search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்  ஆடி அமாவாசை
    X

    பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் ஆடி அமாவாசை

    • விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது.
    • பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    பொதுவாகவே தான தர்மங்கள் செய்வது மிகவும் சிறந்தது. நம்மை காக்கும் கவசம் போன்றது. அதிலும் தை அமாவாசை, ஆடி அமாவாசை, மஹாளய அமாவாசை போன்ற பித்ருக்களுக்குரிய தினங்கள், சந்திர சூரிய கிரகணம் ஏற்படும் புண்ணிய காலங்கள், தீபாவளி, பொங்கல், நவராத்திரி, விஜயதசமி, கார்த்திகை போன்ற பண்டிகை காலங்களில். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய விரத நாட்களில் தான தருமங்கள் செய்வது பன்மடங்கு பலன் தரக்கூடியது. ஒருவரது விதியையே மாற்றக்கூடியது. எப்படி என்கிறீர்களா?

    கீழ்கண்ட கதையை படியுங்கள்

    பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும் ஆடி அமாவாசை

    பிச்சைக்காரனை விரட்டிய கருமிக்கு கிடைத்த நற்கதி!

    அந்த ஊரில் மிகப் பெரிய கருமி ஒருவன் இருந்தானாம். தர்மம் என்ற சொல்லையே அறியாதவன் அவன். பிச்சைக்காரர்களுக்கு மறந்தும் கூட தர்மம் செய்யாதவன். அவன் வீட்டிற்கு தெரியாத்தனமாக எவராவது வந்து பிச்சைக் கேட்டால், நாயைவிட்டு ஏவாத குறையாக விரட்டிவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பான். ஏனெனில் அவன் வீட்டு முற்றத்தில் உள்ள தோட்டத்தில் அழகான பூச்செடிகள் உண்டு. பிச்சை கேட்டு வருகிறவர்கள் போகும்போது ஏதாவது பூவை பறித்துக்கொண்டு சென்றுவிட்டால்? அந்த அச்சத்தில் யாசகம் கேட்போர் வாயிலில் நிற்கக் கூட அனுமதிப்பதில்லை அவன்.

    அன்று ஆடி அமாவாசை. உள்ளே அமர்ந்து இவன் மதிய உணவை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான். வாசலில் சத்தம். "ஐயா சாமி ஏதாவது தர்மம் போடுங்கஞ் சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு சாமி." உட்கார்ந்தவாரே வாயிலை நோக்கி எட்டிப் பார்த்தான். ஒரு வயதான பரதேசி கையில் திருவோட்டுடன் நின்றுகொண்டிருந்தார்.

    இவன் தான் பிச்சைக்காரர்களை ஏறெடுத்தும் கூட பார்க்க விரும்பாதவனாயிற்றே எதுவுமே அறியாதவன் போல அவன் சாப்பிடும் சாப்பாட்டில் குறியாக இருந்தான்.

    பிச்சைக்காரனோ இவனை பற்றி கேள்விப்பட்டிருப்பான் போல. இவனிடம் இன்று யாசகம் பெறாமல் போவதில்லை. என்கிற உறுதியுடன் நின்றுகொண்டிருந்தான். இவனோ "இல்லை போய்வா" என்று சொல்லகூட விரும்பாமல் உணவில் லயித்திருந்தான்.

    ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த பிச்சைக்காரன் இவன் வீட்டு முற்றத்தில் வந்து நிற்க, அதை பார்த்த இவனுக்கு கோபம் தலைக்கேறியது. சாப்பிடுவதை நிறுத்திவிட்டு எழுந்து ஓடிவந்தான்.

    யோவ் அறிவில்லை உனக்கு. நீ பாட்டுக்கு உள்ளே வர்றியே, போ முதல்ல இங்கேயிருந்து, தர்மமும் இல்லை கிர்மமும் இல்லை"

    "ஐயா சாப்பிட்டு நாலு நாள் ஆச்சி ஏதாவது பழையது இருந்தா கூட கொடுங்க போதும்"

    "அதெல்லாம் ஒன்னும் இல்லை. முதல்ல இடத்தை காலி பண்ணு"

    அந்த பரதேசியோ இவனிடம் ஏதாவது பெறாமல் அந்த இடத்தை விட்டு நகர்வதில்லை என்று உறுதி பூண்டுவிட்டான்.

    அவன் விடாக்கண்டன் என்றால் இவன் கொடாக்கண்டன் அல்லவா...?

    பாதி சாப்பாட்டில் இருந்து வேறு எழுந்து வந்திருந்தபடியால் இவன் கோபம் தலைக்கேறியது. தனது எச்சில் கையை பிச்சைக்காரனை நோக்கி ஓங்கி அவனை அடிக்கப்போனான்.

    பிச்சைக்காரன் இதை எதிர்பாராது மிரண்டு போய்விட்டான். அவன் சற்று பின்வாங்க, இந்த அரிபரியில் இவனது எச்சில் கையில் இருந்த ஒரு சோற்றுப் பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது.

    பிச்சைக்காரன் முனகியபடியே செல்ல... இவன் மீண்டும் வீட்டிற்கு வந்து உணவை தொடர்ந்து சாப்பிடலானான்.

    ஆண்டுகள் உருண்டன. ஒரு நாள் இவன் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழ்ந்து இறந்துவிடுகிறான்.

    எமதூதர்கள் இவனை சங்கலியால் பிணைத்து இழுத்து சென்று எமதர்மன் முன்னர் நிறுத்துகின்றனர்.

    இவனது கணக்குகளை ஆராய்ந்த சித்திரகுப்தன் எமதர்மனிடம் "வாழ்வில் மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்யாதவன் இவன். நரகத்தில் உள்ள அத்தனை தண்டனைகளும் இவனுக்கு பொருந்தும்" என்று கூற.

    "என்ன சொல்கிறாய் சித்திரகுப்தா. மறந்தும் கூட புண்ணியச் செயலை செய்ததில்லையா?"

    "ஆம் பிரபோ!" என்கிறான் சித்திர குப்தன்.

    "இல்லை சித்திரகுப்தா மனிதர்களாக பிறந்தவர் எவரும் 100% பாபம் அல்லது 100% புண்ணியம் என்று செய்திருக்க முடியாது. நன்றாக மீண்டும் இவன் கணக்கை பார்"

    மறுபடியும் இவன் ஜனன மரண வாழ்வியல் கணக்கை பார்த்த சித்திரகுப்தன் "இல்லை. இவன் புண்ணியச் செயலையே செய்ததில்லை" என்று அறுதியிட்டு கூறிவிடுகிறான்.

    இருப்பினும் எமனுக்கு திருப்தியில்லை.

    "இவன் முகத்தை பார்த்தால் தன்னை மறந்து இவன் ஏதோ புண்ணியச் செயலை செய்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. எதற்கும் அஷ்ட திக்பாலகர்களில் மற்றவர்களை கேட்டுவிடுகிறேன்" என்றவன் அஷ்டதிக்பாலகர்களில் மற்றவர்களை அங்கு வருமாறு பணிக்க, அடுத்த நொடி இந்திரன், அக்னி, நிருதி, வருணன், வாயு, குபேரன், ஈசானன் முதலான அஷ்டதிக்பாலகர்கள் அங்கு தோன்றுகின்றனர்.

    (நம்மை 24 மணிநேரமும் கண்காணிப்பவர்கள் இந்த அஷ்டதிக் பாலகர்கள். இவர்களிடமிருந்து நாம் செய்யும் எந்த பாவ/புண்ணிய காரியங்களும் தப்பாது! அஷ்டதிக்பாலகர்களில் எமனும் ஒருவன்!!)

    "தர்மராஜா எங்களை அழைத்ததன் காரணம் என்னவோ?" என்று அவர்கள் வினவ, இந்த மானிடனின் வழக்கை கூறுகிறான் எமதர்மன்.

    "இவன் இவனையாரியாமல் ஏதேனும் புண்ணியம் செய்திருக்கவேண்டும் என்று என் உள்மனம் கூறுகிறது. சித்திரகுப்தனால் அதை கணிக்க முடியவில்லை. நீங்கள் தானே மக்களின் பாப புண்ணிய செயல்களை எப்போது கண்காணித்து வருபவர்கள்ஞ் இவனை அறியாமல் இவன் ஏதாவது புண்ணியச் செயலை செய்திருக்கிறானா?"

    அனைவரும் உதட்டை பிதுக்குகின்றனர்.

    ஆனால் வாயுதேவன் மட்டும் "நீதிதேவா. இவன் இவனை அறியாமல் ஒரு புண்ணியச் செயலை செய்திருக்கிறான். மகத்துவம் மிக்க ஆடி அமாவாசை தினத்தன்று தன்னிடம் யாசகம் கேட்டு வந்த பிச்சைக்காரனை இவன் அடித்து விரட்ட எத்தனித்தபோது இவனது கைகளில் ஒட்டியிருந்த சோற்று பருக்கை பறந்து போய் பிச்சைக்காரனின் திருவோட்டில் விழுந்தது. அந்த பருக்கையை சுமந்து சென்றது நான்தான்!" என்றான்.

    அதை கேட்ட எமன், "நான் கணித்தது சரியாகிவிட்டது. இவன் செயல் தீய நோக்கோடு அமைந்திருந்தாலும் அவனையுமறியாமல் பித்ருக்களுக்குரிய ஆடி அமாவாசையன்று இவன் ஒரு சோற்று பருக்கை தானம் செய்த படியால் இவனது தவறுகள் மன்னிக்கப்படுகின்றன. மீண்டும் பூலோகத்தில் நல்ல குலத்தில் பிறந்து உத்தமமான செயல்களை செய்து சுவர்க்கத்தை அடைவானாக. அதே சமயம் யாசகம் கேட்டவரை அடிக்க பாய்ந்த காரணத்தால் அதற்குரிய தண்டனையையும் பூலோகத்தில் அனுபவிக்கவேண்டும்" என்று அருளாசி வழங்கி அவனை அனுப்பிவிடுகிறான்.

    அடுத்த பிறவியில் நல்ல குலத்தில் பிறக்கும் அவன், சகல சௌபாக்கியங்களும் பெற்று வாழ்ந்து வருகிறான். தான தருமங்களும் செய்து வருகிறான். இருப்பினும் முன்ஜென்மத்தில் யாசகம் கேட்டோரை அடிக்க பாய்ந்ததால் ஏற்பட்ட பாவத்தின் காரணமாக முதுமைக் காலத்தில் பக்கவாதம் ஏற்பட்டு ஒரு கை செயலிழந்துவிடுகிறது. இருப்பினும் தனது முன்வினையால் இது நமக்கு ஏற்பட்டுள்ளது போலும் என்று தன்னை தேற்றிக்கொண்டு இறுதி வரையில் தர்மம் தவறாது வாழ்ந்து மறைந்தான்.

    இதை படித்தவுடன் இதிலிருக்கும் நீதியை தான் எடுத்துக்கொள்ளவேண்டுமே தவிர ஆடி அமாவாசையன்று ஒரு சோற்று பருக்கை தானம் செய்தால் கூட சொர்க்கம் தான் என்று தவறாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

    தெரியாமல் செய்த ஒரு நல்ல செயலுக்கே இத்தனை மகிமை என்றால் விஷேட நாள் கிழமை ஆகியவற்றின் மகத்துவத்தை அறிந்து மனமுவந்து செய்யும் தான தர்மங்களின் பலன் எத்தகையாதாக இருக்கும் என்று கணக்கிட்டுக்கொள்ளுங்கள். (இந்த கணக்கு பார்ப்பதெல்லாம் ஆரம்பத்தில் தான். நற்செயல்கள் மற்றும் புண்ணிய காரியங்களின் மேல் உங்களுக்கு ஈடுபாடு வந்துவிட்டால் ஒரு கட்டத்தில் அதை ஒரு கடமையாகவே செய்ய ஆரம்பித்துவிடுவீர்கள்!!)

    பாவச் செயல்களை செய்பவர்கள் தங்களையுமறியாமல் நல்ல செயல்களை செய்யும்போது இறைவன் அவர்களின் தவறுகளை மன்னித்து, அவர்கள் செய்த நல்ல செயல்களை மட்டும் கருத்தில் கொண்டு அவர்களை தடுத்தாட்கொள்கிறான். இறைவனது இந்த குணம் தான் இன்று பலரது வாழ்க்கையை தடம் மாற்றியிருக்கிறது.

    எனவே உங்கள் பிள்ளைகளுக்கு பணத்தை மட்டும் சேர்க்காமல் புண்ணியத்தையும் சேர்த்து வாருங்கள். பணம் காக்காவிட்டாலும் புண்ணியம் காக்கும்.

    Next Story
    ×