என் மலர்
வழிபாடு

சிதம்பரம் சித்ரகுப்தர்
- ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம்.
- சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது.
'கோவில்' என்றாலே அது சிதம்பரம் நடராஜர் கோவிலைத் தான் குறிக்கும். அந்த அளவுக்கு மிகவும் பிரசித்திப் பெற்ற ஆலயமாக இந்த ஆலயம் திகழ்கிறது. காஞ்சிபுரத்தில் சித்ரகுப்தருக்கு தனிக்கோவில் அமைந்திருப்பது போல, சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் சித்ரகுப்தருக்கு தனிச்சன்னிதி அமைந்திருக்கிறது.
நடராஜர் ஆலயத்தில் உள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு வடக்கே சிவகாமி அம்பிகைக்கு தனிச் சன்னிதி உள்ளது. இதனை 'சிவகாமக் கோட்டம்' என்று அழைப்பார்கள். இதன் வெளிச்சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் சித்திரகுப்தருக்கு தனிச் சன்னிதி அமைக்கப்பட்டுள்ளது. மேற்கு நோக்கி அமைந்துள்ள இந்த சன்னிதியில், சித்ரகுப்தர் அமர்ந்த நிலையில் கையில் எழுத்தாணியுடன் காட்சியளிக்கிறார். இவருக்கு அருகில் சனீஸ்வர பகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமியன்று, இங்குள்ள சித்திரகுப்தருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். அன்றைய தினம் சித்தரகுப்தர் அவதரித்த தினமாகவும் கருதப்படுகிறது. சித்ரா பவுர்ணமியில் சித்திரகுப்தரை வழிபட்டால் ஆயுள் விருத்தியும், செல்வ விருத்தியும் உண்டாகும். எமதர்மனின் கணக்கராக இருந்து, உலக உயிர்களின் பாவ- புண்ணிய கணக்குகளை எழுதுபவர் சித்ரகுப்தர். எனவே அவர் அவதரித்த நாளில் அவரை வழிபடுவதால், நம்முடைய பாவங்கள் குறையும் என்பது நம்பிக்கை.
சித்ரா பவுர்ணமி அன்று, சித்ரகுப்தருக்கு விழா எடுப்பது சிறப்புக்குரியது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள சித்திரகுப்தர் சன்னிதியில் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அன்று கோவிலில் ஏராளமான பக்தர்கள் சித்திரகுப்தர் சன்னிதியில் நெய் விளக்கு ஏற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம்.






