என் மலர்
சென்னை
- ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது?
- தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
செங்கல்பட்டு மாவட்டம் அத்திவாக்கம் பகுதியில் 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக வெளிவந்துள்ள செய்தியை படிக்கும் போது அதிர்ச்சியோடு மனதில் பல கேள்விகள் எழுகின்றன.
கடந்த ஐந்தாண்டுகளாக தமிழகத்தில் நிகழும் குழந்தைகளுக்கு எதிரான போக்சோ குற்றங்களும், வயது வித்தியாசமின்றி தொடரும் பாலியல் வன்கொடுமைகளும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செவிகளுக்கு எட்டுகிறதா இல்லையா? தமிழகத்தில் தினந்தினம் அரங்கேறும் வன்முறைக் குற்றங்களால் தமிழக மக்கள் அச்சத்தில் உறக்கத்தை தொலைத்து தவிக்கையில், ஆட்சிக் கட்டிலில் அமர்ந்திருக்கும் முதல்வர் மற்றும் அவரது அமைச்சர்களால் எப்படி தினமொரு விழாவில் பங்கேற்க முடிகிறது? முரசொலி மட்டும் படிப்பதனால், குற்றங்கள் எதும் கண்களுக்கு புலப்படுவதில்லையா? அல்லது தேர்தல் பயம் அதிகமானதால் திசைதிருப்பு நாடகங்களில் மட்டும் கவனம் செலுத்தப்பட்டு, சட்டம் ஒழுங்கு தூக்கியெறியப்பட்டுவிட்டதா?
மொத்தத்தில், பெண்கள் குழந்தைகளின் பாதுகாப்பு பறிபோனதை, நிம்மதியாக வேடிக்கைப் பார்க்கும் திமுக அரசை ஒட்டுமொத்தமாக வீட்டுக்கு அனுப்பினால் மட்டுமே தமிழகம் பேரழிவில் இருந்து மீட்கப்படும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை! என்று கூறியுள்ளார்.
- 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார்.
- எந்தவொரு செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
100 நாள் வேலை புதிய சட்டத்தை நிறைவேற்ற எந்த நடவடிக்கையையும் மோடி அரசு எடுக்கவில்லை என்றும், கிராமப்புறத்தின் முதுகெலும்பை முறிக்கும் மோடி அரசின் வஞ்சகத்திற்கும், துணை போகும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்குத் தேர்தலில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்றும் அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான பிரதமர் மன்மோகன் ஆட்சியில், 2006-ல் கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில், 100 நாள் வேலைத் திட்டம் கொண்டு வரப்பட்டது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் என்ற 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தில் கோடிக்கணக்கான கிராம மக்கள் பயன் அடைந்து வந்தார்கள்.
கிராமப்புறத்தில் ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் 18 வயது நிரம்பிய ஒருவருக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவது சட்டப்படி உரிமையாக்கப்பட்டது.
வறுமை ஒழிப்புத் திட்டமான 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தை மோடி ஆட்சிக்கு வந்தும் படிப்படியாக அழிக்க ஆரம்பித்தார். திட்டத்துக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டினார்கள்.
2021-2022-ல் 98,468 கோடி ரூபாய் ஒதுக்கிய நிலையில் 2022 – 2023-ல் 73,000 கோடி ரூபாயும் 2023-2024-ல் 60 ஆயிரம் கோடி ரூபாயும் என ஆண்டு தோறும் குறைத்து நிதியை ஒதுக்கி வந்தார்கள்.
இந்தப் பற்றாக்குறையால் ஆண்டுக்குச் சராசரியாக வெறும் 40 நாட்கள் வேலை மட்டுமே என்ற நிலை உருவானது. இதனால், கிராமப்புறத் தொழிலாளர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.
100 நாட்களுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டுமென்றால் ரூபாய் 2.72 லட்சம் கோடி தேவை. ஆனால், அதற்குரிய நிதியை ஒதுக்காமல் மோடி அரசு வஞ்சித்தது. 2023-2024-ல் ஒதுக்கப்பட்ட தொகையும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.198 சதவீதம்தான்.
இந்தத் திட்டத்தில் 100 நாட்கள் கிடைத்த வேலை, மோடி ஆட்சியில் 30 நாட்கள் கூட கிடைப்பதில்லை. 2021-ம் ஆண்டு முதல் 7.6 கோடி தொழிலாளர்களின் நூறு நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டப் பணி அட்டைகள் நீக்கப்பட்டன.
இப்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை ஒழித்துக் கட்டும் நோக்கத்துடன் ஒன்றிய பாஜக அரசு பல்வேறு வாய் ஜாலங்களுடன் 'விபி-கிராம் ஜி' எனும் புதிய சட்டத்தை எதிர்க் கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே கொண்டு வந்தது.
கிராமப்புற ஏழை மக்களுக்கு நூறு நாள் வேலை வாய்ப்பை உறுதி செய்யும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை நீர்த்துப் போகச் செய்வதும், தேசப்பிதா காந்தியாரின் பெயரை நீக்குவதும்தான் பாஜக அரசின் ஒரே நோக்கம் என்பதை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பலமுறை சுட்டிக்காட்டினார்கள்.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட போது அதற்குக் கடுமையான எதிர்ப்பை திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதிவு செய்தார்கள்.
இந்தப் புதிய சட்டத்தால் 125 நாட்கள் வேலை கிடைக்கும், மக்கள் கூடுதலாகப் பயன் பெறுவார்கள் என்றெல்லாம் சமாளிப்பு பதில்களைக் கூறிக் கொண்டிருந்த ஒன்றிய பாஜக அரசு, இதுவரை இந்தச் சட்டத்தை நிறைவேற்றுவதற்கான எந்த ஆக்கப்பூர்வ நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
சட்டத்தை எவ்வாறு செயல்படுத்தப் போகிறோம்? என்ற எந்தவொரு செயல்திட்டத்தையும் அறிவிக்காமல் கிடப்பில் போட்டு வைத்துள்ளது.
ஏப்ரல் 1-ஆம் தேதியிலிருந்து நடைமுறைப்படுத்த இருக்கிற இந்தச் சட்டத்திற்கான அடிப்படை விதிகளையே இன்னும் வகுக்காமல் ஒன்றிய அரசு மெத்தனப் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.
மாநிலங்களுக்கு எந்த அடிப்படையில் நிதி ஒதுக்கப்படும் என்பதற்கான எந்தத் தெளிவான வழிகாட்டலும் இன்னமும் வகுக்கவில்லை. கிராம ஊராட்சிகளை எந்த அளவுகோல்களின் அடிப்படையில் தரம் பிரிப்பது என்பதும் இறுதி செய்யவில்லை.
புதிய சட்டம் நடைமுறைக்கு வருவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதை நிறைவேற்றுவதற்கான எந்த நடவடிக்கையையும் ஒன்றிய பாஜக அரசு எடுக்காததைப் பார்க்கும் போது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு உரிமையை பாஜக அரசு முற்றிலும் பறிக்க முயல்வது அப்பட்டமாகத் தெளிவாகிறது. விபி-கிராம் ஜி சட்டத்திற்கு இதுவரை ஒன்றிய அரசு செய்தது விபி-கிராம் ஜி திட்டத்திற்கு 50 ஆயிரம் ரூபாயில் லோகோ உருவாக்கியது மட்டுமே.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டச் சட்டத்தால் கிடைத்த பலன்கள் கூட விபி-கிராம் ஜி சட்டத்தால் கிடைக்காத போதும், புதிய சட்டத்தைக்கூட அமல்படுத்த மோடி அரசு தயங்குகிறது. இதையெல்லாம் பார்க்கும் போது 100 நாள் வேலைத் திட்டத்தையே முற்றிலும் ஒழித்துக் கட்டும் முடிவில் மோடி அரசு இருப்பதையே இன்றைய செயல்பாடுகள் காட்டுகின்றன.
வாயில் நுழையாத வட மொழி பெயர் கொண்ட விபி-கிராம் ஜி திட்டத்தில் மாநிலங்களின் மீது கூடுதல் நிதிச் சுமையை ஏற்றியிருக்கிறார்கள். 'வேலை என்பது அடிப்படை உரிமை' என்ற நிலையிலிருந்து 'தேவை அடிப்படையில் வேலை' என மாற்றம் செய்யப்பட்டது. 100 சதவிகித ஒன்றிய அரசின் நிதிப் பங்கீடு என்பதை 60:40 என மாற்றி மாநிலங்கள் மீது கூடுதல் நிதிச் சுமை சுமத்தப்பட்டுள்ளது.
கிராமங்களை மீண்டும் வறுமையின் பிடியில் தள்ளும் புதிய திட்டத்தால் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் ஒரு கோடி கிராமப்புற மக்களுக்கு வேலை கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 12 கோடி கிராமப்புற தொழிலாளர்கள் பாதிக்கப்பட இருக்கிறார்கள்.
நூறு நாள் வேலைத் திட்டத்திற்குரிய ஊதியத்திற்கான நிதியை ஒன்றிய அரசு வழங்காத போதெல்லாம் அந்த உரிமைக்காகச் சட்டப்பூர்வமாகவும் மக்கள் மன்றத்திலும் திமுக போராடியது. மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழ்நாடு தழுவிய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது
ஆனால், எதிர்க் கட்சித் தலைவர் பழனிசாமியோ இந்த அநீதிக்கு வக்காலத்து வாங்கி தமிழ்நாட்டுக்குத் துரோகத்தைச் செய்தார். கிராமப்புற மக்களின் வயிற்றில் அடிக்கும் புதிய சட்டத்தை ஆதரித்து தனது துரோகப் பணியைச் செவ்வனே செய்து முடித்த பழனிசாமி, தான் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதும் தெரிந்தும் 150 நாட்களாக வேலையை உயர்த்துவேன் என நாடகமாடிக் கொண்டிருக்கிறார்.
புதிய சட்டத்தை ஒன்றிய அரசு உடனே அமல்படுத்த வேண்டும் என்று கூடச் சொல்ல பழனிசாமிக்கு துணிவில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்திற்கு எதிராக ஒன்றிய பாஜக அரசு செய்து வரும் வஞ்சகத்திற்கும் பழனிசாமியின் பச்சைத் துரோகத்திற்கும் மிக விரைவில் தமிழ்நாட்டு மக்கள் தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது.
- தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னையை அடுத்த மதுராந்தகம் பகுதியில் 14 வயது சிறுமி இரு மனித மிருகங்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அவற்றைத் தடுக்கத் துப்பில்லாமல் திமுக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
சென்னை தாம்பரத்தில் இருந்து மதுராந்தகத்தை அடுத்த கீழக்கண்டை கிராமத்தை நோக்கி இரு சக்கர ஊர்தியில் 17 வயது சிறுவனும், இரு சிறுமிகளும் திங்கள்கிழமை இரவு சென்று கொண்டிருந்த நிலையில், தேவத்தூர் பகுதியில் மது போதையில் இருந்த இரு மனித மிருகங்கள் அவர்களை இரு சக்கர ஊர்தியில் விரட்டிச் சென்று தாக்கியுள்ளனர். அதனால் இரு சக்கர ஊர்தியில் சென்ற சிறுவனும், இரு சிறுமிகளும் தவறி விழுந்த நிலையில், அவர்களை இரு மனித மிருகங்களும் சுற்றி வளைத்துள்ளனர். அவர்களில் சிறுவனும், ஒரு சிறுமியும் தப்பி ஓடிவிட்ட நிலையில், சிக்கிக் கொண்ட ஒரு சிறுமியை இரு மிருகங்களும் சிதைத்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட அந்த சிறுமி உதவுவதற்கு கூட ஆள் இல்லாமல் அங்கிருந்து செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நடந்தே சென்று சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை என்பதற்கு இந்த கொடிய நிகழ்வு தான் சான்று ஆகும். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வரிசையில் இந்தக் கொடூரமும் இணைந்திருக்கிறது. ஆனால், ஆட்சியாளர்களுக்கு இது பற்றிய எந்தக் கவலையும் இல்லை. நாளொரு விழாவும், பொழுதொரு கொண்டாட்டமாகவும் பொழுதைக் கழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை மட்டும் 129% அதிகரித்திருக்கிறது. திமுக ஆட்சியில் பெண்களும், குழந்தைகளும் வாழ்த்தகுதியற்ற மாநிலமாக தமிழ்நாடு மாறி விட்டது என்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் தான் கொடூரமான சான்று ஆகும். தமிழ்நாட்டை இந்த அளவுக்கு சீரழித்த திமுகவுக்கு வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் மறக்க முடியாத பாடத்தைக் கற்பிப்பார்கள் என்று கூறியுள்ளார்.
- வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பரங்கிமலை பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
- பறக்கும் ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
சென்னை:
சென்னையில் பயணிகளால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட வேளச்சேரி - பரங்கிமலை இடையிலான பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் நேற்று தொடங்கப்பட இருந்தது. ஆனால், ரெயில்வே பாதுகாப்பு ஆணையரால் கண்டறியப்பட்ட சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக இந்த சேவை தற்காலிகமாக தள்ளிப்போய் உள்ளது.
5 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த பறக்கும் ரெயில் சேவை நீட்டிப்பு திட்டம் கடந்த 2008-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கிட்டத்தட்ட 18 ஆண்டுகளாக தாமதமாகி வந்த இந்த திட்டம் கடந்த நவம்பர் மாதத்தில் முடிவடைந்தது. தண்டவாள அமைப்பு, மின்மயமாக்கல், சிக்னல் அமைப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 7 மற்றும் டிசம்பர் 15 ஆகிய தேதிகளில் சரக்கு ரெயில் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
கடந்த 5-ந்தேதி தலைமை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் ஜனக் குமார் கார்க் அதிவேக சோதனை ஓட்டத்தை நடத்தி ஆய்வு செய்தார். அப்போது புழுதிவாக்கம், ஆதம்பாக்கம் மற்றும் பரங்கிமலை ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்ட 3 பறக்கும் ரெயில் நிலையங்களிலும் அதிவேக சோதனையை ஆய்வு செய்தார்.
10-ந்தேதி முதல் பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்று தெற்கு ரெயில்வே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதனால் வேளச்சேரி, ஆதம்பாக்கம், நங்கநல்லூர், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பரங்கிமலை பகுதி மக்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர்.
இந்த சேவை காரணமாக சென்னை கடற்கரை முதல் பரங்கிமலை வரை நேரடியாக பறக்கும் ரெயிலில் செல்ல முடியும். மேலும் தென்சென்னை பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் குறையும். பயண நேரமும் கணிசமாக குறையும். புறநகர் மின்சார ரெயிலிலும் எளிதாக மாறிச்செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எழும்பூரில் தற்போது மின்சார ரெயில் பிளாட்பார புனரமைப்பு பணிகள் நடந்து வருவதால் சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ளது.
இதனால் மின்சார ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. எனவே மின்சார ரெயிலில் வருபவர்கள் சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரெயில் நிலையங்களுக்கு செல்வதற்கு பரங்கிமலை ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து பறக்கும் ரெயிலில் பயணம் செய்ய திட்டமிட்டு இருந்தனர்.
இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி பறக்கும் ரெயில் சேவை தொடர்பாக நடந்த ஆய்வின்போது சில தொழில்நுட்ப சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. தலைமை பாதுகாப்பு ஆணையர் டெல்லிக்கு சென்றுவிட்ட நிலையில், தேவையான இறுதி அறிக்கை நேற்று முன்தினம் வந்திருக்க வேண்டும். ஆனால் அறிக்கை வராததால், சில கூடுதல் பணிகள் மேற்கொள்ள வேண்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் பாதுகாப்பு அனுமதி கிடைக்கும் வரை பறக்கும் ரெயில் சேவையை தொடங்க முடியாது என்று தெற்கு ரெயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அறிக்கை வந்த பிறகு கூடுதல் பணிகள் முடிக்கப்பட்டு பறக்கும் ரெயில் சேவை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பறக்கும் ரெயில் சேவை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கடும் ஏமாற்றம் அடைந்து உள்ளனர்.
ஏற்கனவே புறநகர் மின்சார ரெயில் சேவைகள் குறைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த தாமதம் சென்னை மக்களின் அன்றாட பயணத்தை மேலும் சிரமப்படுத்தி உள்ளது.
- கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஓடவில்லை.
- ஓடக்கூடிய ஆட்டோக்கள் சென்னையில் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
ஓட்டல்களுக்கு வழங்கப்படும் வணிக சிலிண்டர்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டதால் பல்வேறு சிரமங்களுக்கு ஓட்டல் உரிமையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இதுதவிர ஆட்டோ டிரைவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் தட்டுப்பாடு காரணமாக நேற்று முதல் ஓடவில்லை. இன்று 2-வது நாளாக பிரச்சினை அதிகரித்தது.
எல்.பி.ஜி. கியாஸ் மூலம் ஓடக்கூடிய 30 ஆயிரம் ஆட்டோக்கள் சென்னையில் உள்ளன. இந்த ஆட்டோக்கள் ஓட்ட முடியாமல் முடங்கியுள்ளன. கியாஸ் நிரப்பக்கூடிய பங்குகளில் கியாஸ் இல்லாததால் வேறு வழியில்லாமல் ஆட்டோக்களை ஆங்காங்கே நிறுத்திவிட்டனர். எல்.பி.ஜி. கியாஸ் ஓடக்கூடிய ஆட்டோக்கள் சென்னையில் ஓடாததால் பள்ளி மாணவர்கள், பொது மக்கள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து ஆட்டோ தொழிற்சங்க தலைவரும் டிரைவருமான பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-
சென்னையில் எல்.பி.ஜி. கியாசில் ஓடக்கூடிய ஆட்டோக்கள் கணிசமாக உள்ளன. ஆனால் போதுமான கியாஸ் நிரப்பும் பங்குகள் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள கியாஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோக்களுக்கு கியாஸ் நிரப்புவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. பல பங்குகள் கியாஸ் இல்லாமல் மூடப்பட்டுள்ளன. ஒரு சில இடங்களில் நீண்ட நேரம் காத்திருந்து கியாஸ் நிரப்ப வேண்டிய நிலை உள்ளது.
கியாஸ் தட்டுப்பாட்டால் ஆட்டோக்கள் முழுமையாக ஓட்ட முடியவில்லை. இதனால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
- அவருக்கு பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி வழங்கியது.
- மாணவருக்கு உதவ வேறொரு பள்ளியில் இருந்து ஆசிரியை வரவழைக்கப்பட்டிருந்தார்.
சென்னை:
சென்னை மடிப்பாக்கம் பிரின்ஸ் மெட்ரிகுலேசன் பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர் சாய் கார்த்திக் (வயது 15) இவர் தனது வீட்டு மாடியில் இருந்து இறங்கும்போது படிக்கட்டில் தவறி விழுந்து படுகாயம் அடைந்தார். அவரது முதுகெலும்பில் (பைனல் கார்டு) பலத்த அடிபட்டதால் அவரால் உட்காரவும் நடக்கவும் முடியவில்லை. படுத்த படுக்கையில் இருந்தார்.
இந்த நிலையில் இன்று 10-ம் வகுப்பு தேர்வு தொடங்கியதால் ஆம்புலன்சில் சென்று பரீட்சை எழுதுவதற்கு கல்வித்துறையில் அனுமதி கேட்டிருந்தார். அவருக்கு பள்ளிக்கல்வித்துறை சிறப்பு அனுமதி வழங்கியது. அதன்பேரில் மாணவருக்கு உதவ வேறொரு பள்ளியில் இருந்து ஆசிரியை வரவழைக்கப்பட்டிருந்தார்.
அதன்படி இன்று ஆம்புலன்சில் பிரின்ஸ் மெட்ரிகுலேஷன் மேல்நிலை பள்ளிக்கூடம் வந்த மாணவர் சாய் கார்த்திக் ஸ்டிரெச்சரில் படுத்த படி 10-ம் வகுப்பு பரீட்சை எழுதினார்.
தமிழ் பரீட்சை கேள்விக்கான பதிலை அவர் சொல்ல சொல்ல அருகில் இருந்து ஆசிரியை ஒருவர் விடைத்தாள் எழுதினார்.
- நான் முதல்வன் திட்டத்தில் படித்த 60 பேரில் 56 பேர் தேர்ச்சி.
- நாம் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
நான் முதல்வர் திட்டத்தின் மூலம் யுபிஎஸ்சி-ல் தேர்ச்சி பெற்றவர்கள் உள்ளிட்ட 60 பேருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பாராட்டு விழா நடைபெற்று வருகிறது.இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறைப்புரையாற்றி வருகிறார்.
நான் முதல்வன் திட்டத்தில் படித்த 60 பேரில் 56 பேர் ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிக்கான குடிமைப்பணி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
யுபிஎஸ்சி தேர்வுகளில் வெற்றி பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தோம்.
நாம் எடுத்த முயற்சிகளுக்கு தற்போது பலன் கிடைக்க ஆரம்பித்துள்ளது.
அதிகாரிகள் என்றாலே அதட்டலுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது.
சாதாரண மக்களுடன் அன்பாகவும், பண்பாகவும் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டும்.
எவ்வளவு பிசியாக இருந்தாலும் பெற்றோருடன் 5 நிமிடமாவது பேச வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- சாதாரண குடிமக்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் என்ன பாதுகாப்பு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான் விளக்க வேண்டும்.
- கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது குண்டு வீசியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் உள்ள முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்களின் புதல்வரும், சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினருமான கார்த்தி சிதம்பரத்தின் அலுவலகம் மீது இன்று அதிகாலையில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பதில் திமுக அரசு படுதோல்வி அடைந்து விட்டது என்பதையே இது காட்டுகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகிய இருவரும் குறிப்பிடத்தக்கவர்கள். அந்த வகையில் அவரது வீடு, அலுவலகம் என அவர் தொடர்புடைய இடங்களுக்கு காவல்துறை இயல்பாகவே பாதுகாப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்ய காவல்துறை தவறி விட்டது. அதுமட்டுமின்றி அப்பகுதியில் கண்காணிப்பு கேமிராக்கள் எதுவும் இல்லாத நிலையில் கார்த்தி சிதமபரம் அலுவலகம் மீது குண்டு வீசியவர்கள் யார் என்று கண்டுபிடிப்பதற்கு கூட காவல்துறையால் முடியவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். முக்கிய பிரமுகர்களின் அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதிகளில் கண்காணிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை புரிதல் கூட இல்லாமல் தான் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் வருகிறது என்றால் அதைக் கொடுத்தவர்கள் யார்? திமுக ஆட்சியில் எத்தகையக் குற்றங்களைச் செய்தாலும் எவரும் கண்டு கொள்ள மாட்டார்கள்; தண்டனையின்றி தப்பி விடலாம் என்ற எண்ணம் சமூகவிரோதிகள் மத்தியில் ஏற்பட்டிருப்பது தான் இதற்கு காரணம். திமுக அரசு தமிழ்நாட்டை ஆளத்தகுதியற்றதாகி விட்டது என்பதற்கு இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தாக்குதல் தான் சிறந்த சான்று.
தமிழ்நாட்டில் முன்னாள் உள்துறை அமைச்சரின் புதல்வராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருப்பவரின் அலுவலகத்துக்கே பாதுகாப்பு இல்லை என்றால், சாதாரண குடிமக்களின் உடமைகளுக்கும், உயிருக்கும் என்ன பாதுகாப்பு என்பதை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் விளக்க வேண்டும்.
ஒரு நாளின் 24 மணி நேரமும், ஒரு வாரத்தின் 7 நாள்களும், ஓராண்டின் 52 வாரங்களும் விளம்பரப் படங்களில் நடிப்பதில் மட்டுமே ஆர்வம் காட்டி வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் சட்டம் - ஒழுங்கைப் பாதுகாப்பதிலும் அக்கறை செலுத்த வேண்டும். கார்த்தி சிதம்பரம் அலுவலகம் மீது குண்டு வீசியவர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.
- தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- ஓட்டல்களில் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டாக நடத்தி வரும் போர் எதிரொலியாக தமிழகத்தில் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் ஓட்டல் சேவை பெருமளவில் முடங்கும் அபாயம் ஏற்பட்டது. இதற்கிடையே, நேற்று தமிழகத்தில் வணிக ரீதியான சிலிண்டர்கள் வினியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் சென்னையில் பல உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, சிலிண்டர்கள் கையிருப்பு இல்லாத சில ஓட்டல்களில் உணவு வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை, அமைந்தகரை, திருவான்மியூர் உள்பட பல்வேறு இடங்களில் உள்ள பல பெரிய மற்றும் சிறிய ஓட்டல்களில் இதுகுறித்து, பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிலிண்டர்கள் தட்டுப்பாடு காரணமாக சென்னை ஓட்டல்கள் விறகு அடுப்புகளுக்கு மாறி உள்ளன. ஓட்டல்கள் பிரியாணி, பரோட்டா போன்ற உணவுகளை தவிர்த்து வருகின்றன. பல்வேறு உணவு வகைகள் கிடைக்காது என சென்னையில் உள்ள பிரபல ஓட்டல்களில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. குறைந்த நேரத்தில் சமைக்கும் உணவுகளுக்கு மட்டும் ஓட்டல்கள் முக்கியத்துவம் அளிக்கின்றன.
- தமிழ்நாடு முழுவதும் 4 ஆயிரத்து 219 தேர்வு மையங்கள் இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
- தேர்வு பணியில் சுமார் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னை:
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் மே மாதம் நடைபெறுவதால் அரசு பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டது. அரசு, தனியார் பள்ளிகள் வாக்குச்சாவடி மையங்களாக பெயர் படுத்தப்பட வேண்டிய நிலை இருப்பதால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு கடந்த 2-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தமிழ்நாடு முழுவதும் இன்று தொடங்கியது. இந்தத் தேர்வு 4219 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82 ஆயிரம் பேரும் தனித்தேர்வர்கள் 26 ஆயிரம் பேரும் என மொத்தம் 9 லட்சம் மாணவ-மாணவிகள் இத்தேர்வினை எழுதினார்கள்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெறும் பொதுத்தேர்வினை 49 ஆயிரம் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 4954 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். தேர்வு கூடங்களில் மாணவ மாணவிகள் முறைகேடுகளில் ஈடுபடாமல் தடுக்கும் வகையில் பறக்கும் படை அவ்வப்போது வந்து கண்காணித்தனர்.
முதல் நாளான இன்று தமிழ் தேர்வு நடந்தது. மாணவ-மாணவிகள் உற்சாகமாக தேர்வினை எழுதினார்கள். ஒவ்வொரு தேர்விற்கும் குறிப்பிட்ட கால இடைவெளி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் மாணவர்கள் படித்ததை மீண்டும் மறு ஆய்வு செய்து தேர்வு எழுதுவதற்கு வசதியாக இருந்தது. இன்று தொடங்கியுள்ள தேர்வு ஏப்ரல் மாதம் 6 தேதி வரை நடைபெறுகிறது.
சிறைவாசிகள், மாற்றுத் திறனாளிகள், தேர்வு எழுத முடியாத சூழ்நிலையில் சிக்கிக்கொண்ட மாணவ-மாணவிகளுக்கு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. பள்ளிக்கல்வி அதிகாரிகள் அனைத்து மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து மேற்பார்வையில் ஈடுபட்டனர்.
தேர்வு மையங்களுக்கு வினாத்தாள்கள் சரியான நேரத்தில் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டது. எவ்வித புகாருக்கும் இடம் அளிக்காமல் தேர்வினை முறையாக நடத்தி முடிக்க தேர்வுத்துறை அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்து இருந்தது.
- தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த 1-ந்தேதி அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை கடந்த 2-ந்தேதியில் இருந்து தொடர்ந்து சரிந்து கொண்டே வந்தது. கடந்த 7-ந்தேதி தங்கம் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.1,20,400-க்கும் விலை கிராமுக்கு ரூ.90 உயர்ந்து ரூ.15,050-க்கும், 9-ந்தேதி சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கும், ஒரு கிராம் ரூ.14,950-க்கும், நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனை விற்பனையானது.
இந்நிலையில் தங்கம் விலை இன்று உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.1,20,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ரூ.15,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.300-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
10-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
09-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,600
08-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
07-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
06-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,19,680
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
10-03-2026- ஒரு கிராம் ரூ.300
09-03-2026- ஒரு கிராம் ரூ.290
08-03-2026- ஒரு கிராம் ரூ.290
07-03-2026- ஒரு கிராம் ரூ.290
06-03-2026- ஒரு கிராம் ரூ.290
- மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
- தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
சென்னை:
தி.மு.க. கூட்டணிக்கு வருகிற சட்டமன்ற தேர்தலில் 41.5 சதவீதம் வாக்குகள் கிடைக்கும் என்று ஐதராபாத் நிறுவனம் நடத்திய கருத்து கணிப்பில் தகவல் வெளியாகி உள்ளது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழில்நுட்பம் சார்ந்த அரசியல் நுண்ணறிவு ஆராய்ச்சி மற்றும் தேர்தல் கணிப்பு நிறுவனமாகிய 'கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ்' நிறுவனத்தின் ஒரு அங்கமான - பாராவீல், தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான விரிவான அறிவியல் பூர்வ கருத்துக்கணிப்புகளை மேற்கொண்டுள்ளது.
இதுவரை 70 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, தி.மு.க. 41.5 சதவீதம், அ.தி.மு.க. 36.2 சதவீதம், த.வெ.க. 13.6 சதவீதம் மற்றும் நாம் தமிழர் கட்சி 7.9 சதவீதம் வாக்கு விகிதங்களைப் பெறும் என பாராவீல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் த.வெ.க. 3-வது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு தொகுதிக்கு குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்காளர்களைக் கொண்டு இந்த விரிவான கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.
இந்நிறுவனம், ஏற்கனவே 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆந்திரா மாநில சட்டமன்றத் தேர்தல்கள், 2024-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில சட்டமன்றத் தேர்தல் போன்றவற்றில் மிகத் துல்லியமான கணிப்புகளை வழங்கி தேசிய அளவில் கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை நகரில், பல தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் கணிசமான பலத்தைக் கொண்டுள்ளன. தி.மு.க.விற்கு அடுத்தபடியாக 2-வது வலுவான அரசியல் சக்தியாக உருவெடுத்து வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் தி.மு.க. தொடர்ந்து முதலிடத்தில் நீடித்தாலும், இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் த.வெ.க. குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்று முன்னிலையில் இருப்பதை இந்தத் தரவுகள் உணர்த்துகின்றன.
இதுகுறித்து, பாராவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி கூறியதாவது:-
தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் வெற்றி வாய்ப்பை மாற்றியமைக்கும் தொகுதிகளின் பங்கு குறித்து எங்களது ஆய்வு ஆராய்கிறது. குறிப்பாக, த.வெ.க. தலைவர் நடிகர் விஜய் காரணி குறித்து ஒரு சிறப்புப் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில் ரசிகர்கள் வாக்காளர்களாக மாறுவது, இளைஞர்களைத் திரட்டுவது மற்றும் தி.மு.க., அ.தி.மு.க., போன்று முக்கியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் இது ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன என்றார்.






