என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "chidambaram nataraja Temple"
- ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
- நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு ஏற்றப்பட்டது.
சிதம்பரம்:
உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் கீழரத வீதியில் உள்ள 142 அடி உயரமுள்ள ராஜகோபுரத்தில் சுதந்திர தின விழா தேசிய கொடி ஏற்றப்பட்டது.
நடராஜர் கோவில் சித் சபையில் முதற்கால பூஜை நடைபெற்று முடிந்த பின்னர் தேசியக் கொடியானது நடராஜன் திருவடிகளில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு மேளதாளங்கள் முழங்க பொது தீட்சிதர்கள் செயலர் வெங்கடேச தீட்சதர் தலைமையில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ராஜ கோபுரத்தில் கொடி யேற்றப்பட்டது.
சுதந்திர தின விழா மற்றும் குடியரசு தின விழா வருடத்திற்கு இரண்டு முறை இந்திய தேசியக்கொடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தில் கீழ் கோபுரத்தில் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
#Independence_Day 15.8.24 Chidambaram Sri Sabhanayagar Temple podhu deekshithars pic.twitter.com/HC1leG8D15
— Chidambaram Sri Natarajar Temple Devasabha தேவசபா (@DevasabhaT) August 15, 2024
- சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம்.
- ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவபெருமானின் மிக உகந்த நாட்களில் ஒன்று ஆனி உத்திரம் ஆகும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானாகிய சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
நடப்பாண்டிற்கான ஆனி உத்திரம் வரும் 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரமான இன்று மதியம் 1.47 மணிக்கு தொடங்குகிறது. மறுநாள் மாலை 4.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் முடிவடைகிறது.
ஆனி உத்திரம் வந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் களைகட்டும். குறிப்பாக, நடராஜப் பெருமானுக்கு உகந்த நாளான ஆனித் திருமஞ்சனம் இருப்பதால் தில்லை நடராஜனாக சிவபெருமான் காட்சி தரும் சிதம்பரம் கோவிலில் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுவது வழக்கம்.
தனிச்சிறப்பு:
நடப்பு ஆனி உத்திரத்தில் வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருகிறது. சஷ்டியானது முருகப்பெருமானுக்கும் உகந்த நாள் ஆகும். ஆனி உத்திர தினத்திலே வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருவதால் சிவபெருமான் – முருகப்பெருமான் இருவரையும் வணங்குவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
வழிபடுவது எப்படி?
ஆனித் திருமஞ்சன தினத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு நேரில் சென்று, சிவபெருமானை வழிபடலாம். பெரும்பாலான சிவாலயங்களிலே முருகப்பெருமானுக்கும் கோவில் இருப்பதால் இருவரையும் வணங்குவதால் பலன் உண்டாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும்.
கோவிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் சுத்தமான நீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலே சிவபெருமானின் படத்திற்கு பூஜை செய்து வழிபடலாம். வில்வ இலை கொண்டு பூஜை செய்வதும் தனிச்சிறப்பு ஆகும்.
ஆனி திருமஞ்ச தினத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில், சிதம்பரம் நடராஜர் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிற சிவாலயங்களிலும் சிவ பக்தர்கள் குவிவார்கள்.
- கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
- விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம்.
சென்னை:
சிதம்பரம், நடராஜர் கோவிலில், நாளை முதல் 3 நாட்கள் ஆனி திருமஞ்சன விழா நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது பக்தர்கள், கனகசபை மீது நின்று சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க கோரி சம்பந்தமூர்த்தி ராமநாதன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, கனகசபை மீது நின்று சாமி தரிசனம் செய்ய அனுமதித்து தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில், அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை என்று அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், ''கனகசபையில் நின்று தரிசனம் செய்ய அனுமதிக்கும் அரசாணைக்கு எந்த தடையும் விதிக்கப்படவில்லை. அதனால், பக்தர்கள் தரிசனம் செய்யலாம். இதில் விதிமீறல்கள் இருந்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். யாராவது சாமி தரிசனத்தை தடுக்கும் விதமாக சட்டத்தை கையில் எடுத்து செயல்பட்டால், அவர்களுக்கு எதிராக அறநிலையத் துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக அடுத்த வாரம் அறநிலையத்துறை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்'' என்று உத்தரவிட்டார்.
- நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும்.
- நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
மும்மூர்த்திகளில் ஒருவரும், சைவ சமயத்தின் முதன்மைக் கடவுளுமாகிய சிவபெருமானின் மற்றொரு தோற்றமே கூத்தன் (நடராஜர்) திருக்கோலமாகும்.
நடராஜரின் தோற்றம், ஒற்றைக் காலைத் தூக்கி நின்று ஆடும் ஆடலரசன் நிலையாகும். அனைத்து சிவாலயங்களிலும் அருள்பாலிக்கும் நடராஜருக்கு, ஆண்டுக்கு 6 முறை சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, சித்திரை திருவோணம், ஆவணி சதுர்த்தசி, புரட்டாசி சதுர்த்தசி, மாசி சதுர்த்தசி ஆகிய 6 முறை மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதில் சிறப்பு வாய்ந்தது ஆனி உத்திரத்தில் நடைபெறும் திருமஞ்சனமும், மார்கழி திருவாதிரையில் நடைபெறும் திருமஞ்சனமும்தான். இவ்விரு நாட்களில் மட்டுமே அதிகாலையில் அபிஷேகம் நடக்கிறது. மற்ற நாட்களில் மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெறும்.
ஆனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று நடக்கும் தரிசனமே ஆனி உத்திரமாகும். ஆனித்திருமஞ்சனத்தை `மகா அபிஷேகம்' என்றும் அழைப்பர்.
ஆனி மாதம் சஷ்டி திதியும், உத்திர நட்சத்திரமும் இணைந்த இந்த நாள் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்நாளில் அனைத்து சிவன் கோவில்களிலும் இருக்கும் நடராஜர் திருமேனிக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.
அந்த நாளில் முப்பத்து முக்கோடி தேவர்களும் சிவன் சன்னிதியில் எழுந் தருளி நடராஜப் பெருமானுக்கு ஆராதனைகள் செய்வதாக ஐதீகம்.
சிவபெருமானின் பஞ்ச சபைகளில் பொற்சபையாகவும், பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாகவும் போற்றப்படுவது சிதம்பரம் நடராஜர் கோவில். இங்கு ஆனி திருமஞ்சன நாளை முன்னிட்டு, 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.
ஆனி உத்திரத்தில் நடைபெறும் அபிஷேகத்தை கண்ணாரக் கண்டு தரிசித்தால், வாழ்வில் அனைத்துப் பிணிகளும் தீரும். வறுமை அகலும். செல்வம் சேரும். பிறவிப் பிணி என்னும் பெருநோய் அகலும் என்று பாடுகின்றன திருமுறைகள்.
இந்த நாளில் சிவ தரிசனமும், நடராஜர் அபிஷேக தரிசனமும் காண்பது மிகவும் புண்ணியமான ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆனி உத்திரத்தில் ஆனந்தம் தரும் நடராஜரை தரிசித்து, வாழ்க்கையில் ஆனந்தத்தை அடைய ஆனந்த கூத்தனை வழிபடுவது நல்லது.
- ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஸ்ரீ சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீ மந்நடராஜ மூர்த்தியின் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் இன்று காலை கொடி யேற்றத்துடன் தொடங்கி யது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி மாதத்தில் திருமஞ்சனமும், மார்கழி யில் ஆருத்ரா தரிசனமும் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது.
சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்ச மூர்த்திகள் முன்னிலையில், சாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து இன்று காலை 7.15 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.கிருஷ்ணசாமி தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார். இதனை ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர்.
விழாவை முன்னிட்டு நாளை சந்திர பிறை வாகன வீதி உலா, நாளை மறுதினம் தங்க சூரிய பிறை வாகன வீதிஉலா, 6-ந் தேதி வெள்ளி பூதவாகன வீதி உலா, 7-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன வீதிஉலா (தெருவடைச்சான்), 8-ந் தேதி வெள்ளி யானை வாகன வீதி உலா, 9-ந் தேதி தங்க கைலாச வாகன வீதி உலா, 10-ந் தேதி தங்க ரதத்தில் பிச்சாண்டவர் வீதி உலாவும் நடைபெறுகிறது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஜூலை 11-ந் தேதி வியாழக்கிழமையன்று நடைபெற உள்ளது. மூலவரே உற்சவராக வீதியுலா வருவதால் இத்தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது.
இதனைத் தொடர்ந்து 11-ந் தேதி இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறு கிறது.
ஜூலை 12-ந் தேதி வெள்ளிக்கிழமை அதி காலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்தி வீதி உலா வந்த பின்னர் பிற்பகல் 3 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடை பெறுகிறது.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்களின் கமிட்டி செயலாளர் வெங்கடேச தீட்சிதர், துணைச் செயலாளர் சுந்தரதாண்டவ தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
ஆனி திருமஞ்சன விழாவை முன்னிட்டு சிதம்பரம் ஏ.டி.எஸ்.பி. ரகுபதி, நகர இன்ஸ்பெக்டர் ரமேஷ்பாபு தலைமையி லான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
- தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலின் அசுவ பூஜைக்காக குதிரை வளர்க்கப்படுகிறது. ராஜா என்ற பெயரில் கடந்த 4 ஆண்டுகளாக இங்கிருந்த குதிரைக்கு திடீர் உடல் நல குறைவு ஏற்பட்டு கடந்த 4 நாட்களாக கால்நடை மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் இந்த குதிரை சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தது. கடந்த 4 வருடங்களாக தில்லை நடராஜரின் இறைபணியில் ஈடுபட்ட குதிரை ராஜாவின் ஆன்மா சாந்தி அடையும் வகையில், மருத்துவ சான்று பெற்று பக்தர்களும் தீட்சிதர்களும் மலர் அஞ்சலி செலுத்தி சடங்குகள் செய்து மயானத்தில் அடக்கம் செய்தனர். இத்தகவலை கோவில் பொது தீட்சிதர்களின் செயலாளர் வெங்கடேஸ்வர தீட்சிதர் தெரிவித்துள்ளார்.
- தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி.
- சிறப்பு பூஜைகள் நடந்தது.
சிதம்பரம்:
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெறும். சிவபெருமானுக்குரிய ஜென்ம நட்சத்திரமான திருவாதிரை நாளில் ஆடல் அரசனான நடராஜருக்கு சிறப்பு மகா அபிஷேகம் செய்யப்படுகிறது.
நிகழ்ச்சியில் சுவாமி நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் திருநடனம் புரிந்தபடி பக்தர்களுக்கு காட்சி அளிப்பது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.இந்த தரிசனத்தின் போது மூலவரே தேரில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். இது வேறு எந்த கோவிலிலும் இல்லாத தனிச்சிறப்பாகும்.
ஆகையால், நடராஜரின் தரிசனத்தை காண தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சிதம்பரம் வருவார்கள்.
அதன்படி இந்த ஆண்டு மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா கடந்த 18-ந்தேதி கோலாகலமாக தொடங்கியது. இதை தொடர்ந்து, தினமும் நடராஜருக்கு காலை, மாலை சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு நடைபெறும்.
விழாவில் 9-ம் நாளான நேற்று முன்தினம் தேரோட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் மூலவராகிய நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் உற்சவராக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தனர்.
பின்னர் தேரில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் ஊர்வலமாக ராஜசபை என அழைக்கப்படும் ஆயிரங்கால் மண்டபத்தில் எழுந்தருளினார்கள். அங்கு நேற்று முன்திம் இரவு 10 மணிக்கு மேல் லட்சார்ச்சனை நடைபெற்றது.
பின்னர், சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் நேற்று அதிகாலை 2 மணி முதல் தொடங்கியது. அப்போது ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகா அபிஷேகம் நடந்து, திருவாபரண அலங்கார காட்சி நடைபெற்றது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை நடந்தது. தொடர்ந்து மதியம் 2 மணி அளவில் பஞ்ச மூர்த்திகள் கோவிலில் இருந்து 4 ரதவீதிகளிலும் வீதி உலாவாக வந்து 3 மணி அளவில் கோவிலின் ஆயிரங்கால் முகப்பு மண்டபம் முன்பு காட்சி கொடுத்தனர்.
இதையடுத்து மாலை 4 மணி அளவில் மேள, தாளங்கள் முழங்க திருவெம்பாவை, தேவாரம், பாடியபடி சிவனடியார்கள் நடன பந்தலுக்கு ஊர்வலமாக வந்தனர். அவர்களை தொடர்ந்து ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து மூலவர் நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் பல்லக்கில் எழுந்தருளி சித்சபைக்கு புறப்பட்டனர்.
அப்போது, பல்லக்கில் ஆடல் அரசன் நடராஜர், நடன பந்தலில் முன்னும் பின்னும் அசைந்தாடியபடி தரிசனம் தந்தார். இந்த அற்புத காட்சியை கோவிலுக்குள் திரண்டு நின்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு சிவ, சிவா, ஓம் நமசிவாயா என்று பக்தி கோஷங்களை எழுப்பியும், இரு கைகளை தட்டியும் நடராஜரை தரிசனம் செய்தனர்.
இதையடுத்து மாலை 4.30 மணி அளவில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் கோவில் உட்பிரகாரத்துக்கு வந்தனர். அங்கு கருவறையில் வைத்து சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதிஉலா நடக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா நிறைவு பெறுகிறது.
- உற்சவ மூர்த்திகள் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர்.
- ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ மூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கடந்த 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று தங்கர தத்தில் பிச்சாண்டவர் வெட்டுங்குதிரை வாகன வீதிஉலா நடைபெற்றது. இன்று (செவ்வாய்க்கிழமை) தேர்த்திருவிழா நடை பெற்றது.
சித்சபையில் வீற்றுள்ள மூலவரான நடராஜமூர்த்தி, சிவகாமசுந்தரி அம்பாள் மற்றும் உற்சவ மூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்ரர் ஆகிய ஐவரும் தனி, தனி தேர்களில் வீதிவலம் வந்தனர். இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். தேரோட்டத்தை யொட்டி பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. பின்னர் இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.
நாளை (புதன்கிழமை) அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகா பிஷேகம் நடைபெறுகிறது.
பின்னர் காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜை யும், பஞ்சமூர்த்தி வீதிஉலா வந்த பின்னர் பிற்பகல் 3மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகிறது.
28-ந்தேதி (வியாழக்கிழமை) இரவு பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவுடன் உற்சவம் முடிவடைகிறது. தேரோட்டத்தை யொட்டி சிதம்பரம் நகரம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
- பொது தீட்சிதர்கள் செயலாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு.
- கோவில் தீட்சிதர்கள் நடத்திய சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் பூஜை செய்வதற்காக குழந்தைகளுக்கு தீட்சிதர்கள் திருமணம் செய்து வருவதாகவும், இது தொடர்பாக சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து சமய அறநிலையத்துறை மற்றும் காவல்துறைக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்தன.
அந்த புகார்களின் அடிப்படையில் 2020 மற்றும் 2021-ம் ஆண்டு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக 20-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. குழந்தை திருமணம் செய்த தாய், தந்தை என பல்வேறு நபர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த வழக்கில் சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் அமைப்பின் செயலாளர் ஹேம சபேசனை போலீசார் இன்று கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
இதை கண்டித்து நடராஜர் கோவில் கிழக்கு கோபுரம் முன்பு திரண்ட 100-க்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் ஹேம சபேசனை விடுதலை செய்ய கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்த சிதம்பரம் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், ஏ டி எஸ் பி அசோகன் மற்றும் போலீசார், சாலை மறியல் ஈடுபட்ட தீட்சிதர்களிடம் மறியலை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினர்.
பலமுறை வேண்டுகோள் விடுத்தும் போராட்டம் தொடர்ந்ததால், தீட்சிதர்களை குண்டு கட்டாக தூக்கி சாலையில் இருந்து அப்புறப்படுத்திய போலீசார், பின்னர் அவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது, தீட்சிதர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்பட்டது.
- ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது
- கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர்.
திருப்பூர்,
இந்து முன்னேற்ற கழக தலைவர் வக்கீல் கே.கோபிநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு என்ற பெயரில் அறநிலையத்துறையினர் பிடிவாதம் பிடிப்பது கண்டனத்துக்குரியது.நடராஜர் கோவில் தீட்சிதர்களுக்கு சொந்தமானது என்றும், அதன்நிர்வாகம் மற்றும் வரவு-செலவு கணக்குகளை அவர்களேபார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பில்தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தமிழக அரசும், அறநிலையத்துறையும் இப்படிப்பட்ட செயலில் ஈடுபடுகிறது. இதனைஇந்து முன்னேற்ற கழகம் வன்மையாக கண்டிக்கிறது. உடனடியாகஅனைத்து கோவில்களையும் விட்டு அறநிலையத்துறை வெளியேற வேண்டும். எங்கள் கோவில்களை நிர்வகிக்க மடாதிபதிகள், ஆதீனங்கள் மற்றும் சிவனடியார்கள் உள்ளனர். இவ்வாறு அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதன்படி இந்த ஆண்டுக்கான மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழா இன்று(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு நடராஜருக்கும், சிவகாமசுந்தரி அம்பாளுக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.30 மணிக்குள் நடராஜர் சன்னதி எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இரவு தங்கம், வெள்ளி வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடக்கிறது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான தேரோட்டம் வருகிற 22-ந் தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5 மணிக்கு மேல் நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் தனித்தனி தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது.
சிகர நிகழ்ச்சியான ஆருத்ரா தரிசனம் 23-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. இதனையொட்டி அன்று அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை ஆயிரங்கால் முகப்பு மண்டபத்தில் சிவகாமசுந்தரி அம்பாளுக்கும், நடராஜருக்கும் மகாஅபிஷேகம் நடக்கிறது.
பின்னர் காலை 6 மணி முதல் 10 மணிவரை திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜை, பஞ்சமூர்த்திகள் வீதிஉலா காட்சியும், 1 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. 24-ந் தேதி பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கில் வீதிஉலா நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார். மறுநாள் ஆயிரங்கால் மண்டபம் என்னும் ராஜசபையில் மூலவர் ஆனந்த நடராஜர், அம்பாளுடன் எழுந்தருள்வார். அங்கு அவருக்கு மகா அபிஷேகம் நடைபெறும்.
அதன்படி, இந்தாண்டுக்கான ஆனிதிருமஞ்சன விழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி கடந்த 25-ந்தேதி இரவு தெருவடைச்சான் உற்சவமும், நேற்று முன்தினம் ஆனி திருமஞ்சன தேரோட்டமும் நடைபெற்றது. இதில் மூலவராகிய ஆனந்த நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் தனித்தனி தேரில் எழுந்தருள பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்தவுடன் ஆயிரங்கால் மண்டபத்தில் நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாளுக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது.
ஆனி திருமஞ்சன விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தரிசன விழா நேற்று வெகு விமரிசையாக நடந்தது. இதையொட்டி, அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை ஆயிரங் கால் முகப்பு மண்டபத்தில் நடராஜருக்கும், சிவகாம சுந்தரி அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து சாமிக்கு திருவாபரண அலங்காரமும், சித்சபையில் ரகசிய பூஜையும் நடந்தது. பின்னர், பகல் 1 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதிஉலா நடைபெற்றது. நான்கு வீதிகளின் வழியாக சென்ற பஞ்சமூர்த்திகள் கோவில் உள்ளே மதியம் 2.10 மணிக்கு வந்து, ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள நடனப்பந்தல் முன்பு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதையடுத்து, சித்சபையில் உற்சவ ஆச்சாரியார் தலைமையில் மண்டகப்படி பிரசாத படையல் மற்றும் தீபாராதனை நடந்தது.
பின்னர், மதியம் 2.50 மணிக்கு ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் மூலவர் சன்னதிக்கு செல்லும் மகா தரிசன நிகழ்வு நடந்தது. அப்போது, நடராஜரும், சிவகாமசுந்தரி அம்பாளும் முன்னும் பின்னும் மூன்று முறை ஆனந்த நடனமாடி பக்தர்களுக்கு தரிசனம் அளித்தனர். இந்த கண்கொள்ளா காட்சியை கண்ட அங்கு கூடி இருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஓம் நமச்சிவாய, சிவாய நம என்ற பக்தி கோஷங்களை விண் அதிர எழுப்பியவாறு சாமி தரிசனம் செய்தனர்.
விழா ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.
மேலும், ஆனி திருமஞ்சன விழாவையொட்டி கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முத்துப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தரிசன விழாவையொட்டி அய்யப்ப சேவா சங்கம், விஸ்வகர்ம முன்னேற்ற சங்கம், விஸ்வகர்ம கைவினைஞர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் பக்தர்களுக்கு நீர்,மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. சிதம்பரம் நகராட்சி சார்பில் தேரோடும் வீதிகளில் குடிநீர், கழிப்பறை மற்றும் சுகாதார வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்