search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahashivaratri"

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.
    • மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் பூண்டி அருகே வெள்ளியங்கிரி மலை உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான இங்குள்ள 7 மலைகளை கடந்து மலை உச்சியில் இருக்கும் சுயம்புலிங்கத்தை வழிபடுவதை பக்தர்கள் வழக்கமாக கொண்டு வருகிறார்கள்.

    இங்கு மலையேறுவதற்காக தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். மலையேற சிரமமாக இருக்கும் என்பதால் மலையேறுபவர்கள் கையில் கம்பை ஊன்றியபடியே செல்வார்கள். ஒவ்வொரு ஆண்டும் மகாசிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை பக்தர்கள் மலையேற வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது.

    இவ்வாறு வெள்ளியங்கிரி மலையேறும் போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரு மாதத்தில் மட்டும் 5 பக்தர்கள் பலியானார்கள். ஏற்கனவே அவர்கள் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டு இருந்து மலையேறும் போது உடல்நிலை ஒத்துக் கொள்ளாமல் அவர்கள் இறந்தது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து வனத்துறையினர் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து மலையேற அனுமதித்து வருகிறார்கள். இதயநோய், மூச்சுத்திணறல், உடல் பருமன், நீரிழிவு நோய், வயது முதிர்ந்தவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள், கொரோனாவில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் வெள்ளியங்கிரி மலையேற வேண்டாம் என கேட்டுக் கொண்டனர். இதற்காக மலையடிவாரத்தில் உள்ள டாக்டர்கள் குழுவினர், பக்தர்களை பரிசோதித்து மலையேற அனுமதித்து வந்தனர்.

    இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையேறிய மேலும் ஒரு பக்தர் மரணம் அடைந்தார். சென்னை முகப்பேரைச் சேர்ந்தவர் ரகுராம் (வயது 50). தனியார் வேலைவாய்ப்பு மையம் நடத்தி வந்தார். தீவிர ஆன்மீக ஈடுபாடு கொண்டவர்.

    இவரும், அவரது பகுதியில் வசிக்கும் 15 பேரும் சென்னையில் இருந்து ஒரு வேன் மூலம் வெள்ளியங்கிரி மலையேறுவதற்காக நேற்று இரவு கோவை மாவட்டம் வந்தனர். பின்னர் அவர்கள் மலையேற தொடங்கினர். 4 மலைகளை கடந்து 5-வது மலைக்கு சென்ற நிலையில் ரகுராமுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அந்த இடத்திலேயே அவர் மயங்கி விழுந்தார்.

    இதனால் அவருடன் சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்குள்ள மலைவாழ் மக்களின் உதவியுடன் ரகுராமை மீட்டு அடிவாரத்துக்கு கொண்டு வந்தனர். முகாமில் இருந்த மருத்துவர்கள், ரகுராமை சோதித்து பார்த்து அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரகுராமின் உடல் பிரேத பரிசோதனை க்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. ஏற்கனவே 5 பேர் இறந்தநிலையில் நேற்று ரகுராமும் மரணம் அடைந்ததால் சாவு எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.

    • உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம்.
    • சிவாலயங்களுக்குச் சென்று சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.

    சிவனின் ராத்திரி= சிவராத்திரி, சிவனுக்கான இரவு, ஆகவே, அன்று (8-ந்தேதி) சூரியன் மறையும் நேரம் முதல் மறுநாள் (9-ந்தேதி) சூரிய உதயம் வரையுள்ள காலமே மகா சிவராத்திரி காலம் எனப்படும். மகா சிவராத்திரி தினத்தன்று கோடி சூர்ய பிரகாசத்துடன் பரமேஸ்வரன் லிங்க வடிவில் மகாலிங்கமாக முதன் முதலில் தோன்றினார் என்கிறது நாரத புராணம்.

    * விண்ணும் மண்ணும் நிறைந்து ஜோதி ஒளிப்பிழம்பாக நின்ற சிவ பெருமானின் அடிமுடி காண முடியாமல் பிரம்மன் திகைத்த நாள்

    * சிவபஞ்சாட்சர மகாமந்திர ஜபத்தை முறையாக குருவின் மூலம் உபதேசம் செய்து கொள்ள- சிவபஞ்சாட்சர மந்திரத்தை ஜபம் ஹோமம் செய்து சித்தி செய்ய மகா சிவராத்திரி தினம் சிறந்த நாள். மனிதராகப் பிறந்த அனைவரும் வருகிற சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க வேண்டும்.

    விரதம் என்பது 1. உபவாசம், (சாப்பிடாது இருத்தல்) 2. பூஜை, 3. ஜாகரணம் (தூங்காது இருத்தல்) ஆகிய மூன்று செயல்களுடன் கூடியது.

    சிவராத்திரி அன்று உணவு உட்கொள்ளாமல் (சக்தியற்றவர்கள்) பால், பழம் முதலியவற்றை மட்டும் சாப்பிட்டு விட்டு) உபவாசம் இருப்பதாலும், முயற்சியுடன் பகலிலும், இரவிலும் துாங்காமல் கண்விழிப்பதாலும் சிவலிங்கத்தை பூஜை செய்வதாலும் அழிவற்ற, குறைவற்ற அனைத்து போகங்களையும் அனுபவிப்பதுடன் இறுதியில் சிவலோகமும் கிட்டும் என்பது ஐதீகம். ஆகவே வருகிற 8-ந் தேதி இயன்றவர்கள் உபவாசம் இருந்து இரவு முழுவதும் சிவ பூஜை செய்யலாம். அதன்பிறகு அருகில் உள்ள சிவாலயங்களுக்குச் சென்ற அங்கு நடைபெறும் சிவபூஜையை தரிசனம் செய்யலாம்.

    அன்று இரவு முழுவதும் தனது வீட்டு பூஜையறையில் அல்லது அருகில் உள்ள சிவன் கோவிலில் மண்ணாலான அகல் விளக்கில் பஞ்சுத் திரி போட்டு நெய்தீபம் (அகண்ட தீபமாக) ஏற்றி வைக்கலாம்.

    சிவராத்திரியில் செய்ய வேண்டிய வழிபாடு பற்றி லிங்க புராணத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    1. சிவபெருமானைத் தீர்த்தவாரி செய்ய வேண்டும்.

    2. மனம் மிகுந்த மலரைச் சிவபெருமானின் உச்சி முதல் கால் வரை தூவ வேண்டும். தூவும் பொழுது நமச்சிவாய என்னும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓத வேண்டும்.

    3. ஓதிக்கொண்டே வலம் வர வேண்டும். வணக்கம் செலுத்த வேண்டும்.

    4.சிவாலயங்களை துடைப்பத்தால் பெருக்கித் தூய்மை செய்து கோலமிடுதல் வேண்டும்.

    5. நீர், பால், நெய் முதலியவற்றால் சிவபெருமானை அபிஷேகம் செய்ய வேண்டும்.

    6. சிவபெருமானுக்கு நல்ல தூய்மையான ஆடையை அணிவிக்க வேண்டும்.

    7. எருக்க மலர் மாலைகளை பெருமாள் தலையில் வட்டமாக அணிய வேண்டும்.

    8. சிவ தண்டமான கட்டங்களும், கபாலமும் ஏந்தி அவன் புகழைப் பாட வேண்டும்.

    9. அஷ்டங்க நமஸ்காரம் ஆண்கள் செய்ய வேண்டும். பெண்கள் ஐந்தகங்க நமஸ்காரம் செய்ய வேண்டும்.

    10. விபூதி அணிந்து சிவனைப் போற்ற வேண்டும்.

    இவ்வாறு லிங்க புராணம் கூறுகிறது.

    • பழம்பெருமை வாய்ந்தது கோப்பினேஷ்வர் திருக்கோவில்.
    • 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கம்.

    கோவில் தோற்றம்

    மும்பையில் இருந்து சுமார் 30 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள நகரம், தானே. மும்பையின் நன்கு வளர்ச்சி அடைந்த புறநகர் பகுதிகளில் ஒன்றாகவும் இந்த நகரம் திகழ்கிறது. இங்கே சுற்றிலும் கடைகளும், காய்கறி மண்டிகளும் சூழ்ந்த ஒரு நெருக்கடியான வீதியில் அமைந்திருக்கிறது, பழம்பெருமை வாய்ந்த கோப்பினேஷ்வர் திருக்கோவில்.

    கி.பி. 810-ம் ஆண்டு முதல் 1240-ம் ஆண்டு வரை, தானே பகுதியை ஆட்சி செய்த சில்ஹாரா வம்ச அரசர்கள், இந்தக் கோவிலை கட்டியதாக சொல்லப்படுகிறது. இந்த வம்சத்தைச் சேர்ந்த அரசர்கள், சிறந்த சிவ பக்தர்களாகவும் இருந்துள்ளனர். கி.பி. 1760-ம் ஆண்டு மராட்டிய மன்னர் சர் சுபேதார் ராமோஜி மகாதேவ் என்பவர், இந்த ஆலயத்தை விரிவாக்கம் செய்து கட்டியிருக்கிறார். அதன்பின்னர் 1879-ம் ஆண்டு பொதுமக்களால் இந்த ஆலயம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

    சந்தை வீதியில் நின்று பார்த்தால் இந்த ஆலயத்தை சுலபத்தில் கண்டுபிடிக்க முடியாது. ஏனெனில் ஆலயத்தின் நுழைவு வாசல், மிகவும் குறுகலான தலைவாசல் ஆகியவற்றை எளிதில் கண்டுபிடிக்க முடியாத வகையில் உள்ளது. சாதாரணமாக அந்த வீதியில் செல்லும்போது, அதுவும் ஒரு கடை என்பது போல் கடந்து சென்றுவிட வாய்ப்பிருக்கிறது. நன்றாக உற்று நோக்கும் போதுதான், அது ஒரு ஆலயம் என்பதையே நாம் உணர முடியும்.

    ஆனால் நுழைவுவாசலைக் கடந்து உள்ளே சென்றால், அந்த ஆலயத்தின் பிரமாண்டமே வேறு விதமாக நம்மை வியக்க வைக்கும். அந்த அளவுக்கு பரந்து விரிந்து காணப்படும் ஆலயங்களில் ஒன்றாக இந்த கோப்பினேஷ்வர் கோவில் திகழ்கிறது.

    கோவிலுக்குள் நுழைந்ததும் மிகப்பெரிய நந்தி நம்மை வரவேற்கிறது. அதை வணங்கிச் சென்றால், மகா மண்டபத்தை அடையலாம். ஆலயத்தில் நடைபெறும் அனைத்து பண்டிகைகளின் போதும், இந்த மண்டபத்தில்தான் சொற்பொழிகளும், நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.

    இந்த மண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள சில படிகளை இறங்கிச் சென்றால், இத்தல இறைவனான கோப்பினேஷ்வர், சிவலிங்க வடிவில் காட்சியளிக்கிறார். இந்த மூர்த்தி 5 அடி உயரம், 5 அடி சுற்றளவு கொண்ட மிகப்பெரிய லிங்கமாகும். கோவில் வளாகத்தை ஒட்டி மசுண்டா ஏரி இருக்கிறது.

    இந்த ஏரியில் இருந்து தானாகவே மேல் எழும்பி வந்த சிவலிங்கத்தைத்தான், இத்தல கருவறையில் சில்ஹாரா வம்ச அரசர்கள் பிரதிஷ்டை செய்ததாக தல வரலாறு கூறுகிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்த சிவன் கோவில்களில் உள்ள லிங்கங்களில், இத்தல லிங்கமே பெரியது என்கிறார்கள்.

    இந்த கோவில் வளாகத்தில் சிவன் சன்னிதி தவிர, இன்னும் பல சிறுசிறு சன்னிதிகளும் இருக்கின்றன. அவற்றில் காளிகாதேவி, ராமர், சீதளாதேவி, உத்தரேஷ்வர் (காசி விசுவநாதர்), காயத்ரி தேவி, மாருதி, பிரம்மதேவர், தத்தாத்ரேயா் ஆகியோர் தனித்தனியாக சன்னிதி கொண்டுள்ளனர்.

    இந்த ஆலயத்தில் `ஷ்ரவண சோம்வார்' என்று அழைக்கப்படும் ஆடி மாத திங்கட்கிழமைகள், அனுமன் ஜெயந்தி, ராமநவமி போன்ற பண்டிகைகள் விசேஷ பூஜைகளுடன் கொண்டாடப்படுகின்றன.

     மகா சிவராத்திரி விழாதான் இங்கு நடைபெறும் விழாக்களில் வெகு விமரிசையாக நடைபெறும் முக்கியத்துவம் வாய்ந்த விழாவாகும். அந்த தினத்தில் கோவில் வெகு அழகாக அலங்கரிக்கப்படும். மகாசிவராத்திரி தினத்தில், தானே நகரமே விழாக்கோலம் பூண்டு, தங்களின் காவல் தெய்வமான கோப்பினேஷ்வரை வழிபட்டு நிற்கிறது.

    இந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு, பகல் 12 மணி வரை பக்தர்கள் தங்களின் கைகளாலேயே பால் அபிஷேகம் செய்யலாம். அதோடு வில்வ இலைகளும், மலர்களும் தூவி வழிபடலாம். 12 மணிக்கு மேல் பால் அபிஷேகம் செய்ய அனுமதி கிடையாது. மனதில் எந்தக் கவலை இருந்தாலும், இத்தல இறைவனை வழிபட்டால் அதில் இருந்து விடுபடலாம் என்பது பக்கதர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

    • மகாசிவராத்திரியை முன்னிட்டு திருஉத்தரகோசமங்கையில் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி நடந்தது.
    • கோவில்களில் விடிய, விடிய பக்தர்கள் வழிபாடு செய்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே உள்ள திருஉத்திரகோச மங்கை மங்களநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் ஸ்ரீபரதகலா அகாடமி இணைந்து 5-வது ஆண்டு கலை விழா நாட்டியாஞ்சலி நடந்தது.

    சிவராத்திரி நாட்டி யாஞ்சலி கலை நிகழ்ச்சி களை ராமநாதபுரம் சமஸ் தானம் தேவஸ்தான பரம்பரை அறங்காவலா் ஆா்.பி.கே.ராஜேஸ்வரி நாச்சியாா் தொடங்கி வைத்தார். இளைய மன்னர் நாகேந்திர சேதுபதி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    நேற்று மாலை முதல் இன்று அதிகாலை வரை நாட்டியாஞ்சலி நடந்தது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த கலைஞா்கள் பரதநாட்டியம், நாதசங்கமம், குச்சுப்புடி நடனம், சிவபூஜை உள்ளிட்ட பொருள்களில் பரதநாட்டியம் ஆடினா். பக்தர்கள் விடிய,விடிய விழித்திருந்து கலை நிகழ்ச்சிகளை பார்த்து ரசித்தனர். சிவராத்திரியை முன்னிட்டு சுவாமிக்கு விடிய விடிய பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு வாசனைப் பொருள்களைக் கொண்டு மூலவருக்கு அபிஷேகங்கள், சிறப்பு பூஜைகளும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் திவான் பழனிவேல் பாண்டியன் செய்திருந்தார்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட கோவில்களில் விடிய, விடிய மகா சிவராத்திரி விழா பூஜைகள் நடந்தது. மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து, வாகனங்களில் குலதெய்வ வழிபாட்டுக்காக ராமநாதபுரம் கிராமப் பகுதிகளுக்கு பக்தர்கள் வந்தனர். இதனால் கிராம பகுதிகளில் சிவராத்திரி விழா களைகட்டியது.

    • ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் மகாசிவராத்திரி விழா கொடியேற்றப்பட்டது.
    • புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சாமி கோவிலில் ஆண்டு தோறும் மாசி மகாசிவராத்திரி விழா விமரிசை யாக நடைபெறும்.இந்த ஆண்டுக்கான விழா நாளை (11-ந்தேதி) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நாளை அதிகாலையில் 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு அதிகாலை 5 மணி முதல் 6 மணிவரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும். அதன் பின்னர் சிறப்பு பூஜைகள், வழிபாடுகள் அபிஷேகங்கள் ராமநாதசாமிக்கு நடை பெறும். பின்னர் காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் ராமநாதசாமி சன்னதிக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள தங்கமுலாம் பூசப்பட்ட கொடி மரத்தில் கொடி யேற்றப்படும்.

    12 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் மாசி மகா சிவராத்திரியில் தினசரி ராமநாதசாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதணை வழிபாடுகள் நடைபெறும்.

    மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு வருகிற 13-ந்தேதி ராமநாதசாமி-பர்வதவர்த்தினி அம்மன் உள்பட பஞ்சமூர்த்திகள் கோவிலின் உபகோவிலான கெந்தமாதன பர்வத வர்த்தினி அமைந்துள்ள மண்டகப் படியில் எழுந்த ருளும் நிகழ்ச்சி நடைபெறும்.

    மகாசிவராத்திரியன்று (18-ந்தேதி) இரவு வெள்ளி ரதம் புறப்பாடும், 19-ந் தேதி தேரோட்டமும் நடை பெறும்.

    20-ந் தேதி அமாவாசை யை முன்னிட்டு ராமநாத சாமி-பர்வத வர்த்தினி அம்மன் உள்பட பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து புறப்படாகி காசிக்கு நிகராக கருதப்படும் புனித தீர்த்தமான அக்னி தீர்த்தக் கடலுக்கு சென்று தீர்த்த வாரி உற்சவம் நடைபெறும்.

    ×