என் மலர்
ஆன்மிகம்
- பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது.
- சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதானது.
பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் பரம்பொருளுக்குள் அடங்கின. இதையடுத்து அன்றைய இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்துப் பூஜை செய்தார். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தார்.
பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது 'சிவராத்திரி' என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினார். சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, சிவனைப் பூஜிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லா விதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்.
சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே சிவராத்திரி என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப்பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது. ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின்படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதானது.
- இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.
- சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் பிரசித்தி பெற்ற ராமநாத சுவாமி கோவில் உள்ளது. நாள்தோறும் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள்.
12 ஜோதி லிங்க ஸ்தலங்களில் ஒன்றான இக்கோவிலில் மகாசிவராத்திரி திருவிழா விமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 8-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சிவராத்திரியான இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு ராமநாத சுவாமிக்கும்-பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றன.

கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரையில், புனித நீராடிவிட்டு கடற்கரை மண்ணில் சிவலிங்கம் போன்று வடிவமைத்து வழிபட்டு வருகின்றனர்.
பின்னர் கோவிலுக்கு உள்ளே உள்ள சாமி மற்றும் அம்பாளை நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வட மாநில பக்தர்கள் காசியில் இருந்து கொண்டு வந்த கங்கை நீரை அபிஷேகத்திற்கு வழங்குவதற்காக தலையில் சுமந்து கொண்டு வந்தனர். இன்று அதிகாலை முதலே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்து வருகின்றனர்.
சிகர நிகழ்ச்சியான மகா சிவராத்திரி தேரோட்டம் நாளை நடக்கிறது. மகாசிவராத்திரியை முன்னிட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் இன்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனால் கோவில் நடை இரவு முழுவதும் திறந்திருக்கும்.
- நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.
- சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை காலம் மட்டுமின்றி மாதாந்திர பூஜைகளுக்காக நடை திறக்கப்படும் காலத்திலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. அதன்படி மாசி மாத பூஜைகளுக்காக கடந்த 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது முதல் சபரிமலையில் பக்தர்கள் அதிக அளவில் வந்து தரிசனம் பெற்று வருகின்றனர்.
13-ந்தேதி பொதுவேலை நிறுத்தம் காரணமாக கேரளாவில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்ட போதிலும் சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி கட்டிய படி சபரிமலை வந்தனர்.
நேற்று சபரிமலையில் தந்திரி பிரம்மஸ்ரீ கண்டார் மகேஷ் மோகன் தலைமையில் படி பூஜையும் நடைபெற்றது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் பெற்றனர். சபரிமலை வந்த பக்தர்களை பாதுகாப்பு போலீசார் ஒழுங்குபடுத்தி தரிசனம் செய்ய அனுப்பினர். சுமார் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர். வருகிற 17-ந் தேதி வரை நடை திறந்திருக்கும். அன்று இரவு 10 மணிக்கு கோவில் நடை சாத்தப்படும்.
இன்றைய பஞ்சாங்கம்
விசுவாவசு ஆண்டு மாசி-3 (ஞாயிற்றுக்கிழமை)
பிறை : தேய்பிறை
திதி : திரயோதசி மாலை 5.50 மணி வரை பிறகு சதுர்த்தசி
நட்சத்திரம் : உத்திராடம் இரவு 8.36 மணி வரை பிறகு திருவோணம்
யோகம் : அமிர்தயோகம்
ராகுகாலம் : மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை
எமகண்டம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை
சூலம் : மேற்கு
நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
மகா சிவராத்திரி, காஞ்சீபுரம் ஸ்ரீ காமாட்சியம்மன் கோவிலில் அபிஷேகம்
இன்று மகா சிவராத்திரி. சுபமுகூர்த்த தினம். திருவண்ணாமலை அரிபிரம்மாதியர் அடிமுடிதேடியருளிய லீலை. ராமேசுவரம் ஸ்ரீ சுவாமி ஸ்ரீ அம்பாள் மின் விளக்கு அலங்கார வெள்ளி ரதத்தில் பவனி. மூங்கிலனை ஸ்ரீ காமாட்சி அம்மன் பெருந்திருவிழா சூரியனார்கோவில் ஸ்ரீ சூரிய நாராயணருக்கு திருமஞ்சனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி எதிரில் உள்ள ஸ்ரீ அனுமனுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்த சாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஸ்ரீ ஆஞ்ச நேயருக்கு திருமஞ்சனம். சாத்தூர் ஸ்ரீ வேங்கடேசப் பெரு மாள் புறப்பாடு. ராமேசுவரம் ஸ்ரீ பர்வதவர்த்தினியம்மன் ஊஞ்சலில் காட்சி. திருப்போரூர் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். வைத்தீஸ்வரன் கோவில் ஸ்ரீ அங்கா ரகருக்கும், ஸ்ரீ செல்வமுத்துக்குமார சுவாமிக்கும் அபிஷே கம். காஞ்சி ஸ்ரீ காமாட்சியம்மன், இருக்கன்குடி ஸ்ரீ மாரி யம்மன், சமயபுரம் ஸ்ரீ மாரியம்மன், தஞ்சை புன்னைநல்லூர் ஸ்ரீ மாரியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-மாற்றம்
ரிஷபம்-நலம்
மிதுனம்-சுகம்
கடகம்-அமைதி
சிம்மம்-ஆர்வம்
கன்னி-முயற்சி
துலாம்- தனம்
விருச்சிகம்-தாமதம்
தனுசு- ஆக்கம்
மகரம்-இன்பம்
கும்பம்-வெகுமதி
மீனம்-உழைப்பு
- இன்றைய ராசிபலன்
- 12 ராசிகளுக்கும் ஆன இன்றைய ராசிபலன்கள்
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிபலன்களுக்கான இன்றைய ராசிபலன்கள்
மேஷம்
ஆலய வழிபாட்டால் ஆனந்தம் காண வேண்டிய நாள். ஒற்றுமை பலப்படும். சந்தோஷமான செய்தி வந்து சேரும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்
யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். வரவைவிட செலவு கூடும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மிதுனம்
கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. மனக்குழப்பம் உண்டு. பயணங்களால் விரயம் உண்டு.
கடகம்
பண வரவு எதிர்பார்த்தபடி வந்து சேரும். வியாபாரம், தொழிலில் லாபம் உண்டு. நண்பர்களின் உதவி கிட்டும். பொதுவாழ்வில் ஏற்பட்ட வீண் பழிகள் அகலும்.
சிம்மம்
குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள்.
கன்னி
நெருக்கடி நிலை அகலும் நாள். பொருள் வரவு திருப்தி தரும். காலை நேரத்தில் காதினிக்கும் செய்தி ஒன்று வந்து சேரும். பொதுநலத்தில் ஈடுபட்டு புகழ்பெறுவீர்கள்.
துலாம்
மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். வியாபாரம் சூடு பிடிக்கும். அண்டி வந்தோருக்கு அன்போடு உதவி செய்வீர்கள். பயணத்தின்போது விழிப்புணர்ச்சி தேவை.
விருச்சிகம்
செல்வ நிலை உயர சிவனை வழிபட வேண்டிய நாள். நண்பர்கள் நல்ல தகவலை தருவர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் உண்டு. பிரபலஸ்தர்களின் சந்திப்பு உண்டு.
தனுசு
பார்போற்றும் நிலையடைய பரம்பொருளை வழிபட வேண்டிய நாள். பஞ்சாயத்துகள் சாதகமாக முடியும். உடன்பிறப்புகளால் உதவி கிட்டும்.
மகரம்
நினைத்தது நடக்கும் நாள். நீண்டதூரப் பயணம் முடிவாகும். இடம், சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். தொழில் போட்டிகள் அகலும்.
கும்பம்
சிறப்பான வாழ்வு அமைய சிவபெருமானை வழிபட வேண்டிய நாள். தனவரவில் இருந்த தடை அகலும். நீண்ட நாட்களாக நிறைவேறாத காரியம் இன்று நிறைவேறும்.
மீனம்
வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும் நாள். தொல்லை கொடுத்து வந்தவர்கள் எல்லையை விட்டுச் செல்வர். கடன் சுமை குறைய எடுத்த முயற்சி கைகூடும்.
- எட்டு திருவீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
- 7-ம் நாள் திருவிழாவான 27-ந் தேதி காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் பல்வேறு திருவிழாக்களில் முக்கிய திருவிழாவான மாசித் திருவிழா வருகிற 21-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது.
மாலை 4.30 மணிக்கு மேல் அப்பர் சுவாமிகள் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவில் சேர்தல் நடக்கிறது. இரவு 7 மணிக்கு மேல் ஸ்ரீ பெலிநாயகர் அஸ்திர தேவருடன் தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு 9 சந்திகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
2-ம் நாள் (22-ந் தேதி) காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி குமர விடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்மன் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி தூண்டுகை விநாயகர் கோவிலுக்கு வடபுறம் உள்ள ஆண்டியப்பபிள்ளை மண்டபம் வந்து சேர்தல். அம்பாள் மட்டும் உள் திருவீதி 4 வெளி திருவீதி நான்கு ஆக 8 வீதிகளிலும் உலா வந்து மண்டகப்படி சேர்தல் நடக்கிறது.
இரவு 7 மணிக்கு மேற்படி மண்டபத்தில் இருந்து சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும் அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி பரிவார மூர்த்திகளுடன் எட்டு திருவீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
3-ம் நாள் திருவிழா 23-ந்தேதி (திங்கட்கிழமை )காலை 7 மணிக்கு மேல் சுவாமி மேலகோவிலில் இருந்து பூங்கேடய சப்பரத்திலும், அம்மன் கேடய சப்பரத்திலும் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி தங்கமுத்து கிடா வாகனத்திலும் அம்மன் வெள்ளி அன்னவாகனத்திலும் எழுந்தருளி எட்டு வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
4-ம் திருவிழாவான 24-ந்தேதி மாலை 6.30 மணிக்கு மேல் சுவாமி வெள்ளி யானை வாகனத்திலும் அம்மன் வெள்ளி சரப வாகனத்திலும் எழுந்தருளி வீதி உலா வந்து மேல கோவில் சேர்ந்தல் நடக்கிறது.
5-ம் திருவிழாவான 25-ந் தேதி (புதன்கிழமை) இரவு 7.30 மணி அளவில் குடைவரை வாயில் தீபாராதனையாகி சுவாமி, அம்பாள் தங்கமயில் வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளில் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
6-ம் நாள் திருவிழா 26-ந் தேதி (வியாழக்கிழமை )காலை 7 மணிக்கு சுவாமி கோ. ரதத்தில் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து பந்தல் மண்டபம் சேர்தல் நடக்கிறது. இரவு 8 மணிக்கு சுவாமி வெள்ளி தேரிலும், அம்மன் இந்திர விமானத்திலும் எழுந்தருளி 8 வீதிகளும் உலா வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
7-ம் நாள் திருவிழாவான 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 5 மணிக்கு மேல் 5.30 மணிக்குள் சண்முகப் பெருமான் உருகு சட்ட சேவை நடக்கிறது.
காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர் சண்முக விலாசத்தில் இருந்து வெற்றிவேர் சப்பரத்தில் ஏற்றத்தில் எழுந்தருளி பிள்ளையின் கட்டளை மண்டபம் சேர்தல் அங்கு அபிஷேகம் அலங்காரம் தீபாரதனை நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு மேல் அங்கிருந்து சுவாமி சிவப்பு சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
8-ம் திருவிழாவான 28-ந் தேதி (சனிக்கிழமை)காலை 6 மணிக்கு பிரம்மன் அம்சமாக வெள்ளை சாத்தி கோலத்தில் சுவாமி சண்முகர் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.
காலை 10.30 மணிக்கு மேல் சுவாமி சண்முகர் விஷ்ணு அம்சமாக பச்சை சாத்தி கோலத்தில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து மேல கோவில் சேர்தல் நடக்கிறது.
9-ம் திருவிழாவான மார்ச்-1-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மேல் சுவாமி அம்பாள் பல்லக்கில் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது .
இரவு 8 மணிக்கு சுவாமி தங்க கயிலாய பர்வத வாகனத்திலும் அம்மன் வெள்ளி கமல வாகனத்திலும் எழுந்தருளி 8 வீதிகளிலும் உலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது இரவு 10 மணிக்கு தேர் கடாட்சம் நடக்கிறது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான 10-ம் திருவிழா தேரோட்டம் அடுத்த மாதம் (மார்ச்) 2-ந் தேதி (திங்கள்கிழமை)காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்கு மீன லக்னத்தில் நடக்கிறது
11-ம் திருவிழாவான 3-ந் தேதி ( செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் சுவாமி அம்மன் புஷ்ப சப்பரங்களில் எழுந்தருளி தெப்பக்குளம் மண்டகப்படி சேர்தல், அங்கு இரவு 10.30 மணிக்கு மேல் அபிஷேகம் அலங்காரமாகி சுவாமி தெப்பத்தில் 11 சுற்றுகள் சுற்றி வந்து மேலக்கோவில் சேர்தல் நடக்கிறது.
12-ம் திருவிழாவான 4-ந்தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு மஞ்சள் நீராட்டு திருக்கோலத்துடன் 8 வீதிகளிலும் வலம் வந்து 14 செங்குந்தர் முதலியார் திருமண மண்டபம் வந்து அங்கு அபிஷேகம் அலங்காரமாகி தீபாரதனைக்கு பின் இரவு 9 மணிக்கு அம்மன் மலர் கேடய சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடந்து விழா நிறைவு பெறுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் அருள் முருகன், இணை ஆணையர் ராமு மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
- திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.
- திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.
வெற்றிவேலாயுதசுவாமி கோவிலுக்குப் பின்புறம் மேற்கே சற்றுத்தள்ளி தனிக் கோவிலாக வள்ளி-தெய்வானை கோவில் அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரபத்மனை போருக்கு சென்று வதம் செய்த பிறகு தனிமையில் இருந்தார்.
அவரை மணம் முடிக்க விரும்பிய வள்ளி- தெய்வானை இருவரும் இம்மலைக்கு வந்து, முருகன் தங்களை ஆட்கொள்ளுமாறு வேண்டினர். அவரது அருளாசியின்படி இந்திரன் மகளாகத் தெய்வானையும், நம்பிராஜனின் வளர்ப்பு மகளாக வள்ளியும் அவதரித்தனர். இது திருமணத்திற்கு முன்னதான நிலை என்பதால் வள்ளி தெய்வானைக்கு தனிக் கோவிலானது அமையப்பெற்றுள்ளது.
எனவே இங்கு திருமண வரம் வேண்டி வழிபட்டால் நிச்சயம் திருமணத்தடை நீங்கும் என்பது நடைமுறையில் உறுதிப்படுத்தப்பட்ட நிகழ்வாகும்.
- கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு.
- சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.
காலையில் எழுந்து நீராடி, நெற்றியில் திருநீறு அணிந்து, சிவ நாமத்தை சொல்லிய படி இருக்க வேண்டும். எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்யலாம்.
நாள் முழுவதும் உபவாசமாக இருந்து, மாலையில் சிவ தரிசனம் முடித்த பிறகு உப்பு, காரம், புளிப்பு சேர்க்காத உணவுகளை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். அல்லது கோவிலில் தரும் பிரசாதத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டாம்.
கோவிலுக்கு சென்று நந்தி தேவரையும், சிவனையும் வழிபடுவது சிறப்பு. முடியாதவர்கள் வீட்டிலேயே பிரதோஷ விரதம் இருந்து, சிவ வழிபாட்டினை செய்யலாம். தொடர்ந்து பிரதோஷ விரதம் இருந்து வழிபடுபவர்களுக்கு பிறப்பு-இறப்பு இல்லாத முக்தி நிலையை சிவபெருமான் அருளுவார் என புராணங்கள் சொல்கின்றன.
- கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
- மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தின் கடற்கரையை ஓட்டி மந்தர் மலைப்பகுதியில் சங்கு குளம் ஒன்று அமைந்துள்ளது. இந்த சங்கு குளத்தில் பாஞ்சஜன்ய சங்கு என்று அழைக்கப்படும் சங்கு உள்ளது.
இந்த சங்கானது வருடம் முழுவதும் சுமார் 70 அடி முதல் 80 அடி ஆழத்தில் தண்ணீரில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. சிவராத்திரிக்கு முந்தைய தினம் மட்டும் தண்ணீர் வற்றி சங்கு பொதுமக்களின் கண்களுக்கு தென்படும். ஒரே நாளில் தண்ணீர் வற்றி சங்கு தென்படுவதும் மறுநாளே தண்ணீர் பெருக்கெடுத்து சங்கு மூழ்கிப்போவதும் ஆச்சரியமாக உள்ளதாக அங்கு வசிக்கும் மக்கள் கூறி வருகின்றனர்.
புராணக் கதையின்படி பாற்கடலைக் கடைந்து அமிர்தம் எடுக்க தேவர்களும் அசுரர்களும் மந்தார மலையை மத்தாகப் பயன்படுத்தினர் எனக் கூறப்படுகிறது. பீகார் கடல் பகுதியில் உடைந்த மத்து போன்ற மந்தாரமலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த மலைப்பகுதி பாகல்பூர் என்ற இடத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்த மலைக்கு பவுர்ணமி, அமாவாசை, பிரதோஷம் ஆகிய நாட்களில் திரளான பக்தர்கள் வருகை தருகின்றனர். இப்பகுதி வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது என்பதால் மலைக்குச் செல்ல வனத்துறையிடம் பக்தர்கள் அனுமதி பெற வேண்டியது அவசியம்.
- சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
- சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம்.
மகாசிவராத்திரியின் நேரடி அர்த்தம் 'சிவனின் மகா இரவு' என்பதாகும். மகாசிவராத்திரி விரதத்தைக் கடைப்பிடிப்பது திருமணமாகாத பெண்களுக்கு அவர்கள் விரும்பிய வாழ்க்கைத் துணை கிடைக்க ஆசீர்வதிக்கிறது. திருமணமான பெண்களுக்கு திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியை அளிக்கிறது.
மகாசிவராத்திரி என்பது சிவபெருமான்-பார்வதி தேவியை திருமணம் செய்து கொண்ட நாளாக கருதப்படுகிறது.
தெய்வீக ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானையும், பார்வதி தேவியையும் வழிபடுவதால் மகிழ்ச்சி, ஆரோக்கியம், அமைதி, செல்வ வளம் ஆகியவை கிடைக்கும்.
திருமணம் தாமதமாகிறவர்கள், திருமணம் தடைபடுபவர்கள் இந்த நாளில் எளிய பரிகாரம் செய்தால் விரைவில் திருமண வரம் கூடி வரும் என்பது நம்பிக்கை. யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தங்கள் கைகளால் மஞ்சளை சிவன் மற்றும் பார்வதியின் பாதத்தில் வைத்து வழிபட வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சினை இருப்பவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கும் கணவன்- மனைவியும் இந்த வழிபாட்டினை செய்யலாம்.
மஞ்சளை படைத்து, சிவன்-பார்வதியை வேண்டிக் கொண்டு முடிந்த வரை சிவ மந்திரத்தை உச்சரித்து மனதில் உள்ள வேண்டுதலை சொல்லி வழிபடலாம். இப்படி வழிபடுவதால் அவர்களின் திருமணம் நடைபெறுவதில் அல்லது திருமண வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள், தடைகள் ஆகியவை நீங்கி, மனதிற்கு விருப்பமான திருமண வாழ்க்கை அமையும்.
சிவ அபிஷேகத்திற்கு தேவையான பொருட்களையோ அல்லது சிவ பூஜைக்கு தேவையான மலர்கள் ஆகியவற்றையோ வாங்கிக் கொடுக்கலாம். அன்று 2 பேருக்காவது அன்னதானம் செய்வது சிறந்த பலனை தரும். ஜாதகத்தில் உள்ள கிரகங்களாலோ அல்லது வேறு ஏதாவது காரணத்தாலோ திருமணம் தள்ளிப் போகிறது என்றாலும் அன்னதானம் செய்து, சிவனை வழிபட்டால் அனைத்து தோஷங்களும், பாவங்களும் நிவர்த்தி ஆகி மகிழ்வான வாழ்க்கை அமையும்.
- இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் அதிக நன்மை கிடைக்கும் என்ற ஐதீகத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.
- இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.
நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் மகா சிவராத்திரி தினத்தில் 12 சிவாலயங்களுக்கும் பக்தர்கள் ஓடிச்சென்று தரிசிக்கும் முறை குமரி மாவட்டத்தில் மட்டுமே உள்ளது. பாரம்பரியமாக நடக்கும் இந்த நிகழ்வு வரலாற்று சிறப்புமிக்கதாகும். சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி தினத்தில் மாலை அணிந்து விரதம் தொடங்குவார்கள்.
விரத நாளில் தீயினால் வேகவைக்கும் அனைத்து உணவுகளையும் தவிர்த்து விரதம் இருப்பார்கள். குறிப்பாக நுங்கு, இளநீர், பதநீர், பழங்கள் சாப்பிடுவது வழக்கம். அதுமட்டுமின்றி விரத நாட்களில் காலை, மாலை நேரங்களில் சிவாலயத்தின் அருகில் உள்ள நீர்நிலைகளில் நீராடி விட்டு ஈரத்துணியுடன் சிவபெருமானை தரிசிப்பார்கள். இந்த ஆண்டுக்கான சிவராத்திரி விழா நாளை (15-ந்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையடுத்து இன்று (14-ந்தேதி) பக்தர்கள் சிவாலய ஓட்டத்தை தொடங்கினார்கள்.

முஞ்சிறையில் உள்ள திருமலை மகாதேவர் ஆலயத்தில் இருந்து பக்தர்கள் ஓட்டத்தை தொடங்கினர். இதனால் காலை முதலே கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. காவி உடை அணிந்து கோவிந்தா... கோபாலா... என்ற பக்தி கோஷத்துடன் கையில் விசிறி ஏந்தி சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு மோர், குளிர்பானங்கள், பழவகைகள், அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று சனிக்கிழமை பிரதோஷம் என்பதால் அதிக நன்மை கிடைக்கும் என்ற ஐதீகத்தில் பிற மாநிலங்களில் இருந்து பக்தர்கள் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்றனர்.
சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்கள் திக்குறிச்சி மகாதேவர் கோவிலில் உள்ள குளத்தில் பக்தர்கள் புனித நீராடி விட்டு சாமி தரிசனம் செய்தனர். திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகா தேவர் கோவிலில் தரிசனம் செய்து விட்டு சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து பக்தர்கள் நாளை (15-ந்தேதி) மாலை நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலை வந்தடைவார்கள்.
அங்கு இரவு முழுவதும் தூங்கா நோன்பு இருந்து ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர். சிவாலய ஓட்டத்தில் குமரி மாவட்டம் மட்டுமின்றி கேரளா மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு சிவாலயங்களில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
- பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது.
- காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது.
நாம் எந்தவொரு செயலை தொடங்கும் முன்பும் முழுமுதற் கடவுளான விநாயகரை வணங்குவோம். இதற்கு காரணம், விநாயகரை வணங்கி தொடங்கும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கைதான்.
அவ்வாறு மன்னன் கோவில் கட்ட பாதுகாவலாக இருந்து வெற்றிகரமாக கட்டி முடிக்க அருள்புரிந்தவர் தான் தலையாட்டி விநாயகர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் என்ற ஊரில் அமைந்துள்ளது, தலையாட்டி விநாயகர் ஆலயம். முற்காலத்தில் இப்பகுதியில் வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மலையாறு, சிற்றாறு என பல நதிகள் இருந்துள்ளன. இதன் காரணமாகவே இவ்வூர், 'ஆற்றூர்' என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் 'ஆத்தூர்' என்று மருவியுள்ளது.
முன்னொரு காலத்தில் வசிஷ்ட முனிவர், சிவ தல யாத்திரை சென்றார். அவ்வாறு வசிஷ்ட நதிக்கரைக்கு வந்த வசிஷ்ட முனிவர், அங்கு பல இடங்களில் தவம் இயற்றினார். மேலும் அவர் தவம் இயற்றிய இடங்களில் எல்லாம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அதன்படி இத்தலம் வந்து தவம் இயற்றிய வசிஷ்ட முனிவர், திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவதை போல, இங்கும் ஜோதி வடிவில் சிவபெருமானின் தரிசனத்தை காண விரும்பினார்.
அவ்வாறு, அவர் பிரதிஷ்டை செய்த சிவலிங்கத்தில் சிவன் ஜோதி வடிவில் அமர்ந்ததாக கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்த சிவலிங்கம் மண்ணில் புதைந்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இப்பகுதியை கெட்டி முதலி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். மிகுந்த சிவ பக்தனாக இருந்த மன்னன், தினமும் சிவபெருமானை வணங்கிய பிறகே தனது அன்றாட வேலைகளை செய்வான். ஒரு நாள் அவன் கனவில் தோன்றிய சிவபெருமான், "நான் இத்தலத்தில் மண்ணிற்கு அடியில் புதைந்து இருக்கிறேன். எனக்கு கோவில் எழுப்பி வழிபடு" என்று கூறினார். அதன்படி இவ்விடத்தை தோண்டும் போது, அதில் ஒரு சிவலிங்கமும், அதன் அருகில் ஒரு புதையலும் இருந்தது. அந்த புதையல் பணத்தை வைத்தே இத்தலத்தை கட்டினான். அவ்வாறு இக்கோவிலை கட்டும் முன்பு, இத்தலத்தில் உள்ள விநாயகரிடம் உத்தரவு வாங்கிய பிறகே மன்னன் கோவில் கட்டும் பணியை தொடங்கி உள்ளான். மேலும் இந்த விநாயகரே கோவில் திருப்பணிக்கு பாதுகாவலராகவும் இருந்தார். கோவில் பணிகள் முடிந்த பிறகு, மன்னன் இந்த விநாயகரிடம் வந்து, "கோவில் பணிகளை சிறப்பாக முடித்திருக்கிறேனா" என்று கேட்டான். அதற்கு விநாயகர், 'நன்றாக கட்டி இருக்கிறாய்' என்றும் சொல்லும் விதமாக, 'ஆம்' என்று தனது தலையை ஆட்டினாராம். அதனால் தான் இத்தல விநாயகர், 'தலையாட்டி விநாயகர்' என்று அழைக்கப்படுகிறார்.
இந்த ஆலயத்தில் எழுந்தருளி உள்ள தலையாட்டி விநாயகர், தனது தலையை சற்று இடதுப்புறமாக சாய்த்தபடி அருள்பாலிக்கிறார். இவர் 'காவல் கணபதி' என்றும் அழைக்கப்படுகிறார். பக்தர்கள், இவருக்கு வஸ்திரங்கள் சாற்றியும், பூஜைகள் செய்தும் வழிபடுகிறார்கள். எந்தவொரு புதிய காரியங்கள் தொடங்கும் முன்பும், இத்தல விநாயகரை வணங்கி வேண்டிக் கொண்டால், அச்செயல் வெற்றி அடையும் வரை நம்முடன் இருந்து சிறப்பாக செய்து முடித்து தருவார் என்று பக்தர்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.
திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும், கிரக தோஷங்கள் விலகவும் இங்கு வந்து வழிபட்டு செல்கிறார்கள். இங்கு ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கோவில், காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
சேலம் மாவட்டத்தில் ஆத்தூர் பஸ் நிலையத்துக்கு அருகிலேயே தலையாட்டி விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது.






