என் மலர்
நீங்கள் தேடியது "பெருமாள் வழிபாடு"
- சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.
- இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம்.
இரும்பு என்பது சனி பகவான் ஆதிக்கம் செலுத்தும் பொருள். அதனால் சனிக்கிழமைகளில் இரும்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இரும்பு மற்றும் எண்ணெய் பொருட்கள் சனி பகவானுடன் தொடர்புடையவை என்று நம்பப்படுகிறது.
* சனிக்கிழமை சனி பகவானுக்கு உகந்த நாள் என்பதால், இரும்புப் பொருட்களை வாங்குவது நல்ல பலனைத் தராது. ஆனால், அதற்கு மாறாக இரும்புப் பொருட்களை கோவிலுக்கு தானம் செய்யலாம். அதனால் பலன் கூடும்.
* எண்ணெய் மற்றும் உப்பு வாங்குவதையும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி தவிர்த்துவிடலாம்.
* சனிக்கிழமை உப்பு வாங்குவதற்கு மாறாக வெள்ளிக்கிழமையே வாங்கி பூஜை அறையில் வைத்து விடலாம்.
* உப்பில் மகாலட்சுமி வாசம் செய்வதால் ஒரு ஜாடியில் உப்பைக் கொட்டி அதில் 5 ரூபாய் நாணயத்தை போட்டு வைத்தால் போதும் செல்வம் செழிக்கும்.
* சனிக்கிழமையில் புதிய ஆடைகளை வாங்குவதையும் தவிர்த்துவிட வேண்டும். அப்படியே வாங்கினாலும் கருப்பு நிற ஆடையைத்தான் வாங்க வேண்டுமாம்.
* அன்றைய நாள் புதிய ஆடைகளையும் அணியக்கூடாது என்பது பலரது நம்பிக்கையாக உள்ளது.
குறிப்பாக சனிக்கிழமையில் துடைப்பம் மற்றும் கருப்பு எள் முதலானவற்றை வாங்குவதை முற்றிலும் தவிர்த்துவிட வேண்டும். இவற்றை சனிக்கிழமையில் வாங்கினால் சனிபகவானின் கோபம் அதிகரிக்கும் என்றும் அதனால் நம் வாழ்வில் இன்னல்கள் ஏற்படும் என்றும் நம்பப்படுகிறது.
- சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும்,பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு.
- ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.
சனிக்கிழமை வழிபாட்டில் பொதுவாக சனீஸ்வர பகவானையும், பெருமாளையும் அனுமனையும் வழிபடுவது சிறப்பு. சனிக்கிழமை இவர்களை வழிபட்டால் எல்லா வளமும் நலமும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அதனால் ஒவ்வொரு சனிக்கிழமையும் எள் தீபம் ஏற்றுவது, விரதம் இருப்பது, மற்றும் குறிப்பிட்ட மந்திரங்களை சொல்வது என பக்தர்கள் சனிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில் சனிக்கிழமை வழிபாட்டில் கூடுதலாக என்னென்ன செய்தால் பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
* சனிக்கிழமை சனி பகவானின் அருளைப் பெற சாதம் வடிக்கும் போது அதில் சிறிதளவு கருப்பு எள், கெட்டித்தயிர் சேர்த்து பிசைந்து காகங்களுக்கு வைக்க வேண்டும். இவ்வாறு செய்தால் சனி தோஷம் நீங்கி பாதிப்புகள் குறையும் என்பது நம்பிக்கை.
* இப்படி 21 சனிக்கிழமை தொடர்ந்து செய்து வந்தால் உங்களை வாட்டி வதைக்கும் அனைத்து தீங்கும் அகன்று வெற்றி வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும்.
* சனிக்கிழமைதோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி, நெய் விளக்கு ஏற்றிவர நினைத்த காரியம் நடக்கும்.
* அதேபோல் ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் சாற்றி வழிபடுவதும் வெற்றியைத் தரும்.
* சனிக்கிழமையன்று அனுமனுக்கு வெற்றிலை மாலை சாற்றி வழிபட்டால் தடைபட்ட காரியங்கள் இனிதே நடக்கும். எதிரிகள் மீதான பயம் விலகும்.
- வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர்.
- திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
மூவுலகையும் காப்பவர் பரம்பொருள் நாராயணன் எனும் திருமால். இவர் பெருமாள், மாயோன், விஷ்ணு, பரமாத்மா என பல்வேறு பெயர்களை கொண்டவர். 10 அவதாரங்களுக்கு சொந்தக்காரர். உலகத்தில் அதர்மம் அதிகரிக்கும்போது, தர்மத்தை நிலைநாட்ட பெருமாள் அவதாரங்கள் எடுப்பார் என்று வைணவம் கூறுகிறது.
திருமால் பாற்கடலில் ஆதிசேஷன் என்ற பாம்பை படுக்கையாக கொண்டு பள்ளிகொண்டிருக்கிறார். திருமால் பள்ளிகொள்ளும் படுக்கையாகிய ஆதிசேஷன், ஆயிரம் வாய்களைக் கொண்டது. அந்த படுக்கையில் ஒரு மலையைப் போன்று திருமால் பள்ளிகொண்டுள்ளார். அங்கு சூரியனும், சந்திரனும் விளக்குகளாக உள்ளனர். கடல் அலைகள் விசிறிகளாகின்றன.

திருவரங்கம் ராஜகோபுரம்
வைணவ திவ்ய தேசங்கள்
பாற்கடலை போல இந்த பாரெங்கும் வீற்றிருக்கிறார் பெருமாள். அவர் வீற்றிருக்கும் தலங்கள் எண்ணிலடங்காதவை என்றாலும், அவற்றில் 108 திருத்தலங்கள், திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படுகின்றன. பன்னிரு ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம்பெற்ற வைணவ திவ்ய தேச திருத்தலங்கள் இந்த 108 திருத்தலங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதில் முதன்மையான தலம் திருவரங்கம் அரங்கநாதசாமி கோவில். வைணவ திருத்தலங்கள் 108 என்று தொகுத்து காட்டியவர் அழகிய மணவாள தாசர். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில் அலுவலராக பணியாற்றியவர். இவர் தம் காலத்தில் சிறப்புற்று விளங்கிய வைணவ தலங்களை 108 என்று வரையறை செய்து, நாடு வாரியாக பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அது 'நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி' என்னும் நூலாக வெளிவந்துள்ளது. திவ்ய தேசங்கள் அக்காலத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகின்றன.
காவிரி டெல்டா மாவட்டங்களில்...
108 வைணவ திவ்ய தேசங்களில் 84 திருத்தலங்கள் தமிழ்நாட்டிலும், 11 திருத்தலங்கள் கேரளாவிலும், 2 திருத்தலங்கள் ஆந்திராவிலும், 4 திருத்தலங்கள் உத்தரப்பிரதேசத்திலும், 3 திருத்தலங்கள் உத்தராகண்டிலும், 1 திருத்தலம் குஜராத்திலும், 1 திருத்தலம் நேபாளத்திலும், 2 திருத்தலங்கள் வானுலகத்திலும் உள்ளன. இதில் தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள வைண தலங்களை பற்றி இங்கு காணலாம்.
தஞ்சை மாவட்டத்தில் கோவிலடி, கண்டியூர், திருக்கூடலூர், கபிஸ்தலம், புள்ளபூதங்குடி, ஆதனூர், கும்பகோணம், திருநாகேஸ்வரம், நாச்சியார்கோவில், திருச்சேறை, நாதன்கோவில், திருவெள்ளியங்குடி, தஞ்சை ஆகிய இடங்களிலும், திருவாரூர் மாவட்டத்தில் திருக்கண்ணமங்கை, திருச்சிறுப்புலியூர், நாகை மாவட்டத்தில் திருக்கண்ணபுரம், திருக்கண்ணங்குடி, நாகை ஆகிய இடங்களிலும் 108 வைணவ திவ்ய தேச தலங்கள் அமைந்துள்ளன.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேரழுந்தூர், தலைச்சங்காடு, திருஇந்தளூர், சீர்காழி, தாடாளன்கோவில், திருவாழி-திருநகரி ஆகிய இடங்களும் வைணவ திவ்ய தேச தலங்களாகும். மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி அருகே திருநாங்கூர் பகுதியில் 11 வைணவ திவ்ய தேச தலங்கள் அடுத்தடுத்து அமைந்திருப்பது சிறப்பம்சமாகும். காவிரி டெல்டா மாவட்டங்களில் உள்ள புராண வரலாற்று சிறப்புடைய இக்கோவில்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து பக்தர்கள் வந்து பெருமாளையும், தாயாரையும் தரிசித்து செல்கிறார்கள்.

திருநாங்கூர் வரதராஜ பெருமாள் கோவில்
திருநாங்கூர் திருப்பதிகள்
மயிலாடுதுறை மாவட்டத்தில் திருநாங்கூர் பகுதியில் 11 திருப்பதிகள் அமைந்துள்ளன. இதில் திருநாங்கூர் என்னும் ஊரில் உள்ள 6 திவ்ய தேசங்களையும், இந்த ஊரை சுற்றி அருகருகே அமைந்துள்ள 5 திவ்ய தேசங்களையும் சேர்த்து 'திருநாங்கூர் திருப்பதிகள்' என அழைக்கப்படுகின்றன. திருக்காவளம்பாடி, திருஅரிமேயவிண்ணகரம், திருவண்புருடோத்தமம், திருச்செம்பொன் செய்கோவில், திருமணிமாடக்கோவில், திருவைகுந்தவிண்ணகரம், திருத்தேவனார்த்தொகை, திருத்தெற்றியம்பலம், திருமணிக்கூடம், திருப்பார்த்தன்பள்ளி, திருவெள்ளக்குளம் ஆகியவை திருநாங்கூர் திருப்பதிகளாகும்.
ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசைக்கு மறுநாள் திருநாங்கூரில் திருமணிமாடக் கோவில் என்று அழைக்கப்படும் நாராயணப் பெருமாள் சன்னிதியில் கருடசேவை திருவிழாவுக்கு இந்த 11 கோவில்களின் உற்சவர் சிலைகளும் எடுத்துவரப்படும். இந்த 11 பெருமாள்களையும் திருமங்கையாழ்வாரின் பாசுரத்தால் ஒருவருக்கு அடுத்து ஒருவராக மங்களாசாசனம் செய்வார்கள். அதன்பின் திருமங்கையாழ்வாரை மணவாள மாமுனிகள் பாசுரத்தால் மங்களாசாசனம் செய்வார்கள். இந்த கருட சேவையை காண்பதற்கு திரளான பக்தர்கள் ஒன்று கூடுவார்கள்.
அமைந்திருக்கும் இடங்கள்
108 திவ்ய தேசங்கள் அன்றைய காலகட்டத்தில் இருந்த அரசுகளின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன:-
சோழநாட்டு திருப்பதிகள் - 40
நடுநாட்டு திருப்பதிகள் - 2
தொண்டைநாட்டு திருப்பதிகள் - 22
வடநாட்டு திருப்பதிகள் - 11
மலைநாட்டுத் திருப்பதிகள் - 13
பாண்டியநாட்டுத் திருப்பதிகள் - 18
நில உலகில் காணமுடியாத திருப்பதிகள் - 2
- அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
- கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
பெருமாளின் அவதாரங்கள் என்பவை பூமியில் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டவும், பக்தர்களைக் காக்கவும் பகவான் விஷ்ணு எடுக்கும் வடிவங்கள் ஆகும். விஷ்ணுவின் பத்து முக்கிய அவதாரங்கள் தசாவதாரங்கள் என அழைக்கப்படுகின்றன.
அதன் விவரம் வருமாறு:-
1. மச்சாவதாரம், 2. கூர்மாவதாரம், 3. வராக அவதாரம், 4. நரசிங்க அவதாரம், 5. வாமன அவதாரம், 6. பரசுராம அவதாரம், 7. ராம அவதாரம், 8. பலராம அவதாரம், 9. கிருஷ்ண அவதாரம், மற்றும் 10. கல்கி அவதாரம்.
மச்ச அவதாரம் (மீன்):
அண்டத்தைப் பாதுகாப்பதற்காக விஷ்ணு எடுத்த முதல் அவதாரம் இதுவாகும்.
கூர்ம அவதாரம் (ஆமை):
பிரபஞ்சம் புதைந்திருந்தபோது அதைப் பாதுகாக்கவும், சமுத்திர மந்தனத்தின் போது மந்தர மலையைத் தாங்கவும் இந்த அவதாரம் எடுக்கப்பட்டது.

வராக அவதாரம் (பன்றி):
பூமியை இரண்யாட்சன் என்ற அரக்கனிடம் இருந்து மீட்டெடுத்த அவதாரம் இது.
நரசிங்க அவதாரம் (சிங்க-மனிதன்):
இரண்யகசிபு என்ற அரக்கனை வதம் செய்து பக்தன் பிரகலாதனைக் காத்த அவதாரம்.
வாமன அவதாரம் (குள்ள உருவம்):
மகாபலி சக்கரவர்த்தியின் ஆணவத்தை அழித்து, உலகை மூன்று அடிகளால் அளந்த குள்ள உருவம் எடுத்த அவதாரம்.
பரசுராம அவதாரம்:
பிராமணர்களைக் கொன்ற சத்திரியர்களை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய அவதாரம்.
ராம அவதாரம்:
தீய சக்திகளை அழித்து, அறநெறியுடன் வாழ்ந்த மனித உருவம் எடுத்த அவதாரம்.
பலராம அவதாரம்:
பலத்தின் அடையாளமாகத் திகழ்ந்த அவதாரம்.
கிருஷ்ண அவதாரம்:
கீதை போதனைகளை உலகுக்கு வழங்கிய, அன்பையும் பக்தியையும் போதித்த அவதாரம்.
கல்கி அவதாரம்:
கலியுகத்தின் இறுதியில் தர்மத்தை நிலைநாட்டவும், அதர்மத்தை அழிக்கவும் எடுக்கப்படும் பத்தாவது அவதாரம்.
- இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும்.
- புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.
நாளை (20-ந்தேதி) புரட்டாசி முதல் சனிக்கிழமை. இந்த ஆண்டு வரும் புரட்டாசி மாத சனிக்கிழமைகள் மிகவும் சிறப்புமிக்கவை.
ஜாதக அமைப்பின்படி சனி திசை, புதன் திசை நடப்பவர்கள் ஏழரை சனி, அஷ்டம சனி, கண்ட சனி என சனியின் பிடியில் இருக்கும் ராசியை சேர்ந்தவர்கள் புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட சகல தடைகள், சங்கடங்கள் நீங்கி வாழ்வில் வளம் பெருகும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
புரட்டாசி மாதத்தில் சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னிராசி புதனின் ஆட்சி உச்ச வீடாகும். மகா விஷ்ணுவே புதனாக அவதாரம் செய்தார் என்பர். எனவேதான் சனீஸ்வர விரதம் கடைப்பிடிப்போர் சிவ விஷ்ணு ஆலயங்களில் உள்ள சனீஸ்வர பகவானிற்கு எள்நெய் எரித்து வழிபடுவதோடு, சிவ விஷ்ணுவையும் வழிபடுவது கட்டாயமாகின்றது.
சனீஸ்வரன் ஒருவருடைய ஜாதகத்தில் சந்திரன் நிற்கும் இடம் ராசிக்கு 5-ல் சஞ்சரிக்கும் பொழுது பஞ்சம சனியென்றும், 8-ல் சஞ்சரிக்கும் காலம் அட்டமத்துச்சனியென்றும், 12-ல், 1-ல், 2-ல் சஞ்சரிக்கும் காலம் ஏழரைச் சனியென்றும் கூறுவர்.
இக்காலங்களில் புத்திர சுகம் குறைவு, மரண பயம், பிரயாணம், அதிக செலவு, தேகமெலிவு என்பன உண்டாகும். இதைச் சனிதோஷம் என்பர்.
புரட்டாசி மாதத்தில் சனிக்கிழமையில் குருவின் நிறமாகிய மஞ்சளாடை அணிந்து சந்திரனின் காரகமாகிய உணவினை (தளிகை) சனியின் காரகமாகிய மண்பாத்திரத்தில் இட்டு ஏழுமலையானுக்கு படையலிட தோஷம் நீங்கும்.
புரட்டாசி சனிக்கிழமையில் சந்திரனின் காரகமாகிய பச்சரிசி மாவில் சுக்கிரனின் இனிப்பு வெல்ல பாகு மற்றும் ஏலக்காய் சேர்த்து சனியின் எள் சேர்த்து குருவின் நெய்யில் மாவிளக்கு வைத்து வழிபட புணர்ப்பு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்வது நல்லபலனை தரும்.

புரட்டாசி சனிக் கிழமையில், பெருமாளை ஆலயம் சென்று தரிசிக்கும் போது, அங்கே நம்மால் முடிந்தால், புளியோதரை நைவேத்தியம் செய்து பக்தர்களுக்கு வழங்குவதும், அன்னதானம் செய்வதும் மும்மடங்குப் பலனை தந்தருளும்.
புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நாளை ஆலயம் செல்லுங்கள். பெருமாளையும் தாயாரையும் வழிபடுங்கள். கோவிந்தனிடம் குறைகளையெல்லாம் சொல்லி பிரார்த்தனை செய்யுங்கள். தடைப்பட்ட திருமணம் முதலான காரியங்களை நடத்தி அருளுவார்கள் பெருமாளும் தாயாரும்!
ஆலயத்துக்கு செல்ல இயலாவிட்டால் வீட்டில் வெங்கடாசலபதி திருவுருவப் படத்தை வைத்தும் கும்பிடலாம். புரட்டாசி சனிக்கிழமை பூஜைக்குரிய பொருட்களை முன்னதாகவே சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். திருமலை வெங்கடேசப் பெருமாளின் படம் ஒன்றை வைத்து மாலை சூட்டி, வெங்கடேச அஷ்டகம் சொல்லிப் பூஜை செய்ய வேண்டும். சிலர் வெங்கடேசப் பெருமாளின் முகத்தை மட்டும் வைத்து பூஜை செய்வதுண்டு. துளசி தளங்களால் பெருமாளை அர்ச்சிப்பது மிகவும் உகந்தது. மாவிளக்கிட்டு பூஜை செய்வதானால் பச்சரிசி மாவை தூய உடலோடும், மனதோடும் இருந்து சலித்து, மாவினாலே விளக்கு செய்து அதில் நெய் விட்டு தீபமேற்ற வேண்டும். பெருமாள் படத்தின் முன்னர், இப்படி நெய் தீபம் ஏற்றுவதால் வறுமை நீங்கி, வீட்டில் செல்வச் செழிப்பு ஏற்படும்.
புரட்டாசி சனிக்கிழமைகளில் விரதம் இருந்து, ஏழுமலையானை மனம் உருக வழிபட்டால், செல்வமும், நிம்மதியும் கிடைக்கும் என்பதோடு, முக்தியும் வாய்க்கும் என்பது ஐதீகம். புரட்டாசி மாத சனிக்கிழமை விரதத்துக்கு இப்படியொரு சிறப்பான மகத்துவம் இருக்கிறது.
- ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
- புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம்.
மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதம் புரட்டாசி. அதுவும் அந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் துன்பங்கள் விலகி, வளமான வாழ்வு கிடைக்கும். நவக்கிரகங்களில் ஒன்றான புதன் கிரகத்தின் அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதம் ஆகும். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கான சிறப்பு வழிபாடுகள், பிரமோற்சவங்கள் நடத்தப்படுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனி என்பதால் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதம் மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
பொதுவாக சனிக்கிழமைகளில் பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். எனவே, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.
திருப்பதி வெங்கடாசலபதி கோவிலில் பீமன் என்ற மண் பாண்ட தொழிலாளி வசித்துவந்தார். பெருமாள் பக்தரான இவர், ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார். சனிக்கிழமைகளில் கோவிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் எப்படி வழிபடுவது என்று தெரியாது. "பெருமாளே, நீயே எல்லாம்" என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்துவிடுவார்.
ஒருமுறை, "பெருமாளைப் பார்க்க கோவிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன?" என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடிந்ததும் மீதமிருக்கும் மண்ணை சிறுசிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார்.
அந்த ஊரைச் சேர்ந்த அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர் சனிக்கிழமைகளில் ஆலயத்திற்கு வந்து இறைவனுக்கு தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார். ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் ஆலயம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை கிடந்தது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் அரண்மனை திரும்பினார்.
அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த தொழிலாளியின் இல்லத்திற்கு சென்ற அரசர், அவருக்கு வேண்டிய பொருளுதவி செய்தார். ஆனால் அதை ஏற்காமல், பெருமாள் பணியை செய்துவந்த அவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம். அதேநேரம் புரட்டாசி சனிக்கிழமை சனி பகவான் அவதரித்த நாள். அதன்காரணமாகவே சனி பகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது.
- விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
- ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.
மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இ
ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.
அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.
ஏகாதசி விரதம் இருக்கும் முறை :
* ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.
* விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.
* ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.
* ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.
* ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.
* மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
* ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.
* ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.
* முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.
* மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
- சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.
- பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
பெருமாளுக்கு உகந்த இரண்டு மிக முக்கியமான விரதங்கள் ஏகாதசியும், திருவோணமும். இவற்றில் ஏகாதசி விரதம் மாதத்திற்கு இரு முறையும், திருவோணம் ஒரு முறையும் வரும். ஏகாதசி விரதம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் திருவோண விரதம் பற்றி பலருக்கும் தெரியாது. இதனால் மிக சிலர் மட்டும் திருவோணம் நட்சத்திரம் வரும் நாட்களில் விரதம் இருப்பது உண்டு.
முருகப் பெருமானுக்கு எப்படி திதிகளில் சஷ்டி திதியும், நட்சத்திரங்களில் கார்த்திகை நட்சத்திரமும் விரத நாட்களாக கருதப்படுகிறதோ, அதே போல் பெருமாளுக்குரிய நட்சத்திர விரதம் தான் திருவோணம். இது பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் விரதம் ஆகும்.
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரத்தை அவர் எடுத்தது திருவோணம் நட்சத்திர நாளில் தான். நட்சத்திரங்களில் "திரு" என பெருமைப்படுத்தி சொல்லப்படும் இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று பெருமாளுக்குரிய திருவோணமும், சிவ பெருமானுக்குரிய திருவாதிரை நட்சத்திரமும் தான்.
வாமனராகவும், திரிவிக்ரமனாகவும் அவதாரம் எடுத்தது திருவோண நட்சத்திர நாளில் தான் வாழ்வில் வளர்ச்சியையும், சகலவிதமான நலன்களையும் தரக்கூடியது திருவோண விரதம் ஆகும். பெருமாளுக்கு நெருக்கமானவராகவும், பிரியமானவராகவும் ஆக வேண்டும் என்றால் திருவோண விரதம் இருக்கலாம்.
ஏகாதசியை போல் திருவோண நட்சத்திரம் வரும் நாட்களிலும், நாள் முழுவதும் கடுமையான விரதத்தை பக்தர்கள் மேற்கொள்வார்கள். பெருமாளின் அருளை வேண்டி இருக்கப்படும் இந்த விரதம் மகிழ்ச்சி, செல்வ வளம், முன்னேற்றம், மோட்சம் ஆகியவற்றை தரக் கூடியதாகும்.

அது மட்டுமல்ல வைகுண்டத்திற்கு சென்று ஸ்ரீமன் நாராயணனை நேரில் தரிசிக்கும் பாக்கியத்தை தரக் கூடியது திருவோணம் விரதம் ஆகும். பெருமாளுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக் கொள்வதற்கும், கடந்த கால பாவங்கள், தவறுகளில் இருந்து மன்னிப்பு கிடைப்பதற்கும், ஆன்மிகம் ஞானம் பெறுவதற்கும், தன்னை தானே உணர்ந்து கொள்வதற்கும் வழியை ஏற்படுத்தக் கூடியது திருவோணம் விரத நாளாகும்.
நாளை திருவோண விரதம் அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, சுத்தமான ஆடைகளை உடுத்திக் கொண்டு, தீர்த்தம், பால், தேன் ஆகியவற்றால் அபிஷேகம் செய்ய வேண்டும். வாசனை மிகுந்த மலர்களை பெருமாளுக்கு சூட்டி வழிபட வேண்டும். ஏகாதசி விரதத்திற்கு கடைபிடிக்கும் விரத முறைகளை இதற்கும் கடைபிடிக்க வேண்டும்.
உணவை தவிர்த்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்த வேண்டும். தியானம், வழிபாடு, மந்திர ஜபம் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும்.
மாலையில் சூரியன் மறைந்த பிறகு பெருமாளுக்கு பூஜைகள் செய்து வழிபட்ட பிறகு, பெருமாளுக்கு படைத்த நைவேத்தியத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
உடல் ஆரோக்கியம், மன ஆரோக்கியம் இரண்டையும் ஒருசேர பெறுவதற்கு இந்த திருவோண நட்சத்திரத்தன்று பெருமாளை வழிபாடு செய்வது சிறப்பான பலனை கொடுக்கும். திருவோண நட்சத்திரம் பெருமாளின் நட்சத்திரம். நீங்கள் இந்த திருவோண நட்சத்திரத்திற்கு விரதம் இருந்து பெருமாளை வழிபாடு செய்வது நல்லது.
சாப்பிடாமல் இருக்க இயலாது என்ற சூழ்நிலையில் இருப்பவர்கள் மதியம் சாப்பாடு சாப்பிட்டாலும் இந்த வழிபாட்டை செய்யலாம். மாலை வீட்டில் இருந்தபடியே பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, பெருமாளுக்கு அப்பம் செய்து நெய்வேத்தியம் செய்து வைத்து, வழிபாட்டை மேற்கொள்ளலாம்.
பெருமாளுக்கு துளசி இலைகளை வாங்கி போட்டு விளக்கு ஏற்றி உங்களுடைய பிரச்சனைகள் தீர பிரார்த்தனை செய்தால் வேண்டிய வேண்டுதல் அப்படியே நடக்கும். உங்கள் வீட்டு பக்கத்தில் பெருமாள் கோவில் இருக்கிறதா. அங்கு செல்லுங்கள். பெருமாளுக்கு 12 வாழைப்பழம் வாங்கிக் கொள்ளுங்கள்.
கொஞ்சமாக துளசி இலைகள், கொஞ்சமாக பச்சை கற்பூரம் வாங்கிக் கொள்ளுங்கள். வாழைப்பழத்தை பெருமாள் பாதத்தில் வைத்து எடுத்து கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு எல்லாம் ஒவ்வொரு பழத்தை தானம் செய்து விடுங்கள். உங்களுடைய தீராத நோய்நொடி தீர இந்த தானம் செய்வது சிறப்பான பலனை கொடுக்கும்.
துளசி இலைகளை பெருமாளுக்கு சாத்தி விடுவார்கள். பிரசாதமாக இரண்டு இலைகளை மட்டும் திரும்பவும் வாங்கிக் கொள்ளுங்கள். பச்சை கற்பூரத்தை பெருமாள் பாதத்தில் வைத்து மீண்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
அந்த பச்சை கற்பூரத்தை வீட்டிற்கு கொண்டு வந்து கொஞ்சம் பணம் வைக்கும் பெட்டியில், பூஜை அறையில், சமையலறையில் மசாலா டப்பாவுக்கு பக்கத்தில், ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வையுங்கள்.
இப்படி வீட்டில் எல்லா இடத்திலும் பெருமாள் கோவிலில் இருந்து எடுத்துவரப்பட்ட பச்சைக் கற்பூரத்தை வைத்தால் வீட்டில் இருக்கும் தரித்திரம் விலகி வீட்டில் செல்வ கடாட்சம் பெருகும் என்பது நம்பிக்கை. இது எல்லாவற்றையும் விட மிக முக்கியமான விஷயம் என்ன தெரியுமா. நாளை (சனிக்கிழமை) கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்ற நாமத்தை சொல்லிக்கொண்டே இருங்கள். கணக்கே கிடையாது.
நாளை நேரம் கிடைக்கும்போது, ஓய்வு கிடைக்கும் போது, படுக்கும் போது, தூங்கும் போது, இந்த நாமத்தை சொல்லிவிட்டு பிறகு உங்களுடைய வேலையை பாருங்கள். அந்த வைகுண்டத்தில் பெருமாளின் பாதத்தில் இடம் கிடைக்க இந்த ஒரு வார்த்தை மட்டுமே போதும்.
- உங்களால் இயன்ற அளவிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள்.
- ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும்.
உலகளந்த பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமை மட்டுமல்ல எல்லா சனிக்கிழமைகளும் உகந்த நாள்தான். சனிக்கு அதிபதியாக இருக்கும் பெருமாள் தான் சனிபகவானை கட்டுப்படுத்துகிறார். வேண்டிய வரம் கிடைக்க வேங்கடவன் பெருமாளை சனிக்கிழமையில் வணங்கினாலே போதும் எல்லா வரங்களும் உங்களைத் தேடி வரும். அத்தகைய பெருமாளை சனிக்கிழமை அன்று எவ்வாறு வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா? தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.
சனிக்கிழமைதோறும் காலை, மாலை என இருவேளையும் பூஜையறையில் விளக்கேற்றி ஒரு சிறிய கிண்ணத்தில் அவல் வைத்து உள்ளன்போடு பெருமாளுக்கு நைவேத்தியம் படைத்து வழிபடுங்கள். கொஞ்சம் துளசி கிடைத்தால் பெருமாளின் திருப்பாதங்களில் தூவுங்கள். உள்ளம் உருகி, இரு கைகளையும் கூப்பி ஓம் நாராயணா என்று உண்மையான பக்தியோடு அவரிடம் உங்கள் வேண்டுதலை வைத்து வழிபடுங்கள்.
வாராவாரம் சனிக்கிழமை இந்த வழிபாட்டை உள்ளன்போடு செய்து பாருங்கள்... உங்கள் வாழ்வில் பெருமாள் ஏற்படுத்தும் அதிசயங்களை உங்களால் நிச்சயம் கண்கூடாக பார்க்க முடியும்.
உங்களால் இயன்ற அளவிற்கு அருகில் உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று துளசி மாலை சார்த்தி வழிபடுங்கள். முக்கியமாக ஏகாதசி வழிபாடு மேற்கொள்ளுங்கள். ஒவ்வொரு மாதமும் இரண்டு ஏகாதசிகள் வரும். ஒன்று வளர்பிறை ஏகாதசி, மற்றொன்று தேய்பிறை ஏகாதசி. இந்த இரண்டு ஏகாதசியிலும் பெருமாளை வழிபடுவது மிகவும் சிறந்தது. முக்கியமாக உங்களால் முடிந்தால் ஏகாதசியில் விரதம் தொடங்கி அடுத்த நாள் துவாதசியில் விரதம் முடித்து பெருமாளை வழிபட்டு துளசி தீர்த்தம் பருக எல்லா வரங்களையும், வளங்களையும் பெருமாள் உங்களுக்கு வழங்குவார்.
முடிந்தால் ஏகாதசி நாளில், பெருமாளுக்கு தயிர்சாதம் அல்லது புளியோதரை நைவேத்தியம் செய்து வழிபடுங்கள். வழிபாட்டின்போது விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்தால் நீங்கள் இழந்த செல்வங்களை அந்த வேங்கடவன் பெருமாள் உங்களுக்குத் தந்தருள்வார் என்பது ஐதீகம்.
- ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
- திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு.
இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும்.
ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரத நாட்கள்தான்.
சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான்.
திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள்.
அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.
- புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
- இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று.
புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு.
எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது.
பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி.
இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான்.
ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன.
புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான்.
அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.
- புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
- சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது.
எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு.
ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது.
அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான்.
இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது.
புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார்.
அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது.
இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.






