என் மலர்
நீங்கள் தேடியது "Independence Day"
- நாடு முழுவதும் 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
- ரஷியா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் வாழ்த்து தெரிவித்துள்ளன.
மாஸ்கோ:
இந்தியா முழுவதும் நேற்று 79-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய நாட்டு மக்களுக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்து தெரிவித்தார். ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் புதின் வாழ்த்துச் செய்தி அனுப்பி உள்ளார்.
இதுதொடர்பாக, ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
அறிவியல், தொழில்நுட்ப மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக அங்கீகரிக்கப்பட்ட வெற்றியைப் பெற்றுள்ளது. உலக அரங்கில் முக்கிய பிரச்சனைகளைத் தீர்ப்பதில் இந்தியா முக்கிய பங்களிக்கிறது. கூட்டு முயற்சிகள் மூலம் இந்தியா-ரஷியா ஒத்துழைப்பை தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என தெரிவித்தார்.
அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மார்கோ ரூபியோ: இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றாகச் செயல்படுவது இன்றைய நவீன சவால்களை எதிர்கொள்ளும், இரு நாடுகளுக்கும் பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்யும் என தெரிவித்துள்ளார்.
ஈரான் வெளியுறவு அமைச்சகம், இந்தியாவிற்கு அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவதில் தெஹ்ரான் உறுதியாக உள்ளது.
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு உள்ளிட்டோரும் வாழ்த்து தெரிவித்தனர். மேலும், ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், உக்ரைன், நேபாளம், இலங்கை நாடுகளும் இந்தியாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளன.
- நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
- இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்டது.
நாட்டின் 79வது சுதந்திர தினம் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பஞ்சாபில் அமைந்துள்ள பாகிஸ்தான் எல்லையான அட்டாரி-வாகா எல்லையில் கொடியிறக்கும் நிகழ்ச்சி மாலை துவங்கியது.
இந்த கொடியிறக்க நிகழ்ச்சியில் எல்லை பாதுகாப்பு படை வீரர் மிடுக்கான அணிவகுப்பு நடத்தினர். மேலும் பைக் சாகச நிகழ்ச்சி, பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறின. ஆயிரக்கணக்கான மக்கள் வந்தே மாதரம், ஜெயஹிந்த் முழக்கமிட தேசியக்கொடி இறக்குதல் நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக இந்தியா - பாகிஸ்தான் இடையிலான மோதலின் போது மூடப்பட்ட அட்டாரி - வாகா எல்லை மீண்டும் திறக்கப்பட்ட இந்நிலையில் இன்றைய நிகழ்வு மேலும் முக்கியத்துவம் பெற்றது.
- தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.
- அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?
சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் தமிழக அரசு மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.
அதில் தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளதாக அவர் குற்றம்சாட்டனார்.
இந்நிலையில் இதற்கு திமுக எம்.பி. கனிமொழி இன்று பதிலளித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான். மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு? அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
- தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர்.
- அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது.
உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் 79வது சுதந்திர தினத்தைக் கொண்டாடி வருகின்றனர்.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள இந்திய துணைத் தூதரகம் கொண்டாட்டங்களுக்குத் தயாராகிக்கொண்டிருந்தபோது, சில காலிஸ்தான் ஆதரவாளர்கள் அங்கு வந்து நிகழ்வை சீர்குலைக்க முயன்றனர். இதனால் சிறிது நேரம் பதற்றம் ஏற்பட்டது.
தூதரகத்தில் இருந்த பலர் தேசபக்தி பாடல்களைப் பாடிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்தவர்களில் சிலர் காலிஸ்தான் கொடிகளை அசைத்து கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் இரு குழுக்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில், போலீசார் தலையிட்டு எந்த மோதலும் இல்லாமல் நிலைமையை தணித்தனர். பின்னர் தூதரக அலுவலகத்தில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது.
சமீபத்தில், ஆஸ்திரேலியாவின் போரோனியாவில் உள்ள சுவாமிநாராயண் கோவிலில் அடையாளம் தெரியாத நபர்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கிராஃபிட்டிகளை வரைந்தது குறிப்பிடத்தக்கது.
- பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.
- ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம்
79வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ரஷிய அதிபர் புதின், ஜனாதிபதி மற்றும் பிரதருக்கு வாழ்த்து செய்தி அனுப்பியுள்ளார்.
அதில், "பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் பிற துறைகளில் இந்தியா பரவலாக வெற்றி பெற்றுள்ளது.
உங்கள் நாடு உலக அரங்கில் தகுதியான மரியாதையைப் பெற்றுள்ளது மற்றும் சர்வதேச பிரச்சினைகளைத் தீர்ப்பதில் தீவிரமாக பங்களிக்கிறது.
இந்தியாவுடனான எங்கள் சிறப்பு மூலோபாய கூட்டாண்மையை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். எங்கள் கூட்டு முயற்சிகள் மூலம், பல பகுதிகளில் ஆக்கபூர்வமான இருதரப்பு ஒத்துழைப்பை நாங்கள் தொடர்ந்து விரிவுபடுத்துவோம் என்று நான் நம்புகிறேன்.
பிராந்திய மற்றும் உலகளாவிய பாதுகாப்பு, உறுதித்தன்மையை வலுப்படுத்துவதை இருநாடுகளும் ஆதரிக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.
- தாய்நாட்டின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
- அடுத்த மாதம் பிரதமர் மோடி 75 வயதை எட்டுகிறார்.
79வது சுதந்திர தினமான இன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி பிரதமர் மோடி உறையற்றினார்.
அப்போது பேசிய மோடி, 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் என்றும், ஒரு நூற்றாண்டு காலமாக நமக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
தனிநபர்கள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உறுதியுடன் தாய்நாட்டின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் 100 ஆண்டுகால சேவை ஒரு பெருமைமிக்க பொற்காலம் என்றும் மோடி கூறினார். மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில் சுதந்திர போராட்டத்தை எதிர்த்த ஆர்எஸ்எஸ்-ஐ புகழ்ந்து உண்மையான தியாகிகளை மோடி அவமானப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தடைசெய்யப்பட்டிருந்த ஒரு மதவெறி அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் வரலாற்று கொண்டாட்டத்தை மோடி அவமதித்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மோடிக்கு அடுத்த மாதம் 75 ஆக உள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்-ஐ தூக்கிப் பிடித்து தனது ஓய்வு வயதை தள்ளிப் போட பிரதமர் நகர்வு இது எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், செங்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ மோடி புகழ்ந்தது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறிய செயல். அடுத்த மாதம் 75 வயதை எட்டிய பிறகு தனது பதவிக் காலத்தை நீட்டிக்க பிரதமர் அந்த அமைப்பை திருப்திப்படுத்துகிறார் என குற்றம் சாட்டினார்.
- உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும்!
- மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
உண்மையான கூட்டாட்சியாகத் திகழும் இந்தியாதான், வலிமை பெற்ற வளர்ந்த இந்தியாவாகத் திகழ முடியும்!
மாநில உரிமைகளை மீட்டெடுக்கத் தேவையான அரசியல்சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்பதே ஒரே தீர்வு என்ற உறுதியுடன் - முத்தமிழறிஞர் கலைஞர் பெற்று தந்த உரிமையுடன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து வணங்கினேன்!
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- நேருவுக்கு அடுத்தபடியாக அதிக தடவை சுதந்திர தின கொடி ஏற்றியவர் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்து உள்ளது.
- பிரதமர் மோடி போன்று 1947-ல் ஜவகர்லால் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி இன்று பேசியது புதிய சாதனையாக மலர்ந்துள்ளது. இன்று அவர் 103 நிமிடங்கள் சுதந்தர தின உரையாற்றி இருக்கிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினத்தின்போது 98 நிமிடங்கள் பேசியதுதான் சாதனையாக இருந்தது. இன்று அந்த தனது சாதனையை பிரதமர் மோடியே முறியடித்து புதிய சாதனை படைத்து இருக்கிறார்.
2017-ம் ஆண்டு பிரதமர் மோடி சுதந்திர தின உரையின்போது 56 நிமிடங்கள் பேசினார். அதுதான் அவரது குறைந்த நேர சுதந்திர தின உரையாகும்.
இந்த சுதந்திர தினத்தில் கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் மூலம் பிரதமர் மோடி மற்றொரு புதிய சாதனையும் படைத்து இருக்கிறார். நேருவுக்கு அடுத்தபடியாக அதிக தடவை சுதந்திர தின கொடி ஏற்றியவர் என்ற சிறப்பு அவருக்கு கிடைத்து உள்ளது. இதுவரை 2-வது இடத்தில் இருந்த இந்திரா காந்தியின் சாதனையை இன்று பிரதமர் மோடி முறியடித்துள்ளார்.
பிரதமர் மோடி போன்று 1947-ல் ஜவகர்லால் நேரு 72 நிமிடங்கள் சுதந்திர தின உரையாற்றியுள்ளார். 1997-ல் அப்போதைய பிரதமர் குஜ்ரால் 71 நிமிடங்கள் பேசினார். மிக மிக குறைவான சுதந்திர தின உரையாக 1954-ம் ஆண்டு நேருவும், 1966-ம் ஆண்டு இந்திரா காந்தியும் பேசிய தலா 14 நிமிடங்கள்தான் குறைவான உரையாகும்.
மன்மோகன்சிங், வாஜ்பாய் ஆகிய இருவரும் சுதந்திர தின உரையை அதிகமாக பேசியது கிடையாது. அவர்கள் இருவரும் சராசரியாக 30 நிமிடங்களே சுதந்திர தின உரையாற்றி உள்ளனர். ஆனால் பிரதமர் மோடி அவர்களை விட 3 மடங்கு அதிகமாக பேசி சாதனை படைத்து இருக்கிறார்.
- நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
- ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர்.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
சுதந்திர தினத்தையொட்டி டெல்லியில் உள்ள தேசிய போர் நினைவுச் சின்னத்தில் போரில் உயிர்தியாகம் செய்த ராணுவ வீரர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு மரியாதை செலுத்தினார்.
ஜனாதிபதி திரவுபதி முர்முவுடன் முப்படை தளபதிகளும் மரியாதை செலுத்தினர். அவர்களை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இணையமைச்சர் சஞ்சய் சேத் மரியாதை ஆகியோரும் மரியாதை செலுத்தினர்.
- சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.
- அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னையில் பீச் பாய்ஸ் நண்பர்கள் சார்பாக பெசன்ட் நகர் எலைட் பீச்சில் தேசியக் கொடி ஏற்றப்பட்டது.

பெசன்ட் நகர் எலைட் பீச்சில் டாக்டர் பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை கண் மருத்துவமனை (Chennai Eye Care Hospital) மருத்துவ இயக்குநர் டாக்டர் மனோகர் பாபு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குனர் வெங்கடேஷ ராஜா உட்பட நடைபயிற்சியாளர்களும் இதில் கலந்து கொண்டனர்.
- சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்தார்.
- தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இந்தியாவின் 79-வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் ராமநாதபுரம் பரமக்குடி அருகே எமனேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வரக்கூடிய அரசுப்பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.
சுதந்திர தின விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பள்ளியை முற்றுகையிட்டனர். தலைமை ஆசிரியருக்கு எதிராக பாஜகவினர் முழக்கமிட்டனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை கைது செய்தனர்.
இந்நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர் தர்மராஜன் தினமும் பள்ளிக்கு கருப்பு நிற சட்டை அணிந்து தான் வருகை தருகிறார் என்று குறிப்பிடத்தக்கது.
- உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார்.
- தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன.
சென்னை:
நமது நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கமலாலயத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர் கூறியதாவது:
டெல்லியில் பிரதமர் மோடி தேசியக்கொடியை ஏற்றி வைத்து நமது நாட்டின் சாதனைகளையும், தீவிரவாதத்துக்கு எதிராக நாம் மேற்கொண்ட நடவடிக்கைகளையும் எடுத்துக் கூறியுள்ளார்.
உலகின் மிகப்பெரிய தலைவராக பிரதமர் மோடி திகழ்ந்து வருகிறார். இந்தியாவை உலகின் மிகப்பெரிய 4-வது பொருளாதார நாடாக அவர் மாற்றி காட்டி இருக்கிறார்.
பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் எந்தவித சமரசத்துக்கும் இடம் கொடுக்க மாட்டோம் என்று பிரதமர் தெரிவித்திருக்கிறார். அதே நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள்.
தமிழகத்தை பொறுத்தவரையில் கொலை, கொள்ளை, பாலியல் உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிகரித்துவிட்டன. எனவே நாம் அனைவரும் தி.மு.க. ஆட்சியை அகற்றுவதற்கான உறுதிமொழியை எடுத்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில் போதைப்பொருட்களை ஒழிப்பதற்கும் நாம் உறுதி ஏற்க வேண்டும்.
தமிழகத்தில் தி.மு.க. உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் கும்பலைச் சேர்ந்தவர்கள் மத்திய அரசை அச்சுறுத்தி வருகிறார்கள்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம். 2026-ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நிச்சயம் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அமைக்கும். அப்போது நாம் சென்னை கோட்டையில் கொடி ஏற்றுவோம். இது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.






