search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சதுரகிரியில் 200 பக்தர்கள் சிக்கி தவிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் 2-வது நாளாக கொட்டி தீர்க்கும் கனமழை
    X

    சதுரகிரி மாங்கனி ஓடைப்பகுதியில் சிக்கிய பக்தர்களை மீட்ட வனத்துறையினர். 

    சதுரகிரியில் 200 பக்தர்கள் சிக்கி தவிப்பு: விருதுநகர் மாவட்டத்தில் 2-வது நாளாக கொட்டி தீர்க்கும் கனமழை

    • தொடர் மழையால் ராஜ பாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்க ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
    • வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே மலைப்பாதையில் சிக்கியிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே இறக்கினர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் நகர் பகுதியில் நேற்று மாலை தொடங்கிய சாரல் மழை இன்று காலை வரை விடிய, விடிய பெய்தது. இதனால் நகரின் முக்கிய சாலைகளில் மழை நீர் குளம் போல் தேங்கியது.

    இன்று காலையில் தொடர் மழை காரணமாக விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்தது.

    மாவட்டத்தின் பிற பகுதிகளான சாத்தூர், சிவகாசி, இருக்கன்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜ பாளையம், வத்திராயிருப்பு, பிளவக்கல் அணை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 2-வது நாளாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழை பெய்தது.

    வெம்பக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் வெம்பக் கோட்டை நீர்த்தேக்க அணை இன்று அதிகாலை முழு கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து தண்ணீர் வட்டாட்சியர் பாண்டீஸ்வரி முன்னிலையில் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இருக்கன்குடி நீர்த்தேக்கத்தை அடையும். இதன் காரணமாக ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    ராஜபாளையம் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பேயனாறு, அய்யனார் ஆறு மற்றும் காட்டாற்றுகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழையால் ராஜ பாளையம் நகருக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் 6-வது மைல் நீர்த்தேக்க ஏரியில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.


    ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட குளங்கள், கண்மாய்கள் நிரம்பி மறுகால் பாய்கின்றன. வத்திராயிருப்பு பகுதியிலும் தொடர் மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பிளவக்கல் அணையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக அணையில் இருந்து கணிசமாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அங்குள்ள மரிச்சு கட்டு பாலம் தண்ணீரில் மூழ்கியது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் உள்ள கூமாபட்டி, முதலியார்பட்டி, கொளூர்பட்டி, தெற்கு தெரு ஆகிய பகுதிகளில் மழைநீர் வீடுகளில் சூழ்ந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்துவிழுந்தன. மின்தடை ஏற்பட்டது.

    அருப்புக்கோட்டை, திருச்சுழி, காரியாபட்டி உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்மழை பெய்து வருகின்றன. 2 நாட்களாக கொட்டித்தீர்த்து வரும் மழையால் மாவட்டத்தில் உள்ள 80 சதவீத நீர்நிலைகளில் தண்ணீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    திருச்சுழி, நரிக்குடி பகுதிகளில் பெய்த கனமழையால் கண்மாய்கள் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. இதன் காரணமாக பல இடங்களில் மழைநீர் வயல்களில் புகுந்து நெற் பயிர்கள் சேதமடைந்தன. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

    வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு நேற்று பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை 6 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை மலை ஏறினர். மாலையில் சதுரகிரி மலை பகுதியில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்ய தொடங்கியது. இதனால் பக்தர்கள் அவசர அவசரமாக மலையில் இருந்து இறங்கினர். ஆனாலும் கனமழையால் மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடை, எலும்போடை, சங்கிலிபாறை, பிளாவடி கருப்பசாமி பகுதியில் உள்ள ஓடைகளில் திடீரென காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது.

    இதையடுத்து வனத்துறை யினர், தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து செயல்பட்டு ஆங்காங்கே மலைப்பாதையில் சிக்கியிருந்த பக்தர்களை பத்திரமாக கீழே இறக்கினர்.

    தொடர் மழையால் காட்டாற்றுகளில் வெள்ளம் அதிகரிக்கவே சதுரகிரி மலைக்கோவிலில் இருந்த 200 பக்தர்கள் கீழே இறங்க பக்தர்கள் அனுமதி மறுத்தனர். அவர்கள் கோவிலிலேயே தங்க வைக்கப் பட்டனர். இன்று காலை வரை மழை நிற்காததால் பக்தர்கள் கோவிலிலேயே தவிக்கும் நிலை ஏற்பட்டது.

    இந்த நிலையில் மலைப் பாதையில் உள்ள மாங்கனி ஓடை அருகே சிக்கியிருந்த பெண்கள் உள்பட 20-க்கும் மேற்பட்டோரை இன்று காலை நிலை அலுவலர் பால நாகராஜ், வனச்சரக அலுவலர் பிரபாகரன், வனவர் அபிஷேக்குமார் தலைமையிலான வீரர்கள் கயிறு கட்டி மீட்டு அடிவாரத்திற்கு பத்திரமாக கொண்டு வந்தனர். மழை நின்ற பின்பு சதுரகிரி மலையில் உள்ள பக்தர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    திருச்சுழி-149.50, ராஜபாளையம்-136, காரியாபட்டி-81, ஸ்ரீவில்லிபுத்தூர்-153.90, விருதுநகர்-126.80, சாத்தூர்-203, சிவகாசி-171, பிளவக்கல்-142, வத்திராயிருப்பு-144.80, கோவிலாங்குளம்-167.40, வெம்பக்கோட்டை-180, அருப்புக்கோட்டை-124, மொத்த மழை அளவு-1779.40 மி.மீ. ஆகும்.

    சிவகங்கை மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் மழை பெய்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. மானாமதுரை, இளையாங்குடி பகுதிகளில் லேசான மழை பெய்தது. இன்று காலை வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    Next Story
    ×