search icon
என் மலர்tooltip icon

    வேலூர்

    • மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.
    • தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    நெல்லை:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா (வயது 34). கணவரை பிரிந்த இவருக்கு 3 மாத பெண் குழந்தை உள்ளது.

    சமீபத்தில் தூத்துக்குடி வி.இ. ரோட்டில் உள்ள அந்தோணியார் ஆலயம் அருகே யாசகம் எடுத்து பிழைப்பு நடத்திக் கொண்டி ருந்த சந்தியா அந்த பகுதியில் இரவில் குழந்தையுடன் தூங்கினார். அப்போது அங்கு வந்த 2 மர்ம நபர்கள் அவரது குழந்தையை கடத்திச் சென்றனர்.

    இது தொடர்பாக தூத்துக்குடி தன் பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையை தேடி வந்தனர். குழந்தையை திருடிய மர்ம நபர்கள் யார் என்பதை அறிய 150-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்து வந்த நிலையில் தற்போது குழந்தையை கடத்திச் சென்ற 2 நபர்களின் புகைப்படங்களை தூத்துக்குடி மாவட்ட போலீ சார் வெளியிட்டுள்ளனர்.

    போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் டவுன் உதவி போலீஸ் சூப்பிரண்டு கேல்கர் சுப்பிரமணியன் பாலச்சந்தர் தலைமையில் தென்பாகம் இன்ஸ்பெக்டர் உள்பட போலீசார் அடங்கிய தனிப்படை யினர் புகைப் படத்தை அடிப்படையாகக் கொண்டு 2 பேரையும் தேடி வருகின்றனர்.

    மேலும் புகைப்படத்தில் உள்ள நபர்களை யாரேனும் பார்த்தால் தூத்துக்குடி மாவட்ட போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • துரை தயாநிதிக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
    • மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதி வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வேலூர்:

    தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி. இவர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்தார். இவரது மகன் துரை தயாநிதி. இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து துரை தயாநிதி சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக துரை தயாநிதியை வேலூரில் உள்ள பிரபல தனியார் ஆஸ்பத்திரியில் இன்று சேர்த்தனர். அவர் அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

    • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது.
    • காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகே ரூ.3 கோடி மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள கற்பகம் கூட்டுறவு பெட்ரோல் பங்கை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று திறந்து வைத்தார்.

    அப்போது அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    மத்திய அரசு சொன்னாலும் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட தர மாட்டோம் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

    கர்நாடகாவில் என்றைக்காவது, எந்த மந்திரியாவது தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்து விடுவோம் என்று கூறி கேள்விப்பட்டது உண்டா.


    எப்போது பார்த்தாலும் இப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ஒவ்வொரு முறையும் உச்சநீதிமன்றம் சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம். தண்ணீரை கர்நாடகாவிலிருந்து எப்படி பெறுவது என்று எங்களுக்கு தெரியும்.

    குடியுரிமை திருத்த சட்டத்திற்கு, ராஜ்யசபாவில் அ.தி.மு.க. எதிர்த்து வாக்களித்து இருந்தால் இந்த சட்டமே வந்திருக்காது. காங்கிரஸ் உடன் பேச்சுவார்த்தை முடிந்ததும் தி.மு.க. வேட்பாளர் பட்டியல் நாளை அல்லது நாளை மறுநாள் வரும்.

    ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசு தொடுத்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.

    அது குறித்து வழக்கறிஞர்கள் பேசுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாராளுமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தகவல்.
    • பா.ஜ.க.-வை சேர்ந்த குஷ்பு தேர்தலில் போட்டியிடுவது குறித்து பதில் அளித்துள்ளார்.

    வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு செய்தியாளர்களை சந்தித்த போது, பாராளுமன்றத்தில் போட்டியிடுவது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்தார்.

    அப்போது பேசிய அவர், "கமல்ஹாசனுக்கு மாநிலங்களவையில் ஒரு சீட் கொடுத்துள்ளார்கள். தி.மு.க.வில் பிரசாரம் செய்வதற்கு யாரும் இல்லை. தி.மு.க.வுக்கு கமல்ஹாசன் போன்ற முகம் பிரசாரம் செய்வதற்கு தேவை. அதைத் தான் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நினைத்துள்ளார். கூட்டத்திற்காக முதலமைச்சருக்கு கமல்ஹாசன் தேவையா?"

    "பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் ஜே.பி. நட்டா எங்கு நிற்க சொன்னாலும், நிற்பேன். நாடு முழுக்க பிரசாரம் செய்ய சொன்னாலும் முழுவீச்சில் பிரசாரம் செய்வேன்," என்று தெரிவித்தார்.  

    • ஸ்ரீகாளஹஸ்தியில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது.
    • நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று முதல் ஆர்ஜித சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. பக்தர்கள் மிகுந்த பக்தியுடன் ஈடுபடும் ராகு, கேது சர்ப்பதோஷ நிவர்த்தி பூஜைகள் இந்த ஆண்டு தடை செய்யப்படவில்லை வழக்கம் போல் நடைபெறும்.

    ராகு, கேது பூஜை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை குறிப்பிட்ட நேரத்தில் செய்யப்படும் என காளஹஸ்தி கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம்.
    • போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    வேலூர்:

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மயிலாடுதுறையில் இன்று தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    அதன் தொடர்ச்சியாக வேலூர் மாவட்டம் காட்பாடியில் வேலூர் தாலுக்கா மற்றும் காட்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தி.மு.க. பொது செயலாளர் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாவினை வழங்கினார்.

    ஒருவனுக்கு தங்க நிழல் கூட இல்லாமல் அவதிப்பட்டு வரும் சூழ்நிலையில் விண்ணில் ஊர்திகளை செல்கிறோம், சந்திரனுக்கு அனுப்புகிறோம், சூரியனை நெருங்கிவிட்டோம் என்று பேசுவது மனிதாபிமானம் ஆகாது. அது அறிவுடைமைக்கு வேண்டுமானால் எடுத்துக்காட்டாக இருக்கலாம்.

    அதனால் தான் நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடுகளை வழங்கி வருகிறோம்.

    இன்றைக்கும் மக்களுக்கு இலவச சோறு போடுகிற நிலைமையில் தான் இருக்கிறோம். பிள்ளைகளுக்கு மூன்று வேளை சோறு கூட போட முடியாத சூழ்நிலையில் உள்ளது பஞ்சத்தில் உள்ளார்கள்.

    உடுக்கும் உடை கூட யாராவது கொடுக்க மாட்டார்களா என காத்துக்கொண்டி ருக்கிறார்கள். இதை மாற்றுவது தான் நமது அரசு. தேர்தல் முடிந்த உடன் 8 லட்சம் வீடுகள் கட்டி ஒப்படைக்கப்படும்.

    மக்களுக்கு தொண்டு செய்வது எங்கள் தலையாய கடமை என கருணாநிதி செய்தார் அதை அவரது மகன் மு க ஸ்டாலின் இப்போது செய்து வருகிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை ஓரிரு நாட்களில் முடிவடையும்.

    மதுரை எய்ம்ஸ் அவர்கள் கொண்டு வந்த திட்டம் தான், அவர்கள் தான் செயல்படுத்தவில்லை. எங்கள் மீது பழி சொல்வது நியாயம் இல்லை. நாங்கள் தடுத்திருக்கிறோம் என்று ஒரு திட்டத்தை சொல்ல சொல்லுங்கள். மிகப்பெரிய பொறுப்பில் இருப்பவர், நாட்டின் தலைமை பொறுப்பில் இருப்பவர் எந்த திட்டத்தை தடுத்தோமா? இல்லையா என்று சொல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வினர் அ.தி.மு.க. தலைவர்கள் படத்தை தவறாக பயன்படுத்து கிறார்கள் என்று அதிமுகவினருக்கு தான் ரோசம், கோபம் வர வேண்டும்.

    பிரதம மந்திரி பத்து முறை கூட வரலாம் யார் வேண்டாம் என்று சொன்னார்கள்.

    இவ்வளவு நாள் தி.மு.க.வை பற்றி பேசினாரா பிரதமர். தேர்தல் வரும்போதுதான் தி.மு.க.வை பற்றி பேசுகிறார். ஜல்லிக்கட்டு காலத்தில் வண்டி மாடு ஒரு மாறி தலையை ஆட்டும். அதுபோல தான் பிரதமரின் பேச்சு. இதெல்லாம் ஒரு அரசியல் சீசன்.

    போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அ.தி.மு.க.வினரின் போராட்டம் அரசியல்.

    இதெல்லாம் பண்ணாமலா இருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை.
    • மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை.

    வேலூர்:

    வேலூர் மாவட்டம், காட்பாடியில் தி.மு.க. வாக்குசாவடி முகவர்கள் கூட்டம் நடைபெற்றது.

    இதில் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    பிரதமர் மோடி தமிழகம் அடிக்கடி வந்து ஏதாவது மீன் சிக்காதா? என முயற்சி செய்கிறார். வட மாநிலம் முழுவதும் பா.ஜ.க.வுக்கு தோல்வி தான் மிஞ்சும். எனவே அடிக்கடி தமிழகம் வருகிறார்.

    இங்கு வந்து அவர் பேசுவது ஒரு பிரதமருக்கு அழகல்ல. மத்திய அரசு செயல்பாடுகள் எதையும் செய்யவில்லை. மதுரையில் 10 ஆண்டுகளுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கபடும் என்றார்கள். தற்போது தேர்தல் வருகிறது என்பதற்காக டெண்டர் வைத்துள்ளோம் என்கிறார்கள்.

    மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை. இதுதான் அவர்களின் செயல்பாடு. மாநில உரிமையை பறிக்கிறார்கள். பா.ஜ.க.வினர், தி.மு.க. வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள்.

    உங்கள் குடும்பம் போல் தரித்திர நாராயணனாக இருந்து ஆட்சிக்கு வந்தவர்களா நாங்கள். இந்த முறை பா.ஜ.க. ஆட்சிக்கு வராது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பின்னர் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில்:-

    பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு கோர்ட்டில் வழக்குகள் எல்லாம் நிலுவையில் உள்ள போது சட்டத்திற்கு புறம்பாக நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அணையை கட்ட உள்ளனர்.

    இவ்வாறு அணைக்கட்ட கூடாது என ஆந்திர மாநில நீர்வளத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். கடிதத்தில் 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. உச்ச கோர்ட்டை அவமதிக்கும் செயல் என்று சுட்டிக்காட்டி உள்ளேன்.

    அண்டை மாநிலமான எங்களோடு பேசியிருக்கலாம். பேசாமல் செய்வது தவறு என எழுதி உள்ளேன் என்றார்.

    • மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
    • பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகள்.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட காகிதப்பட்டறை பகுதியைச் சேர்ந்த 28 வது வார்டில் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் மட்டும் ஆறு மதுபானக் கடைகள் இயங்கி வருவதால் அப்பகுதி குடியிருப்புவாசிகள் நாள் தோறும் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    மதுக்கடைகள் திறக்கப்படும் நேரம் தொடங்கி வார்டு முழுவதுமே மது குடிப்பவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதால், வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழல் நிலவுவதாகவும், இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் மதுபானக் கடைகளை அகற்ற மாவட்ட நிர்வாகம் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புவாசிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

    பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இயங்கிவரும் மதுபானக் கடைகளைக் கணக்கெடுத்து அவற்றை உடனடியாக மூட நடவடிக்கை எடுப்பதோடு, மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர் காலத்தை சிதைக்கும் போதைப் பொருட்களின் தாராள நடமாட்டத்தை இனியாவது தீவிர சோதனையின் மூலம் கண்டறிந்து அவற்றை முற்றிலுமாக ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளு மாறும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
    • தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    வேலூர்:

    வேலூர் மாவட்ட கல்வி அலுவலர் நேச பிரபா. தற்போது நடைபெற்று வரும் பிளஸ் 2 தேர்வு பணிகளில் நேச பிரபா சுணக்கமாக செயல்பட்டதாக பள்ளி கல்வித்துறை இயக்குனர் அருள் ஒளி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், பிளஸ் 2 தேர்வு சம்பந்தமாக மாவட்ட அளவில் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. அதில் தேர்வு பணிகளை மிகச் சரியாக செய்ய வேண்டும் எந்தவித குறைபாடுகளும் ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

    எந்தவித முறைகேடுகளுக்கும் உடந்தையாக இருக்கக் கூடாது. அப்படி இருப்பது தெரிய வந்தால் தேர்வுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என எச்சரிக்கை விடுத்து இருந்தது.

    அதையும் மீறி நேச பிரபா சரிவர தேர்வு பணிகளில் ஈடுபடாததால் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளார் என தெரிவித்தனர்.

    • சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது.
    • போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    மேல்பட்டி:

    வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மசிகம் ஊராட்சியை சுற்றி சுமார் 9-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.

    1500-க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர். பேரணாம்பட்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள இந்த கிராமத்தின் காப்புக்காட்டில் கள்ள சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது அமோகமாக நடந்து வந்தது.

    சாராயத்திற்கு பெயர் பெற்ற கிராமமாகவும் விளங்கியது. சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதால் போலீஸ் அடிக்கடி இந்த கிராமத்திற்கு ரோந்து வருவார்கள். சாராயம் குடிப்பதற்கும் அறிமுகம் இல்லாத நபர்கள் அதிகளவில் வந்து, செல்வதால் அந்த பகுதி பள்ளி மாணவர்கள், பெண்கள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

    மசிகம் ஊராட்சியில் கள்ளச் சாராயத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர்.

    அதன்படி மசிகம் ஊராட்சி மன்ற தலைவர், துணை தலைவர் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் கள்ளச்சாராயத்தை ஒழிக்க துரித நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மேலும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    தொடர்ந்து போலீசார் உதவியுடன் இந்த ஊராட்சியில் சாராயம் விற்பனை செய்து வந்த நபர்கள் அனைவரையும் கைது செய்து, அதனை முற்றிலுமாக ஒழித்தனர்.

    மேலும் கிராமத்தில் முழுமையாக சாராயம் ஒழிக்கப்பட்டது என்று பஸ் நிறுத்தத்தில் கிராம மக்கள் ஒன்றிணைந்து அறிவிப்பு பலகை வைத்தனர்.

    மசிகம் ஊராட்சியில் சாராயம் குடிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் முற்றிலுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறும் நபர்கள் மீது போலீசார் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சி நிர்வாகத்தினர் எச்சரிக்கை விடுத்தனர்.

    இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    • ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார்.
    • பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ரத சப்தமி விழா இன்று நடந்தது. இதனையொட்டி ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் எழுந்தருளினார். நேற்று முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்தனர்.

    சாமி வீதி உலாவை காண கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் 4 மாட வீதிகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இன்று அதிகாலை 5-30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராய் 4 மாட வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    அப்போது மாட வீதிகளில் இருந்த பக்தர்கள் சாமிக்கு கற்பூரம் ஏற்றி தீபாராதனை செய்து கோவிந்தா கோவிந்தா என விண்ணைமுட்டும் அளவுக்கு பக்தி பரவ சத்துடன் கோஷமிட்டனர். வாகன ஊர்வலத்தின் முன்பாக பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கலைக்குழுவினர் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷம் வாகனத்திலும், 11 முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும் 1 முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும் 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடந்தது.

    மாலை 4 முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும் 6 முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலை யான் வீதிஉலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திர பிரபை வாகனத்தில் உலா வருகிறார்.

    ரதசப்தமி விழாவை காண வந்த பக்தர்களுக்காக திருப்பதி தேவஸ்தானம் சார்பில் உணவு, குடிநீர், பால், மோர் உள்ளிட்டவை தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்பட்டன.

    சுகாதார துறை சார்பில் ஆங்காங்கே மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு உடல் நலம் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன.

    மேலும் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட்டு இருந்தது. பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக போலீஸ் சூப்பிரண்டு மலிகா கார்க் தலைமையில் 650 போலீசார் மற்றும் திருப்பதி தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரிகள் ஈடுபட்டனர்.

    ஒரே நாளில் 7 வாகனங்களில் ஏழுமலையான் காட்சியளிப்பது பரவசத்தை ஏற்படுத்துவதாக பக்தர்கள் தெரிவித்தனர்.

    • வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
    • குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    வேலூர்:

    சென்னை-பெங்களூரு இடையே டபுள் டக்கர் ஏசி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

    சென்னை சென்ட்ரல், அரக்கோணம், காட்பாடி, ஆம்பூர், வாணியம்பாடி, ஜோலார்பேட்டை, குப்பம், பங்காருபேட்டை, கிருஷ்ணராஜபுரம், பெங்களூரு கண்டோன்மென்ட் பெங்களூர் சிட்டி ஜங்ஷன் ஆகிய இடங்களில் நின்று செல்கிறது.

    வெளிநாடுகளில் உள்ள ரெயில் சேவைகளை போன்று அழகிய நவீன முற்றிலும் குளிரூட்டப்பட்ட இந்த சேர் கார் பிரிவு ரெயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

    360 கிலோமீட்டர் தூரத்தை 6 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் டபுள் டக்கர் ரெயில் சென்றடைகிறது. பணம் படைத்தவர்களுக்கு மட்டுமே சாத்தியம் என மாறிய டபுள் டக்கரில் பொது பிரிவு என்று அழைக்கப்படும் முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைக்க வேண்டும்.

    ஏசி இல்லாத சேர் கார் பெட்டிகளையும் இணைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி ரெயில்வே நிர்வாகம் டபுள் டக்கர் ரெயிலில் புதிய வசதிகளை ஏற்படுத்தி உள்ளது.

    அதன்படி டபுள் டக்கரில் ஏசி வசதி இல்லாத 5 சாதரண பெட்டிகள் மற்றும் முன்பதிவு இல்லாத ஒரு பெட்டி இணைக்கப்பட்டுள்ளது. இது தவிர சரக்குகளை கையாள ஒரு பெட்டி என மொத்தம் 15 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய வசதியுடன் இன்று முதல் சென்னை பெங்களூர் டபுள் டக்கர் ரெயில் இயக்க படுகிறது.

    குறைந்த கட்டணத்தில் சாமானிய மக்களும் டபுள் டக்கர் ரெயிலில் பயணிக்கும் வசதி கிடைத்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×