என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "therottam"

    • விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது.
    • கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

    சிவகாசி:

    சிவகாசியில் பழமை வாய்ந்த விஸ்வநாத ஸ்வாமி கோவில் உள்ளது இந்த கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கடந்த 27-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடந்த 10 நாட்களாக நடைபெற்று வந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் விசுவநாத ஸ்வாமி, விசாலாட்சி அம்மன் ரிஷப வாகனம், குதிரை வாகனம், காமதேனு, வாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி யளித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வந்தது. தேர் எல்லையை நோக்கி வந்து கொண்டிருந்தபோது அறநிலையத்துறை சார்பில் கோவில் தேரை வடக்கு ரத வீதியில் நிறுத்த வேண்டும் என கூறினார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் மற்றும் கோவில் மண்டகப்படிதாரர்கள் கோவில் முன்புதான் தேரை நிறுத்த வேண்டும் என்று காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கிழக்கு ரத வீதயில் தேர் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. பின்னர் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து தற்காலிகமாக கோவில் முன்பு தேரை நிறுத்துவதற்கு அதிகாரிகள் ஒப்புதல் தெரிவித்ததை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். அதன் பின்னர் தேர் நிலையை வந்து அடைந்தது. சுமார் 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    • காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.
    • வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரத்தில் உலக புகழ் பெற்ற வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்கும் வரதராஜ பெருமாள் கோவில் 24 ஏக்கர் பரப்பளவில் கிழக்கு மேற்கு பகுதிகளில் 2 ராஜ கோபுரங்களுடன், அனந்த சரஸ் திருக்குளம், பொற்றாமரை திருக்குளம், என இரு திருக்குளங்களுடன், வேணுகோபாலன் சன்னதி, பூவராகவர் சன்னதி, ரங்கநாதர் சன்னதி, சக்கரத்தாழ்வார் சன்னதி, நம்மாழ்வார் சன்னதி, மணவாள மாமுனிகள் சன்னதி, உடையவர் மற்றும் ஆழ்வார்கள் சன்னதி, வேதாந்த தேசிகர், தாத தேசிகன் சன்னதி, ராமர் சன்னதி, திருப்பனந்தாள்வான் சன்னதி, கரிய மாணிக்க பெருமாள் சன்னதி, பெருந்தேவி தாயார் சன்னதி, லட்சுமி நரசிம்ம சாமி சன்னதி, ஆண்டாள் சன்னதி, சேனை முதன்மையார் சன்னதி, தன்வந்திரி சன்னதி, வலம்புரி விநாயகர் சன்னதி, மலையாள நாச்சியார் சன்னதி, உள்ளிட்ட சன்னதிகளுடன் விளங்குகிறது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வைகாசி பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பிரம்மோற்சவம் கடந்த 11-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் 20-ந்தேதி வரை நடக்கிறது.

    நாள்தோறும் வரதராஜ பெருமாள், காலை, மாலை, என இரு வேலைகளிலும் தங்க சப்பரம், சிம்ம வாகனம், ஹம்ச வாகனம், சூரிய பிரபை வாகனம், கருட வாகனம், அனுமந்த வாகனம், சேஷ வாகனம், சந்திர பிரபை வாகனம், தங்கப் பல்லக்கு, யாளி வாகனம், யானை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம், புண்ணியகோட்டி விமானம் ஆகிய வாகனங்களில் சிறப்பு அலங்காரங்களில் காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் வீதி உலா வந்தார்.

    இந்த நிலையில் வரதராஜ பெருமாள் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

    7-வது நாள் விழாவை முன்னிட்டு 100 டன் எடையுள்ள 63 அடி உயரமும் 30 அடி அகலமும் 5 நிலைகளும் கொண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வரதராஜ பெருமாள் எழுந்தருளி காஞ்சிபுரம் நகரின் ராஜ வீதிகளில் பவனி வந்தார்.

    பக்தி முழக்கத்துடன் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். திரளான பக்தர்கள் திரண்டு வந்த சாமி தரிசனம் செய்தனர்.

    • கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
    • உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி சுவாமி கோவில் அமைந்துள்ளது. இத்தலம் 108 திவ்ய தேசங்களில் ஸ்ரீரங்கம், திருப்பதிக்கு அடுத்ததாக போற்றப்படுகிறது.

    இத்தலம் நாலாயிர திவ்ய பிரபந்தம் விளைந்த தலமாக கருதப்படும் பெருமையுடையது. ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை 'குடந்தைக் கிடந்தான்' என அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சார்ங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழை கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் விளங்குகின்றது.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழா நாட்களில் தினமும் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி எழுந்தருளி வீதிஉலா காட்சிகள் நடைபெற்று வந்தது. கடந்த 5-ந்தேதி ஓலைச்சப்பரத்தில் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (சனிக்கிழமை) காலை நடைபெற்றது. இந்த தேர் தமிழகத்திலேயே 3-வது பெரிய தேர் என்ற பெருமை உடையதாகும். முன்னதாக உற்சவர் சாரங்கபாணி, ஸ்ரீதேவி, பூமிதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து, தீபாராதனை காண்பிக்கப்பட்டு, தேரோட்டம் தொடங்கியது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷம் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேரானது 4 ரதவீதிகளில் அசைந்தாடியபடி வலம் வந்து நிலையை அடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    பாதுகாப்பு பணியில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டிருந்தனர். நடமாடும் மருத்துவ குழுவினரும், தீயணைப்பு வாகனமும் தேரை பின்தொடர்ந்தவாறு சென்றது. தேரோட்டத்தை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் கும்பகோணம் மாநகரமே விழாக்கோலம் பூண்டது.

    • திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
    • தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    அவினாசி:

    கொங்கு ஏழு சிவாலயங்களில் முதன்மை பெற்றதும், காசிக்கு நிகரான சிறப்பும் பெற்ற திருப்பூர் மாவட்டம் அவினாசி அவிநாசிலிங்கேசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் தேர் திருவிழா நடைபெறும்.

    அதேபோல் இந்த ஆண்டு கடந்த 1-ந்தேதி கொடியேற்ற நிகழ்ச்சியுடன் தேர் திருவிழா தொடங்கியது. திருவிழாவையொட்டி 5-ந்தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தனர்.

    நேற்று முன்தினம் இரவு திருக்கல்யாணம் நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு பஞ்ச மூர்த்திகளும் பெருமாளும் திருத்தேருக்கு எழுந்தருளும் வைபவம் நடைபெற்றது. இதையடுத்து தேரில் எழுந்தருளிய சுவாமியை பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.

    இன்று (வியாழக்கிழமை ) காலை 8 மணிக்கு தேரின் மேல் வீற்றிருந்த சாமிக்கு சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் 9 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. சிவாச்சார்யர்கள், ஆன்மீக பெருமக்கள், பக்தர்கள் 'அவிநாசியப்பா', 'அரோகரா', 'நமசிவாயா', சிவ... சிவ... என பக்தி கோஷமிட, சிவனடியார்கள் கைலாய வாத்தியம் முழங்க திருத்தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. திருத்தேரில் சோமஸ்கந்தர்- உமாமகேஸ்வரி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி கோவை, ஈரோடு உள்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    கோவில் முகப்பில் இருந்து புறப்பட்ட தேரானது சிறிது தொலைவு இழுத்து செல்லப்பட்டு நிறுத்தப்படுகிறது. தேரின் 2 பின் சக்கரங்களிலும் ராயம்பாளையம் மற்றும் புதுப்பாளையம் சன்னை மிராசுகள் சன்னை போட்டு தேரை நகர்த்தி கொடுத்தனர்.

    நாளை 9-ந்தேதி மீண்டும் காலை 9 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து மாலை 4 மணி அளவில் நிலை வந்து சேர உள்ளது. 10-ந் தேதி அம்மன் தேரோட்டம் நடக்கிறது. 11-ந்தேதி மாலை வண்டித்தாரை, பரிவேட்டையும் 12-ந்தேதி தெப்ப தேர் உற்சவமும் நடக்கிறது. 13-ந்தேதி மகா தரிசன விழாவும், 14-ந்தேதி மஞ்சள் நீர் விழாவும் நடக்கிறது.

    தேரோட்டத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முக்கிய இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மேலும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வெயிலின் தாக்கத்தால் ரத வீதிகளில் ஆங்காங்கே நீர்-மோர் வழங்கப்பட்டது.

    அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் தேரோட்டம் கோவில் முகப்பில் உள்ள தேர் நிலையில் தொடங்கி ரத வீதிகள் வழியாக மீண்டும் நிலை வந்து சேரும் வகையில் இன்று முதல் 3 நாட்கள் நடத்தப்படுகிறது.

    92 அடி உயரம், 400 டன் எடை கொண்ட இந்த தேர் திருவாரூர் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் தேருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் 3-வது பெரிய தேர் ஆகும்.

    • உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது.
    • பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    தஞ்சாவூர்:

    உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் மாமன்னர் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. கட்டிட கலையில் சிறந்து விளங்கும் இக்கோவிலுக்கு தினமும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர்.

    மேலும், பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். தொடர்ந்து, கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, கொடியேற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி புறப்பாடும், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் அடுத்த மாதம் (மே) 7-ந்தேதி நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தஞ்சை மேல வீதியில் உள்ள பெரிய கோவில் தேர் நிலையில் பந்தக்கால் முகூர்த்தம் இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது. முன்னதாக பந்தக்காலுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டு தேரில் பந்தக்கால் நடப்பட்டது. இதில் கோவில் பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா பான்ஸ்லே, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா, கோவில் செயல் அலுவலர் சத்யராஜ், கண்காணி ப்பாளர் ரவி, ஆய்வாளர் பாபு மற்றும் பணியாளர்கள், பக்தர்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள்.
    • அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள்.

    திருப்பூர் மாவட்டம் உடுமலை மாரியம்மனுக்கு சுமார் 200 ஆண்டு கால வரலாற்று பெருமை உள்ளது. உடுமலை நகரில் அமைந்துள்ள இந்த கோவிலில் மூல விக்ரகத்தின் முன் சுயம்புவாக எழுந்து அம்மன் அருள் பாலித்து வருவதோடு, நோய்களில் இருந்து காக்கும் தெய்வமாகவும் மாரியம்மனை பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.


    கண் புரை, அம்மை நோய், ஜூரம், வெயில் கொப்புளங்கள் ஆகியவையோடு வெப்பத்தால் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் குணமும், குளுமையும் தந்து காப்பவள் என்ற பெருமையும் கொண்டவள் உடுமலை மாரியம்மன்.

    அம்மை வார்க்கும்போது அம்மனை வழிபட்டு நோய் குணமாக பூச்சட்டி எடுத்தல், பூ மிதித்தல், அடி அளந்து கொடுத்தல், தீர்த்தம் கொடுத்தல் போன்ற நேர்த்திக் கடன்களை மக்கள் அம்மனுக்கு காணிக்கையாக்கி வழிபடுகின்றனர். சாதி பேதமின்றி அனைத்து சமயத்தினரும் உடுமலை மாரியம்மனை வணங்கி வழிபடுவது பெரிய சிறப்பாகும்.

    மணமாகாத கன்னிப்பெண்கள் அம்மன் சந்நிதிக்கு வந்து தரிசனம் செய்தால் நல்ல வாழ்க்கை துணை கொடுப்பாள் இந்த அன்னை என்பது மக்களுடைய நம்பிக்கையாக இருந்து வருகிறது.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த திருத்தலத்தில் தேர்த் திருவிழா ஆண்டுதோறும் பங்குனி, சித்திரை மாதங்களில் 15 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். பங்குனி அமாவாசைக்கு அடுத்து வரும் செவ்வாய்க்கிழமை நோன்பு சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும்.


    8-வது நாள் திருக்கம்பம் நடுதலும், மறுநாள் கொடியேற்று விழாவும் நடைபெறும். கொடி மர பூஜை, கொடி வஸ்திர பூஜை, அஸ்திர பூஜை ஆகியவைகள் செய்து கொடியேற்ற நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

    ஆத்மாவையும், தர்மத்தையும் கீழ் நிலையில் இருந்து உயர்நிலைக்கு கொண்டு செல்ல அன்னை கருணை இதயத்தோடு அருள்புரிய ஆயத்தமாக காத்திருக்கிறாள் என்பதையே கொடியேற்றுதல் நிகழ்ச்சி உலகிற்கு உணர்த்துகிறது.

    திருவிழாவின்போது ஒவ்வொரு நாளும் எழுந்தருளும் அம்மன் சமம், விசாரம், சந்தோஷம், சாது, சங்கமம் என்ற நான்கு கால்களாக கொண்ட ரிஷபம், யானை, காமதேனு, சிங்கம், மயில், அன்னம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதி உலா வந்து பொதுமக்களுக்கு அருள் பாலிக்கிறாள்.

    எண்ணிய எண்ணம் முடித்தல் வேண்டி அக்கினி சட்டி ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர் பக்தர்கள். வாழ்வில் விளக்கேற்றிடும் அன்னைக்கு மாவிளக்கு எடுத்து பெண்கள் வழிபடுகின்றனர். திருவிழாவின்போது 15ம் நாள் அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

    இந்த விழாக்களில் ஆண்டுதோறும் முக்கிய நிகழ்வாக பிரம்மிக்க வைக்கும் வகையில் திருத்தேரோட்டம் நடைபெறும்.

    இந்த ஆண்டு இன்று நடைபெறும் தேரோட்ட நிகழ்ச்சிக்கு உடுமலை நகரம் மற்றும் மடத்துக்குளம் சுற்றுவட்டாரத்தில் உள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களில் இருந்து பக்தர்கள், பொதுமக்கள் கூடியுள்ளனர் என்பது சிறப்பான ஒன்றாகும்.

    • இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கினார்.
    • சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது.

    நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது.

    இக்கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

    வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி இன்றளவும் காணப்படுகிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் சென்று நண்பகல் 11.40 மணிக்கு தேர்நிலையை அடைந்தது.

    தேரோட்டத்தில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், திருப்பணி குழுவினர், கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதை தொடர்ந்து இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கினார். பிறகு சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேல் வாங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகனுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கி நடைபெற்றது.திருவிழாவில் முக்கிய நிகழ்ச்சிகளாக கடந்த 29-ந் தேதி வேல் வாங்குதலும் 30-ந்தேதி சூரசம்ஹாரமும் நடைபெற்றது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது.தேரோட்டத்தையொட்டி கோவில் வாசல் முன்பு சட்டத்தேர் அலங்கரிக்கப்பட்டு தயாராக நின்றது, இதனையடுத்து கோவிலுக்குள் உள்ள உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணியசுவாமிக்கு மகாஅபிஷேகமும், சர்வஅலங்காரமும் தீப தூப, ஆராதனையும் நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தங்கமயில் வாகனத்தில் தெய்வானையுடன் முருகப்பெருமான் அமர்ந்து தன்இருப்பிடத்திலிருந்து மேளதாளங்கள் முழங்க புறப்பட்டு சட்டத்தேரில் காலை 9.05மணிக்கு எழுந்தருளினார்.

    காலை 9.15 மணிக்கு நிலையில் இருந்து தேர் புறப்பட்டு சன்னதி தெரு கீழ ரத வீதி, பெரிய ரத வீதி வழியாக 3 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் சட்டத்தேர் ஆடி அசைந்து வலம் வந்தது. தேரை பக்தர்கள் அரோகரா பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். காலை 11.35 மணிக்கு தேர் நிலையை அடைந்தது.

    தமிழ்புத்தாண்டு தினத்திலும், கந்தசஷ்டியின் 7-வது நாளும் முருகபெருமானுக்கு தங்க கவசம் சாத்தப்படுவது வழக்கம். அதன்படி கந்தசஷ்டியையொட்டி நேற்று மாலை 5 மணிக்கு தங்க கவச அலங்காரத்தில் முருகபெருமான் காட்சி அளித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.
    • மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது.

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த டி.கல்லுப்பட்டியை சுற்றி உள்ள ஏழு கிராமத்தினர் சமூக ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் சப்பர திருவிழா கடந்த 8-ந்தேதி முதல் இன்று (10-ந் தேதி) வரை 3 நாட்கள் நடைபெற்றது.

    இதையொட்டி 6 ஊர் சப்பரங்கள் அம்மாபட்டியில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்தது பரவசப்படுத்தியது. இந்த திருவிழா முத்தாலம்மன் கோவில் திருவிழா என்று அழைக்கப்படுகிறது.

    2 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த முத்தாலம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த திருவிழா சப்பர திருவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு அம்மாபட்டியை தவிர மற்ற 6 கிராமங்களிலும் சப்பரங்கள் செய்யும் பணி நடைபெற்று வந்தது.ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் சப்பரத்தை இரவு, பகல் பாராது செய்து வந்தனர். வண்ண, வண்ண காகிதங்கள், மூங்கில் கொண்டு சப்பரத்தை அலங்கரித்தனர்.

    ஒவ்வொரு சப்பரமும் 33 அடி முதல் 40 அடி வரை இருந்தது.கட்டப்பட்ட சப்பரத்தை திருவிழாவின் முக்கிய நாளான இன்று அந்தந்த கிராம மக்கள் தலை சுமையாகவே சுமார் 2 கிலோமீட்டர் அம்மாபட்டிக்கு சுமந்து கொண்டு வந்தனர்.

    கிளாங்குளம்,சத்திரப்பட்டி,சப்பரங்கள் வயல் வெளியில் பக்தர்களால் சுமந்து கொண்டு வரப்பட்டது. அம்மா பட்டியில் பச்சை மண்ணால் வடிவமைக்கப்பட்ட 7 அம்மன்களும் ஒரே நேரத்தில் தோன்றி திரண்டு இருந்த பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    ஒவ்வொரு கிராமத்தினரும் தங்கள் ஊர் அம்மன்களை பெற்றுக்கொண்டு அவரவர் கிராமத்துக்கு திரும்பினர். தொடர்ந்து சப்பரங்கள் அவர்கள் கிராமத்திற்கு திரும்பியது.பல ஊர்களில் சப்பரங்கள் மற்றும் தேர்களை, வடம் பிடித்து,அல்லது சக்கரங்கள் உதவிகொண்டு இழுத்து வருவார்கள். ஆனால் இங்கு மட்டும் கிராம மக்கள் தங்கள் தலை சுமையாக தூக்கி வருவது சிறப்பாகும்.இந்த சப்பர திருவிழாவை பார்த்து,அம்மன்கள் அருள்பெற வேண்டி பல்வேறு ஊர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர்.

    தொடர்ந்து மாவிளக்கு பூஜை, முளைப்பாரி, அம்மனுக்கு பூஜைகள் நடைபெற்றது. பல்வேறு சமுகத்தினர் ஒன்று கூடி தங்கள் ஒன்றுமையை திருவிழாவின் மூலம் வெளிபடுத்தினார்கள்.

    விழாவிற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை பேரையூர் டி.எஸ்.பி. இலக்கியா தலைமையில் 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.
    • அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

    திருச்செங்கோட்டில் உள்ள ஈரோடு சாலையில் அர்த்தநாரீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான பெரிய தெப்பக்குளம் உள்ளது. இங்கு சுமார் 51 ஆண்டுகளுக்கு பின்னா் நேற்று தெப்பத்தேர் திருவிழா விமரிசையாக நடந்தது. விழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தேரில் பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், அழகுமுத்து மாரியம்மன் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு தெப்பத்தேர் வடம் பிடிக்கப்பட்டது.

    அதன்படி கிழக்கு கரையில் இருந்து மேற்கு கரை சென்ற தெப்பத்தேரில் பவனி வந்த அம்மன்களுக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. தொடர்ந்து நடுகுள பகுதிக்கு வந்த தேருக்கு 4 திசைகளிலும் ஆராதனை செய்யப்பட்டு கிழக்கு கரையில் நிலை சேர்க்கப்பட்டது. அப்போது அங்கு திரண்டிருந்த திரளான பக்தர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த விழாவில் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங், உதவி கலெக்டர் கவுசல்யா, திருச்செங்கோடு துணை போலீஸ் சூப்பிரண்டு மகாலட்சுமி, தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் மதுரா செந்தில், தலைமை செயற்குழு உறுப்பினர் நடேசன் திருச்செங்கோடு நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு, மாவட்ட தி.மு.க. வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சுரேஷ்பாபு, நகராட்சி ஆணையாளர் கணேசன் அர்த்நாரீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் ரமணிகாந்தன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரைவடம் பிடித்து இழுத்தனர்.
    • கடைமுக தீர்த்தவாரி விழா இன்று நடைபெறுகிறது.

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்திபெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஐப்பசி மாதம் 30 நாட்களும் துலா உற்சவம்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு துலா உற்சவம் கடந்த மாதம் 18-ந் தேதி தீர்த்தவாரியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவின் கடைசி 10 நாட்கள் உற்சவம் கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் முக்கிய நிகழ்ச்சியாக கடந்த 13-ந் தேதி திருக்கல்யாணம் நடந்தது.

    மற்றொரு முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக வதாரண்யேஸ்வரர் பரிவார மூர்த்திகளுடன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தருமபுரம் ஆதீனம் மாசிலாமணிதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்ட திரளான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நேற்று மாலை 2 மணி அளவில் தொடங்கிய தேரோட்டம் மீண்டும் நிலையை வந்தடைந்தது. துலா உற்சவத்தின் முக்கிய விழாவான கடைமுக தீர்த்தவாரி விழா இன்று (புதன்கிழமை) மதியம் 1 மணியளவில் நடைபெறுகிறது.

    • ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பரிமள ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    • காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.

    108 வைணவ திவ்ய தேசங்களுள் 22-வது தலமாகவும், பஞ்ச அரங்கங்களில் 5-வது அரங்கமாகவும் திருவிழந்தூர் பரிமள ரெங்கநாதர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் ஐப்பசி மாத காவிரி துலா உற்சவம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 7-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    உற்சவத்தின் 10-ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. இதனை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவிகளுடன் பரிமள ரெங்கநாதர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருள செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, பரிமள ரெங்கநாதா, நாராயணா என பக்திகோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    நான்கு வீதிகளையும் சுற்றி வந்த தேர் மீண்டும் நிலையை அடைந்தது. இதனைத்தொடர்ந்து மதியம் பரிமள ரெங்கநாத பெருமாள் காவிரி மண்டபத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடந்தது.

    ×