என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கஞ்சா"

    • 2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார்.
    • அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    சென்னை:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னை தாயகத்தில் சமத்துவ நடைபயணத்திற்கு வீரர்கள் நேர்காணல் இன்று நடைபெற்றது.

    பின்னர் வைகோ நிருபர்களிடம் கூறியதாவது:-

    திருச்சியில் ஜனவரி 2-ந்தேதி ம.தி.மு.க.வின் சமத்துவ நடைபயணம் தொடங்குகிறது. மதுரையில் இந்த பயணம் 12-ந்தேதி நிறைவடைகிறது.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. அதனால் போதைப் பொருளை ஒழிக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த விழிப்புணர்வு நடைபயணம் நடக்கிறது. திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

    இந்த பயணத்தில் சுமார் 1000 வீரர்கள் என்னோடு கலந்து கொள்கிறார்கள். இது எனது 11-வது நடை பயணமாகும். தமிழக அரசு போதைப் பொருளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சாதி மத மோதல் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் வகையில் இது அமைகிறது.

    தமிழகத்தின் நலனுக்காக எனது எஞ்சிய காலத்தையும் செலவிட முடிவு செய்து இந்த பயணத்தை மேற்கொள்கிறேன். திராவிட இயக்கத்துக்கு எதிராக இந்துத்துவா சக்திகள் எதிர்த்து வருகின்றன. அதனை முறியடிக்கும் வகையிலும் இந்த பயணம் அமையும்.

    2026 தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மீண்டும் மு.க.ஸ்டாலின் வருவார். அரசியல் கட்சிகள் நடத்தும் ஒவ்வொரு போராட்டங்களுக்கும் அவர்கள் தான் பொறுப்பேற்க வேண்டும். விஜய் கூட்டத்தில் உயிரிழந்த குடும்பத்திற்கு நேரில் சென்று துக்கம் விசாரிக்காமல் அவர்களை அழைத்து துக்கம் விசாரித்தது முறையல்ல.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது மாவட்ட செயலாளர் ஜீவன், தொண்டர் படை தலைவர் பாஸ்கர சேதுபதி, வக்கீல் நன்மாறன், கழக குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    • போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சென்னை கஞ்சா வழக்கில் சர்புதீன், சீனிவாசன், சரத் என்ற 3 பேரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    இதில் கைதான சர்புதீன் நடிகர் சிம்புவின் 'ஈஸ்வரன்' பட இணை தயாரிப்பாளராக இருந்துள்ளார். எல்டாமஸ் சாலையில் உள்ள சர்புதீன் வீட்டில் ஒவ்வொரு வாரமும் போதை விருந்து நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் கைதான சர்புதீனிடம் இருந்து ரூ.27 லட்சம் ரொக்க பணமும், ஒரு சொகுசு காரும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரூ.27 லட்சம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், ஒரு கட்சியின் தேர்தல் வியூக நிறுவனத்துடன் சர்புதீன் தொடர்பில் இருப்பதும், அந்நிறுவனத்தின் பணம் தான் என சர்புதீன் தெரிவித்த போலீசார் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    மேலும் சர்புதீன் நடத்திய போதை விருந்தில் சினிமா பிரபலங்களும் பங்கேற்றார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
    • கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த அச்ச மங்கலத்தில், 100-க்கும் மேற்பட்ட கிரானைட் கம்பெனிகள் உள்ளன. இங்கு, பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கிரானைட் கற்களை அறுத்து, பாலிஷ் செய்து விற்பனை நடந்து வருகிறது.

    கிரானைட் கம்பெனிகளில் பெரும்பாலும், வடமாநில தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். அவர்களை வேலைக்கு அழைத்து வரும் ஏஜென்டாக பீகார் மாநிலம், ஜாம்ஷெட்பூர், வாரிஸ் நகரை சேர்ந்த ராஜேசா (வயது31), என்பவர் இருந்துள்ளார்.

    கடந்த வாரம் பர்கூர் அருகே 4 கிலோ கஞ்சா கடத்த முயன்ற மகேஷ் குமார் (25), மதன்குமார் (23), ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் விசாரணை நடத்தியதில் ராஜேசா, கஞ்சா கடத்துவதில் மூளையாக செயல்பட்டதும், கிரானைட் கம்பெனிகளுக்கு ஆட்களை அழைத்து வரும்போது, கஞ்சாவை கிலோ கணக்கில் கடத்தி வருவதும் தெரிந்தது.

    அச்சமங்கலத்தில் ராஜேசா ஒரு கிரானைட் கம்பெனியில் தங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சென்று சோதனையிட்ட போது அவரது பையில் 5 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து, கஞ்சா கடத்தலில் வேறு யார் யாருக்கு தொடர்பு என விசாரித்து வருகின்றனர்.

    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.
    • கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் தினசரி நூற்றுக்கும் மேற்பட்ட ரெயில்கள் வந்து செல்கின்றன. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ரெயில்கள் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில்கள் ஈரோடு வழியாக வந்து செல்கின்றன.

    சமீப காலமாக வெளி மாநிலங்களில் இருந்து ஈரோடு வரும் ரெயில்களில் கஞ்சா கடத்தும் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து ஈரோடு ரெயில்வே போலீசார் உஷார்படுத்தப்பட்டு ஈரோடு வழியாக செல்லும் ரெயில்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ஈரோடு ரெயில் நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பது குறித்து, ஈரோடு டவுன் மதுவிலக்கு போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கொல்கத்தாவில் இருந்து நாகர்கோவில் செல்லும் அதிவிரைவு ரெயில் ஈரோடு ரெயில் நிலையம் வந்து நின்றது.

    அந்த ரெயிலின் ஒவ்வொரு பெட்டியாக சென்று போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியை சோதனை செய்த போது அங்குள்ள கழிப்பறை அருகே கேட்பாரற்று ஒரு சாக்கு பை இருந்தது. இதனால் சந்தேகமடைந்த போலீசார் அந்த சாக்கு பையை திறந்து பார்த்தபோது அதில் 6.50 கிலோ கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா எங்கிருந்து கொண்டு வரப்பட்டது? அதனை யார் கொண்டு வந்தது? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். சமீப காலமாக ஈரோட்டில் உள்ள கல்லூரி மாணவர்களை குறிவைத்து வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தும் கும்பல் அதிகரித்து வருகிறது.

    இதேபோன்று, ஈரோடு குயவன்திட்டுப் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக, ஈரோடு டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில், அப்பகுதியில் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் நின்றிருந்த ஒருவர், போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அந்த நபரை விரட்டிப் பிடித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், மரப்பாலத்தைச் சேர்ந்த முகேஷ் ( 23) என்பதும், கஞ்சா விற்றதும் தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த 3.450 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். ஈரோடு மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து கஞ்சா விற்கும் சம்பவம் அதிகரித்து வருவது போலீசாரையே அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர எல்லைக்குட்பட்ட போலீஸ் நிலையங்களில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பதிவு செய்யப்பட்ட 135 கஞ்சா வழக்குகளில் 337 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1கோடியாகும்.

    சென்னை ஐகோர்ட் வழிகாட்டுதலின்படி, கோவை இன்றியமையா பண்டக விதிக்கு உட்பட்ட தனிச்சிறப்பு கோர்ட்டு நீதிபதி உத்தரவுப்படி திருப்பூர் மாநகர கஞ்சா அழிப்பு குழுவினர் நேற்று 337 கிலோ கஞ்சாவை கோவை மதுக்கரை செட்டிப்பாளையத்தில் உள்ள நிறுவனத்தில் எந்திரத்தில் தீயிட்டு அழித்தனர்.

    திருப்பூர் கஞ்சா அழிப்பு குழுவின் தலைவரும், மாநகரபோலீஸ் கமிஷனருமான ராஜேந்திரன் மேற்பார்வையில் மாஜிஸ்திரேட்டுகள் செந்தில்ராஜா, லோகநாதன், கோவை தடயவியல் அறிவியல் ஆய்வக உதவி இயக்குனர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலையில் கஞ்சா அழிக்கப்பட்டது. 

    • வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சிப்காட் போலீஸ் சரகம் சிப்காட் தொழிற்பேட்டை அருகே உள்ள உப்பளப் பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதனைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவின் பேரில் நகர தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் சிப்காட் போலீசார் இணைந்து இது குறித்து அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.

    அப்போது உப்பளப்பகுதியில் கஞ்சா செடிகள் பயிரிட்டு வளர்க்கப்பட்டு இருப்பதை கண்டறிந்தனர்.

    தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அங்கு தங்கி இருந்து வேலை செய்து வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் கஞ்சா செடியை வளர்த்து வந்தது தெரிய வந்தது,

    இதனைத் தொடர்ந்து பீகார் மாநிலம் பரியப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த மனிஷ்சாக் (28), முனனா தேவன் (29 ), சதீஷ்குமார் (19), சமஸ்டிபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிஜிஅலி பஸ்வான் (29) ஆகிய 4 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்த 80 கிராம் கஞ்சா, கஞ்சாவை புகைக்கும் இரண்டு பைப், 40 பாக்கெட் ஸ்வாகத் போதை புகையிலை மற்றும் 4 செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
    • ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

    கேரள மாநிலத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கொச்சியில் உள்ள ஒரு அடுக்குமாடி குயிருப்பில் கலால் துறையினர் கடந்த வாரம் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ஒரு குடியிருப்பில் இருந்து உயர்ரக கலப்பின கஞ்சா வைத்திருந்த பிரபல மலையாள திரைப்பட இயக்குனர்கள் காலித் ரகுமான், அஷ்ரப் ஹம்சா ஆகியோர் பிடிபட்டனர். விசாரணைக்கு பிறகு அவர்கள் இருவரையும் கலால் துறையினர் கைது செய்தனர்.

    இயக்குனர்கள் இருவரும் சிக்கிய அடுக்குமாடி குடியிருப்பு மலையாள திரையுலகின் பிரபல ஒளிப்பதிவாளரும், இயக் குனருமான சமீர் தாஹிரின் பெயரில் வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்தது கலால் துறையினரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை விசாரணைக்கு ஆஜராக கல்லாதுறை நோட்டீஸ் அனுப்பியது.

    அதன்படி கொச்சி கலால் துறை அலுவலகத்தில் அவர் ஆஜரானார். உயர்ரக கஞ்சா அடுக்குமாடி குடியிருப்புக்கு எப்படி வந்தது? என்று அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு பின் இயக்குனர் சமீர் தாஹிரை கலால் துறையினர் கைது செய்தனர். பின்பு அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    உயர் ரக கஞ்சா சிக்கிய விவகாரத்தில் திரைப்பட இயக்குனர்கள் 3 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மலையாள திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    • லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாதவரம்:

    ஆந்திரா மாநிலத்தில் இருந்து செங்குன்றம் வழியாக கஞ்சா கடத்தப்படுவதாக செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து செங்குன்றம் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் மலர்செல்வி தலைமையிலான போலீசார் செங்குன்றம், பாடியநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஆந்திராவில் இருந்து செங்குன்றம் நோக்கி சென்ற லாரியில் இருந்து இறங்கி நடந்து சென்ற வாலிபரிடம் சோதனை செய்தனர். அப்போது பையில் 10 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர் திண்டுக்கல் மாவட்டம் பழைய ஆழ்குடி முதலியார் தெருவைச் சேர்ந்த காளீஸ்வரன் (25) என தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.

    • மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தில் உள்ள மத்திய கணக்காளர் அலுவலகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக ராஜஸ்தானை சேர்ந்த ஜிதின் (வயது 27) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கமலேஸ்வரம் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் வீட்டின் மொட்டை மாடியில் கஞ்சா செடிகளை பயிரிட்டிருப்பதாக கலால் துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கலால் துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அங்கு சென்று சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு கஞ்சா செடி பயிரிடப்பட்டிருப்பது தெரியவந்தது. இதனை ஒப்புக் கொண்ட ஜிதின், அலங்கார செடியாக கஞ்சா பயிரிட்டதாக கூறினார்.

    இது தொடர்பாக அவருடன் தங்கியிருந்த அலுவலக ஊழியர்கள் 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து போதை மருந்துகள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் பிரிவின் கீழ் ஜிதின் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.

    • கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
    • கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர்.

    கேரள மாநிலம் கொல்லம் கருநாகப்பள்ளி மருதூர் குளங்கரை செருகோல் பகுதியை சேர்ந்தவர் முகமது முஹ்சின்(வயது32). போதைபொருள் வழக்கில் தொடர்புடைய இவரின் வீட்டில் கருநாகப்பள்ளி கலால் வட்ட ஆய்வாளர் அனில்குமார் தலைமையிலான போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அவரது வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்த படுக்கை அறையில் 21 பூந்தொட்டிகளில் வித்தியாசமான செடிகள் வளர்க்கப்பட்டிருந்தன. அது என்ன செடி என்று ஆய்வு செய்தபோது கஞ்சா செடிகள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அலங்கார செடிகளை போன்று படுக்கை அறையில் கஞ்சா செடிகளை வளர்த்துள்ளனர்.

    இதையடுத்து பூந்தொட்டிகளில் வளர்க்கப்பட்ட கஞ்சா செடிகள் மற்றும் அந்த அறையில் இருந்த 5 கிலோ கஞ்சாவை கலால் துறையினர் பறிமுதல் செய்தனர். அது தொடர்பாக முகமது முஹ்சினை கலால் துறையினர் கைது செய்தார்கள்.

    • காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மங்களூரு:

    மைசூரு மாவட்டம் பிரியப்பட்டணாவில் இருந்து குடகு மாவட்டம் மடிகேரி வழியாக தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூருக்கு கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த கார் மடிகேரியை தாண்டி சுள்ளியா அருகே தேவரகொல்லி பகுதியில் வந்தபோது, திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இதில் காரில் இருந்த 3 பேரும் லேசான காயம் அடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அந்தப்பகுதி மக்கள் விரைந்து வந்து 3 பேரையும் மீட்டனர். அப்போது காரில் இருந்து கஞ்சா பொட்டலங்கள் வெளியே விழுந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த மக்கள், மடிகேரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து 3 பேரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் புத்தூரை சேர்ந்த பஸ்ருதீன், முஸ்தாக், ஜாபீர் என்பதும், அவர்கள் பிரியப்பட்டணாவில் இருந்து புத்தூருக்கு கஞ்சா கடத்தி சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கஞ்சா, கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
    • கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு சமீப காலமாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குறிப்பாக அத்தியாவசிய சமையல் பொருட்கள், மருந்துகள், வலி நிவாரணி மாத்திரைகள், பீடி இலைகள் கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களை கண்காணிக்க இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் தீவிர ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.

    நேற்று முன்தினம் மண்டபம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள 56 கிலோ கஞ்சாவை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் அதிகாரிகளின் வருகையை முன்கூட்டியே அறிந்து கொண்டு தப்பிச்சென்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு கடத்திய 304 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

    இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் 304 கிலோ கஞ்சா பொட்டலங்களுடன் இலங்கை கடற்படையால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார். இலங்கை வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் உடுத்துறை கடற்பகுதியில் அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது தமிழகத்திலிருந்து கடல் வழியாக கஞ்சா பண்டல்களுடன் வந்த படகை கண்டதும் இலங்கை கடற்படையினர் அந்த படகை நெருங்கினர். இதையடுத்து இலங்கை கடற்படையினரை கண்டதும் படகில் இருந்த வாலிபர் கஞ்சா பண்டல்களை கடலில் வீசினார். இருந்த போதிலும் உடனடியாக கடலில் குதித்த கடற்படையினர் 34 கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினர்.

    மேலும் அந்த பைபர் படகை சுற்றிவளைத்து அதில் இருந்த வாலிபரை கைது செய்தனர். இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட 304 கிலோ கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.4 கோடி எனவும், கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கைது செய்யப்பட்ட நபரை சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

    போதை பொருளுடன் கைது செய்யப்பட்ட வாலிபர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதே போல் கஞ்சா போதை பொருளுடன் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனைக்கு பின் விடுதலை ஆனவர் என்று கூறப்படுகிறது.

    ×