என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஏகாதசி"

    • மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.
    • ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர்.

    பெருமாளுக்கு உகந்த ஏகாதசி விரதம் அனைத்து விரதங்களை விடவும் மிகவும் புண்ணியம் வாய்ந்தது. ஒருவர் வாழ்நாளில் ஒரே ஒருமுறை ஏகாதசி விரதம் கடைபிடித்தாலும் அவரது வாழ்நாளில் மட்டுமின்றி, அடுத்த பிறவியிலும் கூட அவனுக்கு அது நன்மையை தரும் என்பது நம்பிக்கை.

    மாசி மாதம் வளர்பிறை சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை ஆமலகி ஏகாதசியாக கொண்டாடுகிறோம். ஆமலகி என்றால் நெல்லிக்கனி என்று அர்த்தம். அதனால் இந்த ஏகாதசி அன்று நாம் நெல்லி மரத்தை வழிபாடு செய்வதன் மூலம் மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களும் அழிந்த பிறகு விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்டு பூமியில் விழுந்த ஒரு நீர் துளி தான் நெல்லி மரமாக வளர்ந்தது என்று புராணங்களில் கூறப்படுகிறது.

    அதனால் நெல்லி மரத்தில் மகாலட்சுமியும் மகாவிஷ்ணுவும் பரிபூரணமாக குடியிருக்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. நெல்லிக்கனியை தானமாக தருவதன் மூலம் நமக்கு அளவில்லா நன்மைகள் கிடைக்கும். அதே போல் நெல்லிக்கனியில் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதன் மூலமும் சகல ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.

    அப்படிப்பட்ட நெல்லி மரத்தை இந்த மாசி மாதத்தின் வளர்பிறை ஏகாதசி நாளான நாளை(வெள்ளிக்கிழமை) வழிபாடு செய்ய வேண்டும்.

    ஒவ்வொரு ஏகாதசியும் ஒவ்வொரு பலன்களை தரக் கூடியதாகும். அதே போல் ஒவ்வொரு ஏகாதசியில் பெருமாள் ஒவ்வொரு பொருளிளும் எழுந்தருளி அருள் செய்வதாக ஐதீகம். அப்படி திருமால், நெல்லிக்காய் மரத்தில் எழுந்தருளி வாசம் செய்யும் ஏகாதசி என்பதால் இதற்கு ஆமலகி ஏகாதசி ஆகும். அதனால் தான் இந்த நாளில் நெல்லி மரத்தை பெருமாளாகவும், மகாலட்சுமியாகவும் கருதி பூஜை செய்து, வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

    வீட்டில் நெல்லி மரம் இல்லை என்றால், நெல்லி மரம் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்திற்குச் சென்று பூஜை செய்ய வேண்டும். வீட்டில் நெல்லி மரம் இருந்தால் வீட்டிலேயே இந்த பூஜையை செய்து கொள்ளலாம்.

    இதற்காக நெல்லி மரத்திற்கு அடியில் கூட்டி சுத்தம் செய்துவிட்டு, நெல்லி மரத்தை சுற்றி மஞ்சள் தண்ணீரை தெளித்து விடவும். பிறகு நெல்லி மரத்திற்கு மஞ்சள் சந்தனம் தடவி, குங்கும பொட்டு வைத்து மரத்திற்கு கீழே அரிசிமாவால் சின்னதாக கோலம் போட வேண்டும்.

    கோலப்பொடியை பயன்படுத்தாமல் அரிசி மாவால் கோலம் போட்டுவிட்டு கொஞ்சம் உதிரிபூக்களை எடுத்து அந்த நெல்லி மரத்திற்கு மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். மகாலட்சுமி மந்திரத்தை சொல்லி இந்த பூஜையை செய்யலாம்.

     

    கணவனும் மனைவியும் சேர்ந்து இந்த பூஜையை செய்துவிட்டு அந்த மரத்திற்கு கற்பூர ஆரத்தி காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டில் பழம், பிரசாதம் என்ன வேண்டுமென்றாலும் வைத்து பூஜையை மேற்கொள்ளலாம். இந்த பூஜையில் கட்டாயம் வைக்க வேண்டிய பொருள் 108 ஒரு ரூபாய் நாணயங்கள்.

    ஒரு சிறிய கிண்ணத்தில் 108 ஒரு ரூபாய் நாணயத்தை போட்டு அந்த மரத்திற்கு அடியில் வைத்து மனம் உருகி விஷ்ணு பகவானையும் மகாலட்சுமியும் வேண்டிக் கொண்டால், உங்களுக்கான அருள் ஆசி உடனடியாக கிடைக்கும். இறுதியாக கணவன் மனைவி இருவரும் தம்பதியராக அந்த மரத்திற்கு நமஸ்காரம் செய்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும். குடும்பம் நன்றாக இருக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக நினைத்து இந்த பூஜையை செய்து பூஜை நிறைவடைந்த உடன் பூஜையில் வைத்த பொருட்களை வீட்டில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

    பூ, பழம், பிரசாதம் எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளலாம். கிண்ணத்தில் வைத்திருக்கும் ஒரு ரூபாய் நாணயங்களை எடுத்து ஒரு மஞ்சள் துணியில் வைத்து முடிந்து, வீட்டில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்து விடுங்கள்.

    ஆமலகி ஏகாதசி விரதத்தை கடைபிடித்தால் ஆயிரம் பசுக்களை தானம்செய்த பலன் கிடைக்கும் என்கின்றனர். ஒரு பசு தானம் செய்தாலே மிகவும் சிறந்தது என்ற நிலையில், ஆயிரம் பசுக்களை தானம் செய்தால் ஆயிரம் மடங்கு பலன் கிடைக்கும். கடன் தீரவும் பணப்பிரச்சனை தீரவும் பெருமாள் ஆசியுடன் லட்சுமியின் அருளும் நமக்கு சேர்த்தே தான் கிடைக்க வேண்டும். எனவே அவர்களுக்கே உகந்த ஆமலகி ஏகாதசி நாளில் இந்த வழிபாடு செய்யும் பொழுது அதிக பலனை பெறலாம்.

    குபேரனுக்கே அருள் கொடுத்த நெல்லி

    நெல்லிமரம் பூலோகத்தில் உருவான கதை குறித்து புராணங்கள் கூறும் தகவல்கள்...

    செல்வத்துக்கு அதிபதியான குபேரன் தம்மிடமிருந்த சொத்துக்களை இழந்து தவித்த போது சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். "நெல்லி மரங்களை நட்டு வளர்த்து விட்டு அவை வளர்ந்ததும் என்னை வந்துப்பார்" என்றார் சிவபெருமான்.

    செல்வத்துக்கும் நெல்லிமரத்துக்கும் என்ன சம்பந்தம் என்று யோசித்த குபேரன் சிவபெருமானின் கட்டளை என்பதால் எதுவும் பேசாமல் ஆயிரக்கணக்கான நெல்லி மரங்களை வளர்த்தார். நாள்கள் கடந்து விட்டன. நெல்லி மரங்கள் அனைத்தும் பூ பூத்தன. காய் காய்த்து காய்களெல்லாம் இனித்தன.

    குபேரனின் வாழ்வு பழைய நிலைக்குத் திரும்பியது. சூழ்ச்சி செய்து செல்வம் பறித்தவர்கள் அவற்றை எல்லாம் கொண்டு வந்து குபேரனிடம் கொடுத்தார்கள். இழந்த நாடுகள் எல்லாம் திரும்ப கிடைத்தன. குபேரனைவிட பெரிய அரசரெல்லாம் ஓடி வந்து கப்பம் கட்டத் தொடங்கினார்கள்.

    குபேரனுக்கு மனம் முழுக்க கேள்விக் கணைகள் எப்படி இது சாத்தியம். மீண்டும் சிவபெருமானிடம் சென்றார். "நெல்லி மரங்கள் வளர்ந்ததா? இழந்த செல்வம் கிடைத்ததா?" என்றார் சிவபெருமான். "நெல்லிமரம் வளர வளர செல்வம் கிடைத்த காரியத்தைப் புரிந்துக் கொள்ள முடியவில்லையே" என்றார் குபேரர்.

    நீ வைத்தவை நெல்லி மரங்கள் அல்ல லட்சுமிதேவி. உரிய முறையில் அவற்றுக்கு நீர் ஊற்றினாய். அதனால் செய்த பாவங்கள் தொலைந்து லட்சுமிதேவியின் அருளைப் பெற்றாய்" என்றார் சிவபெருமான்.

    மேலும் ஒருநாள் தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை உண்ணும்போது அதில் ஒரு துளி பூலோகத்தில் விழுந்ததாம். அதிலிருந்து முளைத்து உண்டானதுதான் நெல்லிமரம். அதனால்தான் இதனை தெய்வீக மரம் என்று சொல்கிறார்கள் என்கின்றன புராணக்கள்.

    இழந்ததை மீட்டு தரும் நெல்லி சாதம் தானம்

    பெருமாளின் அம்சமாக கருதப்படுவது நெல்லிமரம். மகாலட்சுமி வாசம் செய்வதாக கருதப்படும் இதற்கு ஹரிபலம் என்றும் பெயருண்டு. ஏகாதசி விரதம் இருப்பவர்கள் மறுநாள் துவாதசி உணவில் நெல்லிக்காயை உணவில் சேர்ப்பது அவசியம். நெல்லிமரத்தடியின் நிழலில் வழங்கும் தானத்திற்கு பலன் அதிகம். நெல்லி மரத்தை தானம் செய்தாலும் பலன்கள் அதிகம் கிடைக்கும். நெல்லி மரத்தை தானம் செய்வதன் மூலம், ஆண் குழந்தை வேண்டும் என்ற ஆசை நிறைவேறும்.

    நெல்லிக்காயை தானம் செய்வதால் நோய்களில் இருந்து பாதுகாப்பு மற்றும் ஆரோக்கிய நன்மைகள் பல கிடைக்கும். அதை தானம் செய்வதன் மூலம், நபர் செல்வமும் செழிப்பும் பெறலாம். நெல்லிக்காய் தானம் செய்வதன் மூலம், அறிவு பெற்று மாணவர்கள் வெற்றி பெறுவார்கள்.

    வாரம் ஒரு முறை செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் நெல்லிக்காயில் செய்த நெல்லிக்காய் சாதம் பிரசாதமாக தயாரித்து கோவிலுக்குச் சென்று அங்குள்ள எளியவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் தானம் செய்யுங்கள். நெல்லி சாதம் தானம் செய்ய செய்ய நீங்கள் இழந்தவை யாவும் திரும்ப அடைவீர்கள். உங்களை ஏமாற்றி அடைந்த சொத்துக்கள் கூட திரும்ப கிடைக்கும். தொலைத்த பொருட்கள் உங்களை தேடி தானாக வந்து சேரும். விட்டு சென்ற உறவுகளும், உங்கள் பிரிவின் துயர் நீக்க உங்களை புரிந்து கொண்டு மீண்டும் உங்களை வந்தடைவார்கள். எளிய இந்த தானத்தை பரிகாரமாக ஆறு வாரங்கள் செய்து பாருங்கள், நல்ல பலன்கள் கிட்டும்.

    நெல்லியில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது மற்றும் நோய்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. நெல்லிக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு, அஜீரண பிரச்சனையையும் குறைக்கும். இது சருமத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். இதை சாப்பிடுவதால் ரத்தம் சுத்தமாகி சருமத்தில் பொலிவு ஏற்படும்.

    ஆன்மீக ரீதியாக நெல்லி நீரில் குளிப்பதை கங்கையில் நீராடி காசியில் வசித்த புண்ணியத்திற்கு சமம் என்கின்றனர். நெல்லி ஆயுள் விருத்தி தரக்கூடியது அதனால் தான் கோபுர உச்சியில் கலசத்திற்கு கீழே நெல்லி வடிவில் ஒரு கல்லை வைப்பார்கள் அதற்கு ஆமலகம் என்று பெயர்.

    ஞாயிறு, வெள்ளி, அமாவாசை, சஷ்டி, சப்தமி, நவமி திதிகளில் நெல்லிக்கனியை பயன்படுத்தக் கூடாது. நெல்லி மரமானது நேர்மறை எண்ணங்களை நம்மை சுற்றி உண்டாக்க கூடியது. அவ்வாறு நேர்மறை எண்ணங்கள் நம்ம சுற்றி அதிகம் ஓடும்போது நாமும் நல்லதை பற்றியே யோசிப்போம். மேலும் நெல்லி மரம் லட்சுமியின் அம்சம் என்பதால் வீட்டில் வைத்து வளர்த்து வணங்கி வந்தால் செல்வம் அதிகமாக சேரும்.

    லட்சுமி அருள் தரும் தமிழ் மந்திரம்

    நவகிரகங்களில் சுக்கிரனுடைய ஆளுமை பெற்றது நெல்லி. பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நெல்லிமரத்தை வழிபட்டு வந்தால் ஏற்றம் உண்டாகும் என்கின்றன ஜோதிட நூல்கள். பழனியில் உள்ள திருஆவினன்குடி முருகன் ஆலயத்தின் தல மரம் நெல்லி ஆகும். ஆமலகி ஏகாதசி அன்று நெல்லி மரத்துக்கு பூஜை செய்து கீழக்கண்ட லட்சுமி மந்திரத்தை கூற வேண்டும்.

    அகலகில்லேன் இறையுமென்று

    அலர்மேல் மங்கை உறை மார்பா

    நிகரில் புகழாய் உலகம் மூன்று

    உடையாய் என்னை ஆள்வானே

    நிகரில் அமரர் முனிக்கணங்கள்

    விரும்பும் திருவேங்கடத்தானே

    புகல் ஒன்றில்லா அடியேன் உன்

    அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

    • 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும்.
    • தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும்.

    திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு உத்தரவின்படி எஸ். சி. மற்றும் எஸ்.டி. பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் 5, ஆயிரம் கோவில்கள் கட்டப்பட உள்ளன.

    நாட்டில் உள்ள அனைத்து தேவஸ்தான கோவில்களிலும் அன்னபிரசாதம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒண்டிமிட்டாவில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ரூ.37 கோடியில் 100 அறைகள் கொண்ட தங்குமிட வளாகத்தைக் கட்டவும், மேலும் ரூ.3 கோடியில் ஒண்டிமிட்டாவில் ஒரு புனித வனத்தை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    வரும் டிசம்பர் மாதம் 30-ந்தேதி முதல் ஜனவரி 8-ந்தேதி வரை வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்காக சொர்க்கவாசல் வழியாக பக்தர்கள் 10 நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

    இதனால் 7 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சொர்க்கவாசல் வழியாக சாமி தரிசனம் செய்ய முடியும்.

    இந்த தரிசனத்திற்கு திருப்பதியில் டோக்கன்கள் வழங்கப்படுவது சிரமத்தை ஏற்படுத்தும். எனவே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்லைனில் தரிசன டிக்கெட் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

    நேரடியாக எத்தனை டோக்கன்கள் எவ்வாறு வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய குழு உறுப்பினர்கள் மற்றும் நிபுணர் குழுவை அமைப்பதற்கு அறங்காவலர் குழு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிபுணர் குழு வழங்கும் அறிக்கையை பொறுத்து இன்னும் 20 நாட்களில் வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கான முடிவு அறிவிக்கப்படும் என்றார்.

    திருப்பதி கோவிலில் நேற்று 64048 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 19838 பேர் முடிக்காணிக்கை செலுத்தினர். ரூ.4 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆனது. நேரடி இலவச தரிசனத்தில் வந்த பக்தர்கள் 8 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

    • புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி “பத்மநாபா’’ ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.
    • ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் இருந்து 11-ம் நாள் ஏகாதசி வருகிறது . ஒரு வருடத்துக்கு 24 அல்லது 25 ஏகாதசிகள் வருகிறது . அனைத்து ஏகாதசிகளிலும் விரதம் இருந்து வழிபடுவோர் பிறவி துயர் நீங்கி வைகுண்ட பதவியை அடைவர்.

    புரட்டாசி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி "பத்மநாபா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    அன்று விரதம் இருப்பதன் மூலம் இந்திரன் மற்றும் வருணனின் வரத்தை பெறலாம். நமக்கு எந்த விதத்திலும் தண்ணீர் பற்றாக்குறை வராது நமது வீட்டில் இருக்கும் கிணறு, ஆழ் குழாய்களில் தண்ணீர் வற்றாமல் பெருக்கெடுக்கும்.

    புரட்டாசி மாதத்தில் வரும் தேய்பிறை ஏகாதசி "அஜா'' ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

    இந்த நாளில்தான் அரிச்சந்திரன் விரதம் இருந்து தாம் இழந்த நாடு, மனைவி மற்றும் மக்களை திரும்ப பெற்று பல ஆண்டுகள் ஆட்சி செய்தான்.

    எனவே நாமும் இவ்விரதநாளில் விரதம் கடைபிடித்தால், குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருக்கலாம். புரட்டாசி மாத ஏகாதசியன்று கண்டிப்பாக தயிர் உபயோகிக்க கூடாது. அதில் மட்டும் கவனமாக இருங்கள்.

    • விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.
    • ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம்.

    மகாவிஷ்ணுவின் அருளை வாரி தரும் ஏகாதசி விரதம். ஏகாதசி திதி என்றாலே விஷ்ணுவின் வழிபாட்டு நாள்தான். நாம் இருக்கும் விரதங்களில் ஏகாதசி விரதம்தான் அதிகம் புண்ணியம் அளிக்கும் விரதமாக கருதப்படுகிறது. இ

    ஏகாதசியில் விரதம் இருப்பவர்களுக்கு வாழ்க்கையில் இருக்கும் எல்லா நலன்களும் கிடைக்கும் என விஷ்ணு புராணம் நமக்கு விளக்குகிறது. திதிகளில் பதின்றொவது திதியாக வருவது ஏகாதசி. வளர்பிறை, தேய்பிறை முறையே ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு ஏகாதசிகள் உண்டு. இப்படி ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் இருக்கின்றன. அவற்றிற்கு வெவ்வேறு பெயர்கள், சிறப்பு பலன்கள் உள்ளன.

    அதிகாலையில் எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, விஷ்ணு பகவானை வழிபட வேண்டும். அன்றைய தினம் முழுவதும் விரதம் இருந்து, மறுநாள் காலை பூஜை செய்த பின் விரதம் முடிக்க வேண்டும். விரதம் இருக்கும்போது திருமாலின் நாமத்தை உச்சரிக்கவேண்டும்.

    தேவையுள்ள எளியவர்களுக்கு உணவு, உடை போன்ற அத்தியாவசியப் பொருட்களை தானம் செய்யலாம். ஏகாதசி அன்று பெருமாளுக்கு நெல்லிக்காய் நைவேத்தியம் வைத்து வழிபடலாம். உங்கள் வீட்டின் அருகே ஏதேனும் நெல்லிமரம் உண்டெனில் அதற்கு தீபாராதனை, தூபராதனை காட்டி வழிபடுங்கள்.

    ஏகாதசி விரதம் இருக்கும் முறை :

    * ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து, குளித்து, விரதத்தை துவக்க வேண்டும்.

    * விளக்கேற்றி, பழங்கள், பூக்கள், பஞ்சாமிர்தத்தை கடவுளுக்கு படைத்து வழிபட வேண்டும். அதோடு தேங்காய், வெற்றிலை பாக்கு, நெல்லிக்காய், கிராம்பு போன்றவற்றையும் படைக்க வேண்டும்.

    * ஏகாதசி விரதம் இருப்பவர் அன்றைய தினத்தில் அரிசி உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது.

    * ஏகாதசி திதி முடியும் வரை விரதத்தை தொடர வேண்டும். ஏகாதசி திதி முடிவதற்கு முன் விரதத்தை முடிக்கக் கூடாது.

    * ஏகாதசி விரதம் இருப்பவர்கள் தரையில், புதிய விரிப்புக்கள் விரித்து தான் படுக்க வேண்டும்.

    * மாமிசம், மதுபானங்கள், பூண்டு, வெங்காயம் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

    * ஏகாதசி அன்று எந்த மரத்தில் இருந்து பூக்களையோ, இலைகளையோ பறிக்கக் கூடாது. இது அமங்களமான செயலாக கருதப்படுகிறது.

    * ஏகாதசி நாளன்று இரவில் உறங்கக் கூடாது. அதிகாலையில் எழுந்தது முதல் திருமாலின் நாமங்களை உச்சரித்தபடி இருக்க வேண்டும்.

    * முழு நாளும் உணவை எடுத்துக் கொள்ளக் கூடாது. பழங்களை மட்டும் எடுத்துக் கொள்ளலாம். உப்பை தவிர்க்க வேண்டும்.

    * மறுநாள் துவாதசி திதியில் யாராவது ஒருவருக்கு அன்னதானம் செய்த பிறகு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    • ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார்.
    • ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

    ஐப்பசி மாதத்தில் வருகிற வளர்பிறை ஏகாதசிக்கு உத்தான ஏகாதசி, பிரபோத ஏகாதசி, பாசாங்குச ஏகாதசி என்று பல பெயர்கள் உண்டு. ஸ்ரீமகாவிஷ்ணு இன்று (வெள்ளிக்கிழமை) துயில் எழுகிறார். ஆகவே இன்றைய ஏகாதசிக்கு பிரபோத ஏகாதசி, உத்தான ஏகாதசி எனப் பெயர்.

    இன்று அதிகாலை ஸ்ரீமகாவிஷ்ணு சன்னதியில் தீபம் ஏற்றி வைத்து பழம், பூக்கள், மஞ்சள், குங்குமம், பசுமாடு, கறிகாய்கள், தங்கம், ரத்னங்கள் போன்ற மங்கள திரவியங்களை வைத்து, சாத்திய கதவின் முன்பாக பக்தியுடன் ஸ்ரீவிஷ்ணு ஸ்தோத்ரம் - சுப்ரபாதம் சொல்லி அல்லது ஸ்ரீவிஷ்ணு துயில் எழுப்பும் பாட்டுகளைப்பாடி ஸ்ரீமகாவிஷ்ணுவை எழுப்ப வேண்டும்.

    அதன்பிறகே பூஜை அறையின் கதவைத் திறக்க வேண்டும். பிறகு விஷ்ணுவிற்கு நிவேதனம் செய்து கற்பூரம் காட்டி வணங்க வேண்டும். இதனால் சகல செல்வங்களையும் தரும் ஸ்ரீவிஷ்ணுவின் அருள் கிடைக்கும். குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

    இன்றைய ஏகாதசிக்கு பாசாங்கு ஏகாதசி என்றும் பெயர் உண்டு.

    இந்த ஏகாதசிக்கு அனைத்துப் பாவங்களையும் போக்கும் சக்தி உண்டு. எனவே இந்த ஏகாதசியில், பத்மநாப மூர்த்தியை பூஜிக்க வேண்டும். இந்த ஏகாதசி விரதம் உலகத்தில் உள்ள எல்லா புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடிய பலன் தரும். ஏகாதசி அன்று இரவு, ஹரிநாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்.

    இந்த ஏகாதசி விரதம் இருப்பவர்கள் எமலோகத்தை மிதிக்க மாட்டார்கள். விரதம் இருந்து அன்னம், நீர், குடை, பாதரட்சை ஆகியவற்றை தானம் செய்வது சிறந்த பலனை அளிக்கும். ஏகாதசி முடிந்து நாளை மறுநாள் துவாதசி பாரணை செய்ய வேண்டும். இந்த துவாதசிக்கு பிருந்தாவன துவாதசி என்று பெயர். நாளைய மறுநாள் துளசி பூஜை செய்வது மிகச் சிறப்பு.

    • பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி.
    • ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது.

    பெருமாளை வழிபட உகந்த நாட்களில் ஒன்று, ஏகாதசி. இந்த நாளில் பெருமாளை வழிபாடு செய்தால் பலன்கள் இரு மடங்காகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை. மாதம் இரண்டு ஏகாதசிகள் என்று, வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். சில வருடம் 25 ஏகாதசிகள் கூட வருவதுண்டு. இந்த ஒவ்வொரு ஏகாதசிக்கும் ஒவ்வொரு பெயர் உள்ளது. அந்த வகையில் இந்த மாதம் ஐப்பசியில் வரும் ஏகாதசிகளுக்கு பாபாங்குசா ஏகாதசி, இந்திர ஏகாதசி என்று பெயர். இந்த ஏகாதசி விரதங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்திர ஏகாதசி

    ஐப்பசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசியை, 'இந்திர ஏகாதசி' என்பார்கள். இந்த ஏகாதசி விரதம், நாரதர் மூலமாக வெளிப்பட்டது. புராண காலத்தில் இந்திரசேனன் என்ற மன்னன், மாஹிஷ்மதி என்ற நகரை ஆட்சி செய்தான். ஒருநாள் அவனது அரசவைக்கு நாரத முனிவர் வருகை தந்தார். அவரை வரவேற்று அமரச் செய்த மன்னன், நாரதர் வந்ததற்கான காரணத்தைக் கேட்டறிந்தான். அதற்கு நாரதர், "நான் எமலோகம் சென்றிருந்தபோது, உன்னுடைய தந்தையை சந்தித்தேன். அங்கு நரகத்தில் அவர் கடும் துன்பத்தை அனுபவிக்கிறார். அவர் என்னிடம், 'என் மகனிடம் கூறி, இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளச் செய்யுங்கள். அப்படிச் செய்தால், நான் இந்த நரகத்தில் இருந்து விடுபடுவேன். என்னை கரையேற்றும்படி அவனிடம் கூறுங்கள்' என்று சொல்லியனுப்பினார். அதற்காகவே நான் வந்தேன்" என்றார்.

    அதைக் கேட்ட மன்னன், தந்தையின் நிலை அறிந்து வருந்தினான். தொடர்ந்து தன் தந்தையின் ஆன்மா துன்பத்தில் இருந்து விடுபடுவதற்காக, இந்திர ஏகாதசி விரதம் மேற்கொள்ள முடிவு செய்தான். அதற்கான வழிமுறைகளை நாரத முனிவரிடம் இருந்துகேட்டு, அதன்படியே செய்தான். இதனால் அவனது தந்தை நரக வேதனையில் இருந்து விடுபட்டு சொர்க்கம் சென்றார். இந்த இந்திர ஏகாதசி விரதத்தை மேற்கொண்டால், முன்னோர்களின் ஆசி நமக்குக் கிடைக்கும். மேலும் முன்னோர்களின் ஆன்மா, நரகத்தில் துன்பம் அனுபவித்து வந்தால், அவர்களின் சந்ததியினர் செய்யும் இந்திர ஏகாதசி விரதத்தின் காரணமாக, அந்த துன்பத்தில் இருந்து விடுபடுவார்கள்.

    பாபாங்குசா ஏகாதசி

    ஐப்பசி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, 'பாபாங்குசா ஏகாதசி' என்று பெயர். ஒருவருடைய பாவத்தை அகற்றும் அங்குசம் போன்றது என்பதால், இந்தப் பெயர் வந்தது. இந்த விரதத்தை மேற்கொள்பவர்களுக்கு, கங்கை உள்ளிட்ட புண்ணிய தீர்த்தங்களில் நீராடினால், யாகங்கள், உயர்ந்த தான - தர்மங்கள் செய்தால் என்ன பலன் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் கைவரப்பெறும். இந்த விரதத்தைக் கடைப்பிடிப்பவர்கள், நரக வேதனையை அனுபவிக்க மாட்டார்கள் என்று புராணங்கள் சொல்கின்றன. ஐப்பசி ஏகாதசி நாளில், ஏகாதசி விரதத்தை கடைப்பிடிக்கும் வழிமுறை தெரியாமலோ, அல்லது மற்றவர்கள் வியந்து பார்க்க வேண்டும் என்றோ, எப்படிச் செய்தாலும், இந்த விரதத்திற்கான பலன் கிடைக்கப்பெறும் என்பதே, பாபாங்குசா ஏகாதசி விரதத்தின் மேன்மையாகும்.

    • டிசம்பர் 23-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.
    • ஜனவரி 2-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு நடக்கிறது.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா வருகிற டிசம்பர் மாதம் 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந்தேதி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல்(பரமபதவாசல்) திறப்பும் நடைபெறுகிறது. 8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி இன்று(திங்கட்கிழமை) பகல் 12 மணி முதல் பகல் 12.30 மணிக்குள் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியின்போது ஆயிரங்கால் மண்டபத்தில் கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தும்.

    அப்போது முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நடுவார்கள். இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கும் பணி நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    • ஜனவரி 11-ந்தேதி தீர்த்தவாரி நடக்கிறது.

    திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில் டிசம்பர் 23-ந் தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது. ஜனவரி 1-ந் தேதி மோகினி அலங்காரமும், 2-ந் தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    8-ந் தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந் தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந் தேதி தீர்த்தவாரியும், 12-ந் தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று 12.30 மணியளவில் நடைபெற்றது.

    அப்போது, கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல மேளம், நாதஸ்வரங்கள் ஒலிக்க கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் உள்ள நாலுகால் மண்டபத்தில் நின்றபடி மரியாதை செலுத்தின. அதுசமயம் முகூர்த்தக்காலில் புனிதநீர் ஊற்றி சந்தனம், மாவிலை மற்றும் மாலை அணிவிக்கப்பட்ட பின்னர் முகூர்த்தக்காலை கோவில் பணியாளர்கள் நட்டனர்.

    இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் அருகே கூடுதல் பந்தல் கால்கள் ஊன்றி திருக்கொட்டகை அமைக்கப்பட உள்ளன. இந்நிகழ்ச்சியில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம்.
    • பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    திருப்பதி ஏழுமலையான் கோவிலின் துணைக் கோவில்களான திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், திருப்பதி கோவிந்தராஜசாமி, கோதண்டராமசாமி கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்னவெங்கடேஸ்வரர் கோவில், கார்வேட்டிநகரம் வேணுகோபாலசாமி கோவில், நாகலாபுரம் வேதநாராயணசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் வரும் ஜனவரி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    அதற்கான ஏற்பாடுகளை செய்வது குறித்து திருமலை-திருமலை தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன் பல்வேறு துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தினார்.

    கூட்டத்தில் இணை அதிகாரி வீரபிரம்மன் பேசியதாவது:-

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அந்தந்தக் கோவில்களில் பக்தர்கள் வழிபட அதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். ஆகம பண்டிதர்கள் கூறி உள்ள நேரத்தை சரியாக பின்பற்ற வேண்டும். கோவில்களை மலர்களாலும், மின் விளக்குகளாலும் அழகாக அலங்கரிக்க வேண்டும்.

    பக்தர்களின் கூட்டத்துக்கு ஏற்றவாறு மற்ற ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவில்களில் தூய்மை மற்றும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பக்தர்களுக்கு அன்னதானம், குடிநீர், தங்குமிடம் தட்டுப்பாடு இல்லாமல் வழங்க வேண்டும். பக்தர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். அதற்காக கோவில் அதிகாரிகள் உள்ளூர் போலீசாருடன் இணைந்து பாதுகாப்பு முன்னேற்பாடுகளை செய்து கொள்ளலாம்.

    அந்தந்தக் கோவில்களில் பாரம்பரிய பூஜை நிகழ்ச்சிகளை நடத்தலாம். பக்தர்களின் வசதிக்காக உதவி மையங்கள் மற்றும் வாகனங்கள் நிறுத்துமிடங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். அதற்காக உள்ளாட்சி அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். பக்தர்களுக்கு சேவை வழங்க மருத்துவ முகாம்களை அமைத்துக் கொள்ளலாம்.

    சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை ஆகிய நகரங்களில் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்து ஆலோசித்து அங்குள்ள கோவில்களில் வைகுண்ட ஏகாதசி விழா ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து கொள்ளலாம். பக்தர்களை கவரும் வகையில் ஆன்மிக மற்றும் கலாசார நிகழ்ச்சிகளை நடத்தலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • வைகுண்ட ஏகாதசி விழா டிசம்பர் 22-ந்தேதி முதல் ஜனவரி 12-ந்தேதி வரை நடக்கிறது.
    • ஜனவரி 2-ந்தேதி பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.

    பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா அடுத்த மாதம் (டிசம்பர்) 22-ந்தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கி ஜனவரி 12-ந்தேதி வரை நடைபெறுகிறது. டிசம்பர் 23-ந்தேதி பகல் பத்து உற்வசம் தொடங்குகிறது.

    ஜனவரி 1-ந்தேதி மோகினி அலங்காரமும், 2-ந்தேதி முக்கிய நிகழ்ச்சியான பரமபதவாசல் திறப்பு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 8-ந்தேதி திருக்கைத்தல சேவையும், 9-ந்தேதி திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியும், 11-ந்தேதி தீர்த்தவாரியும், 12-ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும் நடைபெறுகிறது.

    இந்த விழாவையொட்டி ரெங்கநாதர் கோவிலில் ஆயிரங்கால் மண்டபம் அருகே முகூர்த்தக்கால் நடும்நிகழ்ச்சி கடந்த 14-ந்தேதி நடைபெற்றது. இதையடுத்து ஆயிரங்கால் மண்டபம் பகுதியில் பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    • மூலவர் கருவறை தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது.
    • ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன.

    திருமலை-திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலையில் உள்ள அன்னமயபவனில் நடந்தது. கூட்டத்துக்கு அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 2-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. வைகுண்ட துவார தரிசனத்துக்கான ஏற்பாடுகள் கடந்த ஆண்டைபோலவே இந்த ஆண்டும் செய்யப்படும்.

    வைகுண்ட துவார தரிசனத்துக்காக 10 நாட்கள் பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். எனவே 10 நாட்கள் வைகுண்ட ஏகாதசி விழா கொண்டாடப்படும். அதற்காக, திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    ஜனவரி மாதம் 2-ந்தேதி வி.ஐ.பி. பக்தா்களுக்கு (செல்ப் புரோட்டோகால்) மட்டுமே பிரேக் தரிசனம் வழங்கப்படும். ஜனவரி மாதம் 2-ந்தேதியில் இருந்து 11-ந்தேதி வரை ஒரு நாளைக்கு 50 ஆயிரம் வீதம் 5 லட்சம் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்படும்.

    இலவச தரிசன டோக்கன்கள் வழங்கும் கவுண்ட்டர் ஜனவரி மாதம் 1-ந்தேதி தொடங்கப்படும். திருப்பதியில் உள்ள கவுண்ட்டர்கள் இலவச தரிசன டோக்கன்கள் கொடுத்துத் தீரும் வரை திறந்திருக்கும். டோக்கன் இல்லாத பக்தர்கள் திருமலைக்கு செல்லலாம். ஆனால் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

    வைகுண்ட துவார தரிசனத்துக்கு நாள் ஒன்றுக்கு 25 ஆயிரம் பக்தர்கள் வீதம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூ.300 தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்படும்.

    ஆனந்த நிலையம் (மூலவர் கருவறை) தங்க முலாம் பூசும் பணி நடந்து வருகிறது. அந்தப் பணிகளுக்காக வருகிற பிப்ரவரி மாதம் 23-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட உள்ளது.

    1957, 1958-ம் ஆண்டுகளில் தங்க முலாம் பூசும் பணி நடந்தது. அதேபோல் அடுத்த ஆண்டு தங்க முலாம் பூசும் பணி தொடங்க உள்ளது. பக்தர்கள் தனிப்பட்ட முறையில் தங்கம் காணிக்கை வழங்கியதையும், பிரதான உண்டியலில் தங்கம் காணிக்கையாகப் போட்டதையும் வைத்து ஆனந்த நிலையத்துக்கு தங்க முலாம் பூசப்படும்.

    ஸ்ரீவாணி அறக்கட்டளை மூலம் 331 கோவில்கள் கட்டப்பட்டு வருகின்றன. மேலும் 1,100-க்கும் மேற்பட்ட கோவில்களை விரைவாக கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பதி-திருமலை 2-வது மலைப்பாதையில் பாதுகாப்பு தடுப்புச்சுவர் கட்ட ரூ.9 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    திருமலையில் உள்ளூர் மக்கள் வசிக்கும் பாலாஜி நகரில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.3.70 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். திருப்பதி தாதய்யகுண்டா கங்கையம்மன் கோவில் வளர்ச்சிக்கு ரூ.3.75 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். பத்மாவதி விருந்தினர் மாளிகையில் அறைகளை நவீனப்படுத்தும் பணிகளுக்கு ரூ.3.80 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.

    திருப்பதியில் உள்ள சுவிம்ஸ் மருத்துவமனையில் கூடுதலாக ஆண்கள் விடுதி கட்ட ரூ.3.35 கோடி ஒதுக்கப்படும். நந்தகம் விடுதியில் தளவாடங்கள் வாங்க ரூ.2.95 கோடி ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

    மருத்துவமனைகள் மற்றும் மருந்தகங்களுக்கு மருந்துகள் வாங்க ரூ.2.56 கோடியும், அறுவை சிகிச்சை உபகரணங்கள் வாங்க ரூ.36 லட்சமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    பல ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் திருத்தப்படாததால், ஒப்பந்தத்தின் பல்வேறு பிரிவுகள் மற்றும் பிற வகைகளின் ஊதிய விகிதங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்படும். இந்தக் குழு அடுத்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.

    வழக்கமான நிரந்தர ஊழியர்களுக்கு ரூ.14 ஆயிரமும், ஒப்பந்தம், அவுட்சோர்சிங் மற்றும் கார்ப்பரேஷன் ஊழியர்களுக்கு ரூ.6 ஆயிரத்து 850-ம் பிரம்மோற்சவ விழா பரிசு வழங்கப்படும்.

    லட்டு கவுண்ட்டர்களில் வேலை பார்க்கும் ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் சரியாக வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் லட்டுகளை கூடுதல் விலைக்கு பக்தர்களிடம் விற்பனை செய்கிறார்கள். இதுதொடர்பாக பக்தர்களிடம் இருந்து பறக்கும் படை துறை அதிகாரிகளுக்கு அடிக்கடி புகார்கள் வருகின்றன. எனவே லட்டு கவுண்ட்டர்களில் லட்டுகளை கூடுதல் விலைக்கு விற்பனை செய்வோர் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள்.
    • இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள்.

    ஒவ்வொரு மாதத்திலும் இரு ஏகாதசிகள் வருகின்றன. வருடத்திற்கு 24 ஏகாதசிகள் உள்ளன. ஆனி மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி நிர்ஜல ஏகாதசி என போற்றப்படுகிறது. பீமனே அனுஷ்டித்த விரதம் என்பதால் இந்த விரதம் 'பீம விரதம்' என்றும் பீம ஏகாதசி என்றும் போற்றப்படுகிறது.

    இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்ட பதம் அடைவார்கள். தண்ணீர் பஞ்சமாக இருக்கும் இந்த காலத்தில் தண்ணீரை தானம் செய்வார்களா என்று யோசிக்காதீர்கள். மகத்துவம் நிறைந்த இந்த நாளில் ஒரு குடம் ஏன் ஒரு வாட்டர் பாட்டில் தண்ணீராவது தவித்த வாய்க்கு தானமாக கொடுத்து பாருங்கள் அப்புறம் உங்களுக்கு நடக்கும் நன்மைகளை நீங்கள் அறிவீர்கள்.

    நிர்ஜல ஏகாதசி விரதமிருப்போர் எமதர்மராஜாவை சந்தித்து அவருடைய கேள்விகளுக்கு பதில் சொல்லி தண்டனை அனுபவிக்க வேண்டாம். வைகுண்டத்தின் தூதுவர்கள் இறப்பிற்கு பின் நேரடியாக வைகுண்டத்திற்கு அழைத்து செல்வார்கள். புனித நதிகளில் நீராடிய பலனும், பலவிதமான தானங்களை அளித்த பலனும் இந்த ஏகாதசி விரதத்தின் மூலம் கிடைக்கும். நிர்ஜல ஏகாதசியின் மகிமையைப் பற்றி கேட்பவருக்கு சூரிய கிரகணத்தில் வரும் அமாவாசை திதியில் சிரார்த்தம் செய்த பலன் கிட்டும். ஒரு பிராமணனை கொன்ற பாபம், தொடர்ந்து பொய் சொன்ன பாபம், மது அருந்திய பாபம், தன் குருவை மதிக்காமல் ஏளனம் செய்த பாபம் இவற்றிலிருந்து விடுபடலாம்.

    இந்த ஏகாதசி விரதமிருப்போர் தங்கள் பாபத்திலிருந்து விடுபடுவார்கள். அவர்களின் நூறு தலைமுறைக்கான மூதாதையர்களும் தங்கள் பாப சுமையிலிருந்து விடுபடுவார்கள். இன்று தண்ணீர் தானம் செய்பவர்கள் ஒரு கோடி தங்கம் தானம் செய்த பலன் பெறுகிறார்கள். இந்த ஏகாதசியின் சிறப்பை கேட்பவர்கள் வைகுண்டத்தை அடைவார்கள். இன்று நீங்களும் பெருமாளை நினைத்து விரதம் இருந்து ஒரு குடம் தண்ணீர் யாருக்காவது தானமாக கொடுங்களேன்.

    ×