என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கதம்பம்"

    • வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும்.
    • விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?.

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும். அவ்வப்போது மனம் துவண்டு விடலாம். அப்போதெல்லாம் சந்தர்ப்பத்திற்குத் தகுந்தபடி, கீழ்க்கண்ட மந்திரச் சொற்களில் பொருத்தமானவற்றை அடிக்கடி வாய்விட்டு உச்சரித்துப் பழகுங்கள். மனம் நிமிரும். சக்தி பெருகும். வெற்றி நெருங்கும்.

    1. போனது போச்சு, ஆனது ஆச்சு, இனி என்ன ஆகணும்? அதைப் பேசு.

    2. நல்ல வேளை. இதோடு போச்சுன்னு திருப்திப்படு.

    3. உடைஞ்சா என்ன? வேற வாங்கிட்டா போச்சு.

    4. பணம் தானே போச்சு. கை கால் நல்லா இருக்குல்ல. மனசுல தெம்பு இருக்குல்ல..

    5. சொல்றவங்க ஆயிரம் சொல்வாங்க. எல்லாமே சரின்னு எடுத்துக்க முடியுமா?

    6. இதெல்லாம் சப்ப மேட்டரு. இதுக்குப் போயா கவலைப்படறது.

    7. கஷ்டம் தான்,ஆனா முடியும்...

    8. நஷ்டம் தான் , ஆனா மீண்டு வந்திடலாம்.

    9. இதில விட்டா அதில எடுத்திட மாட்டனா?

    10. விழுந்தா என்ன? எழுந்திருக்க மாட்டனா?

    11. விழுந்தது விழுந்தாச்சு. எழுந்திருக்கிற வழியைப் பாரு...

    12. உட்கார்ந்து கிட்டே இருந்தா என்ன அர்த்தம்? எழுந்திரு. ஆக வேண்டியதைப் பார்...

    13. இந்த வழி இல்லேன்னா வேற வழி இல்லியா?

    14.இப்பவும் முடியலியா? சரி. இன்னொரு வாட்டி ட்ரை பண்ணு.

    15. முடியுமான்னு நினைக்காதே. முடியணும்…னு நினை...

    16. கிடைக்கலியா, விடு. வெயிட் பண்ணு. இதை விட நல்லதாகவே கிடைக்கும்.

    17. அவன் கதை நமக்கெதுக்கு. நம்ம கதையைப் பாரு...

    18. விட்டுத் தள்ளு. வெட்டிப் பேச்சு எதுக்கு? வேலை தலைக்கு மேலே இருக்கு.

    19. திருப்பித் திருப்பி அதையே பேசாதே. அது முடிஞ்சு போன கதை...

    20. சும்மா யோசிச்சுக் கிட்டே இருக்காதே. குழப்பம் தான் மிஞ்சும். சட்டுனு வேலையை ஆரம்பி.

    21. உலகத்துல யாரு அடிபடாதவன்? யாரு ஏமாறாதவன்? அடிபட்டாலும் ஏமாந்தாலும், அவனவன் தலை தூக்காமலா இருக்கான்?

    22. கஷ்டம் இல்லாத வாழ்க்கை எது? அது பாட்டுக்கு அது. வேலைபாட்டுக்கு வேலை.

    23. எப்பவுமே ஜெயிக்க முடியுமா? அப்பப்ப தோத்தா அது என்ன பெரிய தப்பா?

    24. நாலு காசு பார்க்கின்ற நேரம். கண்டதைப் பேசிக் காலத்தை கழிக்கலாமா?

    ஆம், நண்பர்களே, வீழ்வது கேவலமல்ல, வீழ்ந்தே கிடப்பது தான் கேவலம். முயற்சியுடன் எழுந்திடுங்கள்! உங்கள் உயரத்தை உலகுக்குக் காட்டுங்கள். வெற்றி நமதே!

    -நட்டாத்தி முருகேஷ்

    • ஒரு சில மனிதர்களை மட்டுமே கண்ணுற்றேன் என்றார் சுவாமி.
    • மனிதன் என்றால் அவன் புனிதனாக இருக்க வேண்டும்.

    வள்ளலார் என அழைக்கப்படும் இராம லிங்க சுவாமிகள் மிகப்பெரும் ஞானி.

    வாடிய பயிரைக் கண்டு வாடினேன் என்று மற்றவர் துன்பத்துக்காக வருந்துகின்ற உயர்ந்த பக்குவத்தைக் கொண்டவர்.

    அத்தகு ஞானநிலை கொண்ட இராம லிங்க சுவாமிகள் ஒருமுறை வீதியில் விளக் கொன்றை ஏந்தி நின்று, அவ்வீதியில் சென்று வருவோரைப் பார்க்கிறார்.

    சுவாமிகள் ஏன் இவ்வாறு செய்கிறார் என்பதைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் சுவாமிகளிடமே வினவுகின்றனர்.

    சுவாமி! விளக்கை ஏந்தியவாறு ஒவ்வொரு வரையும் பார்க்கிறீர்களே என்ன சங்கதி..?

    இதற்கு சுவாமிகள் கூறுகிறார்; யாரேனும் மனிதர்கள் போகிறார்களா? என்று பார்க்கிறேன் .

    மனித உருவில் ஐந்தறிவு படைத்த விலங்குகளே போய்வருகின்றன. ஒரு சில மனிதர்களை மட்டுமே கண்ணுற்றேன் என்றார் சுவாமி.

    ஆம், மனிதர்கள் எல்லோரும் மனிதர்கள் அன்று. மனிதன் என்றால் அவன் புனிதனாக இருக்க வேண்டும்.

    புனிதன் என்றால் மற்றவர்களை நேசிக்கின்ற மற்றவர்கள் மீது அன்பு செலுத்துகின்ற மற்றவர் துன்பத்தை தன் துன்பம் போல எண்ணுகின்ற பக்குவத்தைக் கொண்டிருப்பதையே அது குறிக்கும்.

    ஆம், அழுக்காறு அவா வெகுளி இன்னாச் சொல் நான்கும் இழுக்காஇயன்றது அறம் என்பார் வள்ளுவர்.

    அழுக்காறு என்பது பொறாமையைக் குறிக்கும். அவா என்பது புலன்வழிச் செல்லுகின்ற ஆசை. வெகுளியானது கடுஞ்சினத்தைக் குறிப்பதாகும். இன்னாச் சொல் என்பது மற்றவர்களைப் புண்படுத்தும் சொல்.

    ஆக, மேற்குறித்த நான்கையும் கடிந்து ஒழுகுவதே அறமாகும்.

    இப்போது வள்ளுவன் கூறுகின்ற அறம் நம்மிடம் உண்டா? என்பதை நாம் ஒவ்வொரு வரும் முடிவு செய்வோமாயின், வள்ளலார் விளக்கை ஏந்தி நின்று மனிதர்கள் யாரேனும் போகிறார்களா என்று பார்த்ததன் பொருள் புரியும்.

    -யாழ்குலன்

    • எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும்.
    • குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது.

    எள்ளு சாப்பிடுவதால் பலவித பயன்கள் நமக்கு கிடைக்கும் என்பதாலே எந்த ஒரு பலகாரம் என்றாலும், அதில் கொஞ்சம் எள்ளை நம் முன்னோர்கள் சேர்த்து சமைக்கும் பழக்கத்தை கொண்டிருந்தனர்.

    எள்ளை உணவில் சேர்த்து கொள்வதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். அதில் மிக முக்கியமானது புற்றுநோயை எதிர்த்து நிற்பதே.

    எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட உணவுகளில் எள்ளும் ஒன்று. இந்த சிறிய விதைக்குள் இவ்வளவு மகிமைகள் இருக்குமா..? என்று மிகைத்து பார்க்கும் அளவிற்கு இதன் தன்மை உள்ளது. அத்துடன் புற்றுநோயிற்கும் வழி செய்யுமாம். இதற்கு காரணம் என்னனு உங்களுக்கு தெரியுமா..?

    இதில் உள்ள எண்ணற்ற ஆன்டி ஆக்சிடன்ட்ஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் எ போன்றவை தான் எள்ளின் அத்தனை மகத்துவத்திற்கும் காரணம். அத்துடன் இதை சரியான அளவில் எடுத்து கொண்டால் பலன் முழுமையாக கிடைக்குமாம்.

    பெண்கள் தினமும் எள் சாப்பிடுவதால் அவர்களுக்கு பெரிதாக வருகின்ற மார்பக புற்றுநோய் தடுக்கப்படுகிறது. அத்துடன் ரத்த நாளங்களில் புற்றுநோய் செல்கள் வளர விடாமல் பார்த்து கொள்கிறது என தாய்லாந்து ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

    மார்பக புற்றுநோயிற்கு மட்டுமின்றி பெருங்குடல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றையும் இது தடுக்கிறது. குடலில் சேர்ந்துள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெளியேற்றி சுத்தமாக வைக்கிறது. எனவே, புற்றுநோய் அபாயம் உங்களுக்கு கிடையாது.

    எந்த எள்ளு அதிக ஆற்றல்களை கொண்டது என்கிற கேள்விக்கு பதில், கருப்பு எள் தான். எள்ளை பற்றிய பல ஆய்வுகளில் கருப்பு எள் தான் மகத்துவம் பெற்றது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வெள்ளை எள்ளை விட கருப்பு எள்ளில் தான் ஊட்டச்சத்துக்களும், தாதுக்களும் அதிகம் இருக்கிறதாம்.

    -சின்னசாமி

    • காலை வேளையில் இஞ்சிச் சாற்றைப் பருகவேண்டும்.
    • கடுக்காயின் சிறப்பு என்னவென்றால் உடலுக்குள் புகுந்திருக்கும் நோயைச் சாதுரியமாக வெளியேற்றிவிடுமாம்.

    "காலையில் இஞ்சியும்

    கடும்பகல் சுக்கும்

    மாலையில் கடுக்காயும்

    மண்டலம் உண்டு வந்தால்

    கோலை ஊன்றிக் குறுகி நடப்போரும்

    கோலை வீசிக் குலாவி நடப்பரே!"

    என்று சித்தர் ஒருவர் பாட்டெழுதியிருக்கிறார்.

    எனவே காலை வேளையில் இஞ்சிச் சாற்றைப் பருகவேண்டும். அதனை எப்படித் தயாரிப்பது?

    இஞ்சியின் தோல்நீக்கிச் சாறெடுத்துச் சிறிதுநேரம் வையுங்கள்; அதன் அடியில் மாவு மாதிரி வெண்மையாகப் படிவதை நீக்கிவிட்டு, அச்சாற்றை மட்டும் வெறும் வயிற்றில் பருகுங்கள்.

    இஞ்சிச் சாற்றைப் பருகுவதற்குப் பதிலாக இஞ்சியின் தோலை நீக்கிவிட்டு அதனைச் சிறு துண்டுகளாக்கித் தேனில் ஊறவைத்தும் சாப்பிடலாம். இதனை உண்டவுடனே காலை உணவை 'full'கட்டுக் கட்டாமல் அரைமணி/முக்கால் மணி நேரத்துக்குப் பிறகுக் காலை உணவைச் சாப்பிட வேண்டும்.

    கடும்பகல் நேரத்தில் பொடித்து வைத்த சுக்கில் 1 தேக்கரண்டி எடுத்து அதே அளவு பனைவெல்லம் (கருப்பட்டி) கலந்து கொதிக்கவைத்துக் குடியுங்கள்.

    கடும்பகலிலா?! நாங்கள் அலுவலகத்தில் வேலை பார்ப்பதா? இல்லை...சுக்கைச் சாப்பிட்டுக் கொண்டிருப்பதா? என்று அங்கலாய்ப்பவர்கள் மாலை நேரத்தில் காபி/டீக்கு பதிலாகச் சுக்கும் கருப்பட்டியும் கலந்து பருகலாம். வெறுமனே சுக்கையும் கருப்பட்டியையும் கலந்து குடிப்பதைவிடக் கொஞ்சம் பாலும் கலந்தால் சுவையாயிருக்குமே என்று நினைப்பவர்கள் சுக்குக் காபியாகக் கூடக் குடிக்கலாம்.

    "சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை; சுப்பிரமணியனுக்கு மிஞ்சிய தெய்வமுமில்லை" என்றொரு பழமொழியை எழுதிவைத்துச் சுக்கின் மகத்துவத்தை மக்குகளும் புரிந்துகொள்ள வழிவகுத்திருக்கின்றனர் நம் மக்கள்.

    அடுத்தது கடுக்காய். மாலையில் கடுக்காய் என்று சித்தர் தம் பாடலில் குறிப்பிட்டிருந்தாலும் நாம் கடும் பகலில் சாப்பிட வேண்டிய சுக்கை மாலை நேரத்துக்கு மாற்றிவிட்டதால், உடனே கடுக்காய் சாப்பிடக் கூடாது. எனவே இரவு உணவுக்குப்பின் விதை நீக்கிப் பொடிசெய்யப்பட்ட கடுக்காயை ஒரு தேக்கரண்டி அளவுக்கு எடுத்து வெந்நீருடன் கலந்து சாப்பிடலாம்.

    கடுக்காயின் சிறப்பு என்னவென்றால் உடலுக்குள் புகுந்திருக்கும் நோயைச் சாதுரியமாக வெளியேற்றிவிடுமாம். அதனால்தான் நம்பும்படி எதையாவது சொல்லி ஏமாற்றித் தப்பிவிடுவோரைக் 'கடுக்காய் கொடுத்துவிட்டான்' என்று கூறுகிறார்கள் போலிருக்கிறது.

    "கடுக்காய் உண்டால் மிடுக்காய் வாழலாம்" என்ற பழமொழியும் கடுக்காயின் சிறப்பை எடுத்துக் காட்டுகிறது.

    சரி…இஞ்சி, சுக்கு, கடுக்காய் இவற்றை எத்தனை நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிடவேண்டும்?

    "ஒரு மண்டலம்" என்கிறார் சித்தர்.

    கமண்டலம் தெரியும்... அது என்ன மண்டலம் என்கிறீர்களா?

    ஒரு மண்டலம் என்பது 48 நாள்கள்!

    ஆக, 48 நாள்கள் இவை மூன்றையும் தொடர்ந்து சாப்பிட்டுவந்தால் உடலிலுள்ள நோய்களெல்லாம் சொல்லாமல் கொள்ளாமல் 'எஸ்' ஆகிவிடுமாம்!

    அப்புறமென்ன…? காலை நம்பாமல் கோலை நம்பி நடக்கும் நம்பியும் கோலை வீசிவிட்டுத் தன் சொந்தக் காலால் தெம்பாக நடப்பான் என்கிறார், பெயர் தெரியாத, இந்தச் சித்தர்.

    மக்களே! அல்சர் உள்ளிட்ட வயிற்றுப் பிரச்சினை உள்ளவர்கள் இந்த விஷப் பரீட்சையில் இறங்க வேண்டாம். இஞ்சி, சுக்கு போன்றவற்றிலுள்ள காரம் அல்சரை அதிகப்படுத்திவிடும் அபாயமுண்டு!

    "முயன்று பார்க்கலாம்" என நினைப்பவர்கள் அரைத் தேக்கரண்டி அளவுக்கு இவற்றைச் சாப்பிட்டு ஆட்டத்தை ஆரம்பியுங்கள்! வேறு உபாதைகள் ஏற்பட்டால் சாப்பிடுவதை நிறுத்திவிடுங்கள்! சித்தர் கோபித்துக்கொள்ளமாட்டார்!

    -மேகலா இராமமூர்த்தி

    • அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்.
    • “நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் சார் ”ன்னு பெருமையா சொன்னான்.

    ஒரு அம்மா தன் கணவர் கிட்ட சொன்னங்க,

    " ஏங்க நம்ம பொண்ணுக்கு கல்யாண வயசாகுது , காலகாலத்துல கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாமா?" அதுக்கு ஏற்பாடு பண்ணுங்கன்னாங்க.

    "நானும் அது விசயமாத்தான் முயற்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்னு சொன்னார் அவர். .

    பொண்ணும் இவங்க பேசுனத கேட்டுகிட்டு இருந்தாள் .

    அடுத்த நாள் பொண்ணு ஒரு பையனை வீட்டுக்கு கூட்டிகிட்டு வந்தாள்.

    அப்பா கேட்டார் " யாரும்மா இவர்! ...?"

    "அப்பா இவர் பேர் சுரேஷ் . இவர நான் விரும்பறேன், அதான் உங்க கிட்ட பேச அழைச்சிட்டு வந்தேன்". ன்னு சொன்னாள்.

    "அப்படியா! உக்காரப்பா" ன்னு சொல்லி சில கேள்விகளை கேட்டார்..

    "நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க ?" அப்படின்னார்.

    "சார்..... நான் கடவுளை பத்தி ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கேன்" னு சொன்னான்.

    "உங்க ஆராய்ச்சி எல்லாம் எந்த அளவுக்கு போய்கிட்டு இருக்கு? "அப்படின்னு கேட்டார்.

    "நான் கிட்டத்தட்ட கடவுளை கண்டுபுடிசிட்டேன் சார் "ன்னு பெருமையா சொன்னான்.

    "உங்க வருமானத்துக்கு என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க"ன்னு இவர் கேட்டார் ..

    அவன் "அதெல்லாம் கடவுள் பாத்துக்குவார் சார்"ன்னு சொன்னான்

    "சரிப்பா, ரொம்ப சந்தோசம், போயிட்டு வா"ன்னு வழியனுப்பினார்...

    இப்போ அந்த அம்மா கேட்டாங்க,

    "ஏங்க.. பையன் எப்படிங்க?"

    அவர் சொன்னார் "பையனுக்கு எந்த வேலையும் இல்லை! வருமானத்துக்கும் வழியே இல்லை! வரப்போர மாமனாரைத்தான் கடவுளா நினைசுக்கிட்டு இருக்கான்" அப்படின்னார்.....

    -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்

    • வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள்.
    • சிறுவன் பிரஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான்.

    உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?

    கூடாது. அதற்கு இந்த வரலாற்று சம்பவம் சாட்சி..

    ''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது.

    வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்' என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர்.

    பிற்காலத்தில் அந்தச் சிறுவன் பிரஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்!'

    -அழகு கூத்தையா

    • சில விசயங்களை ரொம்ப எளிதா செய்துட்டு போய்டுவோம்.
    • நம்மில் பலர், எதிர் பாலரிடம் பழகாமல் கற்பனையில் அவர்களை பற்றிய ஒரு பிம்பம் வைத்திருப்போம்.

    முதன் முதலில் தாம்பத்திய வாழ்க்கைக்கு போகும் போது, நம்மில் பலருக்கு ஏற்படும் தடுமாற்றம். ஒருவரை ஒருவர் திருப்தி செய்திட வேண்டுமே எங்கிற கவலை எல்லாம் எவ்ளோ மன அழுத்தத்தை கொடுக்கும்ன்னு அவசியம் புரிஞ்சிக்கணும் இல்லியா…?

    சில விசயங்களை ரொம்ப எளிதா செய்துட்டு போய்டுவோம். ஆனால் அதே விசயத்தை யாரையாவது இம்ப்ரெஸ் பண்ண கூடுதல் கவனமெடுத்து செய்தோம்ன்னா, அப்போ பார்த்து சொதப்பிடும். சரியா வராது..! இது ஏன்னா.. 'சரியா செய்யனுமே' என்கிற பதட்டம்.

    எக்ஸாம் ஹால், மேடை பேச்சு, விளையாட்டு போட்டிகள் மாதிரி பல இடங்களில் சொதப்பிய அனுபவம் நம்ம எல்லோருக்கும் இருக்கும். இதே Anxiety நம்ம செக்ஸ் பார்ட்னரை அதிகமா இம்ப்ரெஸ் பண்ண வேண்டிய இடமான படுக்கை அறையில் நுழைந்ததுன்னா தாம்பத்தியம் ஒரு வில்லங்கம் ஆகிடும்.

    பொதுவா கலவி ஒரு ஜாலி மேட்டர். ஆனால், சில நேரங்களில் ஒருவித பதட்டம் சேர்ந்து சொதப்பி அது பெரிய இம்சை ஆகிடும். A kiss can start, A kiss can End the relationship'ன்னு சொல்வாங்க. அக்மார்க் உண்மை. பதட்டம் இல்லாமல் அணுகுபவர்களுக்கு முத்தம் ஆரம்பமாகவும். பதட்டத்தோட அனுகுபவர்களுக்கு அதுவே முடிவாகவும் இருக்க கூடும்.

    ஆண் பெண் இருவருக்குமே இந்த பதட்டம் வரக்கூடியது தான். பெண்களுக்கு, "தான் அழகா இருக்கோமா? குண்டா இருக்கோமா? அவனுக்கு தன்னை பிடிக்காம போய்டுமா? மாதிரியான எண்ணங்களும், ஆண்களுக்கு, "தன்னால் செயல்பட முடியாமல் போய்டுமா? விரைவில் சோர்ந்திடுவோமா? தன்னோட பார்ட்னரை திருப்தி படுத்த இயல்லாமல் போயிடுமா" போன்ற எதிர்மறை எண்ணங்களும் பதட்டத்தை குடுக்கும்.

    இயல்பான கலவிக்கு 'செக்ஸ் ஹார்மோன்களான ஈஸ்ட்ரோஜென், டெஸ்டோஸ்டீரோன் தான் உடலில் அதிகமா சுரக்கும். அதே மாதிரி பயம் / பதட்டம் போன்ற சமயங்களில் உடலில் அட்ரினலின் மாதிரி தற்காப்பு (Stress) ஹார்மோன்கள் தான் அதிகமா சுரக்கும். செக்ஸ் ஹார்மோன் இணையோடு கூடுன்னு சொல்லும். ஸ்ட்ரெஸ் ஹார்மோன் சண்டை போடு இல்லேன்னா ஓடு'ன்னு சிக்னல் குடுக்கும். கொஞ்சம் குழம்பி தான் போவோம் இல்லையா…??

    உடலில் எந்த குறையும் இல்லாமல் எல்லாம் சரியாக இருந்தும் இந்த மாதிரி 'திருப்தி படுத்தனுமே' என்கிற பதட்டத்தில் சொதப்புவர்கள் தான் அதிகம். இதுக்கு வயது வித்தியாசமே இல்லை. சொல்லப்போனால் சின்ன வயசில் தான் சொதப்பல்கள் அதிகமா இருக்கும். கொஞ்சம் அனுபவம் கிடைச்ச உடனே இந்த பதட்டம் குறைஞ்சிடும்.

    ஆனால் சொதப்பிய உடனே பெரும்பாலானோருக்கு முதலில் தங்கள் உடல் மீது தான் சந்தேகம் வரும். ஏன்னா சமூகம் நம்மளை அப்படி டியூன் பண்ணிருக்கு. நரம்பு தளர்ச்சி, ஆண்மை குறைவுன்னு ஏதேதோ பேர் வச்சு நம்மை குழப்பி வச்சிருக்கு. எதுவும் பிரச்சனை இல்லை. சின்ன பதட்டம் அவ்ளோ தான். ரிலாக்ஸா அணுகினால் இது ஒரு பிரச்சனையே இல்லைன்னு புரிஞ்சிக்கலாம்.

    நம்மில் பலர், எதிர் பாலரிடம் பழகாமல் கற்பனையில் அவர்களை பற்றிய ஒரு பிம்பம் வைத்திருப்போம். அது பெரும்பாலும் தவறாக தான் இருக்கும். அங்க தான் நாம முதல்ல தடுமாறுறோம். பயமும், குழப்பமுமாகவா வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும்…? தெளிவும் மகிழ்ச்சியும் வேண்டாமா??

    ஜெய்த்தே ஆக வேண்டும் என்ற ராணுவ தயார் நிலையில் அணுகாமல் முதலில் இன்டிமசியை ஏற்படுத்திக்கனும். அதுக்கு இதை தான் செய்வதுன்னு இல்லை.. காதல் விளையாட்டில் என்ன வேணா செய்யலாம். பார்ட்னருக்கு குடுக்கும் மசாஜ், பரஸ்பரம் செய்து கொள்ளும் தீண்டல்கள், இது மாதிரி உடலினை பற்றிய கூச்சம் தயக்கம் எல்லாம் விட்டுட்டு மற்றவர் உடலை ஆராய தொடங்குங்கள்ன்னு மன நல மருத்துவர்கள் சொல்றாங்க.

    தாம்பதியம் பற்றி நீங்கள் அறிந்தது புரிந்தது எல்லாம் தவறு. புதிதாக கற்றுக் கொள்ள தொடங்குங்கள்ன்னு சொல்றாங்க. முக்கியமா பார்ட்னரோட ரசனை, உடல் மொழி, உடல் அங்கங்கள் எல்லாவற்றையும் ரசிக்கவும் ரசிச்சா மட்டும் போதாது, கண்டிப்பா வாய் விட்டு அவங்க கிட்ட சொல்லணும். இது அவரை மேலும் உற்சாகமா இயங்க வைக்கும். 'இணைக்கு பிடிச்சிருக்கு' என்பது தான் பதட்டத்தை போக்கும் வெற்றிக்கான தாரக மந்திரம்.

    பல பெண்களுக்கு இருக்கும் எண்ணம், தான் உடையை கழட்டினாலே போதும். ஆண் தயாராகிடுவான் என்பது. உண்மை இல்லை ! ஆணை புகழும் வார்த்தைகள் அவனை மேலும் உற்சாகத்துடன் ஈடுபடுத்தும். வார்த்தை இல்லையா..? பிரச்சனை இல்லை. உடல் மொழியில் காட்டுங்கள். இறுக்கி அணைப்பது, நகத்தால் கீறுவது, கடிப்பது, மாதிரி மறைமுகமாக உற்சாகப்படுத்தலாம். பதட்டமே இல்லாமல் செயல்படுவான். எந்த உணர்ச்சியும் காட்டாமல் தேமேன்னு இருப்பது ஆணை எமோஷனலாக கொலை செய்வதற்கு சமம். அப்படி தேமேன்னு இருக்கிற பெண்ணிடமும் விடாமல் முண்டி அடிப்பது அந்த பெண்ணை ரேப் செய்வதற்கு சமம். இதுக்கு இரண்டு பேரும் சும்மா இருக்கலாம்.

    ஆமா, சும்மா இருப்பது முக்கியம். சரியான 'வேவ் லெங்க்த்' கிடைக்கிற வரை காதலில் திளைத்து முன்னேறி கூடலுக்கு செல்லும் வரை சும்மா இருப்பது முக்கியம். மறுபடி மறுபடி முயற்சி செய்து தோற்பது இருவருக்கும் பதட்டத்தை அதிகரிக்கும். பதட்டம் மேலும் மேலும் தோல்வியை கொண்டு வரும். ஒரு 15 நாள் கலவி பற்றிய சிந்தனைக்கே செல்லாமல் அமைதியாக மற்ற வேலையை பார்த்து விட்டு ரிலாக்ஸா பேசி சிரித்து மகிழலாம். சேர்ந்து சினிமா, கோவில் பாடல்கள் ரசிக்கலாம். சீண்டிக்கலாம், இடிச்சுக்கலாம்… காதல் வலுப்பெற காத்திருந்து கலவிக்கு மனதை தயார் செய்யலாம்.

    -டாக்டர் எம். சரவணக்குமார்

    • நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும்.
    • நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    ''மூலதனம்'' என்பது முதல்..

    'முதல்'' என்பது பொருள்.

    அந்தப் பொருளைத் தான் உடல் என்றனர்.

    நமது உடலை அக்கறையுடன் பராமரிக்காவிடில் உறுப்புகள் பழுதாகி விடும். அல்லது உடல் தன் இயக்கத்தையே நிறுத்தி விடக் கூடும்.எனவே, நம்மால் முடிந்தவரை,நம் உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்..

    பசித்த பின் புசிப்பது, ஆரோக்கியத்திற்கு ஆகாதவற்றைப் புறந்தள்ளுவது, உடல் உழைப்பு, ஆழ்ந்த உறக்கம், பரபரப்பற்ற அமைதியான உள்ளம் ஆகியவை சீரான உடல் இயக்கத்திற்கு முக்கியம்.

    ஒருநாள் காலை நேரம் சிந்தனையாளர் டால்ஸ்டாய் நடந்து போய்க் கொண்டு இருந்தார்.

    எதிரே ஒரு இளைஞன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு கொண்டு இருந்தான். உடனே அவர் சென்று அவனைத் தடுத்து நிறுத்தினார்.

    "எதற்காக இப்படிச் செய்கிறாய்?'' என்று கேட்டார் டால்ஸ்டாய்.

    "ஐயா... நான் ஏதாவது தொழில் செய்து பிழைக்கத் தான் ஆசைப்படுகிறேன் ஆனால் அதற்கு மூலதனமாக என்னிடம் எதுவும் இல்லையே? வறுமை வாட்டுகிறது

    தற்கொலை செய்து கொள்வது தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை'' என்றான் அந்த இளைஞன்.

    உடனே டால்ஸ்டாய்,

    "நான் உனக்கு நூறு ரூபிள் தருகிறேன். அதற்குப் பதிலாக உனது ஒரு விரலை மட்டும் தருவாயா?'' என்றார் டால்ஸ்டாய்.

    "ஒரு விரலா! அது முடியாது.''

    "சரி, நூறு ரூபிள் தருகிறேன்... ஒரு கண்ணைத் தருவாயா?''

    "ஒரு கண்ணா! இதுவும் முடியாது.''

    "அப்படியென்றால் ஆயிரம் ரூபிள் தருகிறேன். இரண்டு கால்களில் ஒன்றை மட்டுமாவது கொடு.''

    இளைஞன் கோபத்தோடு சட்டென்று சொன்னான்,"எதுவும் என்னால் கொடுக்க முடியாது. உங்களுக்கு என்ன பைத்தியமா?'' என்று சொல்லிக் கொண்டே நகர்ந்தான்.

    அப்போது டால்ஸ்டாய் சிரித்துக் கொண்டே, "தம்பி... இங்கே வா. உன்னிடம் விலை மதிக்க முடியாத உடல் உறுப்புகள் இருக்கின்றன என்பதை இப்போது நீ புரிந்து கொண்டாயா?இதுதான் மூலதனம். இதை நன்றாகப் பராமரித்துப் பயன்படுத்து. நீ விரைவிலேயே செல்வந்தனாவாய்'' என்றார்.

    அப்பொழுது தான் அந்த இளைஞன் தனது உடம்பின் மதிப்பை உணர்ந்தான்.

    ஆம்.,நண்பர்களே..ஆரோக்கியம் என்பது விலை கொடுத்து வாங்க முடியாதது. அதனை இழந்த பின் தான் பலரும் அதன் அருமையை உணர்கிறார்கள்.

    -ஜெய் சரவணன்

    • ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.
    • உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான்.

    எந்த ஒரு நல்ல காரியம் செய்யும் முன்னர் குளிப்பது விசேஷம். குளிப்பது அழுக்கு போறதுக்கு மட்டும் அல்ல. நம்மை சதாசர்வ காலமும் ஆக்கிரமித்து இருக்கும் காற்றின் பிடியிலிருந்து விலகி இருக்கவும்தான். எப்படி மீன் தண்ணீரில் இருக்கிறதோ அது போல் நாம் காற்றுக்குள் இருக்கிறோம்.

    ஒன்பது கிரகங்கள் சதாசர்வ காலமும் வழி நடத்திக் கொண்டு இருக்கிறது. அவற்றின் கதிர்கள் காற்றோடு கலந்துதான் நமது உடலை வந்தடைகிறது. நாம் சுவாசிக்கும் போது அது நமக்குள் நுழைகிறது. ஒவ்வொரு கணமும் எல்லோருக்கும் இதுதான் நடக்கிறது. இதில் ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம்.

    மனித உடம்பு தூசு, தும்பு போன்ற அழுக்குகளால் மட்டும் பாதிக்கப்படுவது இல்லை. மற்ற மனிதர்களின் பார்வை என்னும் திருஷ்டி, எண்ணங்களின் தாக்குதல், உடம்பில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு தாக்குதல் உட்பட பல பாதிப்புகளுக்கு ஆளாகிறது.

    இந்த பாதிப்புகள் இரண்டு விதம்; ஒன்று நல்ல விதம், இன்னொன்று கெட்ட விதம். ஒருவர் நம்மைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்தால் அது நல்ல விதம், பொறாமைப்பட்டால் அது கெட்ட விதம்.

    இவற்றை நாம் கண்டறிய இயலாது, அது சாத்தியமும் இல்லை. ஆனால் இத்தகைய பாதிப்புகள் இல்லாமல் நானும் இல்லை, நீங்களும் இல்லை. இந்த பாதிப்பு கூடிக்கொண்டே போகும்போது ஒரு கட்டத்தில் உடம்பு வலி, மன அசதி, மன அழுத்தம் என்றெல்லாம் பாடாய் படுத்தும். நாம் இதை நமது உடலின் தன்மை என்று நினைத்துக் கொள்கிறோம்.

    இந்த உலகிலேயே தோஷம் தாக்க முடியாத ஒன்று தண்ணீர் தான். குளிக்கும் போது, நமது உடல் முழுவதும் நீரில் மூழ்கி இருக்கும் போது உலகத் தொடர்பை இழக்கிறோம்.

    நீர் உச்சந்தலையில் படும் போது, உடம்பில் இருக்கும் சர்வநாடிகளும் ஒரு சிலிர்ப்பு சிலிர்ப்பி நமது உடலில் உதறல் ஏற்படுகிறது. இதனால் நம்மை ஆக்கிரமித்து இருக்கும் கதிர்கள் அனைத்தும் உதிர்ந்து நீரில் அடித்துச் செல்லப்படுகிறது. குளித்து முடித்தவுடன் காற்று உலகத்துடன் புதிதாகத் தொடங்குகிறது. உற்சாகம் உடம்புக்கு மட்டுமல்ல, மனத்துக்கும் உண்டாகும்.

    இறந்த வீட்டிற்கு சென்று வந்தவுடன் குளிக்க காரணம் இதுதான். சவத்தீட்டு என்று சொல்வதும் அந்த சவம் கிடக்கும் இடத்தில் இருக்கும் கதிர்களைத்தான். எல்லார் மனமும் துக்கத்தில் இருக்கும் இடத்தில் சூழ்நிலை நல்ல கதிர்களுடன் நல்லவிதமாக இருக்காது. இவை நாம் குளிக்கும்போது நீரோடு அடித்துச் செல்லப்படுகிறது.

    கோயிலுக்கு போய் வந்தவுடன் குளிக்க கூடாது என்று சொல்லும் காரணமும் முக்கியம். கோயில் நல்ல சக்தி, நல்ல சூழ்நிலை, நல்ல கதிர்வீச்சு நடமாடும் ஒரு இடம். அத்தகைய கதிர்வீச்சை, குளித்து நீருடன் கலந்து வீனாக்கக் கூடாது என்பதால்தான்.

    -இந்திரா செளந்திரராஜனின் "சிதம்பர ரகசியம்" நூலில் இருந்து...

    • தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.
    • பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது.

    அதிகாலை...

    சென்னை யானைக்கவுனி பகுதியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார் எம்ஜிஆர்.

    அது எம்.ஜி.ஆரின் ஆரம்ப காலம். இளமைக்காலத்தில் பெரும்பாலும் வறுமையில்தான் வாழ்ந்தார் எம்ஜிஆர்.

    அப்போது அவர் குடியிருந்த இடம்தான் யானைகவுனி.

    எம்ஜிஆர் வழக்கமாக வாக்கிங் போகும் வழியில், சாலையோரம் அமர்ந்து, புட்டு அவித்து விற்றுக் கொண்டிருப்பாராம் ஒரு பாட்டியம்மா. அந்த பாட்டியிடம் தனக்கும், தன்னுடன் இருந்த நண்பர்களுக்கும் புட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் எம்ஜிஆர்.

    அப்படி ஒரு நாள் காலையில் வாக்கிங் போய்விட்டு, அந்த பாட்டியிடம் புட்டு வாங்கச் சென்ற எம்.ஜி.ஆர்., தன் கையில் இருந்த காசை எண்ணிப் பார்த்து விட்டு கொஞ்சம் தயங்கி நின்றார்.

    "பாட்டி, இன்றைக்கு புட்டு வேண்டாம். நாளைக்கு வாங்கிக்கறேன்."

    பாட்டி நிமிர்ந்து எம்ஜிஆர் முகத்தை பார்த்தார்.

    "ஏம்பா..?"

    தயக்கத்துடன் சொன்னார் எம்ஜிஆர்: "பாட்டி.. நான் எனக்கு மட்டும் வாங்க வரவில்லை. என்னோடு இருக்கும் மூணு பேருக்கும் சேர்த்து வாங்க வேண்டும் என்றுதான் வந்தேன். ஆனால்..?"

    "என்ன ஆனால்?" என்று பாட்டி கேட்க..

    "அவ்வளவு பேருக்கும் சேர்த்து வாங்கக் கூடிய அளவுக்கு இன்னைக்கு என் கையில் காசு இல்லை பாட்டி" என்றார் எம்.ஜி.ஆர்.

    "பரவாயில்லே! நாளைக்கு வரும் போது காசு குடுப்பா " என்று சொல்லி எல்லோருக்கும் சேர்த்து புட்டை பார்சல் செய்து எம்.ஜி.ஆர். கையில் கொடுத்தாராம்.

    எம்.ஜி.ஆர். இதை கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.பாட்டி கொடுத்த பார்சலை வாங்காமல் எம்.ஜி.ஆர். ஏதோ சிந்தித்துக் கொண்டிருக்க,

    பாட்டி:"என்னப்பா யோசிக்கிறே ?"

    "ஒண்ணும் இல்ல, ஒருவேளை நாளைக்கு நான் காசு கொண்டு வராம உன்னை ஏமாத்திட்டா என்ன பண்ணுவே பாட்டி ?"

    பாட்டி பதட்டமில்லாமல் சிரித்துக் கொண்டே சொன்னாராம் : "காசு வந்தா வியாபாரத்துல சேரப் போவுது. வரலேன்னா உங்க எல்லோருக்கும் பசியைத் தீர்த்த புண்ணியம் வருது. அது தருமக் கணக்குல சேர்ந்துடும்."

    பாட்டி சாதாரணமாகச் சொன்ன இந்த பதில் எம்ஜிஆரின் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது. எம்ஜிஆர் பிற்காலத்தில் செய்த எத்தனையோ தானதர்மங்களுக்கு, அந்தப் பாட்டிதான் காரணமாக இருந்திருப்பார் என்று எனக்குத் தோன்றுகிறது.

    சொன்னபடியே மறுநாள் தேடிச் சென்று அந்தப் பாட்டிக்கு கொடுக்க வேண்டிய காசைக் கொடுத்துவிட்டாராம் எம்.ஜி.ஆர்.

    பிற்காலத்தில் எம்.ஜி.ஆர். அந்தப் பாட்டி பற்றி விசாரித்து, தேடிச் சென்று உதவி செய்ததாக சில தகவல்கள் கூறுகின்றன.

    -ஜான்துரை ஆசீர் செல்லையா

    • எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.
    • 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.

    இசை சொல்லி கொடுத்த குருவிடமே சவால் விட்டவர் இசைஞானி!..

    ராஜான்னா சும்மாவா!..

    70களின் இறுதியில் தமிழ் சினிமாவில் நுழைந்து 20 வருடங்கள் தனது இசையால் திரையுலகையும், ரசிகர்களையும் கட்டி ஆண்டவர் இசைஞானி இளையராஜா. அறிமுகமான 'அன்னக்கிளி' படத்திலேயே அற்புதமான பாடல்களை கொடுத்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார்.

    80களில் ராஜாவின் இசையை நம்பியே 90 சதவீத திரைப்படங்கள் உருவானது.

    ராஜா இசையமைக்க சம்மதித்துவிட்டால் அந்த படம் ஹிட் என்றே கணித்த காலம் அது.

    படத்தின் கதாநாயகன், கதாநாயகி யார் என முடிவாவதற்கு முன்பே தயாரிப்பாளர்கள் இளையராஜாவை ஒப்பந்தம் செய்துவிடுவார்கள்.

    அந்த அளவுக்கு ஒரு படத்தின் வெற்றிக்கு அவர் தேவைப்பட்டார்.

    இளையராஜா ஏதோ இசைக்கச்சேரிகள் நடத்தி வந்து அப்படியே சினிமாவுக்கு வந்துவிட்டார் என பலரும் நினைக்கிறார்கள்.

    அதுதான் இல்லை.

    அவர் எல்லா இசை கருவிகளையும் முறையாக பலரிடமும் கற்றவர்.

    இளையராஜாவுக்கு கிடார், பியானோ மற்றும் வெஸ்டர்ன் இசையை சொல்லிக்கொடுத்தவர் தன்ராஜ் மாஸ்டர்.

    ஆனால், காலையில் ஸ்டுடியோவில் ரெக்கார்டிங் தியேட்டரில் வேலை, மாலை இசைக்கச்சேரிகள் என ராஜா பல வேலைகளையும் செய்து வந்ததால் அவரால் தன்ராஜ் மாஸ்டர் வகுப்புக்கு சரியாக செல்ல முடியவில்லை.

    இசையில் 8வது டிகிரியை ராஜா வாங்க வேண்டும் என தன்ராஜ் ஆசைப்பட்டார்.

    ஒரு நாள் ராஜாவிடம் 'நீ கண்டிப்பாக 8வது டிகிரியை தேர்ச்சி பெறவேண்டும். அது உன் எதிர்காலத்துக்கு நல்லது. உடனே அந்த தேர்வுக்கு பணத்தை கட்டு' என சொல்ல ராஜாவும் பணத்தை கட்டிவிட்டார்.

    ஆனாலும், வகுப்புக்கு சரியாக செல்லவில்லை.

    ஒருநாள் ராஜா வகுப்புக்கு சென்றபோது 'இனிமேல் என் வகுப்புக்கு நீ வராதே' என மிகவும் கோபத்துடன் சொல்லிவிட்டார்.

    அவரிடம் ராஜா 'எனக்கு சொல்லி கொடுக்க மாட்டேன்னு சொல்றீங்க. நானே பயிற்சி எடுத்து 8வது டிகிரியை பாஸ் பண்ணி அந்த வெற்றியை உங்கள் காலடியில் சமர்பிப்பேன்' என சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

    சொன்னதுபோலவும் செய்தும் காட்டினார். அந்த தேர்வில் 84 மார்க் எடுத்தால் ஹானர்ஸ் என சொல்வார்கள்.

    இளையராஜா 85 மார்க் எடுத்திருந்தார்.

    இதற்கு காரணம் ராஜாவிடம் இருந்த நம்பிக்கை மட்டுமல்ல. அவரின் உழைப்பு, விடாமுயற்சி, இசையில் அவர் காட்டிய ஆர்வம் என எல்லாவற்றையும் சொல்லலாம்.

    இப்படி தனது குருவிடமே சவால் விட்டு ஜெயித்து காட்டி பெருமை சேர்த்தவர்தான் இசைஞானி இளையராஜா.

    -ஸ்ரீரமணர் ராஜஷே்

    • உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும்.
    • பழச்சாறு, சூப், பாயாசம்,ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.

    வெய்யில் அதிகமாகிறது....கவனமாக இருங்கள்.....உங்களின் உடல் எடைக்கு ஏற்ப தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், சிறுநீரக நோய்கள் இருப்பவர்கள், உங்கள் மருத்துவர்களின் அறிவுரையின்படி அளவான தண்ணீர் அருந்த வேண்டும்.

    ஒருவேளை, தண்ணீர் குடித்தும் தாகம் அடங்க வில்லை என்றால், உங்கள் உடலுக்குத் தேவையான நுண் சத்துகள் கிடைக்காமல் இருக்கலாம். இதற்கு, தர்பூசணி, இளநீர், மோர், கூழ், பழச்சாறு, வெள்ளரி, நுங்கு, பதநீர் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.

    இது எதையும் செய்யவில்லை என்றால், மலச்சிக்கல் மற்றும் அதனால் ஏற்படும் வயிற்று பிரச்சனைகள், உடலில் துர்நாற்றம், உடல் சோர்வு, மயக்கநிலை, வாயில் துர்நாற்றம், தலையில் பொடுகு ஏற்படுதல், தலைவலி, கால்வலி என்று எதுவேண்டுமானாலும் ஏற்படலாம்.

    ஒருவேளை....குளிர்ச்சியான பொருட்கள் ஒத்துக் கொள்ளவில்லை என்றால், நீர் அதிகம் சேர்க்கும்படி செய்யும் கஞ்சி, வெது வெதுப்பான பழச்சாறு, சூப், பாயாசம்,ரசம் போன்ற உணவுகளைத் தொடர்ச்சியாகக் கொடுத்து வரலாம்.

    இதனால் சிறு சிறு சருமப் பிரச்சனைகள் உள்ளிட்ட பலவற்றை ஓரளவிற்குத் தவிர்க்கலாம். ஆனாலும், தண்ணீர் குடிப்பதற்கு அறிவுறுத்தி கொண்டே இருக்க வேண்டும்.

    அவ்வகையில், அதிக வியர்வை வெளியேற்றம், அதிக வெய்யிலில் வேலை செய்பவர்கள், தண்ணீர் குடிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல் நீண்ட நேரம் வேலை செய்து கொண்டே இருப்பவர்கள் (இருக்கிறார்கள்..காலையில் எடுத்துச்செல்லும் தண்ணீர் பாட்டில் மாலை அப்படியே திரும்பி வரும்).....

    இவர்கள்....அவர்களது இல்லத்தரசியிடம் அல்லது அம்மாவிடம் இதுபோன்ற மோரை செய்து கொடுக்கச் சொல்லி, ஒரு பாட்டிலில் ஊற்றி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விடுங்கள்....

    ஒரு கைப்பிடி புதினா, சிறிது இஞ்சி, ஒரு பச்சை மிளகாய்....இவற்றுடன் சிறிது தயிர் அல்லது மோர் சேர்த்து நன்றாக அரைத்து, வடிகட்டி, துப்பியை நீக்கி விடவும். இதனுடன் மேலும் தேவையான மோரைக் கலக்கி, உப்பு (தேவையெனில்) சேர்க்கவும். ஒருநாள் கொத்துமல்லி தழை மாற்றிக் கொள்ளலாம். குடித்துக் கொண்டே இருக்கத் தோன்றும் சுவையில் நிச்சயம் இருக்கும்...

    தேவையான நீரும், தாதுக்களும் ஒரு சேரக் கிடைப்பதுடன், வயிற்றுப் பிரச்சனைகளும் சரியாகி, பசியும் நன்றாக எடுக்கும்.

    -முனைவர் வண்டார்குழலி

    ×