என் மலர்
திருப்பூர்
- ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
- வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே உள்ள ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ராக்கியாப்பட்டி பகுதியில் 2.8 ஏக்கர் பரப்பளவில் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. இதனை ஆக்கிரமித்து குமரன் குன்று என்ற பெயரில் முருகர், விநாயகர், சிவலிங்கம், நந்தி உள்ளிட்ட சன்னதிகள் கொண்ட செல்வமுத்து குமாரசாமி கோவில் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள இந்த கோவிலை அவிநாசி தாசில்தார் சந்திரசேகர் , டி.எஸ்.பி., சிவகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் எந்திரம் மூலம் இன்று காலை இடித்து அகற்றும் பணி நடைபெற்றது.
இதையறிந்த இந்து முன்னணியினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள் பலர் இடிக்க வேண்டாமென கண்ணீர் வடித்தனர். இதனால் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு இருக்க அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர்.
பின்னர் போலீசார், பொதுமக்களை வளாகத்தை விட்டு அப்புறப்படுத்தினர். அப்போது போலீசார் -பொதுமக்களிடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த ஆக்கிரமிப்பு குறித்து அப்பகுதியை சேர்ந்த யுவராஜ் என்பவர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட இடம் வருவாய் துறைக்கு சொந்தமானது என கடந்த 2010-ம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள கோவிலை அகற்ற வருவாய் துறையினர் நடவடிக்கை மேற்கொண்ட போது, இரு தரப்பினர் இடையே பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த கோவிலை வருவாய்த்துறையினர்- போலீசார் பாதுகாப்புடன் அகற்றி உள்ளனர்.
- இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் அந்தப்பகுதியில் சேகரமான குப்பைகளை அகற்றினர்.
- சக தூய்மை பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் அருகே மாநகராட்சி பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கும் மேற்பட்ட பூக்கடைகளில் வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். தினம்தோறும் தூய்மை பணியாளர்கள் பூ மார்க்கெட்டில் சேகரமாகும் குப்பைகளை அகற்றி வருகின்றனர்.
இன்று காலை வழக்கம் போல் தூய்மை பணியாளர்கள் அந்தப்பகுதியில் சேகரமான குப்பைகளை அகற்றினர். அப்போது பூ வியாபாரி நல்லுசாமி என்பவர் தனது கடையில் சேகரமாகிய குப்பைகளை கடைக்கு எதிரே நடை பாதையில் கொட்டி விட்டு சென்றுள்ளார்.
அப்போது தூய்மைபணியாளர்கள் இங்கு கொட்டக்கூடாது, அதற்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளாக பிரித்து கொட்ட வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நல்லுசாமி, தூய்மை பணியாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு கடையில் இருந்த பூக்கள் வைக்கக்கூடிய டிப்பரை வைத்து லட்சுமி என்ற தூய்மை பணியாளரை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து சக தூய்மை பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் திரண்டு கடையை முற்றுகையிட்டு பெருமாள் கோவில் வீதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு திருப்பூர் தெற்கு போலீசார் சென்று விசாரணை நடத்தினர்.
- கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது
- சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
திருப்பூர்:
திருப்பூர் பெருமாள் கோவில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இந்த மார்க்கெட்டுக்கு விவசாயிகள் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்களை கொண்டு வருகிறார்கள். இதுபோல் விவசாயிகளிடம் இருந்தும் வியாபாரிகள் வாங்கி வந்தும் விற்பனை செய்கிறார்கள்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களாகவே பூக்களின் விலை சரிவை சந்தித்து வருகிறது. இதனால் விற்பனையாகாத பூக்களை ஆங்காங்கே கொட்டி வரும் அவலம் நடந்து வருகிறது.
இது குறித்து பூ வியாபாரிகள் கூறியதாவது:-
திருப்பூர் பூ மார்க்கெட்டிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்தும் பூக்களை வாங்கி வந்து விற்பனை செய்கிறோம். தற்போது முகூர்த்த தினம் , கோவில் நிகழ்ச்சி இல்லாத காரணத்தினால் பூக்களின் தேவை குறைவாக உள்ளது. ஆனால் வரத்து அதிகமாக உள்ளது.
இதனால் சந்தைக்கு கொண்டு வரும் பூக்களை எப்படியாவது விற்பனை செய்ய வேண்டும் என விலை குறைத்து விற்பனை செய்து வருகிறோம்.
இருப்பினும் விற்பனையாகாத பூக்களை மீண்டும் கொண்டு சென்றால் அதற்கான வண்டி வாடகை உள்ளிட்ட செலவுகள் அதிகம் ஆகும். மீண்டும் இந்த பூக்களை விற்பனை செய்ய முடியாததால் சந்தையிலேயே குப்பையில் கொட்டி செல்கிறோம் என்றனர்.
- தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும்.
- திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தாராபுரம் ரோடு கோவில்வழி அருகே 40 அடி உயரத்தில் பி.எஸ்.என்.எல்., டவர் உள்ளது. இன்று காலை 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் டவர் மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டார். டவர் மீது ஏறிய நபர் தேசியக்கொடி மற்றும் அ.தி.மு.க., கொடியை டவர் மீது கட்டி சிஸ்டம் சரியில்லை, அரசியல் மாற்றம் வர வேண்டும் என வலியுறு த்தினார்.
இதனைப்பார்த்து அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்ததுடன், இது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் கிடைத்ததும் நல்லூர் போலீசார் மற்றும் திருப்பூர் தெற்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
அங்கு டவரின் உச்சியில் நின்று போராடி கொண்டிருந்தவரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அந்த நபர் மேலே இருந்தவாறு பட்டாசுகளையும் பற்ற வைத்து கீழே வீசினார். தொடர்ந்து அவரிடம் நிதானமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
தன்னுடைய கோரிக்கை அனைத்து ஊடகங்களிலும் ஒளிபரப்பாக வேண்டும். அ.தி.மு.க., தலைமைக்கு எனது கோரிக்கைகள் சென்று அவர்கள் நிறைவேற்ற முன்வர வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.
பின்னர் நிதானமாக பேசிய போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவரை தானாகவே கீழே இறங்கச்செய்தனர். கீழே இறங்கி வந்தவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர் மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த மூக்கையா (வயது 42) என்பதும் , திருப்பூர் கோவில் வழி பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது.
தொடர்ந்து அவரை விசாரணைக்காக நல்லூர் போலீசார் அழைத்துச் சென்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து வேடிக்கை பார்க்க நூற்றுக்கணக்கான மக்கள் சம்பவ இடத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மூக்கையா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இதே போல் தாராபுரம் சாலையில் உள்ள வேறொரு டவரில் மேலே ஏறி இது போன்ற பரபரப்பை ஏற்படுத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
- சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
உடுமலை:
திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி மலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் வழிபடவும், மலையின் மேல் உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் தினமும் ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
நேற்று புத்தாண்டையொட்டி ஏராளமான ஐயப்ப பக்தர்கள், சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழ்ந்து சாமி தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
இந்தநிலையில் நேற்றிரவு திருமூர்த்திமலை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த மழை காரணமாக இன்று காலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதையடுத்து அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் சபரிமலை சீசனையொட்டி பக்தர்கள், பொதுமக்கள் பலர் தங்களது குழந்தைகளுடன் இன்று திருமூர்த்தி மலைக்கு வந்தனர். அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்தனர். இதையடுத்து கோவிலில் தரிசனம் செய்து விட்டு சென்றனர்.
- திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் சேகரமான குப்பைகளை முதலிபாளையம் பகுதியில் உள்ள செயல்படாத கல்குவாரி பாறைக்குழியில் மாநகராட்சி கொட்டி வந்தது.
இதனால் அப்பகுதியில் நிலத்தடி நீர் , விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். எனவே சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்ட முதலிபாளையம் பகுதியை மாசுபட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்,
பாதிக்கப்பட்ட பகுதிகளில் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும், கழிவு மேலாண்மை தொடர்பான புதிய முன்னெடுப்புகளை செய்யக்கூடாது என வலியுறுத்தி முதலிபாளையம்- நல்லூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குழு சார்பில் விவசாயிகள் திருப்பூர் குமரன் சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது நோய்வாய்ப்பட்டு விளைச்சல் பாதித்த பாகற்காய், காய்கறி, மஞ்சள் கிழங்கு, தென்னை மற்றும் மாசடைந்த நீர் உள்ளிட்டவற்றை மாலையாக அணிந்து பங்கேற்றனர். கைக்குழந்தையுடன் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அவர்கள் கோஷங்கள் எழுப்பி தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
- புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.
- என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
* புரட்சி தலைவி அம்மாவோடு பயணத்தை மேற்கொண்டேன் மகிழ்ச்சியாக இருந்தது.
* நான் ஒருவரை அடையாளம் காட்டினேன். அந்த அடையாளம் காட்டியவர் தான் இறுதியில் என்னை அடையாளம் காட்டி விட்டு சென்று விட்டார். கவலைப்பட தேவையில்லை.
* நல்ல இடத்துக்கு நீங்கள் போங்கள் என்று அடையாளத்தை காட்டி இருக்கிறார். அதற்காக மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
* அவரோடு இருந்தால் இன்னும் பின்னுக்கு தள்ளி இருக்க முடியும். ஆனால் என்னை நீங்கள் முன்னால் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறீர்கள். அதற்கு கோடானு கோடி நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
- கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி.
- தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது:
* வழி தெரியாமல் நின்றபோது எனக்கு வழிகாட்டியவர் விஜய்.
* என் உடலில் ஓடும் ரத்தம் அவருக்காகத்தான் என்று கூறி கண்கலங்கினார்.
* தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும் என்று இயேசு நாதர் சொன்னார்.
* இறைவனிடம் கையேந்துங்கள் அவர் இல்லையென்று சொல்லுவதில்லை.
* கேட்டதை கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்று இந்து மதம் சொல்லும்.
* கேட்காமலேயே தோன்றி இருக்கக்கூடிய தலைவர் தான் நம்முடைய தளபதி. கேட்காமலேயே கொடுக்கக்கூடிய தளபதி நமக்கு கிடைத்து இருக்கிறார். தமிழக வெற்றிக்கழகத்திற்கு வெற்றி தளபதி கிடைத்து இருக்கிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவிநாசி மற்றும் பெருமாநல்லூர் பகுதிகளில் பேருந்து நிலையத்தில் பயணிகளிடம் கூட்ட நெரிசலை பயன்படுத்தி செல்போன்களை திருடுவது அதிகரித்து வந்தது.
இது தொடர்பாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அசோக் கிரிஷ் யாதவ் உத்தரவின் பேரில் அவிநாசி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சிவக்குமார் மேற்பார்வையில் அவிநாசி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் முத்துமாரியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் சிவக்குமார் மற்றும் தனிப்படை காவலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு செல்போன் திருடர்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர்.
நேற்று மாலை அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் கோவை சவுரிபாளையத்தைச் சேர்ந்த டிவைன், திருவண்ணாமலை மாவட்டம் எருமூண்டியை சேர்ந்த தனசேகர் ஆகியோரிடம் செல்போன்களை திருடி சென்றனர். இது குறித்த புகாரின் பேரில் அவினாசி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில் அவிநாசியை அடுத்து பழங்கரை அருகே கோவை - சேலம் 6 வழிச்சாலையோரம் உள்ள டிரக் பார்க்கிங்கை போலீசார் கண்காணித்தபோது, சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட 2 சொகுசு கார்களை சுற்றி வளைத்து அதிலிருந்தவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் மேற்கு கோதவரியை சேர்ந்த நக்கா ஹரிஷ் (வயது 44), குருமில்லி பகுதியை சேர்ந்த ராஜூ (31), பாஷா (25), கும்மிரிகுண்டா பிரகாஷ் (32) மற்றும் ஒடிசா மாநிலம் சோரடாவை சேர்ந்த சிறுவன் என தெரியவந்தது. கார்களை சோதனை செய்த போது, அவிநாசி புதிய பேருந்து நிலையத்தில் 2பேரிடம் திருடப்பட்ட தலா ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள 2 செல்போன்களும் மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பேருந்து பயணிகளிடம் திருடப்பட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த 79 செல்போன்களும், 2 கார்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்று செல்போன் திருட்டில் ஈடுப்பட்டுள்ளனர். இதையடுத்து 5பேரையும் கைது செய்தனர். கைதானவர்களில் சிறுவனை கோவை சிறார் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். மற்ற 4பேரும் அவிநாசி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர். தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் செல்போன்களை திருடிய ஆந்திர மாநில கும்பலை அதிரடியாக கைது செய்த தனிப்படையினரை எஸ்.பி., அசோக் கிரிஷ் யாதவ் பாராட்டினார்.
- போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
- போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சியில் தினசரி சேகரமாகும் குப்பைகளை இடுவாய் அடுத்த சின்னகாளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் குப்பை கிடங்கு அமைத்து கொட்டுவதை எதிர்த்து அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டத்தின்போது போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் பொதுமக்கள் 3 பேர் மற்றும் போலீசார் 4 பேர் காயமடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தது உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதனை கண்டித்து நேற்று பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் திருப்பூர் குமரன் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து போலீசார் அண்ணாமலை உள்பட 600க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்களை இரவு விடுதலை செய்தனர்.
இந்தநிலையில் அனுமதியின்றி தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்த பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது தடையை மீறி ஆர்ப்பா ட்டம் செய்தது, அனுமதியின்றி ஒன்று கூடுதல், போக்குவரத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
- மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம்
- போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது
திருப்பூர் சின்னகாளிபாளையத்தில் மாநகராட்சிக் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு மாதமாக பொதுமக்கள் போராட்டம் ஈடுபட்டு வருகின்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்தததைக் கண்டித்து இன்று மீண்டும் போராட்டம் நடைபெற்றது. இதில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்நிலையில், தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
- முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள்.
- சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தொகுதியில், வருகிற 29-ந்தேதி 'வெல்லும் தமிழ்ப்பெண்கள்' மேற்கு மண்டல மாநாடு நடக்க உள்ளது.
இந்நிலையில் மாநாட்டு திடலை பார்வையிட்ட பின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கழகத்தின் மகளிர் அணி மேற்கு மண்டல மாநாட்டை திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு அதற்கான வாய்ப்பை வழங்கி இருக்கிறார்.
மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 15 மகளிர் என ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 50 ஆயிரம் மகளிர் கலந்து கொள்ளும் ஒரு எழுச்சிமிகு மாநாடாக கழகத்தின் பொதுச்செயலாளர், பாராளுமன்ற குழுத்தலைவர் கனிமொழி தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் முதலமைச்சர் பங்கேற்று எழுச்சியுரை ஆற்ற இருக்கிறார்கள்.
இந்த மேற்கு மண்டலத்திற்குட்பட்ட 39 சட்டமன்ற தொகுதிகளில் இருந்து 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்பது வரலாற்று சிறப்புமிக்க மகளிரணி மாநாடாக அமைய உள்ளது.
வரக்கூடிய 2026 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கணக்கை மேற்கு மண்டலத்தில் இருந்து தொடங்குவதற்கான ஒரு முன்னேற்பாடாக, முன்னோட்டமாக இந்த மாநாட்டை நடத்துவதற்கான வாய்ப்பை முதலமைச்சர் வழங்கி இருக்கிறார்.
நிச்சயம் மேற்கு மண்டலம் தி.மு.க.வின் கோட்டை. முதலமைச்சரின் எஃகு கோட்டையாக வரக்கூடிய சட்டமன்ற தேர்தலில் வெற்றி வாய்ப்பு மிகப் பிரகாசமாக இருக்கிறது. அதற்கான வாய்ப்பை தருவதற்கு மக்கள் தயாராக உள்ளார்கள்.
முழுக்க முழுக்க மகளிர் பங்கேற்கும் மாநாடு. அரங்கம் முழுவதும் மகளிரை தவிர யாரும் இருக்க மாட்டார்கள். மாநாட்டில் மகளிர் மட்டும் இடம் பெறுவார்கள்.
அரசு நிகழ்ச்சிகளில் புதிய திட்டங்களுக்கான அறிவிப்புகளும், முடிந்த திட்டங்களுக்கான திறப்பு விழா, தொடக்க விழா இருக்கும்.
இது இயக்கத்தின் மாநாடு, மகளிரணி மாநாடு. ஏற்கனவே திருவண்ணாமலையில் துணை முதலமைச்சர் இளைஞரணி மாநாட்டை மிகச்சிறப்பாக நடத்தி, ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் உள்ள இளைஞர்கள் எங்கள் தி.மு.க.வின் பக்கம் என்பதை உறுதி செய்து இருக்கிறார்கள். அதனை தொடர்ந்து இப்போது மகளிரணி மாநாடு நடைபெற உள்ளது.
சட்டமன்ற தேர்தலுக்கு நாங்கள் தயாராகக்கூடிய வகையில் இந்த மாநாடு அமையும்.
எந்த பகுதி யாருடைய கோட்டை என்பதை 2026 சட்டமன்ற தேர்தல் முடிவில் தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.






