என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சிவ கோஷங்கள் முழங்க சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்
    X

    சிவ கோஷங்கள் முழங்க சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் கோலாகலம்

    • சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
    • தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர்.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்ற ழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடை பெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

    முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். திரளான பக்தர்கள் இன்று காலை 8 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர், அம்மன் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக தேரின் முன்பு பெண்கள் கும்மியடித்த படியும், ரத வீதிகளில் கோலம் போட்டபடியும் சென்றனர். மேலும் பக்தர்கள் சிவன்-பார்வதி வேடமிட்டபடி நடனமாடி சென்றனர்.

    தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழி யாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    நாளை ஜூலை 2-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சி யும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் சாமிகள் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டு மல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஜூலை 3-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி ஞானகாச பிரகாசம் கோவில் குளத்தில் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கான பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில், தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×