search icon
என் மலர்tooltip icon

    புதுக்கோட்டை

    • புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது.
    • அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது.

    தேர்தல் வந்தாலே பட்டி தொட்டி முதல் மாநகர பகுதிவரை விழா கோலம்தான். அன்பான வாக்காள பெருமக்களே உங்கள் பொன்னான வாக்குகளை என்றவாறு வலம் வரும் வாகனங்கள், போடுங்கம்மா ஓட்டு என்ற குரல்கள், உங்கள் தொகுதிக்கு தேவையான அனைத்தையும் செய்து தருவேன் என்ற வாக்குறுதிகள் என கலகலக்க வைக்கும் காட்சிகளை காணலாம்.

    பாராளுமன்ற தேர்தலில் சற்று புதுமையாக புதுக்கோட்டை மாவட்ட மக்களை 4 தொகுதி வேட்பாளர்கள் சந்திக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. இதில், புதுக்கோட்டை, கந்தர்வகோட்டை சட்டப்பேரவை தொகுதிகள் திருச்சி பாராளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் தொகுதிகள் சிவகங்கை பாராளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டப் பேரவை தொகுதி கரூர் பாராளுமன்ற தொகுதியிலும் வருகிறது.

    தேர்தல் பிரசாரம், தலைவர்கள் வருகை, வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு என அனைத்திலும் 4 பாராளுமன்ற தொகுதி கட்சியினர் இந்த மாவட்டத்துக்கு வந்து செல்லவேண்டிய நிலை உள்ளது. 4 தொகுதிகளின் அனைத்து வேட்பாளர்களும் புதுக்கோட்டை மாவட்டத்தை கடக்காமல் செல்ல இயலாது என்ற நிலை உள்ளது.

    இதனால் புதுக்கோட்டை மாவட்டம் தேர்தல் திருவிழாவை உற்சாகமாக கொண்டாடுகிறது. என்றாலும் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தும் பொருட்டு மறக்காமல் ஓட்டு போட்டு ஜனநாயக கடமை ஆற்றவேண்டும் என்கிறார்கள் சமூகநல ஆர்வலர்கள்.

    • இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பது பாலிமெலியா எனப்படுகிறது.
    • 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக தெரிவித்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை அருகே உள்ள தென்னந்திரையான்பட்டி (முள்ளூர்) கிராமத்தை சேர்ந்த ஞானசேகரந்ஜெயந்தி தம்பதி பசு வளர்த்து வருகின்றனர். இவர்களது பசு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு வழக்கத்தை விட 2 கால்கள் அதிகமாக மொத்தம் 6 கால்கள் காணப்பட்டன. இதை அந்த பகுதி பொதுமக்கள் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர். இதுபற்றி கால்நடை துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கால்நடை உதவி மருத்துவர் வந்து பசுவையும், கன்றினையும் பார்வையிட்டார். பின்பு அவர் கன்றுகுட்டியை ஆய்வு செய்தார். அதன் இதய துடிப்பு, மூச்சுக்காற்று, வெப்ப ஓட்டம் சீராக உள்ளதை அறிந்தார். பின்பு அவர் கூறியதாவது:-

    இயற்கைக்கு மாறாக 2 அல்லது 3 கால்களுடன் கன்றுகுட்டி பிறப்பது பாலிமெலியா எனப்படுகிறது. இவை மரபணு கோளாறு அல்லது பிழை எனப்படும் குரோமோசோம் பிரிதலில் ஏற்படும் மாற்றத்தினாலும், கதிர்வீச்சு, வேதியியல், விட்டமின் மாற்றத்தினாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதனிடையே 6 கால்களுடன் பிறந்த கன்றுகுட்டியை அதன் உரிமையாளர் கோவிலுக்கு நேர்ந்துவிட்டதாக தெரிவித்தார். எனினும் கன்றுகுட்டிக்கு குடற்புழு நீக்கம் மருந்து, கால்சியம் கலவை கொடுத்து நல்லமுறையில் வளர்க்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    • மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே 38 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்பட்டதில் அதன் மாதிரி குடிநீர் தொட்டியில் கலக்கப்பட்ட அசுத்தத்தின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை.

    இந்த நிலையில் வேங்கைவயல், இறையூர் பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனு தள்ளுபடியானது.

    தற்போது இந்த வழக்கில் அப்பகுதியை சேர்ந்த 3 பேரின் குரல் மாதிரியை பரிசோதனை செய்ய அனுமதி கோரி சி.பி.சி.ஐ.டி போலீசார் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு வருகிற 19-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    மேலும் இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு போலீஸ்காரர் உள்பட 2 பேரிடம் குரல் மாதிரி பரிசோதனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து பாதித்தது.
    • விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தேரடி கிழக்கு தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 27). தேவகோட்டையில் ஒரு நிதி நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இதற்காக புதுக்கோட்டையில் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்துடன் தங்கி இருந்தார். இவரது மனைவி சுஷ்மிதா(26). இவர்களுக்கு 3 வயதில் ஹரிணி என்ற பெண் குழந்தை உள்ளது. நேற்று சுப்பிரமணியன் குடும்பத்துடன் திருவப்பூர் கோவில் விழாவுக்கு சென்றிருந்தார்.

    பின்பு அவர் மோட்டார் சைக்கிளில் புதுக்கோட்டைக்கு திரும்பினார். மோட்டார் சைக்கிளை சுப்பிரமணியன் ஓட்டினார். முன்னால் குழந்தை ஹரிணியும், பின்னால் சுஷ்மிதாவும் அமர்ந்திருந்தனர். புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகம் அருகே வந்தபோது எதிரே புதுக்கோட்டையில் இருந்து சென்னை நோக்கி ஒரு தனியார் பஸ் சென்றது.

    அந்த பஸ்சை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டியை சேர்ந்த சரவணன் (34) என்பவர் ஓட்டினார். எதிர்பாராதவிதமாக பஸ் சுப்பிரமணியன் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் சுப்பிரமணியன், குழந்தை ஹரிணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்கள்.

    சுஷ்மிதா படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினார். உடனே அக்கம்பக்கத்தினர் சுஷ்மிதாவை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸபத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஆத்திரத்தில் விபத்துக்கு காரணமான பஸ் கண்ணாடியை மக்கள் அடித்து நொறுக்கினர்.

    விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் திருக்கோகர்ணம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பலியான சுப்பிரமணியன், ஹரிணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த வழியே போக்குவரத்து சிறிது நேரம் பாதித்தது. விபத்தில் தந்தை, மகள் இறந்த சம்பவம் புதுக்கோட்டை, விராலிமலை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது.
    • ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகேயுள்ள கோவிலூர் முத்துமாரியம்மன் கோவில் மாசி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செங்கவள நாட்டார்களால் நடத்தப்பட்ட இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சர் அமைச்சர் ரகுபதி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    ஜல்லிக்கட்டில் திருச்சி, தஞ்சாவூர், திண்டுக்கல், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 800 காளைகள் பங்கேற்றன.வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் லாவகமாக மடக்கி பிடித்தனர்.

    ஜல்லிக்கட்டில் முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. இதை தொடர்ந்து உள்ளூர் காளைகளும் பின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட காளைகள் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன.

    வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளைகளில் சில மின்னல் வேகத்தில் யார் பிடியிலும் சிக்காமல் சென்றது. இதே போல் சில

    காளைகள் களத்தில் நின்று கெத்து காட்டியதோடு, அருகில் வந்த காளையர்களை பந்தாடியது.

    பல காளைகளை வீரர்கள் திமிலை இறுகப் பற்றி அடக்கினர்.


    இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பல பெண்களும் வாடிவாசலில் தங்கள் வளர்த்த காளையை அவிழ்த்து அங்கிருந்தவர்களை உற்சாகமடையச் செய்தனர். காளையை வீரர்கள் அடக்கும் போது, காளை களத்தில் சீறிப்பாய்ந்து வீரர்களை விரட்டி அடக்கும் போதும் ஜல்லிக்கட்டை காண திரண்டிருந்த மக்கள் கைகளை தட்டி, விசில் அடித்து ஆரவாரம் செய்தனர்.

    காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் பிடிபடாமல் சீறிப்பாய்ந்த காளைகளுக்கும் சைக்கிள், கட்டில், மிக்ஸி, கிரைண்டர், டைனிங்டேபிள் போன்ற பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக்கட்டில் காயமடைந்த வீரர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    ஜல்லிக்கட்டை முன்னிட்டு ஆலங்குடி போலீஸ் டி.எஸ்.பி. பவுல்ராஜ் தலைமையில் 400 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஜல்லிக்கட்டை காண ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்ததால் அந்த பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 

    • பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.
    • போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    பொன்னமராவதி:

    புதுக்கோட்டையில் இருந்து பொன்னமராவதி சென்ற அரசு பேருந்தில், குழிபிறை கிராமத்தில் முதியவர் ஒருவர் ஏறி உள்ளார். அவரை ஏற்றிக்கொண்டு குழிப்பிறை கிராமத்தில் இருந்து பேருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த முதியவர் திடீர் என்று மயங்கி விழுந்துள்ளார்.

    பேருந்தில் பயணித்துள்ள சக பயணிகள் முதியவரின் முகத்தில் தண்ணீரை தெளித்து அவரின் மயக்கத்தை தெளிய வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவரின் உடலில் அசைவு ஏற்படவில்லை. இதனால் பேருந்தின் டிரைவர் சந்திரசேகரனும், கண்டக்டர் சுந்தரும், மருத்துவமனை செல்ல முடிவு செய்து பேருந்தை வேகமாக ஓட்டி சென்றுள்ளனர். அருகில் இருந்த வெங்கமேடு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பேருந்தை கொண்டு சென்று, முதியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க கேட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த டாக்டர் அவரை பரிசோதித்த பின்னர் அவர் உயிரிழந்ததாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பொன்னமராவதி போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

    போலீசார் முதியவரின் சடலத்தை கைப்பற்றி அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்தது செந்துறையை சேர்ந்த தனசாமி என்பவரின் மகன் ஆரோக்கியராஜ் என்பதும், குழிப்பிறையில் உள்ள தனது அண்ணன் வீட்டுக்கு சென்று விட்டு, பேருந்தில் வீடு திரும்பியபோது மாரடைப்பு ஏற்பட்டதும், அவருக்கு ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும்
    • பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    நேற்று (பிப் 18) புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைபட்டிணத்தில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப் பள்ளிக்கு தனது நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 44 லட்சம் செலவில் பள்ளிக் கட்டிடங்கள் கட்டும் அடிக்கல் நாட்டும் நிகழ்விற்கு திமுக எம்.பி எம்.எம். அப்துல்லா சென்றிருந்தார்.

    அன்று பள்ளியின் ஆண்டு விழாவும் நடைபெற்றதால், தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய எம்.எம். அப்துல்லா, "சிறுபான்மைச் சமூகத்தில் இருந்தும் மீனவ சமூகத்தில் இருந்தும் பெருவாரியான குழந்தைகள் படிக்கும் பள்ளி அது.. எனவே அதை மனதில் வைத்து "பெண் கல்விதான் சமூகத்தில் ஒடுக்கப்பட்டு இருக்கும் அவர்களுக்கு சமூக விடுதலையை அளிக்கும் என்று கூறி படித்து நீங்கள் எல்லாம் பெரும் பெரும் பொறுப்புகளுக்கு வர வேண்டும்" என பேசினார்

    பின்பு தலைமை ஆசிரியரின் கோரிக்கையின்படி, கடந்த ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நானூறு மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 15 மாணவியருக்கு பரிசு பொருட்களை வழங்கினார். பரிசு பொருட்களாக சமையல் குக்கர், ஹாட் பாக்ஸ் ஆகியவை வழங்கப்பட்டது.

    பரிசு பொருட்களை வழங்கிய பிறகு மீண்டும் மாணவர்களிடம் பேசிய அப்துல்லா, "சற்று முன்னர்தான் உங்களிடம் படிப்பு ஒன்றுதான் பெண்ணடிமைத் தனத்தில் இருந்து உங்களை விடுதலை செய்யும்.. அடுப்படி மறந்து நீங்கள் எல்லாம் பெரிய பெரிய அதிகாரிகளாக வர வேண்டும் எனப் பேசினேன்.. ஆனால் என் கையாலேயே பரிசு பொருட்களாக சட்டி பானைகளை உங்களுக்கு வழங்க வைத்து விட்டார்கள்.

    அப்போதே மாட்டேன் என்று மறுத்தால் மேடை நாகரீகமாக இருக்காது.. எனவே அந்தப் பரிசுகளைக் குடுத்து நானும் அவர்களின் தப்புக்கு துணை போனேன்! அதற்கு பிராயச் சித்தமாக உங்கள் ஒவ்வொருவருக்கும் தலா ஆயிரம் ரூபாய் பரிசாகத் தருகிறேன்.. வந்து பெற்றுக் கொள்ளுங்கள்" என அறிவித்தேன். பெற்றுக் கொண்ட அந்தக் குழந்தைகளும் நானும் மகிழ்வோடு விழா முடிந்து திரும்பினோம்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    • ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.
    • 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    அறந்தாங்கி:

    ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் 23 பேர் மற்றும் அவர்கள் சென்ற 2 விசைப்படகுகளை எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சிறை பிடித்துச் சென்றனர்.

    அதனை தொடர்ந்து 23 மீனவர்களை விடுவிக்க கோரி மத்திய மாநில அரசுகளின் பரிந்துரையால் 21 மீனவர்களை விடுவித்த இலங்கை அரசு, படகை இயக்கிய ஓட்டுனருக்கு ஓராண்டு சிறை தண்டனையும், அதில் 2-வது முறையாக கைது செய்யப்பட்ட மீனவருக்கு 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்பளித்துள்ளது.

    இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் பலவேறு கட்ட போராட்டங்களை நேற்று முதல் நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் ராமேஸ்வரம் மீனவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் புதுக்கோட்டை மாவட்ட கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம் விசைப்படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    போராட்டத்தில் இலங்கை அரசு தமிழக மீனவர்களுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்திருப்பதைக் கண்டித்தும், அதனை திரும்பப்பெற வேண்டும் எனவும், இதுவரை சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைத்து ஈடுபட்டு வருகின்றனர். வேலைநிறுத்தப் போராட்டத்தால் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே ராமநாதபுரத்தில் மீனவர்கள் நாளை தங்களது ரேசன் கார்டுகளை ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இந்த போராட்டத்தில் புதுக்கோட்டை மாவட்ட மீனவர்களும் பங்கேற்க உள்ளதாக தெரிவித்தனர்.

    • முதற்கட்ட விசாரணையில் எரிந்த பள்ளி சீருடைகள், நடுநிலை பள்ளி மாணவிகள் அணியும் அளவிற்கு தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
    • பள்ளி மாணவிகளின் சீருடைகள் விநியோகிக்கப்படாமல் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கல்வித்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    புதுக்கோட்டை கந்தர்வகோட்டையில் உள்ள தஞ்சை சாலையில், பொது மயானம் உள்ளது. இந்த மயானத்திற்கு பின்புறம் அங்கமுத்து என்கிறவரின் விவசாய நிலம் உள்ளது.

    இதற்கு அருகில் பாசனத்திற்கான கிணறு ஒன்று உள்ளது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததன் காரணமாக இந்த கிணறு வறண்டு உள்ளது.

    இந்த கிணற்றில் இருந்து திடீரென புகை எழுந்து உள்ளது. புகை மண்டலம் குறித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

    இதனை தொடர்ந்து அப்பகுதி விவசாயிகள் வந்து கிணற்றுக்குள் என்ன எரிகிறது என்று பார்த்த போது அதிர்ச்சி அடைந்தனர். காரணம் உள்ளே ஆயிரக்கணக்கான பள்ளி மாணவிகளுக்கான, பள்ளி சீருடைகள் எரிந்து கொண்டிருந்தன.

    உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொதுமக்கள் தீயை போராடி அணைத்தனர். இதனை தொடர்ந்து தமிழக அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கும் இலவச சீருடைகள் எரிந்தது குறித்து காவல்துறை, பள்ளிக்கல்வித்துறை, அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தகவல் அளித்தனர்.

    அங்கு வந்த காவல்துறையினரும், பள்ளி மற்றும் அரசு அலுவலர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் எரிந்த பள்ளி சீருடைகள், நடுநிலை பள்ளி மாணவிகள் அணியும் அளவிற்கு தைக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ஆயிரக்கணக்கான சீருடைகளை இங்கு வந்து கொட்டி எரித்தது யார்? இந்த சீருடைகள் திருடப்பட்டதா? அல்லது மாணவிகளுக்கு வழங்காமல் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் இங்கு கொண்டு வந்து எரித்தனரா? என்று பல்வேறு கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

    பள்ளி இடை நில்லாமல் இருக்க வேண்டும், கல்வி கற்றோரின் சதவீதத்தை ஆண்டுக்கு ஆண்டு உயர்த்த வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தமிழக அரசு இலவச சீருடை, புத்தகம், மதிய உணவு, காலை உணவு திட்டம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு கல்வியை வளர்த்து வரும் நிலையில், இவ்வாறு பள்ளி மாணவிகளின் சீருடைகள் விநியோகிக்கப்படாமல் எரித்தவர்கள் யாராக இருந்தாலும் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கல்வித்துறை அலுவலர்களிடம் வற்புறுத்தி உள்ளனர்.

    • டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
    • வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது.

    இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மாவட்ட நிர்வாகம் தரப்பிலும் இந்த விவகாரம் தொடர்பாக நேரடி விசாரணை நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கைவயல் கிராமத்தில் மேல் நிலைநீர்த்தேக்க தொட்டியில் கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26-ந்தேதி மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினரும் தொடர் போராட்டங்களை நடத்தினர். பின்னர் இந்த குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வெள்ளனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு கடந்த ஜனவரி மாதம் 14-ந் தேதி முதல் மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. சுமார் 147 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் டி.என்.ஏ பரிசோதனை உட்பட பல வகைகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், குற்றவாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை.

    சி.பி.சி.ஐ.டி-யும் பல மாதங்களாகியும் குற்றவாளிகளை கண்டு பிடிக்காமல் மந்தமான விசாரணை நடத்திவருவதாக, அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

    இறுதியாக வேங்கைவயல் மற்றும் இறையூர், முத்துக்காடு ஆகிய பகுதிகளை சேர்ந்த 10 பேருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிடப்பட்டது.

    இதனிடையே இதுநாள் வரை இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக செயல்பட்டு வந்த சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. பால் பாண்டி விடுவிக்கப்பட்டார். அவருக்கு பதிலாக தஞ்சாவூர் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கல்பனா புதிய விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டார்.

    புதிய விசாரணை அதிகாரி கல்பனா இன்று தனது விசாரணையை தொடங்கினார். சம்பவம் நடைபெற்ற குடிநீர் தொட்டி மற்றும் வேங்கை வயல் கிராமத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அவர் ஆய்வு செய்தார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    கறம்பக்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே மழையூரில் நேற்று முன்தினம் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்டியல் இன மாணவர் தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளியை கைது செய்யக்கோரி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியின் மண்டல செயலாளர் சிவகுமார், வடக்கு மாவட்ட செயலாளர் இளமதி அசோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

    ஆர்ப்பாட்டம் முடிந்து நிர்வாகிகள் மட்டும் அந்தப் பகுதியில் நின்று பேசிக் கொண்டிருந்தபோது அப்பகுதி மாடி கட்டிடத்தில் இருந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதில் அங்கு பேசிக் கொண்டிருந்த இளமதி அசோகனின் சேலையில் தீ பிடித்தது.

    இதைத் தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசிய குற்றவாளிகளை கைது செய்ய கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மழையூரில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 8 மணிக்கு தொடங்கிய மறியல் நள்ளிரவு ஒரு மணி வரை நீடித்தது. பின்னர் புதுக்கோட்டை உதவி கலெக்டர் ஐஸ்வர்யா நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

    பின்னர் போலீஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கொடுத்த புகாரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் பா.ஜ.க பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக கூறியிருந்தனர். இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு முன்கூட்டியே முறையாக தகவல் தெரிவிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

    மேலும் காவல்துறை அனுமதி அளித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் போலீசாரின் அலட்சியத்தால் தான் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை தொடர்ந்து மழையூர் தனிப்பிரிவு போலீஸ்காரர் முருகேசன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்கள் அன்பு மற்றும் அன்பு ராஜா ஆகிய 3 பேரை அதிரடியாக ஆயுதப்படைக்கு பணியிடம் மாற்றம் செய்து போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவிட்டுள்ளார்.

    • விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.
    • சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் பட்டியல் இன மக்கள் பயன்படுத்திய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த வழக்கில் உண்மை குற்றவாளி இன்னும் கண்டறியப்படாத நிலையில், இதுவரை 189 நபர்களிடம் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டு, சந்தேகத்தின் பேரில் 5 சிறுவர்கள் உட்பட 35 நபர்களுக்கு டிஎன்ஏ ரத்த மாதிரி பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், புதிதாக மேலும் 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனை நடத்த அனுமதி கோரி சிபிசிஐடி போலீசார் புதுக்கோட்டை மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்தனர்.

    இந்த மனு மீதான விசாரணை நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் நடந்து வந்தது. இந்த சோதனைக்கு 10 பேரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

    இந்த மனு மீது நேற்று விசாரணை நடத்தப்பட்ட நிலையில், மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி ஜெயந்தி உத்தரவிட்டார்.

    இதற்கிடையே வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திருச்சி டிஎஸ்பி பால்பாண்டி இடமாற்றம் செய்யப்பட்டு தஞ்சாவூர் சிபிசிஐடி டிஎஸ்பி கல்பனா நியமிக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில் வேங்கைவயல் வழக்கு சிபிஐ வசம் செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக சிபிசிஐடி உயர் அதிகாரிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    மறுபடியும் முதலில் இருந்து விசாரணை தொடங்கும் சூழ்நிலையில் சிபிஐ வசம் வழக்கை ஒப்படைப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

    ×