search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ganja"

    • தனியார் கல்லூரியை சுற்றியுள்ள தங்கும் விடுதிகளில் கஞ்சா புழக்கம் இருப்பதாக தகவல்.
    • மாணவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செங்கல்பட்டு:

    செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியை சுற்றியுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் தங்கியுள்ள விடுதிகளில், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கம் பெருமளவில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.


    இந்த சோதனையில், போதை மாத்திரைகள், கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள், பாங்கு போதை வஸ்து உள்ளிட்ட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், கல்லூரியைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மாணவர்களை போலீஸ் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கல்லூரி மாணவி தனது தோழியான பிரணவ கிருஷ்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
    • மாணவி தன்னிடம் நகை, பணம் எதுவும் இல்லை என பதில் கூறினார்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவர் திருப்பதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்து அங்குள்ள பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி சட்டப்படிப்பு படித்து வருகிறார்.

    அவருடன் படிக்கும் திருப்பதியை அடுத்த புடிபட்டிலை சேர்ந்த சக மாணவியான பிரணவ கிருஷ்ணா( 35) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பிரணவ கிருஷ்ணாவின் கணவர் பாக்ரா பேட்டையை சேர்ந்த கிருஷ்ண கிஷோர் ரெட்டி எஸ்.வி.யூ பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

    கணவன், மனைவி இருவருக்கும் கஞ்சா மற்றும் மது போதை பழக்கம் இருந்தது.

    கல்லூரி மாணவி தனது தோழியான பிரணவ கிருஷ்ணா வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம். அப்போது அவர்கள் கஞ்சா பழக்கத்தை உருவாக்கினர்.

    கடந்த மாதம் தனது வீட்டிற்கு வந்த கல்லூரி மாணவிக்கு கஞ்சா பயன்படுத்த கொடுத்தனர். கஞ்சாவை புகைத்த மாணவி சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்தார். அப்போது கிருஷ்ண கிஷோர் மாணவியை பலாத்காரம் செய்தார்.

    கணவர் தோழியை பலாத்காரம் செய்ததை பிரணவ கிருஷ்ணா தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். இதையடுத்து தோழியிடம் வீடியோவை காட்டி நகை, பணம் பறித்தனர்.

    ஒரு கட்டத்தில் மாணவியிடம் எந்த நகையும் இல்லாத நிலையில் பிரணவ கிருஷ்ணா நகை, பணத்தை கேட்டு மிரட்டினார். மாணவி தன்னிடம் நகை, பணம் எதுவும் இல்லை என பதில் கூறினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த பிரணவ கிருஷ்ணா மாணவியின் சகோதரர் மற்றும் அவரது வருங்கால கணவருக்கு ஆபாச வீடியோக்களை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து பலாத்கார வீடியோவை காட்டி பணம் பறித்த கணவன், மனைவியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.

    • பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.
    • உணவு டெலிவரி ஊழியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக உணவு டெலிவரி ஊழியர் புவனேஷ் எனும் இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மெட்ரோ ரெயிலில் கஞ்சா பயன்படுத்தியதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

    முன்னதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் தளத்தில்,

    பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்.

    தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள்.

    கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என்று தெரிவித்து இருந்தார்.

    • கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர்.
    • கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    கடலூர்:

    கடலூர் அடுத்த திருவந்திபுரம் சாலக்கரையில் நேற்று இரவு பில்லாலி தொட்டியை சேர்நத ஒருவரின் பிறந்தநாள் விழா மண்டபத்தில் நடைபெற்றது. அப்போது திடீரென்று 3 இளைஞர்கள் கஞ்சா போதையில் வீச்சு அரிவாளுடன் மண்டபத்திற்கு வந்தனர்.

    அங்கு நடைபெற்ற ஒலிபரப்பான பாடலுக்கு கத்தியோடு ஆட்டம் ஆடி எல்லோரையும் மிரட்டனர். தொடர்ந்து அங்கிருந்த நாற்காலிகளை சேதம் செய்து அனைவருக்கு அச்சமூட்டினர்.

    பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியில் வந்த அவர்கள், திருவந்திபுரம் பகுதியில் இருந்து கடலூர் கம்மியம்பேட்டை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றனர். வழியில் சென்ற பொதுமக்களை கத்தியை சுழற்றி வீசி மிரட்டிய படியே சென்றனர்.

    அப்போது அய்யப்பன் எம்.எல்.ஏ ஆதரவாளர் தி.மு.க. நிர்வாகி சன் பிரைட் பிரகாஷ் தனது வணிக நிறுவனத்தை மூடிவிட்டு சென்று கொண்டிருந்தார். அப்போது சன் பிரைட் பிரகாஷ் மீது கத்தியால் தாக்கியதில் வாய், மூக்கு பகுதியில் கடுமையான வெட்டு காயம் ஏற்பட்டு மயக்கம் அடைந்தார்.

    அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் இதனை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து உடனடியாக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி மாநில தனியார் மருத்துவமனையில் சன் பிரைட் பிரகாஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த செய்தி தி.மு.க.வி னரிடையே பரவியது.

    இத்தகவல் அறிந்த கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் போலீசார் விசாரணை செய்ததில் இந்த 3 பேரும் பில்லாலி தொட்டி எய்தனூரை சேர்ந்த ரவுடிகள் என தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தகவல் அறிந்த அய்யப்பன் எம்.எல்.ஏ அறிவுறுத்தலின் பேரில் டாக்டர் பிரவீன் அய்யப்பன் மற்றும் திமுக நிர்வாகிகள் காயம் அடைந்த சன் பிரைட் பிரகாஷை நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்தனர்.

    புதுச்சேரி மாநில தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதை டாக்டர் பிரவீன் அய்யப்பன் முன்னிலையில் டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

    கஞ்சா போதையில் 3 இளைஞர்கள் கத்தியுடன் பொதுமக்க ளை மோட்டார் சைக்கிளில் சென்று அச்சுறுத்திய நிலையில் எம்.எல்.ஏ ஆதரவாளரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    மேலும் இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பொதும க்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சோதனையிட்டனர்.
    • 150 போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் அனுபம்அகர்வால் தலைமையில் இன்று அதிகாலை 4 மணியளவில் மங்களூரு நகர சிறை வளாகத்தில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.

    இந்த சோதனையில் 2 துணை கமிஷனர்கள், 3 உதவி கமிஷனர்கள், 15 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 150 போலீசார் ஈடுபட்டனர். அவர்கள் சிறைச்சாலையின் அனைத்துத் பகுதிகளையும் ஒரே நேரத்தில் சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

    இந்த சோதனையின் போது கைதிகளிடம் இருந்து 25 செல்போன்கள், 1 புளூடூத் கருவி, 5 இயர்போன்கள், 1 பென் டிரைவ், 5 சார்ஜர்கள், 1 கத்தரிக்கோல், 3 கேபிள்கள் மற்றும் கஞ்சா பாக்கெட்டுகள் மற்றும் பிற போதைப்பொருள் பாக்கெட்டுகள் சிக்கியது.

    இந்த பொருட்கள் எப்படி சிறைக்குள் கொண்டு வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. சிறையில் அதிகாரிகள் நடத்திய சோதனை கடைசிவரை வெளியே தெரியாமல் ரகசியமாக வைக்கப்பட்டு இருந்தது.

    • தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • ரோந்து பணி நடைபெறும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது. இதனையடுத்து போலீசார் மலைப்பகுதியில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்நிலையில் முக்கிய சுற்றுலா தலமான வட்டக்கானல் பகுதியில் போதை வஸ்து பயன்பாடு அதிகரித்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கோட்டாட்சியர் சிவராம், நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன், சுற்றுலாத்துறை, போலீசார் இணைந்து இப்பகுதியில் உள்ள தனியார் விடுதிகள் முறையாக செயல்படுகிறதா, போதை வஸ்துகள் பயன்படுத்தப்படுகிறதா என அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாலா என்பவரின் 2 தங்கும் விடுதியிலும், மேற்பார்வையாளராக பணிபுரியும் கோவிந்தராஜ் என்பவரின் உட்ஹவுஸ் தங்கும் விடுதியிலும் சுற்றுலாப்பயணிகள் கஞ்சா பயன்படுத்தியது தெரியவந்தது. மேலும் மது பாட்டில்கள் அளவிற்கு அதிகமாக வைத்து இருந்தனர். இதுதொடர்பாக சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த சுற்றுலாப்பயணிகளையும், தனியார் தங்கும் விடுதி உரிமையாளர் மற்றும் உட்ஹவுஸ் மேற்பார்வையாளர் உள்பட 24 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் 3 தங்கும் விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மற்றும் அளவிற்கு அதிகமான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனியார் விடுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை வஸ்துகள் பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் எச்சரிக்கை விடுத்தார். சுற்றுலாப்பயணிகளுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது. யார் இவர்களுக்கு விற்பனை செய்தனர் என்பது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த சோதனையால் வட்டக்கானல் பகுதியில் பரபரப்பு நிலவியது. கொடைக்கானலில் நகர் மற்றும் மலை கிராம பகுதிகளில் தொடர்ந்து தீவிர ரோந்து பணி நடைபெறும் என போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.

    • தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர்.
    • அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே சம்பவத்தன்று தனிப்படை போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது நாகை -திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலை மேலப்பிடாகை அருகே வெளி மாவட்ட பதிவு எண் கொண்ட 3 சொகுசு கார்கள் தொடர்ச்சியாக வேகமாக வந்ததை மறித்து சோதனை மேற்கொண்டனர். அந்த கார்களில் 200 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது குறித்து காரில் வந்தவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியைச் சேர்ந்த தெட்சிணாமூர்த்தி (வயது 41), அவரது தம்பி சிவமூர்த்தி (38), திருப்பூர் மாவட்டம் இடுவை திருமலைகார்டனை சேர்ந்த மணிராஜ் (36), புதுக்கோட்டை மாவட்டம் மணல்மேல்குடி கவுதம் (36) என்பதும், ஒடிசா மாநிலத்தில் இருந்து கார் மூலமாக ரூ.50 லட்சம் மதிப்பிலான கஞ்சா பொட்டலங்களை ஆந்திரா வழியாக வேதராண்யம் கொண்டு சென்று படகு மூலம் கடல் வழியாக இலங்கைக்கு கடத்தி செல்ல இருந்ததும் தெரியவந்தது.

    இது குறித்து கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தெட்சிணாமூர்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்து 200 கிலோ கஞ்சா, 4 செல்போன்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தபட்ட 3 கார்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

    தொடர்ந்து இந்த வழக்கில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா ? என போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் வேதாரண்யம் கோடியக்காடு பகுதியை சேர்ந்த அறிவழகன் (60) என்பவருக்கு கஞ்சா கடத்தில் வழக்கில் தொடர்பு உள்ளது தெரியவந்தது. அறிவழகன் அ.தி.மு.க.வை சேர்ந்தவர் என்பதும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவராக உள்ளதும் தெரியவந்தது.

    இதையடுத்து தனிப்படை போலீசார் பிரதாபராமபுரம் அருகே அறிவழகனை கைது செய்து விசாரித்தனர். அதில் அறிவழகன் கஞ்சா, தங்கம் உள்ளிட்ட கடத்தலில் தொடர்ச்சியாக ஈடுபட்டவர் என்பது தெரியவந்தது. தொடர்ந்து அறிவழகனை சிறையில் அடைத்தனர்.

    • கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    • மாணவ-மாணவிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்திற்கு பல்வேறு பகுதிகளில் இருந்து போதை பொருட்களை கடத்தி வந்து மாணவ-மாணவிகளை குறி வைத்து ஒரு கும்பல் விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். சாலக்குடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆல்பின் தாமஸ் வர்க்கி தலைமையிலான போலீசார் ரெயில் நிலையப் பகுதியில் ரோந்து வந்த போது, சந்தேகத்திற்கிடமாக நின்ற ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது அவர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. அவரிடம் இருந்த 8 பிளாஸ்டிக் பைகளில் இருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் அவரது பெயர் அஜிபர் ஷேக் (வயது 26) என்பதும் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

    அங்கமாலியில் உள்ள கறி மசாலா தயாரிப்பு கம்பெனியில் வேலை பார்த்து வந்த அஜிபர் ஷேக், அங்கிருந்து விலகி ஆந்திராவில் இருந்து கஞ்சாவை கொள்முதல் செய்து கேரளா கொண்டு வந்து விற்பனை செய்ய தொடங்கி உள்ளார். இவர் பள்ளி, கல்லூரி மற்றும் பஸ் நிலையம் பகுதிகளில் மாணவ-மாணவிகளை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்து வந்துள்ளார். அவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 4 பேரை தனிப்படை மற்றும் மது விலக்கு போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கஞ்சா விற்பதாக போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு தகவல் வந்தது. இதனையடுத்து தனிப்படை போலீசார், மது விலக்கு போலீசார் விசாரணை நடத்தினர். இதில் விருத்தாசலத்தில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவது தெரியவந்தது.

    இதையடுத்து விருத்தாசலம் பஸ் நிலைய பகுதியில் மதுவிலக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த 2 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சோணு மகாராணா (வயது 28), திருப்பூரை சேர்ந்த ரவிக்குமார் மகன் சதீஷ் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்திவந்து கடலூர் மாவட்டம் முழுவதும் விற்பனை செய்தது தெரியவந்தது.

    மேலும், கம்மாபுரம் அருத்த சு.கீணனூர் கதிர்வேல் மகன் ராஜா (36), விருத்தாசலம் காசிம் பாஷா மகன் சதாம் (23) ஆகியோர் இவர்களிடமிருந்து கஞ்சாவை வாங்கி விற்பனை செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 4 பேரையும், தனிப்படை மற்றும் மது விலக்கு போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்த 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இவர்களிடம் விசாரணை மேற்கொண்டால், கடலூர் மாவட்டத்தில் யார்? யாருக்கெல்லாம் கஞ்சா சப்ளை செய்தனர் என்பதும், வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்துள்ளனரா என்பது தெரிவரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    • கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் பகுதியில் கஞ்சா விற்ற கேசவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் (36) என்பவரை இன்ஸ்பெக்டர் காளிராஜ் மற்றும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    அவருடன் தொடர்பில் உள்ள கஞ்சா கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர்.
    • போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர்.

    பழனி:

    பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலுக்கு சொந்தமான சிறுவர் பூங்காவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா புகைத்தபடி வாலிபர்கள் வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். அந்த வீடியோவில் 2 வாலிபர்கள் போதை அதிகரிக்கவே அவர்களை மற்றவர்கள் தூக்கிச் செல்வது போலவும், அதற்கேற்றபடி சினிமா பாடலும் இடம் பெற்றிருந்தது.

    இந்த வீடியோ வைரலான நிலையில் இதுகுறித்து பழனி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர்களை தேடி வந்தனர். அப்போது கஞ்சா போதையில் வீடியோ பதிவிட்டது பாலசமுத்திரத்தை சேர்ந்த சிவக்குமார், மகாபிரபு, கார்த்திக், பாலசுப்பிரமணியன், ராம்குமார், மதன்குமார் ஆகியோர் என தெரியவரவே அவர்களை கைது செய்தனர்.

    இவர்கள் அதே பகுதியில் நடந்த கோவில் திருவிழாவிலும் சாமி வேடமணிந்து ரீல்ஸ் பதிவிட்டது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த கஞ்சா மற்றும் அதனை புகைக்க பயன்படுத்திய புகையிலை உறிஞ்சி ஆகியவற்றை கைப்பற்றினர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். இச்சம்பவத்தில் தலைமறைவாக உள்ள பாலசமுத்திரத்தை சேர்ந்த மணிகண்டன் மற்றும் மதி, கஞ்சா விற்பனை செய்த பாலசமுத்திரத்தை சேர்ந்த பாஸ்கர், முத்துராஜா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

    பழனி மற்றும் சுற்றுப்புற பகுதியில் இதுபோல குடிபோதை மற்றும் கஞ்சா போதையில் ரீல்ஸ் வெளியிடுவதற்காக சுற்றித்திரியும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார்.
    • முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    ஆந்திராவில் இருந்து திருப்பூருக்கு அதிக அளவில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தது. இதைத்தொடர்ந்து திருப்பூர் மாநகர மதுவிலக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாதேவி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரமாஅனிதா, கிரிஜா, ஏட்டுகள் சுரேஷ், முகமதுசபி, சரவணன் ஆகியோர் கொண்ட குழுவினர் ரெயில் நிலையம் எதிரே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சந்தேகத்துக்கு இடமாக நின்ற பெண் உள்பட 3 பேரிடம் போலீசார் விசாரிக்கையில் ஒருவர் மட்டும் தப்பி ஓடினார். அவரையும் பிடித்து விசாரித்தனர்.

    அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்ததில் கஞ்சா இருந்தது தெரியவந்தது. மொத்தம் 7 கிலோ 600 கிராம் எடையுள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தன. ஆந்திராவில் இருந்து 3 பேரும் மொத்தமாக வாங்கி ரெயில் மூலமாக வந்து திருப்பூரில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல திட்டமிட்டு இருந்தனர்.

    விசாரணையில் அவர்கள் தேனியை சேர்ந்த முருகேஸ்வரி (வயது 49), கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியை சேர்ந்த அமீர் (38), கோழிக்கோட்டை சேர்ந்த முகமது சபிர் பாஷா (23) என்பது தெரியவந்தது. இவர்களில் முருகேஸ்வரி, அமீர் ஆகியோர் மீது ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

    இது தொடர்பாக மாநகர மதுவிலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகேஸ்வரி, அமீர், முகமது சபிர் பாஷா ஆகிய 3 பேரையும் கைது செய்ததுடன், 7 கிலோ 600 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

    ×