என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahalaya Amavasai"

    • முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
    • அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள்.

    பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

    அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ரு வர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ரு வர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீக வர்க்கம் எனப்படுவார்கள்.

    இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.

    தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்று பலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும். அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.

    மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.

    மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிகிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

    தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும். தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிட கூடாது.

    முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.

    நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய பித்ருக்களுக்கு, மகாளயபட்சம், அமாவாசை போன்ற நாட்களில் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை வேண்டாம். சாஸ்திரப்படி சிரார்த்த காரியங்கள் செய்பவர் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் உணவு உண்ணக் கூடாது.

    தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்யும் முன்பாக அந்த மாதத்தில் மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலய நிகழ்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.

    பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளை செய்ய வேண்டும்.

    சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

    அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது.

    நமது பித்ருகளிடத்தில் சிரார்த்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிரார்த்தத்தில் வாங்கித் தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிரார்த்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும்.

    • கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர்.
    • பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

    ஆதி காலத்தில் அயோத்தி நாட்டை இசு வாகு குலத்தைச் சேர்ந்த சகரர் எனும் மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்கு சுமதி, கேசினி என்ற 2 மனைவிகள் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் நீண்ட நாட்களாக குழந்தை பிறக்கவில்லை. இதனால் சகரர் இறைவனை நோக்கி தவம் இருந்தார். அதன் பயனாக சுமதிக்கு 60 ஆயிரம் குழந்தைகள் பிறந்தனர். கேசினிக்கு ஒரே ஒரு குழந்தை பிறந்தது.

    இதைத் தொடர்ந்து அரசர் சகரர் நாடு பிடிக்கும் ஆசையில் அசுவமேத யாகம் நடத்தினார். அவர் அனுப்பிய குதிரை திடீரென மாயமாகி விட்டது.

    அந்த குதிரையைத் தேடி சுமதியின் 60 ஆயிரம் மகன்களும் புறப்பட்டுச் சென்றனர். ஒரு குகை அருகில் குதிரை நிற்பதைக் கண்டனர். அந்த குகை அருகில் தவம் செய்து கொண்டிருந்த கபில முனிவர்தான் குதிரையை கடத்தி வந்து விட்டதாக தவறாக புரிந்து கொண்டனர்.

    கபில முனிவரின் தவத்தை கலைத்து சண்டைக்கு சென்றனர். இதனால் வெகுண்ட கபிலமுனிவர், 60 ஆயிரம் பிள்ளைகளையும் சாம்பலாகப் போகும்படி சாபமிட்டார். உடனே சுமதியின் 60 ஆயிரம் பிள்ளைகளும் சாம்பலாகிப் போனார்கள்.

    கேசினியின் ஒரே ஒரு மகன் அரசுரிமைக்கு வந்தான். அவனது மகன் பகீரதன். பகீரதன் அரச பதவிக்கு வந்தபோது பல்வேறு தடைகள் ஏற்பட்டன. அப்போது அவனுக்கு தன் மூதாதையர்கள் 60 ஆயிரம் பேர் சாம்பலாகிப் போனதும், அவர்களுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் எதுவும் செய்யப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    உடனே பகீரதன் தன் முன்னோர்கள் 60 ஆயிரம் பேருக்கும் தர்ப்பணம் கொடுத்து பித்ரு வழிபாடு செய்ய முடிவு செய்தான். இதற்காக காடுகள், மலைகளில் அலைந்து திரிந்து முன்னோர்களின் எலும்பு சாம்பலை சேகரித்தார். ஆனால், பித்ரு வழிபாடு செய்வதற்கு பகீரதனுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை. உடனே அவன் சிவபெருமானை நோக்கி தண்ணீருக்காக தவம் இருந்தான்.

    அவனது தவ வலிமையை மெச்சிய சிவபெருமான், தன் தலையில் வைத்திருந்த கங்கையை பூமிக்குச் செல்ல உத்தரவிட்டார்.

    அதன்படி கங்கை நதியானது, பாகீரதி, அலக்நந்தா, ஜானவி, மந்தாகினி, பிண்டார், பதமா, பிரம்மாபுத்திரா ஆகிய 7 நதிகளாகப் பிரிந்து தரையில் ஓடியது.

    கங்கை நதி வங்கக் கடலில் கலக்கும் இடமான சாகர் எனுமிடத்தில் அமர்ந்து பகீரதன் பித்ரு பூஜைகளை செய்தான். புண்ணிய நதியான, புனித நதியான கங்கையின் தண்ணீரால் பகீரதனின் பித்ரு வழிபாடுகள் நிறைவு பெற்றன.

    அதன்பிறகு வட மாநிலம் முழுவதும் பாயும் வகையில் கங்கை மாறியது. பகீரதன் அன்று தொடங்கி வைத்த கங்கை நதியின் புனிதத் தன்மை இன்றும் தொடர்கிறது.

    கங்கை தண்ணீரை கைகளில் ஏந்தி முன்னோர்களை நினைத்து நீர் விடும்போது பித்ரு பூஜைக்கு தனி மகத்துவமே கிடைத்து விடுகிறது. எனவே வாழ்வில் ஒரு தடவையாவது கங்கையின் புனித தலங்களில் ஏதாவது ஒரு இடத்துக்கு சென்று பித்ரு பூஜை செய்ய வேண்டும்.

    பித்ரு பூஜைக்காகவே கங்கை பூமிக்கு வந்தது என்பதை என்றென்றும் நினைவில் கொள்ள வேண்டும்.

    • சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை
    • வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது.

    பிதுர்பூஜை மேற்கொள்வதற்கு தமிழகத்தில் பல இடங்கள் உள்ளன. கடற்கரையோரங்களில் ராமேஸ்வரம், தனுஷ்கோடி, முக்கடலும் கூடும் கன்னியாகுமரி கடற்கரை, பூம்புகார், வேதாரண்யத்திற்கு அருகில் உள்ள கோடியக்கரை ஆகியவை சிறந்தது என்பர். அதேபோல் காவேரிக் கரையோரத் திருத்தலங்களுக்கு அருகில் உள்ள நதிக்கரையும் போற்றப்படுகிறது.

    ஸ்ரீரங்கம் தென் பகுதியில் உள்ள அம்மா மண்டபம் படித் துறை, திருப்பராய்த்துறை, திரிவேணிசங்கமம், திருச்சி ஜீயர்புரத்திற்கு அருகிலுள்ள முக்கொம்பு, திருவையாறு புஷ்யபடித்துறை, மயிலாடுதுறை நந்திக்கட்டம், கும்பகோணம் அருகிலுள்ள அரிசலாறு படித்துறை போன்ற நதிக்கரைகள் மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகின்றன. குடந்தை மகாமகக் குளம், சக்கரத் தீர்த்தம் ஆகியவையும் சிறந்தவையாகும்.

    புனிதத் தலமான காசியில், கங்கை நதி ஓடிவரும் வழியில்உள்ள மணிகர்ணிகா புட்கரணியும் தலைசிறந்து விளங்குகிறது. மணிகர்ணிகா என்ற இடத்தில் செய்யப்படும் பிதுர்பூஜை பதினாறு தலைமுறைக்கு பித்ரு சாபங்களை நீக்கக்கூடியது.

    காசியில்உள்ள மணிகர்ணிகா நீர்நிலைக்குச் செல்ல வசதியில்லாதவர்களுக்கு, தமிழகத்தில் அதற்கு சமமாகக் கருதப்படும் மணிகர்ணிகா கட்டங்கள் உள்ளன. அங்கு முன்னோர்களுக்கான பிதுர்பூஜை செய்யலாம்.

    வேதாரண்யம் தர்ப்பாரண்யேஸ்வரர் ஆலயத்தில், மணிகர்ணிகா கங்கை உட்கிணறாக உள்ளது. ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டு அருள்புரியும் சென்னை திருநீர்மலைக்கு அருகில் மணிகர்ணிகா புட்கரணி தீர்த்தம் உள்ளது. மேலும் திருவெள்ளறை திருத்தலத்தின் புனிதத் தீர்த்தங்களில் ஒன்று மணிகர்ணிகா தீர்த்தம். இந்த இடங்களிலும் பிதுர்பூஜை செய்வதால் நல்ல பலன்கள் கிட்டும்.

    சென்னையை அடுத்த திருவள்ளூர் வைத்திய வீரராகவர் ஆலயத் திருக்குளம், கும்பகோணம் நன்னிலம் பூந்தோட்டத்திற்கு அருகில் உள்ள திலதைப்பதியில் உள்ள புனித தீர்த்தம், சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய குளக்கரை, ஸ்ரீவாஞ்சியம் தலத்தில் உள்ள குப்தகங்கை குளக்கரை, திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் ஆலயத்தில், சந்திர தீர்த்தம் அருகே உள்ள ஆலமரத்தடி ருத்ரபாதம், சேலம் சுகவனேஸ்வரர் ஆலய நந்தவனத்தின் பின்பகுதியில்உள்ள தீர்த்தக்கட்டம் உள்ளிட்ட பல இடங்களும் சிறப்பு வாய்ந்தன.

    புனிதத் தலங்களுக்குச் செல்ல முடியாத வயதானவர்கள், தங்கள் இல்லத்திலேயே வேதவிற்பன்னரை அழைத்து பிதுர்பூஜை செய்யச் சொல்லி பயன்பெறலாம்.

    • எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்.
    • பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும்.

    மகாளய அமாவாசை நாளில் செய்யும் சிறு தானமும் நமது முன்னோர்களின் பசியை தீர்த்து அவர்களின் ஆசியை வழங்கக்கூடியது. இத்தகைய சிறப்பு மிக்க அமாவாசை திருநாளில் தானங்கள் செய்வோம். நமது கர்மவினைகளை தூள் தூளாக்குவோம். எந்தெந்த பொருட்களை தானம் செய்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்ற விபரம் வருமாறு:-

    பொருட்கள் - பலன்கள்

    அன்னம்- வறுமையும், கடனும் நீங்கும்

    துணி- ஆயுள் அதிகமாகும்

    தேன்- புத்திர பாக்கியம் உண்டாகும்

    தீபம்- கண்பார்வை தெளிவாகும்

    அரிசி- பாவங்களை போக்கும்

    நெய்- நோய்களை போக்கும்

    பால்- துக்கம் நீங்கும்

    தயிர்- இந்திரிய சுகம் பெருகும்

    பழங்கள்- புத்தியும், சித்தியும் உண்டாகும்

    தங்கம்- குடும்ப தோஷங்களை நீக்கும்

    வெள்ளி- மனக்கவலை நீங்கும்

    பசு- ரிஷி, தேவர், பிதுர் கடன்கள் அகலும்

    தேங்காய்- நினைத்த காரியம் வெற்றியாகும்

    நெல்லிக்கனி- ஞானம் உண்டாகும்

    பூமி தானம்- ஈஸ்வர தரிசனம் உண்டாகும்

    சிலருக்கு பொருள் வசதி குறைவாக இருக்கும். அவர்களால் பெரிய அளவில் தானம் செய்ய இயலாது. அவர்கள் கவலை கொள்ள வேண்டாம். பசுவிற்கு உணவளிப்பதன் மூலம் தானத்துக்குரிய எல்லா பலன்களையும் பெற முடியும். கன்றுடன் கூடிய பசுவிற்கு தானம் அளித்தல் மிகவும் நல்லது.

    பசுவிற்கு ஒரு கட்டு அருகம்புல் அளிக்கலாம். ஒரு கட்டு அகத்தி கீரையை உணவாக அளிக்கலாம். பசுவிற்கு வாழையிலையில் சாதத்தை அளிக்கலாம். பழவகைகளை கொடுக்கலாம்.

    பழங்களில் வாழைப்பழமே மிகச் சிறந்தது. ஆறு மஞ்சள் வாழைப்பழங்களை பசுவிற்கு உணவாக அளிக்கலாம்.

    அரிசியும், வெல்லமும் கலந்து ஒரு பாத்திரத்தில் பசுவிற்கு உணவாக அளிக்கலாம். இதை அதிகமாக தரக்கூடாது. பசுவிற்கு வயிற்று உபாதையை உண்டாக்கும்.

    கோமாதா என்றழைக்கப்படும் பசுவின் உடலில் அனைத்து தெய்வங்களும், தேவதைகளும் வாசம் செய்கின்றனர். அனைத்து தெய்வங்களுக்கும் மற்றும் தேவதைகளுக்கும் ஒரே நேரத்தில் தானம் செய்ய முடியுமா? முடியும். பசுவுக்கு உணவளித்தால் அனைத்து தெய்வங்களுக்கும், தேவதைகளுக்கும் உணவளித்ததாகவே சமம். எனவே இத்தகைய சிறப்புடைய பசுவிற்க்கு தங்களால் இயன்ற அளவு உணவை அளிக்கவும்.

    அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தால் நமது கர்ம வினைகளை போக்கிக் கொள்ள முடியும். அமாவாசை நாளில் பசுவிற்கு உணவளித்தல் நம் பிதுர்களையும் மகிழ்விக்கும் செயல் ஆகும். நம் பிதுர்களும் மகிழ்ச்சி அடைந்து அவர்களின் ஆசிகளும் கிட்டும். நமது குலம் தழைக்கும்.

    • மகாளய என்றால் கூட்டாக வருதல் என்பது பொருள்.
    • மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம்.

    மற்ற அமாவாசையைக் காட்டிலும் மகாளயஅமாவாசை ஏன், அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை, நாம் இந்த மகாளயஅமாவாசை தினத்தில் அறிந்துகொள்வதும் ஒரு வகையில் சிறப்புதான். அமாவாசை முதலான முக்கிய நாட்களில் நமது முன்னோர்கள், பூமிக்கு வந்து தங்களின் சந்ததியினர் அளிக்கும் உபசாரங்களை ஏற்று, ஆசீர்வதிப்பார்கள் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. இந்த நாட்களில் சிரத்தையோடு அவர்களை வழிபட்டால், தீர்க்க ஆயுள், புகழ், செல்வம், உடல் ஆரோக்கியம், இன்பம் போன்ற அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    மகாளய என்றால் 'கூட்டாக வருதல்' என்பது பொருள். மறைந்த நமது முன்னோர்கள் மொத்தமாக ஒருசேரக் கூடும் காலமே மகாளய பட்சம் என்று கருதப்படுகிறது.

    மற்ற அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு திதி கொடுக்க மறந்துவிட்டாலோ அல்லது அதற்கான வாய்ப்பு இல்லாமல் தவற விட்டவர்கள், இந்த மகாளய அமாவாசையன்று திதி கொடுத்தால், அது அதற்கான முழுப் பயனையும் அளிக்க வல்லதாகும். மகாளய அமாவாசை அன்று முன்னோர்கள் எல்லோரும் பூமிக்கு வந்து செல்வதாக ஐதீகம். நாம் அவர்களுக்கு அளிக்கும் திதி, அவர்கள் செய்த பாவங்களில் இருந்தெல்லாம் விடுவித்து அவர்களை சொர்க்க வாழ்விற்கு கொண்டு செல்லும் என்பது நம்பிக்கை. அன்றைய தினம் ஏதாவது ஒரு புனித நதியில் நீராடுவது, தான தர்மங்கள் செய்வது போன்றவற்றை செய்தால் நல்லது.

    பல தெய்வீக நூல்களில் மகாளய பட்சத்தின் சிறப்புகள் கூறப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய யுகங்களில் மறைந்த முன்னோரைக் கண்ணால் காணும் பாக்கியம் மக்களுக்கு கிடைத்திருக்கிறது. நாம் கலியுகத்தில் வாழ்வதால், அது சாத்தியமில்லாமல் போய்விட்டது. மகாளய கால நாட்களில் நம் முன்னோர்கள் நமக்கு ஆசி வழங்குவதற்காகவே பிதுர் லோகத்தில் இருந்து, பிதுர்தேவதைகளிடம் அனுமதி பெற்று நம்மைப் பார்க்க பூலோகத்திற்கு வருகின்றனர்.

    இந்நாட்களில் நம் வீடுகளை மிகத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். சைவம் மட்டுமே உண்ண வேண்டும். வீட்டில் ஒருவருக்கொருவர் சண்டையிடக் கூடாது. வீணான பொழுதுபோக்கு அம்சங்களை அறவே தவிர்த்து, உள்ளத்தையும், உடலையும் தூய்மையாக வைத்துக் கொள்வது மிகவும் அவசியம்.

    இந்த 14 நாட்களும் முன்னோர் வழிபாட்டினைச் செய்வது சிறப்பு. புண்ணிய நதிக்கரைகள், தீர்த்தக்கரைகள், ராமேஸ்வரம் போன்ற கடற்கரைத்தலங்களுக்கு ஒருநாளாவது செல்ல வேண்டும். முடியாதவர்கள் காகத்திற்கு அன்னமிடலாம். பசுவுக்கு புல், பழம் கொடுக்கலாம்.

    ஸ்ரீமந்நாராயணனே ராமாவதார, கிருஷ்ணாவதார காலங்களில் பிதுர்பூஜை செய்து முன்னோர்களை வழிபாடு செய்துள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. எதுவும் செய்ய இயலாதவர்கள் முன்னோரின் பெயர்களை உச்சரித்து, "காசி காசி" என்று சொன்னபடியே, வீட்டு வாசலிலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு கூட திதி பூஜையைச் செய்யலாம். பின்னர், பூஜையறையில் நம் முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த எளிய பூஜை அளவற்ற நன்மைகளைத் தரக்கூடியது.

    சாதாரண அமாவாசை தினங்களில் மூன்று தலைமுறை முன்னோருக்கு தர்ப்பணம் கொடுக்கப்படும். ஆனால், மகாளயபட்ச அமாவாசை தினத்தில், தாய்வழி மற்றும் தந்தைவழி முன்னோருக்கு மட்டுமின்றி, நம் ஆசிரியர்கள், நண்பர்கள், உறவினர்கள், பங்காளிகள் மற்றும் ஏனைய அனைவருக்கும் இன்றைய தினத்தில் தர்ப்பணம் கொடுப்பதே மகாளயஅமாவாசையின் தனி பெரும் சிறப்பாக திகழ்கிறது.

    • ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள்.
    • நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள்.

    இன்று மகாளய பட்ச அமாவாசைக்கான 14 நாள் தொடங்குகிறது. இந்த அமாவாசை தினத்துக்கு முன்பு வரும் 14 நாட்களும் மற்ற மாதங்களில் வரும் அமாவாசைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. சிறப்பு வாய்ந்தது. ஆற்றல்கள் மிகுந்தது.

    நம்மில் பெரும்பாலானவர்கள் ஆடி அமாவாசையையும், தை அமாவாசையையும் மட்டும்தான் சிறப்பான அமாவாசை நாட்களாக நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் ஆடி அமாவாசை, தை அமாவாசையை விட பலமடங்கு உயர்வானது மகாளய பட்ச அமாவாசை.

    ஆடி, தை அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுத்தால், நீங்கள் யாரை நினைத்து தர்ப்பணம் கொடுக்கிறீர்களோ, அவர்களுக்கு மட்டுமே சென்றடையும். ஆனால் மகாளய அமாவாசை தினத்தன்று நீங்கள் கொடுக்கும் திதி அல்லது தர்ப்பணம் மறைந்த முன்னோர்களான உங்கள் மூதாதையர்கள் அனைவருக்கும் போய் சேரும்.

    மகாளய பட்சமான 14 நாட்கள் அல்லது மகாளய அமாவாசை நாளில் யார் ஒருவர் பித்ருக்களான நமது மறைந்த முன்னோர்களுக்கு எள், தண்ணீர் வழங்கும் தர்ப்பணத்தை கொடுக்கிறாரோ, அந்த எள்ளும், தண்ணீரும் அவரது முந்தைய 21 தலைமுறைகளில் உள்ள பித்ருக்களை சென்றடையும். இந்த ஒரு காரணத்தினால்தான் மற்ற மாதங்களில் வரும் அமாவாசையை விட புரட்டாசி மாத மகாளய பட்ச அமாவாசை உயர்வானதாக, சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

    மகாளயத்தை முன்னிட்டு நாளை மறுநாள் முதல் அடுத்த 14 நாட்களும் ஒவ்வொருவரும் மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு எள்-தண்ணீர் கொடுக்க வேண்டும்.

    இந்த 14 நாட்களில் கொடுக்கும் எள்-தண்ணீர் தர்ப்பணத்துக்கு ஒவ்வொரு நாள் வரும் திதிக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும். மகாளய பட்சத்தின் 14 நாட்கள் சிறப்பை உணர்ந்தவர்கள் இந்த 14 நாட்களை நிச்சயம் தவறவிட மாட்டார்கள்.

    இது மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்ய வேண்டிய மிகப்பெரிய கடமை ஆகும்.

    மகாளயபட்ச நாட்களில் மட்டுமே பித்ரு லோகத்தில் இருந்து விஷ்ணு அனுமதியுடன் பித்ருக்கள் உங்களைத்தேடி வருவார்கள். அந்த சமயத்தில் நீங்கள் அவர்களை நினைத்து தர்ப்பணம், தானம் போன்றவற்றை செய்தால் உங்கள் குடும்ப பித்ருக்கள் மனம் மகிழ்வார்கள்.

    நமது வாரிசுகள் நம்மை மறக்கவில்லை. நம்மை நினைத்து வழிபட்டு ஆராதனை செய்கிறார்கள் என்று மனம் முழுக்க மகிழ்ச்சியால் பூரித்துப் போவார்கள்.

    அந்த மகிழ்ச்சி காரணமாக நீங்கள் என்ன வரம் கேட்டாலும் அது உங்களுக்கு எளிதில் கிடைக்க உதவி செய்வார்கள். உங்கள் வாழ்க்கை அமைதியாகவும், ஆனந்தமாகவும் இருக்க வழி வகை செய்வார்கள். நீங்கள் கேட்காதவைகளை கூட பித்ருக்கள் தந்து விட்டு செல்வார்கள்.

    மகாளய பட்ச வழிபாடு தரும் மிகப்பெரிய பலன் இது. எனவே இன்று மறக்காமல் உங்கள் பித்ருக்களுக்கு தர்ப்பணம் கொடுக்க தொடங்குங்கள். அன்னதானம் செய்யுங்கள், ஆடை, குடை தானம் செய்யலாம்.

    ஒரு வேளை நீங்கள் இந்த 14 நாள் தர்ப்பணத்தை செய்யாவிட்டால் உங்கள் பித்ருக்கள், மிக மிக வேதனைப்படுவார்கள். நமது வாரிசுகள் மட்டும் மூன்று நேரமும் மூக்கு முட்ட நன்றாக சாப்பிடுகிறார்கள். பசியோடும், தாகத்தோடும் இருக்கும் நம்மை மறந்து விட்டார்களே என்று மனதில் கவலை கொள்வார்கள்.

    அந்த கவலையும், வேதனையும் தான் அவர்களது வாரிசுகளுக்கு தோஷங்களாக மாறி விடும். இதைத்தான் ஜோதிடர்கள் பித்ரு தோஷம் அல்லது பித்ரு சாபம் என்று சொல்வார்கள்.

    இத்தகைய தோஷத்தையும், பாவத்தையும் நீங்களும் உங்கள் வாரிசுகளும் ஏன் சுமக்க வேண்டும்? பித்ருக்களின் பசி, தாகத்தை தீர்க்கும் எள், தண்ணீர் தர்ப்பணத்தை செய்தாலே போதும். நம் முன்னோர்கள் காட்டிய வழியில் மகாளய பட்ச பித்ரு தர்ப்பண வழிபாடுகளை செய்ய வேண்டியது நமது முக்கியமான கடமையாகும்.

    தற்போதைய கலிகாலம் காரணமாகவோ, என்னவோ பெற்றோர் மறைந்த பிறகு, பெரும்பாலனவர்கள் அவர்களை மறந்து விடுகிறார்கள். சிலர் 3-வது நாள் விசேஷம், 16வது நாள் காரியம் என்று செய்த பிறகு கடமை முடிந்து விட்டதாக நினைக்கிறார்கள்.

    பிறகு ஆண்டுக்கு ஒரு தடவை, அவர்கள் இறந்த நாளில், அவர்கள் விரும்பி சாப்பிடும் உணவை சமைத்து அவர்களுக்கு படையல் போட்டு கும்பிடுவார்கள்.

    அப்புறம் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் போட்டோவுக்கு மாலைப் போட்டு கும்பிட்டு விட்டு திருப்திப்பட்டுக் கொள்வார்கள். நாளடைவில் அந்த வழிபாடும் வம்ச வழியாக தொடரப்படாமல் போய்விடுவதுண்டு.

    அப்படிப்பட்ட அவர்களுக்கு முன்னோர் வழிபாடு என்பது ஏதோ வருடத்துக்கு ஒரு தடவை வரும் கோவில் கொடை விழா மாதிரி ஆகிவிட்டது.

    ஆனால் கண்கண்ட தெய்வங்களான நம் முன்னோர்கள் நம்மை அப்படி விட்டு விடுவது இல்லை. ஆத்மாவாக இருந்து அவர்கள் தினம், தினம் நமக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

    நீங்கள் அவர்களை கும்பிட்டாலும் சரி, கும்பிடாவிட்டாலும் சரி, நினைத்தாலும் சரி, நினைக்காவிட்டாலும் சரி, அவர்கள் உங்களுக்கு உதவிகள் செய்யத் தவறுவதே இல்லை.

    உங்களை, உங்கள் அருகில் இருந்து அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கர்ம வினைகளுக்கு ஏற்ப உங்களுக்கு நல்லது செய்கிறார்கள்.

    உங்களுக்கு வரும் கெடுதல்களை அவர்கள்தான் தடுத்து நிறுத்துகிறார்கள். அந்த புண்ணிய ஆத்மாக்களின் இந்த புனித செயலால்தான், அவர்களது குடும்பம் இந்த பூ உலகில் தழைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறது.



    சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், ஒரு குடும்பத்தையும், அதை சார்ந்துள்ள குலத்தையும் காப்பது மறைந்த முன்னோர்கள் தான். நாம் கும்பிடாமலே நம் பித்ருக்கள் நமக்கு உதவிகள் செய்கிறார்கள் என்றால், நாம் அவர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து சிரார்த்தம் செய்து வணங்கினால் நம்மை எந்த அளவுக்கு அவர்கள் காப்பாற்றுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை.

    நமக்கு சாப்பாடு தர மாட்டார்களா? தாகம் தீர தண்ணீர் தர மாட்டார்களா? நல்ல உடை தரமாட்டார்களா? என்று ஏக்கத்தோடு நம்மைப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள்.

    நம்மை ஆசை, ஆசையாக வளர்த்து, நல்ல நிலைக்கு ஆளாக்கி விட்ட மறைந்த அந்த முன்னோர்களை நாம் அப்படி தவிக்க விடலாமா? அவர்களை பார்க்க வைத்து விட்டு, நாம் மட்டும் வகை, வகையாக சாப்பிடலாமா?

    அவர்களது பசியையும், தாகத்தையும், ஏக்கத்தையும் தணிக்க வேண்டியது நம் கடமை அல்லவா?

    அவர்கள் மீண்டும் நம் வீட்டில் இருந்து, 14 நாள் மகாளய அமாவாசை தினம் முடிந்த பிறகு பித்ருலோகத்துக்கு புறப்பட்டு போகும் போது, பசியும் பட்டினியுமாக செல்ல நேரிட்டால் அவர்கள் வேதனையின் உச்சத்தில் இருப்பார்கள். இத்தகைய நிலை ஏற்பட விடலாமா? விடக் கூடாது.

    அதற்கு நாம் மகாளய பட்ச 14 நாட்களும் மறைந்த நம் முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். உரிய வகையில் அவர்கள் தாகம் தீர எள் தண்ணீர் கொடுத்து தர்ப்பணம் கொடுக்க வேண்டும். முக்கியமாக அத்தியாவசியப் பொருட்களை தானம் கொடுக்க வேண்டும். அன்னதானம் செய்ய வேண்டும். நீங்கள் செய்யும் அன்னதானம் உங்கள் முன்னோர்களின் ஆத்மா பலத்தை அதிகரிக்க செய்யும் என்பதை மறந்து விடாதீர்கள். 

    • விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது.
    • பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது. எப்படி என்கிறீர்களா?

    கீழ்கண்ட கதையை படியுங்கள்

    பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் ஆடி அமாவாசை

    பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.

    அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். வாசலில் சத்தம். "ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்கஞ் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி." உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.

    இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.

    பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை. என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ "இல்லை போய்வா" என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.

    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.

    யோவ் அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே, போ முதல்ல இங்கேயிருந்து, தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை"

    "ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணு"

    அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.

    அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா...?

    பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது. தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.

    பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டு போய்விட்டான். அவன் சற்று பின்வாங்க, இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.

    பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல... இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.

    ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.

    எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.

    இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம் "வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்" என்று கூற.

    "என்ன சொல்கிறாய் சித்திரகுப்தா. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?"

    "ஆம் பிரபோ!" என்கிறான் சித்திர குப்தன்.

    "இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்"

    மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் "இல்லை. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை" என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான்.

    இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை.

    "இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்" என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க, அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

    (நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!!)

    "தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?" என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.

    "இவன் இவனையாரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போது கண்காணித்து வருபவர்கள்ஞ் இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?"

    அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர்.

    ஆனால் வாயுதேவன் மட்டும் "நீதிதேவா. இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான்தான்!" என்றான்.

    அதை கேட்ட எமன், "நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும் அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்" என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.

    அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.

    இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால் விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)

    பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது.

    எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.

    • எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம்.
    • புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

    சூரியன் கன்னி ராசிக்குள் செல்லும்போது, அதாவது புரட்டாசி மாதம், எமதர்மராஜன் பிதுர்க்களை பூமிக்கு அனுப்புவதாக ஐதீகம். அந்த நேரத்தில் நமது முன்னோர்களும் இறந்து போன ரத்தசம்பந்த உறவுகளும் அந்தந்த உறவினரை-குடும்பத்தினரை காண ஆசையுடனும், மகிழ்ச்சியுடனும் நம்மை காணவருவார்கள். அந்த நேரத்தில் அவர்களை நாம் வணங்கினால் மனமகிழ்ச்சியோடு ஆசீர்வாதம் செய்வார்கள்.

    இந்நாள் மிகவும் புண்ணியமான மகாளய அமாவாசை நாள். முன்னோர்களை திருப்தி செய்யும் வகையில் தர்ப்பணம் செய்ய வேண்டியது அவசியம். இந்நாளில் தீர்த்தத்தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து, அவர்களது தாகம் தீர்க்க வேண்டும். இந்த புண்ணிய தினங்களில் பித்ருக்கள் வழிபாடு மிகச் சிறந்த பலனை கொடுக்கும்.

    கருடபுராணம், விஷ்ணு புராணம் போன் புராணங்களிள், "ஒருவருக்காவது அன்னதானம் செய்ய வேண்டும், முடியாதவர்கள் காகத்திற்கு அன்னம் வைக்கலாம்,. பசுவுக்கு அகத்திகீரை, பழம் கொடுக்க வேண்டும் என்கிறது.

    இப்படி முன்னோர்களின் ஆத்மாவையும் சமீபத்தில் இறந்தவர்களின் ஆத்மாவையும் பூஜை மூலமாக திருப்திப்படுத்தினால் திருமணத்தடை விலகும், புத்திரபாக்கியம் கிடைக்கும். கடன்தொல்லை, மனக்கவலை, நவக்கிரக தோஷங்கள் போன்ற அனைத்து துன்பங்களும் விலகும்" என்கிறது புராணங்கள்.

    படையல்

    நம் முன்னோர்களுக்கு பிடித்த உணவை சமைத்து அவர்களுக்கு படைக்க வேண்டும்.

    • அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்தும்.
    • வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும்.

    மகாளய அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும், முதியவர், ஆதரவற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள்.

    அமாவாசையில் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். நாமும் நம்முன்னோர்களுக்கு மகாளய அமாவசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

    வசதி இல்லாதவர்கள் நம் முன்னோர்களை மனதில் நினைத்து பசு மாட்டிற்கு அகத்திக் கீரையை உணவாகத் தந்தாலே போதும். அமாவாசையில் அவர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் செல்வம், புகழ், நீண்ட ஆயுளைத் தரும்.

    பலன்கள்

    இந்த பூஜையால் தீராத கடன் தீரும். முன்னோர்கள் சாபம் நீங்கும். நாமும் நம் முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று பூஜை செய்து அவர்களின் ஆசி பெறுவோம்.

    • திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும்.
    • கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற ஸ்தலம் உள்ளது.

    மிகக்கடுமையான பிதுர் தோஷம் உடையவர்கள் இராமேஸ்வரம் சென்று திலா ஹோமம் செய்வது அவசியம். இந்த திலா ஹோமம் வேதம் அறிந்த பண்டிதர்களால்தான் செய்ய வேண்டும்.

    திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும் எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமம் ஆகும். திலம் என்றால் எள் என்று அர்த்தம். திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு இராமேஸ்வரத்தில் தங்க வேண்டும். நேராக வீட்டுக்கு எடுத்துச் செல்வது தவறு. சிரத்தையுடன் செய்தால் தான் முழுப்பலனும் கிடைக்கும்.

    திலா ஹோமம் முடிந்து பிண்டங்களை கடல் நீரில் கரைக்கும் போது கருடபகவான் அங்கு வட்டமிட வேண்டும். இந்த சம்பவம் நிகழ்ந்தால்தான் மகாவிஷ்ணு நம்மை ஆசிர்வதிப்பதாக அர்த்தம்.

    வைஷ்ணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள் ராமேஸ்வரம் அருகில் உள்ள திருப்புல்லாணிக்கரையில் திலாஹோமம் செய்து பித்ருக்களின் ஆசிர்வாதம் பெறலாம்.

    கேரளாவில் திருவனந்தபுரம் அருகில் உள்ள சுராம சேத்திரம் என்ற ஸ்தலம் உள்ளது. அங்கும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

    வாழ்வில் ஒவ்வொருவரும் ஒருதடவையாவது காசி, கயா, இராமேஸ்வரம் சென்று பிதுர் ஹோமம் செய்ய வேண்டும்.

    • முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள்.
    • துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    கோயிலில் தர்பணம் மற்றும் பித்ரு வழிபாடு முடித்த பிறகு வீட்டிற்கு திரும்பி வந்து முன்னோர்களின் படங்கள் இருந்தால் அதற்கு துளசிமாலையோ அல்லது துளசிஇலையோ சமர்ப்பிக்க வேண்டும். துளசிவாசம் பெருமாளை சந்தோஷப்படுத்தும்.

    இதனால் அந்த பித்ருக்களுக்கு விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசி கிடைக்கும். முன்னோர்கள் விஷ்ணுவின் ஆசி பெற்ற மகிழ்ச்சியில் தமது வம்சத்தினரையும் மனதார வாழ்த்துவார்கள். அத்துடன் முன்னோர்களுக்கு பிடித்த உணவை படைத்து வணங்க வேண்டும். அந்த உணவை காக்கைக்கு வைத்த பிறகே நாம் சாப்பிட வேண்டும்.

    முதியவர்களுக்கு அன்னதானம் செய்வது நல்லது. அப்படி செய் வதாலும் முன்னோர்களின் ஆத்மா சாந்தியாகும்.

    முன்னோர்களின் மனவருத்தத்தை அடைந்த குடும்பத்தை இறைவனாலும் காப்பாற்ற முடியாது என்கிறது சாஸ்திரம். அதனால்தான் பகீரதன், மாபெரும் முயற்சி எடுத்து கங்கையை பூமிக்கு வரவழைத்து தம் முன்னோர்களை சாந்தப்படுத்தினான். நாமும் நம்மால் இயன்ற அளவு மகாளய அமாவாசை பூஜையும், தர்பணமும் முறையாக செய்து முன்னோர்களின் அருளாசி பெற்று சிறப்பான வாழ்வை பெறுவோம்.

    • ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்கக் கூட இயலாது.
    • விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிட்டுகின்றது.

    தர்ப்பண பூஜை நாட்களில் நாம் யாருக்காக, எந்தக் காரணத்துக்காகத் தர்ப்பணம் அளிக்கின்றோமோ, அதைப் பொறுத்து தர்ப்பண பூஜை முறைகள் மாறுபடுகின்றன. ஒவ்வொரு தர்ப்பண பூஜை முறைக்கும் வெவ்வேறு விதமான சிறப்புப் பெயரும் உண்டு.

    அதைப் போலவே இறந்தவருடைய வாழ்க்கை முறை, செய்து வந்த தொழில், உத்தியோகம், அவரது உயிர் பிரிந்த விதம் இவ்வாறு எத்தனையோ காரண, காரியங்களைக் கொண்டு அவர்களுடைய ஆத்மா சாந்தி அடைவதற்கான வெவ்வேறு விதமான தர்ப்பண பூஜை முறைகளைச் சித்த புருஷர்கள் அருளியுள்ளனர்.

    ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முடிவு எவ்வாறு அமையும் என்பதை யாராலும் யூகிக்கக் கூட இயலாது. விபத்து, தற்கொலை, உறவினர், நண்பர்கள் தரும் வேதனைகள், வறுமை, கொடிய நோய் போன்ற பல காரணங்களால் மரணம் ஏற்படுவதுண்டு. ஏன், நம் தினசரி வாழ்க்கையில் கூட எத்தனையோ கொசுக்கள், வண்டுகள், ஈக்கள், புழு, பூச்சிகள், எறும்புகள் போன்ற எத்தனையோ உயிரினங்களின் மரணத்திற்கு நாம் காரணமாகி விடுகின்றோம்.

    நாம் முறையாக நம் பித்ருக்களுக்கு சிரார்த்தம், திவசம் மற்றும் தர்ப்பண பூஜைகளை நிறைவேற்றினால் தான் இவ்வாறாக விதவிதமான முறைகளில் உயிர் விட்ட அனைத்து ஜீவன்களுக்கும் நிவாரணம் கிட்டுகின்றது. எந்த அளவிற்கு நம்முடன் வாழ உரிமை பெற்றிருக்கும் சக ஜீவன்களின் நல்வாழ்விற்காக நாம் மனதாலும், உடலாலும் சேவை, பூஜை, வழிபாடு, தான தர்மங்கள் ஆகியவற்றைச் செய்கின்றோமோ, அந்த அளவிற்கு நம் வாழ்க்கையும் மேம்படும்.

    ×