என் மலர்
வழிபாடு

சிதம்பரத்தில் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன தேரோட்டம் கோலாகலம்
- இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
- பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர்.
உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும், ஆனி மாதம் ஆனித்திருமஞ்சன தரிசனமும் ஆகிய 2 திருவிழாக்கள் தொன்று தொட்டு நடைபெற்று வருகிறது. அதன்படி இந்த ஆண்டு கடந்த டிசம்பர் மாதம் 25-ந் தேதி மார்கழி ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனையடுத்து முக்கிய திருவிழாவான தேர்த்திருவிழா இன்று அதிகாலை சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமான் சித் சபையில் இருந்து புறப்பட்டு மேளதாளம் முழங்க கீழ ரத வீதியில் உள்ள தேர்நிலைக்கு வந்தடைந்தது. பின்னர் நடராஜர், சிவகாமசுந்தரி அம்மன், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் ஆகிய சுவாமிகள் தனித்தனி தேரில் வீற்றிருக்க தேர் நிலையான கீழ ரத வீதியில் இருந்து சிவ கோஷத்துடன் கைலாய வாத்தியங்கள் முழங்க லட்சக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரானது கீழ ரத வீதி, தெற்கு ரத வீதி, மேல ரத வீதி, வடக்கு ரத வீதி வழியாக மீண்டும் இன்று மாலை 6 மணி அளவில் தேர் நிலையான கீழ ரத வீதியை வந்தடையும். தேர் திருவிழாவை முன்னிட்டு தில்லை திருமுறை கழகம் சார்பில் ஏராளமான பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடி தேர் முன் சென்றனர். பெண் பக்தர்கள் நடராஜர் தேர் முன்பு கோலமிட்டும், மேளதாளங்களுக்கு நடனமாடியும் நடராஜரை வரவேற்றனர். தேர் நிலையில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தி கொண்டு செல்லப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு தீபாராதனைகள், ஏககால லட்சார்ச்சனை, புஷ்பாஞ்சலி சொர்ணாபிஷேகம் நடைபெறுகிறது.
தொடர்ந்து நாளை (3-ந் தேதி) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகா அபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், மதியம் பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர் மாலை 3 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடக்கிறது.
நாளைமறுநாள் (4-ந் தேதி) பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், 5-ந் தேதி ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் செய்துள்ளனர்.






