search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Poultry farm"

    • மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.
    • கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன.

    புதியம்புத்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே சிலோன் காலனியை சேர்ந்தவர் மனோஜ்குமார். இவர் கோழிப்பண்ணை நடத்தி 5 ஆயிரம் கோழிகளை வளர்த்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக ஓட்டப்பிடாரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் மனோஜ்குமார் நடத்தி வந்த கோழி பண்ணையில் வெள்ளம் புகுந்து அனைத்து கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது.

    மேலும் கோழிப்பண்ணைக்கு கடந்த 2 நாட்களாக செல்ல முடியாத நிலையில் இன்று காலையில் மனோஜ்குமார் சென்று பார்த்தபோது அங்கு அனைத்து கோழிகளும் உயிரிழந்து துர்நாற்றம் வீசிய நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து மனோஜ் குமார் ஜே.சி.பி. எந்திரம் உதவியுடன் அப்பகுதியில் கிடங்கு தோண்டி இறந்த கோழிகள் அனைத்தையும் புதைத்துள்ளார். அதேபோல் சிலோன் காலனி பகுதியில் ராஜேந்திரன் என்பவர் நடத்தி வரும் கோழிப்பண்ணையில் சுமார் 7 ஆயிரம் கோழிகளும், கவர்னகிரியில் பொன்பெருமாள் என்பவர் நடத்தி வரும் கோழி பண்ணையில் சுமார் 6 ஆயிரம் கோழிகளும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து கோழி பண்ணை நடத்தி வருபவர்கள் கூறுகையில், வங்கிகளில் கடன் வாங்கி தொழிலை நடத்தி வந்த நிலையில் அதிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கோழிகள் அனைத்தும் உயிரிழந்தது.

    இதனால் தங்களது வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தொகை பெற்று தந்தால் மட்டுமே மீண்டும் இத்தொழிலை செய்ய முடியும் என தெரிவித்தனர்.

    • மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது
    • இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.

    உடுமலை

    உடுமலை அருகே சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் வகையில் செயல்படும் கோழிப்பண்ணையை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் மனு கொடுத்துள்ளனர்.

    அந்த மனுவில் கூறியுள்ளதாவது:-

    குடிமங்கலம் ஒன்றியம் அணிகடவு கிராமத்தில் மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை மீறி செயல்படும் கோழிப்பண்ணையால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. பி .ஏ. பி. பாசன கால்வாய் கிராம குளம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், குடியிருப்பு அருகில் இந்த கோழி பண்ணை அமைந்துள்ளது.

    இறந்த கோழிகளை நீர் நிலைகளில் வீசுவது போன்ற செயல்களால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. இதுகுறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகாரின் பேரில் கால்நடை பராமரிப்பு துறையினர் நேரில் ஆய்வு செய்து பண்ணையை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்பதை சரி செய்யவும் இறந்த கோழிகளை அப்புறப்படுத்துவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் அறிவுறுத்தினர்.இருந்தாலும் விதிமுறைகள் முறையாக பின்பற்ற ப்படுவதில்லை.

    எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறியுள்ளனர்.

    • தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர்.
    • தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சித்தோடு:

    ஈரோடு மாவட்டம் சித்தோடு அடுத்த மேட்டுநாசுவம் பாளையம், பச்சபாலி ஆண்டிகாடு தோட்டம் பகுதியில் முத்துச்சாமி (45) என்பவர் கோழி பண்ணை வைத்து நடத்தி வருகிறார். இந்த கோழிப்பண்ணையில் ஆயிரக்கணக்கான கோழிக்குஞ்சுகள் வளர்த்து வந்தார். இதற்காக தகர செட்டு கூரை அமைத்திருந்தார்.

    இந்நிலையில் இன்று காலை முத்துசாமி கோழி பண்ணைக்கு வந்து கோழிகளுக்கு தீவனம் வைத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது. இதில் தகரசெட்டால் வேயப்பட்ட கூரைகள் தீப்பிடித்து முழுவதும் எரிந்தது.

    இது குறித்து பவானிக்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தண்ணீரை பீச்சி அடித்து தீயை அணைத்தனர். எனினும் இந்த தீ விபத்தில் 5 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் எரிந்து பரிதாபமாக இறந்தன.

    இந்த விபத்தில் ரூ.18 லட்சம் மதிப்பிலான கோழி பண்ணை செட்டுகள், ரூ.5 லட்சம் மதிப்பிற்கான கோழிக்குஞ்சுகள் என மொத்தம் ரூ.23 லட்சம் இழப்பு ஏற்பட்டதாக உரிமையாளர் தெரிவித்தார்.

    இந்த தீ விபத்து குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும்.
    • மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி கலெக்டர் ரவிச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    நாட்டுக் கோழி

    நாட்டுக் கோழிகளை வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளுக்கு சிறிய அளவிலான (250 கோழிகள் அலகு) நாட்டுக் கோழி பண்ணை அலகுகள் நிறுவ 50 சதவீதம் மானியம் வழங்கும் திட்டம் தென்காசி மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

    தேர்வு செய்யப்பட வேண்டிய பனாளிகளின் தகுதிகள். ஆதார் நகல் சமர்ப்பிக்க வேண்டும்.

    கோழி வளர்ப்பில் ஆர்வம் உள்ள மற்றும் நாட்டுக்கோழி வளர்ப்பதில் திறன் கொண்ட கிராமப்புற பயனாளிகளாக இருத்தல் வேண்டும். நாட்டுக்கோழி வளர்ப்பு பண்ணைகளை நிறுவுவதற்கு தேவையான கோழி கொட்டகை கட்டுமானச் செலவு உபக ரணங்கள் வாங்கும் செலவு (தீவனத்தட்டு மற்றும் தண்ணீர் வைக்கும் தட்டு) மற்றும் 4 மாதங்களுக்கு தேவையான தீவன செலவு (கோழி வளரும் வரை) ஆகியவற்றிற்கான மொத்த செலவில் 50 சதவீதம் மானியம் ரூ. 1,50,825 மாநில அரசால் வழங்கப்படும்.

    50 சதவீதம் மானியம்

    திட்டத்தின் மீதமுள்ள 50 சதவீதம் பங்களிப்பை வங்கி மூலமாகவோ அல்லது தனது சொந்த ஆதாரங்கள் மூலமாகவோ பயனாளி திரட்ட வேண்டும். ஒவ்வொரு பயனா ளிக்கும் 250 எண்ணிக்கையின 4 வார வயதுடைய நாட்டுக்கோழி குஞ்சுகள் ஓசூர் மாவட்ட கால்நடை பண்ணையில் இருந்து இலவசமாக வழங்கப்படும்.

    பயனாளிகளுக்கு கோழிக் கொட்டகை அமைக்க குறைந்தபட்சம் 625 சதுர அடி நிலம் சொந்தமாக இருத்தல் வேண்டும். இத்தப்பகுதி மனிதக் குடியிருப்புகளிலிருந்து விலகி இருக்க வேண்டும். பண்ணை அமையவிருக்கும் இடத்திற்கான சிட்டா, அடங்கல் நகல் வைத்திருக்க வேண்டும். பயனாளி அக்கிராமத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

    விதவைகள், ஆதரவற்றோர், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளில் 30 சதவீதம் தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினத்தை சேர்ந்தவராக இருத்தல் வேண்டும். 2022-23-ம் ஆண்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்புத்திட்டத்தின்கீழ் பயனாளி பயனடைந்து இருக்க கூடாது.

    தேர்வு செய்யப்படும் பயனாளி 3 வருடங்களுக்கு குறையாமல் பண்ணையை பராமரித்திட உறுதி அளித்திடல் வேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட திட்ட மிடப்பட்ட வங்கி கூட்டுறவு வங்கி பயனாளிக்கு நிதியளிக்க தயாராக இருக்க வேண்டும். அல்லது பயனாளி சொந்தமாக முதலீடு செய்ய முன்வந்தால் திட்டத்திற்கு நிதியளிப்பற்கான அவரது நிதி நிறன்களின் சான்றுகளை அளிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட கால்நடை மருந்தக உதவி மருத்துவர்களை அணுகி உடன் விண்ணப்ப ங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.
    • ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .

    உடுமலை :

    திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சாமராயப்பட்டி, பாப்பான்குளம் உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் சாமராயப்பட்டி கிராமத்தில் விவசாயி சபரிஸ்வரன் என்பவருக்கு சொந்தமான 350 அடி நீளம் உள்ள கோழிப்பண்ணை பலத்த சேதம் அடைந்தது. மேலும் சூறாவளி காற்றால் கோழிப் பண்ணையின் மேற்கூரைகள் சுமார் 200 மீட்டர் தூரத்தில் தூக்கி வீசப்பட்டது .கோழி பண்ணையில் வளர்த்து வந்த சுமார் 5000 கோழிக்குஞ்சுகள் பரிதாபமாக உயிரிழந்தது.

    இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- சாமராயபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பொதுமக்கள் இது வரை பார்க்காத வண்ணம் சூறாவளி காற்றுடன் திடீரென மழை பெய்தது. விவசாயிகள் என்ன செய்வதென்று தெரியாமல் உள்ளனர். ரூ. 10 லட்சம் மதிப்பிலான கோழிப்பண்ணை முற்றிலும் சேதமானது .ஆயிரக்கணக்கான கோழிகளும் பரிதாபமாக உயிரிழந்தன . ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய்த்துறையினர் சூறாவளி காற்றால் சேதமான வீடுகள் மற்றும் கோழிப்பண்ணைக்கு இழப்பீடு வழங்க வேண்டும்.

    • பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.
    • புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார்.

    தென்காசி:

    குற்றாலத்தை அடுத்த பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு பண்ணையில் வைத்திருந்த சுமார் ரூ.80 ஆயிரம் மதிப்பிலான 3 மோட்டார்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடி சென்றனர்.

    இதுதொடர்பாக பண்ணை உரிமையாளர் ராதாகிருஷ்ணன் குற்றாலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் தாமஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் மின் மோட்டார்களை திருடியது மேலகரம் பகுதியை சேர்ந்த ரகுகுமார்(வயது 23), முருகன் (25) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.
    • கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

    தாராபுரம்

    தாராபுரத்தை அடுத்த நஞ்சுண்டாபுரம், காளிபாளையம் பகுதிகளில் முட்டைக் கோழிகளை உற்பத்தி செய்யும் தனியாருக்கு சொந்தமான 5-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் கடந்த 4 ஆண்டு காலமாக செயல்பட்டு வருகிறது. இதனால் கோழிக்கழிவுகள் அதிகமாக தேங்கி வருவதால் ஈக்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    இதுகுறித்து கடந்த 4 ஆண்டுகளாக பொதுமக்கள் அரசுக்கு புகார் தெரிவித்து வந்தனர். ஆனால் அரசு அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் பலர் கிராமத்தை காலி செய்து விட்டு வெளியூர்களுக்கு சென்று விட்டதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

    இது பற்றிய தகவல் அறிந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், பிரச்சினைக்கு காரணமான நஞ்சுண்டாபுரம் அரசு ஆரம்பப்பள்ளி சத்துணவு கூடத்தை ஆய்வு செய்தார்.

    அப்போது கிராம மக்கள் கோழி பண்ணையில் இருந்து பரவும் ஈக்களால் தொடரும் தங்களது அவல நிலை குறித்தும், அதனால் பரவி வரும் நோய்த்தொற்று குறித்தும் புகார்களை கூறினர். உரிய அனுமதி இன்றி செயல்பட்டு வரும் கோழிப்பண்ணைகள் மீது தகுந்த நடவடிக்கை எடுத்து தங்கள் கிராமங்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார். 

    ×