search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சதுரகிரியில் ஒரேநாளில் 35 ஆயிரம் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்
    X

    ஆடி அமாவாசைைய முன்னிட்டு சதுரகிரி மலைப்பாதையிலும், சுந்தர மகாலிங்கம் கோவில் சன்னதி நுழைவு வாயிலிலும் திரண்டிருந்த பக்தர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.

    சதுரகிரியில் ஒரேநாளில் 35 ஆயிரம் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம்

    • ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரியில் ஒரேநாளில் 35 ஆயிரம் பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்தனர்.
    • 18 சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் அமைந்துள்ளது. இங்கு சுந்தர மகாலிங்கமும், இரட்டை லிங்கமும் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளன.மாதந்தோறும் வரும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தலா 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    வருடந்தோறும் சதுரகிரியில் ஆடி அமாவாசை அன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு கடந்த 12-ந்தேதி முதல் இன்று வரை 6 நாட்கள் பக்தர்கள் சதுரகிரி செல்ல அனுமதி வழங்கப்பட்டது.

    முதல் நாளான 12-ம் தேதியில் இருந்தே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் தாணிப்பாறை அடிவாரத்தில் உள்ள தோட்டங்களில் தங்கி மலையேறி சென்று சாமி தரிசனம் செய்தனர். கடந்த 12-ந்தேதி முதல் 15-ந்தேி வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சதுரகிரி மலையேறினர்.

    நேற்று ஆடி அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி மலையில் சுயம்புவாக எழுந்தருளி அருள் பாலித்து கொண்டு இருக்கும் சுந்தர மகாலிங்கம், சித்தர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்ட சந்தன மகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமி மற்றும் 18 சித்தர்களுக்கு நடந்த சிறப்பு பூஜையில் 18 வகையான அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் சுந்தர மகாலிங்க சுவாமி,சந்தன மகாலிங்க சுவாமி,சுந்தரமூர்த்தி சுவாமிகள் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

    நேற்று அதிகாலை 3.30 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை சுமார் 35 ஆயிரத்திற்கும் அதிகமான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் தேனி மாவட்டம் வருசநாடு உப்புத்துறை பாதையிலும், மதுரை மாவட்டம் சாப்டூர் வாழைத்தோப்பு பாதை வழியாகவும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சென்று சுவாமி தரிசனம் செய்தனர்.

    தாணிப்பாறை அடிவாரப் பகுதிகளில் உள்ள தோப்புகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தி, கிடாய் வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மலைக் கோயிலில் கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். சதுரகிரி மலையில் கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சதுரகிரி வழிபாடு முடித்துவிட்டு சொந்த ஊர் திரும்பும் பக்தர்கள் சிறப்பு பேருந்துகள் பற்றாக்குறையால் பெரும் அவதிக்கு ஆளாகினர்.

    நக்சல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. முருகன் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட நக்சலைட் தடுப்பு சிறப்பு போலீஸார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஆடி அமாவாசை திருவிழா ஏற்பாடுகளை கோயில்பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். வனத்துறை மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.இறுதி நாளான இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சதுரகிரியில் சாமி தரிசனம் செய்தனர்.

    Next Story
    ×