search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chaturagiri"

    • பவுர்ணமியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்.
    • இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும் பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் வருகிற 22-ந்தேதி பங்குனி மாத பிரதோஷத்தை முன்னிட்டு அன்று மாலை 4.30 மணியிலிருந்து ஆறு மணிக்குள் சுந்தர மகாலிங்கம் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. பின்னர் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெறும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    24-ந்தேதி பங்குனி மாத பவுர்ணமி அன்று விடுமுறை நாளாக இருப்பதால் சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருவார்கள். அதோடு பங்குனி மாத பவுர்ணமி முன்னிட்டு சுந்தர மகாலிங்க சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களையும் பக்தர்கள் செலுத்த உள்ளனர். வருகிற 25-ந்தேதியுடன் நான்கு நாட்கள் அனுமதி முடிவடைய உள்ளது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்டவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்ப்பதோடு, ஓடைகளில் இறங்கி குளிக்கக்கூடாது, இரவில் பக்தர்கள் தங்குவதற்கு அனுமதி கிடையாது என்றும் வனத்துறையினர் அறிவித் துள்ளனர்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தரமகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்துள்ளனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • 21 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி மகாலிங்கம் கோவில் உள்ளது. இங்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியன்று சதுரகிரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி வருகிற 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் ஆயிரக் கணக்கானோர் திரளுவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    மகாசிவராத்திரி, அமாவாசையை முன்னிட்டு வருகிற 8-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. 8-ந் தேதி சிவராத்திரி, பிரதோஷத்தை முன்னிட்டு சுந்தரமகாலிங்க சுவாமிக்கு 21 வகையான அபிஷே கங்கள், சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. அன்று இரவு விடிய விடிய பூஜைகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

     விடுமுறை தினம், சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள் அதிகளவில் வருவார்கள் என்பதால் சதுரகிரியில் முன்னேற்பாடு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. பக்தர்களுக்கு தேவையான குடிநீர், பஸ் உள்ளிட்ட வசதிகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

    மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லி புத்தூர் உள்ளிட்ட பகுதி களில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. சதுரகிரிக்கு 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் வருவதை தவிர்க்க வேண்டும்.

    மலையேறு பவர்கள் ஓடைகளில் இறங்கி குளிக்க கூடாது. சளி, இருமல், காய்ச்சல் உள்ளவர்கள் கோவிலுக்கு வருவதை தவிர்க்க வேண்டும். காலை 6 மணி முதல் 12 மணி வரை பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள்.

    பாலித்தீன் மற்றும் எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி இல்லை உள்ளிட்ட கட்டுபாடுகளை வனத்துறை விதித்துள்ளது. சதுரகிரியில் மகா சிவராத்திரி, அமாவாசை பூஜை ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி, பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பவுர்ணமியை யொட்டி சதுரகிரியில் பக்தர்கள் குவிந்தனர்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்கள், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதத்திற்கு எட்டு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    மாசி மாத பவுர்ணமியை முன்னிட்டு கடந்த 21-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 3 நாட்களாக பக்தர்கள் சதுரகிரியில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

     நாளை பவுர்ணமியை முன்னிட்டு சதுரகிரியில் இன்று திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.35 மணிக்கு வனத்துறையினர். சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வத்து டன் மலையேறி சாமி தரிசனம் செய்தனர்.

    சென்னை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து வாக னங்களில் ஏராளமானோர் வந்திருந்தனர்.

    இன்று மாலை சுந்தர மகாலிங்க சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், உள்ளிட்ட 21 வகையான அபிஷேகங்கள் நடைபெறுகிறது. அபிஷேகம் முடிந்ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற உள்ளது.

    • மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    குறிப்பாக தை, ஆடி மாத அமாவாசை, சிவராத்திரி தினத்தன்று பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரிக்கு வந்து சாமி தரிசனம் செய்வார்கள். வருகிற 9-ந்தேதி தை அமாவாசையை முன்னிட்டு இன்று முதல் வருகிற 10-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.

    அதன்படி பிரதோஷ நாளான இன்று (7-ந் தேதி) அதிகாலையிலேயே மலையேற அடிவார பகுதியான தாணிப்பாறை பகுதியில் சென்னை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட் டங்களை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    காலை 6.40 மணிக்கு வனத்துறையினரின் தீவிர சோதனைக்கு பின்னர் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பெண்கள் உள்பட ஏராளமானோர் ஆர்வத்துடன் மலையேறி சென்றனர்.

    மலைப்பாதையில் உள்ள சங்கிலி ஓடை, மாங்கனி ஓடை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    தை மாத அமாவாசையை முன்னிட்டு இந்த முறை வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப் பட்டிருந்தது. மலை அடிவாரம் மற்றும் கோவில் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மலையேறி சென்ற பக்தர்கள் சுந்தர மகாலிங்கம் கோவிலில் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். ஏராளமானோர் முடி காணிக்கை செய்தனர்.

    பிரதோஷத்தை முன்னிட்டு இன்று மாலை சுந்தர மகாலிங்கத்தக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்களும், சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளன.

    • சதுரகிரி மலையில் சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமி மற்றும் பிரதோஷ நாட்கள் என மாதத்திற்கு 8 நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகி றார்கள். கடந்த 23-ந்தேதி முதல் நாளை வரை நான்கு நாட்களுக்கு பிரதோஷம் மற்றும் தை பவுர்ணமி, தைப்பூசத்தையொட்டி பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது.

    அதன்படி தைப்பூசத்தை முன்னிட்டு இன்று அதி காலை 2 மணி முதல் சென்னை, கோவை, நெல்லை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட பல்வேறு தொலை தூர ஊர்களில் இருந்து பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை வனத்துறை கேட் முன்பு குவிந்தனர்.

    இதையடுத்து இன்று காலை 6.15 மணியளவில் வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். கடும் பனியையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றனர். கோவிலுக்கு செல்லும் வழியில் உள்ள தாணிப்பாறை வழுக்கல் அருவியில் ஆனந்த குளியலிட்டனர்.

    இன்று தை பௌர்ணமி தைப்பூசத்தையொட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றது. அபிஷேகம் முடிந் ததும் சாமி அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சிய ளித்தார். பக்தர்கள் பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    • தொடர் மழையால் ராஜ பாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்க ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே மலைப்பாதையில் சிக்கியிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே இறக்கினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் நகர் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    இன்று காலையில் தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தூர், சிவகாசி, இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது.

    வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெம்பக் கோட்டை நீர்த்தேக்க அணை இன்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் வட்டாட்சியர் பாண்டீஸ்வரி முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இருக்கன்குடி நீர்த்தேக்கத்தை அடையும். இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பேயனாறு, அய்யனார் ஆறு மற்றும் காட்டாற்றுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ராஜ பாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்க ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. வத்திராயிருப்பு பகுதியிலும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிளவக்கல் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து கணிசமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள மரிச்சு கட்டு பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கூமாபட்டி, முதலியார்பட்டி, கொளூர்பட்டி, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்தன. மின்தடை ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகின்றன. 2 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள 80 சதவீத நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் பெய்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் வயல்களில் புகுந்து நெற் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மலை ஏறினர். மாலையில் சதுரகிரி மலை பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் பக்தர்கள் அவசர அவசரமாக மலையில் இருந்து இறங்கினர். ஆனாலும் கனமழையால் மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடை, எலும்போடை, சங்கிலிபாறை, பிளாவடி கருப்பசாமி பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதையடுத்து வனத்துறை யினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே மலைப்பாதையில் சிக்கியிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே இறக்கினர்.

    தொடர் மழையால் காட்டாற்றுகளில் வெள்ளம் அதிகரிக்கவே சதுரகிரி மலைக்கோவிலில் இருந்த 200 பக்தர்கள் கீழே இறங்க பக்தர்கள் அனுமதி மறுத்தனர். அவர்கள் கோவிலிலேயே தங்க வைக்கப் பட்டனர். இன்று காலை வரை மழை நிற்காததால் பக்தர்கள் கோவிலிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடை அருகே சிக்கியிருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை இன்று காலை நிலை அலுவலர் பால நாகராஜ், வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர் அபிஷேக்குமார் தலைமையிலான வீரர்கள் கயிறு கட்டி மீட்டு அடிவாரத்திற்கு பத்திரமாக கொண்டு வந்தனர். மழை நின்ற பின்பு சதுரகிரி மலையில் உள்ள பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-149.50, ராஜபாளையம்-136, காரியாபட்டி-81, ஸ்ரீவில்லிபுத்தூர்-153.90, விருதுநகர்-126.80, சாத்தூர்-203, சிவகாசி-171, பிளவக்கல்-142, வத்திராயிருப்பு-144.80, கோவிலாங்குளம்-167.40, வெம்பக்கோட்டை-180, அருப்புக்கோட்டை-124, மொத்த மழை அளவு-1779.40 மி.மீ. ஆகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மானாமதுரை, இளையாங்குடி பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    • வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள்ளன.
    • ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    மதுரை:

    விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சடையாண்டி, மதுரை ஐகோர்ட்டில் தாக் கல் செய்த மனுவில் கூறியி ருந்ததாவது:-

    சதுரகிரி சுந்தர மகாலிங் கம் சுவாமி மலையில் மேல் உள்ள ஆனந்த வள்ளியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடை பெறும். நவராத்திரி திரு விழாவில் பக்தர்கள் பங்கேற்க மூன்று நாட்கள் அனுமதி வழங்க விருதுநகர் கலெக்டர், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறையிடம் அனுமதி கோரி மனு கொடுக்கபட்டது. ஆனால் அனுமதி மறுத்துவிட்டனர். எனவே மூன்று நாள் இரவு தங்கி நவராத்திரி விழா கொண்டாட அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.

    இந்த மனுவை நீதிபதி புகழேந்தி நேற்று விசாரித்து, அங்கு ஒருநாள் மட்டும் பக்தர்கள் தங்க அனுமதிக்கலாமா? என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை மற்றும் வனத்துறை சார்பாக பதில் அளிக்க உத்தரவிட்டு இருந்தார்.

    இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலர் திலிப்குமார் ஆஜரானார்.

    வனத்துறை சார்பில் ஆஜ ரான வக்கீல், சாத்தூர் மலை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக உள்ளது. புலிகள் சரணாலய பகுதியாகவும் உள்ளதால் பக்தர்களை அனுமதிக்க முடியாது. கடந்த காலங்களில் திருவிழா நேரத்தில் பக்தர்களை அனுமதித்த போது பக்தர்கள் மாற்றுவழியில் வனத்திற்குள் நுழைந்து உணவு சமைத்ததால் வனத்தில் தீ பற்றிய சம்பவம் ஏற்பட்டு வன விலங்குகளுக்கும், மரங்களுக்கும் மிகுந்த பாதிப்பு ஏற்பட்டது.

    குறைந்த அளவில் குறிப்பிட்ட நேரத்தில் பக்தர்களை அனுமதிப்பது என்பது இயலாதது. வனப்பகுதிக்குள் 100-க்கும் மேற்பட்ட சட்ட விரோத கோவில்கள் உள் ளன. சதுரகிரி மலைப்பகுதியில் மட்டும் 18 மடங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு உள்ளன. போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்குவது இல்லை என்று தெரிவித்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, பக்தர்கள் மற்றும் சாதுக்களின் உணவுர்களை புரிந்து கொண்டு ஒரு நாள் மட்டும் கோவிலுக்கு அனுமதி வழங்க முடியாதா? பக்தர்களை கோவிலில் தங்க அனுமதிக்க வேண்டாம், குறிப்பிட்ட நேரமாவது தரிசனத்திற்கு அனுமதிக்கலாமே? அத்துமீறி செல்பவர்களுக்கு அபராதமும் தண்டனையும் விதிக்கலாமே.

    வனத்துறைக்கு நிறைய பணிகள் இருக்கிறது என்பதை ஒத்துக்கொள்கிறேன். இருப்பினும் ஒரு 6 மணி நேரமாவது குறிப்பிட்ட அளவில் பக்தர்களை அனுமதிக்கலாமே? என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

    பின்னர், கோவிலுக்கு செல்ல அனுமதி வேண்டும் என கேட்பார்கள். அனுமதி கொடுத்தால் வனத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை மலை போல போட்டுவிட்டு செல்வார்கள். இது தான் வாடிக்கையாக நடக்கிறது.

    அன்னதானம் போடுகிறோம், திருவிழா நடத்துகிறோம் என கூறி பணத்தை வசூல் செய்து கோவில் பெயரை சொல்லி வனத்தை மொத்தமாக குப்பைக்காடாக மாற்றுகிறீர்கள் என்று நீதிபதி வேதனை தெரிவித்தார்.

    மேலும் சட்டவிரோத கட்டுமானங்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை வனப்பகுதியில் அனுமதித்தது எப்படி? என கேள்வி எழுப்பியதுடன், இந்த வழக்கில் மதுரை விருதுநகர் போலீஸ் சூப்பிரண்டு, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு, வழக்கை விசாரணையை நாளை ஒத்திவைத்தார்.

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
    • வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் புலிகள் காப்பக வனப்பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி மலையில் பிரசித்தி பெற்ற சுந்தர சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பஞ்ச பூதலிங்கத் தலம் என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு மகாளய அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ம் தேதி முதல் 4 நாட்கள் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தது. அதன்படி மகாளய அமாவாசை தினமான இன்று காலை 7 மணிக்கு பக்தர்கள் மலையேற வனத்துறையினர் அனுமதி அளித்தனர்.

    அதனை தொடர்ந்து சிறுவர்-சிறுமிகள், பெண்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் சதுரகிரி மலையேறி சுந்தர-சந்தன மகாலிங்கத்தை சாமி தரிசனம் செய்தனர். மலைப்பாதைகளில் உள்ள சங்கிலி பாறை, வழுக்குப் பாறை, பிலாவடி கருப்பசாமி கோவில் உள்ளிட்ட பகுதிகளில் வனத்துறையினர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குறுகலான மலை பகுதியில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் போலீசார் நியமிக்கப்பட்டு இருந்தனர்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன. மதுரை, திருமங்கலம், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.

    • சதுரகிரி செல்ல அனுமதிக்கக்கோரி வீடுகள் முன்பு கருப்புக்கொடி ஏற்றி கிராம மக்கள் ேபாராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • இந்த ஆண்டு இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் உள்ள ஸ்ரீ ஆனந்தவல்லி கிருஷ்ணன் கோவில் அருகே சுந்தரபாண்டியம் அம்மனுக்கு ஏழூர் சாலியர் சமூகம் சார்பில் ஆண்டு தோறும் நவராத்திரி திருவிழா கொண்டா டப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு நவராத்திரி விழா அக்டோபர் 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது.

    கொரோனா ஊரடங்கு தளர்வு காலத்திலும் பக்தர்கள் இரவில் கோயிலில் தங்கி வழிபாடு நடத்த கட்டுப்பாடுகளுடன் அனுமதி வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த இரு ஆண்டுகளாக நவராத்திரி திருவிழாவில் கடைசி மூன்று நாட்கள் மட்டுமே வழிபாடு நடத்த வனத்துறை அனுமதி வழங்கி வருகிறது. அதிலும் இந்த ஆண்டு இரவில் தங்கி வழிபாடு நடத்த வனத்துறை தடை விதித்துள்ளது. நவராத்திரி விழாவில் கோயிலில் இரவில் வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் வனத்துறைக்கும் இந்து சமய அறநிலையத்து றைக்கும் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் நவராத்திரி விழா குறித்த அமைதி கூட்டம் வத்திராயிருப்பு வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது. இதில் வட்டாட்சியர் முத்துமாரி வத்திராயிருப்பு வனச்சரகர் பிரபாகரன், சாப்டூர் வனச்சரகர் செல்லமணி, இந்து சமய அறநிலையத் துறை அலுவலர்கள் மற்றும் ஏழூர் சாலியர் சமூக பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இதில் நவராத்திரி திருவிழாவில் கடைசி 3 நாட்கள் மட்டும் குறிப்பிட்ட எண்ணிக்கை யிலான பக்தர்களை மலைக் கோயிலில் இரவில் தங்கி வழிபாடு நடத்த அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இரவில் தங்கி வழிபாடு நடத்துவதற்கு வனத்துறை அனுமதி மறுத்ததால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

    இதையடுத்து சுந்தர பாண்டியம் ஏழூர் சாலியர் சமுதாய பொது மக்கள் வனத்துறையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி திங்கள்கிழமை இரவு 10 மணி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • சதுரகிரிக்கு பக்தர்கள் 4 நாட்கள் செல்லலாம் என வனத்துறை அனுமதியளித்துள்ளது.
    • 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர்.

    விருதுநகர்

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சதுரகிரி சுந்தரமகாலிங்கம், சந்தன மகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் அமாவாசை, பவுர்ணமி, பிரதோஷத்தையொட்டி 4 நாட்களுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் புரட் டாசி மாத மகாளய அமாவாசை, பிரதோ ஷத்தை முன்னிட்டு வருகிற 12-ந்் தேதி முதல் 15-ந் தேதி வரை பக்தர்கள் மலை ஏறிச் சென்று சாமி தரிசனம் செய்ய வனத்துறை யினர் அனுமதி அளித்துள் ளனர்.

    ேமலும் சதுரகிரி கோவி லில் ஆனந்தவல்லி அம்ம னுக்கு ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரி திருவிழா 10 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான நவராத்திரி விழா வருகிற 15-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. விழாவின் முக்கியமான அம்பு விடும் நிகழ்ச்சி வருகிற 24-ந் தேதி நடக்கிறது.

    இந்த ஆண்டுக்கான நவராத்திரி திருவிழாவிற்கு, விழா தொடங்கும் நாளில் இருந்து பக்தர்கள் மலை யேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண் டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் வருகிற 22 முதல் 24-ந் தேதி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர்.

    சதுரகிரி மலைக்கு செல்லும் பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலை யேற அனுமதிக்கப்படு வார்கள். 16 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 60 வயதுக்கு உட்பட்டோர்கள் மட்டுமே மலையேறி செல்ல அனுமதிக்கப்படுவர். எளிதில் தீப்பற்றும் பொருட்கள் மற்றும் கத்தி போன்ற அபாயகரமான பொருட்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

    இரவில் கோவிலில் தங்க அனுமதி யில்லை. மழை வந்தால் பக்தர்கள் மலை ஏறி செல்ல அனுமதிக்கப் படாது உள்ளிட்ட கட்டுப் பாடுகளுடன் வனத்துறை அனுமதி அளித்துள்ளது.

    • சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது.
    • இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை.

    திருமங்கலம்:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரியில் பிரசித்தி பெற்ற சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் உள்ளது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இக்கோவில் அமைந்துள்ளதால் ஒவ்வொரு மாதமும் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் மலையேறி சென்று சாமிதரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி வருகிற 29-ந் தேதி புரட்டாசி பவுர்ணமியை முன்னிட்டு வருகிற 27-ந் தேதி (புதன்கிழமை) முதல் 30-ந்தேதி வரை பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    10 வயது உட்பட்டவர்களும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களும் மலையேற அனுமதி கிடையாது. மலை ஏறுவதற்கு காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படும். எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்களை கொண்டு செல்ல அனுமதி இல்லை. மலைப் பாதைகளில் உள்ள நீரோடையில் குளிக்க கூடாது.

    இரவில் மலைக்கோவிலில் தங்க அனுமதி இல்லை உள்பட பல்வேறு கட்டுப் பாடுகளை வனத்துறை அறிவித்துள்ளது. அனுமதி வழங்கப்பட்ட நாட்களில் மழை பெய்யும் அறிகுறிகள் தென்பட்டால் மலையேற பக்தர்களுக்கு தடை வைக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    • சதுரகிரி கோவிலில் ரூ.44 லட்சம் உண்டியல் வசூலானது.
    • ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு மாதத்தில் அமாவாசை மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த மாதம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை திண்டுக்கல் உதவி ஆணையர் சுரேஷ், பரம்பரை அறங்காவலர் ராஜா (எ) பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன், பேரையூர் சரக ஆய்வர் சடவர்ம பூபதி முன்னிலையில் சதுரகிரி மலை கோயிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி கடந்த இரு நாட்களாக நடைபெற்றது. அதில் ரூ.44 லட்சத்து 80 ஆயிரத்து 539 ரொக்கமும், 12 கிராம் 200 மில்லி தங்கம், 240 கிராம் 460 மில்லி வெள்ளியும் கிடைத்தது.

    உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் கோயில் பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    ×