search icon
என் மலர்tooltip icon

  ஆன்மிகம்

  • ஆடி மாத பவுர்ணமியான இன்று ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
  • சங்கரன்கோவிலில் அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர்.

  சங்கரன்கோவில்:

  சைவமும், வைணவமும் பிளவுபடக்கூடாது என்பதற்காக அரியும் சிவனும் ஒண்ணு என்பதை உலகுக்கு உணர்த்தும் விதமாக இறைவன், சங்கரநாராயணராக தோன்றிய அற்புதமான திருத்தலம், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் ஆலயம்.

  இக்கோவிலில் ஆடி மாத பவுர்ணமியான இன்று உத்திராட நட்சத்திரத்தில் ஆடித்தபசு விழா வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

  இங்குள்ள கோமதி அம்மன் சன்னிதி முன், நடு மண்டபத்தில் நாகச்சுனை ஒன்று இருக்கிறது. இந்த நாகச்சுனை இருக்கும் இடத்தில் அந்த காலத்தில் சங்கன், பதுமன் என்ற இரு நாகர்கள் வசித்து வந்தனர்.

  சங்கன் சிவபெருமான் மீதும், பதுமன் மகாவிஷ்ணு மீதும் அதீத பக்தி கொண்டிருந்தனர். இருவரும் சிவன் பெரியவரா, விஷ்ணு பெரியவரா என தங்களுக்குள் வாதம் செய்தனர். இது பற்றி தெரிந்து கொள்ள பார்வதி தேவியிடம் சென்று முறையிட்டனர்.

  அம்பாள் ஈசனை வேண்ட, அவர் அம்பாளை பொதிகை மலைப்பகுதியில் புன்னை வனத்தில் தவம் செய்யும்படி கூறினார். அதன்படி அம்பாள் தற்போது சங்கரநாராயணர் கோவில் அமைந்திருக்கும் இடத்திற்கு வந்து தவம் செய்தார். அப்போது ஈசன் சங்கர நாராயணராக வந்து அம்பாளுக்கு காட்சி கொடுத்தார்.

  அரியும் சிவனும் ஒருங்கே இணைந்து ஓர் உருவில் காட்சி கொடுத்தனர். இந்தக் காட்சியை அம்பாளின் அருளால் சங்கனும், பதுமனும் தரிசித்து நற்பேறு பெற்றனர்.

  சங்கரநாராயணரின் சிவனுக்குரிய வலது பாகத்தில் தலையில் கங்கை, பிறை நிலா, அக்னி, ஜடாமுடியுடன் கையில் மழு, மார்பில் ருத்ராட்சம், இடுப்பில் புலித்தோல் போன்றவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் சங்கன் குடைபிடிக்கிறான்.

  அதேபோல் மகாவிஷ்ணுவுக்குரிய இடது பாகத்தில் நவமணி கிரீடம், கையில் சங்கு, மார்பில் துளசி மற்றும் லட்சுமி மாலைகள் இவற்றுடன் திருவாசியில் நாக வடிவில் பதுமன் குடை பிடிக்கிறான்.

  இவ்வாறு தவம்செய்த அம்பாளுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக திருக்காட்சி கொடுத்த மாதம் ஆடி மாதம் என்கிறது புராணம். இதைத்தான் இன்று ஆடித்தபசு என கொண்டாடுகிறோம்.

  • காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது.
  • விடுமுறை தினம் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை.

  வத்திராயிருப்பு:

  வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் உள்ளது அமாவாசை பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

  கடந்த 19-ந்தேதி முதல் நாளை வரை 4 நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

  கடந்த 19-ந்தேதி ஆடி மாத பிரதோஷம், இன்று ஆடி பவுர்ணமியை முன்னிட்டு நள்ளிரவு முதல் சென்னை, கோவை, திருச்சி, சேலம், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு தொலைதூர ஊர்களில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான வாகனங்களில் தாணிப்பாறைக்கு வருகை தந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வனத்துறை கேட்பகுதியில் குவிந்தனர்.

  இதனையடுத்து காலை 6 மணி அளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டது. வனத்துறையினர் பக்தர்களின் உடைமைகளை சோதனை செய்து பாலித்தீன் கேரிப்பை போன்றவற்றை பறிமுதல் செய்து மது மற்றும் போதை வஸ்து பொருட்கள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் கொண்டு செல்லப்படுகிறதா? என்பதையும் சோதனை செய்தனர்.

  அதன் பின்பு பக்தர்கள் தங்கள் உடமைகளை கொண்டு சென்றனர் தற்போது விடுமுறை தினமாக இருப்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர்.

  இன்று இரவு ஆடி பவுர்ணமியை முன்னிட்டு சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறு கிறது.

  அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

  • அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.
  • கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

  திருவண்ணாமலை:

  திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் இக்கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

  ஆடி மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.05 மணி அளவில் தொடங்கியது. பவுர்ணமியை முன்னிட்டு நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியில் இருந்து திருவண்ணாமலைக்கு பக்தர்கள் வருகை தர தொடங்கினர்.

  கிரிவலம் செல்ல உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்தனர். குறிப்பாக ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வந்தனர். காலையில் குறைந்த அளவிலான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

  பவுர்ணமி மாலையில் தொடங்கியதால் பெரும்பாலான பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு கிரிவலம் செல்லலாம் என்று வரிசையில் நின்றனர். இதனால் அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

  பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மதியம் வரை கோவிலில் ராஜகோபுரம் மற்றும் அம்மணி அம்மன் கோபுர நுழைவு வாயில் வழியாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் சாமி தரிசனம் 4 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.

  கோவிலில் பக்தர்கள் விரைந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. மேலும் கோவிலுக்கு வெளியில் மட்டுமின்றி கோவில் உட்புறமும் பல்வேறு வரிசைகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் சிரமமின்றி சாமி தரிசனம் செய்ய சென்றனர்.

  முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தையுடன் வந்த பெண்கள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டது.

  மதியத்திற்கு மேல் ஏராளமான பக்தர்கள் கார், வேன் உள்ளிட்ட வாகனங்களில் திருவண்ணாமலைக்கு வருகை தந்தனர். பகலில் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலம் சென்ற வண்ணம் காணப்பட்டாலும் மாலையில் இருந்து கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது.

  இரவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். கிரிவலம் சென்ற பக்தர்களுக்கு ஆங்காங்கே அன்னதானம் வழங்கப்பட்டது. பவுர்ணமி கிரிவலமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.48 மணியளவில் நிறைவடைகிறது. அதனால் பக்தர்கள் தொடர்ந்து விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

  இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் இன்றும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  மேலும் பவுர்ணமியை முன்னிட்டு போலீசார் திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப்பாதையில் தொடர்ந்து ரோந்து பணியிலும், போக்குவரத்தை சீர் செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். 108 ஆம்புலன்ஸ் பணியாளர்களும் போலீசாருடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றினர்.

  • கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார்.
  • 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

  சங்கரன்கோவில்:

  தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயண சுவாமி கோவில் தென் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்களில் ஒன்று. சிவன் வேறு, விஷ்ணு வேறு என பிளவுபடுத்துவது தவறு என்பதை பக்தர்களுக்கு உணர்த்தும் பொருட்டு சிவபெருமான், கோமதி அம்பாளுக்கு சங்கரநாராயணராகவும், சங்கரலிங்க மூர்த்தியாகவும் காட்சி கொடுத்தார். இத்தகைய அரிய நிகழ்ச்சி ஆடித்தபசு திருவிழாவாக பக்தர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

  இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி, அம்பாள் பல்வேறு வாகனங்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது.

  மேலும் கோவில் உள் மண்டபத்தில் உள்ள கலையரங்கத்தில் பக்தி இன்னிசை கச்சேரி, சொற்பொழிவு, வழக்காடு மன்றம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

  ஆடித்தபசு திருவிழா நாட்களில் கோவில் பிரகாரத்தை 108 முறை ஆடி சுற்று சுற்றி வந்தால் வேண்டுதல் நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இதனால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடி சுற்று சுற்றி வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

  திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடித்தபசு காட்சி இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு காலை 5 மணிக்கு சங்கரலிங்க சுவாமி-கோமதி அம்பாளுக்கு விளா பூஜையும், 9 மணிக்கு சங்கர நாராயண சுவாமி மற்றும் உற்சவமூர்த்திகளுக்கும், சுவாமி-அம்பாளுக்கும், சந்திரமவுலீஸ்வரருக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றது.

  காலை 9.30 மணிக்கு கோமதி அம்பாளுக்கு அபிஷேக அலங்காரம், பரிவட்டம், பிற்பகல் 1.35 மணிக்கு தங்க சப்பரத்தில் கோமதி அம்பாளுக்கு ஆடித்தபசு மண்டகப்படிக்கு எழுந்தருளல் நடைபெற்றது.

  மாலை 4.15 மணிக்கு சங்கரநாராயண சுவாமி தபசு காட்சிக்கு புறப்பாடு நிகழ்ச்சியும், 6.05 மணிக்கு சங்கரன்கோவில் தெற்கு ரதவீதியில் சிவபெருமான் அரியும், சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் சங்கரநாராயணசுவாமியாக ரிஷப வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு தபசு காட்சி கொடுக்கிறார்.

  இரவு 11 மணிக்கு மேல் சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் புறப்பாடு, இரவு 11.45 மணிக்கு சங்கரலிங்க சுவாமி யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி கொடுத்தல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

  ஆடித்தபசு திருவிழாவை காண தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான வர்கள் கோவிலில் குவிந்த வண்ணம் உள்ளனர். இதனால் சங்கரன் கோவிலில் எங்கு பார்த்தாலும் மனிதர்களின் தலையாகவே தெரிகிறது.

  தபசு விழாவையொட்டி சங்கரன்கோவில் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக நகராட்சி சார்பில் குடிநீர், சுகாதார வசதி செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

  ஆடித்தபசு விழாவை யொட்டி 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள், நிர்வாகம் மற்றும் மண்டகப்படிதாரர்கள், நகராட்சி நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

  தீயணைப்பு துறை சார்பில் 4 விதமான தீயணைப்பு வாகனங்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. மின் வாரியம் சார்பில் தடையில்லா மின்சாரம் கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் வாசல் அருகில் மருத்துவ குழுவினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். 

  • ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.
  • தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

  ஆடி பவுர்ணமிக்கு 10 நாட்களுக்கு முன் சதுர்த்தி திதியில் பூரம் நட்சத்திரத்துடன் கூடிய புண்ணிய தினத்தில் காலை வேளையில் ஸ்ரீ கோமதி அம்மன் சந்நிதி முன்பாக அமைந்துள்ள தங்கக்கொடிமரத்தில் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் நடக்கும். ஸ்ரீ கோமதி அம்பாளுக்கான தனிப்பெரும் திருவிழா இது. ஆகையால் அம்பாளுக்கே கொடியேற்றம் செய்யப்படுகிறது.

  கொடியேற்றும் அதே வேளையில் ஸ்ரீ அம்பாள் சிவிகையில் (தந்த பல்லக்கில்) எழுந்தருள்கிறாள். தொடர்ந்து 10 நாட்கள் காலையில் ஒவ்வொரு அலங்காரத்திலும், மாலை வேளையில் வெள்ளி சப்பரத்தில் மண்டகப்படி கட்டிடத்திற்கு அம்பாள் எழுந்தருள்கிறாள். இரவு வேளையில் சமுதாய மண்டகப்படி கட்டிடத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனத்தில் ஸ்ரீ அம்பாள் வீதி வலம் வருகிறாள்.

  அம்பாளுக்கான விழா ஆகையால் 9-ம் நாள் காலையில் அம்பாளுக்கு மட்டும் ரத உற்சவம் நடக்கிறது. 11-ம் நாள் காலையில் யாகசாலை மண்டபத்தில் ஸ்ரீ கோமதி அம்பாள், ஸ்ரீ சங்கரலிங்க சுவாமி, ஸ்ரீ சங்கர நாராயண சுவாமி ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரமும், சோடஷ உபசாரனையும் நடக்கிறது. தொடர்ந்து ஸ்ரீ கோமதி அம்பாள் தபசுகோலத்தில் தங்கச்சப்பரத்தில் எழுந்தருளி தபசு மண்டபம் செல்கிறாள்.

  ஆடி பவுர்ணமி தினத்தில் மாலை உத்திராட நட்சத்திர வேளையில் சுவாமி வெள்ளி ரிஷப வாகனத்தில் ஸ்ரீ சங்கர நாராயண மூர்த்தியாக, தபசுகோலத்தில் உள்ள அம்பாளுக்கு காட்சி அளிக்கிறார். பின் இரவு வேளையில் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுக்கு ஸ்ரீ சங்கரலிங்க சுவாமியாக காட்சியளிக்கிறார்.

  3-டி அமைப்பில் ஓவியம்

  கோவில் கருவறையின் பின்புறம் ஸ்ரீரங்கத்தில் ரங்கநாதர் படுத்திருப்பது போன்ற ஓவியம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் கண் அமைப்பு கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே 3-டி அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் வியப்பான ஒன்று. ஓவியத்தின் வலது மற்றும் இடது புறம், ஓவியத்தின் நடுப்பகுதியில் நின்று பார்த்தாலும் ரங்க நாதர் நம்மையே பார்ப்பது போல அவரது கண்களின் பார்வை அமைக்கப்பட்டு இருக்கும்.

  • இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள்.
  • தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

  சிவனாரின் திருக்கரத்தைப் பற்றி, அவரின் துணைவியாவதற்காக, உமையவள் தபசு இருந்தது ஆடி மாதத்தில் என்பார்கள்.

  அரியும் சிவனும் ஒன்றே என உலகுக்கு உணர்த்த விரும்பிய ஸ்ரீகோமதியம்மன், அதன் பொருட்டு இறைவனை வேண்டி ஒற்றைக்காலில் கடும் தவமிருந்தாள். அவளது தவத்தில் மகிழ்ந்த சிவனார், சங்கர நாராயணராகக் காட்சி அளித்தார்.

  திருமணம், குழந்தை பாக்கியம் வேண்டும் பெண்கள், ஆடித்தபசு திருநாளுக்கு முதல்நாள் நீராடி, ஈரப் புடவையுடன் கோவில் பிராகாரத்தில் படுத்துக்கொள்வார்கள். இரவு நமக்கே தெரியாமல், அம்மன் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

  மேலும் ஆடித்தபசு நாளில், அம்பிகையை அபிஷேகிப்பதற்காகவும், அலங்கரிப்பதற்காகவும் நம்மாலான பொருட்களை வழங்கி, தரிசித்தால், தாலி பாக்கியம் நிலைக்கும். நினைத்தபடி வாழ்க்கைத் துணை அமையும் என்கின்றனர் பக்தர்கள்.

  • சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசுக்காட்சி.
  • சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை.

  இன்றைய பஞ்சாங்கம்

  குரோதி ஆண்டு ஆடி-5 (ஞாயிற்றுக்கிழமை)

  பிறை: வளர்பிறை

  திதி: பவுர்ணமி மாலை 4.51 மணி வரை பிறகு பிரதமை

  நட்சத்திரம்: உத்திராடம் பின்னிரவு 2.07 மணி வரை பிறகு திருவோணம்

  யோகம்: அமிர்தயோகம்

  ராகுகாலம்: மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை

  எமகண்டம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

  சூலம்: மேற்கு

  நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

  சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு சிறப்பு திருமஞ்சன சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் தபசுக்காட்சி. ஸ்ரீ வைகுணடம் ஸ்ரீ கள்ளபிரானுக்கு பாலபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜப் பெருமாள் தேரோட்டம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்.

  இன்றைய ராசிபலன்

  மேஷம்-முதலீடு

  ரிஷபம்-நன்மை

  மிதுனம்-லாபம்

  கடகம்-பெருமை

  சிம்மம்-உயர்வு

  கன்னி-தெளிவு

  துலாம்- மேன்மை

  விருச்சிகம்-ஆதரவு

  தனுசு- அன்பு

  மகரம்-உழைப்பு

  கும்பம்-மாற்றம்

  மீனம்-பாராட்டு

  • ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.
  • பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

  தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள குச்சனூரில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு கட்டுப்பட்ட இந்த கோவில் சனி பரிகார தலமாக உள்ளது.

  இந்த கோவிலுக்கு முன்பு செல்லும் சுரபி நதிக்கரையில் பக்தர்கள் நீராடி எள்சாதம், நெய் தீபம் ஏற்றி கருப்பு வேட்டி, பூமாலை, பழம், படையல் செய்து வழிபாடு நடத்தினால் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். இதற்காக ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  இந்த கோவிலில் முக்கிய திருவிழாவாக ஆண்டு தோறும் ஆடி மாதத்தில் வரும் முதல் சனிக்கிழமை தொடங்கி 5 வாரங்கள் சனிக்கிழமைகளில் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறும்.


  இந்த திருவிழாவின் போது சனீஸ்வரர் திருக்கல்யாணம், துணை சன்னதியான கருப்பணசாமி கோவிலில் பொங்கல் வைத்தல், மதுபான படையல், ஆடு, கோழிகளை பலியிட்டு விருந்து வைத்தல் ஆகிய வழிபாடுகள் நடைபெறும். அதன்படி ஆடி மாதத்தின் முதல் சனிக்கிழமையான இன்று குச்சனூர் சனீஸ்வரர் கோவிலுக்கு பக்தர்கள் வருகை தந்தனர். நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து தங்கள் நேர்த்தி கடனை நிறைவேற்றி சென்றனர். பக்தர்களுக்கு வசதியாக சிறப்பு பஸ் வசதியும் செய்யப்பட்டிருந்தது.

  நடப்பாண்டில் குச்சனூர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக ரூ.1 கோடியில் துணை சன்னதிகளான விநாயகர், முருகன், கருப்பணசாமி, பலிபீடம், கொடி மரம் உள்ளிட்ட 14 இடங்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த வருடம் ஆடிப்பெருந்திருவிழா நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலை, பகல், இரவு ஆகிய 3 கால பூஜைகள் வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 40 சதவீத பணிகள் முடிந்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் பணிகள் அனைத்தும் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.

  • திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.
  • திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வெண்ணை தாழி சேவை.

  இன்றைய பஞ்சாங்கம்

  குரோதி ஆண்டு ஆடி-4 (சனிக்கிழமை)

  பிறை: வளர்பிறை

  திதி: சதுர்த்தி இரவு 6.09 மணி வரை பிறகு பவுர்ணமி

  நட்சத்திரம்: பூராடம் பின்னிரவு 2.49 மணி வரை பிறகு உத்திராடம்

  யோகம்: சித்தயோகம்

  ராகுகாலம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

  எமகண்டம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

  சூலம்: கிழக்கு

  நல்ல நேரம்: காலை 7 மணி முதல் 8 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

  திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவான் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. வடமதுரை ஸ்ரீ சவுந்திரராஜர் குதிரை வாகனத்தில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் வெண்ணை தாழி சேவை. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் விருஷப சேவை. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் சிறப்பு ஸ்திர வார திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

  இன்றைய ராசிபலன்

  மேஷம்-நற்செயல்

  ரிஷபம்-வெற்றி

  மிதுனம்-பக்தி

  கடகம்-ஓய்வு

  சிம்மம்-கடமை

  கன்னி-உழைப்பு

  துலாம்- முயற்சி

  விருச்சிகம்-பணிவு

  தனுசு- விருத்தி

  மகரம்-ஆதரவு

  கும்பம்-சிந்தனை

  மீனம்-சிறப்பு

  • ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது.
  • அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.

  அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.

  இப்படி கடவுளாகவும், குருவாகவும் அன்னையை ஏற்றுக் கொண்டால், அவள் நமக்கு என்றென்றும் வழிகாட்டியாக இருப்பாள். அத்தகைய தெய்வத்துக்கு நாம் நன்றியை காட்ட வேண்டாமா?

  அந்த கடமையை செய்யும் மாதமாக ஆடி மாதம் மலர உள்ளது.

  இந்த மாதம் முழுவதும் அம்மனின் மலர்ப்பாதங்களில் நமது எண்ணம் அனைத்தையும் குவித்து விட வேண்டும்.

  அவளிடம் முழுமையாக நாம் சரண் அடைதல் வேண்டும்.

  உடல், பொருள், ஆன்மா அனைத்தையும் அவள் காலடியில் ஒப்படைக்க வேண்டும்.

  ஆடியில் அம்மனுக்கு மிகவும் பிடித்த நைவேத்தியமான கூழ் படைத்து வழிபடுதல் மிகவும் நல்லது.

  அதில்தான் அன்னை பராசக்தி மகிழ்ச்சி அடைவாள்.

  அவளிடம் ஏற்படும் மகிழ்ச்சி, நம் வாழ்வை உயர்த்தும். இந்த பிறவியை இன்னலின்றி நிறைவு செய்ய உதவும்.

  அண்டங்கள் அனைத்தையும் அதிர வைக்கும் ஆற்றலை அன்னை பெற்றிருந்தாலும், தூய்மையான பக்தியுடன் வழிபடும் பக்தர்களிடம் அன்பையும் அரவணைப்பையும் காட்டுவாள்.

  அதை பெற நாம் இந்த ஆடி மாதத்தில் சக்தி தலங்களுக்கு சென்று மனதை ஒருமுகப்படுத்தி வழிபட வேண்டும்.

  மனதை அடக்க, அடக்க மாயை விலகி சக்தி பிறக்கும்.

  அதற்கு ஆடி மாத வழிபாடு மிகச் சிறந்த அஸ்திவாரமாக இருக்கும்.

  சக்தியை வழிபடுவோம்..... சகல நன்மைகளையும் பெறுவோம்....

  • சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.
  • எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

  அம்பிகையைச் சரண் அடைந்தால் அதிக வரம் பெறலாம் என்பது மகாகவி பாரதியாரின் வாக்கு. "முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே" என்கிறார் அபிராமிபட்டார்.

  கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் தருபவள் சக்தியே.

  சிவனிடம் இருந்து சக்தியை ஒரு போதும் பிரிக்க முடியாது. உலகமே சிவசக்தி மயமாக உள்ளது.

  எனவே ஆலயங்களிலும் வீடுகளிலும் அம்பிகையை பராசக்தியாக போற்றி அவசியம் வழிபட வேண்டும்.

  வீட்டில் தினமும் காலை, மாலை இரு வேளையும் விளக்கேற்றி வைத்து செம்பருத்தி, அரளி ஆகிய மலர்களால் அர்ச்சித்து வழிபடலாம்.

  குறிப்பாக செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம்.

  வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.

  லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப் படுத்தி அவள் வளர்த்துள்ளாள்.

  • ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.
  • அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.

  ஆடி மாதம் வந்து விட்டது. ஆடி மாதம் முழுவதும் தமிழ்நாட்டில் அம்மன் வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெறும்.

  அம்மன் வீற்றிருக்கும் தலங்களில் வித, விதமான வழிபாடுகள் நடத்தப்படும்.

  எங்கு பார்த்தாலும் "ஓம் சக்தி... பராசக்தி" என்ற கோஷம் ஆத்மார்த்தமாக, அருள் அலையாக பரவி நிற்கும்.

  சக்தி வழிபாடு என்பது மிக, மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை 'தாய்மை வழிபாடு" என்றே கூறினார்கள்.

  உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது.

  சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு "ஹ்ரீம்" எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.

  "ஹ்ரீம்" என்ற மந்திரம் ஓம் எனும் பிரணவ மந்திரம் போல சிறப்பு வாய்ந்தது.

  "ஹ்ரீம்" என்ற பீஜ மந்திரத்தை மனதில் இருத்தி, மனதை அலைபாய விடாமல், ஒருமுகப்படுத்தி படித்தால், முக்காலமும் உணர்ந்து மரணத்தை வென்று மகத்தான வாழ்வை பெற முடியும் என்று திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.

  ×