search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது
    X

    பந்தல் அமைத்து இருப்பதை படத்தில் காணலாம்.

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி தொடங்குகிறது

    • ஜனவரி 5-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    • ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது.

    சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும் வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த இரு விழாக்களிலும் மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் உற்சவராக வெளியே வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது தனிச்சிறப்பாகும். வேறு எந்த கோவில்களிலும் இத்தகைய சிறப்பை காண இயலாது என்பதால் இந்த விழாவை காண தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்திற்கு வருவார்கள்.

    அந்த வகையில் இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வருகிற 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று கோவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.பின்னர் 29-ந் தேதி வெள்ளி சந்திர பிறை வாகனத்திலும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வாகனத்திலும், 31-ந்தேதி வெள்ளி பூத வாகனத்திலும் சாமி வீதி உலா நடக்கிறது.

    தொடர்ந்து அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந்தேதி கோபுர தரிசனம் எனும் தெருவடைச்சான் உற்சவமும், 2-ந்தேதி வெள்ளி யானை வாகனத்திலும், 3-ந் தேதி தங்க கைலாச வாகனத்திலும், 4-ந் தேதி தங்க ரதத்திலும் சாமி வீதி உலா நடைபெறும். தொடர்ந்து 5-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசன விழா 6-ந்தேதி நடக்கிறது. முன்னதாக அதிகாலை 2 மணி முதல் காலை 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாள் சமேத ஆனந்த நடராஜருக்கு மகா அபிஷேகம் நடக்கிறது.

    இதைத் தொடர்ந்து காலை 6 மணி முதல் திருவாபரண அலங்கார காட்சி, சிற்சபையில் ரகசிய ஸ்தாபன பூஜை, பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து மதியம் 2 மணிக்கு ராஜசபை என்கிற ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து சாமியும், அம்பாளும் சிற்சபைக்கு எழுந்தருளும் ஆருத்ரா தரிசனம் நடக்கிறது.

    தொடர்ந்து 7-ந்தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதி உலா, 8-ந் தேதி இரவு ஞானபிரகாச குளத்தில் தெப்ப உற்சவமும் நடைபெறும். மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவில் கீழ சன்னதியில் பந்தல் அமைக்கும் பணிகள் முடிவடைந்தது. விழா ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×