என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிதம்பரம் நடராஜர் கோவில்"

    • இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

    தேரானது கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழ ரத வீதியை வந்தடையும். தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர். பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர். தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.

    தொடர்ந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.

    நாளைமறுநாள் (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.

    • ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது.
    • 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

    உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டு இன்று காலை மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனைதொடர்ந்து நாளை சந்திர பிரபை வாகன வீதி உலா, நாளைமறுநாள் தங்க சூரிய பிரபை வாகனத்தில் வீதி உலா, 28-ந் தேதி வெள்ளி பூத வாகனத்தில் வீதி உலா, 29-ந் தேதி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் வீதி உலாவும், 30-ந் தேதி யானை வாகன வீதி உலாவும், 31-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலாவும் நடக்கிறது.

    அதனைத்தொடர்ந்து ஜனவரி மாதம் 1-ந்தேதி தங்க ரதத்தில் சோமாஸ்கந்தர் வெட்டுக்குதிரையில் வீதி உலாவும் நடைபெறுகிறது. 2-ந் தேதி தேர்த்திருவிழாவும், இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது. 3-ந்தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசியபூஜையும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது. 4-ந் தேதி பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர். உற்சவ 10 நாட்களும் மாலை 6 மணிக்கு சாயரட்சை பூஜையில் சித்சபை முன்பு மாணிக்கவாசகரை எழுந்தருளிச் செய்து திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. 

    • சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர்.
    • தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர்.

    சிதம்பரம்:

    பூலோக கைலாயம் என்ற ழைக்கப்படும் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆனித் திருமஞ்சன விழா கடந்த 23-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை தொடர்ந்து தினமும் காலை, மாலை இரு வேளையும் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா நடை பெற்றது. ஆனி திருமஞ்சன விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) காலை நடைபெற்றது.

    முன்னதாக இன்று அதிகாலை சித்சபையில் இருந்து புறப்பட்ட சிவகாம சுந்தரி சமேத நடராஜமூர்த்தி, விநாயகர், முருகர், சண்டி கேஸ்வரர், தேர் நிலையான கீழரத வீதியில் தனித்தனியே அமைக்கப்பட்ட தேர்களில் வைக்கப்பட்டனர்.

    சிறப்பு தீபாராதனைக்கு பின்னர் மேளதாளங்கள் முழங்க சிவனடியாகள் சிவ கோஷங்களை எழுப்பினர். தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பதிகங்களை பாடி ஆனந்த நடனமாடி சிவபக்தர்கள் முன்னே சென்றனர். திரளான பக்தர்கள் இன்று காலை 8 மணிக்கு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

    முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதனை தொடர்ந்து சண்டிகேஸ்வரர், முருகர், நடராஜர், அம்மன் தேர்கள் ஒன்றன் பின் ஒன்றாக புறப்பட்டது.

    முன்னதாக தேரின் முன்பு பெண்கள் கும்மியடித்த படியும், ரத வீதிகளில் கோலம் போட்டபடியும் சென்றனர். மேலும் பக்தர்கள் சிவன்-பார்வதி வேடமிட்டபடி நடனமாடி சென்றனர்.

    தேரானது கீழரதவீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழி யாக மீண்டும் தேர்நிலையான கீழரத வீதிக்கு இரவு 7 மணிக்கு வந்தடையும். பின்னர் இரவு 8 மணிக்கு சிவகாமி சுந்தரி சமேத நடராஜமூர்த்தி ஆயிரங்கால் மண்டபத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும்.

    நாளை ஜூலை 2-ந் தேதி அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், சொர்ணாபிஷேகம், புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது.

    பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், திரு ஆபரண அலங்கார காட்சி யும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆயிரம் கால் மண்டபத்தில் இருந்து புறப்படும் சாமிகள் முன் முகப்பு மண்டபத்தில் உள்ள நடன பந்தலில் சிவகாமி சுந்தரி சமேத நடராஜருக்கு முன்னுக்குப் பின்னுமாய் 3 முறை நடனமாடி பக்தர்களுக்கு ஆனித்திருமஞ்சன தரிசன நிகழ்ச்சி நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டு மல்லாமல் பிற மாநிலங்களில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    ஜூலை 3-ந் தேதி பஞ்ச மூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலா நடக்கிறது. 4-ந் தேதி ஞானகாச பிரகாசம் கோவில் குளத்தில் தெப்போற்சவத்துடன் விழா நிறைவடைகிறது.

    உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கான பாதுகாப்பு பணியில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் நகராட்சி சார்பில் நகராட்சி சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பேரில், நகராட்சி அதிகாரிகள் மேற்பார்வையில், தூய்மை பணி மற்றும் குடிநீர் வழங்கல் பணியை ஊழியர்கள் செய்து வருகின்றனர்.

    • கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.
    • விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திரு மஞ்சன திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது.

    இக்கோவிலில் ஆண்டு தோறும் ஆனி திருமஞ்சன விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சன திருவிழா இன்று (திங்கட்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பொது தீட்சிதர்கள் கமிட்டி செயலாளர் சிவசுந்தர தீட்சிதர் கொடியேற்றி பூஜைகளை நடத்தினார்.

    நாளை (24-ந் தேதி) வெள்ளி சந்திரபிறை வாகனத்தில் சாமி வீதி உலாவும், 25-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது.

    27-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனம், 28-ந் தேதி வெள்ளி யானை வாகனம், 29-ந் தேதி தங்க கைலாச வாகனத்தில் சாமி வீதி உலா நடக்கிறது. 30-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 1-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடக்கிறது.

    2-ந் தேதி அதிகாலை காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம், 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடக்கிறது.

    அன்று மதியம் 3 மணிக்கு மேல் ஆனிதிருமஞ்சன தரிசனம், ஞானகாச சித்சபா பிரவேசம் நடக்கிறது. 4-ந் தேதி தெப்ப உற்சவத்துடன் விழா முடிவடைகிறது.

    விழா ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்‌.
    • சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது.

    'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச்சன்னிதி அமைந்திருக்கிறது.

    நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.

    ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்தரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்திரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை.

    சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்திரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்திரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.

    • இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றுகின்ற அனைவருமே இந்துக்கள் தான்.
    • கோவில் வருகின்ற வருமானங்களை முறையாக கணக்கு கேட்கின்ற பொழுது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கீழ்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையிலுள்ள காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் மேம்பாட்டுப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    அதனைத்தொடர்ந்து அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    கேள்வி: அறநிலையத்துறையின் மூலம் தொடங்கப்படவுள்ள கல்லூரிகளின் தற்போதைய நிலை மற்றும் புதிய பள்ளிகள் தொடங்கப்படுமா?

    பதில்: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்கனவே 10 கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவிப்பு கொடுத்திருந்தோம். அதில் 4 கல்லூரிகளை தற்போது செயல்பாட்டில் உள்ளது. மீதம் 6 கல்லூரிகளை தொடங்குவதற்கு அந்தந்த கோவில்களில் அறங்காவலர்களை நியமித்து, கல்லூரி கல்வி இயக்ககத்தில் அனுமதி பெற்று, நீதிமன்றத்திற்கு தகவல் தெரிவித்து மற்ற கல்லூரிகளை தொடங்கலாம் என நீதிமன்ற தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    அதற்குண்டான சட்டப்படியான நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டு இருக்கின்றோம். ஏற்கனவே தொடங்கப்பட்டு செயல்பட்டு கொண்டிருக்கின்ற 3 கல்லூரிகளுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அர்த்தநாரீஸ்வரர் கோவில் கல்லூரிக்கு அறங்காவலர்களை நியமிக்க இருக்கின்றோம். புதிய பள்ளிக்கூடங்களை ஏற்படுத்துகின்ற அவசியம் தற்போது எழவில்லை.

    கேள்வி: சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் அறநிலையத்துறை மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப் போவதாக தெரிவித்துள்ளது குறித்தும்

    பதில்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர யாரும் தடையாகவே இல்லை. இந்து சமய அறநிலையத்துறை செயல்பாடுகள் தவறு என்றால் அவர்கள் தாராளமாக நீதிமன்றத்திற்கு செல்லலாம். தவறுகள் எங்கு நடந்தாலும் அதை தட்டிக்கேட்கின்ற, சுட்டிக்காட்டுகின்ற கடமை இந்து சமய அறநிலையத்துறைக்கு உண்டு. சிதம்பரம் கோயில் ஒன்றும் தீட்சிதர்களால் உருவாக்கப்பட்ட கோயில் அல்ல, மன்னர்களால், நம்மை ஆண்ட முன்னோர்களால் உருவாக்கப்பட்ட கோயில்.

    அந்த கோவில் வருகின்ற வருமானங்களை முறையாக கணக்கு கேட்கின்ற பொழுது கணக்கு காட்டுவது தீட்சிதர்களின் கடமை. அதேபோல் நிர்வாகத்தில் இருக்கின்ற குளறுபடிகளை கேள்விகளாக கேட்கின்றபோது அதற்கு பதில் சொல்வதும் அவருடைய கடமை. கோவில் உள்ளே அவர்கள் இஷ்டத்திற்கு கட்டிடங்களை எழுப்பி இருக்கின்றார்கள்.

    இப்போது எழுப்பப்பட்ட கட்டிடங்கள் நிலை குறித்து கேள்வி கேட்பது இந்து சமய அறநிலையத்துறையின் கடமையாகும். அதேபோல அத்திருக்கோயிலுக்கு மன்னர்களால் சேர்த்து வைக்கப்பட்ட, வழங்கப்பட்ட சொத்துக்கள், நகைகள், விலைமதிப்பற்ற பொருட்களுடைய நிலையை ஆய்வு செய்வது இந்து சமய அறநிலையத்துறையின் கடமை. இதற்கு முழுவதும் ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை.

    ஆகவே எங்களுடைய பணி நியாயத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றது. அவர்கள் நீதிமன்ற அவமதிப்பு தொடர்ந்தால் அதற்கான விளக்கத்தை நாங்களும் நீதிமன்றத்தில் எடுத்து சொல்வதற்கு தயாராக இருக்கின்றோம். இந்து அறநிலையத்துறையை பொறுத்தளவில் எந்த விதமான அத்துமீறலும், அதிகாரம் செய்யவில்லை. மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் நியாயத்தின்படி நடக்கச் சொல்லி தான் உத்தரவிட்டிருக்கின்றார். ஆகவே நியாயத்தை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை இந்து சமய அறநிலையத்துறை மேற்கொள்ளும்.

    கேள்வி: சிதம்பரம் கோயில் அமைந்துள்ள இடம் அரசுக்கு சொந்தமான இடமா?

    பதில்: அந்த இடத்தை பொறுத்தளவில் முழுக்க அரசினுடைய இடம். இருந்தாலும் தற்போது இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர், துணை ஆணையர், உதவி ஆணையர் ஆகியோரை கொண்ட ஒரு குழு முழுமையாக ஆய்வு செய்து அறிக்கையும் தந்திருக்கின்றது. தற்போது நகைகள் சரி பார்க்கின்ற பணிகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஆகவே விசாரணை தொடர்வதால் முழு விளக்கத்தையும் அளிப்பது ஏற்புடையதாக இருக்காது இருந்தாலும் அந்த கோவில் இடம் அரசுக்கு சொந்தமான இடம்.

    கேள்வி: இந்து சமய அறநிலையத்துறையும், அதன் அமைச்சரும் எல்லையைத் தாண்டி செயல்படுவதாக குற்றம் சாட்டப்படுகிறதே?

    பதில்: நாங்கள் எல்லையைத்தாண்டி வரவில்லை. அப்படி இருந்து சுட்டி காட்டினால் தவறு இருந்தால் திருத்திக் கொள்கிறோம். குறைகள் இருந்தால் அதை நிறைவு செய்ய தயாராக இருக்கின்றோம். எல்லை தாண்டி எப்பொழுதுமே நாங்கள் செல்வதற்கு எங்களுடைய முதலமைச்சர் அவர்கள் அனுமதிக்க மாட்டார். இது சட்டத்தின் ஆட்சி நடைபெறுகின்ற மாநிலம். சட்டத்திற்குட்பட்டு தான் அனைத்து நடவடிக்கைகளையும் நாங்கள் மேற்கொள்வோம்.

    கேள்வி: கோவில்களை இந்துக்கள் தான் நிர்வகிக்க வேண்டும். அரசு நிர்வகிக்கக் கூடாது என இந்து முன்னணியினர் தெரிவித்துள்ளது குறித்து?

    பதில்: இந்து சமய அறநிலையத்துறையில் பணியாற்றுகின்ற அனைவருமே இந்துக்கள் தான். அப்படி என்றால் இந்துக்கள் தான் கோவில்களை நிர்வகிக்கிறார்கள் இதில் கேள்வி எழுப்ப அதற்கு என்ன இருக்கின்றது. அவர்களுக்கு எந்த பொருளும் கிடைக்கவில்லை தூக்கி வீசுவதற்கு ஆதலால் ஏதாவது ஒன்றை இப்படி சம்பந்தமே இல்லாமல் அதில் எள்ளளவும் நியாயம் இல்லாமல் கருத்துக்களை கூறுவது வாடிக்கையாக வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

    1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட கோவில்களை புனரமைப்பது ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் கழித்தும் திருப்பணி நடைபெறாத கோவில்களில் திருப்பணி செய்து கும்பாபிஷேகம் செய்வது, ஏற்கனவே கும்பாபிஷேகம் ஆரம்பிக்கப்பட்டு பல ஆண்டு காலம் தொடர்ந்து திருப்பணிகள் நிறைவேறாமல் இருக்கின்ற கோவில்களை புனரமைப்பது, கோவில்களில் ஓடாமல் இருக்கின்ற தங்க தேர்களை ஓட வைப்பது, திறக்காத வாயில் கதவுகளை திறக்க வைப்பது போன்றவைதான் இத்துறையின் பயணமாகும். கோவில்களில் பணியாற்றுகின்ற அர்ச்சகர்கள், பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் உரிமைகளை பாதுகாப்பதைதான் தனது பயணத்தில் மேற்கொண்டு இருக்கிறோம். இதை எங்களுடைய கடமைகளாக செய்கிறோமே தவிர அரசியலுக்கு எள்ளளவும் இதற்கு இடமில்லை.

    கேள்வி: இந்து சமய அறநிலையத்துறையில் இதுவரை எவ்வளவு சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன?

    பதில்: இதுவரை சுமார் 3700 கோடி ரூபாய் அளவிற்கு ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டிருக்கின்றன. இந்த மீட்பு நடவடிக்கை தொடரும். குறிப்பாக வாடகை வசூல் நிலுவையில் இருந்த ரூபாய் 200 கோடி இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு வசூலிக்கப்பட்டிருக்கின்றது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • நடராஜ தீட்சிதர், பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார்.
    • கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் ஒருவரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்தவர் தர்ஷன் என்கிற நடராஜ தீட்சிதர். இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு கனகசபை மீது ஏறிய விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். எனவே அவருக்கு கோவில் பணி வழங்காமல் இருந்தது.

    இந்த நிலையில் தனக்கு கோவில் பணி வழங்கவேண்டும், சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும், கோவில் தீட்சிதர்களை கண்டித்தும் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருந்தார்.

    அதன்படி இன்று காலை நடராஜ தீட்சிதர், பொது தீட்சிதர்கள் அலுவலகம் முன்பு இன்று உண்ணாவிரதத்தை தொடங்கினார். அப்போது தீட்சிதர்களுக்கு எதிராக கோஷமிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த சிதம்பரம் டவுன் போலீசார் அங்கு விரைந்து சென்று சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். கோவில் பொது தீட்சிதர்களை கண்டித்து தீட்சிதர் ஒருவரே உண்ணாவிரத போராட்டம் நடத்தியது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பின்னர் 29-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது. முன்னதாக அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    தொடர்ந்து 7-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8-ந் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    • ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகம் நடைபெறுகிறது.
    • மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

    கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் அமைந்துள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம்.

    அதில் மார்கழி, ஆனி மாதம் நடைபெறும் ஆருத்ரா தரிசன விழா சிறப்பு வாய்ந்தவையாகும்.

    ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

    அதன்படி நடராஜர் கோவிலில் இந்தாண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன திருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    விழாவையொட்டி தினமும் காலை, மாலை பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும், கடந்த 1-ந்தேதி தெருவடைச்சான் உற்சவமும் நடைபெற்றது.

    நாளை (வெள்ளிக்கிழமை) மதியம் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளது.

    ஆருத்ரா தரிசன விழா அன்று அதிகாலை 2 மணிக்கு மேல் மகா அபிஷேகமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திகணேசன் உத்தரவின்பேரில் சிதம்பரம் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி மேற்பார்வையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்கள்.

    • தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும்.
    • நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    உலகப் பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ந்தேதியன்று உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதரால் கொடியேற்றி துவக்கி வைக்கப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தினமும் காலையும், மாலையும் சுவாமி விதியுலா மற்றும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடந்து வந்தது. இதன் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடைற்றது. இதனை ஒட்டி இன்று அதிகாலை ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சித்சபையில் இருந்து புறப்பட்டு தேர்நிலையான கீழரத வீதி வந்தடைந்தது.

    சுமார் 8 மணி அளவில் தேர் நிலையிலிருந்து புறப்பட்ட சுவாமிகள் ஸ்ரீ நடராஜர், சிவகாமசுந்தரி, சண்டிகேஸ்வரர், முருகர், விநாயகர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். திரளான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

    கீழரத வீதியிலிருந்து புறப்பட்ட இத்தேர் முறையே தெற்குரத வீதி, மேலரத வீதி, வடக்குரத வீதி வழியாக வலம் வரும்.

    கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பின் காரணமாக சிதம்பரத்தில் ஆருத்ரா தரிசனம், தேர்த் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு நடை பெறுவதால் ஏராளமான பக்தர்கள் பக்தி பரவசத்துடன் விண்ணதிரும் கோஷங்களை எழுப்பிய வண்ணம் பங்கேற்று திருத்தேரினை வடம் பிடித்து மாட வீதிகளில் இழுத்து வந்தனர்.

    முன்னதாக தேரோடும் வீதிகளில் திரளான பெண்கள் சாலைகளை சுத்தம் செய்து கோலமிடுவதும், சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட பக்தி பதிகங்களை, மேளதாளம் முழங்க பாடி வருவதும் ஒரு அற்புதமான நிகழ்வாக அமைந்திருந்தது.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலனுக்காக சிதம்பரம் நகராட்சி சார்பில் சேர்மன் செந்தில்குமார் உத்தரவின் பெயரில் குடிநீர் மற்றும் சுகாதார வசதிகள் சிறப்பாக செய்யப்பட்டு இருந்தது.

    மேலும், அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் தடுக்க மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மாலை சுமார் 6 மணி அளவில் தேர் நிலையான கீழரதவீதி வந்தடையும். அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்படும். தொடர்ந்து தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடக்கவுள்ள நிலையில், நாளை அதிகாலை இரண்டு மணி முதல் ஆறு மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனை செய்யப்படும். தொடர்ந்து தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் நடைபெறும். பின்னர் திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு லட்சார்ச்சனை நடைபெறும், நாளை மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.

    இதைத் தொடர்ந்து நாளை மாலை சுமார் 4 மணிக்கு மேல் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார். அதைத் தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடை பெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சி தர்கள் செய்து வருகின்றனர்.

    • இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது.
    • மாலை 4 மணியளவில் நடராஜ சுவாமிகள் நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலின் திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக நேற்று நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்களின் வெள்ளத்தில் மாட வீதிகளில் வலம் வந்த திருத்தேரானது நேற்று மாலை 6 மணியளவில் கீழரத வீதியில் உள்ள தேர் நிலைக்கு வந்தடைந்தது.

    அங்கு ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு பக்தர்களின் விண்ணதிரும் பக்தி கோஷங்களுடன் தேர் நிலையிலிருந்து புறப்பட்டு ஆயிரங்கால் மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    இரவு முழுவதும் சிறப்பு தீபாரதனை, அர்ச்சனைகள் நடந்தது. நள்ளிரவு 2 மணி முதல் 6 மணி வரை ராஜசபை என்கிற ஆயிரம் கால் முன் முகப்பு மண்டபத்தில் மகா அபிஷேகம் ஆராதனைகள் செய்யப்பட்டு தங்கக் காசினால் சொர்ணாபிஷேகம் வெகு விமர்சையாக நடந்தது. ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளுக்கு திருவாபரணங்கள் அணிவிக்கப்பட்டு இன்று மதியம் 2 மணி வரை லட்சார்ச்சனை நடக்கிறது. இதில் சிவனடியார்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிதம்பரம் நடராஜரின் அருளை பெறுகின்றனர்.

    இதைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணிக்கு மேல் பஞ்சமூர்த்திகள் தீர்த்தவாரி நடக்கவுள்ளது. மாலை 4 மணியளவில் ஆயிரங்கால் மண்டபத்திலிருந்து புறப்படும் ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகள் முன் மண்டபம் நடனப்பந்தலுக்கு கொண்டு வந்து முன்னுக்கு பின்னாக 3 முறை நடனடமாடிய படி வலம் வந்து பக்தர்களுக்கு ஆருத்ரா தரிசனம் அளிப்பார்.

    தொடர்ந்து ஸ்ரீ சிவகாமி சுந்தரி சமேத நடராஜ மூர்த்தி சுவாமிகளின் சித்சபை ரகசிய பிரவேசம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    விழாவிற்கு வரும் பக்தர்களின் நலன் கருதி நகராட்சி சார்பில் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.

    மேலும், அரசியல் கட்சியினர், சமூக நல அமைப்பினர், வர்த்தகர்கள் என பலரும் அன்னதானம் செய்தனர்.

    கடலூர் மாவட்ட போலீஸ் சுப்பிரண்டு சக்தி கணேஷ் மேற்பார்வையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார், துணை போலீஸ் சுப்பிரண்டு ரகுபதி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சிதம்பரம் ஆருத்ரா தரிசனத்திற்காக கடலூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

    • இன்று பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
    • நாளை தெப்ப உற்சவம் நடக்கிறது.

    கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. சிவபெருமானின் பஞ்ச சபையில் பொற்சபையாகவும், பஞ்சபூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுகிறது.

    பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் நடக்கும் ஆனி திருமஞ்சனமும், மார்கழி மாதம் நடக்கும் ஆருத்ரா தரிசன விழாவும் தனிசிறப்புகள் வாய்ந்தது.

    ஏனெனில் அன்றைய தினங்களில் மூலவரான நடராஜரே வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.

    மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவில் சிவபெருமானின் ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திர நாளில் மூலவர் நடராஜர், சிவகாம சுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது இக்கோவிலின் சிறப்பாகும்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆருத்ரா தரிசன விழா சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த டிசம்பர் மாதம் 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் பிறகு தினமும் சாமி வீதிஉலா நடந்தது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் ஆருத்ரா தரிசனம் தருவதற்காக மூலவர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி 4 வீதியில் வலம் வந்தனர்.

    தேரோட்டம் முடிந்ததும் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ராஜசபை என்று அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் நேற்று முன்தினம் இரவு எழுந்தருளினார்கள். பின்னர் இரவு 11 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணிக்கு தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

    அதை தொடர்ந்து திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது. காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மாலை 3.30 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 4.45 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.

    இதையடுத்து மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம் பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து மாலை 5.20 மணி அளவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் தனித்தனி பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.

    அப்போது சிவகாமசுந்தரி அம்பாளுடன் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி திருநடனம் புரிந்தபடி தரிசனம் அளித்தார். இந்த கண்கொள்ளா காட்சி அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

    அப்போது அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆடல் வல்லானே...! நடராஜ பெருமானே...!, சிவ, சிவ... ஓம் நமச்சிவாய என்று விண்ணதிரும் வகையில் பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசித்தனர்.

    இதையடுத்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.

    விழாவில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்ததால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையில் 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    விழாவில் இன்று (சனிக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா காட்சியும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஞானபிரகாசம் குளக்கரையில் தெப்ப உற்சவமும் நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பொது தீட்சிதர்கள் செயலாளர் ஹேம சபேசன் தீட்சிதர், துணை செயலாளர் சேதுஅப்பாசெல்ல தீட்சிதர், உற்சவ ஆச்சாரியார் நடராஜ குஞ்சிதபாத தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

    ×