என் மலர்
இந்தியா

சுதந்திர தின உரையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய மோடி.. ஓய்வு வயதை நீட்டிக்கும் முயற்சி - காங்கிரஸ்
- தாய்நாட்டின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
- அடுத்த மாதம் பிரதமர் மோடி 75 வயதை எட்டுகிறார்.
79வது சுதந்திர தினமான இன்று டெல்லி செங்கோட்டையில் கொடி ஏற்றி பிரதமர் மோடி உறையற்றினார்.
அப்போது பேசிய மோடி, 100 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட ஆர்எஸ்எஸ், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் என்றும், ஒரு நூற்றாண்டு காலமாக நமக்கு உத்வேகம் அளித்து வருவதாகவும் தனது உரையில் தெரிவித்தார்.
தனிநபர்கள் மூலம் தேசத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்ற உறுதியுடன் தாய்நாட்டின் நலனுக்காக ஆர்.எஸ்.எஸ் உறுப்பினர்கள் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்ததாகவும், ஆர்.எஸ்.எஸ்ஸின் 100 ஆண்டுகால சேவை ஒரு பெருமைமிக்க பொற்காலம் என்றும் மோடி கூறினார். மேலும் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்தை புகழ்ந்து பேசினார்.
இந்நிலையில் சுதந்திர போராட்டத்தை எதிர்த்த ஆர்எஸ்எஸ்-ஐ புகழ்ந்து உண்மையான தியாகிகளை மோடி அவமானப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
தடைசெய்யப்பட்டிருந்த ஒரு மதவெறி அமைப்பை ஊக்குவிப்பதன் மூலம் வரலாற்று கொண்டாட்டத்தை மோடி அவமதித்ததாக கம்யூனிஸ்ட் கட்சி குற்றம்சாட்டி உள்ளது.
மோடிக்கு அடுத்த மாதம் 75 ஆக உள்ள நிலையில் ஆர்எஸ்எஸ்-ஐ தூக்கிப் பிடித்து தனது ஓய்வு வயதை தள்ளிப் போட பிரதமர் நகர்வு இது எனவும் அரசியல் விமர்சகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட பதிவில், செங்கோட்டையில் ஆர்.எஸ்.எஸ்-ஐ மோடி புகழ்ந்தது அரசியலமைப்பு, மதச்சார்பற்ற குடியரசின் உணர்வை அப்பட்டமாக மீறிய செயல். அடுத்த மாதம் 75 வயதை எட்டிய பிறகு தனது பதவிக் காலத்தை நீட்டிக்க பிரதமர் அந்த அமைப்பை திருப்திப்படுத்துகிறார் என குற்றம் சாட்டினார்.






