என் மலர்
வழிபாடு

நாளை குலதெய்வ வழிபாட்டுக்கு உகந்த நாள்...
- எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான்.
- குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது.
குலதெய்வம் என்பது நம் தாய் தந்தையைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு கஷ்டம் என்றால் குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்துதான் வரும் என கிராமங்களில் சொல்வார்கள்.
குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோவிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை தொடங்குபவர்கள் உடனே குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோவிலுக்கு செல்லும்போது செலுத்தி விடுவது வழக்கம்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களினால் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வருவது. ஆகவே, எப்படியாவது நமது குலதெய்வத்தை அறிந்து வழிபடுதல் அவசியம்.
குலதெய்வ வழிபாடு மிக முக்கியமான ஒரு வழிபாடாகும், பலர் தங்களுக்கு விருப்பமான தெய்வம் (இஷ்ட தெய்வம்) ஒன்றை தொடர்ந்து வழிபட்டு வருவார்கள். உதாரணமாக, திருப்பதி வெங்கடாசலபதி கோவில் போன்ற பிரபல கோவில்களுக்கு மட்டுமே செல்வது பலர் வழக்கம். இவர்களில் சிலர் வேறு கோவில்களுக்கு கூட செல்வது கிடையாது.
எது எப்படி இருந்தாலும் குலதெய்வத்தை வழிபடாமல் எத்தனை கோவில்களுக்கு சென்றாலும் பலன் குறைவு தான். மூலவரை வழிபடாமல் அங்கிருக்கும் சுவர் சித்திரங்களை வழிபட்டு வருவது போல் தான் பிற வழிபாடுகளை மட்டும் செய்வது. குலதெய்வம் என்பது வாழையடி வாழையாக, தலைமுறை தலைமுறைகளாக நம் முன்னோர்கள் வழிபட்டு வருவது. அய்யனார், சுடலை மாடன் என்று பல ( கிராம) தெய்வங்கள் உண்டு. பல ஊர்களில் அங்கு வலுவான ஒரு காரணத்தால் மரணமடைந்தவரின் பெயரில் கோவில் ஒன்றை எழுப்பி அதை அவ்வூரின் ஒரு சாரார் குலதெய்வமாக ஏற்று வழிபடுகின்றனர். பெரும்பாலான குல தெய்வங்களுக்கு பின்னணியில் இம்மாதிரி ஒரு நிகழ்வு இருக்கும்.
பெருங்கோவில்களுக்கும் இவற்றுக்கும் உள்ள முக்கிய வித்தியாசம் என்னவென்றால்... இம் மாதிரி குலதெய்வ கோவில்கள் குறிப்பிட்ட சில சமூகம் அல்லது குடும்பங்களின் பராமரிப்பில் அவர்களுக்காகவே நிர்மாணிக்கப்பட்டு இயங்கும். பங்குனி உத்திரம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே குலதெய்வ கோவில்களில் வழிபாடுகளும் விழாக்களும் மிக சிறப்பாக நடைபெறும். பொங்கல், கிடா வெட்டு, பலி என்று விழா அமர்க்களப்படும். மற்ற நாட்களில் கேட்பாரின்றி இருக்கும்.
ஆனாலும் அந்த சாமியை குலதெய்வமாகக் கொண்டவர்கள் எந்த முக்கிய நிகழ்வாக இருந்தாலும் அன்று குலதெய்வ கோவில் பூசாரியைத் தேடிப்பிடித்து கோவிலைத்திறந்து வழிபட்டு அதன் பின்னரே அந்த வேலையைத் தொடங்குவார்கள். அதுவே முறையானதாகும். அந்த வகையில் நாளை குலதெய்வ வழிபாடு முக்கியமானதாக கருதப்படுகிறது.
உங்கள் குலதெய்வத்தை இதுவரை வழிபடாமல் இருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள், குலதெய்வம் எது என்று தெரியாமல் இருந்தால், ஊரில் வயதான பெரியவர்களிடம் கேளுங்கள், சொல்லி விடுவார்கள். அப்படியும் தெரியாவிட்டால் பலரிடம் விசாரித்தால் எப்படியாவது தெரிந்து விடும்.
குல தெய்வத்திற்காக நடத்தப்படும் பிரத்யேக வழிபாட்டு முறை, மற்றும் முக்கிய வழிபாட்டு பொருளையும் தெரிந்து கொள்ளுங்கள். அங்கு செல்லும் போது மறக்காமல் அந்த பொருளை வாங்கிச் செல்லுங்கள். உதாரணமாக ஒரு சில கோவில்களில் தீபத்திற்கு நல்லெண்ணெய், ஏன் சாராயம் கூட இருக்கலாம். தவறாது வாங்கிச் சென்று படையுங்கள்.
குலத்தைக் காப்பதால் தான் குலக்கடவுள், மற்ற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு குல தெய்வத்திற்கு மட்டும் தான் உண்டு. குலம் தழைக்க வேண்டும். முன்னோர் சாந்தி அடைய வேண்டும். பின்னோர் செழிக்க வேண்டும் என்று நாம் விரும்பினால் தவறாமல் நாளை குலதெய்வத்தை வழிபட வேண்டும். குலதெய்வத்தின் அருள் நம் மீது பட்டால் துன்பங்கள் பறந்து ஓடி விடும். பல பிரச்சனைகளில் சிக்கி உழல்பவர்கள் பரிகாரம் போன்ற முயற்சிகளில் இறங்கும் முன் குல தெய்வத்தை நேரில் சென்று வழிபட்டு அதன் பின்னர் தொடங்கவும். அப்படி செய்தால் தான் பரிகார பூஜைகளில் வெற்றி உண்டாகும்.
குல தெய்வத்தை நினைக்காமல், பூஜிக்காமல் நாம் தொடங்கும் எந்த ஒரு செயலும் முழுமை பெறாது. குல தெய்வ வழிபாட்டை மறந்து விட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் கிடைக்காமல் இருப்பது, கடன், நோய், குடும்பத்துக்குள் பிரச்சனை என்று குழப்பமும், மன அமைதியின்மையும் ஏற்பட்டு விடும்.
இத்தகைய பிரச்சனைகளில் இருந்து நாம் விடுபட வேண்டுமானால், தொடர்ந்து குல தெய்வ வழிபாட்டை செய்ய வேண்டும். குல தெய்வத்துக்கு உரிய படையல் போட்டு திருப்தி ஏற்படுத்த வேண்டும்.
குல தெய்வம் மகிழ்ச்சி அடைந்தால், உங்கள் குலமே செழிக்கும். தினம், தினம் குல தெய்வத்தை வணங்குபவர்களுக்கு எந்த குறையும் வராது. குதூகலம்தான் வரும்.
பூர்வீக ஊரில் இருப்பவர்களுக்கு குல தெய்வத்தை வழிபட எந்த சிக்கலும் இருக்காது. ஆனால் ஊரை விட்டு வெளியேறி நகரங்களில் குடியேறி விட்டவர்களுக்கு, குல தெய்வ வழிபாடு செய்வது என்பது அரிதான ஒன்றாகும். என்றாலும் நாளை உங்கள் வீட்டில் குலதெய்வ வழிபாடு செய்யுங்கள்.
நீங்கள் எத்தனை கடவுள்களை வணங்கினாலும் சரி.... குல தெய்வத்தை வழிபடா விட்டால் குண்டுமணி அளவுக்கு கூட பிரயோஜனம் இல்லை. ஆகையால் குல தெய்வத்தை அவசியம் வழிபடுங்கள். யார் ஒருவர் குல தெய்வத்தை விடாமல், ஐதீகத்துடன் வழிபாடு செய்து வருகிறாரோ, அவரை எந்த கிரகமும் நெருங்கி தொல்லை கொடுக்காது. அதுதான் குல தெய்வ வழிபாட்டின் மகிமை.
அதனால் தான் "குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறவாதே..."
"குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி..." என்று சொல்வார்கள்.
எனவே உங்கள் குலதெய்வத்தை வழிபடாதிருந்தால், உடன் வழிபடத் தொடங்குங்கள்.
இறந்து போனவர்களின் ஆத்மாவுக்கு ஆற்றல் அதிகம் என்று கருதப்பட்டதால்தான் குல தெய்வ வழிபாடு முறை தோன்றியது.
தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்தி கொடுக்கிறது.
குல தெய்வத்தை யார் ஒருவர் விடாமல் தொடர்ந்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்கள் வேண்டும் வரம் எல்லாம் கிடைக்கும்.
கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் குல தெய்வமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நோய்கள் நீங்கவும், பிள்ளைவரம் கிடைக்கவும், மழை பெய்யவும் மக்கள் குல தெய்வத்தையே பெரிதும் நம்புவதுண்டு. ஊருக்கு நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் கடந்த 100 ஆண்டுகளில் கிராமங்களில் நடக்கும் குல தெய்வ வழிபாடுகள் மிக, மிக விமரிசையாக நடத்தப்படுகின்றன. குல தெய்வம் இருக்கும் இடத்தில் நிச்சயம் வேப்பமரம் அல்லது வில்வமரம் இருக்கும். குல தெய்வங்களுக்கு இதிகாச அடிப்படை எதுவும் கிடையாது.
குல தெய்வ வழிபாடுகளில் பூஜைகள் முறைப்படி இல்லாமல் பெரியவர்களின் இஷ்டப்படியே நடக்கும். குல தெய்வங்களின் சிறப்புகள் கல்வெட்டுக்களாக இருப்பது இல்லை. பெரும்பாலும் செவி வழிக்கதைகளாகவே இருக்கும். தமிழ்நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளன. குலதெய்வ கோவில்கள் பெரும்பாலும் 'வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும்.
குடும்பத்தில் தொடர்ந்து அசுப நிகழ்ச்சிகள் நடந்தாலோ அல்லது தீமைகள் ஏற்பட்டாலோ குலதெய்வம் கடும் கோபத்தில் இருப்பதாக கருதும் நம்பிக்கை இன்றும் உள்ளது. தங்கள் குறைகளை தீர்க்குமாறு குல தெய்வங்களை வேண்டிக் கொள்பவர்கள், அக்குறை தீர்ந்ததும் பொங்கலிடுதல், பலியிடுதல் போன்ற நேர்த்திக் கடன்களை தவறாமல் செய்வதுண்டு.
குல தெய்வத்துக்கு குறை வைத்தால் வம்ச விருத்தி ஏற்படாது என்பார்கள். ஒரே குல தெய்வத்தை வழிபடும் இரு குடும்பத்தினர் தங்கள் உறவை புதுப்பித்துக் கொள்ள விரும்பினால், தங்கள் குல தெய்வத்திடம் சென்று வழிபாடு செய்து, ஒருவர் கையால், மற்றவர் திருநீறு வாங்கி பூசிக் கொள்ள வேண்டும் என்பது பல ஊர்களில் நடைமுறையில் உள்ளது.
நவீன மாற்றங்கள் மற்றும் நாகரீக வளர்ச்சிக்கு ஏற்ப தற்போது குல தெய்வ வழிபாடுகளின் பூஜைகள், நேர்த்திக் கடன்கள், திருவிழாக்களிலும் பெரும் மாற்றங்கள் வந்து விட்டன. ஆனாலும் குல தெய்வம் மீதான பயமும், பக்தியுணர்வும் கொஞ்சமும் குறையவில்லை. ஆகையால் இதையெல்லாம் கருத்தில் கொண்டு நாளை உங்கள் குல தெய்வத்தை வழிபடுங்கள்...






