலையை செய்து முடிக்க பழகுங்கள்.

    2. அது மட்டுமல்லாமல் தனிமையில் இருப்பதை தவிர்த்து விடுங்கள்.

    3. மற்றவர்கள் நம்மை விட வாழ்க்கையில் முன்னேறி விடுவார்களோ என்ற எண்ணத்தை விடுத்து உங்களுடைய வளர்ச்சியில் முயற்சி செலுத்துங்கள்.

    4. உங்கள் வளர்ச்சியை மற்றவர்கள் பார்த்து குறை பேசினாலோ, புறம் பேசினாலோ, அதில் உங்கள் மனதை செலுத்தாமல் உங்கள் வளர்ச்சியில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

    5. அதுபோல உங்களுடைய மகிழ்ச்சி மற்றவர்களிடம் இருக்கிறது என்று எதிர்பார்த்து ஏமாறாமல் உங்களுடைய மகிழ்ச்சியை உங்களுடைய வளர்ச்சியில் தேடுவது, அதை செயல்படுத்துவது.

    6. அதுபோல் உங்கள் வேலைகளை பகுதி படுத்தி, முக்கியத்துவத்தை பிரித்து, வேலைகளை ஒன்றன்பின் ஒன்றாக ஒரு திட்ட வரைவுடன் அதை கையாளுவது, உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

    7. சுத்தமான காற்றை சுவாசித்தல், தியானம், போதுமான உடற்பயிற்சி தினமும் மேற்கொள்ளும்படியான செயல் நல்ல மனநிலையை உருவாக்க உதவும்.

    8. அதுபோல மற்றவர்கள் மீது, அதாவது தீங்கு செய்தவர்கள் மீது பழிவாங்கும் எண்ணம், பொறாமை இவைகளை தவிர்த்து உங்கள் வளர்ச்சியை மட்டும் உற்று நோக்கினால் மனநிலை பாதுகாக்கப்படும்.

    9. அதிகமான சிந்தனைகளுக்கு உட்படாமல் வரக்கூடிய வாழ்க்கை பிரச்சனைகளை தைரியமாக கையாளும் திறனை வளர்த்துக் கொண்டால் மனநிலையும் தைரியமாகவே இருக்கும்.

    10. எந்த காரியமாக இருந்தாலும், உங்கள் மனதை அழுத்தும் போது ஒரு நிமிடம் அதை தள்ளிப் போடுங்கள். இந்த இரவே அந்த காரியம் முடிந்ததாக வேண்டும் என அவசர நிலையை உங்கள் மனதிற்கு கொடுக்காதீர்கள். அதற்கு பதிலாக அந்த காரியத்தை எப்படி எந்த நேரத்தில் சரியாக செய்து முடிக்கலாம் என்று சிறிது நேரம் கொடுத்து யோசித்து மனதை ஆசுவாசப்படுத்துங்கள்.

    11. உங்கள் குடும்ப பிரச்சனைகளையும், வேலையில் உள்ள பிரச்சனைகளையும், ஒன்றாக்கி திணித்துக் கொள்ளாதீர்கள். அதற்கு பதிலாக இரண்டையும் சரி விதமாக பிரித்து அதற்கான நேரங்களையும் ஒதுக்கி அதை கையால கற்றுக் கொள்ளுங்கள்.

    12. மொத்தத்தில் மன அழுத்தத்தை குறைத்துக் கொள்ள, சரி செய்து கொள்ள, உங்களை சுற்றி உள்ள உறவுகள், நண்பர்கள், குடும்பத்தில் உள்ள நபர்கள் என அனைவரிடமும் விட்டுக் கொடுத்து ஒற்றுமையுடன் இருக்கக்கூடிய மனப்பான்மையை வளருங்கள்.

    13. அதிக பொருளாசை, போதைப் பழக்கம், போன்றவற்றை தவிர்த்து, மன வலிமையை பெருக்க ஆன்மீகம், நட்பு, யோகாசனம், தியானம், விளையாட்டு, உடற்பயிற்சி போன்ற பழக்கங்களை மேற்கொண்டு மன நிறைவுடன் வாழ உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்.

    -மனநல ஆலோசகர் டி. துர்கா செல்லதுரை

    • எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
    • அதிக அளவில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நிச்சயம் நல்லதல்ல.

    நமது உடலில் உள்ள எலும்புகளை பலவீனமாகுக்கும் நான்கு முக்கியமான உணவு வகைகள்....

    சோடா பானங்கள்:

    செயற்கை குளிர் பானங்கள் மற்றும் சோடா சேர்த்த பானங்களை அதிகமாக சாப்பிடுவது, எலும்புகளை சல்லடை போலாக்கிவிடும். இவற்றிலும் அதிக அளவு பாஸ்பரஸ் உள்ளது. இது உடல் கால்சியம் சத்தை உறிஞ்சும் ஆற்றலை பாதிக்கிறது. இதனால் எலும்புகளை வலுவாக்கும் கால்சியம் சத்து உடலுக்கு கிடைக்காமல் போகிறது.

    உப்பு:

    உப்பு அதிகம் உட்கொள்வதால் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்பட்டு, ஆஸ்டியோபோரோசிஸ் என்னும் எலும்பு தேய்ந்து உறுதி இழந்து மெலிந்துவிடும் ஆபத்து எனப்படுகிறது. இதற்குக் காரணம் உப்பில் இருக்கும் சோடியம்.

    அதிக சர்க்கரை கொண்ட இனிப்புகள்:

    அதிக அளவில் சர்க்கரை மற்றும் இனிப்புகளை சாப்பிடுவது எலும்பு ஆரோக்கியத்திற்கு நிச்சயம் நல்லதல்ல. காரணம், அதிக சர்க்கரையும் எலும்புகளில் இருந்து கால்சியத்தை எடுத்துவிடும். அதனால் எலும்புகள் பலவீனமடையும். இதனால்தான், நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் வலி, கை கால் முதுகு வலி, மூட்டு வலி போன்றவை தொடர்ச்சியாக இருக்கிறது.

    டிரான்ஸ் கொழுப்பு (trans fat):

    பதப்படுத்தப்பட்ட கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதால், கால்சியம், பாஸ்பரஸ் சமநிலை குறைந்து, எலும்புகளில் வீக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இவ்வகைக் கொழுப்பு, பேக்கரி உணவுகள், அனைத்து வகை துரித உணவுகளில் காணப்படுகிறது. இவ்வகை உணவுகளை முழுவதும் தவிர்க்க முடியாவிட்டாலும், எப்போதாவது மட்டும் சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

    மதுபானம், புகை:

    ஆல்கஹால் கல்லீரலுக்கு மட்டுமல்ல, எலும்புகளுக்கு எதிரி தான். இதுவும் உடலில் இருந்து கால்சியம் சத்தை உறிஞ்சுவதோடு, உட்கிரகித்தலையும் தடுக்கிறது.

    அதேபோல், புகையில் இருக்கும் நிகோடினும், நுரையீரல் மட்டுமல்லாமல், எலும்புகளுக்கு செல்லும் இரத்த ஓட்டத்தையும், ஆக்சிஜன் அளவையும் குறைத்துவிடும். இது எலும்பு பலவீனம் மட்டுமல்லாமல், எலும்பு முறிவு நிலையையும் ஏற்படுத்துகிறது.

    எனவே, எலும்புகளில் இருந்து கால்சியத்தை உறிஞ்சி, உறுதியைக் குறைத்து, சல்லாடையாய் துளைக்கும் மேற்கண்ட நான்கு வகைக்குள் அடங்கும் உணவுகளத் தவிர்ப்பது நல்லது.

    அதே சமயம், எலும்புகள் வலுவாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க, அன்றாட உணவில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி சத்துகள் நிறைந்த கீரைகள், பந்தல் மற்றும் நாட்டுக் காய்கள், முழு தானியங்கள், எள், விதைகள், கொட்டைகள், பால் உணவுகளை சேர்ப்பது அவசியம்.

    -வண்டார்குழலி ராஜசேகர்

    • ஒரே வழி தியானித்து இருப்பதுதான்.
    • ஆத்மாவை இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது.

    நம் உடலோடு நம்மை அடையாளப் படுத்திக் கொள்கிறோம். நம் உடலே நாம் என்று நினைக்கிறோம். மறந்து விடாதே. மனம் கூட உடலின் ஒரு பகுதி தான். சூட்சமமான கண்ணுக்கு தெரியாத பகுதி.

    நம்மை உடல், மனம் என்ற இயக்கத்தின் பாற்பட்டு அடையாளப்படுத்திக் கொண்டால் இந்த அடையாளம் செத்துவிடத்தான் போகிறது. ஆனால் நமக்குள் சாகாத ஒன்று இருக்கிறது. அதை தெரிந்து கொள்ள வேண்டும். அதை தெரிந்து கொள்ளும் ஒரே வழி தியானித்து இருப்பதுதான். ஒரு சாட்சியாக இருப்பது தான். உன் உடலை கவனித்து பார்ப்பதில் ஆரம்பி. மனதை கவனி. அதில் ஈடுபட்டு விடாதே. தள்ளி நிற்பவனாக, தூரத்தில் இருப்பவனாக, அமைதியாக கவனமாக இருந்து விடு.

    தியானத்தில் "தான்" என்ற அடையாளம் கழிந்து விடுகிறது. செத்துப் போய்விடுகிறது. மறைந்து போய் விடுகிறது. அப்படி மறைந்து விடும் போது உன்னை "தான்" என்ற உணர்வின்றி நீ பார்க்க முடியும். அப்போது உனக்கு மரணமில்லை.

    நித்திய உலகுக்கு உரியது ஆத்மா. எனவே சாக முடியாதது. இறைவனின் உலகைச் சார்ந்தது. அதுவே ஜீவிதம். அதுவே உயிர். பிறகு உயிர் எப்படி சாக முடியும்?

    உடலும் ஆத்மாவின் இணைப்பும் துண்டித்து போகிறது. ஆத்மா உடலில் இருந்து பிடுங்கி எடுக்கப்படுகிறது. மரணம் என்பது அவ்வளவு தான். அதாவது நாம் மரணம் என்று எதை சொல்கிறோமோ அது அவ்வளவுதான். உடல் திரும்ப ஜடத்துக்கு போய்விடுகிறது. மண்ணுக்கு போய் சேர்ந்துவிடுகிறது.

    ஆத்மாவை இன்னமும் ஆசைகளும் ஏக்கங்களும் கொண்டிருக்கிறது என்றால் இன்னொரு கருப்பையை நாடுகிறது. அவற்றை நிறைவேற்றிக் கொள்ள இன்னுமொரு சந்தர்ப்பம் தேடுகிறது. அல்லது ஆசைகள் எல்லாம் கழிந்து விட்டன என்றால், ஏக்கங்கள் எல்லாம் இல்லாமல் போய்விட்டன என்றால் உடலெடுத்து வரும் சாத்தியம் இல்லாமல் போய்விடுகிறது. அப்போது ஆத்மா நித்ய பிரக்ஞைக்குள் நுழைந்து விடுகிறது.

    -ஓஷோ

    • மது விண்வெளியில் கடலாக மிதந்துகொண்டுள்ளது.
    • “ராஸ்பெர்ரி ரம் கடல்” என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.

    பிரபஞ்சத்தின் மிகப்பெரும் மதுக்கடல் சாஜிட்டாரியஸ் பி நட்சத்திரம் அருகே கண்டுபிடிக்கபட்டுள்ளது.

    அதை விஞ்ஞானிகள் "ராஸ்பெர்ரி ரம் கடல்" என அழைக்கிறார்கள்.

    "எங்களை வெச்சு காமடி, கீமடி பண்ணலையே" என மதுப்பிரியர்கள் எல்லாம் டென்சனாக வேண்டாம். செய்தி உண்மைதான்

    1970க்களில் ரேடியோ டெலெஸ்கோப்பை வைத்து சாஜிட்டெரியஸ் நட்சத்திரத்தை விஞ்ஞானிகள் ஆராய்ந்தார்கள்.

    அப்போது வந்த ரேடியோ அலைகளை வைத்து ஆராய்கையில், சாஜிட்டரியஸ் நட்சத்திரம் அருகே மிகப்பெரும் மேககூட்டம் ஒன்று (Sagittarius-B Cloud) இருப்பது கண்டுபிடிக்கபட்டது.

    இதன் நிறை சூரியனை விட 30 லட்சம் மடங்கு பெரியது. இதன் நீளம் மட்டும் 390 ஒளியாண்டுகள்.

    சூரியனை விட 1 கோடி மடங்கு அதிக பிரகாசம் தரும் வெளிச்சத்தை தருகிறது இம்மேகம்.

    இந்த மேகம் முழுக்க பல்வேறு வகை நீராவிகள், வாயுக்கள், திரவங்கள் உள்ளன. இதிலிருந்தே பல நட்சத்திரங்கள் தோன்றுகின்றன. விண்வெளியில் கொடும் குளிர் இருப்பதாலும் , இதனுள்ளேயே நட்சத்திரங்கள் இருப்பதால் வெப்பம் இருப்பதாலும், வாயு, நீர், பனி என பல்வேறு வடிவங்களில் இதனுள் திரவங்கள் உள்ளன. அதில் மிக முக்கியமானது ஆல்கஹால்.

    குறிப்பாக எத்தனால், மெதனால் மற்றும் வினைல் ஆல்கஹால் ஆகியவை மிகப்பெரும் அளவில் இந்த மேகத்தில் இருப்பதாக கண்டறியபட்டுள்ளது. பூமியில் உள்ள கடல்களை எல்லாம் சேர்த்தாலும், நிகராகாது எனும் அளவுக்கு மது விண்வெளியில் கடலாக மிதந்துகொண்டுள்ளது.

    அதிலும் ஏராளமாக எஸ்டெர் (ester) எனும் கெமிக்கலும் கண்டுபிடிக்கபட்டுள்ளது. எஸ்டெரால் தான் ராஸ்ப்பெர்ரி பழங்களுக்கு அந்த நிறமும், வாசமும் வருவதால், இக்கடலை "ராஸ்பெர்ரி ரம் கடல்" என விஞ்ஞானிகள் செல்லமாக அழைக்கிறார்கள்.

    பாறை கிரகங்களில் மட்டுமே தான் உயிர்கள் உருவாகவேண்டுமா என்ன? மிதக்கும் மேகங்களிலும் உருவாகலாம். அங்கே இருக்கும் மிதக்கும் சமுத்திரங்களில் இதமான தட்பவெப்பத்தில், அமினோ அமிலங்கள் கூடி, கடல்வாழ் உயிரினங்கள் ஏன் உருவாகி இருக்ககூடாது?

    "அதெல்லாம் கிடக்கட்டும்..விண்வெளியில் மிகப்பெரும் ராஸ்ப்பெர்ரி ரம் சமுத்திரமே இருக்கு, தண்ணி இருக்கு, ஐஸும் இருக்குங்கறீங்க. பூமியில் இப்படி தரமில்லாத சரக்கை படைத்துவிட்டு, விண்வெளியில் இப்படி யாருமே இல்லாத இடத்தில் யாருக்கு இத்தனை சரக்கை மிக்ஸிங் பண்றான் ஆண்டவன்?

    ஆண்டவனப் பாக்கணும்

    அவனுக்கும் ஊத்தணும்

    அப்போ நான் கேள்வி கேக்கனும் சர்வேசா

    இனியும் எதுக்கு பொறுத்து இருக்கணும்? எடுங்க விண்கலத்தை. கிளம்புங்க சாஜிட்டெரியஸ் பி2 மேகத்துக்கு" என மதுப்பிரியர்கள் சொல்கிறார்கள்.

    -நியாண்டர் செல்வன்

    • வீட்டு வேலைகளை இயந்திரத் துணையின்றி செய்தாலே போதுமானது.
    • மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

    ஆறு அறிவு மனிதன் என்கிறோம். ஆனால் இவனுக்குத் தான் எத்தனை எத்தனை நோய்கள்..!

    இந்த 'ஆறில்' அக்கறை எடுத்துக் கொண்டால், நம் வாழ்வில் ஆரோக்கியமாக வாழலாம்.

    1 - பசி, 2 - தாகம், 3 - உடல் உழைப்பு, 4 - தூக்கம், 5 - ஓய்வு, 6 - மன நிம்மதி .

    பசி: உங்கள் உடலுக்கு உணவு தேவையா இல்லையா என்பது சுவரில் தொங்கும் கடிகாரத்திற்குத் தெரியுமா? தெரியாதல்லவா! பின் ஏன் நேரம் பார்த்துச் சாப்பீடுகிறீர்கள்.

    யாரெல்லாம் நேரம் பார்த்து வேளாவேளைக்குச் சரியாகச் சாப்பிடுகிறாரோ அவர் மிகப்பெரிய நோயாளி ஆகப்போகிறார் என்று அர்த்தம்.

    இதைத்தான் வள்ளுவப்பெருமான்..

    "மருத்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது

    அற்றது போற்றி உணின்" என்கிறார்.

    நாம் ஏற்கனவே உண்ட உணவு செரித்த பின் மீண்டும் பசித்துச் சாப்பிட்டால் இந்த உடலுக்கு எந்த மருந்தும் தேவையில்லை என சொல்லியிருக்கிறார்.

    "தீயள வன்றத் தெரியான் பெரிதுண்ணின்

    நோயள வின்றிப் படும்."

    பசியின் அளவு தெரியாமல் அதிகமாகச் சாப்பிட்டால் நோய் அளவில்லாமல் வரும் என்கிறார்.

    பசியின் அளவு தெரியாமல் அதிகமாக உண்டால் நோய் அளவில்லாமல் வரும் போது, பசியே இல்லாமல் சாப்பிட்டால் என்னவாகும்!

    உணவைப் பசித்துச், சுவைத்துக் கவனித்து, இடையில் தண்ணீர் குடிக்காமல் உண்ண வேண்டும்.

    இதை நீங்கள் சரியாகச் செய்வதின் மூலம் ஆரோக்கியத்தின் முதல் படியில் கால் வைக்கிறீர்கள்.

    தாகம்: அனைவருக்கும் பொதுவாக தண்ணீரின் அளவு நிர்ணயிக்கப்படுகிறது, இது தவறு. குளிர்ந்த இடத்தில் வேலை பார்க்கும நபருக்கு 3 லிட்டர் தண்ணீர் தேவைப்படாது, மீறிக் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    வெயிலில் கட்டிட வேலை செய்பவருக்கு 3 லிட்டர் போதாது, இவருக்கு அதிகம் தேவைப்படும், இவர் 3 லிட்டர் குடித்தால் சிறுநீரகம் பாதிக்கப்படும்.

    எனவே தாகம் எடுக்கும் போது குடியுங்கள், தாகம் தீரும் வரை குடியுங்கள், அளவுகளைப் பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.

    ஆர்ஓ, மினரல், பில்டர் வாட்டர் பேராபத்து! இதை நீங்கள் குடித்தால் சிறுநீரகம் சிதைந்து, இது தொடர்பான் ஆயிரம் நோய்கள் வரும்.

    தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரிக்க பருத்தி துணியில் வடித்து மண் பானை, செம்பு பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம்.

    தண்ணீரை இயற்கை முறையில் சுத்திகரித்துக் குடித்ததின் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் இரண்டாவது படியை அடைவீர்கள்.

    உடல் உழைப்பு: ஒரு வாகனத்தை 3 மாதம் ஓட்டாமல் வைத்திருந்தால் என்னவாகும். அதே நிலைதான் உடலுக்கும். குறைந்தபட்சம் ஒரு நாளைக்கு ஒரு மணி நேரமாவது உடல் உழைப்பு அவசியம்.

    இதற்கு நீங்கள் நடைபயிற்சி, யோகா, ஜிம் இதை எல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வீட்டு வேலைகளை இயந்திரத் துணையின்றி செய்தாலே போதுமானது.

    உடலுக்கு வேலை கொடுப்பதன் மூலம் நீங்கள் ஆரோக்கியத்தின் மூன்றாம் படி அடைவீர்கள்.

    தூக்கம்: யாருக்கு தூக்கம் வரும் ? உடலுக்கு வேலை கொடுப்பவருக்கே தூக்கம் வரும். மனதிற்கு வேலை கொடுப்பவருக்கு தூக்கம் வராது. மனதிற்கு மட்டும் வேலை கொடுத்துவிட்டு நீங்கள் தூக்கத்தை எதிர்பார்க்க கூடாது.

    ஒரு நாள் குனிந்து நிமிர்ந்து உடலுக்கு வேலை கொடுத்து பாருங்கள் எப்படி தூக்கம் வருகிறதென்று... தெரியும்.

    ஒரு மனிதன் உயிர் வாழ உணவு, காற்று, நீர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு தூக்கமும் முக்கியம். இரவு கண் விழித்து வேலை பார்ப்பது உங்கள் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

    பகலில் உறங்கி சமன் செய்யதுவிடலாம் என நினைக்காதீர்கள். நீங்கள் தலைகீழாக நின்றாலும், கோடி கோடியாய் கொடுத்தாலும் இரவு உறக்கத்தை உங்களால் ஈடு செய்யவே முடியாது. இரவு தூங்க வேண்டிய சரியான நேரம் 9 மணி.

    இரவு உறக்கம் சரி இல்லை என்றால் கல்லீரல், பித்தப்பை தொடர்பான ஆயிரம் நோய்கள் வரும்.

    நீங்கள் இரவு 9 மணிக்கு உறக்கச் செல்வதன் மூலம் ஆரோக்கியத்தின் நான்காம் படியில் கால் அடி எடுத்து வைக்கிறீர்கள்.

    ஓய்வு: சளி, காய்ச்சல், தலைவலி, அசதி போன்ற உடலின் கழிவு நீக்க செயலுக்கு நாம் ஓடி ஓடி மருந்து மாத்திரை எடுக்காமல், உடலிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

    உடல் கேட்கும் போது ஓய்வு கொடுத்ததால் நீங்கள் ஆரோக்கியத்தின் ஐந்தாம் படியை அடைகிறீர்கள்.

    மன நிம்மதி: ஐந்து கட்டத்தை வெற்றிகரமாக தாண்டி வந்த உங்களுக்கு மன நிம்மதி என்று ஒன்று இல்லை என்றால் பின் கீழ் சறுக்கி பழைய நிலைக்கு சென்றுவிடுவீர்கள்.

    மனம் நிம்மதியாக இருக்க உங்களுக்கு பிடித்ததை படியுங்கள், பிடித்த வேலையை செய்யுங்கள், மாதம் ஒரு நாளாவது உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலங்களுக்கு சென்று வாருங்கள்.

    மனதை நிம்மதியாக வைக்கும் கலைகளை கற்று தேர்ந்தால், நீங்கள் ஆறாவது படியில் வீற்றிருக்கும் ஆரோக்கிய அன்னையை அடைந்துவிடுவீர்கள் !

    -சுபா சுப்பிரமணியம்

    • சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ஆயுதம் ஏந்தி ‘சாமி’யாவே இருந்துக்கிட்டிருந்தேன்.
    • எல்லாச் சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும்.

    எம்.ஆர். ராதாவின் தூக்குமேடை நாடகத்துக்கு நாட்டுல எவ்வளவு ஆதரவு இருந்ததோ அவ்வளவு எதிர்ப்பும் இருந்தது. இது குறித்து எம்.ஆர். ராதா கூறுகையில் "என் நாடகம் பாகற்காய் மாதிரி. கசப்பைப் பார்க்காம பாகற்காயைக் கறி வைத்துத் தின்னா உடம்புக்கு நல்லது; அதேபோல என் நாடகக் கருத்துகளிலே உள்ள உண்மையும் உங்களில் சிலருக்குக் கொஞ்சம் கசப்பாய்தான் இருக்கும். அதை முகத்தைச் சுளிக்காம, எதிர்த்துக் கூச்சலிடாம, அமைதியா இருந்து கேட்டா உங்க அறிவுக்கு நல்லது. எங்களுக்கு அறிவு வேணாம்னு யாராவது நினைச்சி கலாட்டா செய்யறதாயிருந்தா அவங்க தயவுசெய்து டிக்கெட்டைக் கவுண்ட்டர்லே கொடுத்துப் பணத்தை வாங்கிக்கிட்டு வீட்டுக்குப் போயிடுங்க என்பேன். அதையும் மீறி வம்புச் சண்டைக்கு வந்தா, அந்தச் சண்டைக்கும் நான் தயாராயிருப்பேன்.

    நீங்க பார்த்திருப்பீங்களே... நம்ம சாமிகளிலே ஏதாவது ஆயுதம் ஏந்தாத சாமி இருக்கா? இருக்கவே இருக்காது. எல்லாச் சாமியும் ஆயுதம் ஏந்திக்கிட்டுத்தான் இருக்கும். எதுக்கு அப்படியிருக்கு? மனுஷனைக் கண்டு பயந்தா? அதெல்லாம் ஒண்ணுமில்ல. துஷ்ட நிக்கிரக சிஷ்ட பரிபாலனம் செய்ய எல்லாச் சாமியும் அப்படியிருக்குன்னு பெரியவங்க சொல்வாங்க. அந்த சாமிகளைப் போலவே நானும் என் எதிரிகளுக்காக எப்பவும் ஆயுதம் ஏந்தி 'சாமி'யாவே இருந்துக்கிட்டிருந்தேன்..!'' என்று குறிப்பிட்டார்.

    - விந்தன்

    • வாலி சொன்னார்,"ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம்.
    • அறிஞர் கிண்டலாக ,"அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?" என்றார்.

    கவிஞர் வாலி ஒரு அறிஞரைப் பார்க்கப் போயிருந்தார். அவர் கேட்டார்,

    "வாலி என்று ஏன் பெயர் வைத்திருக்கிறாய்?"

    வாலி சொன்னார்,"ராமாயணத்திலே,வாலி யாரோடு சேர்கிறானோ, அவருடைய பலத்தில் பாதி, அவனுக்கு வந்து விடுமாம். அதுபோல அறிஞர்களுடன் பழகும்போது, அவர்களது அறிவில் பாதி எனக்கு வந்து விடுமல்லவா? அதனால் தான் நான் அந்தப் பெயரை தேர்ந்தெடுத்தேன்" என்றார்.

    உடனே அறிஞர் கிண்டலாக ,"அப்படியும் உனக்கு அறிவு வந்ததாகத் தெரியவில்லையே?" என்றார்.

    வாலி சிரித்துக் கொண்டே,"நான் இன்னும் எந்த அறிவாளியையும் சந்திக்கவில்லையே!" என்றாராம்.

    -சந்திரன் வீராசாமி

    • கங்கை நதி நீர் எத்தனை நாள் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கிறது.
    • கங்கையில் குளித்தவுடன் மனித உடலிலுள்ள நீரும் மாற்றமடைகிறது.

    இமயமலை.. ,அதே மேகங்கள் தான்,அதே பனி உருகல் தான்.அந்த மலையிலிருந்து பல்வேறு வகையான நதிகள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. ஆனால் கங்கை நதி மட்டும் எப்படி மாறுபடுகிறது?. .

    கங்கை உற்பத்தியாகின்ற இடம் என்று சொல்லப்படுகிற கங்கோத்ரியை எல்லோரும் பார்வையிடலாம்.ஆனால் உண்மையான கங்கோத்ரி அதுவல்ல. அது உற்பத்தியாகும் இடத்தை நம்முடைய பருவுடலை கொண்டு அங்கே சென்று பார்வையிடமுடியாது. உன்னுடைய ஆத்மா உடலை கொண்டு மட்டும் உள்ளே நுழைந்து நீண்ட தூரம் சென்று ஒருவர் தரிசிக்கமுடியும்.அங்கே தான் இயற்கையான இரசாயன மாற்றம் நிகழ்கிறது.

    இந்துக்களின் கோயில்கள் அனைத்துமே நீரை ஆதாரமாக கொண்டவை.நீண்ட ஆறுகளும் குளங்களும் பசுஞ் சோலைகளும் இருந்தால் தான் ஒரு இந்து ஆலயத்தை நிர்மானிக்க முடியும். ஏனெனில் இந்து ஆலயங்கள் குளிர்ச்சியை ஆதரமாக கொண்டவை. சமணர்களின் ஆலயங்கள் பசுமையில்லா குன்றுகளின் மேல் அமைந்துள்ளன. ஏனெனில் சமணரகளின் ஆலயங்கள்வெப்பத்தை ஆதாரமாக கொண்டவை.

    கங்கை நதி நீரை போலவே தண்ணீரை செயற்கை முறையில் உருவாக்க விஞ்ஞானிகள் போராடிப்பார்த்தார்கள் முடியவில்லை. யாராவது இரசாயனத்தை கலக்கிறார்களா என்றால் அதுவும் சாத்தியமில்லை. கங்கை நதி நீர் முற்றிலுமே ரசாயன தொழிற்சாலையாக இருக்கிறது. மற்ற தண்ணீரை ஒரு வாரம் வைத்திருந்தால் நாறிவிடுகிறது. ஆனால் கங்கை நதி நீர் எத்தனை நாள் வைத்திருந்தாலும் கெட்டுப்போகாமல் அப்படியே இருக்கிறது.

    கங்கை நதி நீரில் இரசாயன மூலக்கூறுகளும் ஆன்மீக வளர்ச்சிக்கான மூலக்கூறுகளும் இயற்கையாக அமைந்துள்ளது. கங்கையில் குளித்தவுடன் மனித உடலிலுள்ள நீரும் மாற்றமடைகிறது. அவனுடைய உடலும் மனமும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஆன்மீக பாதையில் திரும்புகிறது. உடனடியாக புனிதத்தலத்தில் பிரவேசித்து வணங்குவது ஒரு மிகப்பெரிய ஆன்மீக அனுபவமாகும். புறத்தை கொண்டு அகத்தை நாடும் மிகச்சிறந்த வழி இதுவாகும். அதனால் தான் சிவனின் தலையில் கங்கையை இந்துக்கள் அமைத்து கொண்டார்கள்.

    -ஓஷோ

    • உடல், கருவிகள், உலகம் போன்றவற்றால், உயிர் இச்சைநிலை அடைகிறது.
    • இரண்டையும் தீர்க்க அவனைப் போல நம்மால் முடியாது.

    சாமி மாதிரி வந்து, நல்ல நேரத்தில் உதவி செஞ்சீங்க!

    இப்படி சொல்பவர்கள் முன்பாக, சாமி ஆனது, மனித சட்டை தாங்கி அடிக்கடி வருவதால் தான், அவர்கள் இப்படி சொல்கிறார்கள்! கொடுத்து வைத்தவர்கள் இவர்கள்!

    சாமியோ தவத்தாலும் அறிய முடியாதவன்! சாமிய மாதிரி ஒருத்தரைப் பார்க்கலாம்! சாமியப் பாக்க முடியாது! அவனை உணரலாம்! அவன் தன்மையை உணரலாம்!

    அது என்ன தன்மை?

    சாமியிடம் மிக மிக இயல்பான தன்மை ஒன்று உண்டு! அது உயிர்கள் மீது கருணை கொள்வது!

    நன்றாகச் சிந்தித்தால், உயிர்களின் உருவநிலைக்கு அவன் அளித்த கருணையே காரணம்!

    உயிர்களின் இயக்கநிலைக்கு அவன் கருணையே காரணம்!

    உயிர்களின் ஞானநிலைக்கு அவன் கருணையே காரணம்!

    சாமி இவ்வாறு கருணை செய்வது ஏன்?

    உடல், கருவிகள், உலகம் போன்றவற்றால், உயிர் இச்சைநிலை அடைகிறது!

    இந்த இச்சையையும், உயிரின் வினைக்கேற்பவே சாமி கூட்டி வைக்கிறான்!

    இப்படி உண்டான இச்சையால், உயிர் அடையும் துன்பத்தில் இருந்து விடுபடவே, சாமி உயிர்கள் மீது கருணை கொள்கிறான்!

    உயிர்கள் இரண்டு நிலையில் துன்புறும்! ஒன்று இச்சை! இது மனப் பசி! இரண்டு வயிற்றுப் பசி!

    இது இரண்டையும் தீர்த்து வைப்பவன் சாமியே!

    இரண்டையும் தீர்க்க அவனைப் போல நம்மால் முடியாது! இருப்பினும், வயிற்றுப் பசியை, நம்மால் இயன்ற மட்டும் தீர்க்க முடியும்! இதை மனிதநேயம் என்கிறார் #வள்ளலார்!

    இந்த சீவ காருண்யச் செயலை, அதாவது உயிர்களின் வயிற்றுப் பசியை, சாமியைப் போல் கருணையோடு நீக்கும் எந்த உயிரும் #இறைத்தன்மையை அடையும் என்பது #அப்பர் வாக்கு!

    அன்னம் பாலிக்கும் தில்லைச் சிற்றம்பலம்

    பொன்னம் பாலிக்கும் மேலும் இப்பூமிசை

    என் அன்பு ஆலிக்குமாறு கண்டு இன்புற

    இன்னம் பாலிக்குமோ இப்பிறவியே -தேவாரம் 5:01

    பசியை நீக்கும் எவ்வுயிரும் பிறவுயிர்களால் சாமி என்றே அழைக்கப்படும்!

    பசிப்பிணி தீர்க்க வாருங்கள் சாமிகளே! இதற்கு பெயர் பிரசாதம் அல்ல! #அமுதூட்டல் அதாவது அன்னம் பாலித்தல்!

    உணவைப் பரிமாறும் போது, நன்றாகப் பாருங்கள்! அத்திருக் கூட்டத்திலே சாமியும், அடியார்களும் சரிசமமாய் அமர்ந்து இருப்பார்கள்!

    அத்திருக்கூட்டத்தில் கண்டேன் சாமியை!

    -சொக்கலிங்கம் முருகன்

    ×