என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    கூட்டணியில் குழப்பம் நீடிக்க தி.மு.க.தான் காரணம்- கார்த்தி சிதம்பரம் எம்.பி.
    X

    கூட்டணியில் குழப்பம் நீடிக்க தி.மு.க.தான் காரணம்- கார்த்தி சிதம்பரம் எம்.பி.

    • கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை.
    • காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும்.

    புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட பெரியார் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் கார்த்திக் சிதம்பரம் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாடாளுமன்றத்தில் ஒன்றுமே நடக்கவில்லை அது தான் உண்மை. எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ராணுவ தளபதி எழுதிய புத்தகத்தை மேற்கோள்காட்டி பேச முயன்றபோது, ஆளும்கட்சி உறுப்பினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் பாராளுமன்றம் முடங்கி கிடக்கிறது.

    எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேச அனுமதிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சி தலைவரை கூட பேச அனுமதிக்கவில்லை. பிரதமருக்கு பாதுகாப்பு இல்லை என்றால் அது குறித்து விசாரிக்க ஏன் இதுவரையில் குழு அமைக்கவில்லை? அது போன்ற பிரச்சினை ஏதும் நாடாளுமன்றத்தில் நடைபெறவில்லை.

    தி.மு.க., காங்கிரஸ் ஆகிய இரண்டு பேரும் ஒன்றாக இருந்தால் தான் இரண்டு பேரும் வெற்றி பெற முடியும் என்பது என் கருத்து. இரண்டு மாதங்களாக காங்கிரஸ் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பேசி வருவதும், குழப்பமான நிலை நீடிப்பதற்கும் தி.மு.க. குழு அமைக்காதது தான் காரணம்.

    தி.மு.க., காங்கிரஸ் இடையே இப்போது உள்ள மணக்கசப்பிற்கு தி.மு.க.வே காரணம். கூட்டணி பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருந்தால் இதுபோன்ற சர்ச்சை கருத்துக்கள் ஒருபோதும் வந்திருக்காது. இனியும் தாமதிக்காமல் பேச்சுவார்த்தை குழுவை தி.மு.க. அமைக்க வேண்டும். இல்லையென்றால் மனக்கசப்புகள் மேலும் அதிகமாகத் தான் செய்யும்.

    ராகுல் காந்தியை கனிமொழி சந்தித்து பத்து நாட்களுக்கு மேலாகியும் அதன் பிறகும் கூட்டணிக்கு தி.மு.க. பேச்சுவார்த்தை குழு அமைக்காதது எதற்காக என்பது தெரியவில்லை. ஏதாவது ஒரு முடிவை தி.மு.க. உடனடியாக எடுக்க வேண்டும். தி.மு.க குழு அமைத்து பேசிவிட்டால் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும்.

    1967-க்கு பின்னர் நாங்கள் ஆட்சியில் இல்லை தான், தனித்து நிற்க கூடிய பலம் இல்லை தான். அதேவேளையில் நாங்கள் இருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணியாக ஆட்சி அமைக்கும். காங்கிரஸ் கட்சி இருந்தால்தான் அந்தக் கூட்டணிக்கு மதச்சார்பின்மை முத்திரை குத்தப்படும். அப்போதுதான் தி.மு.க. மதசார்பற்ற கூட்டணி என்று கூறிக்கொள்ள முடியும். எங்களை கூட்டலாக பார்க்க கூடாது, பெருக்கலாக பார்க்க வேண்டும்.

    அ.தி.மு.க அரசு ஒருவேளை அமைந்தால், அது அ.தி.மு.க. அரசாக இருக்காது, பா.ஜ.க. ஆட்சியாகத்தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என்று ரசிகர்கள் உள்ளனர்.

    அந்த ரசிகர்கள் தொண்டர்களாக மாறலாம், தொண்டர்கள் வாக்களிக்கலாம். தமிழக வெற்றிக்கழகத்திற்கு என்று ஒரு வாக்கு வங்கி இருக்கிறது என்பதும், விஜய்க்கு ஆதரவு இருக்கிறது என்பதும் உண்மை.

    அந்த வாக்குகளால் தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று அது சீட்டாக மாறுமா என்பது கேள்விக் குறிதான். தமிழக வெற்றிக் கழகம் தற்போது களத்தில் சுறுசுறுப்பாக உள்ளது. விஜய் மீது வருமான வரி துறையின் தீர்ப்பு என்பது தேர்தலை எந்த விதத்திலும் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

    இது ஊழல் கிடையாது, வரி கட்டவில்லை என்று தான் கூறுகிறார்கள். வரியை கட்டிவிட்டால் பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும். அவருக்கு மேல்முறையீடு செய்வதற்கும் வாய்ப்புண்டு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×