என் மலர்
தென்காசி
- ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
- சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்தார்.
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள துத்திகுளம் பள்ளிக்கூடத் தெருவை சேர்ந்தவர் லிங்கத் துரை. இவரது மகன் ரமேஷ் (வயது 42). கட்டிட தொழிலாளி. இவரது முதல் மனைவி மூக்கம்மாள். இவர்களுக்கு சூர்யா (17) என்ற மகன் உள்ளார். மூக்கம்மாள் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு உயிரிழந்து விட்டார்.
இதனிடையே மகாலட்சுமி (35) என்பவரை ரமேஷ் 2-வதாக திருமணம் செய்து கொண்டார். தற்போது அவர்கள் தனியாக வசித்து வருகின்றனர். சூர்யா தனது தாத்தா லிங்கத்துரையுடன் தனிவீட்டில் வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று ரமேஷ் தனது 2-வது மனைவி மகாலட்சுமியுடன் அப்பகுதியில் உள்ள ரேஷன் கடைக்கு தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்கு சென்று டோக்கனை கொடுத்து விற்பனையாளர் ராசுக் குட்டியிடம் பரிசு தொகுப்பை கேட்டுள்ளார். அப்போது, ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பை உங்களது மகன் சூர்யா வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ரமேஷ் மற்றும் மகாலட்சுமி ஆகியோர் விற்பனையாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பொதுமக்கள் அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் ஆத்திரமடைந்த அவர்கள் 2பேரும் ரேஷன் கடையிலிருந்த கைரேகை வைக்கும் எந்திரத்தை கையில் எடுத்தனர்.
மேலும் இந்த எந்திரம் இருந்தால் தானே எல்லாருக்கும் பணம் கொடுப்பாய் என்று கூறி அவதூறாக பேசிவிட்டு எந்திரத்தை தங்களது வீட்டுக்கு தூக்கிச் சென்றுவிட்டனர். பின்னர் சிறிதுநேரம் கழித்து எந்திரத்தை கொண்டு வந்து கடையில் கொடுத்த ரமேஷ், கடை ஊழியர் ராசுகுட்டிக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராசுக்குட்டி ஆலங்குளம் போலீசில் புகார் அளித்த நிலையில், இன்ஸ்பெக்டர் ஆடிவேல் விசாரணை நடத்தி அரசு ஊழியரை அவதூறாக பேசி, கொலை மிரட்டல் விடுத்து, எந்திரத்தை தூக்கி சென்றதாக மகாலட்சுமி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் ரமேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
- மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
- சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு கனமழை கொட்டித்தீர்த்தது. மாவட்டம் முழுவதும் வெளுத்து வாங்கிய கனமழையால் குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவவி, புலி அருவி என அனைத்து அருவிகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் நேற்று காலை முதல் மாலை வரையில் புலியருவி தவிர்த்து மற்ற அருவிகளில் குளிக்க தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் மழை குறைந்ததால் இன்று காலை முதல் மெயின் அருவி, ஐந்தருவி உட்பட அனைத்து அருவிகளுக்கும் நீர்வரத்து சீரானது.
இதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்பதால் காலை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அவர்கள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
- நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது.
- மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் வருகிற 7-ந்தேதி வரை பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்து இருந்தது.
இந்நிலையில் நெல்லை, தென்காசி மாவட்டங்களில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரையிலும் பரவலாக பெய்த கனமழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் வழக்கமான வெயில் அடித்தது. மாலையில் நாங்குநேரி பகுதியில் லேசான சாரல் பெய்தது.
இந்நிலையில் சேரன்மகாதேவி, அம்பை சுற்று வட்டாரங்களில் இரவில் திடீரென கனமழை பெய்ய ஆரம்பித்தது. தொடர்ந்து இடைவிடாமல் கனமழையாக பொழிய தொடங்கியதால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
சேரன்மகாதேவி சுற்று வட்டாரத்தில் இன்று காலை நிலவரப்படி 10 சென்டி மீட்டர் மழை பெய்தது. அம்பையில் 9 சென்டி மீட்டரும், கண்ணடியன் கால்வாய் பகுதி, களக்காடு சுற்றுவட்டாரங்களில் 5 சென்டிமீட்டரும், நாங்குநேரி, மூலைக்கரைப்பட்டியில் தலா 4 சென்டிமீட்டரும் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள மாஞ்சோலை வனப்பகுதியில் இரவு தொடங்கி இன்று அதிகாலை வரையிலும் கனமழை பெய்தது. மாஞ்சோலையில் அதிகபட்சமாக 9 சென்டிமீட்டரும், காக்காச்சியில் 8 சென்டி மீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 5 சென்டி மீட்டரும் மழை பதிவாகியது.
அணைகளை பொறுத்தவரை பாபநாசம், மணிமுத்தாறு அணைகளின் நீர் பிடிப்பு பகுதியில் பரவலாக பெய்த மழையின் காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று நிலவரப்படி பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 281 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை வினாடிக்கு 955 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் நேற்று மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 78 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில், இன்று காலை 465 கனஅடியாக உயர்ந்துள்ளது. சேர்வலாறில் 9 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.
மாவட்டம் முழுவதும் அதிகாலை முதல் கொட்டித் தீர்த்த கனமழையால் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியது. சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேநேரம் அம்பை சுற்றுவட்டாரத்தில் பிசான பருவ நெல் சாகுபடி பணியையொட்டி நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள நிலையில் இரவில் பெய்த கனமழையால் வயல்களில் மழைநீர் தேங்கியது. இதனால் வயல்வெளிகள் அனைத்தும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள அனைத்து அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளிலும் நேற்று இரவில் தொடங்கிய மழை இன்று காலை வரையிலும் இடைவிடாமல் பெய்தது.
கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் 52 கனஅடி நீர் வந்த இடத்தில் இன்று காலை வினாடிக்கு 1,265 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. இதேபோல் ராமநதி அணைக்கு 312 கனஅடியும், கருப்பாநதியில் 25 கனஅடியும் வந்து கொண்டிருக்கிறது.
கடனா அணை நீர்பிடிப்பு பகுதியில் அதிகபட்சமாக 24 சென்டிமீட்டர் மழை கொட்டியது. அணை அடி வாரத்தில் உள்ள சிவசைலம், ஆழ்வார்குறிச்சி, சம்பன் குளம், கல்யாணிபுரம் சுற்றுவட்டாரத்திலும் மிக கனமழை கொட்டியது.
ராமநதியில் 12 சென்டி மீட்டரும், கருப்பாநதியில் 7½ சென்டிமீட்டரும் மழை பதிவாகியது. மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள ஆய்குடி சுற்றுவட்டாரத்தில் 10 சென்டிமீட்டர் மழை பதிவாகியது. இதேபோல் சிவகிரி, வாசுதேவநல்லூர் சுற்றுவட்டாரங்களில் விடிய, விடிய பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கண்மாய்களுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
இதேபோல் ஆலங்குளம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார கிராமங்களில் நேற்று இரவு தொடங்கி இடைவிடாது கனமழை பெய்தது. இன்று அதிகாலை வரையிலும் சற்று கூட இடைவெளி விடாமல் கனமழை பெய்ததால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. திடீர் கனமழையால் மக்கள் அவதி அடைந்தனர்.
- குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
- ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலமான குற்றால அருவிகளில் கடந்த சில தினங்களாக மழைப்பொழிவு குறைந்ததால் அனைத்து அருவிகளுக்கும் தண்ணீர் வரத்து மிகவும் குறைந்து காணப்பட்டது. அனைத்து அருவிகளிலும் பாறையை ஒட்டி மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்து வந்தது.
தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு பண்டிகை கால விடுமுறை மற்றும் சபரிமலை ஐயப்பன் கோவில் சீசன் நடைபெற்று வருவதால் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களின் கூட்டமானது குற்றால அருவிகளில் குளிப்பதற்கு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்பட்டு வந்தது.
இந்நிலையில் நேற்று இரவு 8 மணி முதல் தென்காசி நகரப்பகுதி குத்துக்கல்வலசை, மேலகரம், குற்றாலம், வல்லம், மத்தளம்பாறை, திரவியநகர் உள்ளிட்ட பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய தொடங்கியது.
இரவு 11 மணிக்கு மேல் மிகக் கனமழையாக கொட்டி தீர்த்ததால் முக்கிய அருவியான குற்றாலம் மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டது
மெயின் அருவியில் காட்டாற்று வெள்ளமானது பாதுகாப்பு வளைவைத் தாண்டி போலீசார் பாதுகாப்பு பணியில் நிற்கும் பகுதி வரையில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
இதனால் இரவில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்தனர்.இன்று காலையில் மழைப்பொழிவு சற்று குறைந்ததால் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்தும் சற்று குறைய தொடங்கியது.
தற்போது வெள்ளப்பெருக்கு குறைந்து தண்ணீர் சீராக விழ தொடங்கியது. எனினும் சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்களுக்கு காலையில் மெயின் அருவியில் குளிப்பதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டது.
ஐந்தருவிக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் ஐந்தருவி மற்றும் புலியருவில் குளித்து மகிழ்ந்து வருகின்றனர். இன்று காலை வானம் மேகமூட்டத்துடன் விட்டுவிட்டு மிதமான மழை பெய்து வருகிறது.
- குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
- சுற்றுலாப் பயணிகள் கூட்டம் காலை முதலே அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்திலுள்ள முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலம் பகுதியில் உள்ள அனைத்து அருவிகளிலும் இன்று விடுமுறை தினம் என்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.
குறிப்பாக, குற்றாலம் பகுதியில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலுமே சுற்றுலாப் பயணிகள் கூட்டம் இன்று காலை முதலே கணிசமாக அதிகரித்து காணப்பட்டு வருவதால், அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது பள்ளிகளுக்கு தேர்வு கால விடுமுறை, கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு தொடர் விடுமுறை என்பதால் ஏராளமான பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது குடும்பத்தினருடன் சுற்றுலா தளங்களை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், ஏராளமானோர் குற்றாலம் பகுதியில் உள்ள அருவிகளுக்கும் வருகை தந்து தங்களது குடும்பத்தினருடன் ஆனந்த குளியல் இட்டு வருகின்றனர்.
தற்போது ஐயப்ப பக்தர்கள் சீசன் காலகட்டமும் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் முன்னதாக குற்றால அருவிகளில் புனித நீராட அதிக அளவில் வருவதால் குற்றாலமானது ஐயப்ப பக்தர்கள் கூட்டத்தாலும், சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தாலும் களை கட்டி உள்ளது.
தற்போது மழைப் பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்தும் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. எனினும் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
- இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது.
- இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் நேற்று காலை முதல் மாலை வரையில் பரவலாக மழை பெய்தது. இதனால் குற்றால அருவிகளான ஐந்தருவி, மெயின் அருவியில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இரவு முதல் இன்று காலை வரை மழைப்பொழிவு முற்றிலும் குறைந்துள்ளதால் தண்ணீர் வரத்தும் அருவிக்கு சீரானது. இதனால் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
இன்று காலையில் குற்றாலம் மெயின் அருவியில் ஆர்ப்பரித்து விழுந்த தண்ணீரில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
மேலும் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் குற்றாலத்தில் அதிகரித்து காணப்படுவதால் போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று காலையில் மழைப்பொழிவு முற்றிலும் குறைந்து வெயில் முகம் காட்ட தொடங்கியது.
- வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
- இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார்.
தென்காசி:
நெல்லை மாவட்டம் பாப்பாக்குடி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட காசிநாதபுரத்தில் சீவலப்பேரி சுடலை கோவிலில் சாமி கும்பிடுவதில் வரி வசூலில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக கடந்த 2015-ம் ஆண்டு மணிவேல் என்பவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் 3 பேர் ஏற்கனவே இறந்து விட்டனர். இந்த வழக்கு தென்காசியில் உள்ள மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இன்று இந்த வழக்கில் நீதிபதி எஸ்.மனோஜ் குமார் தீர்ப்பு அளித்தார். இந்த கொலை வக்கீல் குற்றம் சாட்டப்பட்டிருந்த விநாயகம், உலகநாதன், சிவ சுப்பிரமணியன், சுடலை, முத்துக்குமார், சுப்பிரமணியன், சந்தானம், சிவன் சேட், மாரி ராஜ், பிச்சையா, வேல் துரை, கருப்பையா, ரமேஷ், பண்டாரம், மணிவேல், கலைவாணன், முத்துராஜ் ஆகியோருக்கு கொலை குற்றத்திற்கு ஒரு ஆயுள் தண்டனை மற்றும் கொலை முயற்சிக்கு ஒரு ஆயுள் தண்டனை என இரட்டை ஆயுள் தண்டனை தனித்தனியாக அறிவித்தும் மற்ற குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ. 41 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் வேலுச்சாமி வாதாடினார்.
- படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
- தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசியில் அரசு வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி என்பவர் கூலக்கடை பஜார் என்ற இடத்தில் அவரது அலுவலகத்திலேயே வைத்து அவர் மர்ம நபரால் அரிவாளால் வெட்டப்பட்டார்
படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வழக்கறிஞர் முத்துக்குமாரசாமி கவலைக்கிடமாக நிலையில் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
வழக்கறிஞர் முத்துக்குமாரசாமியை வெட்டிவிட்டு, எந்த பயமும் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
அரசு வழக்கறிஞர் மீதான கொலைவெறி தாக்குதலை கண்டித்து தென்காசி மாவட்ட வழக்கறிஞர்கள் நெல்லை-தென்காசி பிரதான சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- எஸ்.ஐ.ஆரில் எந்தவிதமான குளறுபடியும் இல்லை.
- எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை.
தென்காசி:
ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற நோக்கத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கும், காசிக்கும் இடையிலான கலாச்சாரம் மற்றும் ஆன்மீக பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக காசி தமிழ் சங்கமம் 4.0 என்ற நிகழ்ச்சி இன்று தொடங்குகிறது.
இதையொட்டி தெற்கே உள்ள காசியாம் தென்காசியில் இருந்து வடக்கே உள்ள காசி நோக்கி அகத்திய முனிவர் வாகன பயணம் இன்று தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் இருந்து தொடங்கி வைக்கப்பட்டது. மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் காணொலி காட்சி மூலம் வாகன பயணத்தை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஜோகோ நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, தென்காசி பா.ஜ.க. மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி, தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கிருஷ்ண முரளி என்கிற குட்டியப்பா எம்.எல்.ஏ., செல்வ மோகன்தாஸ் பாண்டியன், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனத் தலைவர் திருமாறன் ஜி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வாரணாசிக்கு புறப்பட்ட 15 வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியை தொடர்ந்து பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
பிரதமர் மோடி உலக நாடுகளுக்கு எங்கு சென்றாலும் தமிழ் மொழி பற்றியும் அதன் கலாச்சாரத்தை பற்றியும் பெருமையாக பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். வாழும் பாண்டிய மன்னராக பாரத பிரதமர் செயல்பட்டு காசியில் தமிழ் சங்கம் மாநாட்டினை 4 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
எஸ்.ஐ.ஆரில் எந்த விதமான குளறுபடியும் இல்லை. இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருக்கும் நிலையில், அவர்களை நீக்கி விடக்கூடாது என்பதற்காக தான் தி.மு.க. போராடுகிறது.
மேலும், 50 வருட கால அ.தி.மு.க. ஆட்சியில் இருந்து விட்டு, அப்போது நல்லாட்சி இல்லாதது போல் தற்போது த.வெ.க.வின் மூலம் நல்லாட்சி கொடுப்பேன் என்று செங்கோட்டையன் கூறியுள்ளது வருத்தமாக உள்ளது.
பா.ஜ.க. மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி மக்கள் சக்தியோடு உள்ளதால், பொங்கலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணியில் பல்வேறு கட்சிகள் இணையும். அ.தி.மு.க.வில் இருந்து தற்போது செங்கோட்டையன் த.வெ.க.விற்கு சென்று உள்ள நிலையில், அங்கிருந்து எங்கு செல்வார் என்று தெரியாது.
எந்த தனிநபரை வைத்தும் எந்த கட்சியும் இல்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்கள் உள்ள நிலையில், தேர்தலுக்கு முந்தைய நாள் கூட அரசியலில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் சக்தி கை ஓங்கி தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றார்.
- பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர்.
- சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர்.
சுரண்டை:
தென்காசி மாவட்டம் சுரண்டை சிவகுருநாத புரத்தை சேர்ந்தவர் அருள் செல்வபிரபு (வயது 50). இவர் சுரண்டை பகுதியில் மெட்டல் பாலீஷ் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி உஷா (40). இவர் நர்சிங் முடித்து விட்டு மெடிக்கல் வைத்து நடத்தி வந்தார்.
மேலும் சுரண்டை நகராட்சியில் காங்கிரஸ் கவுன்சிலராகவும் இருந்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர்.
இந்நிலையில் சுரண்டையில் இருந்து சங்கரன்கோவில் செல்லும் சாலையில் ரெட்டைகுளம் பகுதியில் இவர்களுக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. தோட்டத்தில் தற்போது பூ பயிரிடப்பட்டுள்ள நிலையில் இன்று அதிகாலை அருள் செல்வபிரபு தனது மனைவி மற்றும் மனைவியின் தங்கையான அதே பகுதியை சேர்ந்த பிளஸ்சி (35) ஆகியோரை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அங்கு பூப்பறித்து விட்டு 3 பேரும் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டனர். ரெட்டைகுளம் விலக்கு பகுதியில் வந்தபோது பின்னால் வந்த காய்கறி லாரியின் முன்பக்க பகுதி மோட்டார் சைக்கிள் மீது உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறியதில் 3 பேரும் சாலையில் விழுந்தனர். அப்போது மோதிய லாரியின் பின்பக்க டயர் 3 பேர் மீதும் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே அருள் செல்வபிரபு, உஷா, பிளஸ்சி ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சுரண்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 3 பேர் உடலையும் மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக 3 பேரும் விபத்தில் பலியான செய்தியை கேட்டு அவர்களது உறவினர்கள் அங்கு சென்று உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.
- பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
- சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் முழுவதும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால் குற்றால அருவிகளில் சுற்றுலாப் பயணிகள், ஐயப்ப பக்தர்கள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 3 நாட்களாக மழை பொழிவு குறைந்துள்ளதால் அருவிகளுக்கு தண்ணீர் வரத்து சீராக உள்ளது. மெயின் அருவி தவிர்த்து புலியருவி, சிற்றருவி, ஐந்தருவி ஆகிய அருவிகளில் மட்டும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் மெயின் அருவியில் பெண்கள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்புகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டிருந்ததால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏற்படுத்திய பின்பு சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என நேற்று வரையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலையில் மழை பொழிவு முற்றிலும் குறைந்து குற்றாலம் மெயின் அருவிக்கு தண்ணீர் வரத்து சீரானதை தொடர்ந்து பெண்கள் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தற்போது சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
6 நாட்கள் தொடர் தடைக்கு பின்பு குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி, சபரிமலை சென்று வரும் ஐயப்ப பக்தர்களும் அருவிகளில் குளிப்பதற்கு குவிந்து வருகிறார்கள்.
- தென்காசி பேருந்து விபத்தில் புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா உயிரிழந்தார்.
- உயிரிழந்த மல்லிகா பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார்.
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 30-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
காயமடைந்தவர்களை உடனடியாக மீட்டு அருகே உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனிடையே, இந்த பேருந்து விபத்தில் தாயை பறிகொடுத்த பார்வை மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு அரசு வேலை வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
இதனையடுத்து பார்வை மாற்றுத்திறனாளி பட்டதாரிக்கு அரசு வேலைக்கான ஆணையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
உயிரிழந்தவர்களில் ஒருவரான புளியங்குடியைச் சேர்ந்த மல்லிகா, கணவரை இழந்த நிலையிலும் பீடி சுற்றி, பார்வையற்ற தனது மகள் கீர்த்திகாவை பி.எட் வரை படிக்க வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.






